பகல் பனிரெண்டரைக்கு சந்திக்கச் சொன்னேன். யாரை ? எங்கே ? சாந்தோம் சர்ச்சுலே ! இங்கே நியூஸியில் நம்ம நெடுநாள் தோழியின் மகளின் செய்தி நேத்து இரவு கிடைச்சது.
பெங்களூரில் ஆர்ட் ஆஃப் லிவிங் வகுப்புகளுக்காக (!)வந்திருந்ததாகவும், அதை முடிச்சதும் தன்னுடைய கஸின்களோடு கேரளா சுற்றுலா போயிட்டுச் சென்னை வந்துருக்காங்களாம். நேத்து ED Sheeran Concertக்கு எல்லோரும் போயிருக்காங்க.
இன்றைக்கு மற்றவர்கள் எல்லாம் திரும்பிப்போயிருவதாகவும், தன்னுடைய ஃப்ளைட் சாயங்காலம் என்பதால் , நம்மை வந்து பார்த்துட்டுப் போக விரும்புவதாகவும் தகவல்.
சென்னையில் ஏதாவது குறிப்பிட்ட இடம் போகும் எண்ணம் இருக்கான்னதுக்குக் கபாலியும், சாந்தோம் சர்ச்சுமாம் !
நம்ம கோவில்கள் எல்லாம் பகல் பனிரெண்டரைக்கு மூடிருவாங்க என்றதால்.... முதலில் கபாலீஸ்வரரை தரிசனம் பண்ணிக்கச் சொன்னேன். அங்கிருந்து கிளம்பி சாந்தோம் சர்ச். அப்ப நாம் போய் சேர்ந்துக்குவோம். லஞ்ச் நம்மோடன்னு சொன்னேன்.
ரொம்ப பக்திப்பரவசத்தோடு கோவில் தரிசனம் ரொம்ப நல்லா இருந்ததுன்னு சொன்னதும், அந்தக்கோவில் ஆதிகாலத்தில் இந்த சர்ச் இருக்குமிடத்தில்தான் இருந்தது. வெள்ளையர் கைவரிசை காட்டியதால் கோவில் அங்கே போயிருச்சுன்னு 'சரித்திரக்கொடுமை'யைக் கோடி காமிச்சேன்.



மெரினா பீச் பார்க்கணுமாம். மொட்டை வெயிலில் என்னத்தைப் பார்க்கறது ? இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமா ஒரு ரைடு ஆச்சு.
லஞ்சுக்கு அடையாரில் கைலாஷ் பர்பத் போனோம். சிங்கையில் இருக்கும் தரமும் ஒழுங்கும் இல்லைதான். ப்ச்..... சாப்பிட்டதும் லோட்டஸுக்கு வந்து கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தோம்.
மருத்துவக்கல்லூரி மாணவி. ஊர் திரும்பியதும், கல்லூரி ஹாஸ்டல் வாசம்தான். நம்ம பேட்டையைச் சுத்திக் காட்டலாமுன்னு பாண்டிபஸாரில் ஒரு சுத்து, நம்ம கீதா கஃபேவில் ஒரு டீ. திரும்பக் கொண்டுபோய் அவுங்க ஹொட்டேலில் விட்டுட்டு, பக்கத்தில் எக்ஸ்ப்ரெஸ் மாலுக்குப் போயிட்டு வந்தோம். ஒன்னும் வாங்கிக்கலை கேட்டோ !
நம்ம லோட்டஸில் குறிப்பிடத்தக்க ஒரு வசதி என்னன்னா..... நாம் இந்தியப்பயணத்துக்குக் கொண்டுபோகும் பெரிய பெட்டிகளை, உள்ளூர் பயணத்தில் கட்டிவலிக்க வேணாம். உள்ளுர் பயணத்திலும் செக்கின் பெட்டிகள் பதினைஞ்சு கிலோ மட்டுமே அனுமதி என்பதால் பெரிய பெட்டிகள் ஸல்யம்தான். உள்ளுர் பயணம் போகும்போது, பெருசையெல்லாம் இங்கேயே ஸ்டோரேஜில் போட்டுட்டுப் போகலாம். இதுக்குன்னு கூடுதல் சார்ஜ் ஒன்னும் இதுவரை இல்லை. (டச் வுட்)
நமக்கு ஒரு வாரத்துக்குத் தேவையானவைகளை கேபின் பேகில் எடுத்துவச்சுட்டு, மற்றவைகளைக் கீழே ஸ்டோரேஜுக்கு அனுப்பிட்டு ஞாயிறு காலை அஞ்சேமுக்காலுக்குக் கிளம்பி மீனம்பாக்கம் போனோம். நம்ம ட்ராவல் கம்பெனி முதலாளி சதீஷ் வந்து கூட்டிப்போனார்.


முதலில் ஏர்டிக்கெட் புக் பண்ணும்போது..... சென்னை -அயோத்யா ஃப்ளைட் நிறுத்தியாச்சு. தேவையான கூட்டம் வர்றதில்லைன்னு காரணம் சொன்னாங்க. அதனால் சென்னையிலிருந்து பெங்களூர் போய் அங்கிருந்து அயோத்யான்னு டிக்கெட் எடுத்திருந்தோம். நம்ம அதிர்ஷ்டம் பாருங்க..... பெங்களூரில் நாம் பயணிக்கும் நாளில் ஏர்ஷோ நடக்கப்போகுதாம். அதனால் பெங்களூர் வழியாகப்போகாமல் ஹைதராபாத் வழி போகணுமுன்னு டிக்கெட்டை மாத்திக் கொடுத்தாங்க.
இது காலை 7.55க்குக் கிளம்புது. குறைஞ்சபட்சம் ஆறரைக்காவது ஏர்ப்போர்ட்டில் இருக்கவேண்டியதாகப்போனதால் காலையில் வெறும்வயித்தோடு கிளம்பிப்போய்க்கிட்டு இருக்கோம். வெறும் ஒன்னேகால் மணி நேரம்தானே? அங்கே போய் ஏதாவது சாப்பிட்டுக்கலாம். இதுலே எனக்காக வீல்சேர் வேற ஏற்பாடு செஞ்சுருக்கார் நம்மவர். வேண்டாம், மெதுவா நடந்து வர்றேன்னா கேட்டால்தானே ?
ஒரு வேடிக்கையும் பார்க்க முடியாமல் சேரில் கட்டிப்போட்டாப்போல இருக்கு. ப்ச்..... ஜான்ராஜ் என்பவர்தான் உதவி. ஃப்ளைட்டில் ஏறுமுன் கொஞ்சம் அன்பளிப்பு கொடுக்கலாமுன்னா..... வேணாமுன்னு சட்னு போயிட்டார்.
ஹைதை போய் இறங்கினால்..... வீல்சேருக்கு பதிலா ஒரு பெரிய Buggy யில் எல்லா வீல்சேர் பயணிகளையும் வாரிப்போட்டுக்கிட்டுக் கொண்டுபோய் இறக்கினாங்க. செக்யூரிட்டி செக்கிங் முடிச்சு உள்ளே போயிட்டோம். சாப்பிடக் கடை தேடினால் ஒன்னும் சரியா இல்லை. நமக்கு அடுத்த ஃப்ளைட் பகல் ஒரு மணிக்குத்தான். நிறைய நேரம் இருந்தது. பேசாம வெளியே போய் சாப்பிட்டு வந்துருக்கலாம், இல்லே ? ப்ச்....
ஒரு பீட்ஸா கடையில் வெஜ் பீட்ஸாவுக்கும் காஃபிக்கும் ஆர்டர் செஞ்சு காத்திருந்தோம். அரை மணி போச்சு. பீட்ஸா பார்க்க நல்லா இருக்கே தவிர தேஸலா இருக்கு. ச்சீஸ் என்னும் சமாச்சாரத்தையே காணோம்! ப்ச்.....
இன்டிகோ தொடங்கி 18 வருஷம் ஆச்சாம் ! How time flies ? னு கொண்டாடிக்கிட்டு இருக்காங்க !
பனிரெண்டரை வரை தேவுடு காத்துருந்து ( உண்மையில் தேவுடு தரிசனத்துக்குத்தான் போறோம், இல்லை!!!) அடுத்த ஃப்ளைட் ஏறியாச்சு. ரெண்டு மணிநேரமும் அஞ்சு நிமிட்டும் பறக்கணும். மேகமூட்டத்தில் காட்சிகள் ஒன்னும் தெரியலை. அயோத்யா நெருங்கும்போது சரயூ கண்ணில் பட்டது. நல்லா பரந்து விரிஞ்ச நதி. தண்ணீரைத்தான் காணோம்.....

சின்ன ஏர்ப்போர்ட்தான். மஹரிஷி வால்மீகி இன்டெர்நேஷனல் ஏர்ப்போர்ட் !
செக்கின் செய்த பெட்டி வந்து சேரக் காத்திருக்கவேண்டியதாப் போச்சு.

உள்ளே ராமன் சம்பந்தப்பட்ட ராமாயணக்காட்சிகள் அருமை ! சிலபல க்ளிக்ஸ் ஆச்சு. டாக்ஸியைத் தேடுனதில் ஒரு தனியார் வண்டி ஆப்ட்டது.
IRA வில் தங்கறோம். ஏர்போர்ட்டில் இருந்து சுமார் எட்டரை கிமீ தூரம். வரவேற்பில் நல்ல வரவேற்பு !
தொடரும்............ :-)

4 comments:
அடுத்த இடுகைக்காகக் காத்திருக்கிறேன்.
அயோத்யா தங்களை அன்போடு வரவேற்கிறது
Jai Sai Ram!
ராமனுக்கு பக்கத்தில் அவன் ஊருக்கே வந்தாச்.......
Post a Comment