வேணாம் வேணாமுன்னு நாம் ஒதுக்கினாலும் வருசத்துக்கொருதபா வராமலேயா இருக்கு ? அந்த நாளில் இந்தியாவில் இருப்பதுதான் அபூர்வம்.... ரொம்ப வருசத்துக்குப்பின் இதோ இந்தியாவில் இந்தநாள் ! சின்னத்துண்டு மைஸூர்பாக்கோடு நாள் ஆரம்பிச்சது. எனக்குப்பிடிக்குமேன்னு நேத்தே ரகசியமா வாங்கி வச்சுருந்தாராம் நம்மவர்!!!!
இன்றையப் பயணம் கொஞ்சம் தொலைவு என்பதால் கொஞ்சம் நல்லாவே ப்ரேக்ஃபாஸ்ட் எடுத்துக்கணும். லோட்டஸ் ப்ரேக்ஃபாஸ்டுக்குக் கேக்கணுமா என்ன ? ஏற்கெனவே சில முறை பயணத் திட்டம் போட்டுருந்தாலும் லபிச்சது என்னவோ இன்றைக்குத்தான்.
காலை எட்டரைக்கெல்லாம் கிளம்பினோம். தேவதானம் என்னும் ஊருக்குப் போறோம். ரெட்ஹில்ஸ், பொன்னேரி எல்லாம் தாண்டிபோகணுமாம். கூகுளார் கணக்குப்படி ஒன்னேகால் மணி நேரம்தான் ! ஆனால் நம்மூர் சாலைகளின் லக்ஷணம்..... ப்ச்.... ஆனால் எதிர்பாராதவகையில் முக்கால்வாசி தூரம் நல்ல சாலையாகவே இருந்தது !
சின்ன மூணு நிலைக்கோபுரத்தோடு வாசல் ! செல்லங்கள் வாசலில் காவலுக்கு ! அடடா..... தெரிஞ்சுருந்தாக் கொஞ்சம் பிஸ்கெட்ஸ் வாங்கி வந்துருக்கலாமேன்னு மனசு அடிச்சுக்கிச்சு. மன்னிப்பு கேட்டுக்கிட்டேன்.... 

வடஸ்ரீரங்கம் என்று பெயர் ! படுசுத்தமான ப்ரகாரம் ! கொடிமரம், பலிபீடம், பெரிய திருவடி ஸேவிச்சு, உள்ளே போறோம். ஆடம்பரம் ஒன்னும் இல்லை. முன்மண்டபம் ஒரு ஹால்தான். கண்ணெதிரிரே இருக்கும் சின்ன வாசலுக்குள் எட்டிப்பார்த்தால்..... பெரிய்ய்ய்ய்ய் பெருமாள், கைக்கெட்டும்தூரத்தில் தாய்ச்சுண்டு இருக்கார். அவ்ளோ கிட்டத்தில் பெருமாளைப் பார்த்ததும் உடலும் மனமும் விதிர்விதிச்சுப்போனது உண்மை !
ஹைய்யோ.... என்ன ஒரு அழகான திருமுகம்! அநந்தனின் அழகைச் சொல்லவே வேணாம் ! அந்தச் சின்னக்கருவறையில் முழுசுமா நிறைஞ்சு இருக்கார். நாபிக்கமலத்தில் ப்ரம்மா ! காலடியில் ஸ்ரீ & பூ தேவிகள். கொஞ்சம் தள்ளி நம்ம ஆஞ்சு ! பக்கத்தில் ஒரு முனிவர். தும்புரு மஹரிஷியாம் !
கண்ணும் மனசும் சட்னு நிறைஞ்சு போச்சு. பொறந்த நாளுக்குக் கிடைச்ச மிகப்பெரிய பரிசு ! வேறென்ன வேணும் ?
பெருமாள் பதினெட்டரை அடி நீளம். அஞ்சடி உசரப் பாம்புப்படுக்கையில் சயனம்!
.jpg)
வலையில் கிடைத்த படம். கூகுளாருக்கு நன்றி !
பட்டர் ஸ்வாமிகள், தீபாராதனை காண்பிச்சுத் தீர்த்தம் சடாரி, புஷ்பம், பழமுன்னு ப்ரஸாதங்களும் கொடுத்தார். ஆயிரம் வருஷங்களுக்கு முற்பட்ட கோவில். சாளுக்கிய மன்னர் கட்டியது. பெருமாள் சாளக்ராமத்தால் ஆனவர் ! இவ்ளோ அழகான பெருமாளை முதல்முதலாகப் பார்க்கிறோம். அதுவும் ஏகாந்த ஸேவைன்னு சொல்லலாம். நாங்க மூணுபேர்தான் !
முன்மண்டப ஹாலில் சுத்திவர ஆழ்வார்களும், ஸ்ரீ ராமானுஜரும், வேதாந்த தேசிகரும், விஷ்வக்சேனரும் , வேணுகோபாலனுமா அருள் பாலிக்கிறாங்க.!
மனசில்லா மனசோடு பெருமாள் முகம் நோக்கும் பார்வையைப் பிடுங்கிட்டு, வெளியில் வரவேண்டியதாப் போச்சு. ப்ரகாரத்தில் பெருமாளுக்கு வலதுபக்கம் தனிச் சந்நிதியில் ஸ்ரீ ரங்கநாயகித்தாயார் !
அதே போல் பெருமாளுக்கு இடதுபுறம் தனிச்சந்நிதியில் நம்ம ஆண்டாளம்மா ! கம்பிக்கதவூடே தரிசனம் & தூமணிமாடத்து...............
ரெண்டு சந்நிதிகளுக்கும் நடுவில் ஒரு புத்து ! நாகர் சந்நிதி !
பெருமாள் சந்நிதியின் கருவறை விமானமே ஒரு அழகான கோபுரமா இருக்கு ! வெளிப்பக்கச் சுவரில் 'இதோ இங்கேதான் பெருமாளின் பாதங்கள், பார்'னு சொல்லும் அமைப்பு ! உள்ளே இருக்கும் பாதங்கள்னு நினைச்சுத் தொட்டுக்கும்பிட்டுக்கலாம் !


ஆண்டாளம்மாவுக்கு நேரெதிரா அந்தாண்டை நம்ம ஆஞ்சுவின் சந்நிதி !
ஏகாதசிகளின் விவரங்கள் இதோ...... உங்களுக்காக !
நினைச்சுப்போனதைவிட ரொம்ப சீக்கிரமாவே தரிசனம் கிடைச்சது. அதுவும் மனம் நிறைஞ்சவகையில் !
இங்கிருந்து ஒரு முக்கால்மணி நேரப் பயணத்தில் சிறுவாபுரி வந்திருந்தோம்.முருகன் முதல்முறையாக் கூப்பிட்டுருக்கான். வரும் வழியில் ஒரு அழகான தாமரைக்குளம் !
ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் நல்ல கூட்டம் இருந்தது. முதல்முறை போவதால்.... தரிசன வரிசை எங்கேன்னு தேடும்போதே.... ஒருவர் (கோவில் ஊழியர் என்று நினைக்கிறேன்) தரிசனம் செய்யணுமா..... இந்தப் பக்கம் வாங்கன்னு கோவில் பிரகாரத்தின் உள்ளே கூட்டிப்போனார். அவரைப்பின் தொடர்ந்து போனால் பக்கவாட்டு வழியாக நம்மை அழைத்துப்போய் சந்நிதி முன் நிற்கவச்சுட்டார். எதிர்பார்க்கவே இல்லை... இப்படி சட்னு முருகனை தரிசிப்போம்னு !



வெளியே கொடிமரத்தருகில் சுவர் ஓரமாக தீபங்கள் ஏத்தி வச்சுக்கிட்டு இருந்தாங்க மக்கள். அப்பதான் தோணுது ஒரு படம் கூட எடுக்கலையேன்னு ...... கொடிமரத்தை ரெண்டு க்ளிக். கோவில் வாசல் கலகலன்னு இருக்கு !
அந்த ஊரில் இருக்கும் தோழி வீட்டுக்கு ஒரு விஸிட். எஸ் எம் யாத்ரான்னு மக்களைக் காசி, அயோத்தி எல்லாம் கூட்டிப்போய் வர்றாங்க. கூடவே கொஞ்சம் ஆன்லைன் வியாபாரமும்! இவுங்ககிட்டே போனவருஷம் கொஞ்சம் புடவைகளை வாங்கியிருந்தேன். ஆகஸ்ட் பயணத்தில் நேரில் வந்து எடுத்துக்கறதாப் பேச்சு. அதான் பயணமே கேன்ஸல் ஆகிருச்சே :-( கடைசியில் நம்ம கார்த்திக்தான் அங்கே போய் எடுத்துவந்து அவற்றை நியூஸிக்குக் கூரியர் செஞ்சார் .

தோழி சிவசாந்தி முத்து அவர்களுடன் ஒரு அரைமணி நேரம் பேசிக்களித்து, ஒரு காஃபியும் குடிச்சுட்டுக் கிளம்பி லோட்டஸ் வந்தப்ப மணி ரெண்டு. கீதத்தில் பகல் சாப்பாடும் ஆச்சு.


கொஞ்ச நேரம் ஓய்வுக்குப்பின் சாயந்திரமாக் கிளம்பி நம்ம கபாலியைக் கண்டுக்கணும். டாக்டர் நாயர் ரோடு அம்பிகா (அப்பளம்)கடையையொட்டியே ஒரு காஃபிக்கடை இருக்கு. அதை நம்ம டீக்கடையா மாத்தவும் முடிஞ்சது. தினமும் அங்கேதான் நமக்கு சாயங்கால டீ, கேட்டோ !



கயிலையாம் மயிலையில் நுழைந்து, புள்ளையாரை வணங்கி, ப்ரகாரத்தில் நடந்தால். மண்டபத்தில் நாட்டிய நிகழ்ச்சி ! நமக்கான ஸ்பெஷல்னு நினைச்சுக்கணும் ! ஏறக்குறைய கடைசிக்கு வந்துருக்காங்க. தில்லானா & மங்களம் காணக்கிடைத்தது.


நம்ம கற்பகத்தையும் கபாலியையும் நிம்மதியாக ஸேவிக்க முடிஞ்சது !
வெளியே வந்ததும் நம்ம சீதாராமனின் காஞ்சிபுரம் கடை. உள்ளே போய் குசலம் விசாரிச்சுட்டு வந்தோம். இன்னொருநாள் போய் புடவை வாங்கிக்கணும்.
கார்பார்க் பக்கம் பலாப்பழம், வாவான்னு கூப்பிட்டது ! வந்தேன் என்று போனேன் !
நம்ம விஜியை வீட்டுக்கு அனுப்பும் சமயம், சின்ன பொட்டி ஒன்றை என்னிடம் கொடுத்து ஹேப்பி பர்த்டேன்னார். பொட்டிக்குள் புள்ளையார் ! வந்திறங்கிய முதல்நாள் விஜியின் காரில் இருந்தவரின் அழகைப் புகழ்ந்திருந்தேன். ஆனால் அவரே தன்னைப்போல் ஒருவரை நியூஸிக்கு அனுப்புவார்னு எதிர்பார்க்கலை !
இனிய நாளாகத்தான் அமைஞ்சதுன்னு மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி !
தொடரும்............ :-)

4 comments:
டைல்ஸ் மற்றும் சுண்ணாம்புச் சுவர் எல்லாம் பார்த்தால் தேவதானம் கோவிலை ஆயிரம் ஆண்டு பழமையான கோவில் என்றே சொல்ல முடியவில்லை.
சிறுவாபுரியும், கப்பலையும் கூட நானும் பார்த்திருக்கேன்னு ஒரு திருப்தி.
இனிய நாள் திருமண நாள்தானே? வாழ்த்துகள்.
பிறந்த நாள் வாழ்த்துகள்.
அருமை நன்றி
வாங்க ஸ்ரீராம். ஆயிரம் வருஷம் பெருமாளுக்குத்தான் ! கோவிலைப் பழுது பார்க்காமல் இருந்துருப்பாங்களா என்ன இத்தனை காலம் ? என்ன ஒன்னு..... பழமை மாறாமல் பழுது பார்க்க நம்மாட்கள் இன்னும் தெரிஞ்சுக்கலை. கோவில் சிலைகளுக்கெல்லாம் சுத்தம் பண்ணறேன்னு ஸேண்ட் ப்ளாஸ்டிங் பண்ணி மூக்கு முழியெல்லாம் பெயர்த்துப்போட்டவங்கதானே ! ப்ச்....
மண நாள் இல்லை. துல்ஸியின் அவதாரநாள் :-)
வாங்க விஸ்வநாத்,
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி !
Post a Comment