குப்தார் என்ற சமஸ்க்ரதச் சொல்லுக்கு புனிதமானது, ரகசியம் இப்படி சிலபல அர்த்தங்கள் இருக்கு. குப்தான்னு ஒரு ஸர்நேம் இருக்கு பாருங்க.... அதையும் இதையும் சேர்த்துக் குழப்பிக்கக்கூடாது.
ராம அவதாரம் முடிவுக்கு வரும் சமயம், மானிடனாகவே வாழ்ந்துகொண்டு இருக்கும் ராமனிடம், அவனுடைய அவதார நோக்கம் நிறைவேறியாச்சு. நீ இனி வைகுண்டத்துக்குத் திரும்பணும் என்று சொல்றதுக்கு காலதேவன் அயோத்யா அரண்மனைக்கு வர்றார்.
பதினோராயிரம் ஆண்டுகள்( !!??) அரசாண்ட ராமர் தன் பிள்ளைகளுக்குப் பட்டம் கட்டிட்டு பூலோகத்துக்கு வந்த வேலை முடிஞ்சதுன்னு திரும்பிப்போன இடம் குப்தார் காட். அதுவும் காலதேவன் வந்துதான் ஞாபகப்படுத்தினாராம். 'ராமா, நீ வந்த வேலை முடிஞ்சது. வைகுண்டத்துக்குத் திரும்பி வரணுமு'ன்னு. மனுசனா அவதாரம் செஞ்சு மனுச வாழ்க்கையையே வாழ்ந்துக்கிட்டு இருந்த ராமருக்கு அப்பதான் தன் அவதார ரகசியம் புரிஞ்சுருக்கு.
'உடனேவா? அப்புறம், கொஞ்சநாள்' இப்படி சாக்கு போக்கு ஒன்னும் சொல்லாம சட்னு கிளம்பிடறார். அவர் ரெடியானதும் தம்பி லக்ஷ்மணர் முதலில் போய் சரயு நதிக்குள் இறங்கி தன் பூலோக வாழ்க்கையை முடிச்சுக்கறார். (இதுக்கு வேறொரு வெர்ஷன் கூட இருக்கு. )
தமையன் உத்திரவை மீறினபடியால் தானே தவத்தில் இருந்து சமாதி ஆகிட்டாராம். என்ன உத்திரவு? ஏன் மீறணும்? காலதேவன், ராமரை சந்திக்க வந்தப்ப, நாங்க உள்ளே பேசி முடிக்கும்வரை யாரையும் அனுப்பாதேன்னு லக்ஷ்மணனைக் காவல் வச்சுருக்கார் ராமர். அப்போ பார்த்து துர்வாஸர் ராமனை சந்திக்க வந்துருக்கார். 'உள்ளே இப்போ போக அனுமதி இல்லை'ன்னு லக்ஷ்மணன் மறுக்க துர்வாஸருக்குக் கோபம் தலைக்கேறி இருக்கு. எங்கே ராமரை சபிச்சுடப்போறாரோன்ற பயத்தில் சட்னு கதவைத் திறந்து அங்கே நடந்து கொண்டிருந்த 'ஒன் டு ஒன்' மீட்டிங்கில் போய் துர்வாஸர் வந்த சமாச்சாரத்தைச் சொன்னாராம். அண்ணன் சொல்லை மீறிட்டார்:( அதுவே அவருக்கு குற்ற உணர்ச்சியைத் தந்ததால் எல்லா பந்தங்களையும் விட்டுட்டு, தவம் இருந்து சமாதி ஆனார் !
அந்த இடத்தை லக்ஷ்மணா காட் என்றுதான் சொல்றாங்க. அம்மாஜி மந்திர் போனோமே... அங்கெ இருந்து இந்த லக்ஷ்மண் காட் கொஞ்சம் சமீபம்தானாம். நாம் இந்தப்பயணத்திலும் இதைக் கோட்டைவிட்டுருக்கோம். ப்ச்.....
கதை எப்படியானாலும், ராமனுக்கு முன் பூலோகம் விட்டுப்புறப்பட்டவர் லக்ஷ்மணர்தான். தேவலோகக் கணக்குப்படி இவரும் வைகுண்டவாசிதான். ராமர் மகாவிஷ்ணு என்றால் லக்ஷ்மணர் ஆதிசேஷன். அதான் ராமவதாரம் எடுத்த மஹாவிஷ்ணு, திரும்ப பாற்கடல் வருமுன் (பாம்பு) படுக்கை விரிக்க ஜல்தியாப் புறப்பட்டுட்டார். பரதனும் சத்ருக்னனும் கூட பெருமாளின் சங்கு சக்கரங்களே. சீதை? சாக்ஷாத் மஹாலக்ஷ்மி. அவள் மண் மகளாப்பிறந்து, மண்ணுக்குள்ளேயே இறங்கி மறைஞ்சாள். பாருங்க எல்லோருமெப்படி ஒரு பெரிய க்ரூப்பா வந்து அவதரிச்சு இருக்காங்க.
ராமர் புறப்பட்டு சரயு நதிக்கரைக்கு வர்றார். ராமர் மேல் அதிக அன்பு கொண்ட அயோத்தி மக்கள் நாங்களும் கூடவே வரோமுன்னுட்டு ராமர் சரயுவில் இறங்குனதும் கூடவே அவுங்களும் நதியில் இறங்கி வாழ்வை முடிச்சுக்கிட்டாங்களாம். ராமரின் கூடவே பரதனும் சத்ருக்னனும் பூத உடலை விட்டாங்க. ராமரின் உடலை தகனம் செஞ்ச இடம் ஸ்வர்க் த்வார் என்னும் படித்துறையாம்.சொல்லக் கேள்வி.
ராமர் மறைந்த இடம்தான் இந்த குப்தார்காட். மஹாவிஷ்ணுவே மனுஷனா அவதாரம் செய்து, மக்களோடு மக்களா வாழ்ந்து மறைந்த இடம் எவ்வளவு புனிதமானதா இருக்கணும், இல்லே ? போன முறை பார்க்கலையேன்ற ஆதங்கத்தால்தான் இந்த முறை விடக்கூடாதுன்னு அம்மாஜி மந்திரில் இருந்து கிளம்பி வந்துருக்கோம். சுமார் முக்கால்மணி நேரம் பயணம். சரியான ரோடெல்லாம் இல்லை...... ஏதோ ஒரு மண் சாலை வழியாத்தான் போறோம். ஒருவேளை இதுதான் குறுக்கு வழியோ என்னவோ ? அம்மாஜி டு குப்தார்னா கூகுள் மேப் கூட இடத்தைக் காமிக்கலைன்னா பாருங்க.
மனசில் கொஞ்சம் பாரத்தைச் சுமந்துக்கிட்டு, ராமனுக்கு இப்படியாச்சேன்னு சோகமா வந்து இறங்கினா...... ஏதோ கொண்டாட்டம் நடக்கற இடமாட்டம் தெரிஞ்சது. மக்கள் கூட்டம் கலகலன்னு.... கோலாகலம். பெரிய தோட்டம் ஒன்னு ஏற்பாடு செய்து, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த டூரிஸ்ட் ஸ்பாட்டா ஆக்கிவச்சுருக்கு அயோத்யா நகர நிர்மாணம்!
கால்நடைகள் உள்ளே வராதவகையில் கம்பி கேட் போட்டு வச்சுருக்காங்க. அதுலே நுழைஞ்சு நாம் வந்தால்.... சரயு நதி படித்துறை ! அயோத்யா.... மோக்ஷதாயினின்னு ஒரு ஃபொட்டோ பாய்ண்ட் வேற ! அட ராமா.......
சரயு நதியில் தண்ணீரே இல்லை. கொஞ்சூண்டு தண்ணீர் இருக்கும் பக்கம் படகுகள் வரிசைகட்டி நிக்குது. வெள்ளம் வந்தால் போட்டிங் கொண்டு போவாங்க போல ! பரந்து கிடக்கும் மணல்வெளியை பாலைவனமா நினைச்சுக்கணுமுன்னு சில ஒட்டகங்களைக் கொண்டுப்போய் விட்டுருக்காங்க. ஒட்டகசவாரியும் உண்டு போல !
போகும் கல்பாவியக் கரையில் அங்கங்கே சின்னச் சின்ன வியாபாரங்கள். இதய வடிவில் ஒரு பெரிய கம்பியில் பூக்களால் அலங்காரம் செஞ்சு ஒரு வட்டமேடையில் பொருத்தியிருக்காங்க. இன்னொரு நீண்ட கம்பியை, மேடையுடன் இணைச்சுட்டு அதில் கை போல இன்னொரு கம்பியில் செல்ஃபோன் வைக்கும் அமைப்பு. ஜோடிகள் மேடையில் ஏறி நின்னதும் , மேடை மெதுவாச் சுழல ஆரம்பிக்குது. கூடவே ஒரு சினிமா டூயட் முழக்கம் ! அவுங்க செல்ஃபோனிலேயே இதை வீடியோ க்ளிப்பாக எடுத்துத்தர்றாங்க. இதுக்கு ஒரு கட்டணம் உண்டு. நூறு ரூபாய் . இன்னும் ரெண்டு மூணுநாளில் காதலர் தினம் வருதுல்லையா ? அதுக்கான ஏற்பாடுகளா இருக்கணும்.
சின்னதா ஒரு மரமேடை போட்டுக்கிட்டுப் பண்டிட் உக்கார்ந்துருக்கார். பக்கத்துலேயே ஒரு பசு. மக்களுக்கு ஏதாவது பூஜை பண்ணிக்கணுமுன்னால் நடத்தித்தருவார். புண்ணிய நதிக்கரையில் பித்ரு பூஜையும் பண்ணுவாங்கதானே ? பிண்டம் வைக்க வடக்கில் சப்பாத்தி மாவைத்தான் உருட்டி வைக்கிறாங்க. பிரச்சனை இல்லை. தேவைப்படும்போது சட்னு பிசைஞ்சுக்கலாம். குமுட்டி, அரிசி, வெங்கலப்பானை எல்லாம் வேணாம் !
பெரிய மாளிகை போன்ற நீளமான கட்டடம் ஒன்னு கோட்டைக் கதவுகளோடு நிக்குது. கூம்புக்கோபுரங்களோடு ராம் மந்திர். உள்ளே போறோம். . வாசலுக்கு நேரெதிரா கொஞ்சம் உயரத்தில் ஸ்வாமிசந்நிதி ! பிரமாண்டமான முற்றம். சுத்திவர அறைகள் போல ஏகப்பட்ட கதவுகள் ! முற்றத்தில் சில வாழைக்கன்றுகளும், நானும்.
நம்மவர் கைபிடிச்சு மெதுவாப் படிகளில் ஏறிப்போனேன். கருவறையில் ராமர் குடும்பம் ! விக்ரஹங்கள் அலங்காரத்தோடு அழகு ! ரொம்பப் பழைய கோவில்தான். பராமரிப்பு சரி இல்லை. கருவறை மட்டுமே சுமாரா இருக்கு. பழைய அழகு மாறாமல் புதுப்பித்தால் அட்டகாசமாக இருக்கும் !



கோவிலைப்பத்தி விசாரிக்கலாமுன்னா பெரியவங்க யாரும் கண்ணில் படலை. இருக்கும் ஒரு பட்டரும் கருவறையில் தரிசனத்துக்கு வந்திருக்கும் பக்தர்களுடன் இருக்கார். கொஞ்சம் கூட்டம்தான். எல்லோரும் தரையில் உக்கார்ந்து பஜனைப் பாடல்கள் பாடிக்கிட்டு இருக்காங்க. கேட்டால் மட்டும் என்ன பதில் வரப்போகுது? ப்ராச்சீன் தான்!
எனக்கும் ஒரு ப்ரார்த்தனை இருக்கு இங்கே ! நம்ம வீட்டுச் செல்லங்கள், சாமிகிட்டே போயிட்டால் அவுங்களை இங்கே நியூஸியில் செல்லங்களுக்காக இருக்கும் க்ரெமடோரியத்துக்கு அனுப்பி, அஸ்தி வாங்கிப்போம். இந்தியப் பயணங்களில் கையோடு கொண்டுபோய், புண்ணிய நதிகளில் கரைக்கும் வழக்கம் வச்சுருக்கோம். நம்ம கப்பு, கோபாலக்ருஷ்ணன் இருவரும் ரிஷிகேஷ் கங்கையில் கலந்தாங்க.
இப்போ நம்ம ரஜ்ஜுவும் அஸ்தியாக எங்ககூட வந்துருக்கான். இந்த முறை மகளின் செல்லம் ஜூபிடருக்கும் புண்ணிய நதியில் கலக்கும் வாய்ப்பு ! (எல்லாம் ஒரு நாலைஞ்சு சிட்டிகை அளவுதான் ) கொண்டு போனதில் பாதியைத் தனியாக அயோத்யாவுக்கு எடுத்துவச்சுருந்தேன். ராமர் ஜலசமாதியடைஞ்ச குப்தார்காட்டில் இன்றைக்கு பசங்களும் சரயூவில் கலந்தாங்க. நம்மவர்தான் இறங்கிப்போய் கரைச்சுட்டு வந்தார். நிறையப் படிகள், ரொம்பக் கீழே போகணும். உயரம் வேற அதிகம். பசங்களின் ஆத்மாக்களுக்கு 'சத்கதி' கொடுக்கணுமுன்னு அந்த ராமரையே வேண்டி நின்னேன்.
https://www.facebook.com/share/v/16KuNR1rRe/
நீண்டுபோகும் படிக்கரையில் ஏராளமான தீனிக்கடைகள். மக்கச் சோள சீஸன் போல்...... கைவண்டிகளில் வச்சுச் சுட்டு சுட்டு வித்துக்கிட்டு இருக்காங்க. சோளக்கதிரின் மேலே இருக்கும் தொலிகளை(Husk & Silk ) பிய்ச்சு எடுத்துக்கீழே போடும்போது, பசுக்கள் பக்கத்தில் நின்னு வாயில் வாங்கிக்குதுங்க. நார்நாரா இருப்பதோடு அதன் எச்சிலும் சேர்ந்து பசு சிரமப்பட்டுத் திங்குதேன்னு பாவமா இருந்துச்சு. தள்ளுவண்டியில் விற்கும் வாழைப்பழங்களை வாங்கிப் பசுவுக்குத் தந்தால் வேணாமாம். சட்டை பண்ணாமல் நாரை அரைப்பதிலேயே கவனமா இருக்குதுகள். இத்தைப் பார்ரா......
https://www.facebook.com/share/v/18h3Z3zUu7/
https://www.facebook.com/share/v/18g4kj7s8W/
ஐராவுக்குத் திரும்பும் வழியில் ஒரு மெடிக்கல் ஷாப் கிட்டே ஆட்டோவை நிறுத்தச் சொல்லி, என் தலைவலிக்கு மருந்து வாங்கவேண்டியதாப் போச்சு.


இப்போ இங்கெல்லாம் கல்யாண சீஸனாம். நம்ம தீப், அவரோட அண்ணனுக்குக் கல்யாணம் வச்சுருப்பதால், ரெண்டு மூணு நாளைக்கு ஆட்டோ ஓட்ட வர இயலாதுன்னும், மாற்று ஓட்டுனரை ஏற்பாடு செஞ்சுருக்கார்னும் சொன்னார். அதெல்லாம் உங்களுக்கு இடைஞ்சல் ஒன்னும் ஏற்படாதுன்னும் சொல்லிட்டு, நாம் ஐரா வாசலில் இறங்கியதும் , செங்கற்களை எடுத்து டீக்கடை ஓரமாக வச்சுட்டுப் போனார்.
நாமும் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டுச் சாயங்காலமாக் கிளம்பலாம். சரியா ?
PINகுறிப்பு : சில வீடியோ க்ளிப்ஸ் லிங்க் பதிவில் இருக்கு. கூகுள்ஸ்பாட்டில் வலையேத்துவதைவிட ஃபேஸ்புக்கில் பதிஞ்சுட்டு லிங்க் இங்கே கொடுப்பது எனக்கு சுலபம் என்பதால் இப்படி ஒரு ஏற்பாடு. மன்னிக்கணும், கேட்டோ !
தொடரும்.......... :-)

10 comments:
நான் இங்கெல்லாம் நிறைய தடவை சென்றிருக்கிறேன். இராமர் கோவில் (குப்தார் காட்டுக்கு எதிரே இருப்பது) ப்ராசீன் இல்லை. அந்த இடத்திலிருந்து வெவியே வந்தால் சவா லாக் சாளிக்ராம் மந்திர் உள்ளது. அங்கு லட்சத்தி இருபத்தைந்தாயிரம் சாளிக்ராமம் இருந்ததாம். இப்போ ஆயிரத்தில் இருக்கும்.
சுழலும் மேடை வீடியோ, அலைபேசியில் டவுன்லோட் ரொம்பப் பழைய சமாச்சாரமாச்சே.. நான் கூட எடுத்து வச்சிருக்கேன்... ஹிஹிஹி எங்க பையன் கல்யாணத்திலும் வச்சிருந்தோம்!
இப்படி தனியா ஒரு இடம் இருக்குன்னும் இப்பதான் தெரியுது.
அவதாரம் முடிஞ்சு உடனே ஊருக்குப் போகாம மாமியார் வீட்டுல இருந்த மாப்பிள்ளை கணக்கா ரொம்ப காலம் இருந்த ஒரே அவதாரம் ராமர்தான்னு நினைக்கறேன்.
இந்த பதினோராயிரம் என்பதை எல்லாம் எப்படி டீகோட் செய்யணும்னு தெரிய மாட்டேன் என்கிறது!
வீட்டில் வளர்ந்த செல்லங்களுக்கு நற்கதி அடைய அஸ்தி கொண்டு வந்து கரைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தொடரட்டும், தொடர்கிறேன்,அருமை நன்றி
வாங்க நெல்லைத்தமிழன்,
அந்த சவா லாக் சாலிக்ராம், ஹனுமன் கத்தி நரசிம்ஹர் சந்நிதியாண்டைதானே ? நான் தான் படிகளேற முடியாததால் இந்தமுறையும் போகவில்லை....
வாங்க ஸ்ரீராம்,
சுழலும் மேடை பழசா ?அட ! நான் இப்பதான் பார்த்தேன் !
த்ரேதா யுகக் கணக்கைக் கலிகாலத்தில் டீகோட் செய்ய முடியாது !
செல்லங்களை நினைக்கும்போதுதான் மனசுக்கு ரொம்ப பேஜாராப் போயிருது... ப்ச்....
வாங்க விஸ்வநாத்,
தொடர் வருகைக்கு நன்றி !
குப்தார் காட் ..சுவாரஸ்யம்
வாங்க அனுப்ரேம்.
வருகைக்கு நன்றி !
Post a Comment