Wednesday, February 07, 2024

தங்கத்துலே செஞ்சால் நானும்.........

சரியாச் சொன்னால் தீபாவளிக்குப் பதினொரு நாட்களுக்கு முன் வரும்  தேய்பிறை சதுர்த்தி நாள்தான்  வடக்கர்களின் பண்டிகையான  கர்வாச்சௌத் நோன்பு.  ஹிந்தி சினிமாவில்  நாயகி, ஜல்லடையால் நிலவைப் பார்த்தகையோடு அதே ஜல்லடையைத் திருப்பி, கணவனை அதன்மூலம் பார்க்கிறதை  பார்த்திருக்கோம்தானே !
இது நம்ம காரடையான் நோம்பு என்னும் சாவித்ரி விரதத்தின் வடக்கு வர்ஷன். கதை மட்டும் வேறு. நான் இங்கே நம்மூரில் இந்த நோன்புநாள் பூஜைக்கு விசேஷ விருந்தினளாக அழைக்கப்பட்டது 2005 வது வருஷம். முதல் முறையா பூஜை நடக்கப்போகுது ! நேரம் இருந்தால் கீழே இருக்கும் சுட்டியில் பாருங்க. 'கதை' இருக்கு ! முந்தி மாதிரி  ப்ளொக்ஸ்பாட்டில் நேரடியா லிங்க் கொடுக்க வர்றதில்லை. செட்டிங்க்ஸ் தகராறோ என்னவோ.  சிரமம் பார்க்காமல்  காப்பி & பேஸ்ட்தான் பண்ணனும் !

https://thulasidhalam.blogspot.com/2005/10/blog-post_21.html

அது ஆச்சு 18 வருஷம்....   இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய மக்கள் தொகை  இங்கேயும் பலமடங்காப் பெருகிருச்சு. அதிலும் குறிப்பாச் சொல்லணுமுன்னா ரெண்டே மாநிலங்கள்தான் ! (வடக்கே ஒன்னு, தெற்கே ஒன்னு ! )
கூட்டம் அதிகமாக ஆக... அவுங்கவுங்க  விழாக்களுக்கான முன்னேற்பாடுகளும் அதிகமாகிக்கிட்டே போகுதுல்லெ !  அப்படி இப்போ ஒரு நாலைஞ்சு வருஷமா கர்வாச்சவுத் திருவிழான்னு  மேளா/  சந்தை ஒன்னுநடத்திக்கிட்டு இருக்காங்க.  நம்ம சண்டிகர் வாழ்க்கையில் இப்படி விழாக்களுக்கான மேளாக்களை அனுபவிச்சுருக்கேன். என்ன ஒன்னு அங்கெல்லாம் விழாவுக்கு முதல் நாளோ, இல்லை முதலிரண்டுநாளோ நடக்கும். இங்கே ? 

  வீக்கெண்டுக்கு நேர்ந்துவிட்டால்தானே எதுவும் நடக்கும்! 
இதோ நோன்பு நாள்  வர்ற புதன் என்பதால் சனிக்கிழமை சந்தை! வழக்கம்போல் எனக்கும் அழைப்பு வந்தாச்.  வழக்கம்போல் நாங்களும் கிளம்பிப்போனோம்.   வீடுகளில் இந்தியப் பொருட்களை வச்சு வியாபாரம் செய்யும்  கலையும் வளரத்தொடங்கியிருக்கு இப்போ. எல்லாத்துக்கும் வலையே வழி !
   நானும் ஒரு சில அலங்காரப்பொருட்களை இப்படி மேளாக்களில் வாங்க ஆரம்பிச்சு இருக்கேன்.  தில்லியில் பரவலாக் கிடைக்கும் ஒரு பொருளை, இந்தியப் பயணத்தில் வாங்கிக்கலாம்தான்.  ஆனால் இதுக்காக  சென்னையில் இருந்து தில்லி போய் வர்றதெல்லாம் வேண்டாத வேலை இல்லையோ !  அதே மெயில் ஆர்டர் நமக்கும் உண்டு என்றாலும், ஒரு பொருளை வாங்கிக்கச், சுண்டைக்காய் காப்பணம், சுமைகூலி முக்காப்பணம் கதைதான் !  அதுக்கு அரைப்பணம் கூடுதலாகக் கொடுத்து நம்ம மக்களிடம் வாங்குவதே மேல் என்ற ஞானோதயம் ஏற்பட்டுப்போச்சு !

நம்ம ஊர் லைப்ரரிகளில் கம்யூனிட்டி ஹால்கள் வச்சுருக்காங்க.  எல்லாம் சிட்டிக் கவுன்ஸிலின் ஏற்பாடுகளே !   அதையே வாடகைக்கு எடுத்துப் பொது  விழாக்களையும், சொந்த  விழாக்களையும் நடத்திக்கலாம்.  மகளுடைய கல்யாண வரவேற்பு கூட இப்படி ஒரு ஹாலில்தான் வச்சோம்.

நிலநடுக்கம் வந்து போனபின் கட்டுன புதுக் கட்டடம் என்பதால்  பாதுகாப்பான முறையில், நவீன வசதிகளுடன் கட்டி இருக்காங்க.   இந்த ஹாலுக்குத்தான் ஏகப்பட்ட டிமாண்டு.  அடிக்கடி  வர்ற இடமாப் போயிருக்கு ! பெருசும், கொஞ்சம் சிறுசுமா ரெண்டு ஹால்கள்.

அம்மன் கூழ் பூஜை முடிச்சுட்டுக் சாயங்காலமாக் கிளம்பிப்போனோம். இந்த ஹாலுக்கு அருகிலேயே  ( ரெண்டு நிமிட் ட்ரைவ்! )ஒரு ஆஞ்சி கோவில் (தனியார் கோவில்தான். வீட்டு  முற்றத்தில் ஸ்தாபனம் !) இருப்பதால் முதலில்  அங்கே போய் ஆஞ்சியைக் கும்பிட்டுக்கிட்டு ஹாலுக்கு வந்தோம்.  இந்த ஆஞ்சி, நம்ம சநாதன் ஹாலில்  இருக்கும் ஆஞ்சிக்கு முன்னால் வந்தவர்.  அதனால் கொஞ்சம் முதியவராகக் காட்சி கொடுப்பார் !
நோன்பு நோற்போருக்கான முக்கிய அம்சமான.....  மெஹந்தி போட்டுக்கும் வேலை மும்முரமா நடந்துக்கிட்டு இருக்கு ஒரு பக்கம்.  ஒரு நாலைஞ்சு நிபுணிகள் பரபரப்பா வரைஞ்சு தள்ளிக்கிட்டு இருக்காங்க.

ஒரு பக்கம் நகைநட்டு, துணிமணி, பூஜைக்கான செட் (தாம்பாளம், சொம்பு, விளக்கு,  ஜல்லடை .... ) தங்கத்துலே   நம்மவர் இப்படி ஜல்லடை வாங்கித்தந்தால்  நானும்  இந்த விரதம் இருப்பேன் என்று சொல்லிக்கொண்டு..........



விழா ஏற்பாட்டளரான  தோழி ,  பொழுதுபோக்குக்காக  Bingo விளையாட்டை நடத்துனாங்க. வென்றவர்களுக்குச் சின்னதா ஒரு பரிசு !



சிறுதீனிகளாகக் கொஞ்சம், நம்ம நண்பர் செந்திலின்  கேட்டரிங் கம்பெனி ஏற்பாடு.

அடுத்துள்ள சின்ன ஹாலில் ஒரு பொறந்தநாள் விழா நடக்குது. அங்கும் நண்பர் செந்திலின் சப்ளைதான்!  குழந்தையின் முதல் பிறந்தநாள் விழா !  கொஞ்சம் பார்த்துவச்சுக்கிட்டேன்..... நம்ம பேரனுக்கும்  பொறந்தநாள் கொண்டாட்டம் வரப்போகுதே !




KARWACHAUTH MELA 2023 


விரதநாள்  2023 நவம்பர் மாதம் முதல்தேதி !





6 comments:

said...

நோன்புக் கொண்டாட்டங்கள் அருமை.  இந்த ஜல்லடையால் கணவன் முகத்தைப் பார்ப்பது - சமீபத்தில் அனிமல் படத்தில் கூட பார்த்தேன்.  அந்தப் படத்தின் அந்தக் காட்சியில் ராஷ்மிகா நடிப்பில் தூள் கிளப்பி இருப்பார்!

said...

வடக்கில் பிரபலமான, பரபரப்பான கொண்டாட்டங்கள் இருக்கும் பண்டிகை. முதல் நாள் மாலை ஊர் முழுக்க கோலாகலம் தான் - ஆங்காங்கே சாலை ஓரங்களில் டென்ட் போட்டு, நிபுணிகள், நிபுணர்கள் மெஹந்தி வைத்து காசு பார்ப்பார்கள். மண் விளக்குகள், அலங்காரப் பொருட்கள், உடைகள் என கனஜோராக இருக்கும் மார்க்கெட் முழுவதும். அலுவலகத்தில் வேலைபார்க்கும் 90 சதவீத பெண்கள் அன்று விடுமுறை தான்! அடுத்த நாள் அந்த அலங்காரத்துடன், உடையுடன் வருவதை பார்க்க அலுவலகமே திருவிழா கோலம் தான். உங்கள் ஊர் கொண்டாட்டங்களை உங்கள் பதிவு வழி பார்த்து ரசித்தேன்.

said...

வாங்க ஸ்ரீராம்,


அனிமல்? இப்பெல்லாம் சினிமா பார்க்கிறதையே விட்டாச். இந்தப் பண்டிகை வடக்கர்களுக்கு ரொம்பவே விசேஷம். குடும்பப்படமுன்னா கட்டாயம் இந்த ஸீன் இருக்கும். இருக்கணும்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

சண்டிகர் வாழ்க்கையிலும் அனுபவிச்சுருக்கேன் இந்தக் கோலாகலத்தை !!!!

இப்ப என்னன்னா..... இங்கேயும் அட்டகாசமே ! வரப்போகும் பதிவில் கோவில் கொண்டாட்டத்தையும் எழுதணும் !

said...

விழாக்களும் கொண்டாட்டங்களும் சிறப்பாக நடக்கின்றன. கண்டு மகிழ்ந்தோம்.

said...

வாங்க மாதேவி,

நன்றிப்பா !