தமிழ் தெரியாதுன்னு ஒரேதாச் சொல்ல முடியாது. பழைய காலத்துலே புழங்கிய ஒரு சில சொற்கள் இன்னும் மறக்காமல் நினைவடுக்கில் தங்கி இருக்குதுதான். ப்ரட்டாசி, கூளு, நமஸ்காரம், எப்டி, அவில், கோவிந்தா, மாரிம்மா .......
நம்மூர் மஹாமாரியம்மன் கோவில் வந்த விவரம் முந்தியே சொல்லி இருக்கேனில்லையா.... அங்கே கோவில் கட்டிக்க இடம் கொடுத்த நண்பர், இடத்தை வித்துட்டார். யாருக்கும் சொல்லாமலேயே என்பதுதான் கஷ்டமாப் போயிருச்சு. ஒரு சின்னத்தகவலாச் சொல்லி இருந்தாக்கூட, நாங்கள் எல்லோரும் சேர்ந்து எப்படியாவது இடத்தை வாங்கியிருப்போம்.
கஷ்டம் வந்தது அம்மனுக்குத்தான் ! இப்படி அவளையும் இடம் தேட வச்சுருக்குக் காலம்..... மஹாமாரியம்மனுக்கும் இடப்பெயர்ச்சி !
அதுக்காக செய்ய வேண்டிய பூஜை புனஸ்காரத்தையும் நிறுத்த முடியுமா ? கோவில் நம்ம ஃபிஜி தமிழ்ச்சங்கம் வகையைச் சேர்ந்தது. தலைவர் வீட்டில் தாற்காலிகமாகக் குடிபுகுந்துருக்காள். நாமும் எப்பவாவது ஒரு வெள்ளிக்கிழமைகளில் போய்க் கும்பிட்டுக்கிட்டு வருவோம். 'உன் கதி இப்படியாச்சே'ன்னு புலம்பிட்டுத்தான் வருவேன்.
தலைவர் வீட்டிலும் தோட்டத்தில் ஒரு ஷெட் போட்டு அதுலே அம்மன் & குழுவினரை வச்சுருக்காங்க. இடம் அநேகமாக் கிடைச்சுருமுன்னு தலைவர் சொல்லியிருக்கார். இனி இப்படி நடக்காமலிருக்க, நல்ல இடமாவே சொந்தமா வாங்கிக்கணுமுன்னு நாங்க முடிவெடுத்துருக்கோம்.
கூழ் ஊத்தணும், பூஜைக்கு வாங்கன்னு சேதி அனுப்பினாங்க தலைவரின் மனைவி. இங்கே இந்த மொத்த ஃபிஜி தென் இந்திய மக்களில் நாம்தான் ஊர்க்காரங்க. ரெண்டு நாடுகளிலும் இருந்ததால் முறைகள் எல்லாம் ஓரளவு நல்லாவே தெரிஞ்சவங்க. குறிப்பிட்ட நேரத்துக்குப் போனோம். ஒரு நாலைஞ்சு குடும்பங்களும் வந்துருந்தாங்க.
அம்மன் சந்நிதிக்கு முன்னால் கொஞ்சம் மண்ணால் மெழுகி ( இங்கே சாணம் கிடைக்காது. ஊருக்குள் மாடு, ஆடுகளுக்கு அனுமதி இல்லை. நாய் & பூனைகள் மட்டுமே நகரில் வசிக்கலாம் !) அரிசிமாவுக்கோலம் போட்டு படையலுக்கான இடம் தயார் செஞ்சாங்க. அம்மன் விளக்கேத்தி வச்சு, மஞ்சள் புள்ளையார் புடிச்சு வச்சு சின்னதா பூஜை ஆரம்பிச்சது. குடும்பம் குடும்பமாப் போய் தீபாராதனை காமிச்சுக் கும்பிட்டோம்.
கூழ் தயாரிச்சு பிரஸாதவகைகளோடு அடுத்துள்ள மேஜையில் ! நம்ம பக்கம் போல கேழ்வரகு கூழ் கிடையாது. ஃபிஜிக்குத் தமிழ்மக்கள் வந்த காலத்தில் அங்கே கேழ்வரகெல்லாம் ஏது ? அரிசிமாவுலே கூழ் செஞ்சு படைச்சுருப்பாங்க போல ! அதுவே ஒரு வழக்கமா மாறி இருக்கு ! ஆச்சே, 140 வருசங்களுக்கு மேலே ! ஆனா விடாமக் கடைப்பிடிக்கிறாங்கன்றதுதான் முக்கியம், இல்லையோ ! நல்லா இருக்கட்டும் !
நம்ம மிஷல்தான் கூழ்ப்பானை(பக்கெட் ) தலையில் சுமந்து சந்நிதியை, வலம் வர, நாங்களெல்லாம் கோவிந்தநாம சங்கீர்த்தனம் செய்தபடி சந்நிதியை மூன்றுமுறை வலம் வந்தோம். ( அதென்ன அம்மனுக்குக் கூழ் ஊத்தும்போது கோவிந்தான்னு கேட்கப்பிடாது.... ஃபிஜியில் எந்த விழா என்றாலுமே கோவிந்தா கோவிந்தாதான் ! )
https://www.facebook.com/1309695969/videos/1069728747536331/
மேலே உள்ள சுட்டியில் ஒரு மூணு நிமிட் வீடியோ க்ளிப்பைப் பார்க்கலாம்.
நம்ம மிஷலுக்கு அம்மன் பக்தி அதிகம். வீட்டிலும் ஒரு அம்மன் விக்ரஹம் வச்சுப் பூஜை செய்யறாங்க. அம்மா அம்மான்னு உருகும் குடும்பமே ! தமிழ் தெரியாதபோதும் இங்கிலீஷில் எழுதி வச்சு அம்மன் பாடல்களைப் பாடுவதில் கெட்டிக்காரி. தென் ஆஃப்ரிகா பாடகர் Preven Moodley (ப்ரவீன் முதலி )அனுப்பி வைக்கும் பாடல்களைக் கேட்டுக்கேட்டே பாட ஆரம்பிச்சு இப்போ நம்மூரில் நம்பர் ஒன் ! சின்னதா ஒரு உடுக்கை அடிச்சுக்கிட்டேப் பாடும்போது.... சின்ன அம்மன்னு எனக்குத் தோணும் !
https://www.facebook.com/1309695969/videos/1084409032554205/
அம்மன் குழுவிற்கு தீப ஆரத்தி காமிச்சுப் பூஜை முடிஞ்சது. எல்லோரும் வீட்டுக்குள்ளே போனோம். ஒரு விஷயம் குறிப்பாச் சொல்லவேணும் எனக்கு !
பொதுவா ஃபிஜி இந்தியர்களின் தனிப்பட்டப் பூஜை, பொது விழா, சத்சங்கம் இப்படி எதுவானாலும், குழந்தைகளின் பங்கு அதிலுண்டு. தீபாராதனை முடிந்ததும் ஆரத்தித் தட்டுகளைக் கையிலேந்தி எல்லோருக்கும் கண்ணில் ஒற்றிக்கக் கொண்டு போறது, பிரசாதம் விளம்பும் நேரம் பக்தர்கள் அனைவருக்கும் தட்டுகளை விநியோகிப்பது, பிரஸாதப் பாத்திரங்களைத் தூக்கும் வயதுடைய பிள்ளைகள் என்றாலும், அதைத் தூக்கிப்போய் வரிசையில் எல்லோருக்கும் விளம்புவதுன்னு சின்னச்சின்ன சேவைகளை ஆசையாகச் செய்றது பார்க்கவே ஒரு அழகு!
அதே போல் தீபாராதனை முடிந்ததும் கண்ணில் ஒற்றிக்குமுன் சில்லறைக் காசுகளைத் தட்டில் போட மறப்பதே இல்லை. அது ஒரு அம்பது சென்ட் என்றாலும் கூட..... இப்படிப் பழக்கி வைக்கும் பெற்றோர்களுக்குத்தான் உண்மையில் இந்தப் பாராட்டு !
பிரஸாதம் ஸ்வீகரித்ததும் நாங்க கிளம்பிட்டோம். இன்னும் கொஞ்சநேரம் இருந்து லஞ்ச் எடுத்துக்கலைன்னு தலைவருக்கும் மனைவிக்கும் ஒரே குறை ! நமக்கென்ன ரெண்டு வயிறா இருக்கு ? பேக் பண்ணித்தரேன்னு வம்படி பண்ணுனதை அன்பா மறுக்கும்படி ஆச்சு. சொல்ல மறந்துட்டேனே ... படையலில் கூழ் மட்டுமில்லையாக்கும். கூடவே ஒரு கீரைப்பொரியலும் உண்டு !
திரும்புமுன் அம்மனை இன்னொருக்காக் கும்பிட்டு, 'சீக்கிரம் இடத்தைக் காமி ஆத்தா'ன்னு வேண்டுதல் வச்சுட்டு வந்தேன்.
6 comments:
அம்மனுக்கு விரைவில் அவளுக்கான இடம் கிடைக்கட்டும். கொண்டாட்டங்கள் அனைத்தும் சிறப்பு. நம் வழிபாடுகளை மறக்காமல் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
சுவாரஸ்யமான தகவல்கள். அட்டைப்பெட்டியில் அம்மன் ஆராதனை.
வாங்க வெங்கட் நாகராஜ்,
எனக்கும் இவர்கள் வழிபாடுகளை மறக்காமல் தொடர்வது மகிழ்ச்சியே ! இடம் அமைய 'அவளே' அருள் பாலிக்க வேணும் !
வாங்க ஸ்ரீராம்,
அந்த அட்டைப்பெட்டி, காற்றில் தீபம் அணையாது இருக்கவே !
அம்மனுக்கு நிரந்தர கோவில் விரைவில் அமைய அவளருளையே வேண்டி நிற்போம் தாயே சரணம்.
வாங்க மாதேவி,
இன்னும் அவளுக்கு மனம் இரங்கவில்லை..... ஒரு வேளை... கூட்டமில்லாமல் நிம்மதியாக இருக்கத் திருவுளமோ ???
Post a Comment