Monday, February 12, 2024

நான் ஒருத்திதான் நோகாமல் நோம்பு இருப்பவளாக்கும் !

அக்டோபர்  முடிஞ்சு நவம்பரும் ஆரம்பிச்சது. இன்றைக்குத்தான்  கர்வாச்சௌத் விரதநாள். நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலில்   விரதபூஜை நடத்திக்க  ஆரம்பநாளில் இருந்தே (ஆச்சு 19 வருஷம்)  அனுமதிச்சு இருக்காங்க.   முந்தியெல்லாம்  ஒரு மணி நேரத்தில்  முடிஞ்சுரும். இப்ப இந்த விரதம் இருக்கும்  மக்கள் தொகை ரொம்பவே பெருகிப்போச்சு. 
ஒரு முறை நம்ம இண்டியன் க்ளப் தீபாவளியில் மேடையில் பங்ரா நடனம் ஆரம்பிக்கும்போது, இங்கே கூடி இருக்கும்  மக்களில் இந்த கலாச்சாரத்தைத் தொடரும் மக்கள் மேடைக்குக்கீழே வந்து நின்னு கூடவே ஆடலாமுன்னு அறிவிச்சபோது......  அரங்கத்தில் இருந்த 90 சதமானம் மக்கள் எழுந்துபோய் ஆடுனாங்கன்னா பாருங்க !


ஆரம்பகாலமுதல் நம்ம நெருங்கிய தோழிதான் இந்த நோன்புக்கான ஏற்பாட்டாளர்.  பேசாம மூணு குழுக்களாப் பிரிச்சுடலாமுன்னு சொன்னாங்க. அன்றைக்கு வேலை நாள் வேற. புதன்கிழமை. மக்களின் வசதிக்காக  மதியம் மூணரை முதல் ஆறரை வரை கோவிலில் அனுமதி வாங்கியிருந்தாங்க.  மூணரை, அஞ்சு, ஆறு ன்னு   மூணு குழுக்கள்.  . முன்கூட்டியே பதிவு செஞ்சுக்கச் சொல்லி உள்ளூர் பெண்களுக்கான ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டதும், அவரவர் தங்களுக்கான நேரத்தைப் பதிஞ்சுக்க முடிஞ்சது.  அப்படியும் சிலர் பாதி பூஜையில்  வந்து சேர்ந்ததும் உண்டு. 
வழக்கம்போல் எனக்கும்   அழைப்பு. நான் ரெண்டாம் குழு ஆரம்பிக்கும்போது வர்றேன்னு சொல்லியிருந்தேன்.  காலையில் பேரன்  வர்றதால் முன்னுரிமை அவனுக்கே!  குழந்தையும் தெய்வமும் கொண்டாட வேண்டியவைதான். அதிலும் குழந்தைதான் முதல் !   தாத்தாச் செல்லம் வேற ! மகள் ஏதோ வேலையாக வெளியில் போயிருந்தவள்,  வந்ததும் குழந்தைத் தாயுடன் கிளம்பிப்போனான். நாங்களும் கிளம்பினோம் ஹரே க்ருஷ்ணா கோவிலுக்கு. ஆச்சு மணி நாலே முக்கால்.    

அப்பதான் முதல் பேட்ச் முடிஞ்சு ரெண்டாவது ஆரம்பம்.   நாங்க உள்ளே போய் ஸ்வாமி தரிசனம் செஞ்சோம்.  விரதம் இருப்பவர்கள் வட்டமா உட்கார, நடுவில் ஒரு சிகப்புத்துணி விரிச்சு அதில் விளக்கு பழங்கள், ப்ரஸாதங்கள்னு அவுங்க வழக்கம் அனுசரிச்சு வச்சுருந்தாங்க.  கொண்டு வந்திருந்த ஆரத்தித் தட்டில் சில பூஜாசமாச்சாரங்கள். சிலர் தட்டின்மேல் அலங்காரத்துணி போர்த்தியிருந்தாங்க.  


https://www.facebook.com/1309695969/videos/708281310832743/

பூஜை ஆரம்பிச்சதும்  இதுக்குண்டான பாட்டைப் பாடிக்கிட்டே , நம் கையிலுள்ள தட்டை வலப்பக்கத்தில் இருந்தவர்களிடம் கடத்திட்டு, இடப்பக்கம் இருப்பவர்களின் தட்டை வாங்கிக்கணும். இப்படியே கைமாறி மாறி  நம்ம தட்டு, நம்ம கைக்குத் திரும்பி வந்ததும் ஒரு ரவுண்ட் ஆச்சு. ஒரு ரவுண்டு முடிஞ்சதும் பூஜை நடத்தும் ஆர்கனைஸர்  விரதப் புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி வாசிப்பாங்க.  இப்படியே ஏழு முறை ஏழு  ரவுண்டு !  
ஆண்கள்  கூட்டமெல்லாம்  வெளியே வளாகத்தில், தங்கள் நலனுக்காக விரதம் இருக்கும் மனைவி பூஜை முடிச்சு வரட்டும், என்ன பரிசு தரலாமுன்னு யோசனை செஞ்சுக்கிட்டு இருப்பாங்கன்னு நான் நினைக்கிறேன்:-)   நம்மவர் செல்ஃபோன் பார்த்துக்கிட்டு இருந்தார். நாந்தான் விரதமொன்னும் இருக்கலையே..... 
இந்தப் பூஜை முடிஞ்சதும் பெரியவர்களை வணங்கி ஆசி வாங்கிக்கணும் என்பது சம்ப்ரதாயம்.  பெரியவளா இருந்து பொறுப்புடன் ஆசிகளை அள்ளி வழங்கினேன்.  சதா சுஹாஹன் ரஹோ !!! தீர்க்க சுமங்கலி பவ !

கடைசி பேட்ச் மக்கள் வந்துகிட்டு இருக்காங்க.  கைநிறைய  வளையல்கள், நகைநட்டு, நெத்திச்சுட்டி, ஜிலுஜிலுன்னு காக்ரா ( எல்லாம் முக்கால்வாசிப்பேருக்கு அவர்களின் கல்யாண உடுப்புதான் !  அட்லீஸ்ட் வருஷத்துக்கொரு முறை உடுத்திக்கச் சான்ஸ் கிடைச்சுருது !) அலங்காரமாத்தான் வர்றாங்க.  ச்சும்மாச் சொல்லக்கூடாது , அழகாத்தான் இருக்கு !  

கோவிலில் தாமோதர மாசத்துக்கான ஏற்பாடு செஞ்சுருந்தாங்க.  சித்திரை வைகாசி போல வைஷ்ணவர்களுக்கான மாசங்கள் 12க்கு மஹாவிஷ்ணுவின் முக்கியப்பெயர்கள் வச்சுருக்காங்க.  எல்லாம் நம்ம துவாதச நாமம் சொல்றோமே அவையே!  இஸ்கான் அமைப்புக்கான  வருஷம் பொறப்பது, லூனார் கேலண்டர்படிதான். ஆனால் யுகாதி  சைத்ர மாசம் ,  அமாவசைக்கு அடுத்தநாள் என்றில்லாமல், நவராத்ரி முடிஞ்சதும் வரும் பௌர்ணமிக்கு அடுத்தநாள்தான் வருஷ ஆரம்பம்.  அந்தக் கணக்கில்  இது தாமோதரமாசம்.  இந்த மாசம் முழுசும் தாமோதராஷ்டகம் சொல்லணுமுன்னா  பக்கத்தில் இருக்கும் போர்டில் பார்த்துப் படிக்கலாம். என்ன ஒரு கஷ்டமுன்னால்....  அந்தக் காலத்துலே இதை இங்லிஷில் எழுதிவச்சவங்க  'ச' வுக்கெல்லாம் ' C ' போட்டுருப்பாங்க.  நம்ம புத்தியில் அது சட்னு உறைக்காது. முழிப்போம்.
Namamisvaram sac -cid- ananda- rupam னு ஆரம்பிக்கும் முதல்வரியைச் சொல்லிப்பாருங்க..... இயக்கத்தினர் சரளமாப் பாடும்போது எனக்கு வியப்புதான் !  




இந்த மாதம் முழுவதும்  சந்நிதியில் நெய்விளக்கு ஏற்றி வைப்பது நமக்கு முக்தியைக் கொடுக்கும் என்றொரு நம்பிக்கை இருக்கு. கோவிலே நெய்விளக்குக்கான ஏற்பாடுகளைச் செஞ்சுருவாங்க.  தக்கினியூண்டு  தீப்பந்தம் போல பஞ்சு சுத்தி நெய்யில் நனைச்சு வச்சவைகள் ஒரு  சின்ன பாத்திரத்தில் (டம்ப்ளர் / பஞ்சபாத்ரம் ) இருக்கும்.  விளக்குக்குச்சியை நட்டுவைக்க ஒரு பெரிய  ட்ரேயில் அரிசி நிறைச்சுருக்கும், ( இங்கே மண் நிறைச்சு வைக்கும் வழக்கம் இல்லை) தீப்பெட்டி,  விளக்குக் கொளுத்துமுன் கைகளை நனைச்சுக்க ஒரு பஞ்சபாத்ரம் & உத்தரணியில் தண்ணீர் எல்லாம் ரெடியாக இருக்கும்.  நாம் போய் ஒரு உத்தரணி ஜலம் நம்ம கைகளில் வார்த்துட்டு, தீக்குச்சியைக் கொளுத்தி, நெய்விளக்கேற்றி , மூலவருக்கும், குருவிற்கும் ஆரத்திபோல் காமிச்சுட்டு அரிசியில் குத்தி வச்சுறணும். நிறையப்பேர் இருந்தால் ஒரு டீலைட் கேண்டில் பத்தவச்சுக்கிட்டால் போதும். 
நாங்களும் நெய்விளக்கேத்தி வச்சுட்டு நமஸ்கரிச்சுட்டுக் கிளம்பிட்டோம். 
இன்று  நமக்கு யோகா வகுப்பு இருக்கும் தினம். வீட்டுக்கு வந்துட்டு,  கொஞ்சம் ப்ரஸாதம் & அருகம்புல் எடுத்துக்கிட்டு யோகா வகுப்புக்குப் போனோம்.  நம்ம புள்ளையாருக்குன்னே ஆக்லாந்து நகரில் இருந்து கொஞ்சம் அருகம்புல் விதைகளை  வாங்கி  விதைச்சுவிட்டதில்   கோவிலுக்குப் போகும்போதெல்லாம் கொஞ்சம் அருகம்புல் கொண்டுபோவது வழக்கமா இருக்கு. நம்மூரில் அருகம்புல் வளர்க்கும் ஒரே வீடு நம்மதுதான், கேட்டோ !  இங்கே இந்தப் புல்லுக்கு Bermuda/ Couch Grass னு பெயர் !


எங்க யோகா வகுப்பு நடக்கும் வளாகத்தில் புள்ளையார் கோவில் வந்த பின், ஒவ்வொரு புதனும் வகுப்பு முடிஞ்சதும் கோவிலுக்குப் போறது ஒரு வழக்கமா ஆகி இருக்கு. வகுப்பில் இருந்து கிளம்பும்போது யார்யார் கோவிலுக்கு வர்றீங்கன்னு ன்னு பொதுவா ஒரு அறிவிப்பேன்.  முடிஞ்சவர்கள் வருவாங்க.

இன்றைக்கும் அதே போல் அறிவிச்சுட்டுக் கோவிலுக்குப் போனோம். கோவிலில்  இன்றக்கு சங்கடஹர சதுர்த்தி ! அபிஷேகம் நடந்துக்கிட்டு இருக்கு. நாமும் போய் ஜோதியில் கலந்தோம்.


அலங்காரம் முடிச்சு தீபாராதனை ஆச்சு. நம்மவர் ஆரத்தித் தட்டைக் கொண்டுபோய் எல்லோருக்கும் கண்களில் ஒத்திக்கக் கொடுத்தார்.  அவருக்கு ரொம்பப் பிடிச்ச செயல் இது ! 


நம்ம கோவிலுக்கு  இப்பெல்லாம் நிறைய வடக்கர்கள் வர்றாங்க. நம்ம  பண்டிட் நேபாளி என்பதால் அவர்களும் தரிசனத்துக்கு  வர்றாங்க. கோவிலில் கூட்டம்  இருந்தால் நல்லாதான் இருக்கு !

8 comments:

said...

முக்தி கிடைக்க இவ்வளவு சுலபமா வழி இருக்கா?!

said...

சிறப்பான கொண்டாட்டங்கள். பதிவு வழி தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது - மகிழ்ச்சி.

said...

வாங்க ஸ்ரீராம்,

இல்லையா பின்னே ? மனத்தில் பக்தி உணர்வு இருந்தாலே முக்திதான்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ! தில்லிவாசிக்கு இதெல்லாம் ஏற்கெனவே தெரிந்தவை தானே !

said...

விரதமும் பூஜைகளும் நெய்விளக்கும் , சிறப்பாக நடப்பது மகிழ்ச்சி தொடரட்டும் விழாக்கள்.

said...

வணக்கம்ங்க துளசி டீச்சர்!

ரொம்ப நாளாச்சு. வருடமாச்சு உங்களப் பார்த்து. இன்னும் ப்ளாகர்ல நிறைய எழுதி பகிர்ந்து கொண்டுதானநீருக்கீங்கனு எனக்குத் தெரியாது.

"முக்தி கிடைக்க இவ்வளவு சுலபமா வழி இருக்கா?"

ஶ்ரீராம் என்ன rationalist ஆயிட்டாரா!! Just kidding!!

said...

வாங்க மாதேவி,

தாய்நாட்டை விட்டு வெளியே வந்ததும்தான் நம்ம பாரம்பரியத்தின் அருமை புரிகிறது. அதான் பூஜைகளையும் விரதங்களையும் வெளிநாடுகளில் அட்டகாசமா கடைப்பிடிக்கறாங்க, இல்லே !!!

said...

வாங்க வருண்,

நல்லா இருக்கீங்களா ? திடீர்னு உங்களைப் பார்த்ததும் மனசு சந்தோஷப்பட்டது. தமிழ்மணம் போனபிறகு 'மேடை' இல்லாமல் போச்சே..... அதுக்காக ஆட்டத்தை நிறுத்த முடியுதா ? ஒரு ஓரமா நின்னு ஆட வேண்டியதுதான், இல்லையோ !!!!