Monday, April 22, 2019

பலவேசப் பெருமாள் @ ராமராஜ்யம் !!! (பயணத்தொடர், பகுதி 94 )

கொஞ்ச நேரத்துலேயே நம்ம திட்டத்தில் ஒரு மாற்றம் வந்துச்சு. ஓலா கேப் வராதாம்.  கேன்ஸல் பண்ணறோமுன்னு சேதி !   நல்லவேளை காலையில் நாம் தயாரா இருக்கும்போது  கழுத்தறுக்காம  இப்பவே சொன்னதும்  ஒருவழியில் நல்லாதாப் போச்சுன்னு வச்சுக்கலாம்.  ஒரு  முக்கால் மணி நேரப் பயணம்.  அங்கே இருந்து திரும்பிவர வாகன வசதி கிடைக்குமான்னு ஒரு யோசனை இருந்துச்சுதான்.
வலையில் தேடி தி.நகரில் ஒரு வண்டியை  புக் பண்ணினார் இவர்.   எதோ மணிக்கணக்குன்னு  பேச்சு. என்னவோ மைலேஜ் கணக்கு சொன்னாராம்  ஓனர்.  அந்த டிரைவர் காலை நாம் சொன்ன நேரத்துக்குப் பத்து நிமிட் லேட்டா வந்தார். இடம் தேடிக்கிட்டு இருந்தாராம் ! இதே பேட்டையில் இடம் தேடல்..... எவ்ளோ சரளமா பொய்  வருது பாருங்க....  தொலையட்டும்....  காலங்கார்த்தாலே ஒரு வம்பும் வேணாம்.
ராமராஜ்யத்துக்குப் போகணுமுன்னால் எனக்கு எப்பவுமே ஒரே மகிழ்ச்சிதான்!  இப்பவும்.... கூட.....
காலையில் அவ்ளோ  ட்ராஃபிக் இல்லாததால்..  முக்கால்மணி நேரத்துலே போய்ச் சேர்ந்தோம்.
ராமராஜ்யம் ஒரு கேட்டட் கம்யூனிட்டின்னு வச்சுக்கலாம்.  ஏற்கெனவே சிலபல முறை எழுதி இருக்கேன். முடிஞ்சால் எட்டிப் பாருங்க.

முதல்முறை அங்கே போன அனுபவம் இங்கே!


முக்கியமா அங்கே தங்க விரும்பினால்   அனுமதி கேட்டு மடல் அனுப்பலாம். ஏற்கெனவே தங்கியும் இருக்கோம். கிளம்பி வாங்கன்னுருவார்.
இங்கே உள்ளே  ஏராளமான கோவில்கள் இருக்கு. அத்தனையும்  ஒரு அழகோடும், ஒழுங்கோடும் நித்யப்படிப் பூஜை புனஸ்காரங்களாலும்  ரொம்பவே நல்லா  நடந்துக்கிட்டு இருக்கு.  கேட்டட் கம்யூனிட்டின்னு சொன்னேன் பாருங்க....  இங்கே வசிக்கும் சுமார்   இருநூறு குடும்பத்தினர், எல்லா வேலைகளையும் தங்களுக்குள் பகிர்ந்துக்கிட்டு ஆர்வமுடன் கவனிச்சுக்கும் தன்னார்வலர்களே!
இவர்களில் பெரும்பாலானோர் வெளியிடங்களில் பணி என்பதால் காலை எட்டுமணிக்குள் கோவில்களில் நித்ய பூஜைகள் நடந்துரும். திரும்ப எல்லோரும் ஆஃபீஸில் இருந்து வந்தபிறகு  ஏழு ஏழரைக்கு சாயரக்ஷை பூஜைகள் தொடங்கும்.

சனிக்கிழமைகளில் மட்டும்  காலையில் ரொம்ப விஸ்தாரமான பூஜை. மாதா அன்னபூரணி,  வகைவகையான நைவேத்யங்களோடு  தானே பல்லக்கில்  வந்து, இங்கிருக்கும் 'பெரியகோவில்' மூலவர் பூரணப்ரம்மத்துக்குத் தளிகை சமர்ப்பிக்கிறாள்!

பூஜை முடிஞ்சதும் எல்லோருக்கும் விருந்துதான். எப்பவும் குறைஞ்சபட்சம்  21 வகைகள்!  இந்த சனிக்கிழமைகளில் மட்டும் இங்கே வந்து போக வெளியாட்களுக்கும் அனுமதி உண்டு.  அன்று  காலை மட்டும் கேட் திறந்தே இருக்கும். அக்கம்பக்கம் உள்ள அன்பர்கள் விஜயமும் அன்றுதான்!

பெரிய கோவில் மூலவருக்கு பூரணப்ரம்மம் என்று பெயர்.  அனைத்து தெய்வங்களின் அடையாளங்களுடன் பரிபூரணமா நிறைஞ்சு இருக்கார். நாந்தான் இவருக்குப் 'பலவேசப் பெருமாள்'னு ஒரு பெயர் வச்சுருக்கேன்:-)

அந்தந்த நாளின் முக்கியத்தின்படி இவரே சிவன், அம்பாள், ஆண்டாள், கிருஷ்ணன், நரசிம்ஹர், வராஹர்,தாயார்,  தக்ஷிணாமூர்த்தின்னு  காட்சி கொடுப்பார்!  முதல்முறை பார்த்தப்ப இவர் 'தியாகேசர்' அலங்காரத்தில் இருந்தார்!

நாங்கள்  அங்கே போய்ச் சேர்ந்தப்ப மணி 7.20. முதலில் கேன்டீனுக்குப்போய் ஒரு காஃபி குடிக்கணும்.  எஞ்சினுக்குப் பெட்ரோல் ஊத்துனதும் ஒரு சுறுசுறுப்பு வந்துருது பாருங்க :-)
அங்கே போனால்  பெரிய பெரிய  கெட்டில்களில் டீ, காஃபி எல்லாம் தயரா இருக்கு.  மேஜைகளில்  பிஸ்கெட் வகைகள்.  கொஞ்சம் மக்களும் அங்கங்கே ! கேன்டீனில்  இன்று விற்பனை இல்லை.  எல்லாம் இலவசமாம்!  அட !   என்ன விசேஷம்? யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் நல்லா இருக்கட்டும், நலமுண்டாகட்டும்!
இங்கே முதல் தரிசனம் எப்பவும் எனக்கு நம்ம துர்கைதான்!  இஷ்டதெய்வம் ஆகிட்டாள். என்ன ஒரு கம்பீரம், நிகுநிகுன்னு என்ன ஒரு அழகு!  வச்ச கண்ணை வாங்க முடியாது.... கஷ்டப்பட்டுப் பிடுங்கி எடுக்கணும்... :-)
(இந்தப் பதிவு இப்போ எழுதிக்கிட்டு இருக்கும் சமயம் இவளுக்கு ஆச்சு எட்டு வயசு!    அமர்க்களமாப் பொறந்தநாள் கொண்டாடி இருக்காங்க. சேதி வந்தது ஃபேஸ்புக் நண்பர் மூலம்! )


அடுத்துப் போனது பெரிய கோவிலுக்கு!  திருமஞ்சனம் , அலங்காரம் எல்லாம் முடிஞ்சு பெருமாள் ஜிலுஜிலுன்னு இருக்கார். பக்தர்கள் அங்கங்கே!  பாபாஜியின் ஆஸனம் தயார் நிலையில் காத்துருக்கு! ஏழே முக்காலுக்கு வந்துட்டார். உள்ளூரில் இருக்கும் சமயம் தினமும் மாலையில் சத்சங்கத்தில் கலந்துக்குவார். சனிக்கிழமைகளில் காலையிலும் சத்சங்கம் உண்டு.  பகல்வரை இங்கேதான்  இருப்பார்.
இவரைக் கணினியுகத்துக் கடவுள்னு சொல்லலாம். யார் வேணுமானாலும் அருகில் போய் பேசலாம். ஜஸ்ட் ஒரே ஒரு சிம்பிள் கொள்கைதான் இங்கே.  Love all Love is all.


நாமும் நம்ம வரவைத் தெரிவிக்காமல் போய் இருக்கோம். வரும்போதே எல்லோரையும்  வரவேற்கும்வகையில்  கைகளை அசைத்து வாழ்த்து சொல்லிக்கிட்டே   வருவது இவர் வழக்கம். நம்மைப் பார்த்ததும் 'எப்ப வந்தீங்க'ன்னு சின்ன விசாரிப்பு!
அவரோட ஆஸனத்தில் அவர் போய் உக்கார்ந்தவுடன், விருப்பம் இருந்தால் கிட்டப்போய்  வணக்கம் சொல்லிக்கலாம். இவருடைய உதவிக்கு யாராவது இவர் பக்கத்துலே நின்னு ஒரு சின்ன ஸ்டேண்டுலே  எதாவது இனிப்பை சாக்லேட்டோ, முட்டாயோ.....   நிறைச்சுக்கிட்டே இருப்பார். அடுத்துப்போகும் அனைவருக்கும் எதாவது கிடைச்சுக்கிட்டே இருக்கும். யாரும் வெறுங்கையாத் திரும்பவே முடியாது :-)  அவரை வெறுங்கையாப் போய்ப் பார்ப்பதான்னுதான் நாமும் நேத்து கொஞ்சம் இனிப்பு, நம்ம வகையில்  வாங்கினோம்.  எது கிடைச்சாலும் உடனே அதை எல்லோருக்கும்  பகிர்ந்தளிக்கச் சொல்லிருவார்.
அதே போல  இங்கே பூஜையோ, சத்சங்கமோ நடக்கும் போதெல்லாம் மக்கள்  தின்ன,  எதாவது வந்துக்கிட்டே இருக்கும். இதுக்கெல்லாம் கணக்குவழக்கே இல்லை!  நம்  காதும் கண்ணும் வாயும்  பயங்கர பிஸி :-)  எல்லோரும் ரொம்பவே ரிலாக்ஸா உக்கார்ந்துக்கலாம்.  நாட்டாமைகள் யாரும் இல்லை. நாங்க எப்பவும்   மூலவருக்கு எதிர்ப்பக்கம் இருக்கும் நீளப்படி வரிசையில்  உக்காருவோம். சிலசமயம் திண்ணையிலும். இன்றும் அப்படியே....
பஜனைப் பாடல்கள்  சிலர் பாடிக்கிட்டு இருக்கும்போது, மாதா அன்னபூர்ணியின் வரவு. பதாகை பிடித்து இரண்டு பெண்கள் வர பல்லக்கில் வரும் அன்னபூரணியின் பின்  அன்றையத் தளிகையில் செய்த பதார்த்தங்களின் அணிவகுப்பு!    பெரும்பாலும் பெண்களே!  மருந்துக்கு  சில சமயம் ஒரு சில ஆண்கள் இருக்கலாம்:-)

நைவேத்யங்களை பூரணப்ரம்மத்திற்கு சமர்ப்பித்து, ஆரத்தி முடிஞ்சதும் நாம் போய் மூலவரை தரிசிச்சு வலம் வரலாம். இதற்கிடையில்  தரிசனம் செய்ய வரிசையில் நாம் போகும்போது , அந்தப் பதினெட்டுப் படிகளில் நின்றபடி ஒவ்வொருவருக்கும் எதாவது பழங்களைப் பிரஸாதமாகத் தருவார்  பாபாஜி. வாங்கிக்காதவர்கள் யாராவது உண்டான்னு கேட்டுக் கூப்பிட்டுக் கையில் தருவார். இதெல்லாம் எனக்கு ரொம்பவே பிடிக்கும் அம்சம்.  'நாம்தான் இந்த  அமைப்பின் தலைவன்' என்ற எண்ணம் இல்லாமல் நம்மில் ஒருவராக எளிமையாக இருக்கார் பாருங்க !

பூஜை நடந்து முடிஞ்சு நைவேத்யம் சமர்ப்பியாமி ஆனதும் அவைகளைக் கொண்டுபோய் பெரிய பாத்திரங்களில் இருக்கும்  அதே வகைகளில் சேர்த்துருவாங்க. எல்லோரும் சாப்பிட்டுப் போகணும், ஆமா.....

இதுக்கிடையில்  சிலர்  (வட இந்தியர்! ) வந்து மூலவரை தரிசனம் பண்ணினாங்க.  அப்புறம் விவரம் கிடைச்சது. இன்றைக்கு இங்கே இன்னொரு  ஹாலில் ஒரு ஆர் எஸ் எஸ் மீட்டிங்  நடக்குது. அதுக்கு வந்தவங்க இவுங்க. சஹா க்கள் !  இவுங்க வகையில்தான்  இன்றைக்குக் கேன்டீனில் சிற்றுண்டி ஏற்பாடுகள்!
நாங்க மூலவர் தரிசனம் முடிஞ்சு சாப்பிடப்போகும் வழியிலேயே  நமக்கான  உணவுத்தட்டுகளுடன் நண்பர் கோபால் சூடாவும் அவர்  மனைவியும்  வந்துட்டாங்க. அதிதி ஸேவை!

நண்பர்  மூலமாகத்தான்  அன்றன்று நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் படங்களாவும் வீடியோ க்ளிப்பாகவும் உலகின் பலபாகங்களில் இருக்கும் பக்தர்களுக்குப் போய்ச் சேர்ந்துக்கிட்டு இருக்கு!   நண்பர் கோபால் சூடா அவர்களுக்கு  என் நன்றி !
சாப்பாடானதும், திரும்ப பாபாஜியை சந்திக்கப் போனோம். முதல் கேள்வியே 'சாப்பாடு ஆச்சா' ?  அப்புறம் நம்ம பயணம் பற்றி விசாரிச்சார்.  போகும் இடங்களைச் சொன்னதும்  'ஒன்னு  தெற்கும் இன்னொன்னு வடக்குமா.....  சம்பந்தமே இல்லையே'ன்னு சிரிச்சார் :-) இடும்பியின் பயணம் அப்படித்தான் இருக்கும், இல்லையோ?

ராமராஜ்யாவில் எப்பவும் எதாவது புதுக் கட்டடங்களோ, வசதிகளோ வந்துக்கிட்டே இருக்கும். இந்த முறை என்னன்னு கேட்டதும், உடனே ஒரு  சின்னப்பொண்ணை நமக்கு கைடா அனுப்பிட்டார்.

குருவாயூர், ஹரிஹர்னு ரெண்டு கட்டடங்கள் வேலை முடிஞ்சு மின்னுது!   காட்டுக்குள்ளே போய்  சிங்கம் புலி யானைகளைக் கொஞ்சிட்டு,  காம்பவுண்டு சுவர்களில்  இங்கிருக்கும் பள்ளிக்கூடப் பிள்ளைகள்  வரைஞ்ச ஓவியங்களை ரசிச்சுட்டு, நிதானமா எல்லாம் சுத்திப் பார்த்துட்டுக் கிளம்பினோம்.

இன்னொருக்கா துர்கையின் தரிசனமும் ஆச்சு!

இன்னொரு விஷயம் இந்த ராமராஜ்யத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டி இருக்கு!  இங்கே வசிக்கும் மக்கள் எல்லோருமே  எதாவதொரு வகையில் இங்குள்ள கோவில்கள், தோட்டங்கள், மற்ற   இடங்கள் இப்படி எல்லாவற்றின் சுத்தத்தையும் பேணுவதில் உதவி செஞ்சுக்கிட்டே இருக்காங்க.  ஒரு சமூகம் எப்படி ஒருவருக்கொருவர் உதவியா இணைஞ்சு நடக்கணும் என்பதை இவுங்களைப் பார்த்துக் கத்துக்கணும்!
எத்தனையோ புதுமனிதர்கள் வேற  அங்கே போய் வந்துக்கிட்டு இருக்கோம். யாரும்  நம்மை வெளி ஆட்கள் என்று நினைக்கவிடாமல் அன்பாகப் பழகுகிறார்கள்.  நமக்கும் புது இடத்தில் இருக்கோமே என்ற தயக்கம் இல்லாமல்  அவர்களோடு ஒட்டிக்க முடியுது!   முழுமையான அன்பு நிலவும் சூழலில் மன அமைதி கிடைச்சுருதுல்லே!


ராமராஜ்யா மெயின் கேட்டுக்குப் பக்கத்துலே  ஒரு அம்மன் கோவில் இருக்கு. மிளகாத்தம்மன் !  முதல்முறையா அங்கேயும் போய், அம்மன் தரிசனமும் ஆச்சு!  இது  ஆடி.....  அவள் மாசம் !

தொடரும்........ :-)

5 comments:

said...

உங்கள் பயணத்தில் தொடர்கிறேன்.

said...

அனுபவத்தினை ரசித்தேன். மிளகாத்தம்மன் கோயிலுக்கு வர காத்திருக்கிறேன்.

said...

நன்றி

said...

தகவல்கள் சிறப்பு. தொடர்கிறேன்.

said...

சுத்தம்,அமைதி,ஆனந்தம்.