Wednesday, April 10, 2019

லக்ஷ்மியும் மஹாலக்ஷ்மியும்..... (பயணத்தொடர், பகுதி 90 )

திருவஹீந்த்ரபுரம் கோவிலில் இருந்து புதுச்சேரி 'ஹொட்டேல் அதிதி'க்குப்போய்ச் சேர சுமார் ஒரு மணி நேரம் ஆச்சு. ஆடிமாசம் ஆரம்பிச்சுருச்சுன்னு  வழியில் இருக்கும் மாரியம்மன் கோவில்களில் எல்லாம்  விளக்கு அலங்காரங்களும்,  எல் ஆர் ஈஸ்வரி பாட்டுகளுமா ஒரே கூட்டம்....



செக்கின் பண்ணிட்டுக் கொஞ்ச நேர ஓய்வுக்குப்பின் இங்கே கிட்டக்க இருக்கும் ஸ்ரீ வரதராஜரை தரிசிக்கப்போனோம்.  சாயரக்ஷை பூஜை முடிஞ்சு எல்லோரும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்காங்க. கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிஞ்சதுக்கான அடையாளங்கள் அங்கங்கே!


 திருப்பாவை முப்பதும்.....  ஹைய்யோ.....
அடடா.....  மாடர்ன் கல்வெட்டில் மந்திரத்தைப் புட்டுட்டாள்......!!!!
கோவில் வழக்கம்போல் சுத்தமாவே இருக்கு! பெருமாள் தரிசனம் முடிஞ்சு உள்ப்ரகாரம் வலம் வந்து  அங்கே சித்திரமாக இருக்கும் திவ்யதேசப் பெருமாட்களை ரசித்து வணங்கி வெளியே வந்தோம். ச்சும்மாச் சொல்லக்கூடாது..... மூலவர் அழகோ அழகு!  அங்கே அவருக்குச் செய்யும் அலங்காரங்களும் அழகுக்கு அழகு சேர்த்தாப்போல....  ஹைய்யோ.....

என்ன ஒரு அழகான பெருமாள்! அஞ்சடியில் கம்பீரமாக நிக்கறார்  வரதராஜர்!   அலங்காரம் அட்டகாசமா இருக்கு!  பூமியில் இருந்து கிடைச்சவராம்! மரத்தில் செஞ்ச  சிலைன்னதும் எனக்கு நம்ம அத்திவரதர் நினைவுக்கு வந்தார்.
மேலே மூலவர் படம் கூகுளாண்டவர் அருளியது!

வெளிப்ரகாரம் வலம் வந்து ஊஞ்சல் மண்டபத்தாண்டை வரும்போது மனசு திக் திக்குன்னு இருந்தது.....   சித்திரங்கள் இருக்குமோ.... இருக்காதோன்னு........    ஹப்பாடா....... இருக்கு!   மனசு இப்போதான் நிம்மதியாச்சு.  இதைப்போய் அழிக்கணுமுன்னு சொன்னவங்களை என்னன்னு சொல்றது......
அப்படி என்ன சித்திரங்கள்னு இருக்கா?  போனமுறை நம்ம பதிவில் போட்டவைகளை எட்டிப் பாருங்களேன்.  உங்களுக்கும் கட்டாயம் பிடிக்கும்..........

இந்த முறைக் கோவிலில் அதிகமாப் படங்கள் ஒன்னும் எடுக்கலை. ஒரு சில க்ளிக்ஸ் மட்டும்தான். எழுதிக்கொடுத்துக் காத்திருக்க நேரமில்லை....
நல்ல மெயின் ரோடுலே கடைகண்ணிகளுக்கு நடுவில் இருந்தாலும்.... கோவிலுக்குள் ஒரு (மன) அமைதி இருக்கத்தான் செய்யுது!
இங்கிருந்து அடுத்த அஞ்சாவது நிமிட்டில் (வெறும் 1.1 கிமீ தூரம்) லக்ஷ்மியின் தரிசனம் கிட்டி :-)
கண் முதலில் போனது காலுக்குத்தான். அடராமா.... கொலுசுலே ஒரு லேஸ்சங்கிலி அறுந்து கிடக்கே.... கவனிச்சுப் பார்த்தால் இன்னும் ரெண்டு மூணு இடங்களில் இப்படி.....
வலதுகால் கொலுசில்தான் இப்படி. இடது கால் ஓக்கே.... அப்ப  இடதுகாலால் வலதுகாலை பரக் பரக்குன்னு சொறிஞ்சுக்கறாளோ...............  விசுவோட மணல்கயிறு படத்தில்  சாந்தி க்ருஷ்ணாவிடம் எஸ் வி சேகர் ' உனக்கு டான்ஸ் தெரியுமுன்னாரே (!!!)உங்க அப்பா....  எங்கே ஆடு பார்க்கலாம்னு சொல்லும்போது  இப்படிச் சொறிஞ்சுக்கும் ஸீன் மனசுலே வந்துபோச்சு...( ச்சே.... எப்பப் பார்த்தாலும் சனியன் பிடிச்ச சினிமா  நினைவுதானா? )
கோயிலுக்குள் கூட்டம் இருக்கோ இல்லையோ... லக்ஷ்மியைச் சுத்தி ஒரு கூட்டம் எப்பவுமே இருக்கு! நின்னவாக்குலேயே நல்லாச் சம்பாரிச்சுக் கொடுக்கறாள். இருக்கும் கூட்டம் பார்த்தால் ஒரு நாளைக்கு ஆயிரம் கேரண்டீ! பணங்காய்ச்சி மரம் !!
ஒரு பத்துவருஷமா ஒவ்வொரு புதுச்சேரிப் பயணத்திலும் இவளைப் பார்க்காமல் போறதில்லை நாங்க ! நம்ம சீனிவாசன் கூட கோவிலாண்டை வண்டியை நிறுத்திட்டு, நான்  இறங்கிவருமுன் ஓடிப்போய் பார்த்துட்டு வந்து 'இருக்கு'ன்னு தகவல் சொல்லுவார் :-)
லக்ஷ்மிதரிசனம் முடிஞ்சதும், உள்ளே போய் மணக்குள விநாயகரையும் தரிசனம் பண்ணிக்கிட்டோம். முண்டாசின் நினைவு வழக்கம்போல் மனசுக்குள் வந்தது உண்மை....
படு சுத்தமாப் பளிச்ன்னு இருக்கு கோவில்.



ராச்சாப்பாட்டுக்கு இங்கே அடுத்தாப்லே இருக்கும் அடையார் ஆனந்தபவனில் கல்தோசை எனக்கும் ஊத்தப்பம் 'நம்மவருக்கும்' மேலே  மாடியில் இருக்கும் ஹாலில். இங்கே  ரெஸ்ட்டாரண்ட் ஸ்டையிலில் விளம்பறாங்க. கீழ்தளத்தில்   செல்ஃப் சர்வீஸில் ரமேஷ் வேறென்னமோ வாங்கிக்கிட்டார்.
சாப்பாடனதும்  வெளியில் எதிர்வாடையில் இருக்கும் லஸ்ஸி கடைக்குப் போனோம். கிவி லஸ்ஸிகூட இருக்காமே!
மேங்கோ லஸ்ஸிக்குச் சொன்னால், ஃப்ரிட்ஜ்லே இருந்து எடுக்கறார். ஏற்கெனவே தயாரிச்சு வச்சதாம். (எப்போ?) ஊஹூமுன்னு தலையாட்டினேன்.

கோவில் வாசலுக்கு வந்தால் லக்ஷ்மியின் ட்யூட்டி முடிஞ்சுருந்தது......
நாங்களும் அதிதிக்கு வந்துட்டோம்.
பொழுது விடியும் வரை தூக்கம்தான்....  குட்நைட்.

தொடரும்...........:-)


4 comments:

said...

சென்ற வருடம் கல்லூரி நண்பர்கள் சந்திப்பு இருந்தது பாண்டியில். அப்போது மணக்குள விநாயகர் தரிசனம் மட்டும். வரதராஜர் கோவில் போகவில்லை. உங்கள் மூலம் தரிசனம் கிடைத்தது. நன்றி. தொடர்கிறேன்.

said...

/ச்சே.... எப்பப் பார்த்தாலும் சனியன் பிடிச்ச சினிமா நினைவுதானா? )/அதுதானே உண்மை நிலை ஒப்புக்கொள்ள வேண்டியதுதானே

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இன்னொரு அகோபிலம் கோவிலும் இருக்கு. தச நரசிம்ஹர்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கலாம்.

ஒருமுறை குடும்பத்தோடு ரெண்டுநாள் தங்கறாப்போல வாங்க. பாரதி, பாரதிதாசன் நினைவகங்கள் எல்லாம் பார்க்க வேண்டியவைகள்தான்!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா,

சினிமாவையும் தமிழனையும் பிரிக்கவே முடியாதுங்களே!