Monday, April 15, 2019

சமண சனைச்சரன் !!! (பயணத்தொடர், பகுதி 92 )

ஹிந்துமதத்துலே இருக்கறமாதிரியே.....   சமணமதத்திலும் நவகிரஹங்களுக்கான  அதிபதிகள் இருக்காங்க. அவுங்க தேவர்களான தீர்த்தங்கரர்கள் (ரிஷப தேவர்  முதல் மஹாவீரர் வரை)இருபத்தினாலுபேரில் ஒன்பதுபேர் க்ரஹாதிபதிகளாவும் பொறுப்பேத்துருக்காங்க.
கடல்மல்லைப் பெருமாள் தரிசனத்துக்கப்புறம் சென்னை நோக்கிப் போகும்போது சட்னு ஒரு அலங்கார வாசல். வெண்பளிங்கு!
புதுசா (நமக்கு!) இருக்கே.... என்னன்னு பார்த்துட்டே போகலாமுன்னு  வண்டியை அங்கே விரட்டினால்..... அலங்கார வாசல் கடந்து உள்ளே ரொம்ப தூரத்தில்  இருந்த  செக்யூரிட்டி, விஸிட்டர்ஸ் புத்தகத்துலே  பெயரெழுதிட்டுப் போகச் சொன்னார்.

"அந்தர் கோன்ஸா பக்வான் ஹை?"

"நவ்க்ரஹ் மந்திர்....."

நவக்ரஹக்கோவில்  மஹாவீர்ஆலயம் !

உள்ளே....  ஹைய்யோ..... என்னன்னு சொல்வேன்........ என் தொணதொணக்கும் வாயைக் கட்டிப்போட்டது போலாச்சு ! ஒரு வெள்ளை ரதம் வானத்துலே இருந்து இறங்கி வந்தாப்லே தெரிஞ்சது.
இவ்ளோ அழகாக் கோவிலைக் கட்டுனவுங்க, எதோ திருஷ்டி பரிகாரம் போல  ஆஃபீஸ் கட்டடத்தை இப்படி வைக்காம, நாம் உள்ளே வரும் வழியின் ஆரம்பத்திலே   வச்சுருக்கக்கூடாதோ?
சமணம், பௌத்தம் எல்லாமே ஒரு வகையில் இப்போ நாம் ஹிந்துமதமுன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்  சனாதன தர்மம் என்னும் வைதீகத்திலிருந்து பிறந்தவைதான்.  இன்னும் சொன்னால் புத்தரே மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்னுன்னும் சொல்லிக்கிட்டு இருக்காங்களே!  சில இடங்களில் தசாவதார உருவச்சிலைகளில் புத்தரையும் கோர்த்துவிட்டுருக்காங்க!
விஷ்ணு கோவில்களை புத்தக் கோவில்களா மாத்தறவங்க முழுக்கோவிலையும் மாற்றி அமைக்காம மூலவரை மட்டும் மாத்தி இருப்பதையும் பலநாடுகளில் பார்த்துருக்கோம்.  நம்ம அங்கோர்வாட் கோவிலிலும்  விஷ்ணுவுக்குக் காது வளர்த்துவிட்டுப் புத்தரா ஆக்கிட்டாங்க.
திவ்யதேசக் கோவில்  முக்திநாத்?   காது வளர்த்த விஷ்ணு :-) போகட்டும் போங்க..... எல்லா சாமிகளும் ஒன்னுதான்னு  பெருமாளே சொல்லி இருக்கார்.  யாரைக் கும்பிட்டாலும் அது  தனக்கே வந்து சேருமுன்னு சொல்லலை? அதேதான்.....

சமணத்திலும் நம்ம சாமிகள்தான்! நாமும் பல இடங்களில் சமணக்கோவில்களுக்குப் போயிருக்கோம்.  அங்கே கூட மண்டபங்களிலும் தூண்களிலும் ராமாயண மகாபாரதச் சிற்பச் செதுக்கல்களுக்குக் குறைவே இல்லையாக்கும்! ராஜஸ்தான் பயணத்தில் 'ரணக்பூர்' கோவிலை மறக்கவே முடியாது!  ஹைய்யோ!

இந்தச் சுட்டியில் க்ளிக்கிப் பாருங்களேன்.... அற்புதம் !

நாம் படியேறிக் கோவிலுக்குள் காலடி வைக்கும் சமயம், அங்கே வந்த இன்னொரு செக்யூரிட்டி,  தலையை அசைச்சுட்டுப் படி இறங்கிப் போயிட்டார்.  சாமிகள் தனியே இருக்க வேணாமுன்னு துணைக்கு இருந்தார் போல,  என்னை மாதிரி :-)
நானும் நம்ம அடையார் அநந்தபதுமனை தரிசிக்கப்போகும்போது, சந்நிதியில் யாரும் மனிதர்கள் இல்லைன்னா.... யாராவது வர்றவரைக்கும் (அட்லீஸ்ட் பட்டர்)பெருமாளுக்குத் துணையா நின்னு, கொஞ்சம் பேசிக்கிட்டு இருப்பேன்.  நான் பேசுவேன். அவன் கேட்டுக்கிட்டுக் கிடப்பான் :-)

இப்பதான் மனுஷர்கள் வந்துட்டாங்களேன்னு போனமாதிரி தோணுச்சு எனக்கு.
உள்ளே பெரிய்ய்ய்ய்ய்ய வட்டவடிவமான  மண்டபம்!  கண்ணுக்கு நேரா மூலவர்! முனிசுவ்ரத ஸ்வாமி !  கேக்காத பெயரா இருக்கேன்னு.... பார்த்தால்.... இவர் இவுங்க சனைச்சரன். (சனீஸ்வரன்)  அப்ப இது  'ஜெயின் திருநள்ளாறு' இல்லே?
நவகிரஹங்களுக்கும் நவ தீர்த்தங்கரர்கள்.

பத்மப்ரபு-  சூரியன்
சந்த்ரப்ரபு - சந்திரன்
வசுபூஜ்யா - செவ்வாய்
மல்லிநாதா - புதன்
மஹாவீரா - வியாழன்
புஷ்பதந்தா - வெள்ளி
முனிசுவ்ரதா-  சனி
நேமிநாதா - ராஹு
பரஷ்வநாதா - கேது
இப்படிப் போகுது இவுங்க வரிசை.

வெள்ளைக்காரனுக்கும் இதே கிரஹங்கள்தான். என்ன ஒன்னு ராஹு கேது 'கதை' கிடையாது. ஆனால் பனிரெண்டு ராசிகள் உண்டு. அதுக்கு அவுங்க வேற பெயர்கள் வச்சு ராசிபலன் எல்லாம் சொல்றதுண்டு !  ஹாரஸ்கோப் ரீடிங்காம்:-)

இருக்கட்டும்.....  அதை அப்பப்ப எட்டிப் பார்த்துட்டு, நல்லதா நமக்குச் சொன்னாங்கன்னா  மட்டும்  'உண்மை'ன்னு எடுத்துக்குவேன்:-)
வட்ட மண்டபத்துக்கேத்தாப்லெ  வட்டவடிவமான மார்பிள்  பாவிய தரையில்  வட்ட டிஸைன்கள், கோலம் போட்ட மாதிரி.  மேலே  விதானத்தில் தொங்கும் பெரிய  சாண்டிலியர். இதுவும் வட்டமாத்தான் !
 முனிசுவ்ரதருக்கு ரெண்டு பக்கமும் நவ்வாலு சந்நிதிகள் . ஆகமொத்தம் ஒன்பது.  ஜைன் நவக்ரஹ மந்திர்!
அப்புறமும் சுத்திவர ஏகப்பட்ட சந்நிதிகள் இருக்கு. சந்நிதிகளுக்கு மேலே  இவுங்களோட புராணக்கதைகள் (!) சம்பவங்கள்  பல சித்திரங்களாக!
வெளியே படிகள் முடியும் இடத்தில் இருக்கும் முன்மண்டபத்துத் தூண்களின் மேல்பக்கத்தில் மட்டும் 'தேவலோகக் கன்னியர்'  வண்ணச் சிற்பங்களாக !  அதானே பெண்கள்  'கலராக' இருக்கணும்தான்!  சம்மதிச்சு... கேட்டோ!
பொதுவா ஜைன் கோவில்களில்  நமக்கு நெத்திக்கு இட்டுக்க சந்தனம் அரைச்சு வைப்பாங்க. கோணாமாணன்னு வச்சுப்போமேன்னு  ஒரு கண்ணாடியும், சந்தனம் தொட்டு எடுக்கச் சின்னதா  ஒரு  உலோகக் குச்சியும்  வச்சுருப்பாங்க. எனக்கு ரொம்பவே பிடிச்ச விஷயம் இது!  இங்கேயும் இருக்கு.


நம்ம சிங்காரச்சென்னை தி.நகரில் இருக்கும் (ஜி என் செட்டி ரோடு) ஜெயின் கோவிலுக்குப் போயிருக்கீங்களா?   நம்ம யானைகளுடன் அட்டகாசமா இருக்கும்! அடிக்கடி  போற கோவில் இது. நம்ம லோடஸ்ஸில்  இருந்து பக்கம்தான்!
இந்தக்கோவிலை 2014 ஆம் வருஷம் ஏப்ரலில் கட்டிமுடிச்சுக் கும்பாபிஷேகம் பண்ணி இருக்காங்கன்னு எங்கியோ பார்த்த நினைவு. ஆனால் இப்பப் பார்த்தால் என்னமோ நேத்துதான் கட்டி முடிச்சாங்களோன்னு தோணும்விதம் பளபளன்னு இருக்கு!  உண்மையான அக்கறையும்  பக்தியும்  இருக்குன்றதுக்கு இந்தச் சுத்தமே சாட்சி!

மெயின் கட்டத்திற்கு வெளியே ரெண்டு பக்கங்களிலும்  மூணு வாசல்களுடன்  தனிக்கட்டடத்தில் சந்நிதிகள்!நம்ம அர்ஜுன், வராஹமூர்த்தி(!) போலவே  இருக்காங்க!  மஹாலக்ஷ்மியும் பத்மாவதியும் கூட உண்டு!

அழகுன்னா அப்படி ஒரு அழகு இந்தக் கோவில். ஆனால் சாமிச்சிலைகளில்தான் மிரட்டும் பார்வை....   பளிங்குச்சிலை என்பதால் அப்புறமாக் கண் எழுதுறாங்க...  அதான்..... இப்படி.....  துளி கருணை இருக்கப்டாதோ?
ஈஸிஆர் ரோடில் லிட்டில் ஃபோக்ஸ் னு ஒன்னு வரும் பாருங்க... அதுக்கருகில்தான் இந்தக் கோவிலுக்கான நுழைவு வாசல். சந்தர்ப்பம் கிடைச்சால் விட்டுடாதீங்க.....    கொள்ளை அழகு கேட்டோ!
மணி இப்போ பனிரெண்டாகப்போகுது. இனி வேறெங்கேயும் நிறுத்தாமச் சென்னைக்குப் போய்ச் சேரணும்.  ஒரு நாப்பத்திமூணு கிமீ இருக்கு.  எப்படியும் ஒரு மணி ஆகுமுன்னு நினைச்சேன். அப்படியே ஆச்சு!

பூங்கொத்தோடு வரவேற்புன்னு சொன்னா நம்புங்க:-)
பொட்டிகளைப் போட்டுட்டு, நேரா நம்ம கீதா கஃபே.  மூணு பேருக்கும் தாலி:-)
லோட்டஸுக்கு வந்து, நம்ம ரமேஷுக்கு பைபை சொல்லி அனுப்புனதோடு சரி. அதுக்கப்புறம் அவரைப் பார்க்கலை.....
ரொம்ப சுத்தியாச்சு. இனி இன்றைக்கு வேறெங்கேயும் போகப்போவதில்லை.... சரியா?

தொடரும்.......... :-)


10 comments:

said...

அருமை நன்றி.

//என்னமோ நேத்துதான் கட்டி முடிச்சாங்களோன்னு தோணும்விதம் பளபளன்னு இருக்கு!// நம் மக்கள் நுழையாத இடமெல்லாம் சுத்தமாத்தான் இருக்கும்.


said...

நாங்கள் பார்த்திராத சமணக்கோயிலுக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

said...

கோவில் அட்டஹாசமா இருக்கு.

அது என்ன பாற்கடலை கடையும் சிற்பம் (மாதிரி இருக்கு)

said...

வெகு அழகாக இருக்கிறது கோவில். இழைத்து வைத்திருக்கிறார்கள்!

said...

ஒரு வெள்ளை ரதம் வானத்துலே இருந்து இறங்கி வந்தாப்லே தெரிஞ்சது....

அட..என்ன அழகு ...பார்க்க வேண்டிய இடங்கள் நீண்டுகொண்டே செல்கிறது...


said...

வாங்க விஸ்வநாத்.

ஹாஹா அது என்னவோ ரொம்பச் சரி. ஆனால் எதையும் சுத்தமா வச்சுக்க ஏன் நம்ம சனத்துக்குத் தோணமாட்டேங்குது? ப்ச்.....

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

பதிவு எழுதும்போது உங்க நினைவு வந்தது உண்மை !

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

எனக்கும் அப்படித்தான் தோணுச்சு. அதான் க்ளிக்கினேன். இவுங்களுக்கும் ராமாயணம் மஹாபாரதம், புராணக்கதைகள் எல்லாம் உண்டுதான்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உண்மை. எல்லாம் வெண்பளிங்கு வேற !

said...

வாங்க அனுப்ரேம்.

சென்னை ஈஸிஆர் ரோடில் பயணம் செஞ்சாவே வடநாட்டுக்கோவில்களை எல்லாம் பார்த்துடலாம். பத்ரிநாத்தும் கேதார்நாத்தும் தான் பாக்கி போல !