Wednesday, February 01, 2017

ஏரிக்கரை மேலே.... போறவரே ( நேபாள் பயணப்பதிவு 9 )

இப்பத்தான் ஹிந்தியில் எழுதி வச்சுருக்கறதைப் படிச்சேன். போக்கரா இல்லையாம்ப்பா. பொகராவாம்பா!  அச்சச்சோ...  இப்போ எல்லாத்தையும் மாத்தணுமா?  சனம் போக்ரான்னு சொல்லுது. அத்தையே ஃபாலோ பண்ணிக்கலாமா? 'ஷாந்தி பைதல் மார்க்' ஏரிக்கரை மேலேயே அதையொட்டியே நீண்டு போகுது.  வராஹி தரிசனம் முடிஞ்சதும் கரைக்கு வந்தவங்க.... அப்படியே அமைதியா(!) நடக்கறோம்  பீஸ் ஃபுட் ட்ராக்கிலே. Peace foot track
நம்ம வலதுபக்கம் முழுசும்  உணவுக் கடைகள், இடது பக்கம் முழுசும் ஏரியும் அதுலே  பொழுதுபோக்கிக்க உள்ள சாதனங்களுமா....  நீண்டு போகுது பாதை!






மூங்கிலை வச்சே விதவிதமான இருக்கைகள்.  கூடவே, விதவிதமான குடிக்கடைகள் :-) எனக்குப் பார்க்கவே அலுப்பா இருந்துச்சு. இங்கிருந்து  வெளியே சாலைக்குள் போக வழி இருக்கான்னு கேட்டதுக்கு இதோன்னு வலதுபக்கம் ஒரு ஒத்தையடிப் பாதையைக் காமிச்சார்.  அதுலே போனதில் பாதை நம்மை வெளியே தள்ளிருச்சு.



அங்கங்கே  வீடு வாசலில் உக்கார்ந்து கம்பளி நூல்களால்  பூனை, யானை வேலைப்பாடுகள் செஞ்சுக்கிட்டு இருக்காங்க பெண்கள்.

கடின உழைப்புக்கு  இவுங்களை எடுத்துக்காட்டா வச்சுக்கலாம்.


உண்மையான பேக் பேக் இதுதான்:-)





மெயின் ரோடில் நடந்து ஒரு  ரெஸ்ட்டாரண்டுக்குள் போனோம். உள்முற்றத்தில் உக்காரும் வசதி! மணி அஞ்சே முக்கால். டின்னருக்கு  இப்போ நேரம் சரி இல்லை.  காஃபிக்கு  ரொம்ப லேட்.  நடந்து வந்த களைப்பு தீரட்டுமேன்னு லஸ்ஸி சொன்னேன்.  மற்றவங்களும் அதையே சொன்னாங்க.

துர்காவிடம் இதுவரை சரியா ஒன்னும் பேசிக்கலை, அவரைப்பற்றித் தெரிஞ்சுக்கலையேன்னு விசாரிச்சால்  இவர் கைடுதான். ஆனால்.... என்னைப்போல சோதாவுக்கு  இதுவரை இல்லை!  நாப்பத்தியஞ்சு கிலோ மூட்டையை முதுகில் சுமந்துக்கிட்டு  எவரெஸ்ட் பேஸ் கேம்புக்கு இளைஞர்களை கூட்டிக்கிட்டு போற  கைடு வேலை செய்யறார்னு  தெரிஞ்சதும் எனக்கு ஒரே அதிர்ச்சி! Trekking Guide at Himalaya Heart Treks & Expedition(P)Ltd.
நெசமாவா?
இல்லையா பின்னேன்னு அவர் செல்லில் இருக்கும் படத்தைக் காமிச்சார்!




 அட!  ஆமாம்.....

என்னத்துக்கு  இந்தம்மாவுக்கு கைடா வர்றோமுன்னு ஒரு வேளை நொந்துக்கிட்டும் இருக்கலாம்  :-)

ரொம்ப அதிராத இனிமையான பேச்சு. பொறுமை. வயசானவங்களைப் பார்த்துக்கறோமேன்னு ஒரு கூடுதல் கவனம்.... இதெல்லாம்தான்  துர்கா!




 
லஸ்ஸியை முடிச்சுட்டு இன்னும் சில கடைகளில் விண்டோ ஷாப்பிங் செஞ்சுக்கிட்டே வரும்போது மூணு வேஷ்டிகளைப் பார்த்தோம். வேட்டி தென்னிந்தியாவில்  நிறையப்பேர் கட்டுனாலும். கட்டி இருக்கும் தோரணையைப் பார்த்தவுடன் தமிழ்நாடுன்னு புரிஞ்சு போச்சு !  ரொம்பச்சரி நம்ம  அனுமானம்:-)
மருதைக்காரர்கள். முக்திநாத் போயிட்டு முதல்நாள் திரும்பி வந்துருக்காங்க. இன்றைக்கு இங்கே தங்கல்.  சங்கரநாராயணன் - மதுரை, பிச்சுமணி - தேனி, பாலசுந்தரம் -ஆண்டிப்பட்டி.  இவுங்க ஊரைக்கேட்டதும் நம்மவருக்கு பரம சந்தோஷம். என்ன இருந்தாலும் ஊர்ப்பாசம் போகுமா? இவர் போடிக்காரர் இல்லையோ:-) உடனே அவுங்களோடு சில க்ளிக்ஸ்.  எனக்கும்  நம்மவரோடு படத்துலே இருக்க இப்பச் சான்ஸ் கிடைச்சுருக்கு.  அதான் கூடவே ஃபொட்டாக்ராஃபர் இருக்காரே.... நம்ம துர்கா :-)
இங்கே ஸ்பெஷல்  சாப்பாடு என்னன்னு பாருங்க!  ஹைய்யா!!!!


ரொம்பப்பெரிய பெரிய மரங்கள் சாலையின்  ஓரத்தில்.  அங்கெல்லாம் மேடைகள் கட்டி விட்டு ஒவ்வொரு சாமிகளையும் வச்சுருக்காங்க.  வயசான மரங்கள்தான். ஆனாலும் பச்சைபச்சேர்னு பளிச்ன்னு  இருக்கு!
நல்ல அகலமான சாலைகள்!  எனக்கு இந்த ஊர் ரொம்பவே பிடிச்சுப் போச்சு!
மெதுவா நடந்து ஹொட்டேலுக்கு வந்து சேர்ந்தோம். மறுநாளையப் பயணத்திட்டத்தை இன்னொருக்கா பேசி முடிச்சோம்.
காலையில் அஞ்சு மணிக்கு ஏர்ப்போர்ட்டில் இருக்கணும். நாலுமணிக்கு எழுந்தால் சரியா இருக்கும். நாளைக்கு நாம் போகும் இடம் ஜொம்ஸொம் என்ற ஊர்.  இதுவும் ஒரு மலைப்பகுதிதான்.   உசரே ஒரு பள்ளத்தாக்கில் இருக்குமிடம். இந்த ஊருக்குப் போக ரெண்டு ஏர்லைன்ஸ் இருக்கு. நாம் போகப்போறது ஸிம்ரிக் ஏர்லைன்ஸ். இன்னொன்னு டாரா.

தினம் மூணு ஃப்ளைட் இருக்கு. எல்லாம் காலை நேரத்தில் மட்டும்தான். காலை ஆறேகாலுக்கு முதல் ஃப்ளைட் . வெறும் இருவது நிமிசம்தான் ஃப்ளைட் டைமே!  போய் வந்து  போய் வந்துன்னு  மூணுவாட்டி. ஆச்சு. அன்றைக்கான காந்தாயம். மூணாவது முறையா அங்கெ இருந்து கிளம்பறது காலை எட்டேமுக்காலுக்கு.   காத்தடிக்கும் பிரதேசமாம். அதுவும் காலை ஒன்பதாச்சுன்னா... அம்புட்டுத்தான்.... பேய்க்காத்து 'டான்னு' வந்துருமாம்.  அதுக்குமுன்னாலே இடத்தைக் காலி பண்ணிறனும். இல்லேன்னா  அது நம்மளைக் காலி பண்ணிரும்!   அதுகூட டைம் பார்த்து வச்சு சரியா ஒன்பதுக்கு அட்டன்டென்ஸ் கொடுக்குது பாருங்களேன்!!! ஆனா நாம   அதுக்கு முன்னாலே  போயிட்டு வந்துடணும் என்பதுதான் கணக்கு.

நமக்கு பொகராவிலிருந்து  போக ஆறேகால், ஏழேகால் எட்டேகாலுன்னு  மூணு ஃப்ளைட் இருந்தாலும்.... நிச்சயமாப் போகுமுன்னு சொல்லிக்க முடியாதாம். அதான் காலையில் முதல் ஃப்ளைட்டுலே போட்டுருக்காராம் நம்ம ப்ரகாஷ். அது போகலைன்னா ஏழேகாலில் கிளம்பும்(!) ரெண்டாவதிலாவது  இடம் கிடைச்சுரும். அதுவும் இல்லைன்னா இருக்கவே இருக்கு  எட்டேகால்.  அப்ப....  அதுவும் இல்லாமப்போச்சுன்னா?  பேசாம இங்கே இன்னொருநாள் தங்கிட்டு, மறுநாள் காலையில் ஃப்ளைட் பிடிக்க (!) முயற்சிக்கலாம்.

காத்து மட்டுமில்லை.... மழை பிடிச்சுக்கிட்டாலும் ஃப்ளைட் கேன்ஸலாகிரும். போனமாசம் தென்னிந்தியாவிலிருந்து  வந்த தம்பதிகள்  இப்படி ஒரு வாரம் பொகராவில் தங்கி இருந்தும்  ஜொம்ஸம் ஃப்ளைட் போகமுடியாமல் போயிருச்சு. முக்திநாத் தரிசனம் இப்படி அவுங்களுக்கு ரெண்டுமுறை மிஸ் ஆகிப்போச்சு. அடுத்த வருசம் திரும்ப வருவோமுன்னு சொல்லிட்டுப் போயிருக்காங்கன்னு ப்ரகாஷ் சொன்னதுலே இருந்து எனக்கு வயித்துலே புளி கரைச்சல்தான்:-(

பெருமாளே....   கொஞ்சம் தயை காமிச்சுருடான்னு மனசுக்குள்ளே புலம்பிக்கிட்டே இருந்தேன். பசுபதிநாத் கோவிலிலும்...  'மச்சான் தரிசனம் கிடைக்க வழிபண்ணுப்பா'ன்னு வேண்டுனதும் உண்மை!

சில சமயம் பேய்க்காத்து வரக்கூடாத நேரத்தில் வந்து விமானத்தைக்கொண்டுபோய் மலையில் இடிக்க வச்சு கூண்டோடு வைகுண்டம் அனுப்பி வச்சும் இருக்கு என்பதால்  அதிகக் கவனமாகத்தால் செயல்படுது இந்த விமான நிறுவனங்கள் எல்லாம்...

இப்படி எதாவது ஆகிட்டால்....   குறைஞ்சபட்சம்  நியூஸிஅரசு, மகளுக்கு  நம்மைக் கண்டுபிடிக்க உதவும் என்பதால்தான்   ஃபாரினருக்கு அதிகக் கட்டணங்கள் என்பதையும் பொருட்படுத்தலை.

இங்கே காலை ப்ரேக்ஃபாஸ்ட் நம்ம அறை வாடகையில் சேர்த்தி என்பதால்  கேட்டுக்கிட்டால் நாம் கிளம்பும் நேரத்துக்கு  பார்ஸல் பண்ணிக் கொடுத்துருவாங்கன்னு துர்கா சொன்னார். அட!  இப்படியும் செய்யலாமுன்னு நமக்கு இதுவரை தெரியாமப் போயிருச்சே!
வரவேற்பில் சொல்லி வச்சோம். 'ஸான்ட்விச்தான் செய்யமுடியும்.  சமைச்ச உணவு கிடைக்காதே'ன்னு  சொல்லிட்டு குறிச்சு வச்சுக்கிட்டாங்க.

சாப்பாட்டையும் சாமியையும் இங்கெல்லாம் குழப்பிக்கறதில்லை என்பதால்   வெஜிடபுள் ஸாண்ட்விச்ன்னு எழுதிக்கச் சொன்னேன். முக்திநாத் பயணம் முடிச்சுட்டுத் திரும்ப ஒருநாள் இங்கேயே வந்து தங்கணும். ஆனால் எப்போ வருவோமுன்னு சொல்ல முடியாது.... எல்லாம் ஓப்பன்  புக்கிங்தான்.

இதுக்குத்தான் பயணத்திட்டம் போடும்போது கூடுதலா ரெண்டுமூணு நாள் வச்சுக்கணுமுன்னு நம்ம  நண்பர் லதானந்த்  கூடச் சொல்லி இருந்தார். அதன்படியே நேபாளுக்கு ஒரு வாரம் னு திட்டம் போட்டுருந்தார் நம்மவர்.

ராச்சாப்பாட்டுக்கு  வெளியில்  போகவேணாமுன்னு  நினைச்சோம். ரூம் சர்வீஸில் எதாவது வாங்கிக்கிட்டுப் பொழுதோடு தூங்கப் போகணும். காலை நாலு மணிக்கு அலார்ம் சொன்னோம்.
நம்ம துர்காவும் இங்கேயேதான் தங்கறார்.  அவருக்கும் நல்ல ரெஸ்ட் வேணும். நாளை எப்படி இருக்கப்போகுதோ?

சப்பாத்தி, பருப்பு, ஜீரா ரைஸ் அறைக்கு வந்தது.

தொடரும்..........:-)


9 comments:

said...

ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது. வழக்கம்போல் புதிய உலகிற்கு அழைத்துச் சென்றுள்ளீர்கள். தலைப்பும், புகைப்படங்களும் அருமை. உடன் வந்த உணர்வு ஏற்பட்டது.

said...

அழகான படங்கள். மலைச்சாரல்... குளுமையான இடம்!

said...

பயமா இருக்கு. பயந்தா முடியுமா ? தெகிரியமாப் போயிட்டு வாங்க. நான் இங்கேர்ந்து பார்த்துக்கிறேன். ஹிஹிஹி. நன்றி.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா!

விக்கி பீடியா போட்டிகளா!!! ஆஹா....

வலைப்பதிவுகளில் உள்ள ஒரு நல்ல வசதியே... நாம் விரும்பியபோது பார்க்கலாம், வாசிக்கலாம் என்பதில்லையோ!!!!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

வாங்க ஸ்ரீராம்.

அன்றைக்கு லேசா ஒரு மேகமூட்டம். இல்லைன்னா சாலையில் நடக்கும்போதே அன்னபூரணாவைப் பார்க்கமுடியுமாம்!

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்.

அதுதானே 'வில் பவர்' !!!!

said...

ஆகாகாகா.. எவரெஸ்ட் மலையேறும் கைடு ஒங்களுக்கு வந்துட்டாரா. ஆனாலும் பாருங்க.. அவரோட வேலைல எதுவும் கொறை வைக்கல. பாராட்ட வேண்டிய பண்பு. அம்மி கொத்த சிற்பி எதுக்குன்னு கேக்கல பாருங்க.

ஸ்பெஷல் மீல்ஸ் தால் பாத் (பருப்பு சாதம்). ஒருவேள சாம்பார்ச்சோறோ? அதுவே அங்க ஸ்பெஷல் போல.

என்னதான் இருந்தாலும் வெளியூர்ல நம்மூர்க்காரங்களப் பாத்தாலே ஒரு மகிழ்ச்சிதான். ஆனா அங்கயும் சட்டையில்லாம இருக்காங்களே. பொதுவெளியில் பொதுவா இந்த மாதிரி சட்டை இல்லாம இருக்குறவங்களைப் பாத்தா கொஞ்சம் எரிச்சலா இருக்கும் எனக்கு. பெண்கள் புழங்குற எடத்துல இதென்ன வழக்கம்னு.

நீங்க எடுத்துப் போட்டிருக்கும் படங்களைப் பாக்கப் பாக்க கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கு. ஊர் நல்லாப் பசுமையா இருக்கு.

said...

நேபாளிகளின் உழைப்பு - பிரமிக்க வைப்பது. அருணாச்சல் பிரதேசம் சென்றபோது எங்களுக்குக் கிடைத்த ஓட்டுனர் நேபாளி!

அடுத்த நாள் பயணத்தில் கிடைத்த அனுபவங்களைத் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்..

said...

முயற்சிக்கலாம் - கிர்ர்ர்ர்

முயலலாம். நானும் சொல்லிக்கிட்டேதானிருப்பேன்....