Monday, February 13, 2017

கண்ணா..... உங்க ஆயர்பாடியில் இப்படியா தயிர் கடைவீங்க? ( நேபாள் பயணப்பதிவு 11)

காலி கண்டகி நதின்னு பெயர் . கருப்பு நிறமா இருப்பதால் 'காலி'. ஆத்துக்கு அந்தாண்டை போக  சின்னதா ஒரு பாலம் இருக்கு. மலையேறும் மக்கள் அந்தப்பாலத்தைக் கடந்து போறாங்க. ஊர் எல்லையைக் கடந்து  பொட்டல்காடா இருக்கும்  ஆற்றுப்படுகை வந்துருந்தோம். அங்கங்கே குதிரைகள் மேய்ஞ்சுக்கிட்டு இருக்கு!

மணலும் கல்லும் கொஞ்சூண்டு தண்ணீருமா இருக்குமிடத்தில்   ஜீப் ஆற்றுப்படுகையில் இறங்குச்சு.   ஒரு  பத்திருபது மீட்டர் தூரம் போறதுக்குள்ளே   வண்டியின் கதவு உசரத்துக்குத்   தண்ணி. அப்படியே கதவைத் தள்ளுது. நம்ம ஜீப்பும் தண்ணியின் வேகம் தாக்குப்பிடிக்க முடியாம தண்ணீரோடு  போகுது. ப்ரேக்கை அழுத்துனாக் கூட வேலைக்காகலை.  நமக்கு  கண்டகியில் ஜலசமாதிதான் போல.
ட்ரைவரிடம்  நேபாளி மொழியில் , கரைக்கு வண்டியைத் திருப்பிடச் சொல்றார் துர்கா.  ட்ரைவர் ஒரு சின்னப் பையந்தான்.  இருவது வயசுருக்குமோ என்னவோ.... நேத்துப்போனேன் , நேத்துப்போனேன்... இன்னும் கொஞ்சதூரம்தான்  அந்தாண்டை போயிட்டால்  ஆழமில்லைன்னு சொல்றானாம். வண்டியைத் 'திருப்பு திருப்பு'ன்னு  ஹிந்தியிலும் நேபாளியிலும், இங்லீஷிலும் ஆளாளுக்குக் கத்திக்கிட்டு இருக்கோம்.  இந்தக் கத்தலில் கேமெராவை க்ளிக்க மறந்துபோயிட்டேன்:-)
கஷ்டப்பட்டு வண்டியைத் திருப்பிக் கரைக்குக் கொண்டுவந்தார் ட்ரைவர் பையர். அப்புறம்  எங்களை வரும்போது பார்த்த மரப்பாலம் வரை கொண்டுபோய் விட்டுட்டு மன்னிப்பும் கேட்டுக்கிட்டுப் போனார்.

 இன்னொரு காங்க்ரீட் பாலம் கட்டும் வேலை நடக்குது. ஆனால் பாதிப்பாலம் தான் முடிஞ்சுருக்கு. மீதி?  எப்ப வருமுன்னு தெரியாதாமே!
மரப்பாலம் கடந்து போறோம். கண்டகி நதி எங்கே  காலாவா இருக்கு? வெளிறிப்போய் அடிச்சுக்கிட்டு ஓடுது.  'மழை  நல்லாப் பேய்ஞ்சுருக்கும் மலையில்னு'  துர்கா சொன்னார்.


இது ஒரு சரித்திரத்தில் இடம் பெற்ற பாலம். நூறு வருசத்துக்கும் மேலே பழசு.  ரொம்ப பலஹீனமா இருக்காம் இப்போ. அதனால் ஒரு சமயத்தில் ஒரே ஒரு மோட்டர்பைக், இல்லேன்னா ஒரு குதிரை,  அதுவுமில்லேன்னா ஒரே ஒரு கோவேறுக் கழுதை கடந்து போகலாம். ஒன் அட் அ டைம். மனுசர்?  ஒரே சமயத்துலே அஞ்சு ஆட்கள் நடந்து போகலாமாம் !  (அஞ்சா? அப்ப ஒல்லிக்குச்சி உடம்பா இருக்கணுமோ?)

அறிவிப்பு போட்டு வச்சுருக்காங்க.  நாங்க மூணு பேர் என்பதால் நிதானமா பயமில்லாமல் நடந்து போனோம்.
பாலம் முடிஞ்சு ஒரு சின்ன கிராமம். சந்து போல ஒரு பாதை. கல் பாவியதுதான்.  ரெண்டு பக்கமும் தங்கும் விடுதிகளும்,  ரெஸ்ட்டாரண்டுகளும், ஹொட்டேல்களுமா இருக்கு. ரிவர் வ்யூ! விடமுடியுதா?   ஒரு  500 மீட்டர் நடை இருக்கலாம். அது முடிஞ்சு ஒரு பெரிய  பரந்த வெளி.




ஒரு பக்கம் பெரிய புத்த மடாலயம்.  இந்தாண்டை  முக்திநாத் ட்ரான்ஸ்போர்ட் ஆஃபீஸ் :-) இங்கேதான் முக்திநாத்  போக ஜீப் எடுக்கணும். உள்ளுர் மக்களுக்கு  ஒரு சார்ஜ். வழக்கம்போல் வெளிநாட்டு மக்களுக்கு  டபுள், சிலசமயம் ட்ரிபிள் சார்ஜ்.  நம்மிடம் இருபத்தி ஆறாயிரம் ரூபாய் கட்டச் சொன்னாங்க. இது ஒரு ஜீப்புக்கான போகவர உண்டான சார்ஜ்.  இங்கே நம்ம பாஸ்போர்ட் காப்பி, எத்தனை பேர் போறோம் , அவர்கள் பெயர்கள், வயசு விவரங்கள் தரணும். பக்காவா ரசீது கொடுத்துட்டு, நமக்கான ஜீப் எண், ட்ரைவர் பெயர் எல்லாம்  அதுலே எழுதி ஸ்டாம்பு அடிச்சு (பர்மிட்)  ஜீப் ட்ரைவரைக் கூப்பிட்டு அவரிடம் நம்மை ஒப்படைக்கிறாங்க.
எதாவது அசம்பாவிதம் ஆனால் அப்போ' யாரு என்ன ஊரு'ன்னு அலையவேணாம் பாருங்க!  இது இந்த ஜொம்ஸொம் டவுன்(!) கவுன்ஸிலும், மஸ்டாங் ஜில்லாவும் நேபாள் அரசும் சேர்ந்து செய்யும் ஏற்பாடு. துர்கா எல்லாம் சரியாக்கி வரும்வரை புத்தமடாலயத்துக்குள்  போய் வரலாமான்னு நினைச்சேன். அதுக்குள்ளே நம்ம வண்டி ரெடியாகிருச்சு.   இந்த டிரைவரும் இளைஞர்தான்.  இளங்கன்று பயமறியாது என்பதைத் தெரிஞ்சு வச்சுருக்காங்களோ!
தார் ரோடு என்ற  நாமதேயமே இல்லை. கரடுமுரடான  கல்லும் மண்ணுமா இருக்கும் சாலை. அகலமும் அதிகமில்லை.  பெருமாளேன்னு இதோ கிளம்பிப்போய்க்கிட்டு இருக்கோம். மலைப்பாதை என்பதால் மெள்ளமெள்ள உயரம் அதிகமாகிக்கிட்டே  போகுது.  மருந்துக்குக்கூட செடிகளோ, பசுமையோ இல்லாத மலைகள். இந்த வழுக்கையான இடங்களில் பனி காலத்தில் பனிமழை பெய்து   வழுக்கையை மறைச்சுரும்.  வெள்ளை விக் போட்டுக்கிட்டமாதிரி.  எஸ் மை லார்ட் :-)  இப்பவும் நியூஸியில்  கோர்ட்டில்  ஜட்ஜ்மார்  இப்படித்தான்....   ஓக்கே... யூ கேன் ப்ரொஸீட்  ! 

 இங்கெ நம்ம நியூஸியிலும்  மொட்டை மலைகளைப் பனிகாலத்தில் பார்க்கணுமே....  பனி தங்கி இருக்கும் இடம் என்பதால் இங்கே ஒன்னுமே முளைக்காது. தப்பித்தவறி இண்டு இடுக்கில் எதாவது தாவர உயிர், புல்லோ பூண்டோ இருந்தாலும் குளிர் ஆரம்பிச்சவுடன் மண்டையைப் போட்டுரும். மலைகளில் மட்டும்தான் இப்படி.  கீழே நிலப்பகுதியில் பனி நிரம்பி வழிஞ்சாலும் வெயில் ஆரம்பிச்சு, நிலம்  குளிரை உதறி விட்டுட்டால்   செடிகொடிகள் முளைக்கும்தான்.




மலையடிவாரத்துலே  விளைநிலங்கள். என்னவோ பயிர் போட்டுருக்காங்க. தூரம் அதிகம் என்பதால்....   என்ன விளைவிக்கறாங்கன்னு தெரியலை.



இதுலே ஜீப் குலுங்கிக் குலுங்கி  ஆறுதிசையிலும் நம்ம உடம்பு  போய்ப்போய் இடிக்குது. ஸீட் பெல்ட் இருக்கப்டாதோ? ஊஹூம்..... ஹார்லிக்ஸ் பாட்டில்லே  தயிராடையைப் போட்டுக் குலுக்கி வெண்ணெய் எடுப்பாங்களே.... அதே மாதிரி.  நாங்கதான் தயிராடைகள். வெண்ணை மட்டும் திரளவே இல்லை.
இந்தக் களேபரத்திலும் கூடியவரை க்ளிக்ஸ் உண்டு. கடமையை ஆத்த வேணுமா,  இல்லையா? :-)

அப்பப்ப கண்டகி நதி கீழே  ஓடும் காட்சி.  நாலைஞ்சு வீடுகளுடன் சின்னச்சின்ன கிராமங்கள். நிறைய ஆப்பிள் மரங்கள்.  எல்லாம் சின்னச்சின்ன ஆப்பிள்பழங்கள். இதுலே சிலர்  மலைப்பாதையில் நடந்து போறதும் வாறதுமா இருக்காங்க. வீட்டுக்கூரைகளில் வெயில் பாழாக வேணாமேன்னு விறகுகளைக் காய வைக்கிறாங்க.  காத்து அடிக்கும் சமயம் கூரையைத் தூக்கிட்டுப்போகாமல் இருக்கவும் இது டபுள் ட்யூட்டி செய்யுது:-)
அங்கங்கே  சிலவீடுகளின் வாசப்பக்கம் பெரிய டிஷ் ஆன்ட்டெனா மாதிரி ஒன்னு வச்சுருக்காங்க. நானும் டிவிக்காக வச்சுருக்காங்கன்னு நினைச்சேன். அப்புறம் பார்த்தால்  இது சூரிய அடுப்பு!!!  நடுவில் கம்பி ஸ்டேண்டில் பாத்திரம் உக்கார்ந்துருக்கு!  சமையல் நடக்குது அதுபாட்டுக்கு!  பருப்பு வேகுதோ என்னவோ?  இங்கே பருப்பு சாதம்  ரொம்ப முக்கியமான சமாச்சாரம். தால்பாத் ! (முஜே பி ச்சாஹியே!)
புது சாலை போடும் வேலை ஆரம்பிச்சுருக்காங்க. அங்கங்கே மெதுவா வேலை நடந்துக்கிட்டு இருக்கு.  சில இடங்களில்  தண்ணீர் ஓடும்  பாதையைக் கடக்கறோம்.  மேலே இருந்து வழியும் அருவி நீராக இருக்கணும்.
பொட்டல் காடையும் மலைகளையும் பார்த்துக்கிட்டே வரும்போது  திடும்னு கற்களை  அடுக்கி  வச்சுருக்கும் சுவர் கண்ணில் விழுந்துச்சு.  கொஞ்ச தூரத்தில் நிறைய கட்டிடங்கள்.  பெரிய ஊர் போல!


அங்கங்கே  இன்னும்  எவ்ளோ தூரம் என்னன்னு தகவல் பலகைகள்.  இன்னும் 40 நிமிட் போகணுமாம்!
சுமார் ஒரு  ஒன்னேகால் மணி நேரப் பயணத்துலே  ஒரு பெரிய  வெளியில் வண்டி நின்னது. அக்கம்பக்கம் நிறைய ஜீப்புகள் நிக்குது.  ஓ.... இதுதான் ஜீப் ஸ்டேண்ட்.   ஜீப் இதுவரைதான். இங்கே நாம் இறங்கிக்கணும்.  இங்கே ஒரு டிக்கெட் கவுண்ட்டரும் இருக்கு. திரும்பிப்போக இங்கே வந்து மறுபடி ஜீப்  எடுத்துக்கணும்.

டீக்கடை இருக்கு :-) மக்கள் ஓய்வெடுத்துக்க ஒரு  இடைவெளி விட்டுக்கறாங்க. டாய்லெட் வசதியும் உண்டு.  அநேகமா சுத்தமாக இருக்கலாம்........   குளிருக்கான ஸ்வெட்டர், கம்பளி மஃப்ளர், ஷூ எல்லாம் விக்கறாங்க.  தேவைப்பட்டால் வாங்கிக்கலாம்தானே? இதுலே புடவையைக் காயவச்சுக்கிட்டு இருந்தாங்க ஒரு அம்மா.
ஒருபக்கம் ஏழெட்டு குதிரைகள் சேணம் போட்டுக்கிட்டுத் தயாராக நின்னுக்கிட்டே... கிடைச்ச ஓய்வில் புல் மேய்ஞ்சுக்கிட்டு இருக்கலாம்தான். ஆனால்  புல் ?   குதிரை வேணுமான்னு கேட்டுக்கிட்டே சிலர் நம்மைச் சூழ்ந்துக்கிட்டாங்க.  எனக்குத்தான் குதிரைகளைப் பார்க்கப் பாவமா இருந்துச்சு.


தொடரும்........  :-)



11 comments:

said...

இடங்களின் அழகு மனதை அள்ளுகிறது. வெறுமையாகவும் இருக்கிறது. என்னைப் போன்ற ஆட்களால் அங்கு மூன்று நாட்களுக்குமேல் தாக்குப்பிடிக்க முடியாது என்று தோன்றியது!

said...

சிலிர்ப்புடன் படித்தேன். முக்திநாத் பயணம் நிறைய ஆச்சர்யங்களை உள்ளடக்கியது. கண்டகி ந்தியிலேயே ஜீப்பை ஓட்டிவிட்டீரே. எதிர்பார்த்ததுக்கும் மாறாக வெட்டவெளிநாகப் பாதை இருக்கிறது. 26,000ம் போக வர என்று நினைக்கிறேன். சரியான சமயத்தில் தொடரும் போட்டுவிட்டீர்கள்.

ஹார்லிக்ஸ் பாட்டிலில் தயிர் குலுக்குவது 70கள்ல வழக்கொழிந்துபோன விஷயம் இல்லையோ.

said...

நல்லாதானே போயிகிட்டு இருந்துச்சி. திடீர்ன்னு 'தொடரும்' போட்டுட்டீங்களே. இருந்தாலும் காத்திருப்பேன்.

said...

உங்கள் பாஸ்போர்ட் இந்தியாவா நியூசியா 26000 கட்டினீர்களா

said...

வாங்க ஸ்ரீராம்,

என்னாலும்தான் அங்கே ரெண்டு நாளைக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது, கேட்டோ :-)

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

அந்தச் சார்ஜ் ஒரு வண்டிக்குப் போகவர.

பழசை இன்னும் மறக்கலைன்னு எப்படிச் சொல்றதாம்? அதான் ஹார்லிக்ஸ் பாட்டில் :-)

said...

வாங்க விஸ்வநாத்.

அதான்... அதேதான்.... பொறுமை ! கடலினும் பெரிது :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

நியூஸி பாஸ்போர்ட்தான்.

போகவர அந்த சார்ஜ்.

said...

நானும் ஒரு பயணத்துல இருந்ததால வகுப்பு நேரத்துக்கு வரமுடியல டீச்சர். மன்னிக்க. :)

ஆத்துல ஜீப்ப எறக்கிட்டானே. பொதுவா கடந்து போயிருவாங்க போல. ஆனா மலைல மழை பெஞ்சிருக்குன்னா எச்சரிக்கையாத்தான் இருக்கனும். யாராயிருந்தாலும் அந்நேரத்துல பயந்திருப்பாங்க.

இடங்களையும் போட்டோக்களையும் பாக்குறப்போ போய்ப் பாக்கனும்னு ஆசையா இருக்கு.

said...

வாங்க ஜிரா.

இப்போ நீங்க போய் வந்த பயணம்தான் நம்ம விஷ் லிஸ்ட்டில் இருக்கு. அநேகமா இந்த வருசம் போகலாமுன்னு இருக்கோம்:-)

முக்திநாத் போகலைன்னாலும் நேபாள் பார்க்கவேண்டிய இடம்தான். சந்தர்ப்பம் கிடைத்தால் தவறவிடவேண்டாம்!

said...

என்ன ஒரு அனுபவம்... தொடர்கிறேன்.