Tuesday, March 27, 2012

கொன்னிச்சிவ்வா.... கொலுவுக்கு வா!!!

நாங்க வழக்கமா எல்லா ஞாயிறும் ரேஸ் கோர்ஸ் போவோமுன்னா நீங்க நம்பமாட்டீங்கதானே? நம்மூர் குதிரைப் பந்தய மைதானம், ரிக்கர்டன் பார்க் என்ற பெயரில் ஏகப்பட்ட இடத்தை வளைச்சுப் போட்டுருக்கு. இதுக்கு வயசு 150 வருசம். கிறைஸ்ட்சர்ச் நகர் உருவானபோதே கூடவே சேர்ந்துக்கிட்டதுதான். மனுசன் குடியேறும்போதே குதிரை ஓட்டமும் வந்துருக்கு.

வருசத்துக்கு அங்கே 20 நாட்கள் மட்டுமே குதிரைப் பந்தயங்கள் நடக்கும். பாக்கி நாட்கள் எல்லாம் சும்மாக் கிடக்கறதுதான். ஒரு இருபது வருசத்துக்கு முன்னே எந்தப் புண்ணியவானோ இதை நம்ம மக்களுக்கும் சமூகத்துக்கும் பயன்படும்படியா ஆக்கலாமேன்னு யோசிச்சதில்......
முழுக்கட்டிடத்தையும் புனரமைச்சு மாடியில் பந்தயம் பார்க்க கேலரிகள்.கீழே ஏழு ஹால்கள் அமைச்சுட்டாங்க. எல்லா ஹால்களுக்கும் குதிரைப்பந்தய சம்பந்தமுள்ள பெயர்கள். ஃபாப்லேப்( Phar Lap) என்ற பெயரில் ஒரு ஹால் இருக்கு. இது நியூஸிக் குதிரை. அண்டைநாடான அஸ்ட்ராலியாவில் ஏகப்பட்டப் பந்தயங்களில் கலந்து சரித்திரம் படைச்சது. ஆனால் ஆறே வயசுலே சாமிகிட்டே போயிருச்சு. எதிரிகள் விஷம் வச்சுட்டாங்கன்னு அப்போ பெரிய புரளியா இருந்துச்சு. நெருப்பில்லாமல் புகையுமா? கடைசியில் அதுதான் உண்மை:( குதிரை இறந்து 76 வருசம் ஆனபிறகு நிபுணர்கள் கண்டு பிடிச்சுட்டாங்க.

ஃபார்லேப்பின் (எதையும் தாங்கும்) இதயம் அஸ்ட்ராலியா (கென்பரா) தேசீய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுருக்கு. அதன் தோலை மட்டும் எடுத்து நியூயார்க் சிடி டாக்ஸிடெர்மிஸ்ட் ஒருத்தர் அசல் குதிரை செஞ்சு கொடுத்துட்டார். மெல்பேர்ண் கப் ரேஸ் ஆரம்பிச்சு 150 வருசம் ஆச்சுன்னு அந்தக் கொண்டாட்டத்துக்குக் கடன் வாங்கிட்டு போயிருக்காங்க. இப்போ மெல்பெர்ண் ம்யூஸியத்துலே உயிர்ப்புடன் நிக்குது. (மனுசன் தோல்தான் எதுக்கும் லாயக்கில்லை) எலும்பை மட்டும் ஏன் விட்டுவைப்பானேன்னு முழு எலும்புக்கூடும் நியூஸி வெலிங்க்டன் மியூஸியத்துலே! தன் மறைவுக்குப்பிறகு கூட மூணு இடத்தில் நினைவுச்சின்னமா நிக்குது பாருங்க.
இங்கே பொதுவா சனிக்கிழமைகளில்தான் குதிரைப் பந்தயங்கள் நடக்கும். அதுவும் கடுங்குளிர் காலங்களில் ரெண்டு மாசத்துக்கு இருக்காது. 345 நாட்கள் காலியாவேக் கிடக்கும் கார்பார்க், அதைச்சுற்றியுள்ள இடங்களையெல்லாம் இப்போ ஒரு பதினைஞ்சு வருசமா ரோட்டரி க்ளப் மார்கெட் நடத்திக்க விட்டுட்டாங்க. அதான் எங்கூர் சண்டே மார்கெட். சொன்னா நம்ப மாட்டீங்க... ஒரு காலத்துலே இந்த மார்கெட் . நம்மூட்டுக்கு முன்னால் இருந்த ஷாப்பிங் செண்டர் கார்பார்க்குலேதான் ஆரம்பிச்சாங்க. நானும் குக்கர் ஆனதும் அரைமணி நேரம் நீராவியெல்லாம் அடங்கவிட்டுட்டு சாலயைக்கடந்து போய் மார்கெட்டை வேடிக்கை பார்த்துட்டு வருவேன். இப்ப மார்கெட் ரொம்ப விரிஞ்சுக்கிட்டே போய் சவுத் ஐலண்ட்லே பெருசுன்னு டூர்ஸ்ட் மேப்லே இருக்கு, லண்டன் போர்ட்டபெல்லா ரோடு மார்கெட் மாதிரி:-))))

நாங்களும் ரேஸ்கோர்ஸ் சமீபமாவே வீடு கட்டிக்கிட்டு வந்துட்டதால் சண்டே மார்கெட் சுத்தறதை இன்னும் விடலை:-)

கார்பார்க் இப்படி தரும காரியத்துக்குன்னு விட்டதைப்போல பந்தய மைதானப் புல்வெளிகளில் போலீஸ் நாய்களுக்கும். போதைமருந்து கண்டுபிடிக்க உதவும் நாய்களுக்கும் பயிற்சி கொடுக்கவும் இடம் தர்றாங்க. கட்டிடத்துக்குள்ளே இருக்கும் ஹால் வசதிகளை சமூகக்காரியங்களுக்கும், தனிப்பட்ட விழாக்களுக்கும், பார்ட்டிகளுக்குமுன்னு வாடகைக்கு விடறாங்க.
அப்படி ஒரு விழாவுக்கு ரெண்டு வாரம் முந்தி போய்வந்தோம். ஜப்பான் சுநாமி 2011 நடந்த முதலாம் ஆண்டு நினைவு விழா. கட்டிடங்களுக்கு முன்னே இருக்கும் பரந்த வெளிகள் பூராவும் கூடாரங்கள் போட்டுச் சாப்பாட்டுக்கடைகளா இருந்துச்சு. கால் வைக்கக்கூட இடம் இல்லாம இவ்வளோ கூட்டமான்னு ஆச்சரியம்தான்! இன்னிக்கு ஞாயிறு .... அதான் வழக்கமா மார்கெட் வரும் கூட்டமும் இங்கே எட்டிப் பார்த்துட்டுப் போகுது!

அவுங்க கலர் சிம்பிளா சிகப்பும் வெள்ளையும் என்றதால் ரைஸ் பேப்பரில் குண்டு குண்டு அலங்கார தோரணங்கள் கட்டிவிட்டுருக்காங்க. சிமபிள் அண்ட் ஸ்வீட்! டகொயாகியைப் பார்த்ததும் பிடிச்சுப்போச்சு. அதை வாங்க பெரிய வரிசை காத்து நின்னது. எனக்கு அதை ருசிக்கவேணாம். சுட்டெடுக்கும் பாத்திரம்தான் அள்ளிக்கிட்டு போகுது மனசை. சமயத்துக்குப் பல்லாங்குழி கூட ஆடிக்கலாம் அது இருந்தால்! எல்லாம் நம்ம குழிப்பணியாரச்சட்டிதான். 28 பணியாரம் ஒரே சமயம் சுட்டு ஜமாய்க்கலாம். இங்கே அஞ்சுவரிசை வச்சு ஒரு ஈடு 140 பணியாரம் சுட்டுப்போட்டுக்கிட்டே இருக்காங்க. ஆனாலும் வரிசை குறைஞ்சபாடில்லை!
ஒஸாகா பேன்கேக், சூஷி, இரால்மீன் வரிசைகளைக் குச்சியில் சக்கரம் சக்கரமா குத்தி வச்ச வகைகள், துருவுன ஐஸ், அப்புறம் வாயிலே நுழையாத பெயர்களில் பலவகைன்னு சமைக்க அவுங்களும், வாங்கி ருசி பார்க்க நம்ம மக்களும் அசரலையே!!!!
ஒரு பக்கமா மேடை ஒன்னு. அதை வரும்போது , கவனிக்கலாமுன்னு கட்டிடத்துக்குள்ளே போனோம். விழாவைப்பற்றிய விவரங்கள், ஒரு விசிறி எல்லாம் கொடுத்து அன்பான வரவேற்பு. பக்கத்துலே அட்டகாசமான ஒரு கொலு! எட்டுப்படிகள்! (ஐய்ய.... ஒத்தப்படையா வச்சுருக்கக்கூடாதோ?) மாட்டுவண்டி ஒன்னு சூப்பர்!

இடதுபக்க ஹாலில் சுநாமி அழிவுகள் படங்கள். பார்க்கும்போதே மனக்கஷ்டமாப் போச்சு. அதையும் எவ்வளோ சிக்கிரமா க்ளியர் செஞ்சு மறுவாழ்வுக்கு வேகமா வந்துட்டாங்க. அதைப் பாராட்டத்தான் வேணும். நாங்க ..... இன்னும் நிலநடுக்க அழிவுகளை முழுவதுமா அப்புறப்படுத்தலை. ஒவ்வொரு பெரிய கட்டிடத்தையும் ஒவ்வொரு மாடி பை மாடியா எடுத்துக்கிட்டு இருக்கோம். ஒரு கட்டிடத்தை முழுசும் எடுக்க நாப்பதைஞ்சு வாரம். அறுபது வாரம் இப்படிக் கணக்குச் சொல்லி வேலைகள் நடக்குது. சுத்தி வலை அடிச்சுட்டு அண்டர் க்ரவுண்டில் பாம் வச்சுத் தகர்க்க மாட்டாங்களா? எத்தனை படத்துலே பார்த்துருக்கோம்.? அது என்னமோ இவுங்க டெக்னிக் வேறமாதிரி இருக்கு. எதாவது காரணம் இருக்கலாம்)
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், பேங்க் ஆஃப் நியூஸி, கோல்ஃப் விளையாட்டுக்கான குச்சிகள்ன்னு காசு பார்க்க சில நிறுவனங்கள் அங்கொன்னும் இங்கொன்னுமா இருக்க, ஜப்பானின் பாரம்பரிய உடைகளில் குட்டிப்பசங்க உலாத்திக்கிட்டு இருந்தாங்க. விசிறி செருகிவச்சுக்க வாகா இருக்கு. பேசாம என் விசிறியையும் கொஞ்சநேரம் வச்சுக்கச் சொல்லலாமா?

வலப்பக்க ஹாலில் இகபானா கலையின் மலர் அலங்காரங்கள் வரிசை கட்டி இருக்க ஒரு பக்க சுவரில் சுநாமியில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபச் செய்திகளை அந்நாட்டுக் குழந்தைகள் எழுதியும் வரைந்தும் அனுப்பியவைகளை ஒட்டிவைத்திருந்தனர். ஜப்பான் மொழியில் சில சொற்களை எழுத நமக்குச் சொல்லிக்கொடுத்த வகையில் நான் ஆடுன்னு எழுதினேன்:-))))) எழுதிய காகிதத்தை நமக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். இப்ப நம்ம ஆடு வீட்டில் புத்தக அலமாரிக்குப் பக்கத்தில் நிக்குது:-)


இந்த ஹால் கொஞ்சம் பெருசுன்றதால் ஒரு பக்கம் டீ ஸெரிமனி, இன்னொரு பக்கம் ஜூடோ சண்டையின் டெமோ, காகிதத்தில் பொருட்களை வடிவாக்கும் ஒரிகாமி இப்படி கண்ணுக்கும், விருப்பம் இருந்தால் நம் கைகளுக்கும் சின்னச்சின்ன விருந்துகள். யாழ் போல ஒரு நரம்பு இசைக்கருவி இருந்துச்சு. மீட்டிப்பார்த்தேன். அட! எனக்கும் வாசிக்க வருதே:-))))
ஜப்பான் நாட்டுக்கும் மக்களுக்கும் நாம் செய்தியோ வாழ்த்தோ, பாராட்டோ எழுதித் தரலாமாம். கிடைச்சதை விடாம தமிழில் ரெண்டு சொற்களை எழுதிக்கொடுத்தேன். என்னாலான தமிழ்ச் 'சேவை' ' பு(ழி)ரிஞ்ச திருப்தி கேட்டோ:-) பக்கத்துலே நின்னவர் ஐடியாவைக் காப்பி அடிச்சுட்டார், அவருடைய மொழியில்:-)))

வெளியே மேடையில் அலிபாபா ட்ரம் போல ஆள் ஒளிஞ்சுக்கும் அளவில் பெரிய ட்ரம்ஸ் அஞ்சு கொண்டுவந்து அடுக்குனாங்க. ஆரம்பிச்சது. அடி! தூள் கிளப்புனாங்கன்னுதான் சொல்லணும். நடுநடுவில் ஆள் உண்மையாவே ஒளிஞ்சாங்கப்பா!!! அநேகமா ஒரே உயரம், ஒரே வயசு, வாசிப்பும் ஒரே ஸ்டைலுன்னு அட்டகாசமான அடி!!!! உங்களுக்காக ரெண்டு பிட் போட்டுருக்கேன் பாருங்க:-))))) குழிப்பணியாரக் க்யூ குறைஞ்சபாடில்லை. ஜில்லாலிபில்லாலின்னு நகைநட்டு சமாச்சாரம் ஒரு பக்கம். இருக்கட்டும். 24 கேரட் பாழாப்போகுது:-))))


வழக்கத்தை விடவேண்டாமேன்னு மார்கெட் ஏரியாவில் நுழைஞ்சால் அங்கேயும் மேடை ஒன்னு போட்டுவச்சு ட்ரம்ஸ் முழக்கம்! கேர்ள்ஸ் தனியா, பாய்ஸ் தனியா அப்புறம் ரெண்டு குழுவும் சேர்ந்துன்னு அமர்க்களம்தான்:-) எங்க மக்களும் ரொம்ப ஆதரவா புல்வெளியில் உக்கார்ந்து ரசிச்சாங்க.
இருபதாயிரம் பேர் மறைஞ்ச சோகத்தை எப்படியெல்லாம் ஆத்திக்கிறாங்க பாருங்க. அன்று இரவு உள்ளூர் தொலைக்காட்சியில் ஜப்பான் சுநாமி சமயம் வெவ்வேறு ஆட்கள் எடுத்த தனி வீடியோக்களின் தொகுப்பு ஒன்னு காமிச்சாங்க. ஒழுங்கு முறைக்குப்பேர் போன நாடுன்றது சும்மா இல்லை. அறிவிப்புன்னு கூவுனதும் ஆட்கள், உடனே குழந்தைகுட்டிகளுடன் வரிசையா குடி இருப்புகளைவிட்டு வெளியேறுனாங்க. இந்த கலாட்டாவில ஒருத்தர் டிவி பொட்டியைத் தூக்கிக்கிட்டுப்போறார்!!!!!19 comments:

said...

தோ மரியா தோ.....

http://kgjawarlal.wordpress.com

said...

ஆடு... உங்களுக்குப் பிடிச்ச பூனை எழுதி இருக்கலாமோ....

ஒரு வருடத்திற்குள் அழிவிலிருந்து மீண்ட அவர்களது திறமை நிச்சயம் பாராட்டுக்குரியது.

நல்ல பகிர்வுக்கு நன்றி.

said...

வாங்க ஜவஹர்.

இப்படியெல்லாம் திட்டுனா அழுதுருவேன்:-)))))

எனிவே டோமோ அரிகாடோ கொஸைமாஸு.

said...

வாங்க வெங்கட்.

அட! யானை பூனை எல்லாம் இருக்கான்னு கேட்டுருக்கலாமோ! தோணலையே:(

ஆடா பறவையான்னதும் நியூஸிக்கு ஆடே இருக்கட்டுமுன்னேன்:-)

அதுதானே ஆளுக்கு 12ன்னு எண்ணிக்கையில் இருக்கு! நாலு மில்லியன் மக்களுக்கு 48 மில்லியன் ஆடுகள் இங்கே:-)

said...

சோகத்தையும் சுகமாக் கொண்டாடி இருக்காங்க. படங்கள் அனைத்தும் சூப்பர். நீங்களும் மீண்டு வந்துடுவிங்க.

said...

ஆட்டோட கொம்பைக்கூட அழகா வரைஞ்சுருக்கீங்க துளசியக்கா,.. 'எம்பேரை ஏன் எழுதிக்கிட்டுக் கொண்டு வரலை'ன்னு கோகி உர்ர்ர்ன்னு முறைக்கிறான் பாருங்க...

said...

// ஜப்பான் மொழியில் சில சொற்களை எழுத நமக்குச் சொல்லிக்கொடுத்த வகையில் நான் ஆடுன்னு எழுதினேன்:-//

அது சரிதாங்க.. ஆனா, நானும் அது போல எழுதப்போய், அதப்பார்த்துட்டு, எங்க ஊட்டுக்காரர் பேயாட்டமா ஆஆட ஆரம்பிச்சுட்ட்டார்னு வச்சுக்கங்க..
அப்ப ஆடாதே , இல்ல, நிறுத்து போதும் என்பதற்கு எப்படி எழுதணும்னு சொல்லுங்க..

மீனாட்சி பாட்டி.

said...

ஜப்பான் மக்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள். எவ்வளவு சீக்கிரம் மீண்டிருக்கிறார்கள்....

ஓரிகாமியில் ஒரு மலர்ஜாடியை செய்யலாம் என்று புத்தகத்தில் பார்த்து செய்ய ஆரம்பித்து பாதி வரை வந்து அப்புறம் முடியாமலே போய் விட்டது.ரொம்ப கடினமானது....

குழிப்பணியாரம் சாப்பிட்டீங்களா?

said...

எவ்வளோ சிக்கிரமா க்ளியர் செஞ்சு மறுவாழ்வுக்கு வேகமா வந்துட்டாங்க. அதைப் பாராட்டத்தான் வேணும்.

said...

உங்க தளத்தின் கொலுசு அணிந்த லஷ்மி http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_27.html

ராம நவமிக்காக விஜயம் செய்திருக்கிறார் தங்கள் வருகையை அன்புடன் எதிர்பார்த்து..

said...

யப்பான் மொழியும் இசையும் கற்றுக்கொண்டீர்களே வாழ்த்துக்கள்.

said...

ஜப்பான் மக்களின் கடுமையான உழைப்பும் துயரத்தில் காட்டும் நிதானமும் என்னை எப்போதும் வியக்கவைக்கும். அவங்களுடைய சோகத்தையும் இப்படிக் கலாச்சார நிகழ்வுகளோடு நினைவூட்டும் அழகு பார்த்து இன்னும் வியப்பு. உங்கள் பதிவால்தான் இதுபோன்ற நிகழ்வுகளையெல்லாம் தெரிஞ்சிக்கமுடிகிறது. மிகவும் நன்றி துளசி மேடம்.

said...

வாங்க வல்லி.

உங்க நம்பிக்கை வீண்போகாதுன்னு நம்பறேன்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

பாடம் படிக்க டீச்சர் முன் போனதும் கையும் ஓடலை காலும் ஓடலை மனசும் ஓடலைப்பா:-)

கோகிகிட்டே மன்னிப்'பூ ' கேக்கறென்.

said...

வாங்க மீனாட்சி அக்கா.

அடுத்தவருசம் ஜப்பான் தினத்தில் கேட்டுச் சொல்றேன். அதுவரை ஆடட்டுமுன்னு அவரை ஆட விடுங்க:-)))))

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

பெரிய ஐட்டம் செஞ்சாக் கஷ்டம்தானோ? இங்கே சின்னதா பறவை, பூ ன்னு செய்யச் சொல்லிக்குடுத்தாங்க.

குழிப்பணியாரம் கண்ணால் மட்டுமே தின்னேன்!!!!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

உண்மையில் பாராட்டுக்குத் தகுதியானவர்கள்தான்!

லக்ஷ்மியின் சார்பில் நன்றிகள்.

கொலுசுக்கால்கள் அழகுதான் இல்லே!!!!!

said...

வாங்க மாதேவி.

கற்றுக்கொள்ள வாய்ப்பு வந்தால் விடக்கூடாதுதானே:-)))))

said...

வாங்க கீதமஞ்சரி.

நாங்கள் இருப்பது சுமாரான அளவில் உள்ள நகரம் என்பதால் ரொம்அவும் மெனெக்கெடாமல் இதுபோன்ற விசேஷங்களுக்குப் போய் வர முடிகிறது, அதுதான் !நான் பெற்ற இன்பம் வகையில் நம் பதிவுலகத்துக்கு!!!!!