Wednesday, March 08, 2023

தங்கமே தங்கம்................... கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 23

நல்ல வெயில் நேரம், அப்படியே கண்ணை அசத்திருச்சு.  அஞ்சுமணிக்கு எழுந்து பார்த்தால் மணல்திட்டு ரொம்பப் பக்கத்துலே வந்துருக்கு.   கீழே படித்துறையில் இருக்கும் படகிலிருந்து தண்ணீரைக்கோரி வெளியே ஊத்திக்கிட்டு இருக்கார் ஒருவர்.  எல்லாம் பழைய படகுகளாத்தான் இருக்கு.  மக்கள் பயணிக்கும்போது இப்படித் தண்ணீர் சேர்ந்துபோனா... அவுங்க கதி ? 
அறையிலேயே காஃபி ஒன்னு தயாரிச்சுக் குடிச்சுட்டுக் கிளம்பினோம்.   பால்கனிக்கு ஆஞ்சி, குழந்தையோடு வந்து எட்டிப் பார்த்துட்டுப் போனார். நல்ல சகுனம்! 
நாட்கோட் போய்ச் சேரும்போது மணி ஆறு !  மாடிக்குப்போனால்   முதல் ஹாலில்  விளக்கு பூஜைக்கான  ஏற்பாடுகள்  ! 
அடுத்த கூடத்தில் (  நம்ம டைனிங் ஹால் ) பொதுக் கூட்டம் நடந்துக்கிட்டு இருக்கு.  முக்கிய அங்கத்தினர்கள் பேசிக்கிட்டு இருக்காங்க.  இன்றைய விழாவைக் கொண்டாடும் வகையில்  அங்கே 'வாசிப்பு' நடந்துருக்கு போல !  நாதஸ்வரம் & தவுல் பார்ட்டி உக்கார்ந்துருக்காங்க.

சரி. நாம் கீழே  கோவிலுக்குப் போகலாமுன்னு  போனோம். திண்ணையையொட்டின  வராந்தா  முழுசும், மூங்கில் கம்புகளால்  தடுப்பு போட்டு வரிசை கட்டி விட்டுருக்காங்க.  திண்ணையையொட்டிச் சின்னதா வழி விட்டுருக்காங்க.  அங்கே செக்யூரிட்டி ஆள் நிக்கறார்.  நாங்க அந்த வழியா  உள்ளே போயிட்டோம்.  தடுப்புக்குள் பெண்கள் கூட்டம் !  எதிர்ப்பக்கமும், திண்ணையை அடுத்தும் மக்கள் வெள்ளம். கோவில் வாசலைப் பார்த்த மாதிரி இருக்கும் திண்ணையில் நமக்குக் கொஞ்சம் இடம் கிடைச்சது. 




நான் படங்கள் எடுத்துக்கிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்.   கோவிலை விளக்குகளால் அலங்கரிச்சுருந்தாங்க.   செக்யூரிட்டிக்கு என்ன உத்தரவு ஆச்சோ.....   வர்ற சனத்தை உள்ளே விடாமல் அந்தப்பக்கம் போங்கன்னு துரத்திக்கிட்டு இருக்கான்.  வயசான பெரியங்க பலர் கெஞ்சறாங்க.....    முடியவே முடியாதுன்னு கையைக் குறுக்கே நீட்டி வழியை மறைக்கிறான். அதுக்குதான்  வட இந்தியனுக்கு அந்த வேலையைக் கொடுத்துருக்காங்க போல.... 
 
https://www.facebook.com/1309695969/videos/1619392591896786/

மூங்கில் கம்பங்களைத் தரையில் நிக்கவச்சே தூண்களில்   கட்டி விட்டுந்தாங்க. ஆனால் தள்ளுமுள்ளில் அது சரிய ஆரம்பிச்சது.  பலர் ஓடிவந்து தாங்கிப்பிடிச்சுச் சரியா நிமிர்த்தி வச்சாங்க. பெண்கள் கூட்டத்தில்  வடக்கத்தியர்களும் தெலுகு மக்களும்  அநேகர். 

மேலே கூட்டம் முடிஞ்சாவுட்டுத்தான்   இரும்புப்பெட்டியில் இருக்கும் தங்க விக்ரஹங்களை எடுத்துக்கிட்டு வருவாங்களாம்.   மூணுபேர், தங்களிடம் உள்ள சாவிகளைப் போட்டுத்தான்  திறக்கணுமாம். அத்தனை காபந்து !

ஏழு மணி போல  கோவில் பார்த்த வாசலில் கொஞ்சம்  பரபரப்பு.  மேள சத்தம் கேட்குது.  மொத்தக்கூட்டமும் எழுந்து நின்னுட்டாங்க.வாசல் வழியாக முதலில் வருவது நாலைஞ்சு  வீடியோ & ஃபொட்டொக்ராஃபர்கள்தான் !   அந்த வட இந்திய செக்யூரிட்டிக்கு இது முதல் முறை போல..... அதுவரை  வராந்தா முகப்பில் நின்னு  யாரையும் உள்ளே விடாமல் தடுத்துக்கிட்டு இருந்தவர், ஓடி வந்து  தடுப்பு மூங்கில் மேல் ஒரு காலும் திண்ணையில் அடுத்த காலும் வச்சு  நெடுக்க இருந்த  மூங்கிலில் தொங்கிட்டு தன்னுடைய செல்லில் வீடியோ எடுக்கறார் :-)

https://www.facebook.com/1309695969/videos/615519473722638/

தங்கச்சாமிகள் வர ஆரம்பிச்சாங்க....  உயரக்குறைவால் எனக்கு வாசல் சரியாத்தெரியலைன்னு 'நம்மவர்' என் செல்லை  வாங்கி  வீடியோ  எடுத்தார்.  சாமிகள் எல்லோரும்  கோவிலுக்குள்ளில் ஏற்கெனவே அலங்கரிச்சு வச்ச  வெள்ளிபீடங்களில்  போய் உக்கார்ந்ததும், பூஜைகள் நடந்துச்சு. நான் திண்ணையில் நின்னு எட்டிஎட்டிப் பார்த்துக்கிட்டு அப்பப்பக் க்ளிக்கினேன். 




https://www.facebook.com/1309695969/videos/1166878584190667/

திடீர்னு 'ஹூம் ஹூம்' னு ஒரு உறுமல் சத்தம். திரும்பிப்பார்த்தால்.....  திண்ணைப்பக்கம் இடம் விடணுமாம்.   ஏழெட்டுப்பேர்  பாத்திரம், கூடை,  குடம் னு கொண்டுவந்து வரிசையா அங்கே வச்சாங்க.  காசி விஸ்வநாதருக்கு  அர்த்தஜாம பூஜைக்கான  பொருட்கள் !  சுமார்  இருநூறு வருஷங்களா, நாட்கோட்டிலிருந்துதான் அனுதினமும்  பூஜைக்கான சாமான்கள்  அனுப்பிக்கிட்டு இருக்காங்க !  இந்த பூஜையில் நாமும் கூட கலந்துக்கலாம்.   முதலில் நாட் கோட்  வந்த நாளே விசாரிச்சோம்தான். ஆனால் அதுக்கான டிக்கெட்டுகள் ஏற்கெனவே தீர்ந்து போயிருந்தது. 

கோவிலுக்குள்ளே இப்போ  பக்தர்களை போகவிட்டாங்க. பயங்கரக்கூட்டம்....  ராஜேந்திரன், கொஞ்ச தூரத்தில் நின்னவர், நம்மைப் பார்த்துட்டு, கொஞ்சம் பொறுங்க.... இந்தகூட்டம் போனதும் நின்னு நிதானமாப் பார்க்கலாமுன்னார். சரின்னு  ' நம்மவர்' திண்ணையிலே உக்கார்ந்துட்டார்.
 
அதே போல ஒரு அரைமணி காத்திருந்த பின் தரிசனத்துக்காக கோவிலுள்ளே நுழைஞ்சோம்.  குருக்களுக்குப் பக்கத்தில் நின்னவர்,  'சாமி கும்பிட்டுட்டு சுத்திவந்து இந்தப்பக்கம் நின்னு படம் எடுத்துக்குங்கோ' ன்னு (பொதுவாத்தான்) சொன்னார்.  சரின்னு தலையாட்டிட்டு,  காசி விஸ்வநாதர், காசி விசாலாக்ஷி,  புள்ளையார், அன்ன பூரணி தங்க  விக்ரஹங்களையும், இன்னும்  வெள்ளி விக்ரஹங்களா  ரெண்டு புள்ளையார், நாகம் குடைபிடிக்கும் சிவலிங்கத்தையும்  கண்ணாரக்கண்டுக் கைகூப்பி நின்னு, குருக்கள் கொடுத்த   குங்குமப்ரஸாதத்தையும், கொஞ்சம் அக்ஷதையையும்  வாங்கிக்கிட்டுப் பிரகாரத்தில் வலம் வந்தோம்.  கடவுளர் சிலைகள் எல்லாருக்கும் வெள்ளிக்கவசம் சார்த்தியிருக்காங்க.   





சொன்னதுபோல் வலம் முடிச்சு வந்து  படங்களைக் க்ளிக்கினேன்.  மனசு நிறைஞ்ச தரிசனம் !    


மாடியில் எல்லாக் கூடங்களிலும்  கோலாகலமா விளக்கு பூஜை நடந்துக்கிட்டு இருக்கு !  குருக்கள் ஒருவர் மைக்கில் சொல்லச் சொல்ல ஒரே ஒழுங்கில் பூஜை நடக்குது ! நம்ம சண்டிகர் முருகன் கோவிலில்தான் நான் முதல்முறை இந்த விளக்குப் பூஜையைப் பார்த்திருக்கேன்.   நகரத்தார்களுக்கு இது ரொம்ப முக்கியமான பூஜை !















இப்பவே மணி ஒன்பதேகாலைத் தாண்டிருச்சு.  இன்னும் அரைமணியாகும் போல பூஜை நிறைவுபெற !  நாங்களும்  கிளம்பினோம்.  மெயின் ரோடில் கண்ணில் பட்ட  தோசைக்கடையில் ஆளுக்கொரு தோசையுடன் டின்னரை முடிச்சுக்கிட்டு மெல்ல நடந்து சீதாவுக்குத் திரும்பினோம். 
ஆச்சு தீபாவளி !  ஆனால் எனக்கு விவரம் தெரிஞ்ச நாள் முதல், இப்படி தீபாவளியன்னிக்கு பெயருக்குக்கூட ஒரு இனிப்பை வாயில் போடாமல்  இருந்ததே இல்லை !   இனிப்பை விடுங்க.... நல்ல சாப்பாடு ?  ஹா..... உபவாசத்தில் சேர்த்துடலாம், இல்லெ ? அமாவாசை வேற !   

தொடரும்......... :-)

PIN குறிப்பு : முந்தியெல்லாம் வீடியோ க்ளிப்ஸ்களை நேரடியாகப் பதிவில் சேர்க்க முடியும். இப்பெல்லாம் என்னாச்சுன்னு தெரியலை. நேரடியாகச் சேர்க்கப்போனால் ரொம்ப பெரிய வீடியோ க்ளிப், வலையேத்த முடியாதுன்னு சொல்லுது. ரெண்டு நிமிட் வீடியோவுக்குக்கூட இப்படிச் சொன்னால் எப்படி ? அதனால் ஃபேஸ்புக்கில் போட்டுட்டு அந்த லிங்கை இங்கே கொடுத்துக்கிட்டு இருக்கேன்.........  :-(



10 comments:

said...

இவ்வளவு கூட்டத்திலும், நெரிசலிலும் நிற்க தனிப் பொறுமை வேண்டும்.  எனக்கு கிடையாது.  தோசை பார்க்க நன்றாய் இருக்கிறது.  டேஸ்ட் எப்படியோ..  சாம்பார், சட்னி?

said...

அருமை நன்றி

said...

தங்கமும் வெள்ளியுமாக ஜொலிக்கும் விக்கிரகங்கள் கண்கொள்ளாக்காட்சி மனதை லயிக்கச் செய்தது வணங்கினோம்

படத்திலேயே இப்படி என்றால் நேரில் காணும் போது அழகை கேட்கவா வேண்டும்.

விளக்கு பூசையும் சிறப்பு.

said...

வாரணாசி..... ஒரு மாதமாவது இங்கே தங்கி எல்லா இடங்களையும் பார்க்க ஆசை உண்டு. சென்ற ஏப்ரல் மாதம் மூன்று நாட்கள் இங்கே இருக்க முடிந்தது. நதிக்கரை நகரங்கள் என்ற தலைப்பில் என் வலைப்பூவில் பதிவுகள் வந்து கொண்டிருக்கிறது.

said...

பதிவு வழி சொன்ன தகவல்கள் மிகவும் சிறப்பு.

said...

வாங்க ஸ்ரீராம்,

பொறுமை இல்லைன்னா பயணம் கொஞ்சம் கஷ்டம்தான். அதுவும் இப்படிப்பட்ட சமாச்சாரங்கள் எல்லாம் ஒன்ஸ் இன் அ லைஃப் டைம் இல்லையோ !

தோசை பரவாயில்லாம இருந்தது. எனக்கு வெறும் தோசைதான். பசி ருசியை அறியாது :-)

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி.

வாழ்நாளில் ஒருமுறை அமைஞ்ச தரிசனம். மனம் நிறைஞ்சு போனது உண்மை !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

கொஞ்சகாலமா எந்த வலைப்பதிவுகளையும் பார்க்க முடியாமல் சிலபல குறுக்கீடுகள். நல்லவேளை நீங்க சொன்னதும் போய்ப்பார்த்தேன். சரசரன்னு முப்பத்திமூணையும் வாசிக்கப்போறேன்.
நன்றி !

ஒரு மாசமெல்லாம் கனவுதான். முழுசா ஒரு வாரம் கிடைச்சால்கூடப் போதும்! இருக்கும் இருபத்துமூவாயிரம் கோவில்களுக்கு ஒரு மாதம் போதாது !!!!

said...

திடீர்னு 'ஹூம் ஹூம்' னு ஒரு உறுமல் சத்தம். சம்போ போகும் போது இப்படி தான் குரல் தராங்க ..

சொன்னதுபோல் வலம் முடிச்சு வந்து படங்களைக் க்ளிக்கினேன். மனசு நிறைஞ்ச தரிசனம் ! ..படங்கள் எல்லாம் மிக அருமை மா ..ரசித்தேன்