Monday, May 30, 2022

கிணத்தோடு முடியும் சமாச்சாரமா ?

அந்தப் பாட்டிக்கு எப்பவும் எதாவது பின்னிக்கிட்டே இருக்கணும். குளிர் ஊர் இல்லையா....... குடும்பத்தில் வேற புதுப்புது புள்ளைகள் பிறந்துக்கிட்டுத்தானே இருக்கு. ஏற்கெனவே பிறந்த பிள்ளைகளும்  வளர்ந்துக்கிட்டுத்தானே இருக்கு !  பேரன் பேத்திகளுக்குக் கம்பளி ஆடைகள் பின்னிப்போடறதுதான் வழக்கம்.  இப்பதான் கடைகள் பெருத்துப்போய் எல்லாத்தையும் ரெடிமேடாவே வாங்கிக்கிறக் கலாச்சாரம் வந்துருச்சே....
கம்பளி நூல் பெரிய அளவில் ( Wool Hank ) வாங்கி, அதைப் பிரிச்சுச் சின்னச்சின்ன உருண்டைகளாச் சுத்தி வச்சுக்கிட்டால்  பின்னும் போது எளிதாக இருக்கும்.  மொத்தத்தையும் தூக்கிக்கிட்டு அலைய வேணாம்.  சரிதானே ?  அப்ப இதில்  தாத்தாவுக்கு வேலை ஒன்னும் இல்லையா ? இருக்கே.... அந்தப் பெரிய நூல்பொதியைத் தாத்தா கையிலே மாட்டி வச்சுட்டு, அதுலே இருந்து நூலை இழுத்துப் பாட்டி சின்ன உருண்டைகளா  நூல் சுத்தி  எடுப்பாங்க. 


ஒரு கடையில் இந்த ஜோடியைப் பார்த்துட்டு வீட்டுக்குக் கூட்டி வந்தேன்.  காலம் மாறிகிட்டே வருதே....   இன்னும் பாட்டி பின்னியே ஆகணுமா ?  அப்படிக் கஷ்டப்பட்டுப் பின்னிக்கொடுத்தாலும் இப்பத்திப் பசங்க போட்டுக்குமுன்னு நினைக்கிறீங்க ?  அதெல்லாம் இப்போ தேவையே இல்லை. பேசாம  வேற வேலையைப் பாருங்கன்னு, ஒரு    Samsung s S23 ultra  வைப் பாட்டிக்கும்,  ஒரு  Samsung Galaxy Tab S7 FE ஐ தாத்தாவுக்கும் வாங்கிக் கொடுத்தாச்சு.  இப்பப்பாருங்க... அவுங்க உலகமே தனி !  
சரி, கிணத்துக்கு வருவோம்.  களத்துமேட்டில்  இருக்கும் ஐயனார் கோவிலாண்டையே  இருந்தால்  நல்லதுன்னு தோணுச்சு.    ரொம்பத்தோண்ட வேண்டிய அவசியம் இல்லாமல் சட்னு தண்ணீர் தென்பட்டது :-)
 தோட்டத்துக்கான கமலைக் கிணறாகவே இருக்கட்டுமுன்னு  தீர்மானம்.   தொழுவத்தில்  இருக்கும் ஜோடி  மாடுகளை ஓட்டிவந்தேன். பரவாயில்லாமல் இருக்குன்னாலும்....  ஒரு காளையும் ஒரு பசுவுமா இருக்கே... ப்ச்.  

 தொழுவத்தில் இருக்கும் இன்னொரு காளை, சின்னது. பெருசும் சின்னதுமா இருந்தால் சீராக தண்ணீர் இழுக்க வராதுல்லை ?  பண்ணையாள் ரங்கன் சொன்னதும்  இதேதான்.
தண்ணீர்  இழுக்கறாங்கன்னதும்  குடங்களைத் தூக்கி வந்து வச்சாங்க பண்ணையாளின்  மனைவி அலமேலு.  ரங்கனும், அலமேலுவும்  நல்லமாதிரி. முகம் சுளிக்காமல்  தோட்டத்தில் எல்லா வேலைகளையும் செஞ்சு நல்லபடி பார்த்துக்கறாங்க. 
சின்னப் பண்ணையார் இங்கேதான் பண்ணை வீட்டில் இருக்காரு. கல்யாணமாகிக் குழந்தை ஒன்னும் இருக்கு.   இந்தச் சின்னப் பண்ணைக்காரர் யாருன்னு இந்நேரம் உங்களுக்குத் தெரிஞ்சுருக்கணுமே !  அவர் ஒரு மிருகநேசன். ரொம்ப அன்பானவர். 

 இவர் மனைவியும்  தொழுவத்தாண்டை இருக்கும் சின்னக்குடிலில்  உக்கார்ந்து  குழந்தைக்கு மாடுகளைக் காமிச்சு  விளையாட்டுக் காட்டுவார்.  அந்தப்புள்ளை ரொம்பச் செல்லம்..... தாய்மடியை விட்டு இறங்கவே இறங்காது.  
மாடு பிடிக்கலாமுன்னு 'சந்தை'க்குப் போனோம்.   நமக்குன்னே ஒரு கடை திறந்துருக்காங்க இங்கே !  
  அங்கே போனதும்தான் எப்பவும் கற்பனை ஊத்துப் பொங்கிப்பொங்கி வரும் எனக்கு:-)   ஒத்தைமாடு வாங்கப்போனவ எப்படியோ ஏழு மாடுகளை வாங்கியாந்தேன்.

 பத்துமாட்டுக்குச் சொந்தக்காரர் ஆனார்  பண்ணையார். 
மாடுகள் வந்தாட்டு,  வேலைதராமல் சும்மா வச்சுருக்க முடியுமோ ? 

 வண்டி ஒன்னு செஞ்சேன். 
பொங்கல் சமயம் வேற....   தோட்டத்துக் கரும்புகளை உழவர் சந்தையில் கொண்டுபோய் தானே வித்துட்டு வரேன்னு கிளம்புனார் பண்ணையார்.  பண்ணையாரம்மாவும் கைக்குழந்தையோடு வண்டியில் ஏறுனாங்க. டவுனில் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணிக்கணுமாம் :-)

இருட்டுலே வீட்டுக்குத் திரும்பும்போது விளக்கில்லேன்னா எப்படின்னு ஒரு லாந்தர் தயாராச்சு.  ஆனாலும்  ரோடில் எதிரே வர்ற வண்டிக்கு, நம்ம வண்டி வருதுன்னு காமிக்க ஹெட்லைட்  வேணுமே....  உண்மையான ஹெட் லைட்கள் காளைக்கு நெத்திச்சுட்டாச்சு !  

இப்படித்தான் சிறுகச்சிறுக  அலங்காரங்கள் வளர்ந்துக்கிட்டே போயிருச்சு.  பொங்கலன்னிக்குப் பெரிய பண்ணையாரும், பண்ணையாரம்மாவும்  அட்டகாசமான பொட்டிவண்டியில் வருவாங்க. கூடவே அவுங்க வீட்டுச் செல்லம் சிண்ட்டுவும் வரும். பண்ணையாரம்மா ரொம்ப நல்லவங்க.  பண்ணையாளுங்களுக்கு நல்லதாப் பொங்கல் பரிசுகள் கொண்டுவந்து தருவாங்க. 
அன்னிக்குப் பொழுது விடிஞ்சதும் நம்ம ரங்கனும், அலமேலுவும்  அடுப்பு,பொங்கப்பானை எல்லாம் தயாரா  வச்சுருப்பாங்க.   பண்ணையாரம்மா  வந்ததும் பொங்கல்  வச்சுப் பூஜை செய்வாங்க.  


 இந்த அலங்காரங்கள் எல்லாம் வழக்கமா நம்ம வீட்டு முன்னறையில் வச்சுருவோம்.   பண்டிகைக்குத் தகுந்தாப்லெ செஞ்சுக்கணும்.  மதுரை மீனாக்ஷி, புள்ளையார், ஆஞ்சின்னு ஒரு Bபேக்ட்ராப்.  
இதெல்லாம் ஒரே நாளில் செய்யும் வேலை இல்லை. எப்படியும் ஒரு ரெண்டு வாரம் எடுக்கும் என்பதால்  கிறிஸ்மஸ் விழா முடிஞ்சவுடனே  ஆரம்பிச்சுறணும்.

ஆனால் ஒரு விஷயம் சொல்லணும்... இப்படி எதாவது  கைவேலைகள் செய்ய ஆரம்பிச்சால்....  வீட்டில் குப்பை சேர்வதைத் தவிர்க்க முடியாது. எந்தப் பொருளைப் பார்த்தாலும்  'குச் காம் கோ ஆயேகா' தான். இதனாலேயே வீடு கலகலன்னு சண்டையும் சச்சரவுமாக இருக்கும் :-)

"இங்கே ஒரு  சின்ன அட்டைத்துண்டு  வச்சுருந்தேனே.... யாரு எடுத்தா ?"

" இப்பதாம்மா  எடுத்துக் குப்பைக்கூடையில் போட்டேன்... "

"  இந்த பாருங்க நான் சொல்றவரைக்கும் இந்த இடத்தில்  நீங்க கைவைக்கக்கூடாது. குப்பைன்னு நீங்களே நினைச்சுக்கறதா? "

ஏற்கெனவே அர்பன் விவசாயம் செய்யறேன்னு விதை சேமிப்பு சின்னச் சின்ன டப்பாக்களில் போட்டு வச்சும், விதைகளைக் காயவைக்கத் தட்டுகளில் போட்டுக்  கன்ஸர்வேட்டரியில்  பரத்தி இருப்பதும்  போதாதுன்னு, இப்ப வீட்டுக்குள்ளே வேற  குப்பை......   போகட்டும்.  



 ஓடியோடி இன்ஸ்பெக்ஷன் செஞ்சே  களைப்பாகிருச்சாம்!
 

12 comments:

said...

//இந்த பாருங்க நான் சொல்றவரைக்கும் இந்த இடத்தில் நீங்க கைவைக்கக்கூடாது. குப்பைன்னு நீங்களே நினைச்சுக்கறதா? "// அநியாயமா சொல்லாதீங்க. அவர் ஏன் இந்த வேலைலாம் செய்யப்போகிறார்? ஏதேனும் குப்பையைத் தூக்கிப்போட்டால்கூட, அதைச் சாக்கிட்டு புதிதாக வாங்கணும்னு அவரைக் கூப்பிட்டுக்கொண்டுபோய் அவரோட பர்ஸ்தானே பழுக்கும்?

said...

ஒரு மாடு வாங்கப்போய் ஏழுமாடுகளுடன் வந்த கதை சூப்பர். ஏழுக்கும் சாப்பாடு போட முடிகிறதா? :))

எங்கள் நாட்டில் மக்கள் அளவுச் சாப்பாட்டுடன்தான் வாழ்கிறார்கள் நிலைமை எரிபொருள் இல்லை, உணவு பொருட்கள் விலை ஏற்றம்.

அலங்காரங்கள் எல்லாம் மிக நன்று.

said...

அருமை நன்றி

said...

படங்கள் அனைத்தும் அழகு. கொண்டாட்டங்கள் சிறப்பு.

said...

சுவாரஸ்யமான கலெக்ஷன்.  பொம்மைகளை விட ஒரிஜினல் சூப்பர்.  அந்த பொம்மைகள் மீதான ரஜ்ஜுவின் க்ளோஸ் லுக் அழகு.  எதையும் தட்டி விடாமல் ஆராய்வதும் அழகு.

said...

செம கற்பனை துளசிக்கா உங்களுக்கு. நானும் ஒரு காலத்தில் குப்பை சேர்த்தவள்தான் ஒன்னு கூட தூரப் போட மாட்டேன். பல்லு பசை மூடிலருந்து புளியங்கொட்டை, பிஸ்தா பருப்பு தோல், சிப்பின்னு ஏன் புல்லு வாரியல் தென்னம் பாளை கூட!!!!! அதுக்கு அப்புறமா மூட்டை தூக்க வேண்டியதானப்போ கூட தூக்கிட்டுப் போயி அப்புறமாத்தான் எல்லாம் மனசே இல்லாம தூக்கிப் போட்டேன்.

உங்கள் கற்பனையில் விளைந்த தோட்டம் பண்ணையார், அவங்கவீட்டம்மா, கரும்பு எல்லாம் செம.

அதானே பார்த்தேன் ரஜ்ஜூ பார்க்கறான் பாருங்க நம்ம அம்மா கொண்டாந்த பசு எல்லாம் கரெக்ட்டா இர்க்கான்னுட்டு!!!!

எல்லாம் என்னா செக்கப்பு!!! எல்லாத்தையும் அவன் ஆராய்ச்சி செய்யற அழகு பாருங்க...சுத்திப் போட்டுருங்க. சமத்துக் குழந்தை.

கடைசில முடிச்சு உட்கார்ந்திருக்கும் ரஜ்ஜு ஹப்பான்னு..

கீதா

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

தனக்கு இவ்ளோ சப்போர்ட்டான்னு அவருக்கு மகிழ்ச்சி !

said...

வாங்க மாதேவி,

இலங்கை நிலை கவலையாத்தான் இருக்குப்பா.... ப்ச்.

ஏழும் மூணும் பத்து மாடுகளுக்குப் பசியாற்றுவது ரஜ்ஜுவின் வேலைன்னு விட்டுட்டேன்:-)

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

மிகவும் நன்றி !

said...

வாங்க ஸ்ரீராம்,

ஒரிஜினல் எதையும் தட்டிவிடாமல் 'பூனை' போல நடப்பான் :-) ரொம்ப பக்தி'மான்' வேற !!!!

said...

வாங்க கீதா,

குச் காம் கோ ஆயேகா..... ஆயேகா..... தூக்கிப் போடுவது சிரமம்ப்பா. இவரிடம் சொல்லி இருக்கேன்..... நான் போனதும் இதையெல்லாம் கண்ணைத் திறந்துக்கிட்டே கழிச்சுக் கட்டுங்கன்னு :-)