Friday, May 27, 2022

பொட்டிகள் தினம்

இங்கிலாந்திலே பெரிய ப்ரபுக்கள் வீட்டில் க்றிஸ்மஸ்  தினத்துலே உற்றார் உறவினர் நண்பர்களுக்காக  அட்டகாசமான  விருந்து (டின்னர்) நடக்குமாம். விதவிதமான கேக் வகைகள் செஞ்சுக்கறதுதான்.  சாப்புடறமோ இல்லையோ விருந்தினர் முன்னே அவரவர்கள் பவிஷூ காமிச்சுக்க வேணுமே !  
முதல்நாள் இரவு விருந்தில்  மீந்துபோன  உணவுப்பொருட்களையெல்லாம்,  அட்டைப்பொட்டிகளில் போட்டு, அநாதாலயத்துக்கு  அனுப்பிருவாங்க.  இதுக்காவே ஒருநாள் லீவு விடுவாங்கன்னா பாருங்க.  எல்லாம் விருந்தில் அளவிலாத மது அருந்திட்டு, நடனம் ஆடித் தளர்ந்துபோய்  மறுநாள் காலையில் எழுந்திரிக்க முடியாமப் படுக்கையில் கிடப்பாங்கன்னு நினைக்கிறேன். அதான் லீவுன்னு எனக்குத் தோணுது ! பொட்டிகளில் போட்டு அனுப்பும் வேலையையை எல்லாம்  வேலையாட்கள் செய்வாங்க. Bபாக்ஸில் போட்டு அனுப்பறதால் இதுக்கு பாக்ஸிங் டே ( Boxing Day )ன்னே  பெயர் வந்துருக்கு.  காலப்போக்கில்  தருமம் பண்ணறது குறைஞ்சுட்டாலும்.... பாக்ஸிங் டே லீவை மட்டும்  இன்னும் தொடர்ந்துக்கிட்டே இருக்காங்க. 
இப்ப இந்த நாளை வியாபார நிறுவனங்களில் தள்ளுபடி விற்பனைக்காக  ஒதுக்கியாச்சு. நம்ம அட்சயத்திருதியை மாதிரின்னு வச்சுக்குங்க.  தானம் தருமத்துக்கு உண்டான பண்டிகையைக் கடைசியில் தங்கம் வாங்கிக்கும் விழாவா ஆக்கிவைக்கலை ? 

 இத்தனைநாள் வரை பண்டிகைக்காக புதுப்புது ஐட்டங்கள் ஏகப்பட்ட விலையில் வித்துக்கிட்டு இருந்தாங்களே...  அதெல்லாம் அரைவிலைக்கு வந்துரும்.  அதுவும் இந்த ஸேல் ஒருநாளோடு போகாது.  அப்படியே புதுவருஷம் வரை இழுத்துக்கிட்டே போகும்.  பத்துடாலர்னு  இருந்த பொருட்கள் எல்லாம்  பாக்ஸிங் டேயில் அஞ்சு டாலருக்கு வித்து...... அப்படியே டிசம்பர் கடைசிநாளில் 99 சென்ட்டுக்கு வந்துரும். என்ன ஒன்னு கடைசிநாள் வரை காத்திருந்தால்  நமக்கு வேணுமுன்னு நினைச்சவை எல்லாம் பலசமயம் வித்தே போயிருக்கும். 

இதுலே ஒரு வேடிக்கை என்னன்னா....  டிசம்பர் 24, சாயங்காலம் 6 மணியோடு கடைகள் எல்லாம் மூடிருவாங்க. மறுநாள் பண்டிகை தினம்....  ஊரே மூடிக்கிடக்கும். டிவியில் கூட கமர்ஸியல் விளம்பரங்கள் வராது. அதுக்கு அடுத்த பாக்ஸிங் தினத்தில் ஸேல் ஆரம்பிச்சுரும். இதுலே பெரிய ஐட்டங்கள் என்னென்னெல்லாம்  எத்தனை சதமானக் கழிவில் வரப்போகுதுன்னு டிசம்பர் 24 ஆம்தேதியே அறிவிப்பும் வந்துரும். தப்பித்தவறி  அன்றைக்குக் கடைக்குப்போக நினைச்சவனும்  அன்றையத் தேவைக்கு  இல்லாதவைன்னா பாக்ஸிங் தினத்துக்குன்னு தள்ளிப்போட்டுருவான் :-)

அதனால் எல்லோரும் காத்துநிக்கும் தினமா இது அமைஞ்சுருது. பொழுது விடிஞ்சவுடன்  கடைகண்ணிக்கு ஓடும் சனம்! நான் பொதுவா வேடிக்கை பார்க்கப்போவேன். அலங்காரச்சாமான்கள்  பார்த்துவச்சுக்குவேன். கடைசிநாள் போனால் ரொம்பவே மலிவாக வாங்கியாறலாம்.  இந்த வருஷம் பூச்சாடிகள் கொஞ்சம் பெருசா வேணும் நமக்கு.  ஏகப்பட்ட   லில்லிப்பூங்கொத்துகளை நமக்கு   அன்பளிப்பா கொடுத்துக்கிட்டு இருக்காங்க  ஒரு அண்ணி.
 
நம்ம வீட்டுலே லில்லிச்செடிகள் இருக்குன்னாலும்...   நான்  நம்ம தோட்டத்துப் பூவைப் பறிக்கவே மாட்டேன்.  செடிகளிலேயே விட்டு வைப்பதால் இன்னும் சில நாட்களுக்குக் கண்ணுக்கு விருந்தாக இருக்குமே! ஸ்வாமிக்குப் பூஜை பண்ணும்போதும், 'புஷ்பம் ஸமர்ப்பியாமி'ன்னு தோட்டத்துப்பக்கம் கை காமிச்சால் போதாதா ? அவரே போய்ப் பார்த்து அன்றைக்கு என்ன வகை பிடிக்குமோ அதை எடுத்துப்பார் !

இங்கே ஸேல்னு சொன்னால்.... உண்மையில் நல்ல ஸேல்தான். விலை ஏத்திட்டு, அப்புறம்  குறைப்பதெல்லாம் இல்லை.  வருஷம் முழுக்க எதாவது  கண்டுபிடிச்சு ஸேல் நடக்கும். பாக்ஸிங் தின ஸேல் வருஷக்கடைசிவரை இருக்குமுன்னா.... மறுநாள் முதல் ஒரு வாரம் புதுவருஷ ஸேல், ஃபிப்ரவரி மாசம்  வைட்டாங்கி தினம்,  வாலண்டைன் டே,  மார்ச்சில்  ஈஸ்டர், ஏப்ரலில் ஆன்ஸாக் டே,  மே மாசம் மதர்ஸ் டே, ஜூனில் எங்க மாட்சிமை தாங்கிய மஹாராணி அவர்களின் பொறந்தநாள், இந்த வருஷம் முதல்  மாட்டாரிகின்னு ஒரு மவொரி புதுவருஷப் பண்டிகை ஆரம்பிச்சுருக்கு , அதுக்கான ஸேல்,  அக்டோபரில் லேபர் டே, நவம்பரில் எங்க  மாநிலம் ஷோ டே, டிசம்பரில் க்றிஸ்மஸ்னு ... அது பாட்டுக்குப் போகும். இதுக்கிடையில் ஒவ்வொரு சீஸன் மாறும்போதும், சம்மர், ஆட்டம், விண்ட்டர், ஸ்ப்ரிங்னு ஸேல்கள்,  கடைகளுக்கான பொறந்தநாள் ஸேல்கள் இப்படி....... !  ஆனாலும் இந்த பாக்ஸிங் டே ஸேலுக்கு மக்கள் மத்தியிலே ஒரு நல்ல பெயர் கிடைச்சுருச்சு :-)  விடப்டாது ! நமக்கு ஒரு ப்ரிண்டர் ஆச்சு :-)
ஓசிப்பூக்களுக்கு ஜாடி வாங்கிக்கக் கடைக்குப் போனோம். ஒன்னு போதுமுன்னா ரெண்டா வாங்கித்தந்தார் நம்மவர். உண்மையில்,  கிடைச்ச லில்லி மலர்கள் எல்லாம்  உதிர்ந்தே போயிருச்சு.  அதுக்காக .... பூச்சாடி வாங்காமல் இருக்கலாமோ ?  அடுத்த வருஷம் ஓசிப்பூக்கள் கிடைக்காதா என்ன ? 

அடுத்த பண்டிகைன்னா புதுவருஷம்தான். ரொம்ப மெனெக்கெட வேணாம்.  க்றிஸ்மஸ் அலங்காரங்களை அப்படியே வச்சுடலாம்.  ஒரு வாரமே இடைவெளி என்பதால் ரெண்டும் சேர்த்துத்தான்  இங்கே கொண்டாடுறாங்க. என்ன ஒன்னு.....  கிறிஸ்மஸ் தினத்துக்கு முந்தினநாள்  பிற்பகலில் இருந்து  மால்களில் ஸாண்ட்டா இருக்கமாட்டார்.     
நமக்கும்  அடுத்துவரும் முக்கியமான பண்டிகை பொங்கல் என்பதால் அதுக்குண்டான அலங்காரத்துக்கு இந்த வருஷம் என்னெ செய்யலாமுன்னு யோசிச்சு, முதல்முதலா  ஒரு புதுக்கிணறு வெட்டினேன் !!!! 

மற்றவைகளை 'உக்கார்ந்து ' யோசிக்கணும். 


8 comments:

said...

ஆறு மாதங்கள் பின்னால் வந்து கொண்டிருக்கிறது பதிவுகள்!!  நீங்கள் சொன்ன மாதிரி ரஜ்ஜு இருக்கிறானா என்று முதலில் ஸ்க்ரால் செய்து பார்த்து விட்டு அப்புறம்தான் பதிவைப் படித்தேன்!

said...

பூச்சாடிகள் அழகு.

ரஜ்ஜூ மகாராஜா ஆகிவிட்டார். ஜன்னுவுக்கா தினம் அலங்காரங்கள் என்னைப் பாருங்கள் என்று அழகிய போஸ் வேறு லவ்லி ரஜ்ஜூ.

said...

ஹப்பா ரஜ்ஜு கண்ணில் பட்டுவிட்டான். என்ன போஸ், நம்ம ஊர் ராஜா மாதிரி மாலை எல்லாம் போட்டு. அவரும் உங்களோடு சேர்ந்து யோசிக்கத் தொடங்கிட்டார் போல!!

ஆமாக்கா அங்கெல்லாம் ஸேல் னா உண்மையாவே ஸேல் தான்.

பூ ஜாடி அழகா இருக்கு. அப்புறம் நீங்க வெட்டின கிணறு சூப்பர் போங்க ரஜ்ஜு எட்டிபார்ப்பானே!!

இப்படித்தான் நான் கொலுவுக்கு வெட்டின கிணறு இந்த அலுமினியம் ஃபாயில் எல்லாம் சுத்தி வருமே அட்டை உருளை அதெல்லாம் எடுத்து வைச்சு நூல் கண்டு சுத்தி வர நீங்க வைச்சிருக்காப்ல ராட்டு ஒண்ணு வைச்சு, செலோ டேப் பெரிசு தீர்ந்து போனதை கிணத்துக்கு வைச்சு பெயின்ட் அடிச்சு..சணல் கயிறு ரெண்டு மூணை முறுக்கி இல்லைனா வூல் நூல் தலைப்பின்னல் கூட போடுவோமே அது போல முறுக்கி...ஹூம் ..எல்லாம் போச்சு...இப்ப கொலு வைச்சே பல வருஷமாச்சா.

கீதா

said...

வாங்க ஸ்ரீராம்.

இதுதான் விட்டுப்போனதை, ஓடிப்பிடிக்கும் வகை :-) பதிவு செஞ்சு வச்சுட்டால் யாருக்காவது பயன் ஆகலாம் இல்லை ?

ரொம்ப விஸ்தரிக்காமல் சட் புட்னு நாலுவரியோடு முடிக்கலாமுன்னா எங்கே ?

நீங்க தேடினீங்கன்னு ரஜ்ஜுவிடம் சொன்னேன். தலையை ஆட்டினான் :-)

said...

வாங்க மாதேவி,

வரவர ரஜ்ஜுவின் அட்டகாசம் அதிகமாகி வருதுப்பா.... சின்னக்குழந்தைகளின் பிடிவாதம் அப்படியே இவனிடமும்........... !

said...

வாங்க கீதா,

நாமே கைப்பட எதாவது அலங்காரம் செஞ்சால் மனசுக்கு மகிழ்ச்சியாத்தான் இருக்குல்லே ?
அதான் கொஞ்சம் மெனெக்கிடல் :-)

ரஜ்ஜுவுக்கு ரசிகர்கள் இருக்காங்கன்னதும், ரஜ்ஜு அப்பாவுக்கு பயங்கர சந்தோஷம் :-)

said...

மீண்டும் ரஜ்ஜு! :)

பாக்சிங் டே தகவல்கள், காரணம் என அனைத்தும் சிறப்பு. படங்கள் வழமை போல சிறப்பு.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ஊக்கப்படுத்தும் பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி !