டிசம்பர் மாசத்துலே (2021) இருக்கோம் இப்ப :-) எங்க கோடை ஆரம்பம். மூணு மாசத்துக்கு வெயில்னு அல்ப சந்தோஷம்! அந்த தொன்னூறு நாட்களில் நெசமாவே வெயில் எத்தனை நாட்களுக்குன்னு விரல் விட்டு எண்ணிடலாம்..... முப்பது வரணும். வரும் வரும்.... வராம எங்கே போகப்போகுது..... நடுக்கோடைன்னு ஜனவரி மாசம் ஒரு ரெண்டு மூணு நாட்களுக்கு வருமே !!!!
இந்தச் செடிகொடிகள் இருக்கு பாருங்க.... இதுங்க என்னைவிட அல்பம். கொஞ்சூண்டு ஒரு ரெண்டு மூணு டிகிரி கூடுதலா வந்தாப் போதும்.... ஈ..... ஈன்னுகிட்டுப் பூக்க ஆரம்பிச்சுரும். மல்லியும் ரோஜாவுமா ஒரு அழகுதான் இல்லே !!!! கூடவே மஹாலக்ஷ்மியும் வந்தாள் !
நம்ம எதிர்வீடு விற்கப் போட்டுருந்தாங்க. இது ஒரு சோகக்கதை. வீட்டு உடமையாளர் நல்ல நண்பர்தான். நேருக்கு நேர் சந்திக்கும் சமயங்களில் கொஞ்சநேரம் நின்னு பேசுவோம். தெருக்கதைகள் எல்லாம் சொல்வார். தனி மனுஷராத்தான் இருந்தார், மூணு பூனைகளோடு! அதுலே ஒரு பூனை நம்ம வீட்டு கராஜ் கதவாண்டை உக்கார்ந்து எதிர்வீட்டையே கவனிச்சுக்கிட்டு இருக்கும். சென்ட்ரி ட்யூட்டி ! திடீர்னு கொஞ்ச நாளா , மனுஷரைக் கண்ணுலே காணோம். நம்ம பக்கத்து வீட்டுக்காரங்களோடு ஒருநாள் பேசிக்கிட்டு இருந்தப்பதான் விஷயமே தெரியுது.... எதிர்வீட்டுக்காரருக்கு டிமென்ஷியா அதிகமாப்போய், அவரை அரசாங்கம் பொறுப்பெடுத்து அதுக்கான முதியோர் இல்லத்துலே வச்சுருக்காம். இனி குணமே ஆகாதுன்ற நிலையாம். அதுதான் அரசு அவர் வீட்டை விக்கப்போட்டுருக்கு ! அடராமா...... ப்ச்.....
நம்ம வீடுகூட, இப்படி ஒரு பாட்டி, முதியோர் இல்லத்துக்குப் போயிட்டதால், அரசு வீட்டை விற்கப்போட்டப்பதான் நாம் வாங்கினோம். ஒரு ரெண்டு வருஷம் வாடகைக்கு விட்டுட்டு அப்புறம் அந்தப் பழைய வீட்டை இடிச்சுட்டுத்தான் இப்போ இருக்கும் வீட்டைக் கட்டுனோம். சம்பவத்தைத் தொடரா எழுதி, நம்ம துளசிதளத்துலேயே போட்டுருக்கேன். வெறும் நாப்பத்தியேழே பகுதிதான்.
முந்தியெல்லாம் அரசு விற்கும் வீடுகளை, யாராவது ஏஜண்டு வித்துக் கொடுத்துருவார். கொஞ்சம் மெத்தனமாத்தான் விற்பனை. ரொம்பக் கறாரா இல்லாம சுமாரான விலைக்குப் படிஞ்சுரும். அதான் கவர்மெண்ட் வேல்யுவேஷன் ஒன்னு இருக்குமே, அதைவிடக் கூடுதாலாக் கொஞ்சம் அதிகம் வச்சுட்டு..... சட் புட்னு வேலையை முடிச்சுருவாங்க.
இப்ப ஒரு பத்து வருசமா, வீட்டை ஏலத்தில் விக்கறது அதிகரிச்சுக்கிட்டே வருது. ஏலம் கேக்கப்போனால்..... யாராவது விலையை ஏத்திக்கிட்டே போவாங்க. உள்கை வேலைன்னு நினைக்கிறேன். விருப்பம் காமிச்சால் அவ்ளோதான் ..... ஏணி வச்சாலும் எட்டாது !
இப்படி ஒரு ருசி கண்ட மார்கெட்.... இருப்பதால் நாங்க ஏலத்தில் விற்பனைன்னாலே எட்டிக்கூடப் பார்க்கறதில்லை.சும்மா வேடிக்கை பார்க்கப்போகவும் பயம். 'நம்மவர்' வேற ச்சும்மாக் கையை வச்சுக்கிட்டு இருக்க மாட்டார். தலையைச் சொறியக் கையைத் தூக்கிட்டா அவ்ளோதான் ... ஏலம் போடும் நபர் 'யப்'னு விலையை ஏத்திருவார். ஏற்கெனவே இங்கே வந்த புதுசுலே வீட்டுப்பொருட்கள் ஏலம் வேடிக்கை பார்க்கப்போய் வேண்டாத பொருட்களையெல்லாம் வாங்கும்படி ஆச்சு. எதுக்கு இதைப்போய் வாங்குனீங்கன்னா.... நான் எங்கே வாங்குனேன்.... தலை முடியைச் சரியாக்கக் கையைத் தூக்கினதுக்கு என்னைக் காமிச்சுட்டார், அந்த ஆள்னு சொன்னார். கைகளைக் கட்டிப் போட்டுட்டுத்தான் ஏலம் பார்க்கவே போகணும்.
ஏலம் நடந்த உடனே வித்தாச்னு ஸ்டிக்கர் கொண்டுவந்து ஒட்டிவச்சுட்டுப்போனாங்க. அப்பப் பார்க்கிறேன்.... அந்த வீட்டுக்குப் பக்கத்துவீட்டுக்காரர், அவர் வீட்டையும் விக்கப்போறதா போர்டு எழுதி வச்சுருக்கார். யாருக்காவது ரெண்டு வீட்டையும் ஒன்னா வாங்க விருப்பம் இருந்தால் வாங்கிக்கட்டுமே..... ஹாஹா....
நம்மூரில் இப்போ ஒன்னு சிலவருஷங்களாப் புதுசா ஆரம்பிச்சிருக்கு. ஒரு நிலத்தில் சின்னச் சின்னதா ரெண்டு மூணு வீடுகளைக் கட்டிவிட்டு, ஓவர் சிக்ஸ்ட்டின்னு விக்கறது. மக்களும் ஓய்வு பெறும் வயசு வரும்போது.... வீட்டு வேலைகளைச் செய்ய முடியலைன்னு இருக்கற பெரிய வீட்டை வித்துட்டு Dடவுன் சைஸ் செய்யறோமுன்னு சின்ன வீடுகளுக்குப் போறது. அப்படி கட்டும் சில வீடுகளைப் போய் பார்த்துருக்கோம். நம்ம ஊர்களில் ரெண்டு பெட்ரூம் ஃப்ளாட்ஸ் இருக்கு பாருங்க அப்படி இருக்கும். நம்மூர்லேயாச்சும் ரெண்டு பெட்ரூமுன்னா ரெண்டு அட்டாச்டு பாத்ரூம் இருக்கும். இங்கே அது இருக்காது. ஒரே ஒரு குளியலறைதான். ரொம்ப இடுக்கமா இருக்கும் வீட்டுலே வயசான ரெண்டுபேர் எப்படி இருக்கறாங்க.... அசாத்யப் பொறுமை வேணாமோ ? என் கவலை என்னன்னா.... வீட்டுக்கதவுகள் எல்லாம் ஸ்ட்ரெச்சர் நுழையப் போதுமான அகலம் இல்லையேன்றதுதான்.... ஆம்புலன்ஸ் எப்போ வரும்னு யாருக்குத் தெரியும், சொல்லுங்க....
எனக்குக் கொஞ்சநாளா கண்ணுலே தண்ணி வச்சுக்கும்படியா இருக்கு ! ச்சும்மாவே ஆன்னா ஊன்னா ஜலம் வச்சுப்பேன். இப்ப என்ன புதுசா ? வெங்காயம் அதிகம் வெட்டறேனோ ? நம்ம கண் மருத்துவரைப் பார்க்கப்போனோம். பரிசோதனைகள் ஆச்சு. கண்ணீர் தொண்டைக்குப்போகும் வழி அடைபட்டுருக்காம். சின்னதா ஒரு ஸர்ஜரி பண்ணால் போதுமாம்.
கண் ஸர்ஜரின்னதும் ஜெர்க் ஆச்சு. நம்மவருக்கு சிம்பிளா ஒரு ஐஓஎல் பண்ணிவிட்டு, ஆச்சு இன்றைக்கு (மே 2022) பதிநாலு மாசம். இன்னும் கண் சரியாகலை. நாலுவாரச் சொட்டு மருந்துன்னு கணக்கு. ஆனால் கணக்கெல்லாம் தப்பிப்போச்சே. லட்சத்தில் ஒருவரா ஆகிட்டாரே..... என்னால் ரிஸ்க் எடுக்க முடியாது. இப்படியே அழுத கண்ணும் சிந்திய மூக்கு(!)மாக இருந்தால் ஆச்சு. ஒரு பரிதாபம் வராதோ ? சில காரியங்கள் சாதிச்சுக்கலாமே.... (என்ன குறுக்கு புத்தி பாருங்க! )
நம்ம யோகா குழுவில் தோழிக்கு தோள் ஸர்ஜரி. இது சீனியர் சிட்டிஸன்களுக்கான விசேஷ மருத்துவமனை. அரசாங்கம் கட்டிவிட்டதுதான். இதோட ஓப்பன் டே நடந்த சமயம் போய்ப் பார்த்துட்டு வந்தோம். ச்சும்மாச் சொல்லக்கூடாது..... அட்டகாசமான வசதிகள்.!
விருப்பம் இருந்தால் இந்தச் சுட்டியில் பாருங்க.
http://thulasidhalam.blogspot.com/2016/06/blog-post.html
பார்த்து வச்சுக்கறது எதுக்குன்னா.... நமக்கும் எதாச்சுன்னா இங்கேதான் அனுப்புவாங்க. அப்ப என்னென்ன இருக்குன்னு கவனிக்கத் தெம்பு இருக்குமோ, இல்லையோ....
வீட்டுக்கு வர்றவழியில் ஒரு எலெக்ட்ரிக் தோசைக்கல் வாங்கியாந்தோம். இந்த நான்ஸ்டிக் சமாச்சாரங்களில் தோசை எடுக்க வராமல் வழுக்கிக்கிட்டே போகுதே.... மொறுமொறுன்னு தோசை வரும்வரை விடக்கூடாது. ( உண்மையில் இப்போ இதை எழுதும்போதுதான் இந்த சமாச்சாரமே நினைவுக்கு வருது. வாங்கியாந்த உடனே ஊத்தப்பம், மினி ஊத்தப்பம்னு செஞ்சுபார்த்துட்டு, எடுத்து வச்சுட்டேன் ) கப்போர்டுள்ளேத் தேடிப்பார்க்கணும்.
இந்த வருஷத்து ஹனூக்கா விழா கொஞ்சம் லேட்டாத்தான் வந்தது. சந்திரக்கேலண்டர் படி ஒன்பதாம் மாசம் இருபத்தியஞ்சாம் நாள் ஆரம்பிச்சு ஒன்பதுநாள் விழா. எட்டுநாட்கள்னு ஒரு கணக்கு இருக்கு. ( Jewish Festival of Lights) நம்ம நவராத்ரி & தீபாவளியைச் சேர்த்துச் செய்யறமாதிரிதான் ! முதல்நாள் சாயங்காலம் சூரியன் அஸ்தமிச்சபிறகு ஒரு விளக்கேத்தி வைப்பாங்க. இப்படியே அடுத்தடுத்து சாயங்காலம் ஒவ்வொரு விளக்கா ஏத்திக் கடைசி நாள் ஒன்பது விளக்குகள் ஜொலிக்கும். இதுக்குன்னு விளக்கேத்தும் ஸ்டேண்ட் கூட இருக்கு !
குடும்ப விழா என்பதால் வீக் எண்ட் லே உறவுகளோடு கொண்டாட்டம் வச்சுக்குவாங்க. நம்ம சம்பந்தி வீட்டு விழாவுக்கு வருஷாவருஷம் போய் வர்றோம். இவுங்களுக்கு க்றிஸ்மஸ் பண்டிகை கிடையாது. இந்த ஹனூக்காதான் பெரிய விழா என்பதால் பரிசுப்பொருள்கள் கொடுப்பதெல்லாம் இந்த சமயம்தான். முந்தியெல்லாம் மகள் நமக்கு எப்போதும் க்றிஸ்மஸ் பரிசு எதாவது கொண்டுவந்து கொடுத்துக்கிட்டு இருந்தாள். கல்யாணத்துக்குப்பின் புகுந்த வீட்டு வழக்கத்து மாறிட்டாள். நமக்கான பரிசும் கிடைச்சது :-)
இருட்டும்வரை இருந்தால் விளக்கேத்துவதைப் பார்க்கலாம்தான். ஆனால் நாங்கள் எப்பவும் அஞ்சு மணிக்கே கிளம்பி வந்துருவோம். முக்கால் மணி நேர ட்ரைவ் இருக்கே! இங்கே சம்மர் ஆனதால் சூரியன் அஸ்தமிக்க ஒன்பதுக்கு மேல் ஆகிரும். சம்பந்தியம்மாவின் தகப்பனாரை அவருடைய வீட்டில் கொண்டு போய் விட்டுட்டு வந்தோம். இப்பக் கொஞ்சநாளா கால் வலின்னு வண்டி ஓட்டுவதை நிறுத்தியிருக்கார்.
டிசம்பர் மாசத்திலே தவறவிடக்கூடாத ஒன்னு எங்கூர் ஹேக்ளிப் பார்க் விஸிட். க்றிஸ்மஸ் மாசம் வேற இல்லையோ ! அலங்காரத்துக்கு என்ன கொறைச்சல் ? தாயும் சேயுமா அங்கங்கே கண்களுக்கு விருந்து !
இதுக்கிடையில் நம்ம ரஜ்ஜுவுக்கு டென்ட்டல் பிரச்சனைன்னு ஒருநாள் ஹாஸ்பிடலில் போனோம். மயக்கமருந்து கொடுத்துதான் பல் பார்க்கணும். சாயங்காலம் மயக்கம் தெளிஞ்சதும் ஃபோன் செஞ்சாங்க. போய்க் கூட்டிட்டு வந்தோம். கொரோனா காரணம், தாய்தகப்பனுக்கு உள்ளே அனுமதி இல்லை.
நம்மூர்லே ஒரு பழைய வியாபார நிறுவனம் ஒன்னு இருக்கு. 1854 இல் ஆரம்பிச்சது. வெள்ளையர் அப்போதானே இங்கே குடியேற (1840 - 1852) ஆரம்பிச்சாங்க. அவுங்களுக்கு வேணுங்கற சாமான்கள் விற்பனை! துணிமணியில் இருந்து சகலமும். (இந்தக் கடைதான் இன்னும் இயங்குது. அப்போ ஆரம்பிச்ச மற்றவைகள் காலப்போக்கில் காணாமல் போச்சு. இங்கே எல்லாப் பொருட்களும் தீபிடிச்ச விலை ! யாராவது இங்கே வாங்கறாங்களான்னுகூட எனக்கு சந்தேகம்தான். ஏதோ பெருமைக்கு மாவு இடிக்கறாங்களோன்னுகூட சிலசமயம் நினைச்சுக்குவேன். எல்லா வருஷமும் க்றிஸ்மஸ் அலங்காரங்கள் மட்டும், கடையைச் சுத்தி இருக்கும் பெரிய பெரிய கண்ணாடி ஜன்னல்களில் ரொம்பவே அருமையாச் செய்வாங்க. நமக்கும் இது கோடைகாலம் என்றபடியால் நிதானமா ராத்ரி நேரம் போய்ப் பார்த்துட்டு வரலாம். அதான் பத்துமணி வரை இருட்டாதே !
ச்சும்மாச் சொல்லக்கூடாது..... கோடை காலம், இங்கே எல்லாம் அழகே!
10 comments:
அருமை சிறப்பு
நிறைய பழைய கதைகள் கேட்டு படங்கள் பார்த்து மகிழ்ந்தோம்.
உங்களுக்கு அழுத கண். எனக்கு காய்ந்த கண்! ரொம்பக் காய்ஞ்சு போச்சாம். வாழ்நாள் முழுவதும் ரெண்டு மணிநேரத்துக்கு ஒருதரம் சொட்டு மருந்து விட்டுக்கணுமாம்.
தகவல்கள் அனைத்தும் சிறப்பு. கண் பிரச்சனை - விரைவில் குணம் பெற பிரார்த்தனைகள்.மற்ற தகவல்கள் ரசித்தேன்.
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க மாதேவி,
படங்களே பல விஷயங்களைச் சொல்லிருதேப்பா :-)
வாங்க ஸ்ரீராம்,
சொட்டு மருந்து படா பேஜார். நம்மவருக்குக் காலையும் மாலையும் தவறாத நேரத்தில் போட்டுருவேன். மதியமும் மாலையும்தான் நேரம் தப்பிருது. ஆயிரத்தெட்டு வேலைகள். இவராவது ஞாபகப்படுத்தலாம். எங்கே.... ?
வாங்க வெங்கட் நாகராஜ்,
பிரார்த்தனைகளுக்கு நன்றி!
பெருமாள்தான் 'கண்' திறக்கணும்....
கண்ணு பிரச்சனை சரியாகிடும்.
படங்கள், நிகழ்வுகள் விவரம் எல்லாம் சூப்பர். ரஜ்ஜுவை பார்த்தாச்சு.
கீதா
வாங்க கீதா,
கண்ணு பிரச்சனைதான் கவலையாக இருக்கு. பெருமாள்தான் பார்த்துக்கணும்.
Post a Comment