Monday, June 04, 2018

குப்பைன்னு ஒதுக்கித் தள்ள முடியாது !

அம்பத்தியொன்பது ஆயிரம் யானைகளை ஒரு தராசுலே (!) எடை போட்டா எவ்ளோ இருக்கும்?  எங்கூர் ஆர்கானிக் வேஸ்ட்களைப் பதப்படுத்தும் ஆலை சொல்லுது, மூணு லக்ஷத்து அம்பதாயிரம் டன் எடையாம்!  ஆங்........  நெசமாவா?

ஆமாவாம்! இதுவரை அவ்ளோ குப்பைகளைப் பதப்படுத்திட்டொமுல்லேங்கறாங்க!


ஊருலே மொத்தம் ரெண்டு லக்ஷம் வீடுகள் கூட இல்லை.....  ஆனாலும் எப்படிக் குப்பை சேர்ந்துருது பாருங்க!

அடுக்களை கழிவுன்னு நாம் போடும் வெங்காயத்தோல், காய்கறிகளின் தோல், மீந்து போன சாப்பாடு ஐட்டங்கள்,  செடிகொடிகளின் இலைகள் இப்படி இருப்பதையெல்லாம் எங்கூர் பச்சைத் தொட்டியில் போட்டு, எல்லா புதன்கிழமை ராத்திரியிலும் வீட்டுக்கு வெளியே நடைபாதை ஓரமா வச்சுடறதோடு நம்ம கடமை முடிஞ்சுருச்சுன்னு இருந்தோமா..... இன்றைக்கு  அந்தக் கழிவுகளையெல்லாம் என்னதான் செய்யறாங்கன்னு போய்ப் பார்க்க ஒரு ச்சான்ஸ் கிடைச்சது!

லிவிங் எர்த் என்ற நிறுவனம். உள்ளூர் சிட்டிக் கவுன்ஸில் கூடச் சேர்ந்து நம்ம வீட்டுக் குப்பைகளையெல்லாம் வாரிக்கிட்டுப் போறாங்க.

உலகத்துலே எல்லா நாடுகளிலும் இப்ப இருக்கும் பெரிய பிரச்சனைகளில் ஒன்னு குப்பை. இதைப் பத்தி  ரொம்ப வருசங்களுக்கு முன்னே ஒரு பதிவு எழுதி இருந்தேன்.  சமாச்சாரம் நினைவுக்கு வரலைன்னா... இங்கே எட்டிப் பார்க்கலாம் :-)

பதிவு எழுதுன அதே வருசம் (2009)தான் இந்த ஆலையும் இங்கே தொடங்கி இருக்காங்க. அப்போ நாங்க இந்தியாவுக்குச் சில வருசங்கள் போற மும்முரத்துலே இருந்ததில் இதைக்  கவனிக்கலை.  திரும்பி வந்தபிறகு,   நிலநடுக்கத்தில் பாதி ஊரே அழிஞ்சு போன துயரத்தில்  இருந்தமா...... அப்பயும் கவனிக்கலை.  என்னடா சனம், ஒன்னும் கண்டுக்க மாட்டேங்குதேன்னு இந்த வருசம்,

 'வா.... வந்து பார்! நீ போடும் குப்பை மெல்ல மெல்ல எப்படி  உருமாறுது என்பதைப் பார்'னு  அழைப்பு வச்சாங்க.

எங்க ஊர் மக்களின் விசேஷ குணம் என்னன்னா...... ' இந்த நாள், இன்ன நேரம், இது நடக்கும், வாங்க' னு  சொன்னால் போதும்    .....  போயிட்டு வருவோம். மதிச்சு மரியாதை செய்யறதுலே எங்களை மிஞ்ச முடியாது :-)

குப்பை சமாச்சாரம் என்பதால்....  ஊர்க்கோடியிலே  கொண்டுபோய் வச்சுருக்கும்  ஆர்கானிக் ப்ராஸஸிங் ப்ளான்ட்க்குப் போய்ச் சேர்ந்தோம்.  லிவிங் எர்த் நிறுவனம் இதை நடத்துது. காலை பத்து முதல் மதியம் மூணு வரை பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கறாங்க.  நம்மூர் சிட்டிக் கவுன்ஸில்தான்  நம்மை அழைச்சுருக்கு.

 கூப்ட்டுட்டு விருந்துபசாரம் செய்யலைன்னா எப்படி?

வரவேற்புக்காக ரெண்டு மூணு கூடாரம், குழந்தைகளுக்காக கலரிங் ஐட்டம்ஸ், நமக்காக காஃபி, டீ ஏற்பாடு, சாஸேஜ் சுட்டு ரொட்டிக்குள் வச்சுத்தரும் சமாச்சாரம், பாட்டில் ஓப்பனர், முட்டாய், காஃபி/டீக்கான சிப்பர்டம்ப்ளர்ஸ், பந்து இப்படி சின்னச் சின்ன பரிசுகள் கொஞ்சம்.


ஏகப்பட்ட தகவல் தாள்கள் ( இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த்!)  கூடவே கேள்வித்தாள் ஒன்னும்.... (பெரிய நீட் எக்ஸாம்!) சரியான பதிலை எழுதிக் கொடுத்தால்  ஒரு பரிசும் உண்டு.

சின்னச்சின்னக் குழுவா நம்மைக் கூட்டிப்போய் எப்படி நம்ம குப்பைகளை என்ன பண்ணறாங்கன்னு காமிக்கும்  கைடட் டூர் ஒவ்வொரு  இருவது நிமிட்டுக்கும் உண்டு.
கேள்வித்தாளையும் அதுக்கொரு பேனாவுமா (இதுவும் தர்றாங்க!) கையில் புடிச்சுக்கிட்டுச் சுத்திப் பார்க்கணும்.  நம்ம கைடு  சொல்லும் தகவல்களில் கேள்விக்கான விடைகள் இருக்கும்.  கவனிச்சுக் கேட்டு அப்பப்ப எழுதினால் ஆச்சு:-)
காப்பி கூட அடிக்கலாம் :-)




குப்பைகளைத் தரம் பிரிச்சு அதுலே இருக்கும்  வேண்டாத சாமான்களை எப்படி எடுக்கறாங்கன்றது முதல்,  அவைகளை எப்படி மக்க வச்சுக் கம்போஸ்ட் பண்ணறாங்கன்னு காமிக்கும் டூர் !
குப்பைகளைப் புரட்டிப்போட  அதுக்குண்டான மெஷீன்கள். டெமோ உண்டு.



மக்க வைக்கும் இடத்தில் இருந்து  வெளிவரும் துர்மணத்தை எப்படிப் போக்கறாங்க. அதில் உண்டாகும் கூடுதல் உஷ்ணத்தையும்  ஈரப்பதத்தையும்  வச்சு எப்படி சுடுதண்ணி காய்ச்சிக் கைகழுவப் பயன்படுத்தறதுன்னு  நிறைய  சமாச்சாரங்களைச் சொல்லிக்கிட்டே  நம்மைக் கூட்டிப்போனார் கைடு.
கடைசியில் எல்லாம் கம்போஸ்ட்டா மாறி  உள்ளூரில் எங்கெங்கே பயன்படுத்தறாங்கன்னும் விளக்கினார். நம்ம சிட்டியே தோட்ட நகரம்  என்பதால் சிட்டிக்கவுன்ஸில் வச்சுப் பராமரிக்கும் தோட்டங்களுக்கும், தெருவோர நடைபாதைச் செடிகள் பராமரிப்புக்கும் போக, பொதுமக்களுக்காக தனி விற்பனையும் உண்டு.

கம்போஸ்ட் குவியல் ஒன்னு  போட்டுவச்சு, நமக்கு சாம்பிளும் கொடுக்கறாங்க.  அவுங்க  வச்சுருக்கும் காகிதப்பைகளில் வாரிக்கொண்டு வரலாம்.  சுலபமாகப் பராமரிக்கக்கூடிய செடிகளும் வச்சுருக்காங்க. அதுலேயும் ஒன்னு ரெண்டு எடுத்துக்கலாம்.  அதானே.....  இந்த கம்போஸ்ட் போட்டு வளரும் செடிகள் எப்படி இருக்குன்னு நமக்குத் தெரிய வேணாமா?

மக்கள் கூடும் இடத்தைக் காவல்துறையும் பயன்படுத்திக்கிச்சு.  தீ விபத்து நேர்ந்தால் எப்படி அதுலே இருந்து தப்பிக்கலாம். தீ எப்படி சட்னு பரவுது. அப்போ நாம் என்ன கவனிக்கணும் என்றெல்லாம் ஒரு வர்ச்சுவல் அனுபவத்தை நாம் அடைய ஒரு ஏற்பாடு.  கண்ணுலே மாட்டிக்கிட்டுப் பார்த்தேன். சின்னப் பொறியா இருந்து சடசடன்னு  தீ பத்தியெரிஞ்சதும் 'ஐயோ'ன்னு கத்திட்டேன் :-)


கேள்வித்தாளில் சரியான விடைகளை எழுதுனதுக்கான பரிசுகளில் சாய்ஸ் இருந்துச்சு.  ஒரு கம்போஸ்ட் உர மூட்டை(40 லிட்டர்) அல்லது ஒரு  ப்ளாஸ்டிக் குப்பைக் கூடை. அடுக்களையில் வச்சு அன்னாடம் சேரும் கழிவுகளை அதுலே சேகரிச்சு, நாளின் கடைசியில் பச்சைத் தொட்டியில் போட்டுவைக்கலாம்.

கல்யாணத்துக்குப்போய் வந்தால் தாம்பூலப்பை கொடுக்கறது மாதிரிதான். இப்பெல்லாம் இங்கே வெத்தலைபாக்கெல்லாம் இப்படி உருமாறிப் போயிருச்சு :-)
வாரத்துலே ஒரு நாள்  (நம்ம தெருவுக்கு வியாழக்கிழமை) காலையில் நம்ம வீட்டு முன் தெருவின் ஓர நடைபாதையில் வச்சுட்டால்  கலக்டர் வந்து  காலி பண்ணிக்குவார் :-)
ஏற்கெனவே பதிவில் சொன்னாப்டி,  வீட்டு வீட்டுக்கு சிகப்பு, மஞ்சள், பச்சைன்னு மூணு தொட்டி கொடுத்துருக்கு கவுன்ஸில்.

இப்ப ரெண்டு மூணு வாரத்துக்கு முன்னே குப்பைத் தொட்டி சென்சஸ் எடுக்கப்போறோமுன்னு சொல்லி, அதன்படியே செஞ்சோம்.  அதுலே ஒரு ஸ்டிக்கர் மாதிரி ஒட்டிட்டுப் போயிருக்காங்க.

இனிமேல் அது இருந்தால்தான் குப்பையை எடுத்துக் காலி பண்ணுவாங்களாம். கணக்கெடுப்புலே  கணக்கு காமிச்சுட்டோம். அப்பாடா....
உலகமெல்லாம் இந்தக் குப்பைகளால் எவ்ளோ தொல்லைகள் பாருங்க! இதை சரிவர நிர்வாகம் செய்ய  எல்லா நாடுகளும் என்னென்னவோ செஞ்சுதான் பார்க்குது.....

குப்பைகொட்டாம வாழவே முடியாதுல்லே?




4 comments:

said...

very nice. Thank you for sharing with us.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

நல்ல தகவல்கள்..

இங்க இது தான் ரொம்ப பெரிய பிரச்சனை...மக்கள் நினைத்த இடத்தில் எல்லாம் கொட்டி...ம்ம்..அரசு நிர்வாகமும் ஒன்னும் சரியா கண்டுக்காம...எப்படியோ போகுது...

said...

உலக சுற்றுச் சூழல் தினத்தில் நல்ல பதிவு, குப்பைகளை உரமாக்கினால் நல்லது தான்.
இங்க்கேயும் வீட்டுக்கு இரண்டு கூடை கொடுத்து இருக்கிறார்கள். மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்து போடச் சொல்லி.