Wednesday, November 27, 2013

ஊருக்கெல்லாம் ஒன்னே ஒன்னு!

நம்ம நம்பள்கியின் பின்னூட்டம் பார்த்ததும்  நம்மூர் ஆஸ்பத்திரியைப் பற்றி(யும்) கொஞ்சம் விஸ்தரிக்கலாமேன்னுதான் தோணுது. 1850 வருசம். இங்கிலாந்தில் இருந்து நாலு கப்பல்களில் மக்கள்ஸ் புது நாட்டுக்குப் புலம்பெயர்ந்து வர்றாங்க. நாலு கப்பலுக்கும் சேர்த்து மொத்த பயணிகள் எண்ணிக்கை 753.

இங்கே லேண்ட் ஆஃபீஸில் பதிவு செஞ்சுக்கறாங்க. வரப்போகும் நகரத்தில் கால் ஏக்கரும், நகருக்கு வெளியில் விவசாயம்/பண்ணைகளுக்கு 20 ஏக்கர் நிலமும் ஒவ்வொருத்தருக்கும் அலாட் ஆகுது. நகர வடிவமைப்பு உருவாக்கி   நட்டநடுவில் ஒரு தேவாலயமும் அதைச் சுற்றி  நாலு பக்கமும் அவ்வஞ்சு தெருக்களும் இதையெல்லாம் சுத்தி நாலு பக்கமும் பார்டர் போட்டது போல் மரங்கள் வரிசையாக நட்ட அவென்யூகளுமா இருக்கணுமுன்னு முடிவாச்சு.   அவென்யூக்களுக்கு உள்புறம்தான் நகரம். இதுக்கு ஒரு ஆயிரம் ஏக்கர் ஒதுக்கினாங்க.   ஆளில்லாத காலியிடத்துலே   எல்லாமே  நம்ம இடம்தான்.  ஆத்துலே போறதை அள்ளிக் குடிக்கிற மாதிரி.........   யாரைக் கேக்கணும்?  நகருக்குள் நாலு சதுக்கங்கள் வேற அங்கொன்னு இங்கொன்னுன்னு. இதுலே தேவாலயத்துக்கு  மேற்கே  அஞ்சு தெருதாண்டி வரும் அவென்யூவுக்கு  வெளியிலே ஒரு பெரிய தோட்டம் திட்டத்தில் இருக்கு. அதுக்கு ஒரு எழுபத்தினாலு ஏக்கர்!

தென்கோடிக்குப்போக சாலை போட்டப்ப இந்த  தோட்டத்தின் குறுக்காலே  அதைப் போடும்படி ஆச்சு.இல்லைன்னா மேற்குப் பகுதி கடக்க சுத்த வேண்டியதாப் போயிரும் பாருங்க.  நார்த் ஹேக்ளி பார்க், சௌத்  ஹேக்ளி பார்க்ன்னு  ரெண்டாப் பிரிஞ்சதுஅப்போதான்.


மக்கள்ஸ் வீடுகட்டி, பண்ணைகள் வச்சு நிம்மதியான வாழ்க்கையை ஆரம்பிச்சதும் நோய்நொடிகள் வர ஆரம்பிச்சது. அதுவும் குளிர்காலங்களில் அதிகம். ஊருக்கு ஒரு மருத்துவ மனை வேணும் என்ற நினைப்பில்  1861 வது ஆண்டு திட்டம்போட்டு, 1862இல் புதுசா மருத்துவமனைக்  கட்டிடங்கள் ரெண்டு  பெரிய Barn மாதிரி  ரெண்டடுக்கு வந்துச்சு. செலவு  £1,500. புது சாலை போட்டாங்க பாருங்க  அந்தஓரத்தில்.  அவ்ளோதான், 'அது என்னமா தோட்டத்தில் கட்டிடம் கட்டப்போச்சு'ன்னு மக்கள்ஸ் கொஞ்சம்பேர்  "Hands off Hagley" குமுறிட்டாங்க.  Provincial  Government  ஆட்சி செய்யும் காலக்கட்டம்.

அப்ப மிஞ்சிப்போனா நகரின் மக்கள்தொகை ஒரு பதினைஞ்சாயிரம் இருக்கலாம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புன்னு  கொஞ்சநாளில்  இதை எடுத்துருவோமுன்னு  சொல்லி  இந்தா அந்தான்னு 1917 இல் தான்  அதை  இடிச்சாங்க. அதுக்குள்ளே  கொழும்புத் தெருவில்  பெண்களுக்கான பேறுகால மருத்துவமனை  ஒன்னு தனியாக் கட்டினாங்க.  ஹேக்ளியை ஒட்டுன மாதிரி  புது மருத்துவமனை ஒன்னும்  உருவாச்சு.


அப்போ நர்ஸ்களின் சீருடைகள், ஆஸ்பத்திரி அறைகள்  , மருத்துவப் பயன்பாட்டுக் கருவிகள் எல்லாம் எப்படி இருந்துச்சுன்னு தெரிஞ்சுக்கும் விதமா  இப்போதைய ஃபோயரில்  ஒரு பொம்மைக்கொலு இருக்கு.

ஆஸ்பத்திரிக்கு முன்னால் ஒரு அரைக் கிலோமீட்டரில்  அதே ஹேக்ளி பார்க்கிலொரு ஹெலிபேட் அமைப்பு இருக்கு.  மலை ஏற்றம், காடுகளுக்குள்ளே போய்  சுத்தி வர்றது போன்ற செயல்களால்  ஆபத்தில் மாட்டிக்கிட்டவங்களை  மருத்துவமனைக்குச் சீக்கிரமாக் கொண்டுவர  ஹெலிக்காப்டர் தேவையாத்தானே இருக்கு.

இப்போது இருக்கும் 550 படுக்கை வசதி போதலையேன்னு  நானூறு மில்லியன் செலவில்  புதுக் கட்டிடம் 450 படுக்கை வசதிகளோடு கட்டஒரு திட்டம் இருக்கு. மொட்டை மாடியில் ஹெலிபேட் வசதிகளோடு  வருதாம்.  2009 வது ஆண்டு ஆரம்பிச்சு  அடுத்த வருசம் முடியவேண்டியது. நிலநடுக்கம் காரணம் வேலையில் கொஞ்சம் தொய்வு. நகரை மீண்டும் நிர்மாணிக்கும் வேலையும் சேர்ந்துருச்சு பாருங்க.

இங்கே  தனியார் மருத்துவமனைகள் கிடையாது.  இப்போ ஒரு இருபது வருசமாகத்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ்  கம்பெனி ஒரு  ஹாஸ்பிட்டல் கட்டி இருக்கு. இங்கே  ஏற்கெனவே முடிவு செய்த அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடக்கும். இந்தக் கம்பெனியில்  அங்கத்தினராக உள்ளவர்களுக்கு மட்டும்  இந்த ஆர்கனைஸ்ட் ஸர்ஜரி. பொது மருத்துவமனை டாக்டர்கள் தான்  இங்கேயும்  வந்து அறுவை சிகிச்சை செய்வார்கள்.

மத்தபடி கேண்டர்பரி ஹெல்த் போர்டு நடத்தும் மருத்துவமனைகள் தான் ஊருக்கே!. இதுலே அஞ்சு மருத்துவமனைகள் அடங்கும். இப்போ  நாம்  பார்க்கும் பொது மருத்துவமனை,  ரெண்டாவதாக முதியோர்களுக்கான  சிறப்பு மருத்துவமனை,  மூணாவதாக, ஸர்ஜரி நடந்தவுடன்  ஆஃப்டர் கேர் என்ற வகையிலும்,  உடல்நலக்குறைவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு, கஷ்டமில்லாமல்  தங்கள் அன்றாட வேலைகளைச் செய்து கொள்ள ஆக்குபேஷனல் தெரபி  கொடுப்பது, இடுப்பு, முழங்கால்  ரீப்ளேஸ்மெண்ட் செஞ்சுக்கிட்டவங்களுக்கு  அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப பயிற்சின்னு சேவைகள். ஒவ்வொரு ஆஸ்பத்திரியா மாறி,இப்போ இங்கே தான் நம்ம தோழி வேலை செய்யறாங்க. இந்தக் கட்டிடமும் நிலநடுக்கத்தில் ஆப்டுக்கிட்டது.  பாதிக்கப்பட்ட பகுதிகளை இடிச்சுட்டு  நானூறு படுக்கை வசதிகளுடன் தனித்தனி  அறைகளும், அட்டாச்ட் பாத்ரூமோடும் கட்டஆரம்பிச்சு இருக்காங்க.

நாலாவது  மருத்துவமனை  மனநலம் குறைந்தவர்களுக்கு.  பயங்கர செக்யூரிட்டி உள்ள இடம்.  இந்த ரெண்டாவது, மூன்றாவது நாலாவது  மருத்துமனைகள் நகரின் வெவ்வேறு பகுதிகளில் அமைச்சுருக்காங்க.

அஞ்சாவது  மட்டும் பொது மருத்துவமனையின் பக்கத்துலேயே புதுக் கட்டிடம் கட்டிக்கிட்டு வந்துருக்கு பெண்களுக்கானது. நம்ம பொது மருத்துமனை அஞ்சு நட்சத்திர ஹொட்டேல் போல என்றால் இந்த  பெண்கள் பேறுகால மருத்துவமனை ஸெவன் ஸ்டார் ஸ்பெஷல்!  பளபளன்னு  ஜொலிக்குது. இங்கே பேறுகாலத்துக்கு  முற்றிலும்  இலவசம்தான்.  தனித்தனி அறைகளும் அட்டாச்ட் பாத்ரூமுமாய்  சூப்பர் போங்க.

எங்க ஜில்லா முழுசுக்குமான  சுத்துவர பதினெட்டு பட்டிக்குமான  மருத்துவ வசதிகள் இந்த ஹெல்த் போர்டால் கொடுக்கப்படுது. அஞ்சரை லட்சம் மக்கள் பயனடைவர்.  இதுலே எங்க நகர மக்கள் தொகை மூணரை லட்சம் முழுசுக்கும்  பொதுமருத்துவமனையே கதி. ஆனா.... சும்மா சொல்லக்கூடாது......   அருமையான கேஃபே, புக்‌ஷாப், ஸலூன், போஸ்ட் ஆஃபீஸ், பேங்க், கிஃப்ட் ஷாப், ஃபார்மஸின்னு தரைத்தளத்தில் வச்சுருக்காங்க. ப்ளவர் பொக்கே கடையும் உண்டு. வார்டுகளில் ஒரு அறையில் இருக்கும் ஃப்ளவர் வாஸை நாம் பயன்படுத்திக்கலாம். ஒரு சில வார்டுகளில்  மட்டும் பூக்களுக்கு அனுமதி இல்லை.

ஒரு Chapel  தரைதளத்தில் உண்டு. நல்ல இருக்கைகள்போட்டு வச்சுருக்காங்க. ஆல்டர்  மாதிரி ஒரு மேஜை. அதில் பூக்கள் மட்டும். யார் யாருக்கு என்ன சாமியோ அதை மனதில் நினைச்சு சாமி கும்பிட்டுக்கலாம்.

ஒரு நோயாளி மருத்துவமனையில் தங்கும்போது அவருக்கான ஒரு நாள் செலவு 700 டாலர்கள். மக்களின் நலத்துக்கு அரசே பொறுப்பு என்பதால் நாம் பணம் ஒன்னும் கட்டவேண்டியதில்லை. மிகப்பெரிய செல்வந்தரோ, இல்லை ஒன்றுமில்லாத (??!!) ஏழையோ என்ற வித்தியாசம் பார்ப்பதில்லை.  அனைவருக்கும் ஒரேமாதிரி மருத்துவ சேவை. சமத்துவம்!

சகல சிகிச்சைகளும் அறுவை, எம் ஆர் ஐ உட்பட அனைத்தும் இலவசமே. ஆனால் இந்த  வசதிகள் எல்லாம் சும்மா வரலை. மக்கள் வரிப்பணம் சரியான முறையில் செலவழிக்கப்படுது என்பதே உண்மை. இங்கே வரிகள் அதிகம்தான்.  பெரிய உத்தியோகம் என்றால் சம்பளத்தில் பாதி வரிகள். 35 % வருமானவரி, அப்புறம் நாம் வாங்கும்சாமான்களுக்கு 15% சேவை வரி. பத்து  பைசா முட்டாயாக இருந்தாலும் அதுலே வரி இன்க்ளூடட்:(

என்னதான் குறைஞ்ச சம்பளமென்றாலுமே  அதற்கேற்ற வரிகள்  கட்ட வேணும்.  யாரும் வரி கொடுக்காமல்  ஏமாற்ற முடியாது.  வரிகள் பிடித்தம் போகத்தான் சம்பளமே கைக்கு வரும்.  நாம் தப்பித்தவறி கொஞ்சம் காசு சேர்த்து பேங்கில் போட்டாலும் அதில் வரும் வட்டிப்பணத்தில் 20% வரியா எடுத்துருவாங்க. இவ்ளோ ஏன்.... அரசு  கொடுக்கும் வெல்ஃபேர்  பெனிஃபெட்டில் கூட வரியைப் பிடிச்சுக்குவாங்க. அவன் (அரசு)கொடுக்கும் காசுக்கு வரிபோட்டுஅதையும் அவனே கட்டிருவான்:-)))))

நம்மூர்  ஆஸ்பத்திரி எமெர்ஜன்ஸி  பகுதி, அஸ்ட்ராலாசியாவிலேயே மிகப் பெரியது. இங்கேயே 55 படுக்கை வசதிகள் உண்டு. பெரும்பாலும் நோயாளிகளை எட்டுமணி நேரத்தில் இங்கிருந்து அனுப்பிருவாங்க. ஆபத்தில் இல்லாதவர்களை வீட்டுக்கும் மற்றவர்களை  வேறு வார்டுகளுக்கும் அனுப்புவதுதான்.  24 மணி நேரமும் பயங்கரபிஸியான இடம் இது. வீக் எண்டுகள் என்றால் சொல்லவே வேணாம்......  ரக்பி விளையாடி முகத்தை ஒடைச்சுக்கிட்டு வர்றவங்கதான் அதிகம். நாட்டின் மதம் ஸ்போர்ட்ஸ் என்றால் அதுக்கேத்த  மதக்கலவரம், கேஷுவல்டி  இருக்காதா?





25 comments:

said...

ஒரு நோயாளி மருத்துவமனையில் தங்கும்போது அவருக்கான ஒரு நாள் செலவு 700 டாலர்கள். மக்களின் நலத்துக்கு அரசே பொறுப்பு என்பதால் நாம் பணம் ஒன்னும் கட்டவேண்டியதில்லை. மிகப்பெரிய செல்வந்தரோ, இல்லை ஒன்றுமில்லாத (??!!) ஏழையோ என்ற வித்தியாசம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் ஒரேமாதிரி மருத்துவ சேவை. சமத்துவம்!//


ஏங்கவைக்கும் தகவல்
படங்களுடன் பதிவு நேரடியாக
மருத்துவமனையைச் சுற்றிப்பார்க்கிற
மன நிலையைத் தந்தது
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

said...

கோபாலு சார் எப்படி இருக்காரு ?

நல்லா இருப்பார் என்று நம்புகிறேன்.

சில நாளைக்கு பிளாண்ட் டயட் அதாவது மோர் தயிர் சாதம் கொடுங்க.

நான் வெஜ் வேண்டாம்.

அடுத்த மாசம் திரும்பவும் ஒரு bile profile எடுத்து செக் பண்ணிக்க சொல்லுங்க.


விஷ் யூ போத் ஆல் த பெஸ்ட் ஆப் ஹெல்த்

சுப்பு தாத்தா.

said...

நீங்கள் இதைப்பற்றி எழுதவேண்டும் என்று தான் நான் அப்படி பின்னோட்டம் போட்டேன்.

நம் மக்கள் உங்கள் பதிவுகளை படித்தால் அவர்கள் வாழ்க்கையில் எதை மிஸ் (miss) செய்கிறார்கள் என்று புரிந்துகொள்வார்கள்.

நான் கேப்பது நம் மக்களுக்கு நல்ல குடிநீர், கழிப்பிடம், இலவச கல்வி, இலவச (உருப்படியான) மருத்துவம்.

இது தான் நான் கேட்கும் வல்லரசு! ராக்கெட் விடுவது இல்லை. அதை சொன்னால் நம் மக்களுக்கு கோபம். எதோ எனக்கு பொறாமை என்று நினைக்கிரார்கள்.

நம் அரசு மருவம்னையில் நம் மக்கள் நம் நோயாளிகளிடமே லஞ்சம்!

said...

ம்ஹீம்ம்ம்... வேறென்ன...? பெருமூச்சு தான்...!

said...

எழுத விட்டுப்போனவைகளை பதிவின் கடைசியாக சேர்த்த்ருக்கேன்.

வரிகளைப்பற்றி எழுதலைன்னு கோபாலுக்கு ஆதங்கம்.

அங்கே சேர்த்த இரண்டு பாராக்கள் இவையே.

சகல சிகிச்சைகளும் அறுவை, எம் ஆர் ஐ உட்பட அனைத்தும் இலவசமே. ஆனால் இந்த வசதிகள் எல்லாம் சும்மா வரலை. மக்கள் வரிப்பணம் சரியான முறையில் செலவழிக்கப்படுது என்பதே உண்மை. இங்கே வரிகள் அதிகம்தான். பெரிய உத்தியோகம் என்றால் சம்பளத்தில் பாதி வரிகள். 35 % வருமானவரி, அப்புறம் நாம் வாங்கும்சாமான்களுக்கு 15% சேவை வரி. பத்து பைசா முட்டாயாக இருந்தாலும் அதுலே வரி இன்க்ளூடட்:(


என்னதான் குறைஞ்ச சம்பளமென்றாலுமே அதற்கேற்ற வரிகள் கட்ட வேணும். யாரும் வரி கொடுக்காமல் ஏமாற்ற முடியாது. வரிகள் பிடித்தம் போகத்தான் சம்பளமே கைக்கு வரும். நாம் தப்பித்தவறி கொஞ்சம் காசு சேர்த்து பேங்கில் போட்டாலும் அதில் வரும் வட்டிப்பணத்தில் 20% வரியா எடுத்துருவாங்க. இவ்ளோ ஏன்.... அரசு கொடுக்கும் வெல்ஃபேர் பெனிஃபெட்டில் கூட வரியைப் பிடிச்சுக்குவாங்க. அவன் (அரசு)கொடுக்கும் காசுக்கு வரிபோட்டுஅதையும் அவனே கட்டிருவான்:-)))))

said...

வாங்க ரமணி.

அதிகபட்ச ஊழலைக் கண்ட நமக்கு, இங்கே பல சமாச்சாரங்கள் வியப்பையே தரும்.

சாலைப் பராமரிப்புகளை முடிந்தவரையில் போக்குவரத்து அதிகம் இல்லாத நேரங்களில் மட்டுமே செய்கிறார்கள்.

முதல்நாள் மாலை நாம் பார்த்த சாலை மறுநாள் அதிகாலையில் பளிச்ன்னு புத்தம் புதுசா ஜொலிக்கும்.

அதே போல் சாலைகளில் எதற்காகவாவது தோண்டினார்கள் என்றால் உடனே அதை முன்போலவே சரி செய்து தோண்டிய அடையாளமே தெரியாமல் செய்துவிடுவார்கள்.

நீண்ட நாள் நடக்கும் வேலை என்றால் அதைச் சுற்றி நல்ல கம்பி ஃபென்ஸ்போட்டு ரிஃப்ளெக்டர்களை சுற்றிவர வச்சு இரவோ பகலோ நல்ல எச்சரிக்கை அளிக்கும் விதம் செய்வார்கள். சாலையில் அந்த இடத்துக்கு 100 மீட்டர் முன்னால் இது போல் தோண்டிப்போட்டுருக்கு. கவனமாப்போங்க என்ற எச்சரிக்கையும் இருக்கும்.

ஆழ்குழாய் ஆபத்தெல்லாம் இல்லவே இல்லை.

சாலையில் நடக்கப்போகும் முக்கிய பராமரிப்புகள் என்று முதலென்று வரை நடக்கும் என்று ரெண்டு வாரங்களுக்கு முன்னமே அந்தச் சாலையில் அறிவிப்பாக இருக்கும்.

சரியா சொன்ன நாளில் வேலைமுடிஞ்சுரும்.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

கோபால் நலமே! வேலைக்குப்போக ஆரம்பிச்சுட்டார். ஆனால் வெளியூர் வேலைகளைஒரு சிலமாதங்களுக்கு வேணாமுன்னு ஒதுக்கி வச்சுருக்கார்.

உறை/ரைப்பு அறவே இல்லாமல்தான் சமைக்கிறேன். என் வகை சாப்பாட்டுக்கு இப்ப அவரும் வந்துட்டார். பருப்பு சாதம்,தயிர் சாதம், வேக வைத்த காய்கறிகள் இப்படி.

நல்லதாப்போச்சு இப்போ வீட்டிலே ஒரே சமையல். எனக்கு வேலை மிச்சம்-))))

நான்வெஜ் எல்லாம் இல்லையாக்கும்,கேட்டோ:-)

அன்பான விசாரிப்புக்கும், அவருக்காக பண்ணின பிரார்த்தனைகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

said...

வாங்க நம்பள்கி.

என்னுடைய ஆதங்கமும் இதுதான். சுத்தமா இருக்க முடியலை, ஆனால் ஆளாளுக்கு செல்பேசியாம். அதுலே மக்கள்ஸ் தங்களையறியாமலேயே பணத்தைத்தொலைச்சுக்கிட்டு இருக்காங்க:(

தப்பித்தவறி அரசு கட்டிக் கொடுக்கும் கழிவிடங்களின் நிலையைப் பார்த்தாலே நமக்கு வயித்தைக் கலக்கிரும்.

சுத்தம் சுகாதாரம் முக்கியம் என்பதில் அரசுக்கும் சரி மக்களுக்கும் சரி கவலையே இல்லை.

கல்வி, மருத்துவம் எல்லாம் தனியார்வசம் போய் காசு பண்ணத் தெரிஞ்சுக்கிட்டாங்க.

பொதுவா கல்வியின் தரம்சொல்லவே வேணாம்......... மனப்பாடம் செஞ்சு வாந்தியெடுத்தால் போதும்:(

அதிகமான ஞாபகசக்தி இருக்கும் பிள்ளை கல்வி வாழ்க்கையில் ஜெயிச்சுருமாம்.அதுக்குத்தான் வல்லாரைக்கீரை மாத்திரை விக்கறாங்களே!

எதுலே பார்த்தாலும் ஊழல்..... மனம் வெறுத்துப் போச்சு:(

உண்மை எப்பவும் கசப்புதானே?

பொறாமைக்காரர் என்று சொன்னால் சொல்லிட்டுப்போகட்டும்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நம் வரிப்பணம் எல்லாம் எப்படிப் பாழாகுது இந்தியாவில் என்று நினைச்சால் பெருமூச்சு மட்டுமா வரும்? மாரடைப்பு கேரண்டீ:(

said...

நல்லா ஆயிட்டார்னு கேட்க மனதுக்கு நிம்மதி, சந்தோஷம். கவனமாப் பார்த்துக்குங்க. உங்களுக்குச் சொல்ல வேண்டாம், இருந்தாலும் சொல்றேன்.

said...

ஆசுத்திரியைப் பார்க்கையில் ஏக்கம்தான் வருது..

said...

இங்கே இருப்பதிலேயே premier மருத்துவமனை எனச் சொல்லப்படும் மருத்துவமனையிலேயே பல பிரச்சனைகள்.......

ம்ம்ம்ம்.... என்னத்த சொல்ல!

said...

கோபால் நலமானதிற்கு வாழ்த்துக்கள்.

said...

//நாட்டின் மதம் ஸ்போர்ட்ஸ் என்றால் அதுக்கேத்த மதக்கலவரம், கேஷுவல்டி இருக்காதா?//
Super!
எல்லாம் நல்லபடி முடிந்துள்ளது. மகிழ்ச்சி

said...

"அனைவருக்கும் ஒரேமாதிரி மருத்துவ சேவை" மகிழ்ச்சி.

said...

// நம்பள்கி said... நீங்கள் இதைப்பற்றி எழுதவேண்டும் என்று தான் நான் அப்படி பின்னோட்டம் போட்டேன். நம் மக்கள் உங்கள் பதிவுகளை படித்தால் அவர்கள் வாழ்க்கையில் எதை மிஸ் (miss) செய்கிறார்கள் என்று புரிந்துகொள்வார்கள். //


ஆண்டவன் புண்ணியத்தில் கோபால் சார் நலமாக இருப்பார். அதான் நம்பள்கியின் கருத்துரைக்கு ஆஸ்பத்திரியைப் பற்றி, இவ்வளவு விரிவான தகவல்கள். நம்பள்கிக்கு நன்றி!

// சகல சிகிச்சைகளும் அறுவை, எம் ஆர் ஐ உட்பட அனைத்தும் இலவசமே. ஆனால் இந்த வசதிகள் எல்லாம் சும்மா வரலை. மக்கள் வரிப்பணம் சரியான முறையில் செலவழிக்கப்படுது என்பதே உண்மை. இங்கே வரிகள் அதிகம்தான். பெரிய உத்தியோகம் என்றால் சம்பளத்தில் பாதி வரிகள். 35 % வருமானவரி, அப்புறம் நாம் வாங்கும்சாமான்களுக்கு 15% சேவை வரி. பத்து பைசா முட்டாயாக இருந்தாலும் அதுலே வரி இன்க்ளூடட்: //

இங்கு இந்தியாவில் எல்லாமே தலை கீழ். தனது சொந்த நாட்டு மக்களையே ஏமாற்றும் அரசாங்கம், அரசியல்வாதிகள். பதிலுக்கு அரசாங்கத்தை ஏமாற்ற நினைக்கும் மக்கள்.

said...

கோபால் ஸார் சுகமாக இருப்பார் என்று நினைக்கிறேன்.
ஹூம்..........................நீண்ட பெருமூச்சு!

said...

வாங்க கீதா,

அன்புக்கு நன்றிப்பா.

இப்ப 99% குணமாகிட்டார். மற்ற 1% என்னோட பிடுங்கல்:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஆஸ்பத்ரி நல்லா இருக்குன்னு வியாதியை வரவழைச்சுக்க முடியுமோ:-))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

//ம்ம்ம்ம்.... என்னத்த சொல்ல//

இதுவே பல விஷயத்தைச் சொல்லிருது!!!!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க யோகன் தம்பி.

நகரத்துக்குள்ளே ப்ரூவரி இருந்த ஒரு இடம் நிலநடுக்கத்தால் காலியாகிருச்சு. பெரிய இடம்.ரெண்டு ஏக்கருக்கு மேல் இருக்கும் ப்ரைம் லொக்காலிட்டி.

அதை ஸ்போர்ட்ஸ் செண்ட்டரா மாத்தறாங்களாம். ஆடுவதை நிறுத்தவே மாட்டாங்க. நடராஜர் வழித்தோன்றல்களே!

said...

வாங்க மாதேவி.

மருத்துவ சேவை மட்டுமில்லைப்பா. இங்கே சட்டமும் அனைவருக்கும் ஒன்றே. யாரா இருந்தாலும் தப்பவே முடியாது.

ஸ்பீட் லிமிட் தாண்டி வேகமாப் போனாங்கன்னு பிரதமரையே கோர்ட்டுக்கு இழுத்த நாடு.


நேத்து ஒரு போலீஸ்காரருக்கு தண்டனை கிடைச்சது. எதோ கேஸில் பிடிபட்டவரை, பலான விஷயத்துக்கு சம்மதிச்சால் விட்டுடறேன்னு சொன்னாராம்.

இன்னொரு நகரச்பை மேயர் சின்னவீடு வச்சுருந்தது வெளிப்பட்டு இப்போ அவரைப் பதவியில் இருந்து இறக்கிவிட்டாச்சு.

எவருமே 'ஏய் நான் யார் தெரியுமா?'ன்னு அதட்டல் போட்டு தப்பிவிட முடியாது!

said...

வாங்க தமிழ் இளங்கோ.

//இங்கு இந்தியாவில் எல்லாமே தலை கீழ். தனது சொந்த நாட்டு மக்களையே ஏமாற்றும் அரசாங்கம், அரசியல்வாதிகள். பதிலுக்கு அரசாங்கத்தை ஏமாற்ற நினைக்கும் மக்கள்.//

ரொம்பச்சரி. பெரிய சோகம்:(

said...

வாங்க ரஞ்ஜனி.

உடல்நிலை சரியாகிருச்சுங்க. பெருமாள் காப்பாத்திட்டார்!

பிரார்த்தனைகளுக்கு நன்றி.