Monday, November 25, 2013

கிவ் ஹிம் அ ஹக். ........... ஆல் ஈஸ் வெல்!

பயந்து போன நான் அவசர சிகிச்சைப் பகுதியில்  நடுவில் தீவு போலக் கவுண்ட்டர்கள் போட்டுக்கிட்டுக் கணினியும் கையுமா இருந்த பணியாளர்களிடம் கேட்டேன். நமக்குத்தான் ஸர்நேம் தகராறு இருக்கே. அதனால் NHI  நம்பரைச் சொல்லிக்கேட்டேன்.  வேற ஒரு அறையில் இருக்காருன்னு சொல்லி அடையாளம் சொன்னாங்க.  ஆஸ்பத்திரியில் நம்ம  நம்பரைச் சொன்னதும் முழு ஜாதகமும் கணினியில் வந்துருது.

சொன்ன இடத்துக்கு ஓடினேன். பெரியதொரு  ஹாலில் திரைச்சீலை தடுப்புகள் போட்டு அறைகளாகப் பிரிச்சுருக்காங்க. சுற்றுச்சுவர்கள் முழுசும் ஏராளமான ஒயர்களோடு  பலவித உபகரணங்கள்.  சட்னு பார்க்க சினிமாக்களில் காண்பிக்கும் ஆபரேஷன் தியேட்டர் போல இருக்கு. ஆக்ஸிஜன் சிலிண்டர்ன்னு ஒன்னு தனியா இல்லாம, விமானங்களில்  நம்ம தலைக்கு மேலே ஆக்ஸிஜன் மாஸ்க் இருக்குன்னு  திரையிலோ அல்லது  எதாவது ஒரு விமானப் பணிப்பெண்ணோ காமிப்பாங்க பாருங்க அதைப்போல!

மூச்சுத் திணறினால் சட்னு  இழுத்து  மாட்டிக்கலாம். எனக்கே அங்கே மூச்சுத் திணறுவதுபோலத்தான் இருந்துச்சு. எல்லாம் பயம்தான்.....  அதுக்குள்ளே மகள் வந்து வெளியில்  எமர்ஜென்ஸி வரவேற்பறையில் இருப்பதாக டெக்ஸ்ட் அனுப்பினாள்.நான் வெளியே போய் அவளைக் கூட்டிக்கிட்டு திரும்ப கோபாலின் அறைக்கு வந்தேன். மகளைப் பார்த்ததும்  கோபாலின் கண்ணில் கண்ணீர் வழிய ஆரம்பிச்சது.  'ஒன்னும் ஆகாது தைரியமா  இருங்க'ன்னு நானும் கண்ணில் நீர் வழியச் சொன்னேன்.  சட்டென்று டிஷ்யூக்களை உருவிக் கையில் திணிக்கிறாள் மகள். தாகமா இருக்குன்றார் கோபால்.   கால் கப் குடிதண்ணீர் கொண்டுவந்து கொடுத்தேன். கைக்கெட்டும் தூரத்தில் இருக்கே!

எக்ஸ்ரே பிரிவுக்குக் கொண்டு போனாங்களாம்.  டாக்டர்கள் ரெண்டு மூணு பேராக வருவதும்  தங்களுக்குள் மீட்டிங் போடுவதுமாக நேரம் போகுது. கொஞ்ச நேரத்தில் படுக்கையை உருட்டிக்கிட்டே  ஸ்கேன் செய்யும் பிரிவுக்குக்கொண்டு போயிட்டாங்க.  கூட வர்றதா இருந்தால் வாங்க. இல்லைன்னா இங்கியே வெயிட் செய்யுங்கன்னு சொன்னாங்க. இப்பத் திரும்பி வந்துருவோமென்றதால் நானும்  மகளுமாக  'அப்பாவின் அட்டகாசங்களைப் பற்றிப் பேசி' எங்கள் கவலையை மறக்கப் பார்த்தோம்.

'எப்படி அதுக்குள்ளே வந்தே? திரும்பி ஆஃபீஸ் போகலையா'ன்னு மகளிடம் கேட்டதுக்கு, இது ஃபேமிலி எமர்ஜென்ஸி இல்லையா....... அதான் திரும்ப வரவேண்டியதில்லைன்னு  ஹெச் ஓ டி சொல்லிட்டாங்கன்னாள். இவள் இப்போது போன மாசம் முதல் புது வேலையில் சேர்ந்திருக்காள்.  முதல் மூன்று மாசம் ப்ரோபேஷனரி பீரியட்.

ஒரு முக்கால்மணி நேரத்தில் எல்லோரும் திரும்பினாங்க. பித்தப்பையில் குழறுபடி!  இயல்புக்கு மாறா பெருசா வீங்கி இருக்கு.  பித்தப்பையில்  உருவாகும் கல் ஒன்னு பெருசா இருப்பதோடு பித்தப்பையின் வாசலுக்கு வந்து  அடைச்சு நின்னுருக்கு. உடனே  அறுவை சிகிச்சை செய்தே ஆகணும்னு சொன்னாங்க.

கோபாலைத் திருப்பிக் கொண்டுவந்தவுடன், தாகமா இருக்குன்னார். கால் கப் தண்ணீர் கொடுக்கும்போதே, இனி தண்ணீர்  குடிக்க வேண்டாமுன்னு சொல்லி  ட்ரிப் ஏத்திட்டு போனாங்க.  அதுலே இன்னொரு சின்ன பாக்கெட்டையும் இணைச்சு, அது  சொட்டி முடிஞ்சதும் கூப்பிடுங்கன்னு மகளிடம் ஒருபொறுப்பும் கொடுத்தாங்க. திரை அறைக்குள் நாங்க மூணு பேர். சுற்றிலும்  மானிட்டர்கள்   என்னென்னவோ காமிச்சுக்கிட்டு இருக்கு.

அறுவை  சிகிச்சை முறைகளை விளக்கி  எதாவது  Gகட்பட் (ஹிந்தி)  ஆச்சுன்னா நாங்க ஜவாப்தாரி இல்லைன்ற வழக்கமான படிவத்தில் கையெழுத்தெல்லாம் ஆச்சு. மகள் பார்க்கிங் மீட்டரில் காசு போடப் போனாள். எந்தொரு சல்யம்!  அதிகபட்சமா ரெண்டு மணி நேரம்தான் வண்டி நிறுத்தமுடியும் என்பது அபத்தமா இருந்துச்சு. இருக்கற கஷ்டத்துலே ஒவ்வொரு ரெண்டு மணியையும் ஞாபகம் வச்சுக்க முடியுமா?  அட்லீஸ்ட் லாங் டைம் பார்க்கிங்  மீட்டர் வைக்கப்டாதா? என்னவோ போங்க.

மகளை அனுப்பிட்டு இவர் பக்கம் திரும்பினால்  உதடுகள் துடிக்க நடுங்கிக்கிட்டு இருக்கார். ரொம்பக் குளிருதுன்னதும்,  நர்ஸப்பனிடம் இன்னொரு கம்பளி வாங்கி வரலாமுன்னு 'தீவு'க்குப் போனால்....   என்னன்னு கேட்டவரிடம், குளிரால்  உடம்பு  நடுங்குது. இன்னொரு ப்ளாங்கெட் என்று சொல்லி வாய் மூடுமுன் பாய்ஞ்சு வந்த நர்ஸப்பர்  ஏற்கெனவே போத்தி இருந்த போர்வையை சட்னு உருவி எடுத்துட்டார்.

ஜன்னி வந்தது போல் உடம்பு உதறுச்சுன்னு  கேள்விப்பட்டதை நேரில் பார்க்கிறேன். பயப்படாதீங்க. டெம்ப்ரேச்சர் இறங்கும் சமயம் இப்படித்தான் இருக்கும். கொஞ்ச நேரத்தில் சரியாகும் என்று சொல்றார். ஆஸ்பத்திரிக்காரர்களுக்கு தினம்  ஆயிரம் கேஸ். எல்லாம் பார்த்துப் பழக்கப்பட்டவங்க. நாம் அப்படியா?  கண்கொண்டு பார்க்க முடியலை. கோராமையா இருக்கு.  பாதங்களைப் பரபரன்னு தேய்ச்சு சூடு பண்ணிக்கிட்டு  இருக்கேன். பெருமாளே! ஏண்டா  இப்படிப் படுத்தறே.....   மனதுக்குள் ஓலம்:(

ஒன் பாத்ரூம் போகணுமுன்னு  'நோயாளி'  சொன்னதும்  கூப்பிடு மணியை அழுத்த 'மேல் நர்ஸ்' வந்து  ஆவன செய்ய தயாரானார். ஆனால் நம்மாளு, நான் நடந்து பாத்ரூம்வரை போறேனேன்னதும் ஸலைன் பையை இடது கையில் தூக்கிப்பிடிச்சுக்கிட்டு  போகலாம் என்றார்.  ஸ்டேண்ட் இல்லையான்னு கேட்டேன். ஏகப்பட்ட ஆக்ஸிடெண்ட்  ஸ்டேண்டால் ஆகிப்போச்சுன்னு   அவைகளை அப்புறப்படுத்திட்டாங்களாம். திரும்ப அறைக்கு வந்தப்ப,  ஸலைன் பைக்குள் ரத்தம் கலந்துருந்துச்சு. எல்லாம் பேக் ஃப்ளோதான்:(

உறக்கமும் விழிப்புமா இருக்கார் கோபால். மற்ற பிரிவுகளைச் சேர்ந்த டாக்டர்கள்,  ஐ யூஸிப் பிரிவு, மயக்கமருந்து கொடுக்கும் மருத்துவர்,  அறுவை சிகிச்சை நிபுணர் என்று  சின்னச் சின்னக் குழுவா வாறதும் போறதுமா இருந்தாங்க
' எவ்ளோ நேரமாச்சு ஒன்னுமே குடிக்கலையே'ன்னு பரிவாப்பேசி காஃபி கொண்டு வந்து எங்களுக்குக் கொடுத்துட்டு போனாங்க ஒரு தன்னார்வலர்(ஸெயிண்ட் ஜான்ஸ்)

தூக்கிப்போட்டுக்கிட்டு இருந்த உடம்பு மெதுவா   சமநிலைக்கு வந்து கண்களை மூடி உறங்க(?) ஆரம்பிச்சார். நான்  அறையை விட்டு வெளியே   காரிடோருக்கு வந்து  தோழிக்கு  ஃபோன் செஞ்சேன். விவரம் சொன்னதும்  அங்கே  உனக்கு சாப்பாடு கொண்டு வர்றதுக்குத்தான் அவசரமா சமைச்சுக்கிட்டு இருக்கேன். பத்துப் பதினைஞ்சு நிமிசத்துலே வரேன்னாங்க.

அதேபோல் வந்தாங்க ரசம் சாதத்துடன்.சோறு இறங்கும் நிலையிலா நான் இருக்கேன்? மகளும் திரும்பி வந்துருந்தாள்.  இன்னொரு டாக்டர் குழு வந்தது.   கொஞ்சம்  ஆபத்தான நிலைதான்.  முதலில் கீ ஹோல் (Laparoscopy)  முறையில்  முயற்சி செய்வோம். பித்தப்பை  அழுத்தம் தாங்காது வெடிச்சுட்டால்   ரொம்பக் கஷ்டம்.  சரிவருமான்னு பார்த்துட்டு முடியலைன்னா அந்தப்பகுதியில்  அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டி இருக்கும் என்று விளக்கினாங்க.  தோழியைப் பரிச்சயமுள்ளவர்களா  இருந்தாங்க, இவுங்கெல்லாம். (தோழி மருத்துவர்)
இன்ஃபெக்‌ஷன் கூடுதலாகிப்போனதால்  சிறுநீரகம், நுரையீரல் எல்லாம் பழுதாகி இருக்காம்:(

ஏழே முக்கால் மணியாகி இருந்துச்சு. தியேட்டருக்குக் கொண்டு போக ஆள் வந்தாச்சு. ' கமான்.   கிவ் ஹிம் அ ஹக் அன்ட்  ஸே குட்பை'  என்றார் நர்ஸப்பர்.  பழைய பஞ்சாங்கத்துக்கு  இதெல்லாம் டூ மச் இல்லையோ?   கையை ஆட்டி விடை கொடுத்தோம்.

பத்தரை மணிக்கு ஐ யூ ஸிக்கு கொண்டு வந்துருவோம். அங்கே வந்து பார்க்கலாமென்றார். அதுவரை  நோயாளியின் உறவினர்களுக்கான அறை  ஒன்று தியேட்டர் பக்கம் இருக்கு. அங்கே  காத்திருக்கும் நேரத்தில் பயன்படுத்திக்க, காஃபி டீ  தயாரிச்சுக்கும் வசதிகள்,  டிவி, பத்திரிகைகள்  நல்லவசதியான சோஃபாசெட் எல்லாமிருக்கு.

. இன்னொரு முறை காசு போடக் கிளம்புன மகளிடம்,  நீ வீட்டுக்குப்போய் ஜூபிட்டர் & ஸூஸ் Jupitor & Zeus  (பூனைகள்) க்கு சாப்பாடு போட்டுட்டு, அப்படியே 'அம்மா' வீட்டுக்குப் போய்  நீயும் சாப்பிட்டுவிட்டு  நம்ம ராஜலக்ஷ்மிக்கும்  சாப்பாடு கொடுத்துரு.  இங்கெ நிலமை என்னன்னு அப்பப்ப  டெக்ஸ்ட் அனுப்பறேன்னு சொல்லி அவளை அனுப்பி வச்சுட்டு  உள்ளே வந்தால்...........சும்மா எதுக்கு தேவுடு காக்கணும்? வீட்டுக்கே போயிட்டு வரலாமுன்னு தோழி சொன்னாங்க.  தயங்கினேன். பத்தரைக்கு நாமெல்லாருமே வரலாம். உன்னுடைய ஆரோக்கியமும் முக்கியம். சும்மா ஏன் இங்கே அடைஞ்சு கிடப்பானேன்? நியாயம்தான்.

கிளம்பி தோழி வீட்டுக்குப்போனோம். சாப்பிட  உட்கார்ந்த போதுதான்  சோறு ஆக்கலைன்னு  தெரியுது. பதற்றத்தில்  ரைஸ் குக்கரில் அர்சி வைக்க மறந்து போயிருக்காங்க.   அரைமணியில் சோறு ரெடியானதும்  சாப்பிட்டோம்.
மகளிடமிருந்து  'எங்கே இருக்கே?' ன்னு டெக்ஸ்ட். பத்தரைக்கு  ஆஸ்பத்திரிக்கு வந்துருவேன். நீயும் கிளம்பி வான்னேன். தோழியும் அவர் கணவரும் நானுமாக் கிளம்பி நம்ம வீட்டுக்கு வந்து  ராஜலக்ஷ்மி என்ற ரஜ்ஜுவுக்கு  சாப்பாடு கொடுத்துட்டு மருத்துவமனைக்குப்போய்ச் சேர்ந்தோம்.

இரவு ஒன்பது மணிக்கு விஸிட்டிங் டைம் முடிஞ்சுரும். குழந்தைகள் வார்டுக்கும், ஐஸியூ வுக்கும்  குடும்ப நபர்களுக்கு  24 மணி நேரமும் அனுமதி உண்டு.  வழக்கமான கலகலப்பெல்லாம் ஓய்ஞ்சு, வரவேற்பு ஜிலோன்னு இருக்கு. செக்யூரிட்டி  ஆட்கள் மட்டும் இருக்காங்க.  நாம் போய் விவரம் சொன்னதும்   வார்டு நர்ஸிடம் விசாரிச்சு,  விஸிட்டர் என்ற  பேட்ஜ் நம்ம சட்டையில் ஒட்டிட்டு உள்ளே போக விடறாங்க.
அப்பதான் ஐஸியூவுக்குக்கொண்டு வந்துருக்காங்க.  வழியெங்கும் நிறைச்சு வச்சுருக்கும்  ஸ்டெரிஜெல்லைக் கையில்  பூசிக்கிட்டு உள்ளே  போகணும்.  ஏகப்பட்ட மெஷீன்களுக்கிடையில் மயக்கத்தில் இருக்கார்.  மூச்சு விட ஆக்ஸிஜன் மாஸ்க் போட்டுருக்காங்க.  இங்கே பனிரெண்டு  படுக்கைகள்தான்.  ஆனால்  ஒவ்வொரு நோயாளிக்கும்  ஒவ்வொரு நர்ஸ் என்ற வகையில் ஒன் டு ஒன். நோயாளியின் கால் பக்கம் மேஜை நாற்காலி போட்டு உக்கார்ந்துருக்காங்க.

நல்ல வேளையாக, நம்ம தோழிக்குப் பரிச்சயமான நர்ஸ்.  ப்ரைவஸி ஆக்ட் நியூஸியில் தீவிரம் என்றபடியால்  குடும்பம் இல்லாத மற்றவர்களுக்கு  நோயாளியின் நிலை, விவரம் கொடுக்க மாட்டாங்க.  ஆனால் நான் விவரம் கேட்கும்போது பக்கத்தில்  நிக்கறவங்க காதில் விழுமா இல்லையா:-)

நல்லவேளையா  கீ ஹோல் சர்ஜரிதானாம்.   பயப்படவேணாமுன்னு சொன்னாங்க. அதுக்குள்ளே மகளும் வந்து சேர்ந்தாள். அப்பாவின்  கிடப்பைப் பார்த்ததும்  முகத்திலொரு நெகிழ்ச்சி !

காலை எட்டு மணிக்கு  டாக்டர் வரும் நேரம். அவரிடம் பேசணும்  என்றதால்  மகள் காலையில் என்னை இங்கே கொண்டு வந்து விடுவதாகச் சொன்னாள்.
ஆபத்தான கட்டம்  தாண்டியாச்சு.  ஆல் ஈஸ் வெல்!

தொடரும்............






26 comments:

said...

படிக்கிற எங்களுக்கே
மனம் பதறத்தான் செய்கிறது
எப்படி சமாளித்தீர்களோ ?

said...

பெருமாள் அதான்
அந்த அனந்த பத்மநாபர் அடையாரில் இருக்காரே
அவர் காப்பாத்திட்டார்.

கவலைபடாதீர்கள்.

ஆல் இஸ் வெல் .

சுப்பு ரத்தினம்.
மீனாச்சி பாட்டி.
Today is Kala Bhairavashtami.
I am going to the temple to pray for Gopal.

said...

இதையெல்லாம் திரும்ப நினைக்க கூடாதவை.

said...

முருகா.. கோபால் சாருக்கு எல்லாம் சரியாகி விரைவில் நலமடைய அருள் குடுப்பா!

டீச்சர்... பக்பக்குன்னு பதிவைப் படிச்சேன். உங்களோட பதைபதைப்பு ஒவ்வொரு எழுத்துலையும் தெரிஞ்சதுங்குறதுதான் உண்மை.

said...

விரைவில் பூரண நலம் பெறுவீர்கள்...

said...

Take care Thulasi .

said...

I had just been to Agatheeswarar koil to worship Lord Kala Bhairava during Ashtami Evening.

All is Well.

Gopal is well .

subbu thatha.

said...

கவலை கொள்ளாதீங்க டீச்சர். எல்லாம் சரியாயிடும். நாங்களும் கோபால் சாருக்காக பிரார்த்தித்து கொள்கிறோம்...

said...

துளசி கோபால்..ரீல் உடறாங்க!

ஆம்! அவர்கள் இங்கு போட்ட படங்கள் ஒரு ஐந்து நடசத்திர ஹோட்டல் படுக்கைகள். அதைப் போட்டு விட்டு மருத்துவமனை என்க்ரிரார்கள்.

நான் படித்து முடித்து இரண்டு வருடம் தமிழ்நாட்டில் மருத்துவராக ஒரு பெரிய மருதுவமனையில் வேலை செய்துளேன.

வல்லரசு இந்தியாவில் இது மாதிரி நான் எங்கும் பார்த்ததில்லை;

ஒருவேளை..AIIMS, Delhi மட்டும் இப்படி இருக்குமோ?

said...

i pray for gopal...

said...

ஆல் இஸ் வெல்!

said...

Teacher,

We pray for you.
We can feel your emotions in your writing.

Take care.
-Ezhilarasi Pazhanivel

said...

All is well என்கிற தலைப்பைப் பார்த்ததுமே புரிந்தது எல்லாமே நலம் என்று. உங்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.
எல்லாம் வல்ல ஆண்டவன் கருணை
நம்மைக் காக்கும்.

said...

//ஸலைன் பையை இடது கையில் தூக்கிப்பிடிச்சுக்கிட்டு போகலாம் என்றார்//

ஸலைனுக்குன்னு குத்தி வெச்சிருக்கும் பட்டர்ஃப்ளையிலிருந்து ஸலைன் குழாய் இணைப்பை மட்டும் துண்டிச்சாலே போதுமே. போயிட்டு வந்து மறுபடி குழாயை இணைச்சுக்கலாமே. சொருகிய ஊசியைக்கூட எடுக்க வேண்டியதில்லை. இந்தியாவுலயே இந்த வசதி இருக்குங்கறப்ப நியூசியில் பையைத்தூக்க வேண்டியிருப்பது ஆச்சரியம்..

//மகளைப் பார்த்ததும் கோபாலின் கண்ணில் கண்ணீர் வழிய ஆரம்பிச்சது.//

இந்த அப்பாக்களே இப்படித்தான் :-))))

said...

என்னவோ போங்க, சாதாரண ஜூரம் தானேனு நினைச்சா! இப்படியா சோதனை மேல் சோதனைனு வரணும்! இந்தப் பதிவு அப்டேட்டே ஆகலையா இப்போத் தான் பார்த்தேன். படிக்கிறச்சேயே கஷ்டமா இருக்கு! :((( இந்த மாசமே சரியில்லை, போங்க!

said...

அப்பாடி இப்பத்தான் நிம்மதியாக இருக்கு.

said...

அக்கா!
எல்லாம் நல்லபடி முடிந்திருக்குமென நம்புகிறேன்.
படம் , பார்ப்பது போல் இருக்கிறது, உங்கள் எழுத்துப் பாணி.
இவ்வளவு பதட்டத்திலும் பதிவுக்கு உரியவற்றைச் சேகரித்து வைத்துள்ளீர்கள்.

said...

//ஆல் ஈஸ் வெல்!//

முழு குணமாக இறைவனை வேண்டுகிறேன்.

said...

கோபால் சார் பூரண உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.
பதற்றப்படாமல் நிலைமையை சமாளித்திருக்கிறீர்கள்.

said...

ஆல் இஸ் வெல் ஆல் இஸ் வெல்..கோபால் சார் இப்ப நலமா இருப்பதறிந்து மகிழ்ச்சி. கவனம்..துளஸி.

said...

கண்டேன் சீதையை..மாதிரி.. ஆல் இஸ் வெல் தலைப்பு.. பார்த்தவுடன் நிம்மதி. சீக்கிரமே குணமடைந்து அடுத்த பெரிய ட்ரிப் செல்லும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்..

said...

மருத்துவமனையின் ஒவ்வொரு பகுதியும் video எடுத்திருந்தாக் கூடத் துல்லியமா வருமோ என்னமோ?

ஆனா உங்க "திக்திக்" எழுத்தில், ஒரு videoவே ஓடுது டீச்சர்..

கோபால் சார், நலமே பெற்று, முன்னிலும் காளை போல் ஊர் சுற்ற..
காக்க காக்க கதிர்வேல் காக்க!
--------

//ஸலைன் பைக்குள் ரத்தம் கலந்துருந்துச்சு. எல்லாம் பேக் ஃப்ளோதான்:(//

இது எனக்குப் பழகிருச்சி டீச்சர்:)

//கோபாலின் கண்ணில் கண்ணீர் வழிய ஆரம்பிச்சது. 'ஒன்னும் ஆகாது தைரியமா இருங்க'ன்னு நானும் கண்ணில் நீர் வழியச் சொன்னேன்//

//கண்கொண்டு பார்க்க முடியலை. கோராமையா இருக்கு.
பாதங்களைப் பரபரன்னு தேய்ச்சு சூடு பண்ணிக்கிட்டு இருக்கேன். பெருமாளே! ஏண்டா இப்படிப் படுத்தறே//

நான் admit ஆன போது இந்தத் தொல்லையே இல்ல..
அநாதையா admit ஆனா, கேட்பார் இல்லையே..
யாரு-ன்னா இருந்தாத் தானே தவிப்பும் தாபமும்?:))

said...

//' கமான். கிவ் ஹிம் அ ஹக் அன்ட் ஸே குட்பை' என்றார் நர்ஸப்பர்.

பழைய பஞ்சாங்கத்துக்கு இதெல்லாம் டூ மச் இல்லையோ? கையை ஆட்டி விடை கொடுத்தோம்//

இத்தனை களேபரத்திலும் ஒங்க குறும்பு - கூடப் பொறந்ததா டீச்சர்?:)

said...

தாமத வருகைமன்னியுங்கள்.

ஆண்டவன் கருணை காத்தது.

said...

// ஆபத்தான கட்டம் தாண்டியாச்சு. ஆல் ஈஸ் வெல்! //

கோபால் சார் முழுகுணம் அடைய வேண்டும். இறைவனை வேண்டுகிறேன்.

said...

பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

உங்கள் பிரார்த்தனைகள் பலித்தன.

என்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்.