Wednesday, December 14, 2011

துணிந்தகட்டைகளுக்கு மட்டும்...........

உன் தலைமேலே கல்லு விழும். கூடவந்தா நீ திரும்பிப் போக முடியாது. கட்டிடம் இடிஞ்சு அதுலே மாட்டிக்குவே. நிலநடுக்கம் வந்தா அதுலே அப்படியே புதைஞ்சு போயிடுவே. இன்னிக்குச் செத்தா இன்னிக்கே பால். அப்புறம் 'ஐ ஆம் நாட் அவேர் ஆஃப் திஸ்' ன்னு 'இந்தியப்பிரபலம்' மாதிரி கூவிப் பிரயோசனமில்லை.

என்னடா இப்படி அறம் 'பேசி' வைக்கிறாங்களேன்னு கொஞ்சம்கூட பயமில்லாம 'நான் துணிஞ்சகட்டை'தான்னு சொன்னதும், 'சரி மேலே படிக்கிறேன் கேளு'ன்னாங்க அம்மிணி.


உனக்குப் பதினைஞ்சு வயசாயிருச்சா? இல்லேன்னா ஒரு பெரியவங்க துணையோடுதான் வரணும். அதுவும் நாலைஞ்சு பசங்களுக்கு ஒரு துணை என்ற கதை எல்லாம் இல்லை. ஒரு 'பசங்' ஒரு துணை.

பதினைஞ்சு முதல் பதினெட்டு வயசுன்னா உன் ஃபோட்டோ அடையாள அட்டையோ இல்லை பொறப்பு சான்றிதழோ கொண்டு வா.

நல்லா நடக்கத் தோதான காலணி போட்டுக்கணும். ஹவாய் செருப்பு இல்லேன்னா, ஓப்பன் ஸேண்டல், ஹைஹீலுன்னு போட்டுக்கிட்டு வந்தால் அப்படியே திருப்பி அனுப்பிருவோம். ஒரு அவசரம் ஆபத்துன்னு வந்தால் கல்லு, வாய் பொளந்த ரோடு, கண்ணாடித்துண்டுகள் மேலெல்லாம் ஓடித் தப்பிக்கவேண்டி இருக்கும்.

ஆமாம் உனக்கு இங்லீஷூ தெரியுமா? அறிக்கை, மேல்விவரம் தகவல், எச்சரிக்கை எல்லாம் இங்கிலிபீஸுலேதான் சொல்வாங்க. மொழி தெரியலைன்னா தெரிஞ்ச ஒருத்தரைக் கூடக்கூட்டியாரணும்.

நீ சக்கரநாற்காலி பார்ட்டியா? அப்டீன்னா ஒருத்தருக்குத்தான் இடமிருக்கு. ஒருத்தரை மட்டும் நாங்க பார்த்துக்குவோம்.

கண்பார்வை சரி இல்லைன்னு வழிகாட்டும் நாய் வச்சுருக்கியா? நோ ப்ராப்லம். கூட்டிக்கிட்டு வந்துரு!

கடைசியா ஒன்னு சொல்லிக்கறேன். இது முற்றிலும் இலவசம் இல்லை. 'தங்கக்காசு' கொடுக்கணும்.

இளவரசர் வில்லியம் வந்தப்பக் கூட்டிக்கிட்டுப்போய்க் காமிச்சீங்க. போகட்டும் அவர் நம்ம வருங்கால ராஜா. குடிமக்கள் பட்ட கஷ்டம் என்னன்னு தெரிஞ்சுக்கும் கடமை இருக்குல்லே? அப்புறம் ரேச்சல் ஹண்ட்டரைக் கூட்டிக்கிட்டுப்போய்க் காமிச்சீங்களே அது எதுக்கு? நம்ம நாட்டு நம்பர் ஒன் மாடல்(முந்திய சூப்பர் மாடல் அழகி(??!!) என்றதும் மனசில் கருணை வந்துருச்சா? அப்ப உள்ளூர் மக்களுக்கு ஏதும் வசதி செஞ்சு தரமாட்டீங்களா? 'சம்பவம்' நடந்த இடத்தை அப்படியே காபந்து பண்ணி மூடி வச்சுட்டா........... அங்கே என்ன ஆச்சோன்னு நாங்க பதைபதைக்க மாட்டாமா? ங்ய் ங்ய்ன்னு நாங்க விடாமப் போராடுனதுக்குப் பலன் கிடைச்சது.

நவம்பர் 5 முதல் டிசம்பர் 11 வரை ஆறுவாரத்துக்கு வீக் எண்டுகளில் மட்டும் ரெட் ஸோன் டூர் ஒன்னு ஸெரா CERA ( Christchurch Earthquake Recovery Authority) ஏற்பாடு செஞ்சு கொடுத்துச்சு. தனி பஸ்ஸுலே கூட்டிப்போய்க் காமிப்பாங்க. விருப்பம் இருந்தால் 0800 RING CERA வில் கூப்பிட்டு இருக்கையைப் பதிவு செஞ்சுக்குங்கன்னு சொன்னாங்க.

அங்கே தொலைபேசுனப்ப அடுத்த முனையில் இருந்த அம்மணி பேசுன 'அறம்' தான் பதிவின் ஆரம்பத்தில் நீங்க படிச்சது. இதுக்குமேலே துணிஞ்சால் மட்டும் வான்னதும் நான் துணிஞ்சுட்டேன்னேன். முதல் செய்தி, எல்லா இடங்களும் ஏற்கெனவே பதிவாகிருச்சு. எதாவது கேன்ஸலேஷன் இருக்கான்னு பார்க்கிறேன். ஒரு இடம் ஞாயிறு மாலை 7 மணிக்கு இருக்கு. பரவாயில்லையா? ஊஹூம்.... எனக்கு ரெண்டு இடம் வேணும்( அவ்ளோ குண்டா? ச்சீச்சீ...ரெண்டு பேருக்குங்க) இன்னும் கொஞ்சம் நேரம் தேடிப்பார்த்துட்டு அதிகாலை பஸ்ஸுலே இருக்கு. ஹௌ ஏர்லி? 9.20. ஆஹா..... எடுத்துக்கறேன். அடுத்த கட்டமா பதிவு ஆரம்பிச்சது. . முழுப்பெயர் நம்ம ஸர் நேமோட சேர்த்து ஒவ்வொரு எழுத்தா ஃபொனெடிக் கோடுலே சொல்லணும் அப்புறம் பிறந்த தேதி. வீட்டு விலாசம், தொலைபேசி எண்கள் (நல்லவேளை. உயில் எழுதிட்டயா? யார் பேருக்குன்னு கேக்கலை) எதாவது ஆகிருச்சுன்னா, தகவல் பதிய விவரம் வேணுமே.

ஈமெயில் ஐடி சொல்லு. டிக்கெட்டை அனுப்பறேன்னதும் சொன்னேன். அஞ்சு நிமிசத்தில் ஈ-டிக்கெட் வந்துருச்சு. அதை ப்ரிண்ட் பண்ணிக்கணும். சரியா 20 நிமிசத்துக்கு முன்னால் க்ரான்மர் சதுக்கத்துக்கு வந்துறணுமாம். பயணம் முழுசும் பஸ் கதவு மூடியே இருக்கும். திறக்கப்படமாட்டாது. (அட! அப்ப எதுக்கு suitable footwear? ஓ....ஆபத்துலே இறங்கி ஓடித் தப்பிக்கவா?) எப்படியும் உயிரோடு திரும்பி வந்துருவோம் என்ற நம்பிக்கையில் பகல் சாப்பாட்டை ஆக்கி வச்சுட்டுக் கிளம்பினேன்:-)
க்ரான்மர் சதுக்கத்தில் நமக்குப் பார்க்கிங் இலவசம். மூணு தொகுதியாத் தனித்தனி கூடாரம் அடிச்சு வச்சுருக்காங்க. ஒவ்வொரு கூடாரத்துக்குப் பக்கத்திலும் அடுத்த வண்டி புறப்படும் நேரம். அவசரகாலத்தில் செய்யவேண்டியவை என்னென்ன தகவல் பலகை. அதுலேயும் கடைசி வரி...... இதையெல்லாம் வாசிச்ச பிறகும் டூர்லே வரேன்னா சொல்றே? சரியான 'தில்' பார்ட்டியா இருக்கே! நீ செத்தாலும் செத்துருவேன்னு இன்னொரு 'அறம்' :-)
மூணு பஸ்ஸுகள் வரிசையா நிக்குது. எங்க பயணத்துக்கு செக்கின் செஞ்சுக்க வரிசையில் நின்னோம். கூடாரத்தின் முகப்பில் இருந்த பணியாளர்களில் ஒருவர் சிரித்தமுகத்துடன் 'வாங்க' என்றார். எங்களுக்கு முன்னால் ரெண்டு பேர் வரிசையில். எங்களுக்குப்பின் வந்து சேர்ந்துக்கிட்டவர்களில் ஒரு பெண்மணி காலை விந்திவிந்தி நடந்து வந்தார். கையில் ஒரு வாக்கிங் ஸ்டிக். இதைப்பார்த்த பணியாளர் 'சடார்' என்று அவர் அமர்ந்திருந்த இருக்கையைத் தூக்கிக் கொண்டுவந்து அந்தப் பெண்மணிக்கு போட்டு 'இதுலே உக்கார்ந்துக்குங்க' என்றார். இப்படிச் சின்னச்சின்ன சமாச்சாரங்களால்தான் இந்த மக்கள் மேலும் நாட்டின் மேலும் உள்ள மதிப்பு என் மனசுலே உசந்த இடத்தைப் பிடிச்சுருது.
முதல் இரண்டு பஸ்ஸுகளும் 9க்கு ஒன்னும் 9.10க்கு ஒன்னுமாக் கிளம்பிப்போச்சு. அடுத்து நம்மது. ப்ரிண்ட் அவுட்டாக் கொண்டு போயிருந்த டிக்கெட்டைப் பார்த்துட்டு அவுங்க கிட்டே இருந்த பட்டியலைச் சரிபார்த்துக்கிட்டு 'ஆஜர்' போட்டாங்க. பக்கத்துலே மூடிபோட்ட ஒரு ப்ளாஸ்டிக் பக்கெட் உண்டியல். 'தங்கம்' அவ்வளவு மதிப்பில்லைன்னு நோட்டாப் போட்டோம். நம்மூர்லே ஒரு டாலர், ரெண்டு டாலர் நாணயங்கள் தங்க நிறத்தில் இருக்கு. பஸ்ஸுலே ஏறி உசரமா இருக்கும் இருக்கைகளில் உக்கார்ந்தோம். ரெண்டே நிமிசத்தில் வண்டி நிறைஞ்சது.
செஞ்சிலுவை அங்கி போட்ட 'ஷான்' எல்லோரையும் வரவேற்று விளக்கங்கள்(do's & don'ts ) கொடுத்தார். தேவைப்பட்டால் முதலுதவியும் அவர் செய்வார்.இன்னொருமுறை 'அறம்' வாசிச்சுட்டு கூட வர்றீங்களா இல்லை இறங்கிப் போறீங்களான்னார். இதுக்குள்ளே 'அறம் அறிக்கை' முழுசும் எனக்கு மனப்பாடமாகி இருந்துச்சு:-) 'ஆபத்து' ஏற்பட்டால் நம்மைக் காப்பாத்த ஒரு செக்யூரிட்டி இளைஞர் பஸ்ஸின் பின் கதவுப்பக்கம்.
ஒரு சின்ன சர்ச்சைக்கூட விட்டுவைக்கலை பாருங்க:(
சம்பவம் நடந்த இடங்களைப் பார்க்கும்போது மக்கள் உணர்ச்சிவசப்படுவது சகஜம். மன அழுத்தம் கூடும் இப்படிப்பட்ட சமயங்களில் நண்பர்கள் உறவினர்களுடன் மனம் விட்டுப் பேசுங்க. அப்படி யார்கிட்டேயும் பேசமுடியாதுன்னா இந்த 0800 *********** எண்ணுக்குத் தொலைபேசுங்கன்னு சொன்னார். ஸேரா ஏற்பாடு செஞ்சுருக்கு இந்த கவுன்ஸிலிங்கை.!

நானோ சும்மாவே அழுவேன். இப்போக் கேக்கணுமா? முன் ஜாக்கிரதையா ஏகப்பட்ட டிஷ்யூக்களை எடுத்துக்கிட்டுப் போயிருந்தேன்.

'நடந்த' வண்டி தெருமுனை திரும்புனதும் நின்னுச்சு. நாம் இப்போ ரெட்ஸோனுக்குள்ளே நுழையப்போறோம். யாருக்காவது கூட வரவேணாமுன்னு தோணுச்சுன்னா இப்ப இறங்கிடலாம். இது கடைசிச் சான்ஸ். இதுக்குப்பிறகு பயணம் முடியும் வரை எங்கேயும் வண்டிக் கதவுகள் திறக்கப்படாதுன்னு எச்சரிக்கை வந்துச்சு ஷானிடம் இருந்து.

கைவிரலைக் காமிச்சு 'இந்த மோதிரத்தை வச்சு என்னை அடையாளம் கண்டுபிடிச்சுருங்க'ன்னு கோபால் கிட்டே கிசுகிசுத்தேன்.

யாரும் வண்டியைவிட்டு இறங்கலை. தீரர்களா இருந்தோம். வண்டி மறுபடிக் கிளம்பி 'நடக்க' ஆரம்பிச்சது! இதுவரை கம்பி வலைக்குப்பின் ஏதோ அரசப்புரசலாத் தென்பட்டப் பகுதிக்குள்ளே போனால்....... 'கோஸ்ட் டவுன்'ன்னு சொல்வாங்க பாருங்க அதுபோல வெறிச்சோடிக்கிடக்கு. கலகலன்னு மக்கள் நடமாட்டம், வண்டிகள் ஓடும் சாலைகள், குறுக்கே புகுந்து வரும் ட்ராம் பாதைன்னு எல்லாமே கப்சுப். கட்டிடங்கள் பல இடிக்கப்பட்டு நிரவிவிட்டு காலி மனைகள் அங்கங்கே! ஆகாசத்தை முட்டும் ராக்ஷஸ க்ரேன்கள் தெருவுக்கு நாலு. ஏவான் நதிக்கரை ஓரம் விக்டோரியா சதுக்கம் இடுப்புயரப் புல்லில் ஒ(ழி)ளிஞ்சுருக்கு. (இதுதான் தமிழ்சினிமா டூயட் ஸ்பாட். இங்கே எடுக்கும் ஷூட்டிங்கில் இந்த இடத்தை விடவே மாட்டாங்க. அப்படி ஒரு பிரியம்)
சதுக்கத்தில் ஃபிப்ரவரி 25க்கு(2011) நடக்கப்போகும் சீனர்களின் லேண்ட்டர்ன் ஃபெஸ்டிவலுக்காக விளக்குகளைக் கட்டித்தொங்கவிட்டு அலங்கரிச்சுக்கிட்டு இருந்த சமயம் நிலநடுக்கம். எல்லோரும் துண்டைக்காணோம் துணியைக்காணோமுன்னு ஓடி இருக்காங்க. அடுத்த சில மணிகளில் நகர மையம் வேலித்தடுப்புக்குள்ளில் வந்துருச்சு. நடந்ததை எல்லாம் மௌனமாப் பார்த்துக் கண்ணீர் வடிக்கும் நிலையில் நிற்கும் மகாராணி விக்டோரியா !

பார்க்க இன்னும் நல்லாவே இருக்கும் கண்ணாடிச்சுவர் கட்டிடங்கள் எல்லாம் இடிபடக் காத்திருக்கு. வெளிப்பார்வைக்கு நல்லா இருக்கே தவிர உள்ளுக்குள் சேதம் கூடுதலாம். நில நடுக்கத்தின்போது இடமும் வலமுமாக் குலுங்குனதோடு மேலேயும் கீழேயுமா ஆடுனதில் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுபோய் கட்டிடத்தைத் தாங்கும் காங்க்ரீட் தூண்கள் எல்லாம் முறுக்கிக்கிட்டு நிக்குதாம். அட ராமா............
எங்கூரின் அதிக உசரமான கட்டிடம் என்ற பெருமையை இதுவரை தக்க வச்சுருக்கும் 'ப்ரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ்' பில்டிங்...... 'எப்போ? எப்போ? ன்னு இடிக்கப்படக் காத்திருக்கு அடடா......
மான்செஸ்ட்டர் தெருவில் திரும்பி உள்ளே போறோம். துல்சி ரெஸ்ட்டாரண்ட் இருந்த இடம் தரை மட்டம்:( சரி...போகட்டும் இன்னொருமுறை பிஸினெஸை ஆரம்பிக்கலாம். தெருவின் ரெண்டு பக்கமும் இத்தனை வகை யாவாரம் நடந்துக்கிட்டு இருந்துருக்கா என்ன? ஒன்னுமே கவனிக்காம ஏதோ கண் பட்டிக் கட்டிவிட்ட மாதிரியில்லே 'நகர்வலம்' நடத்தி இருக்கேன், கனகாலமா:(
சிடிவி இருந்த இடம் சிமெண்டுத்திடலா இப்போ:(

நடந்துக்கிட்டு இருந்த வண்டி நிதானிச்சு நின்னது. CTV பில்டிங் இருந்த இடம் தரைமட்டமா........... இப்போ...வெறும் கட்டாந்தரை! 106 உசுரை காவு வாங்கிய இடம். கண்ணுலே தெம்படவே கூடாதுன்னு முதல்லே இடிபாடுகளை அகற்றியிருக்காங்க. இதுலே 65 பேர் ஜப்பான் நாட்டு மாணவர்கள். சம்பவத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னால் வந்திறங்கினவங்க. முதல்நாள் தங்கப்போகும் ஊரைச் சுத்திக் காமிச்சுருக்காங்க. அழகான ஊரில் கொஞ்சநாள் இருக்கப்போறோமுன்னு ஒரே ஆனந்தம். மறுநாள் முதல் வகுப்பு. முதல்நாள் பள்ளிக்கூடம். லஞ்சு டைம். எமன் சாப்பிடக்கூட விடலை. அப்படியே அள்ளிக்கிட்டுப் போயிட்டான். அவனுக்கு அப்படி ஒரு பசி:( ப்ச்..............
வண்டி கிளம்பி 'நடக்க' ஆரம்பிச்சது. புக் ஷாப் ஒன்னுலே சம்மர் ஸேல் ஆரம்பிச்சு..... குவியல் குவியலா காத்திருக்கும் புத்தகங்கள். ஹூம்......அதிர்ஷ்டம் கெட்டது புத்தகங்களா...இல்லை வாசகர்களா?
எங்கே பார்த்தாலும் டெமாலிஷன் ஒர்க் நடந்துக்கிட்டு இருக்கு. தெருவோர மரங்கள் எல்லாம் மண்டையைப் போட்டுருச்சுங்க. நியூஸிலண்ட் போஸ்ட் உள்ளே எத்தனை முக்கிய கடிதங்களும் பார்ஸல்களும் மாட்டிக்கிச்சோ! வெறிச்சோடிக்கிடக்கும் வீதிகளும் காபந்து செஞ்சுக்கிட்டு இருக்கும் கண்டெய்னர்களுமா என்ன ஒரு காட்சி:(
நம்ம மெட்ராஸ் ஸ்ட்ரீட்

கட்டக்கடைசியா கதீட்ரலுக்கு முன்னால் போறோம். ஐயோ! மொட்டைக்கோபுரம்:( இதுவரைக் கட்டிக்காத்த உணர்ச்சிக் கொப்புளம் 'பட்'ன்னு உடைஞ்சது. யாரும் கவனிக்குமுன் கண்களைத் துடைச்சுக்கணுமுன்னு...... மெனெக்கெட்டுருக்க வேண்டாம். அநேகமா எல்லோர் நிலையும் இதே இதே! வண்டிக்குள் பேச்சரவம் காணோம்..
கொழும்புத்தெருவில் வந்து இடதுபுறம் திரும்பி மௌனசாட்சியா நிற்கும் மாட்சிமை தாங்கிய மகாராணி விக்டோரியாவைக் கடந்து புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தோம். மன அழுத்தத்துக்கு வடிகாலா ஏற்பாடு செஞ்சுருக்கும் கவுன்ஸிலிங் நம்பர்கள் அடங்கிய அட்டையை, வண்டியை விட்டு இறங்கும் ஒவ்வொருத்தருக்கும் விநியோகிச்சாங்க.

கடந்த ஞாயிறோடு இதுவரை 18,000 பேர்களுக்கு இடம் ஒதுக்கி மிச்சம்மீதி இருக்கும் உடைந்த நகரைக் காமிச்சுருக்காங்க. இனி இந்த சர்வீஸ் கிடையாது. உயிர்ச்சேதம் ஏற்பட்டால் நகரம் தாங்காது என்பதால் கூடுதல் கவனம். சட்புட்ன்னு இடிக்கவேண்டியதை இடிச்சு நிரவி புது நகரை நிர்மாணம் செய்யணும். வேடிக்கை காமிச்சுக்கிட்டு இருந்தால் வேலை நடக்க வேணாமா?

பஸ் சர்வீஸ் இல்லைன்னா என்ன? (இந்த பஸ்ஸே நடந்து போகும் வேகத்தில்தான் போச்சு) நடந்து போய்ப் பார்க்கறோம் என்று 'ஆசை'ப்பட்ட மக்களுக்காக சின்னதா ஒரு வாக்கிங் டூர் ஆரம்பிச்சுருக்காங்க. கதீட்ரல் சதுக்கத்தில் நின்னு தேவாலயத்தை வெளியில் இருந்து பார்க்க மட்டுமே!
கதீட்ரல் ஸ்கொயர்

இதுக்கும் நிறைய ரூல்ஸ் இருக்கு. முதல்லே வருவது பொருத்தமான காலணி. நடைபாதை ஒன்னு அமைச்சுருக்கோம். அதுலேயே போகணும். ஃபென்ஸுக்கு இந்தப் பக்கம் இருந்துதான் பார்க்கணும். ஒரு மணி நேரத்துலே 300 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை. போயிட்டு 50 நிமிசத்துக்குள்ளே திரும்பி வந்துறணும். செல்ஃபோனை ஃபுல் சார்ஜ் பண்ணி வச்சுக்கணும். நீங்க எப்போ உள்ளே போறீங்கன்னு உங்க நண்பர்களுக்கோ குடும்பத்தினருக்கோ தெரிவிக்கணும். நிலநடுக்கம் வந்தால் 'கபால்'ன்னு தரையோடுதரையா படுத்துக்கணும். வழிகாட்டும் நாயைத்தவிர மற்ற செல்லங்களுக்கு அனுமதி இல்லை. அதி முக்கியமானது உங்க அடையாள அட்டையை உடம்புலே வச்சுக்கணும். சட்டைப்பை, பேண்ட் பாக்கெட் இப்படி. ஒருபோதும் கைப்பையிலே வச்சுக்கக் கூடாது. அடடா....முந்தியே தெரிஞ்சுருந்தா பச்சை குத்திக்கிட்டு வந்துருப்பமே:-)

PIN குறிப்பு:
பஸ்ஸுலே ஏறிப்போய்ப் பார்க்க விருப்பம் இருந்தா இங்கே க்ளிக்கவும். கூட்டிப்போய்க் காமிக்கிறாங்க ஸேரா சார்பில்.

27 comments:

said...

அறிமுகம் பயமாக இருந்தது.அப்புறமா படிக்க ஆரம்பிச்ச உடன் நகைசுவையாக இருக்கே என்று சிரித்த படி ஆரம்பித்தேன்.முடிக்கும் பொழுது மனம் கனத்து விட்டது.

said...

நாங்க கொழும்பு தெருவில் இருந்தோமில்லையா, GPS வழி தெரியாதுன்னு கை விட்ட அப்புறம் அஞ்சாறு தடவை சுத்தி சுத்தி ரெட் சோன் நல்லா பழக்கமாயிடுச்சு. வெளில இருந்தே ரொம்ப நல்லா தெரிஞ்சுதே, ஆனா பெரிசா எதையும் நான் ஃபோட்டோ எடுக்கலை, ஒரு மாதிரி மனசு கஷ்டமா இருந்துது. (அப்புறம் ஊர்க்காரங்க யாரேனும் இதை போய் எதுக்குடி ஃபோட்டோ புடிக்கிறேன்னு கோவப்பட்டுட்டாங்கன்னான்னு ஒரு பயம் வேறே..) எது எப்படியோ, புது ஊர், சிட்டி சென்டர் எல்லாம் எழுப்பி விரைவில்(!!) அவையெல்லாம் கூட நூறாண்டு அன்ட் அபவ் கொண்டாடும்னு நம்பிக்கை வைக்க வேண்டியது தான். இந்த கதீட்ரல் ஸ்கொயர் எல்லாம் விட சம்னர் பீச் போகும் வழியில் அந்த தொங்கும் வீடுகள் தான் உண்மைலயே கண்ணுல தண்ணி வந்துருச்சு.. என்ன ஒரு கோரம். என்ன ஒரு வேகமா நடந்துருக்கணும்!

கடவுள் புண்ணியத்திலே இதுவரை பூகம்பம் வரும் போதெல்லாம் ஒண்ணும் ஆகாம தப்பிக்க வைக்கிற ஆண்டவனுக்கு நன்றி சொல்லிட்டே, சிடாட்டிலும் இதே ஃபால்ட் லைனில் தான் இருக்கு, எங்க ஆயுளுக்குள்ளே(!) எரிமலையோ பூகம்பமோ தந்துராதே தெய்வமேன்னு சுயநலமா வேண்டிக்கிட்டேன்.

said...

இதைச் சுற்றுலா மாதிரி செய்யறதுக்கு நிறைய துணிச்சல் வேணும். அதையும் மதிச்சுப் போய் சுத்திட்டு வர இன்னும் துணிச்சல் வேணும்.
ஆச்சரியமா இருக்கு.

said...

வாங்க ராம்வி.

'சிரித்துக் கொண்டே அழுகின்றோம்& அழுதுகொண்டே சிரிக்கின்றோம்'

எங்களுக்காக கவியரசு அன்றே எழுதிவச்சுட்டார்:(

said...

வாங்க பொற்கொடி.

நம்ம பதிவர் உலகில் எங்களுக்கான ஒரே 'ஐ விட்னஸ்' நீங்கதான்.

நம்பிக்கையோடு இருக்கோம். நீங்களும் அதே நம்பிக்கையோடு இருக்கீங்க.

காப்பாற்றப்படுவோம்!

said...

வாங்க அப்பாதுரை.

எங்க தொணதொணப்பைப் பொறுக்கமுடியாம, முதலில் ஒரு ரூட் போட்டு, அதுலே இடையில் வரும் ஆபத்தான கட்டிடங்களையும் இடிபாடுகளையும் அகற்றி வண்டி போய்வர வழி ஒன்னும் சரியாக்கி, சிரமம் பாராம பணியாற்றும் வாலண்டியர்களை வச்சுக்கிட்டு எங்களுக்குச் சுற்றிக் காண்பித்த CERA வுக்குத்தான் எல்லாப் புகழும்.

நான் சும்மா அனங்காமல் போய்ப் பார்த்தவள் மட்டுமே!

said...

// கைவிரலைக் காமிச்சு 'இந்த மோதிரத்தை வச்சு என்னை அடையாளம் கண்டுபிடிச்சுருங்க'ன்னு கோபால் கிட்டே கிசுகிசுத்தேன்.//

எப்படிங்க என்னைன்னு ஸ்பாட் பண்ணினீங்க ...அப்படின்னு ஒரு தரம் ( அதாவது ஒரு 50 வருசத்துக்கு முன்னாடி)
இவருட்டே கேட்டேன்.

போன ஜன்மத்திலே நீ சொன்ன வார்த்தைகளை அப்படியே ஞாபகம் வச்சிருந்தேன் அப்படின்னாரு.

என்னன்னு கேட்டேன்.

" இந்த மோதிரத்தை வச்சு என்னை அடையாளம் கண்டு பிடிச்சுருங்க "


மீனாட்சி பாட்டி.
http://vazhvuneri.blogspot.com
http://mymaamiyaarsongs.blogspot.com

said...

பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்குமா. அங்கயே இருக்கறவங்க பாடுகொடுமை.

எத்தனையோ கஷ்டங்களைத் தாண்டி வரும் மனிதர்கள் நிறைந்த நாடு. இதுவும் கடக்கும்.

said...

ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பித்த பயணம் முடியும் போது மனதைக் கனக்க வைத்து விட்டது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை...

said...

மனதை கனக்க வைத்து விட்டது.

இனிமேல் இது போல் ஏற்படாமல் கடவுள் அருள் புரியட்டும்.

said...

வலிகளையும்/வேதனைகளையும் மறைக்க நகைசுவை சேர்த்து எழுதினாலும் உங்க துக்கம் புரிகிறது .மனம் கனத்து போனது .
இத்தகைய இயற்க்கை பேரழிவுகள் வேண்டவே வேண்டாம் இறைவா

said...

படங்கள்ல பார்க்கறச்சயே பதற வைக்குதே.. நேர்ல அனுபவிச்சவங்களுக்கு எப்படியிருந்துருக்கும்.. அதுவும் அந்த குட்டி சர்ச் ரொம்பவே பதற வைக்குது..

said...

புது ஊர், சிட்டி சென்டர் எல்லாம் எழுப்பி விரைவில்(!!) அவையெல்லாம் கூட நூறாண்டு அன்ட் அபவ் கொண்டாடும்னு நம்பிக்கை வைக்க வேண்டியது தான்.

சிறப்பாக பெருமையாக பார்த்த இடங்களை இடிபாடுகளுடன் பார்க்கும் போது மனம் கனப்பதை தவிர்க்கமுடியவில்லை...

said...

ரொம்ப நால்ளைக்கப்புறம் உங்க பதிவுகள் உலாவிப் போகிறேன்.ஒரு சுகம்.ஒரு பாரம் எல்லாமே கலந்திருக்கு அக்கா !

said...

வாங்க மீனாட்சி அக்கா.

நானும் ஒரு முப்பத்தியேழரை வருசம் முந்தி ஒரு ஒட்டியாணம் கேட்டுருந்தேன். வாங்கித் தந்திருந்தா இப்ப அடையாளம் காமிக்க ரொம்ப சுலபமால்லே இருந்துருக்கும்!!! கோட்டை விட்டுட்டார். இப்ப சொல்றார் 'அது' கழுத்துக்குச் சரியா இருக்குமாம்.

said...

வாங்க வல்லி.

கடந்துதானே ஆகணும்! ஒருநாளைப்போல இன்னொருநாள் இருப்பதில்லையேப்பா!

said...

வாங்க கணேஷ்.

இன்னும் ஒரு நாலைஞ்சு வருசம் கழிச்சு நியூசி வரும் மக்களுக்கு 'சுவடு' தெரிய ச்சான்ஸ் இல்லை!

சட்புட்ன்னு வேலையை ஆரம்பிச்சுருவோம்!

said...

வாங்க கோவை2தில்லி.

பாப்பாநியூகினி பக்கம் நகர்ந்து போயிருக்கு.. பாவம். அங்கேயும் கஷ்டம்தான். 7.3ன்னு சொல்றாங்க:(

said...

வாங்க ஏஞ்சலீன்.

பூமித்தாய் அடங்கமாட்டேங்கறாளேப்பா:(

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஏகப்பட்ட சர்ச்சுகளுக்கு இதே நிலைதான்:( கல்லை அடுக்கி வச்சுக் கட்டுன வகை. நடுவே இருக்கும் பூச்சுகள் மாவா உதிர்ந்துபோயிருக்கு! அந்தக் காலத்துலே சிமெண்ட் கண்டுபிடிக்கலை போல இருக்கே!

இந்தக் கணக்குலே பார்த்தால் கல்லணை ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு. கரிகாலனா கொக்கா!!!!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

சரியாச் சொன்னீங்க. நல்லவிதமாப் பார்த்தவைகள் இப்ப நாதியில்லாமப் போயிருச்சு:(

இதுக்குத்தான் ஊரையே மூடி வச்ச்சுருந்தாங்க போல. நாங்கதான் சும்மா இருக்கமுடியாமல் சங்கை ஊதிக் கெடுத்தோம்:(

said...

வாங்க ஹேமா.

நலமா?

இன்பமும் துன்பமும் கலந்துருப்பது வாழ்க்கையில் மட்டுமா? பதிவுகளிலும்தான்...... என்ன செய்ய?

said...

காளியாட்டம் மறையட்டும்.

said...

மனம் நெகிழ்த்திவிட்டீர்கள். இடுக்கண் வருங்கால் நகுக என்றார் வள்ளுவர். நீங்களோ இடுக்கண் வந்தபின்னும் அதைத் துணிவுடன் சமாளித்து மீண்டு வந்ததோடு, மென்புன்னகையிழையோடும் விதம் அழகானப் பதிவுகளாகத் தருகிறீர்கள். மிகவும் மனம் தொட்டபதிவு.

said...

வாங்க மாதேவி.

காளிக்குக் கொஞ்சம் அடக்கம் வந்துருக்கு. நேத்து நாலே நாலுதான்!
அதுவும் 2.7

said...

வாங்க கீதமஞ்சரி.

நாளையோடு சரியா ஒரு வருசம்:( அடையாளம் தெரியாத 4 சடலங்களை இதுவரை வச்சுருந்து யாரும் தேடிவராததால் இன்னிக்குக் காலையில்தான் மரியாதைகளோடு அடக்கம் பண்ணுச்சு அரசு.

யார் பெத்த பிள்ளைகளோ? எந்த தேசமோ? மனசு கலங்கிக்கிடக்கு இன்னிக்கு:(

said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு