புது வருசம் பொறந்து, அதுக்குள்ளே எட்டுநாள் ஓடிப்போயிருக்கு பாருங்களேன் !!!! ஆகஸ்ட்க்குப்பின் பதிவுகளே எழுதலைன்னாலும்.... நாட்கள் ஓடாமலேயா இருந்துச்சு..... எழுத்தைத்தவிர பாக்கி அத்தனையும் அதுபாட்டுக்கு அதுன்னு நடந்துக்கிட்டேதானே.... ஆக்காம, சாப்பிடாம இருந்தமா என்ன ?
நமக்கோ வருசம் பூராவும் பண்டிகைகள்தான்.... அதுவும் ஆவணிஆவிட்டம் முடிஞ்சதும்..... வரிசை கட்டி வந்துரும். எனக்குப்பிறகு நம்ம வீட்டில் கொண்டாட யாரும் இல்லை என்பதால்..... முடிஞ்சவரை , ஓரளவு கொண்டாடிருவேன். பாவம்.... நம்ம பெருமாள்.... நாட்டைவிட்டு, நியூஸி வந்து கால்நூற்றாண்டுக்குமேல் ஆறது.... அவரைக் கவனிக்காமல் இருக்கலாமோ ?
அதான் 2024 விட்டம் கழிஞ்ச எட்டாம் நாள் தொடங்கி, புதுவருசம் பொறக்கும்வரை கொண்டாடின பண்டிகைகளை.... படப்பதிவாப் போட்டு வைக்கிறேன். எல்லாம் ஒரு நினைவுக்காகத்தான் !
கேரட் ஹல்வா, சீடை & ஸ்ரீகண்ட் , பழங்களோடு ஸ்ரீ கிருஷ்ணஜயந்தியை வீட்டில் கொண்டாடியாச்சு.
அன்றைக்கு வேலைநாளா இருந்தபடியால் நம்ம சநாதன் சபாவில் சாயங்காலம்தான், ஹோமம், பூஜைகள், குழந்தைக் கிருஷ்ணனைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுவதெல்லாம் முடிச்சு, நம்ம புள்ளையார் கோவிலில் ஸ்ரீ கிருஷ்ணஜயந்திக் கொண்டாட்டம் நடுநிசிவரை என்பதால் அங்கேயும் போயிட்டு வந்தோம். நம்ம ஹரேக்ருஷ்ணா கொண்டாட்டத்துக்குப் போக முடியலை. அதனால் மறுநாள் காலையில் போய் தரிசனம் செஞ்சோம்.
மேலே படங்கள் : நம்ம சநாதன்சபா
மேலே படங்கள் : நம்ம புள்ளையார் கோவிலில்
அடுத்த வந்த முக்கியப் பண்டிகை புள்ளையார் பொறந்தநாள் ! கட்டக்கடைசியா வீட்டில் காப்பாத்தி வச்சக் களிமண்ணில் புள்ளையார் செஞ்சேன். ரொம்ப சுமாராத்தான் வந்தார். ப்ச்.... அஞ்சு வருஷத்துக்களிமண் என்பதால் ரொம்ப வறட்சியாகக் காய்ந்துபோய் இருந்துச்சு. வேறொரு ஊரில் இருந்து வாங்கும் சமாச்சாரம். இந்தமுறைதான் இங்கிருக்கமாட்டோமேன்னு கொஞ்சம் அசட்டையா இருந்துட்டேன்.
நம்ம HSS Ganesh Workshop பில் நாம் செஞ்ச புள்ளையார்களுமா, மூவரையும் அலங்கரிச்சுக் கொழுக்கட்டை, நட்ஸ் மோதகம், பால்கொழுக்கட்டை நிவேதனம் செஞ்சு பூஜையை முடிச்சோம்.
அன்றைக்கு சனிக்கிழமையா இருந்தது. நம்ம புள்ளையார் கோவிலில் காலை எட்டரை முதல் பனிரெண்டுவரை சதுர்த்திப் பூஜை என்றபடியால்.... வீட்டில் பூஜை முடிச்சுக் கோவிலுக்குப்போக நேரமில்லாமல் போச்சு. ஆனாலும் கோவில் பூஜையை, கோவில் வாட்ஸப் குழுவில் வீடியோவாகப் பார்த்தாச்சு.
கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை, கோவில் நிர்வாகிகள் வீட்டுக்கு வந்து நேரில் கொடுத்துட்டு, நம்ம புள்ளையாரையும் தரிசனம் செஞ்சுட்டுப் போனாங்க. செப்டம்பர் 15 க்கு கோவில் கும்பாபிஷேக விசேஷம் . செப்டம்பர் 13 , கணபதிஹோமத்துடன் ஆரம்பிச்சு மூணுநாள் விழாவாக நடக்கப்போகுது !
கால்நிலவரத்தைப்பொறுத்துக் கலந்துகொள்ள வேணும்......
கும்பாபிஷேக விழாவை அடுத்த பதிவில் பார்க்கலாம் !
0 comments:
Post a Comment