பாலத்து ஜோஸியன் சொன்னதுபோலவே கிரஹம் படுத்திக்கிட்டு இருக்கு ! பேசாம விட்டுடலாமான்னாலும் மனசு வரலை......
முக்கியமானவைன்னு எனக்குத் தோணியிருக்கும் சமாச்சாரங்களை மேலோட்டமா கொஞ்சூண்டு சொல்லிவச்சால் மனசு அடங்குமான்னு பார்க்கணும்.
நம்ம துளசிதளத்தின் பொறந்தநாள் ஓசைப்படாம செப்டம்பர் 24 இல் வந்து போச்சு. உங்களையெல்லாம் எழுத்து என்ற வகையில் படுத்த ஆரம்பிச்சு 20 வருஷங்கள் கடந்து போயிருக்கு ! மைல்ஸ்டோன் பர்த்டேன்னு....... அதே தினம்தான், தளத்தின் புரவலர் பிறந்தநாளும் என்பதால் குட்டியூண்டுக் கொண்டாட்டம் ஆச்சு. அம்பதுவருஷமா சேர்ந்து கொண்டாடறோம் !
(பாவம்.... அம்பது வருஷப்படுத்தலைத் தாங்கிக்கொண்டிருக்கும் இரும்பு இதயம் ! )
அன்றைக்குச் செவ்வாய். ஒரு ஒன்னரை வருஷமாக நம்ம வீட்டில் செவ்வாய்க்கிழமைக்கு ஒரு முக்கியத்வம் வந்துருக்கு ! தாத்தா வீட்டுக்குப் பேரன் வரும்நாள் ! அவன்கூடச்சேர்ந்து கொண்டாடுவது இதுதான் முதல்முறை ! காலையில் மூடநெய்பெய்து ஒரு அக்காரவடிசில் செஞ்சு நம்ம வீட்டுப்பெருமாள் & தாயாருக்கு பூஜை.
பதினொரு மணிக்கு மகளும் பேரனும் வந்தாங்க. எல்லோருமாக் கிளம்பி நம்ம ஹரேக்ருஷ்ணா கோவிலுக்குப் போனோம்.
இப்பெல்லாம் கோவிலை பகல் ஒருமணிவரை தரிசனத்துக்குத் திறந்து வைப்பதால் கொஞ்சம் வசதியாகத்தான் இருக்கு நமக்கு. வழக்கம்போல் நமக்கு ஏகாந்த தரிசனமே! பண்டிட் மட்டும் இருந்தார்.
அங்கிருந்து கிளம்பி 29 ஸ்வீட்ஸ்னு இங்கே இருக்கும் இண்டியன் ரெஸ்ட்டாரண்ட் போனோம். பர்த்டே லஞ்ச் அங்கே! அவரவர் விருப்பத்துக்கு ஆச்சு. தாலி மீல்ஸ், புதுசா ஆரம்பிச்சுருக்கு. மெனுவில் தினம் வெவ்வேற ஐட்டமாம். இருக்கட்டும் வேற ஒருநாளைக்கு வந்தால் ஆச்சு.பிறந்தநாட்கள் பரிசாகப் பேரனுக்கு ஒரு விளையாட்டுச்சாமான் ! அஞ்சு வயசுவரை பயன்படுத்தலாமாம்! ஆகட்டும்...... அவுங்க வீட்டுப்புழக்கடையில் செட் பண்ணிக்கொடுத்தாச்சு !
மறுநாள் புதன்கிழமை, நம்ம யோகா வகுப்பில் கடைசி பத்து நிமிட், நம்ம வகையில் Food Yoga ! யாருக்காவது, பொறந்தநாள், கல்யாணநாள்னு தனிப்பட்ட விசேஷ நாட்கள் வரும்போது, அதை கொஞ்சம் சின்ன அளவில் நம்ம யோகா வகுப்பில் கொண்டாடிக்குவோம்.
நம்ம வகையில் மோதிச்சூர் லட்டு & சீடையும், இன்னொரு அங்கத்தின் பொறந்தநாள் ஒரு நாள் முந்தித் திங்கட்கிழமையில் வந்ததால், அவர்கள் வகையில் சாக்லெட் பர்ஃபியுமா , அருமை !
நமக்கு எல்லா புதனும் புள்ளையார் கோவில் விஸிட் இருக்கு. யோகா வகுப்புநடக்கும் அதே வளாகத்தில்தான் கோவில் ! கும்பாபிஷேகம் முடிஞ்சு மண்டலபூஜை நடப்பதால் ஒரு மண்டலம் வரைக் கோவிலைக் காலை நேரத்திலும் (காலை எட்டரை முதல் பத்துமணிவரை ) திறந்து வைக்கிறோம்.
இதுக்கிடையில் புரட்டாசி மாசத்துக்கான மாவிளக்கு, ஒரு சனிக்கிழமை நம்ம வீட்டில்.
நவராத்ரி விழா சமீபிக்கிறது. புது பொம்மை ஒன்னு சாஸ்த்திரத்துக்காக வாங்கவேணும் என்ற நியதியை 'நியாயப்படுத்தி', யோகா செய்யும் தவளையும், யானை சவாரி செய்யும் குரங்கன்மாரையும் நம்ம வீட்டுக் கொலுவுக்காக வாங்கினேன் !
இந்த வருஷ நவராத்ரிக்கு , இந்தியாவில் இருப்போம் என்ற பயணத்திட்டம் கடைசியில் கைவிடப்பட்டதால்..... கொலுவுக்கு மனத்தளவில் தயாராக இல்லை. இனிமேல்தான் ஏதாவது யோசிச்சுச் செயல்படுத்தணும்.
ஆன்லைனில் ஆர்டர் கொடுத்த கோவில் வந்துருக்கு !!!!
0 comments:
Post a Comment