Monday, January 27, 2025

சாமியும் பூதமும்......

வந்தா எல்லாமே சேர்ந்து ஒன்னாவே வந்துரும் ! இதுலே எதை விடறது சொல்லுங்க ?
மஹாநவமி முடிஞ்ச மறுநாள் விஜயதசமி, நம்ம வீட்டுப்பெருமாளுக்கு விசேஷம்.  குடும்ப நண்பர்களோடு ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் கால்நூற்றாண்டா நடத்தறோம். முந்தியெல்லாம் ப்ரஸாதவகைகள், விருந்து எல்லாம் நானே சமைச்சுருவேன்.   அப்புறம் ஒரு நல்ல இண்டியன் ரெஸ்ட்டாரண்ட் ஓனர் நமக்கு நண்பரானதும்,  அவர் மூலமாகவே விருந்துக்கான சமாச்சாரங்களை வரவழைச்சோம். ஆனால் ப்ரஸாதங்களை மட்டும் எப்பவும் நானே தயாரிப்பேன்.

எங்கூர் நிலநடுக்கத்துக்குப்பின் ஊரின் நிலையே தலைகீழாச்சு. நண்பரும் ஊரைவிட்டுப்போயிட்டார். அப்புறம்  சில வருஷங்கள் வெவ்வேற  ரெஸ்ட்டாரண்டுகளில்.... கடந்த சில வருஷங்களாக  கேட்டரிங் பிஸினஸ் நண்பர் நம்ம செந்தில்தான்  நமக்கு உதவி! உள்ளூரில் ரொம்ப நல்ல பெயர் இருக்கு அவருக்கு !  அழைக்கும்போது செந்தில்தான் கேட்டரிங் செய்யறாருன்னு  சொன்னால் போதும். வழக்கம்போல் அவரிடம் மெனுவைக் கொடுத்தோம்.  இனி கவலை இல்லை.
விஜயதசமிநாள் இந்த முறை சனிக்கிழமையில் !  காலையில் ப்ரஸாதவகைகளை சமைத்து முடிச்சு, நானும் நம்மவருமாக ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் வாசித்துப் பூஜையை முடிச்சோம். சனிக்கிழமைகளில் நம்ம ஹரேக்ருஷ்ணா கோவில் தரிசனத்துப் போகும்  வழக்கத்தை, விடவேணாமேன்னு கோவிலுக்குப் போயாச்சு.
இன்றைக்கு துர்கா பூஜைக்குப் போகவேணும். எல்லா விழாக்களையும் சனிக்கிழமைக்கு நேர்ந்து விடறதுதான்  ஊர்ப்பொது வழக்கம். உண்மையான விழாநாள் எப்போ என்றதெல்லாம் நமக்குக் கணக்கிலேயே இல்லை.  இன்றைக்கு சனி !
நம்மூர்லே வங்காள மாநிலமக்கள் நிறையப்பேர் இருக்காங்க. அவர்களுக்கும் சங்கம்/ க்ளப் எல்லாமும் இருக்கு !  வங்காளத்தை ரெண்டாப்பிரிச்சு ஒரு மாநிலம், கடைசியில் ஒரு தேசமாகவே ஆனது உங்களுக்கும் தெரியும்தானே..... 
 
அங்கே இருக்கும்  மக்கள், அவரவர் சமய விழாக்களைக் கொண்டாடாமல் இருப்பாங்களா அங்கிருந்தும் மக்கள் நியூஸிக்குப் புலம்பெயர்ந்து, இங்கே தமக்கான அடையாளமா ஒரு சங்கம் வச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க. ஒரே கலை & கலாச்சாரம், ஆனால் வெவ்வேறு நாடு !

மேற்படி ரெண்டு தேச மக்களும் நமக்கு ரொம்பவே தெரிஞ்சவங்க என்பதால் விழாக்களுக்கான அழைப்புகளைத் தனித்தனியே அனுப்பி வச்சும்,  நேரில் பார்த்தும், ஃபோன் மூலமாகவும்  அவுங்க மகிழ்ச்சியில் பங்கெடுக்கச் சொல்லிக் கூப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க.  இது சிலபல வருஷங்களாவே இப்படித்தான்..... 



இன்னொரு தோழியின் அற்புத நடனம்  இங்கே !

https://www.facebook.com/1309695969/videos/824985986379684/

கலைநிகழ்ச்சி, விருந்து இப்படி அங்கே  ஒரு முழுநாள்  கொண்டாட்டம்தான்.  கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மக்களும் நமக்கு ரொம்பவே வேண்டியவர்கள் என்பதால்.... அவுங்களும் நம்மைக் கூப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க.   கலைக்குழுக்கள்  ஒவ்வொன்னும் வருஷத்துக்கொரு புது நடனம் தயாரிச்சாங்கன்னா போதும்.  உள்ளூர் கொண்டாட்டங்களில் எல்லா இடத்துலேயும் அதைப் பார்க்கலாம்.   ஒரு இடத்தில் தவறவிட்டோமுன்னாக்கூட பிரச்சனையில்லை.  எப்படியும் நம்ம கண்ணுலே பட்டுரும் . சின்ன ஊர்தானே..... யஹாங் ஸே வஹாங்.... வஹாங் ஸே யஹாங்......
 
ரெண்டு இடங்களிலுமே காலையில் பூஜை. கொஞ்சம் விஸ்தாரமாகவே செய்யறாங்க.  அப்புறம் விருந்து.  அது முடிஞ்சதும் கலைநிகழ்ச்சிகள். நாமும் நாளை ரெண்டாப்பிரிச்சு, முற்பகல் வங்காள மக்கள் விழாவுக்கும், பிற்பகல்  வங்காளதேச மக்களின் விழாவுக்கும் போய்க்கிட்டு இருக்கோம். அதே போல அன்றைக்கும் போய்வந்தாச்சு.  
முற்பகல் போன வங்காளமக்கள் விழாவில் நம்ம செந்திலின் சமையல்தான்! நம்ம யோகா குழு மக்களும் வந்துருந்தாங்க !
 


மாலை ஆறுமணிக்கு நம்ம வீட்டில் விசேஷம். நம்மவரின் ஐடியாப்படி,  மாலையில் ஆரத்தி மட்டும்தான். 'சேர்ந்து வாசிப்பதில் கவனம் செலுத்த முடியலை நம்ம மக்களுக்கு'ன்றார்.  இப்ப ரெண்டு வருஷமா இப்படித்தான். 

நண்பர்கள் குடும்பமும், மகளின் குடும்பமும் சரியான நேரத்துக்கு வந்தாங்க.  குசலவிசாரிப்பு முடிஞ்சு ஸ்வாமி ஆரத்தி முடிச்சோம். செந்தில், விருந்துணவைக் கொண்டு வந்துட்டார். எல்லாமும் நல்ல முறையில் நடந்து, கடைசி விருந்தினர் கிளம்பும்போது மணி பத்தரை !





இதுக்கிடையில் நம்மவர் முயற்சியில் என்கால்வலிக்கான ஆயுர்வேத மருந்துவகைககள்  பொதி வந்தாச்சு, ஏழு கிலோ!!!   என்ன மருந்துகள் எந்தெந்த வேளைக்கு எடுக்கணும் என்பதே  மனசில் சட்னு பதியலை. ஏகப்பட்டவை !!!! 

அலோபதி சிகிச்சையும் தொடர்வதால்  நம்ம விசேஷ மருத்துவரிடம் கேட்டுக்கிட்டுத்தான் ஆரம்பிக்கணும்.  முதல் PRP  ஊசி போட்டாங்க. ஒரு விசேஷ மருத்துவர் குழு இந்த சிகிச்சைக்கு.  ஊசி போட்டதும், பத்து நிமிட் கழிச்சு எழுத்து நின்னால் காலைக் கீழே ஊன்றவே முடியலை.  அஞ்சு நிமிட் உக்கார்ந்துட்டுப் போகலாமுன்னா....  லேசா இடுப்பை அசைச்சு இருக்கையில் உக்காரவும் முடியலை. நம்ம பயனுக்கு வீல்சேர்கள் இருந்தாலும்  உக்காரவே  முடியலைன்னா எப்படி? கார் பார்க் வரைகூடப் போக முடியாது.  நம்மவர் போய் , வண்டியை வாசலுக்குக் கொண்டுவந்தார்.  கைத்தாங்கலாக என்னைப் பிடிச்சு, எப்படியோக் கஷ்டப்பட்டுக் காரில் ஏற்றி உக்காரவச்சாச்.  ஐயோ..... வலி....வலி

வீடு வந்ததும்   காரில் இருந்து வெளியே இறங்க......... ஐயோ ஐயோ..... நாலுநாள் நரகவாழ்க்கை...... அஞ்சாம்நாள்  கொஞ்சம் பரவாயில்லை. அடுத்த ஊசி இன்னும் மூணுநாளில்.  பீதியிலேயே..... இருந்தேன்.

முதல் ஊசி போட்டதும்  சரியா ஒரு வாரத்தில் அதே நேரத்துக்கு ரெண்டாம் ஊசி. பயந்து நடுக்கத்தோடு போனேன்.  இந்த முறை நம்ம மருத்துவர் ஒரு சீனர்.  விசாரிப்புகள் எல்லாம் ஆனதும்  ஊசி போட்ட கையோடு,  முழங்காலில் கட்டி நின்ன திரவத்தை இன்னொரு ஊசியால் உறிஞ்சி எடுத்தார். நாற்பது மில்லி. அல்ட்ரா ஸ்கேனர் காண்பிக்கும் எல்லாத்தையும் பெரிய மானிட்டரில் பார்க்கலாம்.
பத்து நிமிட் ஆனதும் பயந்துக்கிட்டே  எழுந்து காலைக் கீழே வைச்சேன். அப்பாடா......   அவ்வளவா வலி இல்லை.  லேசா நொண்டிக்கிட்டு நடக்க முடிஞ்சது. ஆல்ரெடி மெய்ன் லங்டி ஹோ ச்சுக்கி. ஏகப்பட்ட வலி நிவாரணி மருந்துகள். கொஞ்சம் வலிகளை சமாளிக்க முடிஞ்சது. போனமுறை போலக் கொடுமை இல்லை.  இந்த ஊசி'மருந்து' வேலை செய்ய எட்டுவாரங்கள் ஆகுமாம். (நம்ம சொந்த ரத்தம்தானே ?  எதுக்கு எட்டுவாரம் ? ) முதல் ரெண்டு வாரங்களுக்கு காலுக்கு ஓய்வு கொடுக்கணுமாம். சரி.... கிடந்தால் ஆச்சு !

அப்புறம் ஒரு மாசம் கழிச்சு நமக்கு ஸ்பெஷலிஸ்டின் அப்பாய்ன்ட்மென்ட்.  அப்ப அவர் சொல்றார் , நல்லபடி குணம் தெரிய ஆறுமாசம் ஆகுமாம்.  அதனால் அடுத்த அப்பாய்ன்ட்மென்ட் இன்னும் ஆறுமாசம் கழிச்சுத்தான்.  அப்பவும் குணமாகலைன்னா மூணாவது ஊசி போட்டுக்கவேண்டி இருக்கும் )
இப்போதைய நிலை..... வலி கொஞ்சம் குறைஞ்சமாதிரி இருக்கு.  ஆச்சு மூணு மாசம், இல்லையோ ? 

 இந்தமுறை ஹாலோவீனும் தீபாவளியும் சேர்ந்தே வந்ததால்.... அது பாட்டுக்கு அது, இதுபாட்டுக்கு இதுன்னு... 

நம்ம எதிர்வீட்டில் இந்த ஹாலோவின் விழாவை ரொம்பவே பெரிய அளவில் கொண்டாடறாங்க.  மொத்தத் தெருவிலும்  இந்த ஒரு வீட்டில்தான் விழாவே ! கோவில் திருவிழா போலக் கொடியெல்லாம் ஏத்துவாங்க ! ஒரு மாசம் இருக்கும்போதே அலங்காரங்கள் செய்ய ஆரம்பிச்சுருவாங்க.... தினம் எனக்கு வேடிக்கை பர்க்கலாம். 




 பேரனைக்கூட்டிப்போய்க் காமிச்சோம். ஒன்னரை வயசாச்சே....  நடக்கத் தெரியும்போது போய்ப் பார்க்கத்தானே வேணும்.  எப்பவும் நம்ம ஜன்னுவுக்கு ஹாலோவீன் வேஷம்  ஒன்னு  போட்டுவிடுவேன். இந்த முறை இல்லை. ஒரு பூனையும் 12 எலிகளும் வாங்கி வந்தேன். ஹாலோவீன் 'மண்டையோடு டிஸைன்' இனிப்பு செஞ்சாச். 


நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலில் தாமோதர மாசம் நெய்விளக்கு ஏத்திட்டு வந்தோம்.  ப்ரஸாதமா  மலர்மாலை கிடைச்சது !

மறுநாள் தீபாவளி.     

6 comments:

said...

கொண்டாட்டங்கள் சிறப்பு.

கால்வலி ஊசி பற்றி அறிந்தேன்.  கால்வலி என்றால் எங்கே?  பாதமா, கணுக்காலா, முழங்காலா?  எச்சரிக்கை செய்யும் ஊசிக்குறிப்புகள் பயமுறுத்துகின்றன.

said...

கொண்டாட்டங்கள், அது சம்பந்தமான படங்கள் என அமர்க்களமாக இருக்கு.

ஆனால் பதிவின் கடைசியில் முழங்கால் வலி பகுதி திடுக் என இருந்தது. இப்போ பரவாயில்லை என்பது ஆறுதல்.

said...

அருமை, நன்றி

said...

வாங்க ஸ்ரீராம்,

கொண்டாட்டங்களை ரசித்தமைக்கு நன்றி !
நம்ம கால்வலி முழங்காலில் மையம் கொண்டுள்ளது. ஃப்ராக்ச்சர், நீர்கட்டுதல், அடுத்துள்ள தசையில் கிழிச்சல் என்று மும்முனைப்போர் ! ஆர்த்ரைடீஸ் பாதிப்பு அதிகம் என்பதால் அறுவை சிகிச்சை செய்ய இயலாதாம்.

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

ரசிப்புக்கு நன்றி. குணமாகப் பலநாள் செல்லும் என்பதால் பொறுமைகாக்க வேண்டியுள்ளது. மேலே நம்ம ஸ்ரீரமுக்குக் கொடுத்த பதிலில் பாருங்க.

said...

வாங்க விஸ்வநாத்,

மிகவும் நன்றி !