நாளை நாளைன்னு நாட்கள் கடந்து போனதை என்னன்னு சொல்ல ?
மனதின் வேகத்துக்கும் உடலின் தளர்வுக்கும் ஒத்துப்போகலை....... ப்ச்...... சோம்பிக்கிடந்த காலம், போய்த் தொலையட்டும்.
துளசிதளத்தின் பொறந்தநாளைக்கூட இங்கே உங்களோடு கொண்டாட முடியாமல் ஏதோ ஒரு தடங்கல்.....
இத்தனை வருஷங்களில் ரொம்பவே குறைந்த எண்ணிக்கையில் பதிவுகள் இருப்பது கடந்த ரெண்டு வருஷங்களில்தான். பதிவுகள் எழுதத்தான் முடியலையே தவிர..... மற்ற எல்லா வேலைகளும் நடந்துக்கிட்டுத்தான் இருந்தது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேணும்.
செப்டம்பர் நிகழ்வுகள்னு பார்த்தால்....... ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டமி, நம்மூர் செர்ரிப்பூக்கள் திருவிழா, புள்ளையார் சதுர்த்தி விழா, ஓணம் பண்டிகைன்னு வரிசைகட்டி வருமே !
இந்த வருஷம் ஓணம் பண்டிகை ஆகஸ்ட் மாசமே வந்துபோச்சு. நம்ம கேரளா அசோஸியேஷன் ஏற்பாடு செய்திருந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராகப் பிரபலப் பின்னணிப்பாடகர் எம் ஜி ஸ்ரீகுமார், குடும்பத்தோடு வந்து கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார்! உள்ளூர் நண்பர், மலையாளத் திரைப்பட இசை அமைப்பாளர்களில் ஒருவர் என்பது கூடுதல் சமாச்சாரம் ! வழக்கம் போல் வீகெண்டுக்கு நேர்ந்துவிட்டுருந்தோம்.
வீட்டு விசேஷமா அசல் ஓணம்/ வாமன ஜயந்திக்கு நம்ம ஜன்னுவுக்கு அலங்காரம் செய்ததோடு, த்ருக்காக்கரையப்பன் (ஓணத்தப்பன்) உருவங்களை நானே செய்து வச்சேன். அதுதான் இந்த வருஷத்து ஸ்பெஷல். ஒரு பாயஸம் செய்து, பழங்களோடும் சின்னதா ஒரு ஓணசத்யாவோடும் ஓணம் கொண்டாடியாச்சு.
சாயந்திரம் நம்ம புள்ளையார் கோவிலுக்குப்போனால், க்ருஷ்ணனுக்கு அபிஷேகம் செய்யும் வாய்ப்பும் கிடைச்சது !
இதுக்கு அடுத்தவாரமே க்ருஷ்ணாஷ்டமி ! கண்ணன் பிறந்தான், நம்ம கண்ணன் பிறந்தான்னு வீட்டிலும், நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலிலும், நம்ம சநாதன தர்மசபாவிலுமாக் கொண்டாடினோம். ஃபிஜி மக்களுக்கு எப்பவும் ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டமின்னா எட்டுநாள் கொண்டாட்டம். தினமும் சபாவில் பூஜை, ப்ரவசன் , ப்ரஸாதம், மஹாப்ரஸாதம்னு எல்லாம் பூரணமாக நடக்கும். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முதல்நாள் மட்டும் போய் வந்தோம். நம்ம வீட்டிலும் இந்த வருஷம் சாக்லேட் க்ருஷ்ணாதான்.
சுருக்கமா சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டுப் போகணும் இப்போ.....
செப்டம்பர் மாசம் ஆரம்பிச்சால் அது நம்மூருக்கு வஸந்தகாலம். உலகின் தென்கோள மக்கள் இல்லையோ நாங்க ! செர்ரிப்பூக்கள் மலரும் காலமும் வஸந்தத்தில்தான் என்பதால் இப்போ ஒரு பத்து வருஷமா, நம்மூர் ஹேக்ளி பார்க்கில் செர்ரிமரங்களைச் சாலையின் ஒருபக்கத்தில் சுமார் ஒரு கிமீதூரம் நட்டுவளர்த்து ஒரே சமயம் அவை பூத்துக்குலுங்க ஆரம்பிச்சதும் நாங்களும் செர்ரி ப்ளொஸம் ஃபெஸ்டிவல் நடத்தத் தொடங்கியாச்சு.
என் நினைவைப் பொறுத்தவரை (இங்கே குப்பை கொட்ட ஆரம்பிச்சு இது 36வது ஆண்டு ) வீடுகளிலும் சாலைகளிலும் அங்கொன்னு இங்கொன்னுன்னு செர்ரிமரங்கள் இருந்தனதான். நம்ம பழைய வீட்டிலும் வாசல் கேட்டுக்குப்பக்கம் செர்ரி மரம் ஒன்னு இருந்தது. பூத்து முடிச்சு, சின்னதாச் செர்ரிப்பழங்கள் கூட வரும். பறவைகளுக்குத்தான் கொண்டாட்டம். இப்போ இந்த செர்ரிப்பூக்கள் திருவிழாவில் நாம் பார்க்கும் மரங்கள் எதுவும் காய்ப்பதில்லை. வெறும் பூக்களை மட்டுமே காண்பிக்கும் வகை !
இந்த ஆண்டும் திருவிழாவுக்குப் போய் வந்தோம். எல்லாம் மிஞ்சிப்போனால் ரெண்டு வாரங்களுக்குத்தான். அப்புறம் ஒரே சமயம் பூக்களெல்லாம் புளியம்பூ போல நிறம் மாறிக் கொட்ட ஆரம்பிச்சுரும். இந்த ஆண்டு ரெண்டுநாட்கள் போய்வந்தோம். பொதுவாக நம்ம ஹரேக்ருஷ்ணா கோவிலுக்குப் போகும்போது இந்த வழியாகத்தான் போவோம். அதேபோல ஒருநாள் கோவிலுக்குப் போகும்போது, 'செர்ரித்தெரு'வில் அவ்வளவாக் கூட்டம் இல்லை, பார்க்கிங் செய்ய இடமும் இருக்கு என்பதால், கொஞ்சம் தோட்டத்தில் நடந்து படங்களை க்ளிக்கிவிட்டு, அப்படியே கோவிலுக்கும் போய் வந்தாச்சு.
அடுத்த ரெண்டாம்நாள் , எங்க யோகா குழுவினருடன் போவதாக ஏற்கெனவே முடிவு செய்திருந்தபடியால் அதையும் விட்டுவிடாமல் செர்ரிப்பூக்கள் திருவிழாவுக்குப் போயிட்டு, அப்படியே நம்ம HSS நடத்தும் கணேஷ் வொர்க்ஷாப்புக்கும் போய் வந்தோம். இந்த வருஷப் புள்ளையார் சதுர்த்திக்கு இப்போ நாம் செய்யப்போற கண்பதிதான்வீட்டுக்களிமண் ஸ்டாக் தீர்ந்துபோச்சு. இனி கடைகளில் தேடணும்.
புள்ளையாருக்கு ஒரு பீடம் தயாராக்கி, அதுலே அவரை உக்காரவச்சதும் நம்ம 'இவன்' வந்து பார்த்தான் :-)
ஒரேஒரு வகைன்னு பதாம், முந்திரி, தேங்காய் பூரணம் நிறைத்த பால்கேஸரி மோதகத்துடன் சின்ன அளவில் பொறந்தநாளைக் கொண்டாடியாச்சு.
கணேஷ் சதுர்த்தியும் நாலுமுறை கொண்டாடினோம். நம்மூரில் இப்போ ரெண்டு புள்ளையார் கோவில்கள்னு சொன்னது நினைவிருக்கோ ? கூடவே நம்ம வீட்டிலும் சநாதன் தர்ம சபாவிலுமா நாலுமுறை ! கோவில்னு வந்துட்டா..... பண்டிகைகளை வீக்கெண்டுக்கு ஒத்திப்போடக்கூடாதுதானே ? வெலிங்டன் நகரில் இருந்து நம்ம பண்டிட் வந்து விழாவைச் சிறப்பாக நடத்திக் கொடுத்தார்.
ஒன்னுமெ இல்லாமலிருந்த காலம் போய், இப்போ ஏழு கோவில்கள் நமக்கு வந்துருக்குன்னு நினைக்கும்போது ப்ரமிப்புதான் ! கோவில் என்றதும் கோபுரமும் ப்ரகாரமுமாக் கற்பனை பண்ணிக்க வேண்டாம். அப்படி ஒன்னு இன்னும் வரலை. ஆனால் வரப்போகுது, கூடிய சீக்கிரம் !
நம்ம அன்பு விநாயகர், கோபுரம் வச்ச கோவிலுக்குக் குடிபோகப் போறார் ! அவருக்கு நம்ம ஆறுமாதப் பேரனை முதல்முறையாக் கொண்டுபோய் காமிச்சோம். புள்ளையார் சதுர்த்தி ஸ்பெஷல் தரிசனம் !
12 comments:
படங்கள் - உங்கள் தளத்தின் ஸ்பெஷல் எப்போதும்!
ஆனை எப்போ வரி போட்டு வரி யானை ஆச்சு? ஆனை படம் பாருங்கள்.
அருமை நன்றி
இருவரும் நலம் என்பது அறிந்து சந்தோஷம்
படங்களும் கொண்டாட்டங்களும் அருமை
வாங்க ஸ்ரீராம்,
படங்களாவது குறிப்பிடும் விதம் அமைகிறதேன்னு சந்தோஷபட்டுக்கறேன் ! எழுத்துதான் ஒத்துழைக்கலை.
வாங்க ஜயக்குமார்,
இங்கே வரி கட்டாமல் யாருமே தப்பிக்க முடியாது. அதைத்தான் சிம்பாலிக்கா வரியானை சொல்லுது :-)
மகளின் அன்பளிப்பு !
வாங்க நெல்லைத் தமிழன்,
அக்கறையான விசாரிப்புக்கு இங்கேயும் நன்றி சொல்லிக்கறேன்.
இருவரும் இப்போது நலமே!
படங்களை ரசித்தமைக்கு நன்றி !
உள்ளூர் நண்பர், மலையாளத் திரைப்பட இசை அமைப்பாளர்களில் ஒருவர் என்பது கூடுதல் சமாச்சாரம் ! //
அந்த நபர் யாருன்னு யோசிக்கிறேன்.
நிகழ்வுகள் படங்கள் எல்லாமே சூப்பர்.
ஓணத்தப்பன் - ரொம்ப அழகா செஞ்சுருக்கீங்க, துளசிக்கா. அலங்காரம் எல்லாமே சூப்பர். அதுல ஓணம் சத்யா ஆஹா!
கீதா
வாங்க கீதா,
இவர் பெயர் ஜஸ்டின் ஜேம்ஸ். நாலு இளைஞர்கள் (உலகின் வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் ) சேர்ந்து ஒரு இசைக்குழு 4musics என்ற பெயரில் வச்சுருக்காங்க. மோஹன்லாலின் ஒப்பம் என்ற படத்துக்கு இவுங்க இசையில் சில பாட்டுகள் போட்டுருக்காங்க. M G Sreekumar பாடியிருக்கும் சின்னம்மா அடி குஞ்ஞிப்பெண்ணம்மா பாட்டு இந்தப் படத்தில்தான் வருது. இந்தப் பாட்டை நம்ம ஓணம் விழாவுக்கு வருகைதந்த ஸ்ரீகுமார் மேடையில் பாடினார்.
ஓணத்தப்பன் கார்ட்போர்டுலே செஞ்சேன் :-) களிமண்ணுக்கு அப்போ சான்ஸ் இல்லை.
வாங்க விஸ்வநாத்,
வருகைக்கு நன்றி !
உடனே வர முடியவில்லை சற்று பிஸி.
பதிவுகள் கண்டது மகிழ்ச்சி.
விநாயகர் கொண்டாட்டம் அருமை.
வாங்க மாதேவி,
உண்மைதான்ப்பா.... இப்பெல்லாம் ஏதேதோ வேலைகள் இடையிடையே வந்து கொஞ்சம் பிஸியாத்தான் போயிருது வாழ்க்கை !
நேரம் கிடைக்கும்போது வாங்க. பிரச்சனையே இல்லை !
Post a Comment