Wednesday, August 10, 2022

கோவிலில் முதல் கல்யாணம்!

நேத்துதான் சிவலிங்கம் ப்ரதிஷ்டை ஆச்சு. இன்றைக்கு  அங்கே ஒரு கல்யாணம் நடக்கப்போகுது.   நிச்சயதார்த்தம், நம்ம சநாதன் ஹாலில் நடந்தது. நம்மைப் போக விடாமல்  கோவிட் முடக்கிவிட்டது அப்போதான்.  எல்லாம் ஃபிஜி ஸ்டைல் கல்யாணம். அதுவும்  மணமக்கள் மந்த்ராஜிகள் !  ( தென்னிந்தியர்கள் எல்லோரும் மத்ராஸிகள் இல்லையோ ! ) தமிழ் மக்கள் கல்யாணத்தை விடமுடியுமோ ?  மணமகள்  நம்ம தோழியாக்கும், கேட்டோ !மாரியம்மன் மேல் அளவில்லாத பக்தி உடைய தோழி, வருடாந்திர விழாவில் கரகம் சுமந்து வருவாங்க.   

சாயங்காலம் ஆறரைக்குக் கல்யாணக் கொண்டாட்டம் ஆரம்பம். சரியான நேரத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். சிம்பிளான ஏற்பாடுகள்.  அருமை.
இப்பல்லாம் கல்யாணங்களில் ஆடம்பரம் அதிகமாகிக்கிட்டுப் போகுதுல்லெ ?  இந்தியாவில் மட்டுமில்லை.... வெளிநாட்டு இந்தியர்கள் கல்யாணங்களும் வரவர இப்படித்தான்... பொதுவா ஃபிஜி இந்தியர்கள் வாழ்வில் சினிமா அதிகம் தாக்கம் ஏற்படுத்தும் சமாச்சாரம்.  சினிமாவில் பார்ப்பதுதான் இந்தியான்னு நினைக்கும் சனம்.  நாங்கள் போன புதுசுலே இந்தியாவைப் பத்தி ஆயிரம் கேள்விகள் கேப்பாங்க.  ஆச்சு நாப்பது வருஷம். அப்பெல்லாம் உலகம் சுருங்கவே இல்லையே... நெட்டா பாழா.... அப்போ ஃபிஜியில் டிவி ஸ்டேஷன் கூடக்கிடையாது. வீடியோ கேஸட் காலம்.  சினிமாவைத்தவிர வேறு பொழுதுபோக்கே கிடையாது.

இப்ப எதுன்னாலும் இந்தியாவில் இருந்து வரவழைக்க முடியுது.  சினிமா செட் போல அலங்காரங்கள் வரவழைச்சுக் கல்யாண மேடைகள்  அமைச்சுடறாங்க. இந்த  அலங்காரங்கள் செஞ்சுதரும் புது பிஸினஸ்களும் ஆரம்பிச்சுருக்கு. நண்பர் மகளுக்குக் கல்யாணமுன்னு போனப்ப,  அலங்காரத்தைப் பார்த்து வாய் பிளந்து நின்னது உண்மை !

நம்ம  சநாதன் தர்ம சபையின் பண்டிட்தான்  கல்யாணம் நடத்தித்தரப் போறார். அவரும் ரெடியாக  வந்துட்டார். தென்னிந்திய  சன்மார்க்க ஐக்கிய  சங்கத்தின் தலைவி,  கல்யாண வேலைகளைக் கவனிச்சுக்கிட்டு இருந்தாங்க.
கருவறைக்கு முன் இருக்கும் மண்டபத்தில் கல்யாணம் . நேற்று பிரதிஷ்டை ஆன சிவன், சாட்சியாக  இருக்கார். 

ஏழுமணிக்கு மாப்பிள்ளை வந்திறங்கினார்.   பண்டிட் சொற்படி அக்னி வளர்த்துத் தாலிகட்டல் ஆச்சு. எதிரில் இருக்கும் கூடாரத்தில் இருந்து கல்யாணச் சடங்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.  சரியா முக்கால் மணிநேரத்தில்   கல்யாணம் நடந்து முடிஞ்சது.



அப்புறம் ஃபோட்டோ செஷன்.  மணமக்கள் கூடாரத்துக்கு வந்து  எல்லோரையும் தனிப்பட விசாரிச்சு நன்றி சொன்னாங்க. கல்யாண விருந்து ஆரம்பம் ஆச்சு.  டின்னருக்குப் பிறகு தெருக்கூத்து நிகழ்ச்சி இருக்கு. நாம்தான்  சாப்பாடானதும்  மணமக்கள் நல்லா இருக்கட்டுமுன்னு வாழ்த்திட்டுக் கிளம்பிட்டோம்.


பண்டிட், என்னிடம் கல்யாணம் சௌத் இண்டியன் முறையில் சரியானபடி  நடந்ததான்னு  விசாரிச்சார். என்ன இருந்தாலும் நான் ஊர்க்காரி, அதிலும் பக்கா மத்ராஸி இல்லையோ !  'இன்னும் நிறைய சடங்குகள்  இருக்கும், குடும்ப வழக்கத்தின்படி.  அக்னியை வலம் வருதல் முக்கியம்'னு  சொன்னேன்.  'ஆமாம். வட இந்தியத் திருமணங்களிலும் சப்தபதி முக்கியமு'ன்னு சொன்னார்.    
சிம்பிள் & ஸ்வீட்டாக  இருந்ததைப் பாராட்டத்தான் வேணும். வாழ்க மணமக்கள் ! 




5 comments:

said...

மணமக்களுக்கு வாழ்த்துகள். கல்யாணம் ரொம்ப சிம்பிள். சாப்பாடு மெனு என்னவோ?

said...

அருமை நன்றி

said...

அருமையான பதிவு மேடம். மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

said...

ரொம்ப நாள் கழித்து ஒரு சிம்பிள் கல்யாணம் பார்த்தது மகிழ்ச்சி. மணமக்களுக்கு வாழ்த்துகள்.

கீதா

said...

சிவனார் சந்நிதியில் கல்யாணம் மகிழ்ச்சி வாழ்க மணமக்கள்.