மவொரி கிராமத்துலே இருந்து கிளம்பி, ஊருக்குள்ளே இருக்கும் ஷாப்பிங் சென்டருக்குப் போய் , அங்கே இருந்த ஃபுட்கோர்ட்டில் லஞ்சுக்கு எதாவது ஆப்டுமான்னு பார்த்தால் இண்டியன் ஸ்டார் எக்ஸ்ப்ரெஸ்னு ஒன்னு கண்ணில் பட்டது. 'ச்சனா பட்டூரா காம்போ' ஒன்னு வாங்கி, லஞ்சை முடிச்சுட்டு அடுத்த இடத்துக்குப் போனோம். போற வழியில் நம்ம ஸ்வாமிநாராயண் கோவில் கண்ணில் பட்டது. உச்சிகால பூஜைக்குப்பின் கோவில் மூடி இருக்குமே.... சாயங்காலமா வரணும். மூளையில் முடிச்சு :-)
ரெட்வுட் ஃபாரஸ்ட்னு ஒரு இடம். இங்கே இருக்கும் மரங்கள் எல்லாம் மனிதக் கைகள் நட்டதே ! இப்போ ஆச்சு 120 வயசு ! ஆயிரத்துத்தொளாயிரத்துலே ஆரம்பிச்சு இருக்காங்க. ஆரம்பத்துலே 170 வகை மரங்களை நட்டாங்களாம். அதுலே போனதுபோக இப்ப மிஞ்சுனது கொஞ்சமே ! அதுக்கப்புறமும் கொஞ்சம் கொஞ்சமா இந்த 120 வருஷத்துலே மரம் நடறதை மட்டும் விடவே இல்லை. மொத்தம் லக்ஷத்து முப்பத்தியஞ்சாயிரம் சொச்சம் (135907.96 ) ஏக்கர் பரப்பளவில் இருக்கும் வாகாரேவாரேவா காட்டில் இந்த ரெட்வுட் பகுதி, அதுபாட்டுக்கு ஒரு 14,000 ஏக்கர் அளவில் பரந்து விரிஞ்சு கிடக்கு. இதில் கலிஃபோர்னியா ரெட்வுட் என்னும் மரங்கள் மட்டும் 15 ஏக்கர் அளவில் ! காட்டுக்குப் பெயர் கொடுத்தவை இவை :-)
1970 வரை, பொதுமக்கள் வந்து போக அனுமதி இல்லை. அதுக்கப்புறம்தான் காட்டைத் திறந்து விட்டுருக்காங்க. சனம், நடைப்பயிற்சி, நாயை நடக்கக்கூட்டிப்போகும் நாய்வாக், சைக்கிள், குதிரை சவாரி, குடும்பத்தோடு பிக்னிக் இப்படி அனுபவிச்சுக்கிட்டு இருக்கு. ஒன்னும் இல்லைன்னா.... தனிமையிலே இயற்கையோடு இருக்கறதும் வேண்டித்தானே இருக்கு! உண்மையில் ஓங்கி உயர்ந்து நிற்கும் பெரிய மரங்களடியில் நாம் போய் நின்னால்..... மனுசன் எத்தனை சிறியவன்னு தோணும் எனக்கு! இங்கே எங்கூர் பார்க்கில் கூட இருபதுஆள் உயர மரங்கள் இருக்கு! எல்லாம் 165 வருசக்கணக்கு !
இந்த ரெட்வுட் பகுதியில்தான் ட்ரீவாக் னு தரைக்கு மேலே நடந்து போகும் விதமா ஒரு நடைபாதை போட்டுருக்காங்க. ஐடியா சூப்பர் ! 2015 ஆம் வருஷம் டிஸம்பர் மாசக் கடைசியில் வேலை முடிஞ்சு, பொதுமக்களுக்குத் திறந்து விட்டாச்சு!
மொத்தம் 700 மீட்டர் தூரம் ! உலகத்துலேயே நீளமான பாதை என்ற பெருமை வேற!! பெரிய பெரிய மரங்களுக்கிடையில் மேலே தொங்குபாலம் போலப் போகுது. ஒவ்வொரு மரத்தைச் சுத்தியும் வட்ட வடிவ மேடை. அங்கே உக்கார்ந்து இயற்கையை ரசிக்க இருக்கைகள்.
118 வயசான மிகப்பெரிய மரங்கள் 27 ஐ இணைச்சு 28 தொங்குபாலங்கள். இதுலே ஒரு சில ஜங்ஷன்கள் வேற !
இங்கேதான் நாம் போய்க்கிட்டு இருக்கோம் இப்போ! கார்பார்க்கில் வண்டியை நிறுத்தும்போதே தலைக்கு மேலே பாலங்கள், பாதைக்குக் குறுக்கால் போகுது!
சுத்திவர ஏராளமான மரங்கள் ! கீழே மட்டும் பார்த்துட்டுப் போகலாமுன்னா இலவசம்தான். மேலே ஏறி நடக்கணுமுன்னா ஒரு கட்டணம் உண்டு.
இதுலே பாருங்க..... இந்த ஏற்பாட்டைத் திறந்து வச்ச அடுத்த வருஷமே இன்னொரு புது ஐடியா தோணிப்போய், ராத்ரியில் பாலத்துலே நடந்துக்கிட்டே காட்டைப் பார்க்கும் விதமா விளக்குகள் தொங்க விட்டுருக்காங்க. சூப்பர் ஹிட் !
பகலில் காட்டுப் பாலங்கள் மேலே நடந்து போய்வர ஒரு கட்டணம். ராத்ரியில் போய் வர ஒரு கட்டணம். பகலிலும் ராத்ரியிலும் பார்க்கணுமுன்னா காம்போ வகையில் ஒரு கட்டணம். உண்மையில் இந்த காம்போ டிக்கெட் மலிவுதான்.
வெறும் அஞ்சே டாலர் கூடக் கொடுத்தால் போதும். நமக்கோ..... கண் அவ்வளவா சரியில்லை. ராத்ரியில் பார்க்கிறேன்னு நடந்து போய் எங்கியாவது விழுந்து வச்சா ? அதுவும் ஊர் சுத்திப் பார்க்க வந்த இடத்தில்? இதுக்குத்தான் நான் எப்பவும் சொல்றது, கொஞ்சம் சின்ன வயசாவும், ஆரோக்கியமான உடல் நிலையும் இருக்கும்போதே ஊர் உலகத்தைச் சுத்திப் பார்க்கக் கிளம்பணும்னு..... ஹூம்.... எங்கே முடியுது ? கடமைகள் துரத்துதே.....
பகல் நடைக்கு மட்டும் டிக்கெட் வாங்கிக்கிட்டோம். சின்னதா ஒரு கூண்டு மறைப்புக்குள் இருக்கும் படிகளில் ஏறியாச்சு. பாதை அங்கிருந்து தொடங்குது.
ரொம்ப சாதுவான உயரம், வெறும் ஆறு மீட்டர்தான். ரெண்டு பக்கங்களிலும் மரங்களை ரசிச்சுக்கிட்டுப் போகப்போக உயரமும் கூடிக்கிட்டே போய்க் கடைசியில் பாலத்துலேயே கட்டி விட்டுருக்கும் படிகளில் ஏறிப்போனா..... மேலே சின்னதா ஒரு குடில் அமைப்பு. நாம் இப்போ 25 மீட்டர் உயரத்துலே !
மரப்பலகைத் தரையில் கண்ணாடி பதிச்ச இடங்கள் ரெண்டு. கீழே பார்க்கும்போது சட்னு ஒரு பயம் வந்தது உண்மை. ( இதைவிடவும் உயரமான, 192 மீட்டர் உள்ள ஆக்லாந்து ஸ்கை டவரில் இப்படித்தான் கண்ணாடித்தரை போட்டு வச்சுருக்காங்க. அங்கேயும் பயந்துக்கிட்டேதான் அதன்மேல் நடந்து போனேன். அப்போ 20 வயசு குறைவு )
நல்ல உறுதியான கட்டமைப்புதான். மரங்களை இணைச்சுப் போட்டுருக்கும் தொங்கு பாலத்தின் முறுக்குக் கம்பிகள் (2596) 12 டன் எடை தாங்குமாம். ஒரே சமயத்துலே ஒரு பாலத்துலே அதிகபட்சமா 8 பேர் போகலாம். ஜெர்மனியில் இருந்து நிபுணர்களை வரவழைச்சு ஆறே வாரங்களில் கட்டுமானம் முடிஞ்சுருக்கு ! விவரங்கள் எல்லாம் அங்கங்கே போட்டு வச்சுருக்காங்க. இதைத் தவிர மரங்களின் வகைகள், தகவல்கள், சின்னப்பிள்ளைகளுக்கான க்விஸ் போன்றவைன்னு போகும் வழியில் ஏராளம். காடு விரும்பிகளின் சொர்கம்!
கைக்குழந்தைகளுடன் வருபவர்கள் வசதிக்காக, Baby capsule பொருத்தி இருக்கும் தள்ளு வண்டிகள் வச்சுருக்காங்க! எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போனது பயணிகள் சௌகரியத்துக்காக ஒவ்வொன்னையும் யோசிச்சுக் கவனமா செயல்படுத்தும் சுற்றுலாத்துறையின் சேவை. எங்கே போனாலும் சுத்தமான கழிப்பறைப்பற்றிச் சொல்லவே வேணாம். ஹப்பா.... என்ன ஒரு ஆசுவாஸம், குறிப்பாப் பெண்பயணிகளுக்கு !
நாப்பது நிமிட்லே இந்த நடையை முடிக்கலாமாம். எனக்கு அதைப்போல ரெண்டு மடங்காச்சு. போனேன், வந்தேன்னு முடியுதா ? ஒவ்வொன்னையும் பார்த்து, ரசிச்சு, க்ளிக்கின்னு எவ்ளோ இருக்கு, இல்லே :-)
மரங்களை இணைச்சுன்னு சொல்றோமே தவிர எந்த ஒரு மரத்தையும் தொடாமல், நோகடிக்காமல்தான் மரப்பாதையே போட்டு வச்சுருக்காங்க. மரம் இன்னும் வளரும்போது உடல்பாகம் பெருத்துப்போகும்தானே.... அதுக்கேத்தமாதிரி சுற்றளவின் இடைவெளியைக்கூடப் பெருசு பண்ணிக்கும் வகையில் பொருத்தி வச்சுருப்பது சிறப்பு !
மரநடை என்ற புது அனுபவம் கிடைச்ச மகிழ்ச்சியில் அங்கிருந்து கிளம்பி ஊருக்குள் நுழைஞ்சு போகும் வழியில் திரும்பக் கண்ணில்பட்ட ஸ்ரீ ஸ்வாமி நாராயண் கோவிலாண்டை நிறுத்தி எத்தனை மணிக்குக் கோவில் திறப்பாங்கன்ற விவரம், வாசல் போர்டில் இருக்கான்னு பார்க்கப்போனால்..... நாலு மணியாம். ஆனால் கோவில்கதவு ஒரு பக்கம் திறந்திருக்கு! அழகான வேலைப்பாடு ! உள்ளே போனால் இன்ப அதிர்ச்சி ! அச்சு அசல் எங்கூர்க் கோவில் போலவே தரையில் போட்டுருக்கும் கார்பெட் உட்பட.
எங்கூர் கோவில் படம் மேலே...ப்ச்....
என்ன ஒன்னு..... எங்கூரில் வெளியே தெருவில் இருந்து பார்த்தால் கோவில் என்ற அடையாளமே இருக்காது. ஆனால் ரோட்டோருஆ வில் கோவில், ஹிந்துக்கோவிலாவே இருக்கு! எங்க கோவிலை விட நாலு வயசு குறைவு வேற !
உள்ளே பண்டிட் இருந்தார். அவரிடம் கொஞ்சநேரம் பேசிட்டு, அனுமதியுடன் படங்களை எடுத்துக்கிட்டேன்.
கீழே பேஸ்மென்ட்டில் பெரிய டைனிங் ஹால். அடுத்தாப்லே கார்பார்க்னு ரொம்பவே வசதியாத்தான் கட்டி இருக்காங்க. இடம் நல்லதா கிடைச்சுருக்கு. எங்க ஊர் ரொம்பப் பெரிய ஸிட்டி என்பதால்..... சட்னு இடமெல்லாம் அப்படி விஸ்தாரமா வாங்கிட முடியாது. ஏற்கெனவே இருந்த ஃப்ரீமெய்ஸன் ஹாலைத்தான் வாங்கி உள்ளே சந்நிதி மேடை கட்டி இருக்கோம்.
பக்தர்களுக்குப் பார்க்கிங் எல்லாம் தெருவிலே அக்கம்பக்கம்தான்.
இந்தக் கோவில் அழகைப் பாராட்டிச் சொன்னதும் பண்டிட்டின் முகம் மலர்ந்தது. ப்ரஸாதமாப் பழத்துண்டுகள் எடுத்துக்கிட்டோம்.
நம்ம மோட்டலுக்குக் கொஞ்சம் முன்னாலேயே ஒரு ஷாப்பிங் சென்டர் இருப்பதைக் கவனிச்சுட்டு அந்த வளாகத்துக்குள்ளே போய் நோட்டம் விட்டதில் நாலைஞ்சு உணவுக்கடைகள் இருப்பதைக் கவனிச்சு வச்சுக்கிட்டோம். பயணத்துலே இதையெல்லாம் மனசுக்குள் குறிச்சு வச்சுக்கணும்,ஆமா. இங்கிருந்து நம்ம அறைக்கு ரெண்டே கிமீதான். அஞ்சு மணிக்கு முன்னாலே அறைக்கு வந்து சேர்ந்தோம்.
புதுப்பால் வந்துருக்கு. நல்லதா ஒரு காஃபியும், கைவசம் இருந்த நொறுக்ஸுமா ஆச்சு. நடை அதிகமானதால் லேசா கால்வலி ஆரம்பிச்சதும் கொஞ்சம் ரெஸ்ட். எட்டுமணி வரை, டிவி, வைஃபைன்னு அவரவர் பொழுது போக்கு.
ராச்சாப்பாட்டுக்கு ஒரு பீட்ஸா. ஃபோன் ஆர்டர் கொடுத்துட்டு, காமணி கழிஞ்சதும் போய் வாங்கிவந்தோம். ரெண்டு கீமீதானே....
சாப்பாடானதும் ஏரிக்கரை வரை போகலாமான்னு யோசனை. அதான் வாசலில் இருந்தே தெரியுதே... அது போதும்னு முட்டிவலி சொல்லிருச்சு. ஆய்க்கோட்டே.....
நாளைக்கும் இதே ஊரில் தங்கல் என்பதால்...... வேறென்ன கிடைக்குதுன்னு பார்க்கணும்...
தொடரும்........ :-)
8 comments:
அருமை நன்றி
சிறப்பான தகவல்களும் படங்களும்.
மிகவும் ரசித்தேன்.
வசதிகள் செய்து தரும் சுற்றுலாத் துறை பாராட்டுக்குரியது! பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
அருமையான விவரங்கள், படங்கள். நன்றி.
இப்படியும் ஒரு காடு ஆச்சரியம்! சூப்பர்.
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க வெங்கட் நாகராஜ்,
சுற்றுலாத்துறை இந்தக் காலத்தில் எவ்வளவு சிறப்போ.... அவ்வளவு நிதி வரவு நாட்டுக்கு! நம்ம இந்தியாவில் இன்னும் சிறப்பாச் செயல்பட்டால் வருமானத்தை அள்ளலாம். வேலை வாய்ப்பும் பெருகும். இதெல்லாம் எப்போ நடக்குமோ ? ஏக்கம்தான்......
வாங்க பானு,
வருகைக்கு நன்றிப்பா !
வாங்க மாதேவி,
நல்லா உக்கார்ந்து யோசிச்சுருக்காங்க, இல்லே?
Post a Comment