Friday, December 28, 2018

தெய்வம் காட்டிய வழி.... (பயணத்தொடர், பகுதி 47 )

காலையில்  க்ளிக்ஸ் , செல்ஃபீ  கடமைகள் முடிச்சேன். நந்திதான் முகம் காட்டலை :-)  எட்டுமணிக்குக் கீழே போய் ப்ரேக்ஃபாஸ்ட் ஆச்சு.  கொஞ்சம் நல்லாதான் சாப்பிடணுமாம். இன்றைக்கு ஒரு 210 KM பயணம் இருக்குன்னார் 'நம்மவர்'!


செக்கவுட் செஞ்சு ஒன்பது மணிக்குக் கிளம்பணும். வரவேற்பில் இருக்கும் ஒரு படம் எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு. அப்பனும் புள்ளையுமா என்ன ஆட்டம்....  கூடவே அந்த  மாடும்.... :-)
இந்த ஹொட்டேலுக்கு எதிர்வாடையில் சில ரதங்கள் !  நேரா  சொர்கம்தான் கேட்டோ!!!   சும்மாச் சொல்லக்கூடாது, ரொம்பவே அழகான டிஸைன்ஸ் !  பேசாம ஏறிப் படுத்துக்கலாம்!!!   சென்னையில் இப்படிப் பார்த்த நினைவில்லை !
வரவேற்பில் நமக்கு ஒரு அண்ணாமலையார் & உண்ணாமுலை அம்மன் படம் (குட்டியூண்டு!) நினைவுப்பரிசாகக் கொடுத்தாங்க.  ரிஸப்ஷனிஸ்ட் கூட ஒரு க்ளிக் ஆச்சு. கடமை முக்கியம், இல்லையோ!
கிரிவலத்தில் இருக்கும் அஷ்டலிங்கங்களில்  முதல் லிங்கமான இந்திர லிங்கத்தை நேத்து தரிசனம் செய்ய முடியலையேன்னு இப்போப் போகும்போது தரிசனம் செஞ்சுக்கலாமுன்னு அங்கே போனோம்.  போகும் வழியிலேயே  சாலையைப் பார்த்தபடி  ஸ்ரீகெங்கையம்மன்!
இன்றைக்கு ஞாயிறு என்பதால் கடைவீதி ஆரவாரங்கள் இன்னும் ஆரம்பிக்கலை.   இந்திரலிங்கம்  சந்நிதியிலும் கூட்டம் இல்லை. தெருவில் இருந்து உள்ளே சாய்வான படிகள் கீழே போகுது!


இந்திரன் பூஜித்த சிவலிங்கம். இந்த சந்நிதிக்கு எதிரே இந்திராணியம்மன் சந்நிதி இருக்கு. மூடி இருந்தது. தரிசனம்  முடிச்சு ஊரை விட்டு அகலும் போது பூதநாராயணர்  கண்ணில் பட்டார்!



சின்னப் பாலகனா கொழுக் முழுக்ன்னு  இருக்கார் இவர்.  கம்சனால் ஏவப்பட்ட பூதகியின்  பாலை முழூசுமாக் குடிச்ச முகம், கூடவே அவள் உயிரையும்தான்!

தெருமுனைக்கோவில்தான். வாசலில் அழகான ஆஞ்சி !  பட்டர்ஸ்வாமிகள்  நல்லா தரிசனம் பண்ணி வச்சார். படம் எடுத்துக்க அனுமதியும் கொடுத்தார். அவரே  முந்தி ஒருக்காச் சிறப்பாச் செஞ்ச  அலங்காரப் படத்தை,  அவர் செல்லில் இருந்து என் செல்லுக்கு ஷேர் செஞ்சும் கொடுத்தார்!  இந்தக் கோவிலைப்பத்திப் பத்திரிகையில் (தினமலர்- ஆன்மிக மலர்) வந்த  கட்டுரையை அங்கே ஃப்ரேம் போட்டும் வச்சுருக்காங்க.
 பிள்ளைகளின் அறிவாற்றலைப் பெருக்கும் பெருமாள்  இவர்!!
இன்றையப் பயணத்தில் பரிக்கல் நரசிம்ஹரைத் தரிசனம் செஞ்சுக்கிட்டுப் போகணும் நாம்.  நெருங்கிய தோழியின் இஷ்ட தெய்வம் ! கூகுள் சொன்ன வழியில் போய்க்கிட்டு இருக்கோம். ஒரு இடத்தில் சாலையில் ஏதோ பழுது பார்ப்பதால்  மாற்றுப்பாதையில் போக வேண்டி இருந்துச்சு.  அறுவடை செஞ்சதைக் காயப்போடப்  பப்ளிக் ரோடுதான் ......  வண்டிகளின் சக்கரத்தில்  மாட்டிக்கிட்டா  எவ்ளோ கஷ்டம்?  களத்துமேடுன்னு ஒன்னு இருக்குமே... அதெல்லாம் என்ன ஆச்சு? ப்ளாட் போட்டு வித்துட்டாங்களா என்ன?


 வயல்களுக்கு நடுவில் போகும் சின்ன ரோடில் போகும்போது தற்செயலா ஒரு  தகவல் கண்ணில் பட்டுச்சு. குவாகம் 2 கிமீ. ஆஹா......   ரெண்டே ரெண்டு கிலோ மீட்டரா? போயிட்டே போகலாமுன்னு  ரமேஷிடம் சொன்னேன்.

கூத்தாண்டவர் கோவில்!! நம்ம திருநங்கைகளுக்கான விசேஷக் கோவில் இது!

முந்தி ஒருக்கா ஒரு பதிமூணு வருஷங்களுக்கு முன் மகளுக்குச் சொன்ன கதையை இங்கே கீழே கொடுத்துருக்கேன், பாருங்க.  முழுப்பதிவு இங்கே! 


மஹாபாரத யுத்தம் ஆரம்பிக்கப் போகுது.அதுக்கு முன்னாலே, எடுத்த காரியம் ஜெயமாகணுமுன்னு சாமியை வேண்டிக்கிட்டு ஏதாவது பலி கொடுக்கற வழக்கத்தின்படி பலி ஏற்பாடு ஆகுது. இந்தமுறை வேண்டிக்கற விஷயம் ரொம்பப் பெருசுன்றதாலே ஒரு மனுஷனையே பலியாக் கொடுக்கணுமுன்னு தீர்மானமாச்சு.

எல்லா நல்ல அம்சங்களும் பொருந்திய மனிதனை, சாமிக்குன்னு பலி கொடுக்கணும்.இதுக்கு யாரு பொருத்தமா இருக்கறாங்கன்னு பார்த்தா, அர்ஜுனனுடைய மகன் அரவான் சரியான ஆளா இருக்கான். அவனைக் கேட்டப்ப அவன் சரின்னு ஒத்துக்கிட்டான். நாளைக்கு அவனைப் பலி கொடுக்கப் போறாங்க.பாவம். ச்சின்ன வயசு!

அவனுடைய கடைசி ஆசை ஏதாவது இருந்தா, அதை நிறைவேற்றலாமுன்னு அவன் கிட்டே கேக்கறாங்க. 

அதுக்கு அவன்   சொல்றான், 'எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. அதாலே பெண்சுகம் என்னன்னு தெரியாது. நான் பலியாகறதுக்கு முன்னாலெ அதைப் பத்தித் தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு' ன்னான்.

மறுநாள் சாகப் போறவனைக் கல்யாணம் செஞ்சுக்க யாரும் முன்வரலை.இன்னைக்குக் கல்யாணம். நாளைக்கு விடோன்னா யாரு வருவாங்க. கிருஷ்ணபகவான் பார்த்தாரு. இது சரியாவராதுன்னு, தானே பெண்ணா உருமாறிட்டாரு. அரவானைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு, அன்னைக்கு இரவு அவனோட மனைவியா இருக்காரு.

மறுநாள் அரவானை பலி கொடுத்துடறாங்க. கிருஷ்ணன் மறுபடி ஆணா மாறிடறாரு. அரவானோட மனைவி அரவாணி.

அதனாலே ஆணா இருந்து பெண்ணா மாறினவங்களை அரவாணின்னு சொல்லணும். இப்போ திருநங்கைன்னு சொல்றோம்! 

முதல்முதலில் நான் பார்த்த அரவான் சந்நிதி சிங்கையில் சவுத் ப்ரிட்ஜ் ரோடு மாரியம்மன் கோவிலில்தான்!  அந்தப் பதிவு இங்கே!  விருப்பம் இருந்தால் க்ளிக்கலாம் :-)


 கூவாகம் கோவில் ஒன்னும் அவ்வளவு பெருசா இல்லை. அதுக்குமுன்னால் வெளியே பெரிய திறந்தவெளி முற்றம்!
நமக்கிடதுபக்கம் ஒரு பெரிய ஆஞ்சி சிலை.  கண்ணெதிரே பெரிய முன்மண்டபமும் அதையொட்டி அர்த்தமண்டபம், அதுக்குப்பின் கருவறை!
முன்மண்டபத்துமேலே ரொம்பவே அழகான சுதைச்சிற்பங்கள்.!
உள்ளே போனப்ப, கருவறை அர்த்தமண்டபத்தில்  நாலுபேர். இப்போ எங்களுடன் அறுவர். பூசாரி ஐயா, நாங்க ரெண்டு பேர்,  ஒரு திருநங்கையும், அவர் பெற்றோர்களும்.  ஒரு பெரிய தாம்பாளத்தட்டில் பூச்சரங்களும், ரெண்டு பூமாலைகளும், தேங்காய் பழங்கள் வெற்றிலைபாக்குன்னு  வரிசை வச்சதுபோல் வச்சுருந்தாங்க.
கருவறை அரவான் கழுத்தில் இருந்து மஞ்சக்கிழங்குடன் இருந்த மஞ்சள் கயிறைப் பூசாரி ஐயா போய் எடுத்துக்கிட்டு வந்து அந்த திருநங்கை கையில் கொடுத்தார். கைகூப்பிக் கும்பிட்டுக்கிட்டு இருந்தவங்க, அதை வாங்கித் தன் கழுத்தில் கட்டிக்கிட்டாங்க. பூமாலைகளில் ஒன்னு அரவான் (மூலவர்) கழுத்திலும் இன்னொன்னு அவர் மனைவி கழுத்துக்குமா ஆச்சு. அரவானை விழுந்து கும்பிட்டக் கையோடு, தாய்தகப்பன் கால்களில் விழுந்து கும்பிட்டாங்க. அந்தத் தாயின் கண்களில் மளமளன்னு கண்ணீர் பார்த்ததும் எனக்கும் கண்ணுலே தண்ணி வந்துருச்சு...ப்ச்... பெத்த மனம்..... என்ன சொல்றது?


அந்தவரை, சில பெற்றோர்கள் தங்களுக்கு அவமானமுன்னு வீட்டைவிட்டுத் துரத்தாம (நிறைய கேட்டுருக்கேன், வாசிச்சும் இருக்கேன்)  இப்படி  அவுங்க மகன்  மாறுனதை ஏத்துக்கிட்டு மகளா வரிச்சு, அவுங்க விருப்பத்தை நிறைவேத்தினது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியா இருந்தது உண்மை.  அப்புறம் பொதுவா எல்லோருக்கும் வணக்கம் சொன்னாங்க. 'நல்லா இருங்க'ன்னு  சொன்னேன்.  நல்லா இருக்கட்டும். 

 ஒன்னு சொல்றேன்.... எதையும் குடும்பம் ஒத்துக்கிச்சுன்னா.... அப்புறம் ஊரார் வாயைத் திறக்கமாட்டாங்க.  இதுபோல இருக்கும் சமாச்சாரங்கள்,  சாதிவிட்டு சாதியில் செஞ்சுக்கும் காதல் திருமணங்கள் இப்படி நடக்கும்போது.... கொம்பு சீவிவிட  சிலர் வருவாங்க..... அப்போ அந்தக் குடும்பம்  எதிர்த்து நின்னா.... எல்லாம் சரியாகிரும்.  என்ன ஒன்னு... இந்தப் பாழாப்போன சினிமாவைப் பார்த்துக் கொஞ்சம் கூடத் தகுதியில்லாத  நபரைக் காதலிக்கக்கூடாது. 
கொஞ்சம் சென்ஸிடிவ் சமாச்சாரம் என்பதால் அவுங்களையும், நிகழ்வுகளையும் படம் எடுக்கலை. அவுங்க  மூணுபேரும் வெளியே போனதும் பூசாரி ஐயாவின் அனுமதியோடு மூலவரை சில க்ளிக்ஸ்.  பிரசாதமாக குங்குமமும் பூச்சரமும்  கொடுத்தார் பூசாரி ஐயா. தட்சிணை தட்டில் போட்டப்ப, இன்னும்  கொஞ்சம் கொடுங்கன்னார்.  ஒன்னும் சொல்லாம 'நம்மவர்' இன்னொரு நூறு கொடுத்தார்.
ச்சும்மா தரிசனம் செய்ய வந்தவளுக்குக் கல்யாணகாட்சியும் கிடைச்சது பாருங்க!
எனக்குத் தெரிஞ்ச திருநங்கை நட்புகள் எல்லாம் மனசுக்குள் வந்துபோனது உண்மை.... கடவுள் செஞ்ச குழறுபடிகள்தானே? படைக்கும்போது இப்படிக் கவனக்குறைவா இருக்கலாமோ? ப்ச்..
வெளியே நின்ன ஆஞ்சியைக் கும்பிட்டுக் கிளம்பினோம்.


தொடரும்......  :-)


14 comments:

said...

Hope there will be a medical miracle to cure them ai the birth— with increased research in stem cells one day we will announce to the world-no more thirunangais.... 🙏
Rajan

said...

அருமை, மிக நன்றி.

said...

அம்மா
அந்த சகோதரியின் பெற்றோரை பாராட்டவேண்டும் . தன் குழந்தை ஒரு மனிதராக நினைத்து தாயுள்ளதோடு நடத்தியமைக்கு உண்மையிலே வணக்க வேண்டும்

படங்கள் அருமை அம்மா அந்த பூத நாராயணர் அழகோ அழகு .

said...

பூதநாராயணர் நல்லா கொழுகொழுன்னு இருக்காரு.

குவாகமா? கூவாகமா?

அந்தத் தாயின் மனநிலையும் மகளின் மனநிலையும்.... ப்ச்ச்ச்ச்... முருகா. நீங்க சொன்னது போல குடும்பம் துணையா இருக்கனும். இல்லைன்னா ரொம்பக் கஷ்டம். ஆனாலும் நிறைய பேர் நீந்தி மேல வந்திருக்காங்க. எல்லாரும் மேல வந்து பொதுநீரோட்டத்துல இயல்பாகக் கலக்கனும். இதை இயற்கையின் பிழைன்னு சொல்றதா... கடவுளின் தவறுன்னு சொல்றதா.... தெரியல. எதுவா இருந்தா என்ன... பழகும் மனிதர்கள் இவர்களை மதிப்போடு நடத்தினால் நன்று.

said...

நல்ல பகிர்வு. இந்தப் பக்கம் சென்றதில்லை.

said...

நல்ல பிஸி யான சாலை யில் இருந்தாலும் பூத நாராயணர் முகத்தில் அவ்வொலோ அமைதியான புன்னகை ...

said...

"அந்தத் தாயின் கண்களில் மளமளன்னு கண்ணீர் பார்த்ததும் எனக்கும் கண்ணுலே தண்ணி வந்துருச்சு...ப்ச்... பெத்த மனம்..... என்ன சொல்றது? 'நல்லா இருங்க'ன்னு சொன்னேன். நல்லா இருக்கட்டும். ச்சும்மா தரிசனம் செய்ய வந்தவளுக்குக் கல்யாணகாட்சியும் கிடைச்சது பாருங்க!"

நல்ல மனசு இருந்தா, எல்லாம் நல்லதாவே நடக்கும்; கிடைக்கும்

said...

வாங்க ராஜன்.

நவீன மருத்துவத்தில் ஒரு தீர்வு கிடைக்குமான்னுதான் உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கிறது!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க செந்தில்பிரசாத்.

உண்மையிலேயே நல்ல பெற்றோர்கள். அக்கம்பக்கம் என்னவாவது சொல்லட்டுமுன்னு குழந்தைக்கு ஆதரவு கொடுத்த நல்ல மனசு! நல்லா இருக்கட்டும்!

said...

வாங்க ஜிரா.

பூதநாராயணர் குழந்தை இல்லையோ.... அதான் அந்தக் கொழுக் முழுக:-)

கூவாகம்தான். ஆனால் குவாகமுன்னு பெயர் சாலையில் இருக்கு. உள்ளூர் பஞ்சாயத்தின் வேலை போல!

சக மனித உயிர் என்ற மதிப்பு கொடுக்கவேணும்தான். ஆனால் மனிதர்களைப்போல கொடூரமான உயிர் வேறொன்னு இருக்கா என்ன?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்..

வடக்கே பார்த்துக்கிட்டு இருந்தால் எப்படி? கொஞ்சம் தெற்கேயும் பார்க்கத்தான் வேணும், நீங்க ! சீக்கிரம் பலிக்கட்டும்!

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

குழந்தைப்பா.... அதுதான் கொழுக் முழுக் ! எந்த சப்தமும் அதை ஒன்னும் செய்யாது :-)

குழந்தை உலகம் தனி !

said...

வாங்க கலை.

எதிர்பாராமல் கிடைச்ச தரிசனம் ! எல்லாம் அவன் அருள்!