Wednesday, October 10, 2018

பெலவாடி வீரநாராயணர் !!!!(பயணத்தொடர், பகுதி 20)

பேலூர் கோவிலில் இருந்து அறைக்கு வந்ததும்,  இங்கே ஹொட்டேல்காரர்கள்  வச்சுருந்த முக்கிய இடங்கள் பற்றிய ப்ரோஷரைப் பார்த்துட்டு, பெலவாடின்னு ஒரு இருபத்தியெட்டு கிமீ தூரத்துலே இருக்கும் பெருமாளை தரிசிக்கக் கிளம்பினோம்.
வழியெல்லாம் நல்ல பசுமை!  ஆட்டுமந்தைக்கூட்டம் ஒன்னு ரோடில் வழிமறைக்கிறதைப் பார்த்ததும் எங்கூர் மந்தை நினைவுக்கு வந்துருச்சு. ஆடு,  ஆடுன்னாலும்,  இங்கத்து ஆடுகளுக்கும், அங்கங்கத்து ஆடுகளுக்கும் வித்தியாசம் தெரியுது.
முப்பத்தியஞ்சாவது நிமிட்டில் ஒரு கிராமத்துக்குள் இருக்கும் கோவிலாண்டை கொண்டு விட்டார் அசோக்.
கோவிலுக்கான முகப்பு வாசல், கற்பலகைகளால் கட்டி இருக்காங்க. ரெண்டு பக்கம் நம்ம  யானைகள்,தூண்களோடு திண்ணைன்னு அசப்பில் ஒரு வீடு போல இருக்கு! மேலே கோபுரம் கிடையாது. கற்கூரைதான்.  சிமெண்டெல்லாம் கண்டுபிடிக்காத காலக்கட்டத்தில் எப்படித்தான் கல்லையே கூரையாக்கி ஒட்டி வச்சாங்களோ? கோவில் பனிரெண்டாம் நூற்றாண்டு சமாச்சாரம்.
இதேபோல ஒரு கற்கூரை, கற்சுவர் எல்லாம் இருந்த கோவிலை உடுபி பயணத்தில் பார்த்த நினைவு வந்தது.

திண்ணைக்கு நடுவிலூடே  வாசல் அறை/ கூடம் ! வலது இடது பக்கங்களில் லேசா இருட்டும் அதில் தெரியும் சில சிலைகளும்....  சிலது  உடைஞ்சும் இருக்கு :-(  நந்தி தலையைக் காணோம்......

அன்னிய மதங்களைச் சேர்ந்த அரசர்களின் படைகள் இந்தப் பக்கமெல்லாம் வந்து அட்டூழியம் பண்ணிப்போனது உண்மை :-(
கடந்து அந்தாண்டை போறோம்.  கண் எதிரே கொடிமரத்தோடு கோவில்!  இந்தாண்டை, அந்தாண்டைன்னு எங்கே பார்த்தாலும் யானையோ யானை!  ரொம்ப நல்ல கோவில்னு மனசு உடனே சொல்லிருச்சு!

நடைபாதையையொட்டி அழகான புல்வெளி.  பச்சைப்புடவைக்கு, மெரூன்  கரை போட்டாப்லே ...... நேர்த்தியா இருக்கு!
வாசலில் நம்மாள் ரெண்டு பேரும் இருக்காங்க, கேட்டோ!   நகைநட்டும் கூடவே  யானை கட்டும் சங்கிலியும்,  தொங்கும் மணியுமா......   ஹைய்யோ!  யானையாப் பொறந்தா இங்கே பொறக்கணும். என்ன ஒரு அலங்காரம்!
கேரளாவில் பழைய (தரவாடு) வீடுகளின் உம்மரத்துலே சுத்திவர பெஞ்சு போட்டமாதிரி சின்னத்திண்ணை கட்டி இருப்பாங்க.  வீட்டுக்கு ரொம்பப் பரிச்சயமில்லாதவர்கள் வந்தால் அங்கேயே உக்கார்ந்து பேசிட்டுப்போயிருவாங்க. 
அதைப்போலவே  கோவில் வாசப்படி ஏறியதும்  சுத்திவர திண்ணை அமைப்பு.  எல்லாம் கற்பலகைதான்! திண்ணை ஸீட்டுக்குக்கீழே   யானை வரிசை வேற !

கடைஞ்செடுத்த தூண்களுக்குக் கணக்கு வழக்கில்லை! கண்ணைப்பறிக்கும் விதமா ஒரு மினுமினுப்பு!
இங்கேயே நமக்கு வலமும் இடமுமா ரெண்டு சந்நிதிகள்.  ஸ்ரீ வேணுகோபாலனும், ஸ்ரீ யோக நரஸிம்ஹருமா  ஒருத்தரையொருத்தர் பார்த்தபடி இருக்காங்க.  பெரிய உருவம்!  வேணுகோபாலன், எட்டடின்னா,  சிங்கம் ஏழடி!  யோகத்தில் உக்கார்ந்துருக்காரே! பக்கத்துலேயே ஸ்ரீதேவியும் பூதேவியும்!  நரசிம்ஹர் சிலையிலேயே திருவாசியும் செதுக்கி வுட்டுருக்காங்க. அதுலே தசாவதாரச் செதுக்கல்கள் !
குழலூதறவர், புன்னைமரத்தடியில் நின்னு ஊதிக்கிட்டு  இருக்கார்! இவருக்கு ரெண்டுபக்கமும் காலாண்டை ருக்மிணியும் சத்யபாமாவும்! சனத்குமாரர்களும், கோபிகைகளும், மயங்கி நிற்கும் மாடுகளுமா.....    ஹைய்யோ!
இந்த ரெண்டு சந்நிதிகளுக்கும் தனித்தனி விமானம்!  வெளியே இருந்து பார்க்கும்போதே  பறவையின் றெக்கை போல ரெண்டுபக்கமும் சந்நிதிகளின் கோபுரங்கள் நீட்டிக்கிட்டுத்தான் இருக்கு!

இதையெல்லாம் கடந்து  இன்னும் உள்ளே போகணும். நேரா இருக்கு  வாசல். இடைப்பட்ட இடத்தில் ஒரு மண்டபம்.  திறந்த வெளின்னு சொல்ல முடியாது... மேலே  கற்பலகை பாவி இருக்காங்க.
இதையும் கடந்தால்  அர்த்தமண்டபம். கருவறை !
நட்ட நடுவில் இருக்கும் சந்நிதியில் நின்ற கோலத்தில் கிழக்கே பார்த்து ஸேவை சாதிக்கிறார் வீரநாராயணர்! எப்பவும் கூடவே இணைபிரியாமல் இருக்கும் சங்கும் சக்கரமும் மிஸ்ஸிங்.! அதுக்குப் பதிலா பதுமமும், கதையும் இருக்கு!   முன்னங்கையில் அபயஹஸ்தமோன்னு பார்த்தால்....   புலிபோல கையும் நீளமான வளைஞ்ச நகத்தோடும் இருக்கார்!   அதுசரி....  அதனால்தான் இந்தக்கைகள் வச்சுருக்கவேண்டிய சமாச்சாரங்களை   சங்கு சக்கரத்துக்குப் பதிலா இடம் மாத்தியிருக்கார்!   சங்குக்கும் சக்கரத்துக்கும்  லீவு !  இவரும் எட்டடி உசரமே! கொஞ்சம் ஒல்லியா இருக்காப்லெ கண்ணுக்குப் பட்டது.வீரநாராயணர் சிலைக்கும் திருவாசி கல்லில்  செதுக்கியதுதான். தசாவதாரச் செதுக்கல்களும்  இதுலே இருக்கு!
உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லைன்னு படம்போட்டுச் சொல்லி இருக்காங்க. அதனால் படம் எடுக்கலை. ஆனால்  வலையில் இன்னொரு கோவில் பக்கத்துலே கிடைச்ச படங்களை இங்கே போட்டுருக்கேன்.  அவர்களுக்கு நம் நன்றிகள் !

பட்டர் இளவயதுக்காரர்.  முகத்தில் சாந்தமான புன்னகை. தீபாரத்திக்  காமிச்சுத் தீர்த்தம் கொடுத்தார். அதுக்குப்பிறகு  அவர் 'வாங்க'ன்னு சொன்னதால் கூடவே போனோமா, அப்பதான் மேலே சொன்ன ரெண்டு சந்நிதிகளும் தெரியவந்தன. கடைஞ்ச தூண்களின் மினுமினுப்பில் மயங்கி அப்படியே நேராப் போயிருக்கோம் முதலில்!
ஸ்ரீ வேணுகோபாலனைத் தரிசிக்க வச்சதும் எதிர்ப்பக்கம் இருக்கும்  ஸ்ரீயோக நரசிம்ஹரையும் தரிசனம் செஞ்சு வச்சுட்டுப் பக்கத்தில் இருந்த திண்ணையில் உக்கார்ந்தார்.
அப்போதான் நாம் யார், எங்கே இருந்து வந்தோமுன்னு ஒரு குசலவிசாரிப்பு!  சென்னைன்னு சொல்லிப் பேசிக்கிட்டு இருக்கும்போதே, 'இங்கே  தமிழ்நாட்டு மக்கள் வர்றாங்களா'ன்னேன். ' நிறையப்பேர் வர்றாங்க.  ஜெயமோகன் குடும்பத்தோடு  ரெண்டு முறை வந்துட்டுப் போனார்'  என்றதும், பேச்சில் சுவாரஸியம் கூடினது உண்மை. ஜெமோ குடும்ப அங்கங்கள் பெயர் நமக்குத் தெரியாதா என்ன? பெயர்களைச் சொன்னதும்  பட்டர்பிரானுக்கு மகிழ்ச்சி.

நம்ம கொபச சும்மா இருப்பாரோ?  இவுங்களும் எழுதறாங்கன்னு என் பக்கம் கைகாட்டிவிட்டார்! எனக்கு திக் னு ஆச்சு.  ஆசான் பக்கத்துலே நிக்கமுடியுமோ?  எழுத்து ராக்ஷஸன் இல்லையோ அவர்!!!!

இவர் பெயர் ப்ரஷாந்த் பரத்வாஜ். நல்ல படிப்புள்ளவர்.  வெளிநாட்டு வேலை கிடைச்சுப் பாஸ்போர்ட் எல்லாம் எடுத்துத் தயாரான நிலையில்,  தகப்பனார் பெருமாள்கிட்டே போயிட்டதால், இந்தப் பெருமாள்களை இவர் பார்த்துக்க வேண்டியதாப் போயிருக்கு!
எல்லோரும் வாய்க்குமா இப்படி............   அவன் இஷ்டப்பட்டுட்டான்..... இவரை விடக்கூடாதுன்னு.....

அதிசயம் என்ற வகையில்  மார்ச் மாசம் 23 ஆம் தேதி காலை சூரிய உதய சமயம் சூரியன் நேரா கருவறைக்குள் போய் வீரநாராயணரை தரிசிக்கிறானாம்.  எவ்ளோ நேரம் இருப்பானாம்? சுமார் மூணு நிமிஷமாம்!   ஹைய்யோ...... இவ்ளோ நீண்டு போகும் மண்டபத்தைக் கடந்து கடைசியில்  இருக்கும்  கருவறைக்குப் போக முடியுதுன்னா....  கட்டடக்கலையின் அற்புதம் இல்லாமல் வேறென்ன ?
நாங்களும் உத்தரவு வாங்கிக்கிட்டு வெளியே பிரகாரம் சுத்தப் போனோம். நக்ஷத்திர மேடையெல்லாம் இல்லை. ஆனாலும்  கோணங்கள் நிறைஞ்சுருக்கு.  தரையோடுதான் எல்லாம்!



பெரிய வளாகம்தான்.  ஒருபக்கம் ஏகப்பட்ட பசுக்களும் வீடுகளுமா வேலியைத் தாண்டி.  தினமும் கோவில்தரிசனம் அவுங்களுக்கெல்லாம்!


  சுத்திவரும்போது ஒரே ஒரு  ஜன்னல் பின்பக்கச் சுவரில் கண்ணில் பட்டது. அவ்ளவுதான் வெளிச்சம்....  ப்ச்.... ஆனால் சமீபத்துச் சமாச்சாரம் போல் இருக்கே...


எதோ  நகைநட்டுலே நகாசு வேலை செஞ்சதுபோல  சுவரின் மேல்பாகத்தில்  அப்படி ஒரு அழகு! 
நிறைய சிலைகள் வெளிப்புறத்தில் இருக்கு.  எல்லா சிலைகளின் மேல்பகுதியிலும்  ஒரு வகை பூ வேலைப்பாடு! கல்லில்  எம்ப்ராய்டரி !



விமானங்களில் கூட நம்மூர் பக்கம் இருப்பதுபோல சுதைச் சிற்பங்கள் அமைக்காமல் அப்படியே கல்லில் செதுக்கி விட்டுருக்காங்க.
கூடியவரை ரசித்து,  க்ளிக்கி ஆனதும்  முகப்பறை வழியா வெளியே வந்தால்... லேடி போலீஸ் என்னைப் புடிச்சுக்கிட்டாங்க.  அப்புறம்தான் தெரிஞ்சது காக்கி உடுப்பில் இருக்கும் டூரிஸம்  டிபார்ட்மென்ட் ஆஃபீஸர்ன்னு.
கோவிலைப்பத்தி உங்களுக்கு எதாவது சொல்லணுமுன்னா, பயணிகளுக்கான  வசதிகள் எப்படி இருக்கு, இன்னும் ஏதாவது  சீரமைக்கணும்னு இருந்தால்  சொல்லுங்க. இந்த ரெஜிஸ்டரில் பதிவு செய்யுங்கன்னு கேட்டாங்க. பயணத்தில்  ரொம்ப நாளா பதிவு வேற எழுதலையா ...சரின்னு எழுதிட்டு வந்தேன்.

ச்சும்மாச் சொல்லக்கூடாது.... கிராமத்துக்கோயில்னாலும் படு சுத்தமான பராமரிப்பு!

மனசில்லா மனசோடு அங்கிருந்து கிளம்பவேண்டியதாப் போச்சு! அப்போ இன்னொரு கூட்டம் பஸ்ஸுலே வந்து இறங்குச்சு!
கோவில் காலை எட்டு மணிக்குத் திறந்தால்  மாலை ஏழரைக்குத்தான் மூடறாங்க !

அருமையான கோவில். சான்ஸ் கிடைச்சா விட்டுடாதீங்க.....

தொடரும்.........  :-)


10 comments:

said...

கேள்விப்படாத ஊர். கேள்விப்படாத பேர். கேள்விப்படாத கோயில். ஆனாலும் எவ்வளவு அழகா இருக்கு. இதுவும் ஹொய்சாளர் காலத்துக் கோயில் போலத்தான் தெரியுது.

வெளிநாட்டு வேலையை விட்டுட்டு கோயிலே கதின்னு இருக்குற ஆட்கள் ரொம்பக் குறைவு.

நீங்க படத்துல போட்டிருக்க்கும் ஆடுகள் செம்மறியாடுகள். நம்மூர்ப்பக்கம்... குறிப்பா தெந்தமிழ்நாட்டில் வெள்ளாடுகள் தான் நிறைய. வடதமிழ்நாட்டில்தான் செம்மறியாடுகள் நிறைய. கொம்பில்லாம இருக்கும். வாலு இத்துணூண்டு இருக்கும்.

said...

அருமை நன்றி

said...

நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகள் வெகு அழகு

said...

சிற்ப வேலைப்பாடுகளை ரசிக்கும் வகையில் படங்கள் போட்டிருக்கீங்க.

இந்தத் தடவை முன்னேற்பாடோட, திட்டத்தோட வரலையோ?

தொடர்கிறேன்.

said...

வாங்க ஜிரா.

நியூஸியிலும் செம்மறி ஆடுகள்தான். கம்பளி நூல் தயாரிப்பு இருக்கே!

பட்டர் முகத்தில் என்ன ஒரு அமைதி, பார்த்தீங்களா? பெருமாள் நல்லா வச்சுருக்கட்டும்!

கோவில் ஹொய்சாலா காலத்துதுதான். விஷ்ணுவர்த்தனின் பேரன் வீரவல்லாளன் காலம்!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா,

ஒன்னை ஒன்னு மிஞ்சும்வகையில் அற்புத சிற்பங்கள்தான் கர்நாடகாக் கோவில்களில்!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

படங்களை ரசித்தமைக்கு நன்றி.

இந்த முறை நீண்டநாட்கள் பயணம் என்பதால், எது கிடைக்குமோ அது என்று இருந்துவிட்டோம். மேலும் இதில் ஒரு அயல்நாட்டுப் பயணமும் உண்டு என்பதால் எந்த நாடு என்ற குழப்பம் இருந்தது.

கடைசியில் அமைந்தது இலங்கையே!

said...

விட்டதை பிடித்து விட்டேன்.:) காணக்கண்கோடி....

said...

வாங்க மாதேவி!

ஆஹா..... விடாமுயற்சி வெற்றியைத் தந்ததே!


மனம் நிறைந்த நன்றிகளும் மகிழ்ச்சியும்!