Monday, October 08, 2018

மதநீகா......... என்ன அழகுடீம்மா !!!(பயணத்தொடர், பகுதி 19)

பேலூர் கோவில் ராஜ கோபுரம் நமக்கு ரொம்பவே பரிச்சயமான ஸ்டைலில் இருக்கு!  கோபுரவாசலைக் கடந்து உள்ளே போனதும் ரொம்ப விசாலமான வளாகம்!  பளபளன்னு மின்னும் கொடிமரம்! நட்ட நடுக்கா இருக்கும் மேடையில் கோவில். நேத்து நாம் பார்த்த சென்னக்கேசவா கோவிலைப்போலவே அசப்பில்!  இதுவும் சென்னக்கேசவா கோவில்தான்!  வாசலில் ஒரு தகவல் பலகை இருந்ததே!

ஒரு கைடு இருந்தாத் தேவலைன்னு நினைக்கும்போதே, கொடிமரத்தாண்டை நின்னுக்கிட்டு இருந்த நபர், நம்மாண்டை வந்து கைடு வேணுமான்னார்!  பெருமாளே அனுப்பி வச்சுருக்கார் பாருங்க. இவர் பெயர் நாராயணா! இங்லிஷ் நல்லாவே பேசறார். அது  போதும் தகவல் சேகரிக்க!
தங்கக்கொடிமரத்துக்கு  இடதுபக்கம் இன்னொரு கல் கொடிமரம் வேற மேடையில் நிக்குது!  நல்ல உயரம்!  நாப்பது அடி! கோவிலைக் கட்டினதாச் சொல்லும் காலம் பனிரெண்டாம் நூற்றாண்டு.  தங்கக்கொடி மரம் சமீபத்திய வரவாகத்தான் இருக்கணும்!
நட்சத்திர டிஸைன் மேடையில் இருக்கும் கோவிலுக்கு நாராயணனோடு நடந்து போறோம். பதினாறு படிகள் ஏறி முன்வாசலுக்குப் போகணும்!  எட்டுப்படி தாண்டுனதும் மேடை. அங்கேயே ரெண்டு பக்கமும் சின்னதா சந்நிதிகள்!  ஜயனும் விஜயனுமுன்னு  நினைக்கிறேன்.
அடுத்த எட்டுப் படிகளில் ஏறினால்  கோவிலுக்குள் போகும் வாசல். துவாரபாலகர்கள் இருக்காங்கன்னாலும் அவுங்களுக்கடுத்தாப்லெ வாசலின் ரெண்டு பக்கமும் புலியுடன் சண்டை போடும் வீரன்!
சாலா என்ற பெயருடன் ஒரு வீரன் இருக்கான். ஒரு சமயம் அவனுடைய குரு சுதத்தரை வணங்கப்போனப்ப, அவருடைய குடிலுக்குப் பக்கத்தில் ஒரு புலி அவர் மேல் பாயத்தயாரா இருக்கு. உடனே அதன்மேல் பாயறான். வீரன் இல்லையோ.... இடுப்புக் கச்சையில் கத்தி  இருக்கும்தானே!  இந்த இடம்  ஒரு கோவிலையொட்டியே இருந்துருக்கு. பக்தர்கள் பலர் வசந்திகா பரமேஸ்வரி தேவி கோவிலுக்கு வந்துருக்காங்க.
புலிக்கும் மனுஷனுக்கும் சண்டை நடக்குது.  வேடிக்கை பார்க்கக் கூட்டம் சேராதா என்ன?  எல்லோரும் மனுஷனை  ஊக்குவிக்க  ஹொய் ஹொய்ன்னு  கூவறாங்க.  கடைசியில் புலியை சாமிகிட்டே அனுப்பிட்டான் சாலா.  அப்புறம் அவன் ஒரு சிற்றரசனாக ஆனதும். அவனுடைய  அரசுக்கே ஹொய்சாலா ராஜ்ஜியம் என்னும் பெயர் அமைஞ்சுபோச்சுன்னு  ஒரு செவிவழிக்கதை  சொல்லுதாம்.

இதே  ஹொய்சாலா  சாம்ராஜ்ஜியம்  தன் முன்னூறு வருஷ ஆட்சியில்  பரந்து விரிஞ்சுபோனது இன்னொரு கதை.  இங்கே நாம் பார்த்த சிற்பம்தான் ஹொய்சாலா ராஜ்ஜியத்தின் அரசுச்சின்னமா (இலச்சினை) இருந்துருக்கு!

விஷ்ணுவர்தனுக்கும் சோழர்களுக்கும் நடந்த தலக்காட்டுப் போரில், சோழனை ஜெயித்த அடையாளமா புலியுடன் சண்டை போடும் சிற்பத்தைச் செதுக்கி இருக்காங்கன்னும்  ஒரு  கதை போய்க்கிட்டு இருக்கு!

விஷ்ணுவர்தன்  சமணத்துலே இருந்து  வைஷ்ணவத்துக்கு மாறினதும்  (பஞ்ச நாராயணான்னு தொண்டனூர் நம்பி நாராயணா, மேல்கோட்டை செலுவா நாராயணா, பேலூர் விஜய நாராயணா, தலக்காடு கீர்த்தி நாராயணா, கதக் வீர நாராயணா ) அஞ்சு விஷ்ணு கோவில்களைக் கட்டி இருக்கார்.  இதைத் தவிர ஏகப்பட்ட கோவில்களை ஹொய்சாலா சாம்ராஜ்ஜியத்தில் கட்டி இருக்காங்க. 1500 கோவில்கள் கட்டி, அதுலே ஒரு நூறுதான் இயற்கை அண்ட் செயற்கை அழிவுலே இருந்து தப்பிச்சதுன்னு ஒரு கணக்கு.

அந்த அஞ்சுலே ஒன்னை, தன் தலைநகரான  வெலாபுரியில் கட்டி இருக்கார். இதுதான் பேலூரின் பழைய பெயர்! (ஓ.... அதுதான் நாம் தங்கி இருக்கும் ஹொட்டேலின் பெயர் மயூரா வெலாபுரின்னு இருக்கோ!!!)

விஜயநாராயணர் கோவில் என்ற பெயர்தான் ஆரம்பகாலத்தில். எப்போ சென்ன கேசவனாச்சுன்னு தெரியலை. மொத்தம் 103 வருஷங்களாகி இருக்கு, இதை மட்டும் கட்டி முடிக்க!  விஷ்ணுவர்தன் ஆரம்பிச்சு வச்சது, பேரன்  மூன்றாம் வீரபல்லாளா (வீரவல்லாளன்) ஆட்சிகாலத்தில் முடிஞ்சதாம்! 

கோவில் முன்வாசல் முகப்பில் நம்ம பெரிய திருவடி சிறகை விரிச்சு காலை மடிச்சு உக்கார்ந்திருக்க, அவர் தோளில் மஹாவிஷ்ணு!  கருடவாஹனம்! கருட ஸேவை!

தலைவாசலுக்கு மேலே மேற்கூரையையொட்டி ரெண்டு பக்கமும் யுவதிகள் இருவர்! அப்புறம் ரெண்டு ஓரத்திலும் இருவர்னு கோவிலைச் சுத்தியே வெளிப்புறத்தில் முப்பத்தியெட்டுப் பெண்கள்!  மதநீகா சிலைகள்னு சொல்றாங்க ! ஒவ்வொருத்தரும் போட்டுருக்கும் நகையும் நட்டும்...... , நிக்கற ஸ்டைலும் ஆஹா ஆஹா...


இன்னும் நாலுபேர் கோவிலுக்குள் இருக்காங்க.  அதுலே ஒருவர்  அரசி சாந்தலா தேவி!  அரசி நாட்டியக்கலையில் ரொம்பவே தேர்ச்சி பெற்றவர்களாம். இந்தச் சிலைக்கு அவுங்களே மாடல் செஞ்சுருப்பது விசேஷம்.

சிற்பிகள் எல்லோரும் மாய்ஞ்சு மாய்ஞ்சு  ஆர்வத்தோடு ஒருவரை ஒருவர் மிஞ்சும் அளவுக்குத் தங்கள் உழைப்பை அர்ப்பணிச்சுருக்காங்க. மன்னரும், சிலைகளுக்கடியில்  அவுங்கவுங்க பெயர்களைப் போட்டுக்கும் சுதந்திரம் கொடுத்துருக்கார்!

முதலில் நாராயணா, நம்மை வெளிப்புறம் சுத்திக் காமிச்சுக்கிட்டே விவரங்கள் சொல்லிக்கிட்டு இருந்தார்.  வேகவேகமா ஓடாம, எனக்கு க்ளிக்க அவகாசமும் கொடுத்தது எனக்கு ரொம்பப் பிடிச்சது!
கைலாயத்தைப் பேர்த்தெடுக்கும் ராவணன் !
ஒரு மதநீகா சிலையைக் காமிச்சு 'என்ன தெரியுது'ன்னாரா.... யுவதி டான்ஸ் ஆடறாள்ன்னேன். பக்கத்துலே பாருங்கன்னது பார்த்தால் ஒரு பல்லி!  பல்லி ஏன் அங்கே இருக்கு?  அடுத்தாப்லே ஒரு பலாப்பழம் இருக்கே.... அதை ஒரு ஈ மொய்க்குது. அந்த ஈயைப் பிடிக்க பல்லி மெள்ள நெருங்கிப்போகுது! ஹைய்யோ!!!!   உண்மையில் கைடு இல்லைன்னு வையுங்க.... இந்த பல்லி, ஈ, பலாப்பழத்தை நான் கவனிக்கிற ச்சான்ஸே இல்லை!

ரொம்ப உயரத்துலே இருக்கு இந்த சிலைகள் என்பதால் அண்ணாந்து கவனிக்கறது கொஞ்சம் கஷ்டமே!  ஆனால் இப்படி உசரத்துலே இருப்பதும் நல்லதாப் போயிருக்கு. சட்னு கை நீட்டி ஒடைச்சுப்போட வாகா இல்லை பாருங்க. தப்பிச்சது!!!

இந்த நாப்பத்திரெண்டு மதநீகா சிலைகளும்  ஒன்னுபோல ஒன்னு இல்லை. அழகிகள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஸ்டைலில். வீணை, புல்லாங்குழல், மத்தளம்/டோலக் இப்படி இசைக்கருவிகள் வாசிக்கறதும்,  நாட்டியம் ஆடறதும், தலைவாரிக்கறதும், கண்ணாடியில் அழகு பார்க்கறதும்,  செல்லக்கிளியோடு பேசறதும்,  வில்லைக் கையிலேந்தி மரத்துப்பறவையைக் குறிபார்த்து அம்பெய்யறதும், அடடடா.... எதைச் சொல்றது எதை விடறது?  நேர்லே பார்க்க வேண்டிய சமாச்சாரம்!

இதுக்குள்ளே பூஜை ஆரம்பமாகும் வாத்திய இசை கேட்டதும்,  'வாங்க உள்ளே போய் பூஜை பார்த்துட்டுத் தரிசனம் பண்ணிக்கலாமு'ன்னு உள்ளே கூட்டிப்போனார் நாராயணா.
இந்தக் கோவிலுக்குள்ளே போக மூணு வாசல் இருக்கு.  கிட்டக்க இருந்த வாசலுக்குள் நுழைஞ்சோம்.

நல்ல கூட்டம்!  மூலவர் பீடத்தோடு சேர்த்துப் பதினைஞ்சடி உசரம். நின்ற திருக்கோலம். நல்ல அலங்காரம், ஜிலுஜிலுன்னு! சட்னு பார்த்தால் பெண் வேஷம் கட்டியிருக்காரோன்னு..... நாராயணா சொன்னார், பெண் அலங்காரம்தான் எப்போதுமுன்னு.... அட!  மூக்குலே  மூக்குத்தி வேற !  மோஹினி ரூபத்தில் .....
எதுக்காம்? இங்கே?

பஸ்மாஸுரன் எரிந்த ஸ்தலம் இது!  சம்பவம் இங்கேதான் நடந்தது, இதே குளக்கரையில்னு  சொல்றாங்க !!!
இவனைப்பத்தித் தெரியுமோ? தன் தலையில் தானே கைவச்சு எரிஞ்சு போனவன்.  யார் தலையில் தன் கை வைச்சாலும் எரிஞ்சு போகணுமுன்னு வரம் வாங்கியவனின் அட்டகாசம் அதிகரிச்சுபோனதால்  அவனைக் கொல்ல மஹாவிஷ்ணு மீண்டும் மோஹினி ரூபம் எடுக்க வேண்டியதாப்போச்சு.  இப்படிப் பொம்பளை வேஷம் கட்டுனது எனக்குத் தெரிஞ்சு இது மூணாம் முறை :-) பாற்கடல் கடைஞ்சு அமிர்த கலசம் கிடைச்சு, அதை விளம்பினபோது, அப்புறம் ஐயப்பன் பிறப்புக்காகன்னு ரெண்டுமுறை ஆச்சு.

தீபாராதனை நடந்து முடிஞ்சதும்,  வரிசையில் கொஞ்சம் கிட்டப்போய் தீர்த்தம் வாங்கினோம்.
பட்டுப்புடவையைக் கட்டி இருக்கார்.   இடுப்புலே குறுவாள் ! ரெண்டு பக்கமும் ஸ்ரீதேவி, பூதேவி இருக்காங்க. ஆனால் ரொம்பச் சின்ன உருவம்! பெருமாளின் முழங்கால் உயரம்தான் தேவியர்!   மூணடி மேடைமேல் நிக்கறார். மேடையின் பக்கவாட்டில் தசாவதாரங்கள் செதுக்கி இருக்காங்க.

இந்தக்கோவிலும் தொல்லியல் துறையின் பொறுப்பில் இருக்குன்னாலும்  தினப்படி பூஜைகள், விழாக்கள் எல்லாம்  நடக்கும் கோவிலாக இருக்கு என்பது விசேஷம். கடந்த 900 வருசங்களா பூஜைகள் நடந்துவரும் கோவிலாமே!

கோவிலுக்குள்ளேயும் அழகு கொட்டிக்கிடக்கு!   கடைஞ்செடுத்த உருளைத் தூண்களும்,  இம்மி இடம் விடாம  நுணுக்கமானச் சிற்பவேலைப்பாடுள்ள தூண்களும், விதானத்திலும் செதுக்கி இருக்கும் தாமரைப்பூக்களுமா....  ஹைய்யோ!!!

விஷ்ணுவர்த்தன், வீரபல்லாளா சிலைகளும் கூட தூணில் இருக்கு! இருட்டா இருக்குன்னு டார்ச் அடிச்சுக் காமிச்சார் நம்ம நாராயணா !
பாதியில் விட்டுட்டு வந்துட்டோமேன்னு திரும்ப வெளியே போய் வெளிச்சுவர் சிற்பங்களைக் காமிச்சு விளக்கினார் நம்ம நாராயணா!
யானைகளுக்குப் பஞ்சமே இல்லை!  குதிரை, யாளி, புலின்னு வரிசை வரிசையா.....
போர்க் காட்சிகள், மனிதர்கள், கடவுளர்கள், முக்கியமா நரசிம்ஹர், வராஹர், புள்ளையார், விஷ்ணு....   சொல்லி மாளாது!
  விஷ்ணு சக்கரத்தில் சிலுவை அடையாளம் !

காதலுக்குக் கண்ணில்லை. கழுதை முகத்தோடும் காதல் வரும்!
நாகதேவனும் நாகதேவியும் வாலில் ரீஃப் நாட் (Reef Knot) போட்டுக்கிட்டுப் போஸ் கொடுக்கறாங்க !
 கிடந்தான் கிடக்கும் ஸ்டைலைப் பாருங்க !!!
த்ரோபதி ஸ்வயம்வரத்துக்கான போட்டியில்  அர்ஜுனன்!
'இப்படியே நீ, நிதானமாப் படம் எடுத்துக்கிட்டு இருந்தால் நேரமாகுதே... கைடு எவ்ளோநேரம் காத்திருப்பார். பாவம். அவர் போய் இன்னும் நாலு ஆட்களுக்கு கைடுவேலை செஞ்சாத்தானே காசு. எவ்ளோபேர் வந்துக்கிட்டே இருக்காங்க.  முக்கியமானதெல்லாம்  சொல்லிட்டார். இனி அவர் போகட்டும் 'நம்மவர்' என் காதில் ஓதினார். அதுவும் நியாயம்தான்.

நாராயணாவுக்கான  கைடு சார்ஜோடு, கொஞ்சம் அன்பளிப்புமாக் கொடுத்து அவரை அனுப்பினோம்.  அதுக்குள்ளேயே  நம்மைப்போலவே  அவர் ஃபேஸ்புக்கிலே இருப்பதும், கோவில் சமாச்சாரங்கள் எழுதுவதும் படம் போடறதும் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றம் ஆகி, இப்போ அவர் நம்ம ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் ஆகிட்டார். பேலூர் கைடு நாராயணான்னு  பாருங்க.

நாராயணாவுக்கு விடை கொடுத்துட்டு, நாங்க பிரகாரம் சுத்தப்போனோம்.
மேடையில் நிக்கும் கல் கொடிமரம்  மூணுபக்கம் மேடையில் பதிஞ்சு ஒரு பக்கம் மட்டும் பிடிமானம் இல்லாமல் இருக்கு. ச்சும்மா ஒரு .2 மிமி அளவுதான். ஒரு காகிதம் அதுலே நுழையுமாம்.  சனம் ஏறி ஏறி பேப்பர் வச்சுப் பார்த்துருக்கு போல.... இப்ப மேடையில் யாரும் ஏறவேண்டாமுன்னு அறிவிப்பு வச்சுருக்காங்க. கொஞ்சம் கவனிச்சுப் பார்த்தால் அந்த இடைவெளி தெரியுது!

ஹொய்சாலா மன்னர்களுக்குப் பிறகு இந்தப் பகுதியெல்லாம் விஜயநகரப் பேரரசின் ஆட்சியின் கீழ் வந்துருக்கு. இவர்களும் கோவில்கள், கட்டடக்கலைகள் மீதெல்லாம் ஆர்வம் உள்ளவர்கள் ஆனதால் நல்லாவே பார்த்துக்கிட்டு இருந்துருக்காங்க. அப்போதான் இங்கத்து ராஜகோபுரமும், கொடிமரமும் புதுசா அமைச்சுருக்காங்க.  இந்தப் பளபள தங்கக்கவசம் விஜயநகர மன்னர்கள் போட்டதா இருக்குமா?  இந்தக் கவசம் போர்த்தறதெல்லாம்  அப்போ இருந்ததா என்ன? தெரியலையே...
ரொம்பவே பெரிய வளாகம் இது! சுத்திவர அங்கங்கே தனித்தனிக்கோவில்கள். சௌம்யநாயகி கோவில்  தங்க விமானத்துடன் பளிச். உள்ளே ஒரு குழல் விளக்கு எரிஞ்சது. மத்தபடி யாரும் இல்லை. கம்பிக் கதவுக்குமுன் திரை ஒன்னு!

வீரநாராயணர் கோவில், ரங்கநாயகி கோவில் எல்லாம்  மூடியே இருக்கு!  இந்த ரங்கநாயகிதான் இங்கே ஆண்டாளாம்!  ஆஹா....   விடக்கூடாதுன்னு மூடியகதவாண்டை உக்கார்ந்து 'தூமணி மாடத்து' பாடிட்டுதான் வந்தேன்.  ஆண்டாள் கோவில் விமானமும் தங்கக்கவசத்துடன் இருந்தது எனக்கு மனசமாதானம் கொடுத்தது உண்மை.

எல்லா கோவில்களின் வெளிப்புறச் சுவர்களில் ஏராளமான சிற்பங்கள்! பெருமாளே மூன்று முகங்களோடு இருக்கார்.

திருமாமணி மண்டபம், வாகனங்கள், பெரிய பெரிய  மண்டபங்கள்,  இப்படி வழக்கமான கோவில் சமாச்சாரங்களுடன் இந்தக்கோவில் இருப்பது மகிழ்ச்சி!


 வேறென்ன சந்நிதியோ கட்ட உருளைத்தூண்கள் அமைச்சது, பாதி வேலையோடு நிக்குது. சின்னத் தூண்களா இருக்கே. பாதியோ? மீதித் தூண் செஞ்சு மேலே ஒட்டும் ஐடியாவோ என்னவோ?

 வேணுகோபாலன்கள் !
வராஹர் அழகு!  கால் கொலுசு சூப்பர்!
உலகளந்தான்
சுத்திவரத்  தூண்களோடு,  திண்ணையோடும் வெராந்தாக்கள். ஆஞ்சி இருந்தார். சாலு மண்டபமாம்!
நாகதேவதை!

 கஜகுண்டான்னு இருந்தது ஒரு மண்டப வாசலில். அது என்ன குண்டான்னு பார்த்தால் கல்யாணி!
கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் சுத்தி இருக்கோம். இன்னும் முழுசுமாப் பார்க்கணுமுன்னா ரெண்டு நாளாவது வேணும்!
வாசலில் லட்டு விற்பனை!  வாங்கலை, கேட்டோ !
அறைக்குப் போய்  அடுத்துப்போகுமிடம் எதுன்னு திட்டம் போடலாம், வாங்கோ. ரொம்பப்பக்கம். அஞ்சு நிமிட் கூட ஆகாது!

PINகுறிப்பு:   பார்த்துப் பார்த்து ரசித்து, உருகி உருகி எழுதறேனே...... போனமுறை ,அதான் 24 வருஷங்களுக்கு முன் இதே கோவிலுக்கு வந்திருந்தாலும், இப்படியெல்லாம் கவனிச்சுப் பார்த்த ஞாபகமோ, அப்போ நம்ம பஸ் டூரில் கூடவே வந்த   கைடு சொன்ன விளக்கங்களோ ஒன்னுமே நினைவில் இல்லை, ஒரே ஒரு சமாச்சாரம் தவிர.....   சங்கராபரணத்துலே மஞ்சு பார்கவி டான்ஸ் ஆடின இடம்......


தொடரும்......... :-)



14 comments:

said...

பிரம்மிச்சி பிரம்மிச்சு பார்க்குறேன் ஒவ்வொரு படத்தையும்..


என்னா அழகு கொட்டி கிடக்குது..மா

தகவல்களும் மிக சிறப்பு..

நாங்க போகும் போது துளசி தளம் தான் GUIDE எங்களுக்கு.. ஆமா

said...

மிக அருமை, நன்றி.

//ஆனால் இப்படி உசரத்துலே இருப்பதும் நல்லதாப் போயிருக்கு. // சிலைகள் கைக்கெட்டாத தூரத்தில் இருந்தால் வீபூதி குங்குமம் தடவமுடியாது, ஹிஹிஹி

said...

சிற்பங்களெல்லாம் அட்டஹாசத்துக்கும் மேல. உருகி உருகி சிற்பம் செய்திருக்கிறார்கள். கொடுத்துவைத்திருக்கிறீர்கள், கைடு துணையோடு இதனைக் கண்டுகளிக்க. தொடர்கிறேன்.

said...

எங்களது மைசூர் பயணத்தின்போது இக்கோயிலுக்குச் சென்றுவந்தோம். பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தைத் தருகின்ற சிற்பங்கள். நீங்கள் ரசனையாகப் படங்கள் எடுத்து பகிர்ந்துள்ள விதம் மிகவும் அருமை.

said...

சங்கராபரணத்து மஞ்சுபார்கவி நினைவிருக்குற டீச்சர் கர்ணன் படத்த மறந்துட்டீங்களே. இரவும் நிலவும் வளரட்டுமே பாட்டில் சிவாஜியும் தேவிகாவும் அந்தக் கோயில்லதான ஆடிப்பாடுவாங்க.
https://www.youtube.com/watch?v=RMda3pDWBtc

பேளூர் சென்னகேசவன் கோயில் ஒரு சிற்ப அற்புதம். நெளிவும் வளைவுமா சிற்பங்கள் வழுவழுன்னு கொழுகொழுன்னு இருக்கு. ஹொய்சாளர்களின் சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

அந்த கொடிமரத்துக்கு தங்கக் காப்பு (அல்லது பித்தளைக்காப்பு) விஜயநகரக் காலத்துல செஞ்சிருக்க வாய்ப்பில்ல. ஏன்னா... கர்ணன் படத்துல கொடிமரம் காப்பில்லாம இருக்குது பாருங்க.

// விஷ்ணுவர்தனுக்கும் சோழர்களுக்கும் நடந்த தலக்காட்டுப் போரில், சோழனை ஜெயித்த அடையாளமா புலியுடன் சண்டை போடும் சிற்பத்தைச் செதுக்கி இருக்காங்கன்னும் ஒரு கதை போய்க்கிட்டு இருக்கு! //

இதுக்கு வாய்ப்புகள் நிறையவே இருக்கு. பொதுவாகவே வெற்றி பெற்றவர்கள் தோல்வியடைஞ்சவங்களை அவமானப்படுத்துறது வழக்கம். எந்த அளவுக்கு அவமானப்படுத்துறதுங்குறது அவமானப்படுத்துறதோட அளவு ஒவ்வொரு மன்னனப் பொருத்து. புலியை அடக்குற மாதிரி சிற்பம் வைக்கிறதும் அதுல ஒருவகை. வாதாபியை நரசிம்மப் பல்லவர் தீக்கிரையாக்கலையா... அதெல்லாம் ரொம்பப் பெரிய அளவு செய்த அவமானம்.

பொதுவாகவே கதைகள்ள இருக்குற அப்படியே எடுத்துக்காம அதுக்குள்ள சொல்றது என்னவாயிருக்கும்னு யோசிச்சாலே உண்மை தெரிஞ்சிரும். எடுத்துக்காட்டா கதைல கரடி நாட்டை ஆண்டுச்சுன்னு வந்தா... அது கரடியா இருக்காது. கரடியோட உடலமைப்போ குணாதிசியங்களோ கொண்ட யாராவது இருக்கும். அதைப் புரிஞ்சிக்கிட்டு படிச்சா கதையின் உண்மையான நிகழ்வுகள் புரியும்.

said...

வாங்க அனுராதா ப்ரேம்!

இங்கே சொன்னது பாதி..... சொல்லாமல் விட்டது மீதி!!!

நேரில் பார்த்து அனுபவிக்க வேண்டிய சமாச்சாரம் !

said...

வாங்க விஸ்வநாத்!

பாய்ண்ட் அருமை! ஆனால் அங்கே யாரும் இப்படித் தடவுறதைப் பார்க்கலை. இதெல்லாம் தமிழனின் தனிக்குணம் !

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

சமயம் வாய்த்தால் விட்டுடாதீங்க !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

வாழ்நாள் போதாது போல இருக்கே! சொல்லி மாளாது இந்த அழகை!

said...

வாங்க ஜிரா.

அந்த மஞ்சுபார்கவியை நினைவுபடுத்தினது அப்போது அங்கிருந்த கைடுதான். கர்ணன் பற்றி எனக்கு இப்ப நீங்க சொன்னபிறகுதான் தெரியும்! நன்றி!

அப்பெல்லாம் லொகேஷன் பற்றிய கவனம் எல்லாம் எனக்குக் கிடையாது. பாட்டு நல்லா இருந்தால் போதும்! கர்ணனில் எல்லாப் பாட்டுகளுமே அட்டகாசமா இருக்குமே! என்னுயிர்த்தோழி எனக்கு ரொம்பவே பிடிக்கும்! ஒரு காலத்துலே அருமையாப் பாடுவேன். ஒருமுறை கேட்டாலே பாட்டு வந்துரும்.

அதெல்லாம் இப்ப நினைச்சால் கனவு மாதிரி இருக்கு!

அவமானப்படு(த்து)வது என்பது எவ்ளோ மன உளைச்சல் இல்லே.... ப்ச்....

நேரம் எடுத்து நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் எனக்குச் சக்கரைப்பொங்கலா இருக்கு ! ஸ்பெஷல் நன்றீஸ்!

said...

போய் இருக்கிறோம் சிற்பங்களை நாள் முழுதும் பார்த்துக் கொண்டிருக்கத் தோன்றும் ஓ அதுஅந்தக் காலம்

said...

// நேரம் எடுத்து நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் எனக்குச் சக்கரைப்பொங்கலா இருக்கு ! ஸ்பெஷல் நன்றீஸ்! //

ஆகா... இப்ப தொடர்ந்து படிக்கிற ஒரே வலைப்பதிவு உங்களோடதுதான். உங்களோட பயணப்பதிவுகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த வகைல நாந்தான் உங்களுக்கு நன்றி சொல்லனும். _/|\_

said...

@ ஜிரா,

நீங்க அனுப்பிய பாடல் இப்பதான் யூட்யூபில் பார்த்தேன். கல்கொடிமரம்தான் காமிக்கிறாங்க. அது இப்பவும் அப்படியேதான் இருக்கு! கவசம் போட்டக் கொடிமரத்தைக் கவனமா கேமெரா மிஸ் பண்ணி இருக்கு!

மேலும் ஹளபீடு ஹொய்சாலேஸ்வரா கோவிலிலும் எடுத்துருக்காங்க. பெரிய நந்தி அங்கேதான்!

said...

பிரம்மிச்சி பிரம்மிச்சு பார்க்குறேன் ஒவ்வொரு படத்தையும்..


என்னா அழகு கொட்டி கிடக்குது..மா

தகவல்களும் மிக சிறப்பு..

நாங்க போகும் போது துளசி தளம் தான் GUIDE எங்களுக்கு.. ஆமா...


----இப்படி மேலே சொல்லி இருக்கேன் அது மாதரி உங்க தகவல்களை guideஆ வச்சு அங்க இருந்த 4 கோவிலுக்கும் ஒரு சின்ன trip போயிட்டு வந்துட்டோம்....அற்புதமா இருந்தது ....

அருமையான அனுபவம் ...


ரொம்ப ரொம்ப நன்றி ...இப்படி நீங்க விரிவா போடலை ன்னா நாங்க போயிருக்க மாட்டோம் ...