Wednesday, January 06, 2016

எங்கூர் தோட்டத்தின் பெயர் ஹேக்ளி பார்க்.

எப்படியும் வருசத்துக்கு ரெண்டு முறையாவது  நம்மூர் தோட்டத்துக்குப் போய் வர்றது வழக்கம் என்றாலும்,  போனவருசம் இது தப்பிருச்சு. எங்கூர் கோடை காலம்  டிசம்பர் முதல் ஃபிப்ரவரி வரை. அதுக்கு முன்னால் மூணுமாசம் செப்டம்பர் முதல் நவம்பர் வரை வசந்த காலம்.  அப்போதான் டாஃபடில் பூக்கள் பூத்துக் குலுங்கும்.  வசந்த கால ஆரம்பத்துலே இதுதான் முதலில் பூக்க ஆரம்பிக்கும்.

இந்த வசந்தமும், இப்போ நடந்து(!)கிட்டு இருக்கும் கோடையும் ஒன்னும் சொல்றாப்லெ இல்லே. ஒரே மழையும் குளிருமா........  ப்ச்.


இந்தத் தோட்டத்துக்கு  மக்கள் கூட்டம் வரும் முக்கியமான நாள் க்றிஸ்மஸ் தினம்தான். அன்றைக்குக் கடைகள் எல்லாம் மூடிக்கிடக்கும்.  ஊர் மக்கள்ஸ் பாதிப்பேர் சாவகாசமா க்றிஸ்மஸ் லஞ்ச் முடிச்சுட்டு தோட்டத்துக்கும்,  மிச்சம் மீதி இருக்கும் சனம் வெய்யில் நல்லா இருந்தால் பீச்சுக்கும் போயிருவாங்க. நாமும் தோட்டம் போகும் வகை என்றாலும், இந்த க்றிஸ்மஸ் தினம்,  பகல் ஒரு  ஒன்றுகூடலுக்குப் போக வேண்டியதாப் போச்சு.

 இண்டியன் கல்ச்சுரல் க்ரூப் நடத்துச்சு.  அங்கே போய் நான்  யெல்லோ டாக்ஸி ஓட்டிட்டு வந்தேன்னு சொன்னால் நம்புவீங்களா?

தவறவிட்ட தோட்ட உலாவை புதுவருசப் பகலுக்கு வச்சுக்கிட்டோம். புதுக் கேமெரா ஒன்னு புத்தாண்டுப் பரிசாகக் கிடைச்சது.  தங்க்ஸ் படம் எடுக்கும் அழகைப் பார்த்து மயங்கி ரங்ஸ் கொடுத்தது :-) சோதனை செஞ்சு பார்க்கணும். அவுட் டோர் படப்பிடிப்பு  எப்படி வருதோ?

லஞ்ச் முடிச்சு ஒரு  சின்னத் தூக்கம் முடிச்சுக் கிளம்பும்போதே  மணி நாலரை. இது பிரச்சனை இல்லை. இப்போ சம்மர் என்பதால் இரவு பத்துவரை வெளிச்சம்(கவனிங்க. சூரியன் இல்லை, வெறும் வெளிச்சம் ) இருக்கும்.  சூரியனைத்தான் தேடிக்கிட்டு இருக்கோம் என்பது உண்மை. நல்லவேளையா மழை இல்லை.




எப்பவும் கண்ணைப் பிடிச்சு நிறுத்தி அண்ணாந்து  பார்க்க வைக்கும் பெரிய பெரிய மரங்கள்!  தோட்டத்தைச் சுத்தி  அகழி மாதிரி ஓடும் ஏவான் நதியில் படகோட்டிக்கிட்டு இருந்தாங்க சிலர். க்ளிக்:-)




தோட்டத்துக்குள்ளே போய்க்  கொஞ்சதூரம் நடக்கும்போதே ஒரு கல்யாணப் பார்ட்டி. ஃபோட்டோ செஷனுக்கு வந்துருக்காங்க. கூட்டத்தில் சட்னு  கவனத்தை இழுத்தது ஒரு புடவை. அநேகமா எதாவது சௌத் ஆஃப்ரிகனாக இருக்குமுன்னு சொன்ன கோபால் என்னை அங்கே போக விடலை.  ஐயோ... என்ன புடவைன்னு தெரியலையேப்பா..........




சின்னதா ஒரு ட்ரோனை வச்சுக்கிட்டு மேலே பறக்கவிட்டுப் படம் எடுத்துக்கிட்டு இருந்தாங்க. ஃபொட்டொக்ராஃபர் சொல்படிக்கு  மணமகளின் ஆட்டம்.  இருந்த இடத்தில் இருந்தே சில க்ளிக்ஸ். அதான் 30 X  Zoom இருக்கே   இந்த   Canon  Powershot SX710 HS மாடலில்.  புடவை ஒரு இடத்துலே நின்னுட்டாலும்...........  கூட்டத்தில் காணாமப் போயிட்டாங்க:-( நல்ல கூட்டம்தான் கிட்டத்தட்ட 15 பேர்!)


இன்னொரு பகுதியில் ஒரு வெதர் ஸ்டேஷன் இருக்கும். இருந்துச்சு. பக்கத்தில் இருக்கும் அறையை  இந்த 28 வருசத்தில் இன்னைக்குத்தான் போய் எட்டிப் பார்த்தோம்.  நேஷனல் க்ராவிட்டி  பேஸ் ஸ்டேஷன்னு பெயராம்!  என்னதான் செய்யறாங்கன்னு தெரியலையேன்னு  தேடினதும் ஆப்ட்ட விவரம் க்ரேட்!


ஜன்னலூடாக  எட்டிப்பார்த்து க்ளிக்கினதில்  க்றைஸ்ட்சர்ச் மேக்னெடிக் அப்ஸர்வேட்டரி 1901- 1969 னு கெமெராக் கண்ணில் பட்டுச்சு. 1970 இல் இருந்து  வேற இடம் பார்த்துப் போயிட்டாங்களா என்ன?  பூட்டுன கதவைப் பார்த்துட்டு அப்படியே  மழை அளக்கும் இடத்தையும் க்ளிக்கிட்டு வேற பக்கம் நடந்தோம்.

GNS.
New Zealand Crown Research Institute. It focuses on geology, geophysics, and nuclear science.  New Zealand's leading provider of Earth, geoscience and isotope research and consultancy services.

நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, சுநாமி, இதைப்போன்ற பேரிடர்களை  அவை வருமுன்பே கவனிச்சு எச்சரிக்கை விடுவாங்களாம்! இதற்கான ஆராய்ச்சி மையமாம்!  என்னென்னவோ பெரிய பெரிய விளக்கங்கள் சொன்னாலும் லேசாப் புரிஞ்சது போலவும், ஒன்னுமே புரியாததைப்போலவும்தான் எனக்குப் பட்டது.  எதோ பெரிய இடத்துச் சமாச்சாரம். இயற்கையை விட பெருசு வேற ஒன்னு இருக்கா? அதுதானே சாமி! இல்லையோ?
 எதிர்பக்கத்தில் நியூஸி க்றிஸ்மஸ் மரமான  பொஹுட்டுக்காவா!  இன்னும் முழுசாப் பூக்கலை. இன்னொருபக்கம் குழந்தைகளுக்கான  விளையாட்டுக் குளம். நீச்சல் அடிக்குமளவு ஆழமெல்லாம் கிடையாது. ஒரு அடி ஆழம் இருந்தால் அதிகம்:-)சறுக்குமரம் அது இதுன்னு அந்தப்பகுதி முழுசும் பச்சப்புள்ளைங்க ஏரியா!



இன்னும் பத்து மீட்டர் நடந்தா இன்னொரு குளம். இது இயற்கை. வாத்துகளுக்கானது. இதுக்குள் இருக்கும் மரங்களில் Shag பறவைகளின் கூடுகள் ஏராளம்.  கரையெல்லாம் கடல்புறாக்கள். எனக்கு ரொம்பவே பிடிச்ச இடம் இது.  அமைதியை இங்கே கண்டதாக  சிலர் சொல்லிட்டுப் போயிருக்காங்க. நமக்குதான் அமைதியே கிடையாதே. மனக்கூச்சல் அதிகமில்லையோ?


பதினெட்டு  வருசம் இந்தத் தோட்டத்தில் வேலை செய்தவருக்கு  ஒரு நினைவுச்சின்னமா   மக்னோலியா மரம் நட்டு வச்சு, அவர்  பெயரையும் பொறித்து வச்சுருக்காங்க. நன்றி மறவாமை!  இவர்தான்  இங்கே அமைதியைக் கண்டவர்!

சிட்டுக்குருவியார்  சாப்பாடு தேடிப் புழுவைக் கண்டடைந்தார்!


நிலநடுக்கத்தில் முறிந்த மரம் இப்போ நமக்கு  உக்காரும் ஆசனமா இருக்கு. ரெண்டு சின்னப்பூக்கள் என்னோடு!

இங்கே இன்னொரு விருப்பமான இடம் கன்ஸர்வேட்டரிகள். ஒன்னு சீஸனல் மலர்கள். இன்னொன்னுலே  வாழை, காஃபி,  சொர்க்கப்பறவைகள் செடிகள்  இப்படி எல்லாமே   ட்ராப்பிக்கல் சமாச்சாரங்கள். இதில் ஒரு பகுதியாத்தான் கள்ளிகள். நிலநடுக்கம் காரணம் பழுதான பகுதி என்பதால்  கடந்த அஞ்சு வருசமா மூடிக்கிடக்கு :-(  ரெண்டும்   திறந்திருப்பது காலை 10 முதல் 4 மணி வரை மட்டுமே!  இப்போ  மணி  அஞ்சேகால். இன்றைக்கு உள்ளே போகக்  கொடுத்து வைக்கலை. அதுக்காக விட்டுறமுடியுமா? கண்ணாடி வழியாக க்ளிக்ஸ் :-)

இதுக்கு  ரொம்பப் பக்கத்துலேதான் புதுக் கட்டிடமா ஒரு விஸிட்டர்ஸ் சென்ட்டர். விசேஷமே இங்கே இருக்கும் கேஃபேதான்.  அங்கே போய் ஆளுக்கொரு காஃபி.

மெள்ள நடந்து  அந்தாண்டை போனப்பதான்  செண்டுப்பூக்களைப் பார்த்தேன். இவ்ளோ செடிகளை இங்கே பார்த்த நினைவே இல்லை. Hydrangea!   ஹைட்ராஞ்சியான்னு பெயர்.  கிழக்கு ஆசியாவில் அதிகமாம்.  இமயமலையில் கூட இருக்காம்.  ஆஹா.... குளிருக்கு அஞ்சாத வகை!




பலவித நிறங்களில் இருக்கும் செண்டுகள் எல்லாம்  மண்ணுக்கேத்த மாதிரி பூக்குமாம்! நம்ம வீட்டில் ஒரு சின்னச்செடி வச்சு நாலு வருசமாகுது. ரெண்டு வருசம் கழிச்சு மொட்டுகள் வந்தப்ப என்ன நிறமா இருக்குமோன்னு ஒரு  எதிர்பார்ப்பு.  ஆனால் பூத்தது வெள்ளை. அப்ப வீட்டுக்கு வந்த தோழி,  வெவ்வேற உரம் போட்டால்தான் கலர்ஸ் வருமுன்னு சொல்லிட்டுப் போனாங்க.



அப்புறம்தான் தெரிஞ்சது, மண்ணில் இருக்கும் அமிலத்தன்மைக்கு ஏற்ப நிறங்கள் உருவாகுமுன்னு.  ஆரம்பத்தில் எல்லாம் வெள்ளையாத்தான்  வருமாம். இன்னொரு வருசக் காத்திருப்பில் நம்ம வீட்டுச் செடி  லேசான பிங்க் நிறத்தைக் கோடிகாட்டி இருக்கு.





இந்தக் கணக்கில் பார்த்தால் இங்கே இந்தத் தோட்டத்தில் இருக்கும் இத்தனை நிறங்களுக்கு  யார் என்ன செஞ்சாங்கன்னு தெரியலையே!  இந்தத் தோட்டம் நம்ம நகரசபையின் பொறுப்பிலும் பராமரிப்பிலும் இருக்கு என்பதால்  விவரம் தெரிஞ்ச தோட்டக் கலைஞர்களை  வேலைக்கு வச்சுருக்காங்க.  காசுக்குப் பஞ்சமா என்ன?



நமக்கு அதெல்லாம் கட்டுப்படி ஆகுமோ? நம்ம தோட்டக்காரர் வேற மாதிரி. கத்தரியோடு தோட்டப்பக்கம் போனாலே நான் அலறி அடிச்சுக்கிட்டுப் பின்னாலேயே ஓடவேண்டி இருக்கும்.



அப்பதான்  கோவிலுக்கு இன்றைக்குப் போகலாம்னு சொன்னார் கோபால். நாளைக்குத்தானே சனிக்கிழமைன்னு  யோசிக்கும்போதே.... புது வருசத்தை முன்னிட்டுன்னு காதில் விழுந்தது.   சரின்னு கிளம்பி  ரோஸ் கார்டன் பகுதியில் நாலைஞ்சு க்ளிக்ஸோடு  ஷூட்டிங்கை  முடிச்சுக்கிட்டு  வீடு வந்துட்டோம்.






ஊருக்கு நடுவிலே  165 ஹெக்டெர் நிலம் (சுமார் 408 ஏக்கர்! 1.61 சதுர கிலோ மீட்டர் அளவு) தோட்டத்துக்குன்னே ஒதுக்கி  இருக்காங்க  நகரை நிர்மாணித்த (1856 இல் )  காலத்துலேயே!  இத்தனை வருசம் இங்கே வசித்தாலும் பலமுறை வந்து போனாலும் முழுசும் ஒன்னுவிடாம சுத்திப் பார்க்கலை இன்னும்.

வருசம் 365 நாளும் திறந்திருக்கும் இடங்களில்  இதுவும் ஒன்னு!  அனுதினமும் காலை 7 மணிக்குத் திறந்துருவாங்க.  அடைக்கும் நேரம்தான்  பருவங்களை அனுசரிச்சு, நவம்பர்  முதல் ஃபிப்ரவரி வரை  மாலை 9 மணி,  மார்ச்  மாதம் முழுசும் மாலை 8.30,  ஏப்ரலில் இருந்து  செப்டம்பர் வரை  மாலை 6.30, பின்னே அக்டோபர் மாசம்  முழுசும் 8.30 இப்படி.........

கிறைஸ்ட்சர்ச் நகருக்கு  விஜயம் செய்யும் சுற்றுலாப்பயணிகள் தவறவிடக் கூடாத இடம் இது!



4 comments:

said...

அழகான பூக்கள். அந்த ரெண்டு குழந்தைகளும் அன்றலர்ந்த பூக்கள் மாதிரிதான் இருக்காங்க.

said...

அற்புதம் அற்புதம் அற்புதம் !!!!!!! கண்ணுக்கு விருந்து வேற வார்த்தையே வரலை . நன்றிகள் பல :))))))).

said...

அழகான தோட்டம்... பூக்கள் இன்னும் அழகாய்த் தெரிகிறது உங்கள் புது காமிரா கண்களின் வழியே!

said...

அழகான தோட்டம்...