Friday, July 04, 2014

மாரதான் மனுசருக்கு மட்டுமா?

விருந்தாளி வந்தவுடனே மணி அடிச்சு ஒரு வரவேற்பு.  அதுவும் வராத விருந்து வந்துருச்சேன்ற வியப்பா? ஊஹூம்.....  பொங்கல், தீபாவளி போல  வருசா வருசம் வந்து போகும்  விருந்தாளிதான்.  வந்தா...சட்னு கிளம்பமாட்டாங்க.  அஞ்சு மாசம் டேரா போட்டுட்டுத்தான் மறுவேலை!  ஆனாலும்  வந்து இறங்கியது  குறைஞ்சபட்சம் ஒரு ஆள்  கண்ணுலே பட்டாலும் போதும், அரைமணி நேரத்துக்கு  மணி அடிச்சுட்டுத்தான் மறுவேலை !  வா வா வா வா  டங் டங் டங் டங்..........

செப்டம்பர் மாசம், இங்கே நியூஸியில்  குளிர் விட்டுப்போகும்  வசந்த காலம்.  நடுக்கும் குளிர் அகல ஆரம்பிச்சவுடனே, பூமித்தாய் மலர்களை அள்ளித் தெளிக்க ஆரம்பிச்சுடுவாள்.  ஏர்லி ச்சியர்ஸ்ன்னு  ஆரம்பிச்சு, டாஃபோடில் , ஹையாசிந்த் இப்படி பல்பு வகைகள்தான் முதலில் வர ஆரம்பிக்கும்.  ஒரு ரெண்டுவாரம்  ஆகும்போதே.....  எங்கூர் கதீட்ரலில் மணி ஓசை திடீர்னு   கேக்க ஆரம்பிச்சா ....ஆஹா.... விருந்து வந்தாச்சு ன்னு புரிஞ்சுரும்!


அலாஸ்காவில் கோடை முடிஞ்சு குளிர் ஆரம்பிச்சுருச்சாம்.  அங்கே கோடைகளில் நாளின் இருப்பத்திநான்கு மணிநேரமும் பகல் வெளிச்சம் இருப்பதுண்டு.  பகல்வெளிச்சம் பாழாப்போகுதேன்னு   புள்ளைகுட்டிகளை வளர்ப்பதில் படுபிஸியாகக் கிடந்த  தாய்தகப்பனுக்கு,  குளிர் காலம் வேண்டவே வேண்டாமாம்.  பெத்துப்போட்டதுகளை எல்லாம் அம்போன்னு விட்டுட்டுக் கிளம்பிருதுங்க.


அதானே.... நம்மை மாதிரி பயணம் கிளம்பணுமுன்னா  விடிஞ்சுரும். டிக்கெட் புக் பண்ணி, மூட்டை முடிச்சு கட்டி, வீட்டைப் பார்த்துக்க(முக்கியமா நம்ம தோட்டத்துச்செடிகளை)  ஒரு கண் வச்சுக்க நண்பர்களிடம் சொல்லிவச்சு,   செல்லங்களுக்கு ஹாஸ்டல்  வசதிகளையும் ஏற்பாடு செஞ்சுன்னு.....   விமானத்துல ஏறி உக்காரும்வரை  ஒரே டென்ஷந்தான்.  இது எல்லாத்துக்கும் முன்னாலே லீவு எத்தனைநாள் கிடைக்குமோ என்ற  கவலை வேற:(
ஆனா....  கொடுத்துவச்ச விருந்தாளிகளான  'காட்விட்ஸ்' களுக்கு,    நினைப்பு வந்தாப் போதும். ரெக்கையை விரிச்சுடலாம்!  நோ லக்கேஜ்  ஆல்ஸோ!

  Godwits  in English  and   Kuaka  in Maori  language.

எத்தனையோ  விதவிதமான  பறவைகள் குளிர்கால இடமாற்றமா  பலநாடுகளுக்கு இடம்பெயர்ந்தாலும்,  இந்த காட்விட்ஸ்  போல மாரத்தான் பறத்தல் இல்லையாக்கும்,கேட்டோ!

மாரத்தான் ஓட்டத்தில் மனுசன், ஒரு  42.195  கி.மீ ஓடி வர்றான் என்றாலும் அதுக்கு குறைஞ்சது  ரெண்டு மணி, மூணு நிமிசம், இருபத்திமூணு விநாடி என்றதுதான்  உலக ரெக்கார்ட்.  ஆனா இந்த காட்விட்ஸ்களின்  வேகம் சராசரியா மணிக்கு  எம்பது கி.மீ (80 K M) என்பதே  ரொம்ப ஆச்சரியமான சமாச்சாரம்!


அலாஸ்காவில் இருந்து கிளம்புனா....  எங்கேயும் நிறுத்தாம (நான் ஸ்டாப்) எட்டாம்நாள் நியூஸி வந்து சேர்ந்துருது.  பயணிக்கும் தொலைவு (11,000 K M )பதினோராயிரம் கிலோ மீட்டர்கள்!  அம்மாடியோவ்!!!!வர்ற வழியிலே  ஃபிஜித்தீவுகளில்  இறங்கிக்கும்   பறவைகளும் உண்டு.  அது ஒரு  இருநூறு எண்ணிக்கை அளவில்.  வருசா வருசம் நியூஸி என்ன வேண்டிக்கிடக்குன்னு  எங்கள் அண்டை நாடான அஸ்ட்ராலியாக்குப் போய்  கோடை காலம் அனுபவிப்பவைகளும்  ஒரு  பதினைஞ்சாயிரம்  எண்ணிக்கையாம்.

ஊஹூம்.... மாட்டேன். எனக்கு நியூஸியேதான் வேணும். 'நியூஸி மதி'ன்னு வருபவை  எண்பதினாயிரம் என்ற கணக்கை எங்கூர் சுற்றுச்சூழல் துறை  சொல்லுது.   விருந்தினரை  வரவேற்று, விருந்து போட்டு  மகிழ்விப்பது  நாங்கதானே!  அதுக்கும் தெரிஞ்சிருக்கு, பாருங்களேன்!

செப்டம்பர் மாசம் வந்திறங்கியதும்  ஃபிப்ரவரி மாசம் வரை இங்கே தங்கல். ஒரு அஞ்சரை மாசமுன்னு வச்சுக்கலாம்.   சும்மாவே உக்கார்ந்துருந்தால் போரடிக்காதா?  ஜோடியை சேர்த்துக்கிட்டுக் குடும்பம் நடத்தி புள்ளைகுட்டி பெத்துக்கிட்டுன்னு ஒரே பிஸி லைஃப்தான்.  இதுக்கிடையில்  தானும் நல்லாச் சாப்பிட்டு உடம்பை வளர்த்துக்கணும்.  கொழுப்பு சேகரிப்பு ரொம்பவே முக்கியம்!



இந்த குறிப்பிட்ட  பறவை இனங்களில் நாலு  வகை  இருக்கு. (நான்கு வர்ணம்?)  ப்ளாக் டெய்ல்ட்,  பார் டெய்ல்ட் ,  ஹட்ஸோனியன், மார்பிள்ட் இப்படி.   நம்மூரில் வர்றது  கருப்பு வால்களே! அதுகளுக்கும் தெரிஞ்சுருக்கே கருப்புதான் நியூஸிக்கான கலருன்னு:-)

கிவி பறவைகளுக்கு இருப்பது போல நீளமான மூக்கு.  ஆனால் அத்தனை நீளமில்லையாக்கும், கேட்டோ!  ஒல்லியான  நீளக் கால்கள்.  உடம்புமே  கூடிவந்தால் ஒரு  ஒன்னரைக்கிலோ இருக்கலாம்.  இதுலே பாதியளவுக்கு மேல் கொழுப்பு உடம்புலே சேர்த்துக்கணும் பயணத்துக்கு முன்.

  கழிமுகங்களில் இருக்கும் சின்னச்சின்ன புழு பூச்சிகள்,  இளம் சிப்பிகள்,  சின்னப்பாப்பா நண்டுகள், கடலில்  Tide  வந்து போகும் சமயங்களில்  கிடைக்கும் குட்டிக்குட்டி மீன்கள்  இப்படி  வகைவகையான சாப்பாடுதான் விருந்தில்.  பஃபே தான்.  தானே போய் எடுத்துத் தின்னுக்கணும்.

எங்க கோடை காலம் முடிஞ்சதுமே  விருந்தாளிகள்  நாட்டைவிட்டுக் கிளம்பிருவாங்க. எல்லாம் தனியாகத்தான். குடும்பம் கூட வராது. சின்னக் குழந்தைகளுக்கு இறக்கையில் வலு வேணாமா அம்மாந்தூரம் பறந்து போக?   'புத்தியோடு பொழைச்சுக்குங்க மக்கா'ன்னு சொல்லிட்டுக் குழந்தை குட்டிகளை  அம்போன்னு வுட்டுட்டுப் போறதுதான் வழக்கம். 'பற்று அற' ன்னு அன்று கீதையில் உபதேசிச்சது இதுகளுக்குத் தெரிஞ்சுருக்கு!

வர்றப்ப எட்டுநாளில் வந்தவங்களுக்குத் திரும்பிப்போகும் ரூட் வேறயாம்.  இங்கிருந்து பத்தாயிரம் கிலோமீட்டர்,  எட்டுநாள்  பயணம் கொரியா/சீனா   Yellow Sea!    கடற்கரையாண்டை ஒரு அஞ்சு நாள் ஸ்டாப் ஓவர்.  நல்லா ரெஸ்ட் எடுத்துக் களைப்பைப் போக்கி, சாப்ட்டுக் கீப்ட்டுக் கிளம்புனா அடுத்த  ஏழாயிரம் கிலோமீட்டரை அஞ்சே நாளில்  கடந்து அலாஸ்காவில் இறங்கிடலாம்.


வந்து இறங்கியதும் கோவில் மணி அடிச்சு வரவேற்பு கொடுத்ததைப்போல திரும்பிப் போகும்போதும் வழி அனுப்பு விழா ஒன்னு நடத்தி  நல்லபடியா போயிட்டு வாங்கன்னு சொல்வோம்.  இது என்றைக்கு, எப்போ என்பதெல்லாம்  எங்க ஊர் சிட்டிக் கவுன்ஸில் 'சம்மர் டைம்ஸ்'  கொண்ட்டாட்டமா போட்டு ஊர்முழுக்க  விநியோகம் செய்யும் இலவச புத்தகத்தில்  இருக்கும்.  கோடை துவங்குமுன்னே ( ஒன்னரை மாசம் இருக்கும்போதே )  புத்தகம் வீட்டுக்கு வந்துரும்.  இதில்லாம பொது மக்கள் பயன்படுத்தும்  இடங்களான  நூலகங்கள், சுற்றுலாத்துறை அலுவலகங்கள்,  சிட்டிக் கவுன்ஸில் கிளை அலுவலகங்கள் இப்படி ஒரு பேட்டை விடாமல்  நிறைச்சு வச்சுருவாங்க. கண்ணில் இருந்து தப்பிக்காது:-)


இங்கே வந்து இத்தனை வருசமாகியும் ஒருவாட்டி கூட போய் வழி அனுப்பலையே, மறந்து போறோமேன்னு இந்த வருசம் கட்டாயம் போகத்தான் வேணுமுன்னு மூளையில் முடிச்சுப் போட்டேன்.  பொதுவா இது ஒரு  ஞாயித்துக்கிழமையாத்தான் இருக்கும். இப்பவும்  அப்படித்தான். மார்ச் மாசம் ரெண்டாம்தேதி.  மாலை 4 மணிக்கு!

தோழியிடம்  வீகெண்ட் சமாச்சாரம் பேசுனபோது, நாங்களும் இதுவரை போனதே இல்லைன்னாங்க.  சரி. சேர்ந்தே போகலாமுன்னு முடிவாச்சு.  கொஞ்சம் சீக்கிரமாப்போய்  சுத்தலாமுன்னு  மூணுமணிக்கே கிளம்பிப் போனோம்.

சௌத்ஷோர்  ( South shore கடந்து  ஸ்பிட் ரிஸர்வ்  ( Spit reserve)  போகணும். இது  நீள மூக்காட்டம் கடலுக்குள்ளே நீட்டிக்கொண்டிருக்கும் நிலப்பகுதியின் கடைசி!  புதர்களும் மரங்களும் மணலுமா இருக்கும் இடம்.


அங்கங்கே சிலர்   புல்தரைப் பகுதியில் இருந்தாங்க.  இன்னும் நேரம் இருக்கேன்னு  சின்னதா ஒரு நடை போட்டுட்டுத் திரும்பி வந்தோம். நல்ல கூட்டம்! மக்களுக்குப் பொழுது போக்க பாட்டுக் கச்சேரி நடக்குது.  உள்ளூர் பாட்டுக்காரர்கள்தான்.  செல்லங்களும் அப்பாம்மா கூடவே வந்து சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தன.

நண்பர் (தோழியின் கணவர்  ) அருமையான  புகைப்படக் கலைஞர்.  நாம் சும்மா இருக்கலாகுமோ?  நாலு பேரும் நாலு கேமெராவும்.  இதுலே ரெண்டு பேர்  ட்ரெய்னி  ஃபொட்டோக்ரா
ஃபர்ஸ்:-)))

சமாதானச்சின்னமா புறாக்களைப் பறக்க விடுவது போல் கூண்டில் அடைச்சு வச்ச காட்விட்ஸ்களைத் திறந்து பறக்கவிடுவாங்கன்னு நினைச்சுக்கிட்டு  கூண்டுகளைத் தேடின நம்  கண்கள்.  ஊஹூம்..... ஒன்னுமில்லை.

சுற்றுச்சூழல் துறையார்,  காட்விட்ஸ்  ஃபேக்ட்ஷீட் ஒன்னு அச்சுப்போட்டு   அங்கே வச்சுருக்காங்க.  நாம் எடுத்து  விவரம் தெரிஞ்சுக்கலாம். பறவையியல்  ஆர்வமுள்ள   நியூஸி மக்கள்ஸ்  (Ornithological Society of New Zealand) கழகம்  விஞ்ஞானிகளுடன் கூட்டு முயற்சியால்  இந்த காட்விட்ஸ்களின்  போக்குவரத்தை ஆராய்ச்சி செஞ்சுக்கிட்டு இருக்காங்க.  இங்கே இருந்து போகும் சில பறவைகளின்  உடலில் மைக்ரோசிப் வச்சு அதன் நடமாட்டம் கண்காணிச்சப்பதான் இவைகள்  இம்மாந்தூரத்தை இத்தனை நாட்களில்   பயணம் செய்து  போகும் விவரமெல்லாம் தெரிய வந்திருக்கு!


இத்துனூண்டு உடம்பை வச்சுக்கிட்டு எப்படி தூக்கம், ஓய்வு  என்று ஒன்னுமில்லாம   இறக்கைகளை அயர்வில்லாம அடிச்சுக்கிட்டே  எட்டுநாட்கள் தொடர்ச்சியாப் பறந்து போகுது?  எனக்கு ரெண்டு தோள்களிலும் வலியை நினைச்சதும்.......  பறவைக் கைகள் வலியைப் பார்த்து ஐயோன்னுதான் ஆச்சு:(   அதெப்படி வலிக்காமல் இருந்துருக்கும் அந்தச் சின்ன ஜீவன்களுக்கு?   பாவம்........

உள்ளூர் பறவை சொஸைட்டி தலைவர் வரவேற்பு (நமக்குத்தான்!)  அளிச்சதும்,   சுற்றுச்சூழல் துறை  ரேஞ்சர்  பறவைகளின் பழக்க வழக்கங்கள் எல்லாம் சுருக்கமாச் சொன்னார்.  இப்ப பறவைகளைச் சந்திச்சு  குட் பை சொல்லலாமுன்னு  கூட்டிப்போனார்.  சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் புதருக்குள் நடந்து போனோம். பெரிய ஊர்வலம்தானாக்கும்!





நடந்து நடந்து  முகத்துவாரத்துக்கருகில் மணலும் கடலுமா இருக்கும் பகுதிவரை கூட்டிப்போனார்.  தண்ணீருக்கு அந்தாண்டை, நாம் வழக்கமா சம்னர் பீச் போகும்  சாலையும்  அங்குள்ள  தரைப்பாலமும் கண்ணில் பட்டது.  மணல்திட்டும் தண்ணீருமா இருக்கும் பகுதிகளில் நூத்துக்கணக்கான பறவைகள்!


அட! இதுதானா அந்த காட்விட்ஸ்!  சம்னர் போகும்போதும் வரும்போதும் எத்தனை முறை பார்த்திருக்கேன். பெயர் தெரியாமப் போச்சே!

இந்தக்கரையில் நின்னு அவற்றை வேடிக்கை பார்த்தோம்.  அநேகமா வந்திருந்த எல்லோருமே க்ளிக் க்ளிக் தான்:-)))))  DOC (Department of Conservation)  நாம் நடக்கும் வழியைச் சரியாக்கி அங்கங்கே சின்னதா மரப்பலகை பாலம் போட்டு வச்சுருக்காங்க.

நம்மைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாம பறவைக்கூட்டம்  தங்களுக்குள் ஆடுவதும் பறப்பதுமா ஒரே விளையாட்டு!   பறவை சொஸைட்டி சார்பில் ரெண்டு  பைனாகுலர்ஸ் வச்சுருந்தாங்க.  அதன் வழியாகவும்  காட்விட்ஸ் (கடவுளின் தமாசுன்னு சொல்லலாமா?)  பார்த்தோம்.



நாடுவிட்டுப்போகும் நேரம் மாலை ஆறுக்கு அப்புறமாம்.  நினைச்சால் பறக்க வேண்டியதுதான்!  கிளம்பிட்டா போய்க்கிட்டே இருக்கணும். நான் ஸ்டாப்!
திரும்பி வந்து புல்தரை பார்க்கில் சேரும்போது  எங்கூர் விஸ்ஸர்ட்  வந்திருந்தார். மந்திரம் போட்டு மீண்டும்  ஆறரை மாசத்துக்கப்புறம்  வரவழைப்பாராக  இருக்கும்:-)

இந்தப் பார்க்கிலும்கூட அவசரத்தேவைக்கு  ஏற்பாடு செஞ்சு வச்ச சிட்டிக்கவுன்ஸிலை எவ்வளவு பாராட்டினாலும்  தகும்.  நம்ம பக்கங்களில் ஏன் இதெல்லாம்  தோணுவதே இல்லைன்னு விசனம்தான்:(
2011 வது  வருசம் முதல்  கடந்த மூணு வருசமா   வா வா ன்னு கோவில்மணி அடிக்கறதில்லை. அதான் கதீட்ரல் நிலநடுக்கத்தால்   இடிஞ்சுபோய்க்  கிடக்கே :(  

செல்விருந்தோம்பி............இனி  வரும் விருந்து காத்து,  ஓசைப்படாமல் வரவேற்போம், செப்டம்பர்  ரெண்டாம் வாரங்களில்!

வந்திருக்கும்  மக்கள்ஸ்க்காக  சின்னதா ஒரு கடை போட்டுருந்தாங்க அங்கே அந்த ஏரியாவில் இருக்கும் நண்பர்கள்.  சும்மா  ஒரு வேடிக்கைக்காகவாம்.  பள்ளிக்கூடப்பிள்ளைகளின் வியாபாரம். கூட்டு முயற்சி.  அம்மாக்களிடம் சொல்லி  கேக், பிஸ்கெட்ன்னு  செஞ்ச ஐட்டங்கள்.  நீங்களே எடுத்துக்கிட்டுக் காசு போட்டுருங்கன்னு சொல்லிட்டு பிள்ளைகள் விளையாடிக்கிட்டு  இருந்தாங்க:-)



மேலே: கடை முதலாளி:-))))

க்ளோபல் வார்மிங் என்று உலகம் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருப்பதாலும்,   கடற்கரைக்கு உலா வரும் நாய்கள்,  மனிதர்களின் அலட்சியப் போக்கால்  சில சமயம்  இந்தப்பறவைகள்  தங்கி இருக்கும் புதர்ப்பகுதி  பாதிக்கப்படுவதாலும்  பறவைகளின் எதிர்காலம் கவலைக்குரியதாக இருக்குன்னு சொன்னார் ரேஞ்சர்!


எல்லாம்  கடவுள் பார்த்துக்குவார்.  எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக  காப்பாத்திக்கிட்டுத்தானே இருக்கார். இனி கை விட்டுடுவாரா என்ன?  அதான் கடவுளைக் கூட்டுச் சேர்த்துக்கிட்டு காட்விட்ஸ்னு பெயர் வச்சாச்சே!

PINகுறிப்பு:   அன்றைய நிகழ்வில் எடுத்த படங்கள் அங்கங்கே.  பதிவைப் படிச்சுட்டு, மீண்டும் ஒருமுறை படங்களைப் பாருங்க.  எல்லாம் வெளங்கீரும்:-)))




27 comments:

said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

said...

நாடோடி மாதிரி திரிந்து விட்டு வர்றேன். என்னை விட்டு விடு? என்று வீட்டில் சொல்வது தான் உங்கள் வார்த்தைகளை படிக்கும் போது உருவாகுது. வாழ்க்கை முழுக்க பணத்திற்காகவே வாழ்ந்தாக வேண்டும் என்பது எத்தனை பெரிய கொடுமை தெரியுமா? அந்த கடற்கரையில் சிறிய உயிரினங்களை ரசித்துக் கொண்டே நாள் முழுக்க இருந்து விட ஆசை. ஆனால் இவர்களோ எங்களின் தேவையை பூர்த்தி செய்து விட்டு எங்கே வேண்டுமானாலும் கிளம்புங்க என்கிறார். பூர்த்தி செய்வதும் வயதான பிறகு பூந்திக்கு ஆசைப்படுவ்தும் ஒன்று தானே?

மனகிலேசத்தை அதிகமாக்கியது இந்தப் பதிவு. நன்றி.

said...

இந்த பறவைகளின் திறமையைக் குறித்து நான் மிகவும் வியந்திருக்கிறேன். அதெப்படி கரெக்டா ரூட்டை கண்டு பிடிக்குது என்பது பெரிய அதிசயமே!

said...

Apppaaa,eppadi ungala aanglieyargal matiri chinna chinna vishyatha kooda ivlo anubhavika mudiyuthu,aacharyama iruku.Paravaigal ellame aacharyam thaanla.Super pathivu.nandri.

said...

சிறகடிக்கும் சிட்டுகள்....

said...

எத்தனை எத்தனை பறவைகள்! இப்பறவைகளின் வலிமை - 11000 கிலோமீட்டர் தொலைவினை கடக்க கிடைத்திருக்கும் வலிமை - என்னவென்று சொல்வது.....

ஆண்டவன் படைப்பில் தான் எத்தனை எத்தனை வகைகள்.....

தங்களது திறமையில் நம்பிக்கை வைத்திருக்கும் இப்பறவைகளைப் பார்க்கும்போது நமக்கும் கொஞ்சம் புத்துணர்வு கிடைக்கத்தான் செய்கிறது....

said...

காட்விட்ஸ் பறவைகளுக்கு ஒரு தேசம் தரும் வரவேற்பும் விடையளிப்பும் அறிந்து மனம் நெகிழ்கிறது. உங்கள் எழுத்தும் படங்களும் இன்னும் அதிகப்படுத்துகின்றன. நன்றி டீச்சர்.

said...

வியக்க வைக்கும் குறிப்புகள். வழியனுப்பு விழா இதுவரை கேள்விபடாத அருமையான ஒரு விருந்தோம்பல்.
அங்கேயே தங்கிவிடும் குஞ்சுகள் அடுத்த வருடம் பெரிய பறவைகளுடன் கிளம்பிவிடுமா?

elderly couple photograph is too good

said...

Nail Polish, bird migration - variety-யா விருந்து படைக்கறீங்க... நன்றி...

said...

காட்விட்ஸின் திறமை ஆச்சரியப்பட வைக்கிறது. எப்படி சரியாக ரூட் கண்டுபிடித்து போகிறது. பாவம்! கைகள் வலிக்கத் தான் செய்யும்.

said...

ஏயப்பா. எவ்வளவு விவரங்கள். துளசி. 11ஆயிரம் மைல்கள் பறப்பது என்றால் கடவுளின் பெருமையை என்ன என்பது. நேற்று பாரதி பற்றிய சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தேன். காக்கை குருவி எங்கள் சாதி. அதைக் காப்பாய் என்று அவர் சொன்னதை உங்கள் ஊரில் செய்தே காண்பிக்கிறார்கள்.உலகம் அனைத்தையும் அன்பால் அணைக்கும் இந்தத் திறன் எப்பொழுதும் இருக்கட்டும்.தான்கீஸ் பா.

said...

கொழுப்பு சேர்த்துக்கொள்ளனும் ஆனால் அது கரைய கூடவே உழைக்கனும்...சரியாகவே செய்யுது இப்பறவை.

said...

மனிதர்களையே ஒழுங்கா வரவேற்று வழியனுப்பாத இந்த ஒலகத்துல பறவைகளுக்கும் வரவேற்பு வழியனுப்ப ஒரு நிகழ்ச்சி. பாராட்ட வேண்டிய விஷயம்.

அதைவிடம் பாராட்ட வேண்டியது அந்தக் குழந்தைகளுக்குக் கேக் பிஸ்கட் செஞ்சு குடுத்து வித்துட்டு வரச் சொல்றது. எந்தத் தொழிலும் இழிவல்லன்னு சொல்றதுக்காக.

அடுத்த பாராட்டு.. ஆண்டுக்கு ஒரு நாள் கொண்டாட்டமா இருந்தாலும் அங்கயும் ஒரு கழிப்பறை வெச்சுப் பராமரிக்கிறதுக்கு.

வாழ்க வளமுடன்.

said...

வாங்க ஜீவலிங்கம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

வாங்க ஜோதிஜி!

பறவை இனங்களுக்கு உள்ள சுதந்திரம் மனித இனத்துக்கு இல்லை:(

அப்படியும் சிலர் துணிந்து நாடோடி வாழ்க்கைக்குப் போயிடறாங்கதான். ஆனால் குடும்பத்தைக் கட்டிக் காப்பாத்தாம, இப்படி போவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

தனிமனிதனாக இருந்தால் எதுவும் செய்யலாம். நம்மை நம்பி இருக்கும் உயிர்களைப் புறக்கணிக்க இயலுமா?

நமக்கில்லாத சுதந்திரம், இப்பறவைகளுக்கு இருக்கேன்னு மகிழ்ச்சி அடையலாம்(பெருமூச்சு விட்டுக்கொண்டே!)

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

எனக்கும் இது வியப்பே! என்ன மாதிரி ஜி பி எஸ் வழிகாட்டுது!!!

said...

வாங்க ரம்யா.

நம்மைச் சுற்றிக் கண்களையும் கருத்தையும் ஓட்டினால்.... எத்தனை எத்தனை அதிசயங்கள். எல்லாத்தையும் ஒரு துளி அனுபவிக்கணும். கண்டு ஆனந்திக்கணும். மனித வாழ்வின் நோக்கமே மனமகிழ்ச்சிதான்.

நடுக்கும் குளிர்காலம் இப்போ எங்களுக்கு. இதில்.... காலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வீட்டுத் தோட்டத்திலிருக்கும் Bird bath இல், பெயருக்கு ஏத்தாப்போல் சின்ன கருப்புப்பறவை வந்து, உறைஞ்சு இருக்கும் தண்ணீரைத் தன் அலகால் உடைச்சுட்டு, குளிச்சுட்டுப் போகுது.

ரொம்ப ஆச்சாரமா இருக்கும் முனிவரோ என்னவோ!!!

said...

வாங்க மாதேவி.

பத்தாயிரம் கிலோ மீட்டர், சிறகை இடைவிடாமல் அடிக்கும் குருவி!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உண்மைதான். அவைகளைவிட பலவீனமானவன் மனிதனே!

படைப்பில் உள்ள அற்புதங்கள்!!!!

said...

வாங்க கீத மஞ்சரி.

உலகம் அனைத்து உயிர்களுக்கும் ஆனது என்பதை நினைவில் வச்சுருக்காங்க. அதான்.....

நல்லா இருக்கட்டும்!

said...

வாங்க சசி கலா.

போன வாரம் மதியம் கடற்கரைக்குப் போகும் வழியில் ஏராளமான சிறுவர்களையும் சிறுமிகளையும் பார்த்தேன். அப்பா அம்மா விட்டுட்டுப் போனவர்கள்.

டைடு குறைவாக இருந்ததால் இரையெடுக்கும் வேலையில் பிஸியாக இருந்தாங்க!

அப்பாம்மா, திரும்பி வந்தால் பிள்ளைகளை அடையாளம் தெரியுமோ என்னவோ?

said...

வாங்க நம்பி.

துளசிதளத்தில் எப்போதும் அன்ப்ரடிக்டபிள் சமாச்சாரம்தான்:-)

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

எனக்கும் இந்தக் கைவலிக் கவலைதான்.

பாவம்ப்பா:(

said...

வாங்க வல்லி.

எல்லாத்துக்கும் ஒரு சொஸைட்டி, அததுக்கு தன்னார்வலரா தங்கள் நேரத்தைச் செலவிடும் மக்கள் இப்படி இருக்காங்கப்பா.

எனக்கும் இன்றுவரை வியப்புதான்!

said...

வாங்க குமார்.

அதுகளுக்குக் கரையுது. எனக்கு????

வீட்டுலே இருக்கும் ட்ரெட் மில், போகவரப் பார்த்துக் கூட ...... !

ஹூம்...........

said...

வாங்க ஜிரா.

போற்றப்பட வேண்டியவைகளைப் போற்றியதுக்கு நன்றி.

அப்புறம்...அந்தக் கழிவறை....

அந்த ஏரியாவில் புஷ் வாக் போகும் மனிதர்களுக்கான ஏற்பாடு. முக்கியமா சின்னப் பசங்களுக்கு. வீட்டை விட்டு வந்த அரைமணி ஒரு மணியில் .... தாங்க முடியாது பாருங்க:-)

said...

When the migratory birds fly long distance, they normally take a V form.Such "V" formation of a flock influences aerodynamics, making it easier for the birds to fly. As the birds flap their wings, the air flowing off their wing tips gives birds in the back of the V an extra lift. This reduces the amount of energy the birds need to fly.
The brids take turns as who will "lead" and who will "tail".
Thyagarajan