Thursday, November 01, 2012

ஜெய் ஜெய் ராம் க்ருஷ்ண ஹரி.... ஜெய் ஜெய்.....

ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னே சண்டிகரில் இருந்தப்போ, காலையில் காஃபி டிகாஷன் இறங்கக் காத்திருந்த ஒரு நன்னாளில் தற்செயலா டிவியை ஆன் செஞ்சப்ப.... ஒரு சின்னக்குழு '  ஜெய்ஜெய் ராம் க்ருஷ்ண ஹரி'ன்னு பாடிக்கிட்டே போகுது. வீடுதேடிவருவான் விட்டலன் என்ற ஆன்மீகத்தொடராம்.

போக நினைச்ச ஊராச்சே இந்த பண்டரிபுரம்! நினைவு வரும் நாட்களில் தொடர்ந்து பார்க்க ஆரம்பிச்சேன். டிவி பார்க்கும் வழக்கம் இல்லாததால்.... டிவியை ஆன் செய்யணும் என்ற நினைவு அறவே இருக்காது. வீட்டு ஃபர்னிச்சர் மாதிரி அது ஒரு பக்கம் இருந்துட்டுப் போகட்டுமே!

ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் கோவில்கதை சொல்வார். ரொம்பவே எளிமையா பாமரர்களுக்கும் (!!!) புரியும்படியாச் சொல்றார்ன்னு கோபாலுக்கு ஒரு அபிப்ராயம்.  'அழைக்கின்றான் அரங்கன் 'என்ற தலைப்பில்   ஸ்ரீரங்கநாதனைப்பற்றிச் சொன்னதை இப்போ கொஞ்சநாள் முந்தி தொடராக் கேட்டோம். அதான் 40 ஜிபி கிடைக்குதே! பக்தி செய்ய சுலபமான வழி நாம சங்கீர்த்தனம். அதிலும் ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே, ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே  ஹரே    என்னும்  ஈஸியஸ்ட் மஹாமந்த்ரம், எண்ணி ரெண்டே வரிகள்தான்   எப்பவேணுமுன்னாலும் மனசுக்குள் சொல்லிக்கிட்டே இருக்கலாம் என்றது எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு. இந்த  அவசரயுகத்தில்   விஸ்தரிச்சு பூஜை புனஸ்காரங்கள் செய்ய எங்கே  நேரம் இருக்கு?

 நான்  சில சமயம் வேளுக்குடி அவர்களின் உபந்நியாஸம் கேட்பேன்.  கிஞ்சிதம் ட்ரஸ்ட்டில் இருந்து  ஒரு சிடி வாங்கி வந்து வச்சுருக்கேன். 'கொஞ்சம் விவரம் தெரிஞ்சவங்களுக்குத்தான் வேளுக்குடி. என்னை மாதிரி பாமரனுக்கு  முரளீதரஸ்வாமிதான் சரி' ன்னு  கோபால் சொல்லும்போது.........  ஆஹா...விவரம் தெரிஞ்ச பட்டியலில் நம்மை ஏத்தி வச்சுருக்காரேன்னு ஒரு அல்ப சந்தோஷம்தான் கேட்டோ:-))))))

முந்தி ஒரு சமயம்கூட  முரளீதர ஸ்வாமிகள் ஆஸ்ரமத்துக்குப் போகணுமுன்னு நினைச்சப்ப நேரம் சரிப்பட்டு வரலை. ஃபோன் செஞ்சப்ப காலை 11 வரைதான் னு சொல்லிட்டாங்க. அங்கே ஒரு பெரிய நேயுடு இருக்காராம். அவரைப் பார்க்கணுமுன்னு எனக்குக் கொள்ளை ஆசை.  டிவியில்  சிஷ்யப்பிள்ளைகளும் குருவுமா, அழகான தோட்டப்பாதையில் வந்து  ஆஞ்சநேயரை சேவிப்பதைப் பார்த்ததில் இருந்துதான்  இப்படி...........

தாம்பரத்தில் இருக்கும் பெரியத்தை வீட்டுக்குப்போய் நம்ம விசேஷத்துக்கு முறைப்படி அழைக்கணும். அப்போதான் ஏன் அப்படியே ஆஞ்சநேயரைப் பார்த்துவரக் கூடாதுன்னு தோணுச்சு. முதலில்  அவரைப் பார்த்துட்டு அப்புறம் அத்தைன்னு முடிவாச்சு.

எட்டுமணிக்குக் கிளம்பிட்டோம்.  அண்ணாசாலையில் இன்னும்  போக்குவரத்து நெரிசல் தொடங்கலை.  சாலை நெடுக  ஒரு பக்கம் மதில் சுவர்களில்  ரொம்ப அழகான  படங்களை வரைஞ்சு வச்சுருக்காங்க.   யார் வரையறாங்க இதையெல்லாம்? சூப்பர் ஸீன்கள்!  ப்ளாட்ஃபாரங்களை  அங்கங்கே தோண்டி வைக்காமல் சீர்படுத்தி,  இதை நடக்க மட்டுமே பயன்படுத்தினா,  சென்னை கொஞ்சம் அழகாவே மாறிடும் அபாயம் இருக்கு!




தாம்பரம் கடந்து படப்பை தாண்டி, ஸ்ரீபெரும்புதூர் சாலையில் போறோம்.  சந்தடிகள் எல்லாம் அடங்கி  ஒரே பொட்டல் காடு. சரியான வழியில் போறோமான்னு சம்ஸயம்.  வழி கேக்க யாரும் கண்ணுலே படலை. கிஷ்கிந்தா  போற வழிதான்னு சொல்லிக்கிட்டே வண்டியை ஓட்டுறார் ட்ராவல்ஸ் ஸ்ரீனிவாசன்.   மேடும் பள்ளமுமான கிராமச்சாலையில்  வீடு கட்டிக்கிட்டு இருக்காங்க யாரோ. செங்கல் சுமக்கும்  பணியாளர் ஒருவரிடம் விசாரிச்சால்  இன்னும் கொஞ்சதூரம் போய் லெஃப்ட்லே திரும்புங்கன்னார்.  அப்படியே செஞ்சதில்  கொஞ்சம் நல்லதாவே தார் ரோடு.  வலப்பக்கம் ஒரு பெரிய ஏரி ஒன்னு கூடவே வருது.




திருக்கோயில்களுக்குச் செல்லும் வழின்னு அம்புக்குறியோடு சின்னதா ஒரு போர்டு. அதில்  ஸ்ரீ கல்யாண சீனிவாச பெருமாள். ஸ்ரீ  ஜய ஹனுமான்னு  ரெண்டு படம்.  மண்பாதைக்குள்ளே வண்டியை செலுத்திப்போனால்..... நமக்கு வலப்பக்கம் ஒரு குளம்.  தண்ணீர் கொஞ்சமா இருந்தாலும் குப்பைகள் ப்ளாஸ்டிக் எல்லாம் இல்லாமல் சுத்தமாவே இருக்கு. பரவாயில்லையே!!!




சின்ன வளைவு திரும்பி பாதையில் போனதும்  நமக்கு வலப்பக்கமாவே  ஹனுமன் தெரிஞ்சார். பெரிய கேட் போட்டு, உள்ளே கொஞ்சதூரம் ஒரு அம்பது அறுவது மீட்டர் இருக்கும் தொலைவில் உயரமா நிக்கறார். படியேறிப்போகணும்.  திருமஞ்சனம் செய்விக்கும் வசதிக்காக அவரைச்சுத்தி ஸ்டீல் ஃப்ரேம் போட்டு வச்சுருக்காங்க.பார்த்தால்.........பாவமா ஜெயிலில் இருப்பதைப்போல்...........

அன்பென்னும்  சிறையில் அகப்பட்ட ஆஞ்சநேயர்!

அடுத்த கேட்டுதான் பெருமாளுக்கு!  ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாசன்.  சின்னக்கோவில்தான். வாசலில் சுவற்றில் அறிவிப்புகள்.  உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை:(  தனியார் சொத்து.  அவுங்க உரிமைகளை நாம் மீறக்கூடாது. கோவிலுக்கு வயசு பத்து!

நடுவில் கருவறை. சுற்றி மண்டபம். ஒரே ஒரு பிரகாரம். மண்டபத்துக்கு வெளியே கருடாழ்வார் சந்நிதியைப் பார்த்து நிக்கறார். மூலவரைத் திரை போட்டு மறைச்சுருந்தாங்க.  அலங்காரம் நடக்கிறது. நீங்கள் சந்நிதியை வலம் வந்துருங்கோன்னார்  பட்டர். சரின்னு வலம் வந்தோம்.  வலது பக்கமூலையில் ஹனுமனுக்குத் தனியா ஒரு சின்ன மேடை. அதுலே  ஒரு  கற்பலகையில் செதுக்கிய  அனுமன் சிற்பம்.  திரும்பி வந்தால் பிரசாதத்துடன் ரெடியா இருக்கார் பட்டர்.  கோவிந்தான்னு சொல்லி ,ரெண்டு கையையும் குவிச்சு வாங்கிக்கணும். அத்தனாம் பெரிய உருண்டை! புளியோதரையாக்கும் கேட்டோ! சாப்பிடமுடியுமான்னு பிரமிப்பு வந்தது நிஜம். வேணுமா வேணாமான்னு நாக்கு தீர்மானிக்கணும். அதுவோ.... வேணும் என்றது. மண்டபத்தில் ஒரு ஓரத்தில் உக்காந்து  விழுங்கினோம்.  பக்கத்தில் ஒரு அலுவலக அறையும்  கை அலம்பிக்க சௌகரியமும்  இருந்தன.வளாகத்தில் கோவிலைச் சுற்றி நிறைய மரங்கள்.

மதுராபுரி  ஆஸ்ரமம்.  மஹாரண்யம் கிராமம். (மஹா ஆரண்யம்= பெரிய வனம்/காடு) மலைப்பட்டு. ஸ்ரீபெரும்புதூர் தாலுகா.  தாம்பரத்தில் இருந்து  15 கிலோமீட்டர் தூரம்தான்.  இடப்பக்கம் கோவிலுக்குத் திரும்பாமல் நேராப்போனால் பத்தே கிலோமீட்டரில் ஸ்ரீபெரும்புதூர் போயிறலாம்.

இந்த மஹா ஆரண்யத்துக்கும் ராமாயணத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சொல்றாங்க. சீதையைத் தேடிக்கிட்டு தென்திசை நோக்கிப்போன ராமனும் லக்ஷ்மணனும் இங்கே மூணுநாட்கள் தங்கிப்போனதாகச் சொல்றாங்க.  அந்தக் காலத்துலே ஏது  சென்னை, தாம்பரம்  எல்லாம்? பாரத நாட்டில்  முக்கால்வாசியும் பெரிய காடாத்தானே இருந்துருக்கணும் . சபரி மலையில்  பக்தசபரியின் ஆஸ்ரமத்துலே  தங்கி, சபரி கடிச்சுக்கொடுத்த இலந்தப்பழத்தை ராமன் ருசித்ததாகவும்,  நம்ம சென்னை கோயம்பேடில்தான்  வால்மீகி ஆஸ்ரமம் இருந்துச்சுன்னும் அங்கேதான் , பாவம் புள்ளைத்தாய்ச்சி சீதை குசலவர்களைப் பெற்று வளர்த்ததாயும் எத்தனை கதைகளைக் கேட்டுருக்கோம் . அதையெல்லாம் நம்புனமாதிரி இதையும் நம்பிக்கலாம்.  ராமாயணம் வடக்கத்திகளுக்கு மட்டும் இல்லை நமக்கும் அதுலே பாகம் இருக்குன்னு  (அல்ப) சந்தோஷப்பட்டுக்கலாம்.  அதுலே என்ன தப்பு?
 ஆஸ்ரம சைட்டில்  சுட்ட படம்


சும்மா உக்காந்து சிந்திச்சுக்கிட்டு இருந்த நேரத்துக்கு  அடுத்த பக்கம் இருந்த இன்னொரு கேட்டுக்குள்ளே போய் ஆஸ்ரமத்தையும் தோட்டத்தையும் பார்த்துருக்கலாம். தோணாமப் போச்சு.  வேற  பக்தர்கள் யாரும் வரலையேன்னு நினைச்சுக்கிட்டே  ஏகாந்த சேவைன்னு  இதோ இப்ப சந்நிதி திறந்துருமுன்னு  விஸ்ராந்தியா  இருந்துட்டோம்.  ஒருமணி நேரம் ஓடியே போச்சு.   திரை திறந்தாங்க. உள்ளூர் மக்கள் போல ஒரு  மூணுபேர் சரியான நேரத்துக்கு  வந்துட்டாங்க. தரிசனம் நல்லபடியா ஆச்சு.  இன்னிக்கு ஸ்ரீ ராமர் அலங்காரமாம்!!! தனியார் கோவில் என்பதால் உண்டியல் ஒன்னும் இல்லை. ஒரு பெரிய பாத்திரம் சந்நிதி வாசலில்.  பக்தர்கள் விருப்பம்போல்  காணிக்கை செலுத்தலாம் போல! உள்ளுர் ஆட்கள் செய்கையில் இருந்து தெரிஞ்சது.

ஹனுமனை தரிசிக்கப்போனால் ......  கேட் மூடிட்டாங்க.  அடடா.... உக்கார்ந்துருந்த நேரத்துக்கு இங்கியாவது வந்துருக்கலாம்,இல்லே? கோட்டை விட்டுட்டேனே.......:(

இவருக்கு வயசு மூணு. 2009 வது ஆண்டு மஹாசிவராத்ரியன்னிக்குத்தான் பிரதிஷ்டையாம்.  24 படிகள் ஏறி இவர் பாதத்தாண்டை போகலாம். இவருடைய உயரமும் 24 அடிகள்.  வால்மீகி ராமாயணத்தில் 24 ஆயிரம் செய்யுள் என்பதால் ஆயிரத்துக்கு ஒன்னு என்ற கணக்கில் 24 அடின்னு கேள்வி.   சகல தோஷங்களையும் நிவர்த்தி  செய்யும் வகையில் ஒரு அபூர்வ யந்த்ரத்தை இவர் காலடியில் பிரதிஷ்டை சமயம் வச்சுருக்காங்க என்பதால் இவரை வணங்கினால் நவகிரகக்கோளாறு முதல் சகல கஷ்டங்களும் நீங்கும் என்ற நம்பிக்கை. அதுவும் ஏகாதசியன்னிக்கு விசேஷ பூஜைகள் உண்டாம். வெற்றிலை மாலை, வடை மாலை என்று  ஆனந்தமாப் போறது !  ஜய ஹனுமன்!

நவீன யுகத்துக்கு ஏத்தமாதிரி ஆஸ்ரமத்துக்கு அழகான வெப்சைட் கூட இருக்கு. இங்கே இருந்துதான் விலாசம்  கண்டுபிடிச்சேன்.

ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் கூட ஏகாதசியன்னிக்குத்தான்  மக்களை சந்திப்பாராம்.  கதையெல்லாம் கேட்டுட்டு கிளம்பி அரைமணியில்  தாம்பரம் அத்தை வீட்டுக்குப் போனோம். அவுங்கதான் சொன்னாங்க.... 'ஆஸ்ரமத்துலே அற்புதமான துளசிவனம் இருக்கு. மரங்கள் அடர்ந்து  சோலைகளா குளுகுளுன்னு இருக்கும் கோசாலை இருக்கு. உள்ளே போய் பார்க்காம வந்துட்டியே'ன்னு.

துளசியா?  ப்ச்.... விட்டுப்போச்சு.............

ஆனால் ஒன்னு.....  இனி டிவியிலே பார்த்ததை வச்சு ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு  எங்கேயும் போகக்கூடாதுன்னு நல்லாப் புரிஞ்சு போச்சு.




23 comments:

said...

நாங்களும் உடன் பயணித்தோம்
படங்களுடன் பதிவு அருமை
தொடர வாழ்த்துக்கள்

said...

பார்க்கவே என்ன அருமையா இருக்கு!!

நாமசங்கீர்த்தனம் எனும் பொழுது ‍ ஸ்வாமி ஹரிதாஸ் கிரி அவர்களின் சிடிக்கள் வெச்சுருக்கீங்களா? கேட்காமல் ஜென்மம் முழுமை அடையாது என்பது பொதுவான ஒரு அபிப்பிராயம் :) டி.ஆர்.சி அங்கிள் உடனடியாக வந்து கட்டியம் கூற‌வும் :) (யூட்யுபிலே சில லிங்க்ஸ் இருக்கு, ஆனா நல்ல குவாலிட்டி இல்லை)

அப்புறம் டீச்சர் வொ.தி.கொ.வெ?? அப்படி எல்லாம் மறைமுகமான‌ செய்தி ஒண்ணும் இல்லை!!! இன்னும் காலம் எக்கச்சக்கம் இருக்கு ஆமா!!

said...

படப்பை அழகான இடம். அங்கே துர்க்கைச் சித்தரைக் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த ரோடு பூராவும் ரியல் எஸ்டேட் ஆஸ்ரமங்கள் நிறைய.
தண்ணீர் செழிப்பும் ஜாஸ்தி.கோவிலில் கிருஷ்ணப்ரேமிகா வரதனைப் பார்க்கவில்லையா. அழகான படங்கள் துளசி.

said...

//
ஹனுமனை தரிசிக்கப்போனால் ...... கேட் மூடிட்டாங்க. அடடா..//


நல்ல வேளை நீங்க உட்கார்ந்திருந்த பொழுது உங்களுக்கு பின்னாடி
இத்தனையும்

சுப்பு ரத்தினம்

said...

முரளிதர சுவாமிகளின் வீடு தேடி வருவான் விட்டலன் நாங்களும் பார்த்துக் கொண்டு இருந்தோம்....

வேளுக்குடி அவர்களின் சொற்பொழிவும் கேட்பதுண்டு. மே மாதம் ஸ்ரீரங்கத்தில் நாங்கள் வெளியே கிளம்பி சென்று கொண்டிருந்த போது அவர் எதிரே நடந்து வந்து கொண்டிருந்தார். ஸோ! நேரிலும் பார்த்தாச்சு.

நீங்கள் சொல்வதை பார்த்தால் படப்பை நல்ல இடம் என்று தோன்றுகிறது.

said...

புதுக்காமிராவில் சுட்டதா?. கடைசியில் இருக்கும் ஆஞ்சனேயர் கொள்ளையழகா இருக்கார்.

said...

அன்பெனும் சிறையில் அடைபட்ட ஆஞ்சநேயுடு அருமை.

நமக்கும் ஹரே ராம..... நாமகரணம்தான் தகுந்தது :)))

said...

உங்கள் தலைப்பில் சொன்ன பாடல் - மிகவும் ரசித்த பாடல். சில நாட்கள் என்னுடைய மொபைல் ரிங் டோனாக வைத்திருந்தேன் - அது கேட்டுக் கேட்டு பல வட இந்திய நண்பர்கள் கூட அவர்கள் மொபைலில் சேமித்துக்கொள்ள, அலுவலகத்தில் எந்த அலைபேசி அழைத்தாலும் “ஜெய் ஜெய் ராம க்ருஷ்ண ஹரி” தான்!

said...

படமும் பகிர்வும் மிகவும் அருமை...

நன்றி...

said...

அந்த நாள் ஞாபகம் வந்ததே! கல்லூரி நாட்களில் என்னுடைய புல்லெட் மோட்டார் பைக்கில் இது மாதிரி இடங்களில் சுத்தினது ஞாபகம் வருகின்றது...

மிக நன்றாக எழுதுகிறீர்கள். போற போக்கைப் பார்த்தல் என்னையே அனுமனை சேவிக்க வைத்து விடுவீர்கள் போலிருக்கு...!

said...

படங்கள் எடுத்த கைக்கு ஒரு பெசல் பார்சல்.

தொடக்கத்தில் உங்களைப் போலவே சுற்றியுள்ள ஒவ்வொரு கோவிலுக்கும் தேவியர்களை கூட்டிக் கொண்டு சென்ற நாட்கள் நினைவுக்கு வருது.

எதிர்பார்ப்புகளை வைத்துக் கொண்டு எரிச்சல்பட்ட காலம் போய் அப்புறம் எதார்த்தமாக சுற்றிப் பார்க்கச் சென்ற போது அனுபவித்தது தான் அற்புதம்.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வெளி இடங்களுக்குச் செல்லும் நாம் நம் கவனத்தில் வைக்க வேண்டிய முக்கிய விசயம்

இப்படி இருக்குமா? அப்படி இருக்குமா? என்று யோசிக்கவே கூடாது.

இருப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டால் சொர்க்கமே.

வடமொழி எழுத்துக்களை அதிகம் எழுதிய உங்கள் கைவிரல்கள் அடிக்கும் போது என்ன பாடுபட்டு இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கின்றேன்.

said...

வாங்க ரமணி.

பயணத்தில் ,உடன் வந்ததற்கு என் நன்றிகள்.

said...

வாங்க பொற்கொடி.

நானும் யூ ட்யூபில் ஸ்வாமி ஹரிதாஸ் கிரி கொஞ்சம் கேட்டுருக்கேன்ப்பா.

போன பதிவில் உங்க பின்னூட்டம் கொ வெறியைத் தூண்டிவிட்டதே!!!!!

கொ: கொஞ்சம் & கொஞ்சும்

said...

வாங்க வல்லி.

படப்பை அவ்ளோ நல்ல செழிப்பான இடமுன்னா சொல்றீங்க? புதுத்தகவலா இருக்கே எனக்கு!!!! நன்றிப்பா.

அப்போ நம்ம ஆஸ்ரமத்துக்கு அங்கேயே இடம் பார்க்கலாமா?????

//கிருஷ்ணப்ரேமிகா வரதனைப் பார்க்கவில்லையா. //

ஙே........... பயணம் முழுசும் துளசிப்ரேமிகா கோபாலனையல்லவோ பார்த்தேன்!!!!

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

அனுப்பியவர்கள் வந்தார்கள். ஆட்டம் ஜோர். ரசித்தேன். செல்லம்போல இருக்காங்க எல்லோரும்.

நன்றி.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

வேளுக்குடி ரெண்டு வாரங்களுக்கு முன் நியூஸி வந்துருந்தார். ஆனால் ஆக்லாந்து நகர். மூணு நாள் பிரசங்கமாம்.

புண்ணீயாத்மாக்கள் கேட்கட்டுமுன்னு விடவேண்டியதுதான்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

எல்லாம் பழைய கேமெராவில் சுட்டவையே! புதுசு பயன்படுத்த புக் படிக்கலை அப்போ:(

இப்போ? ...படிச்சுக்கிழிச்சுட்டேன்:-)

said...

வாங்க மாதேவி.

கடவுள் காட்சிக்கும் வாக்குக்கும் எளியவனா இருக்க வேணாமோ!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சில வரிகளும் ஒலிகளும் மனசை அப்படியே ஈர்த்துவிடுகிறதே!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க நம்பள்கி.

முதல்முறையா வந்துருக்கீங்க போல!

மனுசனுக்கு எதன்மேலேயாவது பிடிப்பு வேணுமில்லையா? அதான் சாமி, கோவில், யானை, பூனை, குரங்குன்னு ஒரு பிடித்தம் எனக்கு.

அதிலும் நம்மூர் அரசியல்வியாதிகளை நம்பறதுக்கு அனுமனை நம்புனால் போறவழிக்காவது புண்ணியம்.

தன்னலமில்லாத சேவைக்கு அனுமனை விட்டா வேற யார் இருக்கா?

said...

வாங்க ஜோதிஜி.

எங்க அண்ணி சொல்றது இதேதான்.' இங்கெல்லாம் இப்படித்தாங்க'ன்னு விட்டுறணும் என்பாங்க.

//வடமொழி எழுத்துக்களை அதிகம் எழுதிய உங்கள் கைவிரல்கள் அடிக்கும் போது என்ன பாடுபட்டு இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கின்றேன்.//
அப்டீங்கறீங்க? இந்தக் கோணத்துலே நான் யோசிச்சுப் பார்த்ததில்லையே!

இப்ப யோசிக்க ஆரம்பிச்சால்.... எனக்காவது எப்பவாவது தான். உங்களுக்கு...? பெயரில் ரெண்டு எழுத்து. தினம் தினம் தொந்திரவுதானோ? அட ராமா!!!!!!!!!

said...

அருமையான படங்களுடன் பகிர்வு சூப்பரு! எங்கள் பாஸ் இந்த ஆஞ்சநேயரைப் பார்க்கணும், தரிசிக்கனும்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க... இந்தப் படத்தைக் காமிச்சுட்டேன்!!