Monday, October 17, 2011

ஓம் மணி பத்மே ஹூம்.........( சிங்கை சந்திப்புகள் 2011 பகுதி 9 )

இன்னிக்கு ஃபிப்ரவரி 22. இந்த நாள் மறக்கமுடியாத ஒரு நாளாகிப்போகுமுன்னு எந்த cantabrian -னும் நினைச்சே இருக்கமாட்டாங்க நியூஸி நேரம் பகல் 12.51 ஆகும்வரை. 'நியூஸி கேண்டர்பரி ரீஜன்' மக்களைத்தான் இப்படிச் சொல்வது வழக்கம். காலையில் வழக்கம்போல் சீனுவைக் கண்டுக்கிட்டு வந்தாச்சு. முகமில்லாத நளனில் காலை உணவையும் முடிச்சுக்கிட்டோம். லேடீஸ் டே அவுட்க்கு ஏற்பாடாகி இருக்கு. இதுலே நம்ம கோபாலை என்ன செய்யறதுன்னு பயங்கர முன்னேற்பாடு.........அவருடைய நியூஸி கம்பெனி 'தலை' இன்னிக்கு பகல் மூணுவரை சிங்கையில் இருப்பார். அவரோடு ஒர் லஞ்சு டேட்..

பத்துமணிக்குத் தோழி அறைக்கு வந்துட்டாங்க. சிங்கையின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயந்தி சங்கர். ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துருக்கு. கோபால் கிளம்பிக்கிட்டு இருக்கார். ரயில் பிடிச்சு ஏர்போர்ட் ஹொட்டேலுக்குப் போறாராம். தற்செயலா டிவியை ஆன் செஞ்சதும் அதுலே காமிச்சுக்கிட்டு இருந்த சேதி அப்படியே எங்களை உறையவச்சது.

நியூஸியில் எங்க ஊர்லே நிலநடுக்கம். நல்ல பகல் 12.51க்கு நகர மையத்துலே பயங்கர அழிவு. வேலை நாள் ஆனபடியால் அலுவலகங்கள், கடைகள் இப்படிக் கூட்டம் அதிகம் கூடும் இடங்கள். ரெண்டு பெரிய அடுக்கு மாடிக்கட்டிடங்கள் அப்பளம்போல் நொறுங்கி விழுந்துருக்கு. இறப்பு எண்ணிக்கை அதிகமுன்னு படம் காமிக்கிறாங்க. அதிர்ச்சியில் மூஞ்சி செத்துப்போய்க் கிடக்கும் எங்களை ஜெயந்தி ஆறுதல் சொல்லித் தேற்றிக்கிட்டு இருக்காங்க. மகளை அங்கிருந்து தொடர்பு கொண்டோம். முதலில் லைன் கிடைக்கவே இல்லை. விடாமல் முயற்சி செஞ்சதும் தரைவழியில் கிடைச்சாள்.

நெருங்கிய தோழியின் தாத்தாவின் மரணச்சடங்குக்குப் போயிட்டு வரும்போதுதான் நிலநடுக்கம் ஏற்பட்டுச்சாம். ரேடியோ செய்தியில் யாரும் நகர மையத்துக்கு வரவேணாம். அவரவர் வீட்டில் இருங்கன்னு காவல்துறை அறிவிப்பு கொடுத்துருக்கு. வீடுகளில் தண்ணீர், மின்சாரம் எதுவும் இல்லை. தொடர்ந்து ரேடியோ செய்தி கேட்டு அதன்படி செய்யுங்கன்னு அரசு அறிவிச்சுக்கிட்டு இருக்கு. சிவில் டிஃபென்ஸ், ஆபத்து வரும் காலத்தில் பொதுமக்கள் என்னென்ன முன்னேற்பாடுகள் செஞ்சுக்கணுமுன்னு டெலிஃபோன் டைரக்டரியின் பின்பக்க அட்டையில் விவரம் கொடுத்துருப்பாங்க. அதுலே முக்கியமானது அஞ்சு லிட்டர் குடி நீர். டார்ச் லைட். அதுக்குண்டான கூடுதல் பேட்டரிகள், ரேடியோ, டின்னின் அடைச்ச உணவுகள் இப்படி ஒரு பட்டியல் இருக்கும். அது முக்கியமுன்னு உணர்ந்தாலும் முக்கால்வாசி ஜனம் எமெர்ஜன்ஸி சப்ளை ஒரு நாள் எடுத்து தயாரா வைக்கணுமுன்னு நினைக்கும். அதுலே நாமும் ஒன்னு:(

இந்த வருச டெலிஃபோன் டைரக்ட்டரியில் கூடுதலா ரெண்டு பக்கம் கடைசி அட்டைக்குப்பக்கம் சேர்த்துருக்காங்க. நிலநடுக்கத்துக்கு முன்னுரிமை! Earthquake Resource Guide , Canterbury Earthquake Recovery Authority. இங்கெல்லாம் வருசாவருசம் புது டைரக்டரி எல்லா வீடுகளுக்கும் இலவச சப்ளை உண்டு. நமக்கு ஃபோன் லைன் இருக்கா இல்லையான்னெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கமாட்டாங்க. அதுபாட்டுக்கு அதுன்னு வாசல்லே கொண்டுவந்து வச்சுட்டுப்போயிருவாங்க. பழைய டைரக்டரியை அதே பையில் போட்டு மறுவாரம் வாசலில் வச்சுட்டா அவுங்களே வந்து பழசை எடுத்துக்கிட்டுப் போயிருவாங்க.

மகள் காரில் இருக்கும் ரேடியோவில் செய்திகளைக் கேட்டுக்கிட்டு இருந்துருக்காள். நிலம் ஆடுனதில் பயந்துபோன 'ஜூபிடர்' வேற காணாமப் போயிருக்கான். (அவள் ஒரு பூனை வளர்க்கிறாள்) கவலைப்படாதீங்க, நான் நல்லா இருக்கேன்னு சொன்னாலும் நமக்கு மனசு கேக்குதா?

சிங்கைக்கும் நியூஸிக்கும் அப்போ எங்க கோடை காலம் ஆனதால் அஞ்சு மணி நேர வித்தியாசம் இருக்கு. சம்பவம் நடந்தப்ப சிங்கையில் காலை 7.51. நாங்க காலையில் எழுந்து குளிச்சுட்டுக் கோவிலுக்குப் போயிட்டோம். குறைஞ்சபட்சம் திரும்பி வந்தவுடன் டிவி போட்டுருந்தால் கூட விவரம் கொஞ்சம் சீக்கிரமாத் தெரிஞ்சுருக்கும். அப்போ நம்ம கோவி. கண்ணன் கைபேசியில் கூப்பிட்டு என்ன விவரமுன்னு கேட்டுட்டு (அவரும் தொலைக்காட்சி செய்தியில் விஷயத்தைப் பார்த்திருக்கார்) சென்னையில் இருந்து வல்லியம்மா உங்க கைப்பேசி எண் கேட்டாங்க கொடுத்தேன்னார். வல்லியம்மாவும் சென்னையில் பொழுதுவிடிஞ்சு செய்தி பார்த்தப்ப ஆடிப்போயிட்டாங்க.

கொஞ்ச நேரத்தில் வல்லியம்மா கூப்பிட்டாங்க. மகள் நலம் என்ற விஷயத்தைச் சொன்னதும் அவுங்களுக்கும் கொஞ்சம் நிம்மதி ஆச்சு. கோபால் கிளம்புனதும் நானும் ஜெயந்தியுமாக் கிளம்பி நடக்கப்போனோம். நல்லவேளையா ஏதும் முன்னேற்பாடுகள் பண்ணி வச்சுக்கலை. அஜெண்டா ஒன்னும் இல்லாத ஒரு ஒன் டு ஒன் சந்திப்பு. மனம்விட்டுப்பேசும் நாள் இது. கிறைஸ்ட்சர்ச் நிலநடுக்கமே இன்னிக்குப் பேச்சை ஆக்ரமிச்சது. என்னை உற்சாகப்படுத்த ஜெயந்தியும் ஆறுதல் சொல்லிக்கிட்டே வேறேதோ நடப்பைப்பற்றிப் பேசறாங்க.

செராங்கூன் சாலையில் கடைகள் எல்லாம் திறந்து அன்றைய தினத்துக்கான வாடிக்கையாளர்களுக்குக் காத்திருக்கு. வாசலில் நிற்கும் பொம்மைக்கு அழகாப் புடவை கட்டிவிட்டுக்கிட்டு இருக்கார் ஒருத்தர். விரல்கள் கொசுவத்தை மடிப்பதிலே ஒரு லாகவம். அவரோட மனைவி ரொம்பக் கொடுத்து வச்சவங்கன்னு அவர்கிட்டேயே சொன்னேன். அவருக்கு வெட்கம் கலந்த சிரிப்பு:-) க்ளிக்.
எருமைத்தெருவுக்குள் நுழைஞ்சோம். அங்கே ஒரு கடையில் தமிழ்ப்புத்தகங்கள் கிடைக்கும்.. நோட்டம் விட்டபோது எனக்கானது எதுவும் கண்ணுலே படலை. ஆனால்.....சிந்தனைக்கு உணவில்லாத போது வயிற்றுக்கும் ஈயப்படணுமாமே..... அந்தக் கணக்கில் அருமையான குழாய்ப் புட்டு வித்துக்கிட்டு இருக்கார் ஒருத்தர். கூடவே மல்லிகைப்பூ இட்டிலியும் இடியப்பமும்.பார்த்ததுமே வாங்கத் தூண்டும் விதத்தில் பொதிஞ்சு வச்சுருந்தது சூப்பர். சுத்தயமான பொருள்தான். நான் மட்டும் உள்ளூர் வாசின்னா இதை வாங்காமல் விடமாட்டேனாக்கும்!
இங்கே மூக்குத்திக்கே ஒரு கடை இருக்குன்னு சொன்னதும், 'நீங்க வந்தாத்தான் உள்ளூர் சமாச்சாரமே எனக்குத் தெரியுது'ன்னாங்க ஜெயந்தி. 'இந்தப் பக்கமெல்லாம் வர்றதே இல்லை. எப்பவாவது வந்தால் அதிசயம். எனக்கும் ஒரு மூக்குத்தி வாங்கிக்கணும். போய்ப் பார்க்கலாமா'ன்னாங்க.. நானும் மகளுக்கு ஒன்னு வாங்கலாமான்ற யோசனையில் இருந்தேன். தமிழ்நாட்டு ஸ்டைலில் திருகாணி உள்ளது மகள் போடமாட்டாள். வெறும் கம்பி உள்ளது கிடைக்குமான்னு தேடணும். மூக்குத்தி கார்னரில் நுழைஞ்சோம்.
மகளுக்குச் சரியானதா ஒன்னுமே அமையலை. ஒரு நீலக்கல் 'நோஸ் பின்'னை எடுத்துப் பார்க்கும்போது நான் பார்த்துட்டுத்தரேன்னு கையில் வாங்கிய ஜெயந்தி..... இது நான் மகளுக்குக் கொடுக்கும் அன்பளிப்புன்னுட்டு என் சொல்லை 'மதிக்காமல்' அவுங்களே அதுக்கும் சேர்த்து பணம் கொடுத்துட்டாங்க. முதல்லேயே சொல்லி இருந்தால் இன்னும் நல்லதா வாங்கி இருப்பேனேன்னு 'சண்டை' போட்டேன்:-))))))
லிட்டில் இண்டியா ஆர்கேடுக்குள் புகுந்து மனம்போனபடி சுற்றிட்டு
வழியில் இளநீரை வாங்கிக்குடிச்சுட்டு கேம்பெல் லேன் வழியாக் கொஞ்சம் கடைகளை வேடிக்கைப் பார்த்துக்கிட்டே போன எங்களை வாவான்னு கூப்புட்டார் அடுத்த சாலையில் சந்திப்பில் உக்கார்ந்துருந்த புள்ளையார். வெள்ளை வேட்டி , மேல்துண்டோடு ஆளு பலே ஜோரு! இவர் வலம்புரி வேற! பேச்சு சுவாரசியத்தில் ஜலன்பெஸார் சாலைவரை வந்துருக்கோம். ஜெவுக்கு யானையைக் காமிக்கலாமேன்னு பென்கூலென் சாலை கிருஷ்ணன் கோவிலுக்குப் போகலாமுன்னு சொன்னேன்.
சீனக்கோவிலுக்கெதிரில் கடைகளைக் கடக்கும்போது ஏதோ இந்திய மந்திரம் போல ஒன்னு இடைவிடாம ஒலிக்குது. ஓம் என்னும் ரீங்காரம். இது நம்ம ஓம் மாதிரி கேக்குதுல்லேன்னேன். அறியாமையைச் சரியான ஆளிடம் வெளிப்படுத்திட்டேன் பாருங்க.. 'ஓம் மணி பத்மே ஹூம்'. ன்னு சொல்லும் மந்திரம் அதுன்னாங்க ஜெ. சீனக்கலாச்சாரத்தில் ஆர்வம் அதிகம் உள்ள ஜெ இதுவரை நிறையக் கதைகளை சீனத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து இருக்காங்க.

தொடரும்.................:-)

14 comments:

said...

இடியாப்பம் இப்படிக் கிடைத்தால் செளகரியம்தான்:)!

ஜூபிடர் கிடைத்தானா?

said...

அன்பின் டீச்சர்,

நியூஸியைப் பற்றிய தகவல்களைத் தந்து 'ஆடிப் போக' செய்து விட்டீர்கள். :-(


மூக்குத்தியெல்லாம் வாங்குறீங்க...கோபால் அண்ணாவுக்கு சிங்கை ஞாபகமா எதுவும் வாங்கிக் கொடுக்கலையா டீச்சர்? :-)

said...

புள்ளையார் அம்சமா இருக்கார்.

இப்படி பிழிஞ்சு ஜோரா பாக்கெட்டும் போட்டுக் கொடுத்தா இடியாப்பம் சாப்பிட மாட்டேன்னா சொல்லுவோம் :-))

said...

அந்த நாளை இன்னும் மறக்க முடியவில்லை துளசி.


பீள்ளையார் மகா ஜம்முனு இருக்கார்.
அன்பு ஜயந்திக்கு ரொம்ப நன்றிகள் சொல்லிக்கறேன் மா.

said...

அதிர்ச்சியில் மூஞ்சி செத்துப்போய்க் கிடக்கும் எங்களை ஜெயந்தி ஆறுதல் சொல்லித் தேற்றிக்கிட்டு இருக்காங்க./

ஆடிப் போன நியூசி.

மீண்டுவந்தது ஆறுதல்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

பயந்து ஓடின வீரன் சிலமணி நேரங்களில் தானாய் மெதுவாப் 'பூனை போல' வீட்டுக்குள் நுழைஞ்சானாம்:-)

said...

வாங்க ரிஷான்.

உங்க கோபால் அண்ணாவுக்கு வைரமூக்குத்தி வாங்கிப்போட எனக்கு ஆசைதான். ஆனா அதுக்கு அவர் மூக்கு குத்திக்கச் சம்மதிக்கவேணாமோ? :-)))

said...

வாங்க அமைதிச்சாரல்

எனக்கும் நோகாம நோம்பு கும்பிட ஆசைதான். ஆனா அதிர்ஷ்டம் வேணாமா?

இன்னிக்குப் புட்டு தான் மதியச்சாப்பாடு.
ஹெல்த்ஃபுட் மாவு கிடைச்சது. தின்னு பார்த்துட்டு பதிவு போடணும்.
புது புட்டுக் குட்மாக்கும் கேட்டோ:-))))

said...

வாங்க வல்லி.

அந்தநாள் .......... மறக்கமுடியாததாப் போயிருச்சுப்பா.

உடனே தொலைபேசி விசாரிச்சத்துக்கு என் நன்றியை இன்னொருக்காச் சொல்லிக்கறேன்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

மீண்டுவர முடியாமல் பண்ணுதேப்பா இந்த இயற்கை. போன ஞாயிறு ஒரு 5.5 வந்து ஆடுச்சு. இதில் புதுசா உண்டான டேமேஜுக்கு க்ளெய்ம் பண்ணலாம்முன்னு அறிவிச்சு இருக்காங்க.

நிலமகள் அடங்குவேனான்றாளே:(

said...

இன்னும் ஆடிக் களைக்கவில்லை :(

ஆகா நம்மஊரு இடியாப்பம், புட்டு.

எங்கு சென்றாலும் பிள்ளையாரும் கூடவே வந்துவிடுகின்றார்.

said...

நல்லாயிருக்கேன்னு சொன்னாலும் நமக்கு மனசு கேக்காது டீச்சர். கேக்கக் கூடாது டீச்சர். அதான் பாசம்.

போன வாரம் தங்கையோட பேசுறப்போ மருமகன் ஏதோ வெளையாடும் போது தலைலன்னு ஆரம்பிச்சா... நான் குறுக்க புகுந்து... அவன் விளையாடுறப்போ நீ மண்டைய உள்ள விட்டியாக்கும்னு கேட்டேன். இல்ல... மகளோட தலைல பட்டுருச்சுன்னு சொன்னா. நான் ஒடனே.. என்னது என் மருமகளுக்கு அடி பட்டிருச்சான்னு பதறிப் போய்க் கேட்டேன். இதையெல்லாம் கேட்டுக்கிட்டிருந்த பிரதர் இன் லா “ஏண்டா, என் பொண்டாட்டின்னா மண்டைய கொண்டு போய் உள்ள விட்டியான்னு கேக்குற. மருமகன்னதும் ஐயோ மருமகளுக்கு அடிபட்டிருச்சான்னு பதறுற”ன்னு சொன்னாரு. எல்லாரும் சிரிச்சிட்டோம். :)

ஓ! மணி பத்மே ஹூமா? நாங்கூட மணி பத்தே ஹூமோன்னு நெனச்சேன். :)

செரங்கூன் மாலுக்கு என்னவோ பேர் சொல்வாங்களே. அங்க கோமளவிலாஸ்ல காப்பி கெடைக்குமே. அடடா. அதுக்குன்னே அங்க போவேன். மத்தபடி அந்த மாலு ரொம்ப நெரிசல். உள்ளயெல்லாம் போறதில்லை.

பக்கத்துலயே ஒரு மால் கட்டிப் பாத்தாங்க. ஆனா அது காத்தாடுது. மக்களுக்கு இதுதான் பிடிச்சிருக்கு. :)

said...

வாங்க மாதேவி.

புள்ளையாருக்கென்னப்பா....கொடுத்து வச்சவர். எல்லா இடத்திலும் இவர் இல்லேன்னா வேலையே நடக்காது:-)

said...

வாங்க ஜீரா.

தாய் மாமன் உறவு லேசுப்பட்டதா என்ன? அதான் உடலே பதறிப்போகுது!

ஷாப்பிங் பண்ணும் மக்கள் பசி வந்துட்டா பறந்து போயிருவாங்கன்னு முஸ்தாஃபா வெராந்தாலேயே தீனிக்கடைகள் நிரம்பி வழியுது.

ஆனாலும் கோமளவிலாஸ் ருசி தெரிஞ்சவுங்க இங்கே கை நனைக்கிறதே இல்லை:-)

கோமளாஸ் ஃபாஸ்ட் ஃபுட் நல்லாவே இல்லை:( பழசும் முந்தி இருந்தமாதிரி இல்லை என்பதுதான் வருத்தம். புது ஜெனெரேஷன் நடத்துதுல்லே!