Wednesday, October 05, 2011

முருகனைக் கும்பிட்டு............( சிங்கை சந்திப்புகள் 2011 பகுதி 6)

டேங்க் ரோடு ஸ்ரீ தண்டாயுதபாணி கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். பார்க்க ரொம்ப சாதுவா ஒரு அஞ்சு நிலைக்கோபுரம். பெரிய குமிழ்கள் அடுக்கிவச்ச உசரமான கோபுர வாசல். கடந்து உள்ளே நுழைஞ்சால் கண்ணுக்கு நேரா மூலவரின் கருவறை. அதுக்கு வலப்புறம் தனித்தனியா ரெண்டு சந்நிதிகள். மணி மாலை ஆறேமுக்கால். மூலவருக்கு ஆரத்தி எடுத்துக்கிட்டு இருந்தாங்க. தண்டாயுதபாணி அட்டகாசமான மலர் அலங்காரத்தில் தகதகன்னு ஜொலிக்கிறார்.


முருகன் கோவிலுன்னு சொல்லி வழி கேக்கறதைவிட 'செட்டியார் கோவிலு'ன்னு சொன்னால் டாக்ஸி ஓட்டி சட்னு கொண்டுபோய் விட்டுருவார். 1859 வருசம் நகரத்தார்கள் என்று சொல்லும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் சேர்ந்து கட்டுன கோவில் இது.
மூலவர்


சிங்கப்பூருக்கு வியாபாரம் செய்யும் நிமித்தமாக வந்த நகரத்தார்கள், ஒரு சாதாரண வேல் ரூபத்தில் முருகனைக் கும்பிட்டு அந்த வேலை ஒரு அரசமரத்தடியில் நட்டு வச்சாங்க. (பொதுவா இந்த அரசமரத்தடி அண்ணனின் இடம்தானே? அதை தம்பி எப்படி புடிச்சார் பாருங்க! )இந்த மரத்துக்குப் பக்கத்துலே ஒரு குளம் இருக்கு. அதுலே நல்லதண்ணீர் ஊற்று இருந்துருக்கும் போல. அதுலே தினமும் காலையில் மூழ்கி எழுந்து அரசமரத்தடியில் இருக்கும் வேலவனை வணங்கி நாளை ஆரம்பிப்பது ஒரு பழக்கமாக ஆகி இருக்கு. பிற்காலத்தில் டேங்க் ரோடை அரசு விரிவுபடுத்தும்போது அந்த அரசமரத்தை எடுத்துட்டாங்க.
முருகன் சந்நிதி


முருகனுக்கு ஒரு கோவிலைக் கட்டிடலாமேன்னு அப்பத்தான் தோணுச்சு. நகரத்தார்களே தமக்குள் நிதி திரட்டி டேங்க் ரோடுலே அந்தக் காலத்துலே கொழிச்சுக்கிட்டு இருந்த ஒரு டாக்டர் (இவர்தான் இங்கத்து முதல் சர்ஜன்)வச்சுருந்த நிலத்தை விலை பேசி வாங்குனாங்க. கோவில் கட்டி முடியும்வரை சிவன் கோவில், மாரியம்மன் கோவிலுன்னு போய் சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்துருக்காங்க.

1859லே கட்டுன முதல் கோவில் சின்ன அளவுலேதான் இருந்துருக்கு. ஊர்லே இருக்கும் செட்டியார்கள் வீடுபோலவே வாசலில் பெரிய திண்ணைகள் வச்சு உள்ளே கடந்துபோனால் அர்த்த மண்டபம், கருவறைன்னு சிம்பிளா முடிச்சுட்டாங்க. முருகனும் சிலா ரூபமா வந்துட்டார். கருவறைக்குப் பக்கத்துலே இருக்கும் பெரிய முற்றத்துக்கு நாலுபக்கமும் ஓடுவேய்ஞ்ச தாழ்வாரம் போட்டு வீடுகளில் பொதுவா ரெண்டாங்கட்டு மூணாங்கட்டு சொல்றது போல இதுக்குக் கார்த்திகைக் கட்டுன்னு பெயர் வச்சு அங்கே நடுவில் கோவில் விசேஷ நாட்களில் அன்னதானம் நடந்துக்கிட்டு இருந்துச்சு. (படத்துக்குக் காப்பிரைட் இருக்கு. ஒரு நாலு நாளைக்கு விட்டுவச்சுட்டு எடுத்துருவேன். அனுமதி கேட்டு கோவிலுக்கு அனுப்பிய மெயிலுக்கு இன்னும் பதில் வரலை)

12 வருசத்துக்கு ஒரு முறை கோவிலை மராமத்து செஞ்சு குடமுழுக்குன்னு 122 வருசம் ஓடுனபிறகுதான்(1981) கார்த்திகைக் கட்டை இடிச்சுட்டுக் கல்யாண ஹால் ஒன்னு கட்டுனாங்க. ஹாலில் கீழ் தளத்தில் அன்னதானமும் மேல்தளத்தில் கல்யாணங்கள் நடத்த வசதியும் உண்டாக்குனாங்க. (இப்ப அட்டகாசமான கமர்ஸியல் கிச்சன் இருக்கு!)

75 அடி உசரமுள்ள ராஜகோபுரம், கோவில் பணியாட்கள் தங்கும் விடுதிகள் இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா விரிவுபடுத்திக் கோவிலுக்குள்ளேயும் நல்ல மாடர்னா அழகுத்தூண்கள், சிற்பங்கள் இப்படி வடிவமைச்சுட்டாங்க.
முருகன் சந்நிதிக்கு முன் இடப்புறம் விநாயகருக்கும் வலப்புறம் இடும்பனுக்கும் சின்ன அழகான தனித்தனிச் சந்நிதிகள். முருகனுக்கு இடப்புறம் இரண்டு சந்நிதிகளில் மீனாக்ஷியும் சிவனும் தனியாக இருக்காங்க. கருவறைகளின் வெளிப்புறச் சுவர்களில் சுத்திவர மாடங்கள் வச்சு அதுலே அறுபடை வீடுகளின் நாயகர்கள் நின்னு அருள்பாலிக்கிறாங்க. முன்மண்டபத்தில் இடப்பக்கம் தில்லை நடராசனின் பெரிய சிற்பமும் அதையொட்டிய அரங்கமேடையும் கலை நிகழ்ச்சிகள் நடத்த வாகா அமைஞ்சுருக்கு. அலங்காரத்தூண்களில் கூத்தனின் தாண்டவச் சிற்பங்கள். கௌரி தாண்டவம் வலதுகால் தூக்கி ஆடும் மாறுகால் தாண்டவம், சம்ஹார தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், திரோபவ தாண்டவம் இப்படித் தங்க நிறத்தில் ஜொலிக்குது.



கோவிலுக்குள்ளே வர அனைவருக்கும் அனுமதி இருப்பதால் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் இங்கே வந்து கோவிலைச் சுத்திப் பார்த்துட்டுத்தான் போறாங்க.

இதை க்ளிக்கி நீங்களும் சுத்திப் பாருங்க.

சுத்தம் செய்யும் வேலைகள் நடக்குதோன்னு ..... அங்கங்கே கொஞ்சம் சாமான்கள் கிடக்குது.
தைப்பூசம் இங்கே ரொம்பவே விசேஷம். காவடி எடுக்கும் பக்தர்கள் நம்ம செராங்கூன் ரோடு பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமா டேங்க் ரோடு வரை வர்றாங்க.
ஆகம விதிகளின்படி பூஜைகள் நடக்குது. ஊரில் இருந்து பூஜை செய்யப் பூஜாரிகளைக் கூட்டிவர்றாங்க. பக்தர்களுக்கு விநியோகிக்க வெத்தலை, பாக்கு, பழம் அடுக்கி வச்சுருப்பதே ஒரு அழகுதான். கோவில் ஊழியருடன் பேச்சுக் கொடுத்ததில் மாரியம்மன் கோவிலில் இன்னிக்கு விசேஷமுன்னு சொன்னார். உடனே போனா சாமி ஊர்வலம் பார்க்கலாமுன்னாரேன்னு டாக்ஸி ஒன்னு பிடிச்சு அஞ்சே நிமிசத்தில் போய்ச் சேர்ந்தோம்.
நம்ம மாரியம்மா எங்கே குடிகொண்டு இருக்கான்னால் சைனா டவுனில்!! கோவில் வாசலை மிதிக்கும்போது 'வா வா. ஏன் இவ்ளோ லேட்டுன்னு வரவேற்றார் வெள்ளை விநாயகர்!

தொடரும்............:-)



17 comments:

said...

கோவில் எவ்வளவு சுத்தமாய் இருக்கு!

நம்ம ஊர் கோவில்களில், அதுவும் அதன் தூண்களில் பிரசாதம் சாப்பிட்டு கை துடைப்பது போல நல்ல வேளை யாரும் இங்கே செய்வதில்லை....

நல்ல கோவில், அதுவும் மிகவும் பழமையான கோவில் பார்க்கக் கொடுத்தமைக்கு நன்றி டீச்சர்...

said...

தை பூசத்தில் பார்த்தது,திரும்ப ஒரு விசிட் அடிக்கணும்.

நண்பர்களே , என்னுடைய இந்த சவால் போட்டி கதையை படித்து , ஓட்டை போடவும்:

B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011

said...

நீங்க எடுத்திருக்கிற படங்கள் மிளிர்கின்றன.

said...

வெத்தலை பாக்குத் தட்டு ஜூப்பரு. முன்பெல்லாம் கல்யாண வீடுகள்லயும் இப்படியொரு தாம்பூலத் தட்டு வலம் வரும். வேணுங்கறவங்க எடுத்துப்பாங்க.. இப்போ அது பீடா ஸ்டால் ஆகிடுச்சு.

கோவிலின் சுத்தத்தைப் பார்க்கறச்சே ஏக்கமா இருக்கு. நம்மூரு எப்போ அப்படி ஆகும்(மக்கள் திருந்தறச்சேன்னு உங்க பதில் இப்பவே எனக்கு கேட்டுடுச்சு:-))

said...

முருகா முருகா முருகா

சிங்கை முருகா! உன் திருக்காட்சி நானும் கண்டேன். இனியும் காண்பேன். அருள் முருகா.

படங்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு டீச்சர். கோயில்னா இப்பிடி இருக்கனும்.

ரெண்டு நாளைக்கு முன்னாடி என்னோட மருமகள் இந்தக் கோயில்ல பரதநாட்டியம் ஆடியிருக்காங்க.

அப்படியே டீச்சர் ஒரு சின்ன விளம்பரம். புது வீடு தொறந்திருக்கேன். நீங்களும் அடிக்கடி வாங்க :) ரீடர்ல போட்டு வெச்சிக்கோங்க.

http://gragavanblog.wordpress.com/

said...

படங்கள் மிக அழகு. அந்த கதவு எவ்வளவு பெரியதாக இருக்கு? அருமை.

said...

பக்தர்களுக்கு விநியோகிக்க வெத்தலை, பாக்கு, பழம் அடுக்கி வச்சுருப்பதே ஒரு அழகுதான்.

அழ்கான பகிர்வுக்கும் படங்களுக்கும் பாராட்டுக்கள்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நம்மாட்கள்தானே இங்கும்! அதெப்படி சுத்தமா வச்சுக்க முடியுது!!!! இந்தியாவுக்கு வரும்போதும் இதே பழக்கமா இருந்தால் எவ்ளோ நல்லது!

ஒருவேளை ஊரோடு ஒட்டி வாழணுமோ:-))))

said...

வாங்க இளையதாசன்.
புதுவருகை & முதல்வருகைக்கு நன்றி.

படிச்சுட்டு பொன் ஓட்டை போடறேன். இப்போ ஒருவாரத்துக்கு ........ மூச் விட நேரமில்லை!

said...

வாங்க குமார்.

அங்கே எப்படி மிளிர்கிறதோ அது அப்படியே படத்தில் வந்துருது.

புதுக்கெமெரா ஒன்னு வாங்கிப் பரிசோதனையில் இருக்கு இந்த நிமிசம்:-)))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

பீடா ஸ்டாலில் ஏகப்பட்ட கிண்ணங்களில் கலர்க்கலரா என்னென்னவோ சாமாச்சாரங்கள்.

எதுக்கு வம்புன்னு எட்டிப்பார்ப்பதோடு சரி!

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கவே முடியாதாம்.

கையில் சாட்டை எடுக்கணுமோ என்னவோ..... இதுக்கெல்லாம் கூடவா ஜனநாயகம்?

said...

வாங்க ராகவன்.

முருகன்னு சொன்னதும் ஆன்மீக்கச்செம்மல் வருகை!!!! பேஷ் பேஷ்.

நேத்துப்பொறந்தமாதிரி நினைவு. அதுக்குள்ளே ஆடும் அளவுக்கு வந்தாச்சா மருமாள்!!!! பொண் வளர்த்தி......பீர்க்கங்காய் வளர்த்தி என்பது சரிதான்!

ஆமாம்...கிரகப்பிரவேசத்துக்கு அழைப்பு அன்புப்பறதில்லையா? வீட்டுக்கு வந்து பார்க்கிறேன் விரைவில். எத்தனை பதிவு போட்டுருக்கீங்க?

said...

வாங்க ராம்வி.

அதுக்குப் பக்கத்துலே நிக்கும்போது நாம் எவ்ளோ சின்னவங்களா ஆகிடறோம் பாருங்க! இதுக்குத்தான் கோவில்கதவுகள் பெருசா வைக்கிறாங்க போல!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

எவ்ளோ சிரத்தையாச் செஞ்சு அடுக்கி வச்சுருக்காங்கன்னு பார்த்து வியப்புதான் எனக்கும்!

வருகைக்கு நன்றிங்க.

said...

// பொண் வளர்த்தி......பீர்க்கங்காய் வளர்த்தி என்பது சரிதான்! //

ஆமா டீச்சர். நேரம் நெகுநெகுன்னு வளருது. காலம் கடகடன்னு ஓடுது. :)

// ஆமாம்...கிரகப்பிரவேசத்துக்கு அழைப்பு அன்புப்பறதில்லையா? வீட்டுக்கு வந்து பார்க்கிறேன் விரைவில். எத்தனை பதிவு போட்டுருக்கீங்க? //

இன்னையோட சேத்து அஞ்சு பதிவுகள். வாரத்துக்கு ஒன்னாச்சும் போட்டுறலாம்னுதான் இருக்கேன். :)

said...

பழைய படம் காணக் கிடைக்காத காட்சி.

சிலைகள் தகதகக்கின்றன. வெள்ளைப் பிள்ளையாரும் வணக்கம் கூறுகிறார்.

said...

வாங்க மாதேவி.

எல்லாப்புகழும் புள்ளையாருக்கே!!!!!!