Sunday, January 27, 2008

திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 12 (நிறைவுப்பகுதி)

' கோமள்' என்று காதில் சொன்னதும் சிரித்தது குழந்தை. எல்லாரையும் மனம் பதைபதைக்க வைத்துவிட்டாள் இந்தச் சின்னக்குட்டி. லலிதாவுக்கே நம்பிக்கையில்லை, இந்த முறை எல்லாம் முடிந்தது என்று நினைத்தாளாம்.
தீபக் பரவாயில்லை. கஸ்தூரியிடம் வளர்வான். ஆனந்த் தான் பாவம். ஆனாலும் பாட்டியின் செல்லமாச்சே.' நல்லவேளை !!!அவள் கற்பனைகள் எல்லாம் நொறுங்கியது.


அம்மாவின் பெயரை வைக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என்று சிரித்தாள் கஸ்தூரி. கோமளவல்லிதான் இப்ப 'இங்கே' வந்து பிறந்துவிட்டாளாம்!


'அப்போ நம்ம குழந்தைக்கு அப்பா பெயரா? ' அப்பாவியாகக் கேட்டான் ஆகாஷ். 'அய்யோ வேண்டவே வேண்டாம். அப்பா..............' பதறினாள் கஸ்தூரி.



'சட் சட்' என்று நொடியில் மாறும் அவள் முகபாவம் ஆகாஷுக்கு எப்போதும் வியப்புதான்...


எத்தனை களங்கமில்லாத வெள்ளை மனசு. இவளுக்கு நல்ல காலம் வரட்டும் என்று மனதில் வாழ்த்தினார் மா ஜி.

* * * *

"வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டுவிடு."

பிதா ஜி சொல்லிக்கொண்டு வந்தார், ஹரியும் அவருமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியில்.


"அதுதான் என்ன செய்வதென்றே தெரியவில்லை பிதா ஜி. கனகாவின் பிடிவாதம் கொஞ்சமும் குறையவில்லை. தூக்கத்தில் கூட ஊருக்குப் போகணும் என்று புலம்பல். எனக்கும் சங்கடமாகத்தான் இருக்கிறது. அவர்கள் வீட்டில் இருந்து யாராவது வந்து கூட்டிப்போனால் நல்லது. என்னால் கண்டிப்பாகப் போகவே முடியாது. அதுவும் உங்களை இந்த நிலமையில்.........."


'அதான் சொல்கிறேன், வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டுவிடு'. இடைமறித்தார்.


" இதோபார் ஹரி. அப்பா சொன்னதையெல்லாம் புரிந்துகொண்டாயா? எல்லாம் நடக்கும்விதமாக நடக்கும். நம் கையிலா இருக்கிறது? நீயே கனகாவைக் கூட்டிக்கொண்டு ஊருக்குப்போய் வா. ஆமாம். இப்போது நீ மட்டுமா? உன்னை நம்பி இரண்டு உயிர்கள்..... "


"இல்லை மா ஜி. அது வந்து........."



"ஊஹூம்... ஒன்றும் பேசாதே. அவள் மனசு ரொம்ப பலஹீனப்பட்டு இருக்கிறது. அவளிஷ்டம்போல் விட்டுப் பிடிக்கவேண்டும்தான். எங்களைப்பற்றிக் கவலைப்படாதே.....அதெல்லாம் கஸ்தூரியும் ஆகாஷும் இருக்கிறார்கள். நீங்கள் திரும்பிவரும்வரை அவர்கள் இங்கேயே இருந்துகொள்ளட்டும் என்று ஆகாஷின் அம்மா சொல்கிறார். "



பிரேந்திரரின் வியாபாரம் நல்லபடியாக நடக்கிறதாம். அவனுக்கும் அவ்வளவாக ஓடியாட வேண்டாமாம். அவனே அப்பாவைத் தேவைப்படும்போது மருத்துவமனைக்குக் கூட்டிக்கொண்டு போகிறேன் என்கிறான். அதான் .பட்பட்' இருக்கிறதே...


பிரேந்தர் 'பட்பட்' வாங்கியது முதல் பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம். அவன் வேலையில் இருந்து வந்ததும் இரவு எத்தனை நேரமானாலும் கூட அதில் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தால்தான் தீபக்கும் ஆனந்தும் தூங்குவார்கள். இந்த 'பட்பட்' ஆனந்த் வைத்த பெயர்தான், அப்பாவின் மோட்டார் சைக்கிளுக்கு.


'ரெண்டு மருமகன்களும் தாங்கும்போது எனெக்கென்ன மனக்கவலை' என்று உரக்கச் சிரித்தார் பிதாஜி.


சட்டென்று மா ஜியின் மனம் பிஜ்யாவிடம் போனது. ஹூம்....மூன்று மருமகன்கள் தாங்குகிறார்கள் என்று சொல்லக் கொடுத்து வைக்கவில்லை.
பாவம் பிஜ்யா எப்படி இருக்கிறாளோ? ஹரி போய்வந்தும் ஏழெட்டு மாசம் ஆகிறதே. அவன் ஊருக்குப் போவதற்குள் ஒரு முறை பிஜ்யாவைப் பார்த்துவிட்டு வந்தால் நன்றாக இருக்கும்................


நினைத்தவுடன் கிளம்ப முடியுமா விவசாயி? ஒவ்வொன்றாக குறுக்கீடுகள் வந்து கொண்டிருந்தன.


ஊருக்குப்போகப் போகின்றோம் என்ற எண்ணமே ஆனந்தமாக இருந்தது கனகாவுக்கு. பிள்ளைத்தாய்ச்சி என்று பார்த்துப்பார்த்து உதவி செய்தாள் கஸ்தூரி.


'ஒரு பத்துநாள் போதும்தானே?' யதார்த்தமாகக் கேட்டான் ஹரி. 'அதெப்படி? குழந்தை பிறக்கும்வரை இருக்க மாட்டீர்களா?' என்றாள் கனகா. இது ஏதடா வம்பாய்ப் போச்சு.....அதற்குத்தான் நிறைய நாட்கள் இருக்கிறதே......

மா ஜியுடன் ஆலோசித்தபோது, 'அவள் சொல்வதற்கு சரி என்று சொல். அப்புறம் பார்க்கலாம். அங்கே போனவுடன் தாய்தகப்பனைப் பார்த்தவுடன் எண்ணம் மாறிவிடும். பத்து நாட்கள் எல்லாம் போதாதுதான்.'அவ்வளவு தூரம் போய் அவளை விட்டுவிட்டு உடனே வர முடியுமா? ஒரு மாதம்வரை இருந்துவிட்டு வாயேன். உனக்கும்தான் இங்கே ஓய்வே கிடைப்பதில்லை' என்றார்.


"உங்களுக்குப் புரியாது மா ஜி. அங்கே நான் எங்கே போயிருப்பேன்? அப்பாவும் ஊரில் இருப்பதே இல்லை. இருந்தாலும் அவருடைய இடம் என்று ஒன்றுமில்லாமல் இங்கே அங்கே என்று சுற்றிக்கொண்டிருப்பார். உறவினர்கள் வீட்டில் போய் இருப்பதும் எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. கனகா வீட்டின் கதையே வேற. ஒன்றும் செய்யாமல் அங்கே அடைபட்டு இருக்கவும் முடிவதில்லை. எனக்கு இங்கே, இந்த வீட்டைவிட்டால் வேறு எங்கும் என்னால் இயல்பாக இருக்க முடிவதில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகத் திரும்புவேன்."


இதோ அதோ என்று சிலமாதங்கள் ஓடிவிட்டன. ஏழாம் மாதம் முடிவதற்குள்ளாவது கிளம்ப வேண்டும் என்று லலிதா சொல்லிக்கொண்டிருந்தாள். நெடும்தூரம் பயணம் அல்லவா? நாளை மறுநாள் நல்லநாளாம். மூட்டைக்கட்டும் வேலை ஆரம்பமானது. கஸ்தூரிதான் சின்னச்சின்ன அன்பளிப்புகளைக் கொண்டுவந்தவண்ணம் இருந்தாள்.

* * * *
இடிபோல் வந்த சேதி கேட்டு போட்டது போட்டபடி கிளம்பி ஓடினார்கள் ஹரியும் ஆகாஷும் 'அடிப்பாவி' என்று கதறிக்கொண்டே இருந்தார் மா ஜி. கண்ணீருடன் லலிதாவும் கஸ்தூரியும். வெறித்தபார்வையுடன் செய்வதறியாது விக்கித்து உட்கார்ந்திருந்தார் பிதாஜி. வீட்டின் சூழ்நிலையும், சேதியின் பயங்கரமும்............... இதுவரை பார்க்காத நாத்தனாரை நினைத்து அழத்தான் முடிந்தது கனகாவால்.


வீட்டில் ஆட்கள் இருக்கும் அரவமே இல்லையே என்று பயந்தபடி வெளிப்புறக் கதவில் கை வைத்தான் ஹரி. அவ்வளவுதான் அடங்கிக் கிடந்த அலைஓசைபோல் இரைச்சல். ஆளாளுக்கு என்னமோ சொல்லிக் கத்தினார்கள்.

கோபத்தீ கொளுந்துவிட்டு எரிந்தது. சம்பந்தி சொன்னதைக் கேட்டு ஹரிக்கு நெஞ்சை அடைத்தது.


பிஜ்யா தற்கொலை செய்து கொண்டாளாம், மூன்று நாட்களுக்கு முன் பெய்த பேய்மழையில் நிறைந்திருந்த கிணற்றில் விழுந்து. மறுநாள் கிணற்றில் தண்ணீர் கொண்டுவரப்போன மூத்த மருமகள் அலறியடித்துகொண்டு ஓடிவந்து சொல்லி இருக்கிறாள்.


போலீஸ் அது இது என்று ஏகப்பட்ட அமர்க்களமாம். நியமங்கள் முடிந்தபின் அதிகநேரம் ஊறிவிட்ட நிலையில் அழுக ஆரம்பித்திருந்ததைச் சட்டுப்புட்டென்று எரித்தானதாம்.


அவள் கணவன் எங்கே இருந்தானாம்? வீட்டில்தானாம். ஆனால் அளவுக்கு மீறின குடிபோதையில்.


குடும்ப கௌரவம் கெட்டுப்போனது உன் தங்கையால்தான் என்று சம்பந்தியம்மா ஒரு பாட்டம் திட்டிவிட்டு ஓயும்வரை ஹரி மௌனமாக அழுத கண்ணுடன் நின்றிருக்கிறான். எல்லாவற்றுக்கும் சாட்சியாக நின்றிருந்த ஆகாஷ்தான் இனி இருந்து என்ன பயன்? கிளம்பலாம்'' என்று சொன்னானாம். கூடவே குழந்தை எங்கே என்று கேட்டிருக்கிறான்.


அதுவரை தன்னிலை மறந்த ஹரிக்கும் குழந்தையின் நினைவு வந்திருக்கிறது. துணியில் சுருட்டிய ஒரு சிசுவைக் கொண்டுவந்து நீட்டியிருக்கிறார்கள். அப்போதுதான் தெரியும் அவளுக்கு ரெண்டாவது குழந்தை பிறந்துள்ளது என்று. திகைத்து நின்றானாம். மூன்று வாரங்கள் ஆன பெண்குழந்தை. அச்சு அசலாக அம்மாவின் ஜாடை. பெரியவனுக்கு ஒன்னேகால் வயது. என்ன ஏது என்று அறியாத நிலையில் மலங்க மலங்க நின்றிருக்கிறான்.


'குழந்தைகளைக் கொண்டு போகவா?' என்று ஆகாஷ் கேட்டதற்கு, 'சனியன்களை என் கண் முன்னால் இனி கொண்டுவராதே. போய்த்தொலை' என்று கத்தினானாம் ஜீத்.



வயிறு நிறைந்ததும், மா ஜியின் மடியில் கண்மூடிப் படுத்திருந்தது அந்த இளந்தளிர். ஆகாஷின் தோளில் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு பெரியவன். நேற்றுப் பார்த்ததில் இருந்து அப்படியே ஒட்டிக் கொண்டு விட்டான்.

"ஆமாம். குழந்தைகளின் பெயர்கள் என்னவாம்?"


மா ஜியின் கேள்விக்குப் பதில் தெரியாமல் விழித்தனர் மாமனும் சிற்றப்பனும். அங்கே இருந்த அமர்க்களத்தில் இதையெல்லாம் கேட்கத் தோணவே இல்லையே. சம்பந்தியம்மாவின் மிரட்டும் கண்களில் இருந்து தப்பினால் ஆயிற்று என்றுதானே ஓடிவந்தார்கள்.


'இப்படிக் கொடு' என்று குழந்தையைத் தன் கையில் ஏந்திய பிதா ஜி, ' எவ்வளவு அமைதியாகத் தூங்குகிறாள் பார். இவளுடைய அம்மாவின் ஆன்மாவுக்கு சாந்தி கிடைக்கட்டும். இவளுக்கு ஷாந்தி என்றே பெயர் வைக்கலாம்' என்றபடி, 'கஸ்தூரி இங்கே வா' என்றழைத்தார்.

"இந்தா உன் குழந்தை"


துக்கம்தாங்க முடியாமல் வந்த பெரும் விம்மலோடு குழந்தையை வாங்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்ட மனைவியைப் பெருமிதத்தோடு பார்த்தான் ஆகாஷ்.


பெரியவன் கிருஷ்ண விக்கிரகம் மாதிரி இருக்கின்றானே. அவன் கிருஷ்ணனாக இருக்கட்டும். கிஷன். கிஷன். அங்கே விளையாடிக் கொண்டிருந்த லலிதாவின் குழந்தைகள் ஓடிவந்து நான் தீபக், நான் ஆனந்த்
இவன் கிஷன்'' என்று கைகொட்டி மகிழ்ந்தனர். குழந்தை உலகம்தான் எவ்வளவு ஆனந்தமானது.


இவ்வளவு அமர்க்களத்தையும் பார்த்து விதிர்விதிர்த்திருந்த கனகா, பயணத்தைக் கொஞ்சநாள் தள்ளிப்போடலாம் என்றுதான் சொன்னாள். ஆனால் ஹரிக்கு மன நிம்மதி?. பிஞ்சுகளின் முகத்தைப் பார்க்கும்போதெல்லாம், 'என்னைப் பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டாய்' என்று விஜயா குற்றம் கூறிப் புலம்பியது மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.


'இல்லை. நாம் முன்பு முடிவு செய்த நாளிலேயே கிளம்பலாம்' என்று சொல்லிவிட்டான்.


சாமான்களைச் சுமந்து கொண்டு இவர்களை வண்டியேற்றிவிட டவுன் வரை வந்த ஆகாஷிடம், 'மாஜி யையும் பிதாஜியையும் நன்றாகப் பார்த்துக்கொள். இனி அந்த வீட்டுக்கு மகனே நீதான். மருமகன் இல்லை' என்றான்.


பயணம் முழுவதும் எதேதோ யோசனையில் மூழ்கி இருந்தவன், திடுமென்று 'மத்ராஸில் ஒரு வேலை கிடைத்தால் பேசாமல் அங்கேயே இருந்துவிடலாம்' என்றதை நம்ப முடியாமல் 'நெஜமாவா சொல்றீங்க? வேலைக்கென்ன...எங்க அப்பாருகிட்டே சொன்னால் ஹார்பரில் வேலை கிடைச்சுட்டுப் போகுது' என்றாள் கனகா முகம் மலர..




இனி அவர்கள் வாழ்க்கைப் பயணம் எப்படியோ.................

அதெல்லாம் சமாளித்துக் கொள்வார்கள். நாம் நம்ம வேலைகளைப் பார்க்கலாம்.


************* ******************** *****************



பின்னுரையான என்னுரை:


உண்மைக்கும் சொன்னால் பின்னுரை வேணுமான்னே தெரியலை.

இது கதையோ, நாவலோ, நெடுங்கதையோ என்னவோ ஒன்று.

வகைப்படுத்தலிலும் இது என்னன்னு தெரியாம ஒரு குழப்பம் எனக்கு இருந்ததால் அப்படியே பொதுவானவைன்னு போட்டு வச்சேன்.



நெடும் பயணமுன்னு வச்சால் ஹரி இதுவரை மூணோ நாலோ முறைதான் பயணப்பட்டான். அதனால்தான் இதை மூணு பகுதிகளில் முடிக்கப் பார்க்கிறேன் என்று சொல்லிவச்சேன்.



கதையை ஆரம்பிச்சு வச்சாமட்டும் போதும். அது தானே தன்னை எழுதிக்குமுன்னு முந்தி எப்பவோ படிச்ச ஞாபகம். அது நெசந்தான் போல. அப்படியே ஆச்சு.


பிதாஜி சொன்ன 'வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டுவிடு' ஹரிக்கு மட்டுமில்லை நமக்குகூடத்தான்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். நீங்க என்ன சொல்றிங்க?


கதையை எங்கியாவது முடிக்கணுமுன்னுதான் இங்கே முடிச்சேன். கதாபாத்திரங்கள் அவுங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை முழுசுமா வாழ்ந்து முடிக்கட்டும்.


முக்கிய சிலரின் வாழ்வு எப்படின்னு கொஞ்சூண்டு கோடி காட்டிறட்டா?



தேவா: எங்கெங்கோ சுற்றிக் கடைசியில் மத்ராஸ் வந்து மூத்த தம்பி வீட்டுத் திண்ணையில் மயங்கிக்கிடந்தார். மருத்துவமனையில் சேர்த்த மூன்றாம் நாள் போய்ச்சேர்ந்தார். கான்ஸர். அப்ப...தங்கம்? ம்ம்ம்ம்ம்ம். அப்படியெல்லாம் கிடைச்சுட்டா இப்ப இந்த விலை விக்குமா?




பிதா ஜி: சில வருடங்கள் நோய்வாய்ப்பட்டு இருந்தார். சக்கரை வியாதியும் இரத்த அழுத்தமும். ஒரு நாள் தூக்கத்தில் மாரடைப்பு.



மா ஜி: பேரன் பேத்திகளுடன் நாட்களைச் செலவிடுகிறார். மகள் பொன்போலப் பார்த்துக் கொள்கிறாளாம்.



கஸ்தூரி: ஓட்டமும் துள்ளலும் வெகுவாகக் குறைந்துவிட்டது. ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவாச்சே. (ஆமாம். இன்னொரு மா ஜி உருவாகின்றாள்)



ஆகாஷ்: ரெண்டு அன்னையருக்கு மகன்! ஓயாத உழைப்பால் பொருட்செல்வம் பலமடங்காகிவிட்டது. அன்பால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறானாம். அவனை உதாசீனப்படுத்திய பிஜ்யாவின் மக்களுக்குப் பாசமுள்ள தந்தை.



லலிதா & பிரேந்திரர் தம்பதிகளுக்கு நாலாவதாக இன்னொரு பெண். பெயர் சோனா. வியாபாரம் கொழிக்கிறதாம்.


ஹரி & கனகா தம்பதியருக்குப் பெண் குழந்தை. . பக்கத்தில் இட்டிலி விற்கும் ஆயா வீடு காலியானதும் அங்கே தொத்தாவின் சொற்படித் தனிக்குடித்தனம்.


ஹரி, அம்பத்தூரில் தன் உறவினர்கள் யாரையும் சென்று சந்திக்கவே இல்லை. எங்கே விஜயாவைப் பற்றிச் சொல்லவேண்டி இருக்குமோ என்ற பயம். அவர்களைப் பொறுத்தவரை அவனும் தங்கைகளும் பஞ்சாபில் இருக்கின்றார்கள்.


ஆமாம்.............. அவனுக்கு வேலை கிடைத்ததா?

கிடைக்காமல் என்ன? உழைப்புக்கு அஞ்சுபவனா அவன்? ஹார்பரில் கூலியாக மூட்டை தூக்குகின்றானாம்.



இதுவரை கூடவே பயணித்த வாசக நண்பர்களுக்கு நன்றி.


வணக்கம்.

Thursday, January 24, 2008

திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 11

என்ன ஆச்சுன்னு இப்படி மூக்கைச் சிந்திக்கிட்டு இருக்காளுக? தொத்தாவுக்குத் தலைவலி தபால்மூலம் வந்தது.



"அதெல்லாம் தானே கத்துக்கிடுவா..... நீங்கமட்டும் எல்லாந்தெரிஞ்சுக்கிட்டா இங்கெ வந்தீங்க? அந்தக்காலத்துலே நீங்க வச்ச கொழம்பை இப்ப நினைச்சாலும்...யம்மா................. நம்மூட்டு ருசிக்கு உங்களை ஆக்கவைக்கறதுக்கு நான் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா?"


'அய்யோ...ஆரம்பிச்சுருச்சு. இன்னிக்கு ஓயாது' என்று சாந்தி தன் ஓரகத்தியின் காதில் மெள்ளச்சொன்னார்.



"பாம்புக்காது.......சத்தமா ஒண்ணும் பேசிறமுடியாது"

எதற்காக பெரியவர்கள் எல்லாம் புலம்புகிறார்கள் என்று தெரியாமல் வழக்கம்போலக் கத்திக்கூச்சல் போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர் எல்லா அரை டிக்கெட்டுகளும். ஒளிஞ்சுவிளையாடும் ஆட்டமாம். 'யம்மா நான் இங்கெருக்கேன்னு சொல்லிறாதெ' என்று புடவைத்தலைப்பில் ஒளிய வந்த சின்ன மகனை, 'அடப்போடா...நேரங்காலந்தெரியாம...... வெளியெ போய்
வெள்ளாடுங்கடா' என்று துரத்தினாள் தாய்.


ஆம்பளைகள் வீட்டுக்கு வந்ததும் மறு ஒலிபரப்பு ஆனது. 'கடுதாசி வந்துட்டாப்போதும்..இப்படியே கச்சேரி பண்ணிக்கிட்டு இருங்க' என்று சடைத்துக்கொண்ட முனுசாமி, 'அவ அங்கே நல்லாத்தானே இருக்கேன்னு எழுதி இருக்கா. அதான் தேவாண்ணே பொண்ணுங்க அங்கே இருக்குதுங்களே. வூட்டுவேலை எல்லாம் தன்னாலே வந்துட்டுப்போகுது. இது ஒரு பெரமாதமா?' என்றார்.


"அதுல்லேண்ணே...கழுதைக்கு வாரம் தவறாம சினிமாக்குப்போணும். இங்கெ ஆத்தாகாரிக் கண்டுக்கறதில்லைன்னு ஆட்டம் போட்டுக்கிட்டுக் கிடந்தா. அதெல்லாம் அங்கெயும் நடக்குமா?



சமயம் பார்த்து மனைவியைக் குற்றம் சொன்னார் கனகாவின் அப்பா.

"க்கும்...மகளுக்குக் காசு கொடுக்கறது இவரு. இப்ப என்னைச் சொல்லவந்துட்டாரு"



'சரி. வந்தவங்களைக் கவனிங்க. சோத்தை எடுத்து வை' என்று ஒரு சின்ன அதட்டல் போட்டார் தொத்தா.

* * * *

கொல்லிமலைன்னு ஒண்ணு இருக்காமே.......ஒரு விஷயமாகப் போயிருந்தார் தேவா தன்னுடைய நண்பரோடு. எல்லாம் எதோ மூலிகை எடுக்க வேண்டுமாம். தெரியாது என்று எதுவுமே தேவாவின் அகராதியில் இல்லை. எல்லாம் தெரிந்த ஏகாம்பரம். ஆயுர்வேதம் அத்துப்படியாம். ரசவாதம்? கேட்கவே வேண்டாம். தங்கம் போல் உள்ள மகனை விட்டுவிட்டுத் தங்கம் தேடிப்போயிருக்கிறார்.




திருவேங்கடத்தைக் கனகாவின் வீட்டில் விட்டுவிட்டு வரும் வழியில், பழைய நண்பர் ஒருவரின் எதேச்சையாகச் சந்திப்பு. பேச்சின் திசை திரும்பியதுபோலவே ஆளின் திசையும் ஆகிவிட்டிருக்கிறது. ரெண்டு நாளாக மலைப்பகுதியில் அலையும்போதுதான் ஞாபகம் வந்து தொலைத்தது. 'அடடா இன்று வியாழனா? பையன் கிளம்பி இருப்பானே.......'

* * *

ஏனோதானோ என்று வேலைகளைச் செய்தாலும் மனம் மட்டும் எதிலும் லயிக்கவே இல்லை கனகாவுக்கு. ஹரியும் முடிந்தவரையில் மனைவிக்கு உதவிகள் செய்துகொண்டுதான் இருந்தான். ரொட்டி செய்து அடுக்குவது அதிலொன்று.




பிதா ஜிக்கு வரவர உடல்நிலை மோசமாகியது. எதாவது சாக்கு வேண்டுமாமே எமன் வருவதற்கு! இவருக்கு இனிப்பாக வந்து காத்திருந்தான். சக்கரை வியாதியாம். மருந்து மாத்திரைகள் என்று கூடிக்கொண்டே போனது. காலில் அடிபட்ட இடத்தில் கொப்புளம் போல எதோ வந்து அது புண்ணாகி இருந்தது. அவரைக் கவனிப்பதே முழு நேர வேலையாகியது மா ஜிக்கு. இதில் வீட்டுக் கவலைகள் வேறு மனதை அழுத்தியது. 'பிஜ்யாவின் நிலமை இப்படியாச்சே' என்று உள்ளூரப் புழுங்கினார்.




கஸ்தூரிக்கும் இன்னும் ஏதும் விசேஷம் ஆகவில்லை. லலிதா இப்போது மூன்றாம் முறையாகக் கர்ப்பம். இந்தமுறை அவளுக்கு என்றுமில்லாத விதமாக ரெண்டு கால்களும் வீங்கிக்கிடக்கிறதாமே. நவ்தேஜ் வந்து புலம்பிவிட்டுச் சென்றார்.




இங்கேயும், கனகா அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லையோ? இளசுகள் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா? பல நாட்கள் இரவு நேரங்களில் அழுகைச் சத்தம் அவர்கள் அறையிலிருந்து கேட்கிறதே....... எதற்கோ சண்டை போல. மத்ராசியில் என்னவோ சொல்லி அழுகின்றாள்..........



ஹரியிடம் பேச்சுவாக்கில் கேட்டதற்கு, 'அவளுக்கு வீட்டு நினைவு அதிகமா இருக்காம். ஊருக்குப் போகணும் என்று சொல்கிறாள். திடும் என்று உடனே போகணும் என்றால் என்ன அர்த்தம். இங்கே எவ்வளவு வேலைகள் இருக்கின்றன' என்றான். அவன் குரலில் ஒரு அயர்ச்சி.



எப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரத்தில், கனகாவைக்கூப்பிட்டு அருகில் வைத்துக்கொண்டு பொதுப்படையாகப் பேசுவதுபோல் அவள்மனதை அறிந்து கொள்ள முயற்சித்தார் மா ஜி. கனகாவின் வாயிலிருந்து வரும் வார்த்தைக்கு முன் கண்களில் குளம் கட்டி விடுகிறது. 'பாவம். சின்னப்பெண். என்ன மனக்கஷ்டமோ?' என்று உள்ளம் உருகியது.

திக்கித்திணறி 'ஊருக்குப் போகவேண்டும்' என்றாள் கனகா. 'போனால் ஆச்சு. நான் ஹரியிடம் சொல்கிறேன். இதற்காகவா மனதைக் குழப்பிக்கொள்கிறாய்?' மா ஜியின் அன்பான பேச்சு இன்னும் கண்ணீரைத்தான் வரவழைத்தது. வேறு மண்ணில் இருந்து பறித்து நட்ட செடி. இங்கே வேர்பிடித்து வளர இன்னும் நாளாகுமோ.......




ஹரி சொன்ன சமாதானங்கள் எல்லாம் வேப்பங்காயாகக் கசந்தது கனகாவுக்கு. நாளாக ஆக மெலிந்துகொண்டே போனாள். ஊருக்குப்போகணும் என்ற வெறியும் கூடிக்கொண்டே போனது. ஹரி வாயைத் திறந்தாலே எரிச்சலாக இருந்தது.



"போயிறலாம். ஊரோடு போயிறலாம். அங்கேயே இருந்துறலாம்.."



'வீட்டிற்கு வந்தாலே இந்த அழுகையைக் கேட்கணும். பேசாம வேலை செய்யும் சாக்கில் வெளியிலேயே இருந்துவிடலாம்' என்று தோண ஆரம்பித்தது அவனுக்கு. வயல் வெளி மரத்தடியில் சிந்தனையுடன் அவன் கிடந்தகோலம் கண்டு ஆகாஷுக்குப் பயமாக இருந்தது. கஸ்தூரியிடம், 'என்னதான் நடக்கிறது அங்கே?' என்றான்.


பாவம் அவளும்தான் என்னத்தைக் கண்டாள்.


"உனக்கும் ஊருக்குப்போகணும் என்று தோன்றவில்லையா?"

"இல்லை. "



"ஏன்? "



அது அப்படித்தான். போகணுமுன்னு நினைச்சாலும் அங்கே எனக்கு யார் இருக்காங்க? அம்மா போய் வருசங்களாச்சு. அம்மா முகமே நினைவில் சரியாக வர்றதில்லை. அப்பா............ அவர் இருந்தும் ஒன்றுதான் இல்லையென்றாலும் ஒன்றுதான். நினைத்துப் பார்க்கவே முடியாது அது ஒரு நரகம். எங்களைப் பாட்டிவீட்டில் விட்டதில் இருந்து பசி இல்லாமல் இருந்தோம். அதற்கு முன்பு, இவர் எதாவது கொண்டு வந்தால்தான் எங்களுக்குச் சாப்பாடு. அக்காதான் அக்கம்பக்கம் எதாவது கடன் வாங்கி எங்களுக்கு சமையல் செஞ்சு போடுவாள். பலநாட்களில் அவளுக்கு ஒண்ணும் கிடைக்காது. அக்காதான் எனக்கு அம்மா. நல்லவேளையாக அக்காவும் இதே ஊரில் இருக்கிறாள் என்று நினைப்பதே மனசுக்குத் திருப்தியாக இருக்கிறது."





'ஓஹோ..... அதுதான் என்னைக் கல்யாணம் செய்து கொண்டாயோ?' சீண்டினான்



'இல்லியா பின்னே? ' சிரித்தாள்.



"எங்கள் குடும்பம் என்றால் நாங்கள் மூவர்தான் என்றிருந்தோம். வாழ்க்கை எப்படி ஆகுமோ என்ற பயம். நல்லவேளையாக அண்ணன் வந்து சேர்ந்தான்."


"அது எப்படி இவ்வளவு தைரியமாக ஹரியுடன் இங்கே வந்தீர்கள்? பயமாக இல்லையா?"




"என்ன பயம்? அதான் மூவரும் ஒன்றாகத்தானே வந்தோம். திக்கற்றவர்களுக்குத் தெய்வம்தான் கதி என்று பாட்டி சொல்லுவார்கள். மகாபாரதக் கதைகளைப் பாட்டி சொல்லும்போது, ஆகாயத்திலிருந்து கடவுள் வந்து எங்களைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருந்தது."



"அட! சரியாகத்தான் நம்பி இருக்கிறாய். பார், ஆகாஷாக நானே வந்துவிட்டேன் உன்னை அணைத்துக்கொள்ள"



" அண்ணி வீட்டில் ரொம்பச் செல்லமாம். அப்பா அம்மா, பெரியப்பா பெரியம்மா என்று எல்லோரும் தாங்குவார்களாயிருக்கும். அப்படி எனக்கும் இருந்திருந்தால் ஒருவேளை நான்கூடத்தான் அழுது அரற்றி இருப்பேன்"



'எனக்கும்தான் மாமியார் கையால் சாப்பிடக் கொடுத்து வைக்கவில்லை' என்று முகத்தில் சோகத்தைக் கொண்டுவரப்பார்த்தான்.



"சின்னக்காவைப் பார்க்கவேண்டும்போல இருக்கிறது. கல்யாணம் முடிந்து போனவள் வரவேயில்லை. அவளுக்கு என்னமோ ஆச்சு என்று லலிதாக்கா சொல்லிக்கொண்டிருந்தாள். எனக்கும் மனதே சரியில்லை"



"அதற்கென்ன? போய்ப் பார்த்துவரலாம் ஹரியிடம் சொன்னால் போச்சு. எனக்கும் இதுவரை தோணவே இல்லை பார்."

* * * *

"இப்போது மிகவும் மனக்கஷ்டத்தில் இருப்பாள். எப்போதோ சொன்னதை எல்லாம் பாராட்டக்கூடாது. நீ போய் அவளை இங்கே அழைத்துவா. பத்துப்பதினைஞ்சு நாட்கள் இருந்துவிட்டுப்போகலாம். அவளுக்கும் மனமாறுதலாக இருக்கும். மாப்பிள்ளையையும் கூடக் கூட்டிக்கொண்டு வரணும்."


மா ஜி வற்புறுத்தி ஹரியை அனுப்பி வைத்தார்கள். கனகாவையும் கூடவே அழைத்துச்செல்லும்படிச் சொன்னார்கள். நகரில் ரெண்டு நாட்கள் சுற்றிவிட்டு வரட்டும். அவளுக்கும் மகிழ்ச்சியாக இருக்குமே.




ஆனால், ஹரி 'மாட்டவே மாட்டேன் என்று சொல்லி விட்டான். பிஜ்யாவின் வீட்டில் என்ன வரவேற்பு இருக்குமோ என்ற பயம்.



அதே போல் ஆனது. குழந்தையைக்கூடத் தூக்கிக்கொள்ள அனுமதி இல்லை. நெருப்பாக வார்த்தைகளைக் கொட்டினாள். பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டாய் என்று குற்றம் சாட்டினாள். சம்பந்தியம்மா வெளியில் வந்து பார்க்கக்கூட இல்லை. ஜீத்தின் அண்ணி வேண்டா வெறுப்பாகக் கொண்டுவைத்த சாய் அப்படியே ஆறி அவலாகியது.



ஹரியை வாயைத் திறக்கவே விடவில்லை. புருசனுக்குப் புதிதாகக் குடிப்பழக்கம் வேறு வந்துவிட்டதாம். பலநாட்கள் வீட்டுக்கு வருவதே இல்லையாம். மற்ற ஓர்ப்படிகள் இவளைப்பற்றிக் கிண்டலும் கேலியுமாகப் பேசிச் சிரிக்கிறார்களாம். மாமனார் மாமியார் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் கடுகடுவென்றிருக்கிறார்களாம்.


'கொஞ்சநாளைக்கு என்னோடு கிளம்பிவா. என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்' என்றான்.



"போதும். உன்னை நம்பி நாங்கள் மத்ராசைவிட்டுக் கிளம்பி வந்தது. உன்கூட அங்கே வந்து மற்றவர்களுக்கும் நான் இளக்காரமாக வேணுமா?"



"அதெல்லாம். கவலைப்படாதே. எல்லாம் சரியாகும். கிளம்பு."



"அவர் எங்கே இருக்கிறாரோ? அதெப்படி சொல்லாமல் கொள்ளாமல் வருவது?"



"உன் மாமனார் மாமியாரிடம் நான் கேட்டுக் கொண்டால் சரிதானே?"



'நீ ஒன்றும் கேட்க வேண்டாம். நானே போய்க் கேட்டுக்கொண்டுவருகிறேன்' என்று உள்ளே போனாள்.



"உன் புருஷன் வேற இல்லை. அவனைக் கேட்காமல் நான் என்ன சொல்வது? புகுந்தவீட்டை மதிக்காமல் இருப்பது நம் பரம்பரையில் கிடையவே கிடையாது. நீதான் இந்த மரியாதைக்குறைவை ஆரம்பித்து வைக்கிறாய்"

மாமியாரிடம் காண்பிக்கமுடியாத கோபத்தை அண்ணனிடம் காட்டினாள்.

"மாப்பிள்ளை எங்கே இருப்பார்? நான் போய்ப் பார்க்கிறேன். "

"உன்னை அவருக்கு அடையாளம் தெரியுமோ என்னவோ. "

"கஸ்தூரிக்கும் லலிதாவுக்கும் ரொம்பக் கவலையா இருக்கு உன்னைப்பற்றி."


அவ்வளவுதான். கஸ்தூரி என்றதைக் கேட்டதும் வேதாளம் முருக்கைமரம் ஏறியது. 'ஐயோ.... என் தலைவிதியே...........அந்த வேலைக்காரன் முன்னாலே தலைகுனிஞ்சு நிக்கணுமா?'


வந்த நோக்கம் நிறைவேறாமல் வீடு திரும்பினான் ஹரி




பயணம் தொடரும்.................

Tuesday, January 22, 2008

திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 10

படபடவென்று இந்தியில் தாளித்துக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டுக் கண் விழித்தாள் கனகா. புறப்படத் தீர்மானித்த ரெண்டு நாளாக ஒரே அலைச்சலாக இருந்ததே. இரவுப் பயணமாக இருந்ததால் 'வேடிக்கை' ஒன்றும் இல்லை. கிடைத்த இடத்தில் சுருண்டு உறங்கிவிட்டாள்.


மெட்ராசைவிட்டு ரொம்ப தூரம் வந்தாய்விட்டது என்று சொல்லியது காதில் விழுந்த மொழிகள். இனி ஹரியின் பொறுப்பு. பகல் நேரக் காட்சிகளுக்குப் பஞ்சமே இல்லை. ஓடி மறையும் ஊர்களையும், எந்த ஊர் என்று இந்தியில் எழுதி இருந்ததையும் படிக்க முயன்று கொண்டிருந்தாள். இவள் எழுத்தைக்கூட்டுவதற்குத் தோதாய் வண்டி நிற்குமா? ஆட்கள் பேசும் வேகத்தையும், சரளத்தையும் பார்த்து, 'போச்சுரா...நாம் கத்துக்கிட்ட இந்தி ஒரு நயாபைசாவுக்குப் பிரயோஜனமில்லை. சரி,இன்னும் கவனிச்சுக் கேட்டாப் புரியும்' என்று இருந்தாள்.


கொஞ்ச நேரத்தில் அதுவும் அலுத்துவிட்டது. நேரம் ஏற ஏற சூடு பொங்கிக்கொண்டு வந்தது. அனல்காற்று. எப்போது போய்ச்சேருவோம் என்று ஹரியைத் துளைக்க ஆரம்பித்துவிட்டாள். இதற்கிடையில் அம்மா அப்பா என்று வீட்டு நினைவுவேறு வந்து பாடாய்ப்படுத்தியது. கொஞ்சமாக அழுதுவைத்தாள்.


ஹரிக்கும் வீட்டு நினைவுதான். மா ஜி எப்படி இருக்கிறார்களோ என்று. அதே சமயம் கிளம்பும்வரை தேவா வந்துசேராததும் ஒரு எரிச்சலை உண்டாக்கியது.


மூன்றாம்நாள் வீடுவந்து சேரும்போது கீரைத்தண்டாய் துவண்டு போயிருந்தாள் கனகா. தன் வயதையொத்த அண்ணியைக் கண்டதும் கஸ்தூரிக்குத் தரையில் கால் பாவவில்லை. பெரியவர்களின் காலைத்தொட்டு வணங்கணும் என்பதில் ஆரம்பித்து செய்யவேண்டிய நியமங்களைப் படபடவெனப் பொழிந்து தள்ளிவிட்டாள். தமிழைக் காதில் கேட்டதும் எதற்கோ ஏங்கிப்போனவளாக இருந்த கனகாவுக்கு உயிர் வந்தது.
எதுக்கும் கவலைப்படாதே அண்ணி. நான் இருக்கேன் என்று தைரியம் சொன்னாள். 'அண்ணி' என்ற வார்த்தை இனிப்பாகவும் அதே சமயம் கொஞ்சம் என்னவோ போலும் இருந்தது கனகாவுக்கு.


சேதி அறிந்து லலிதா குடும்பத்தினர் ஓடோடி வந்தார்கள்.


அன்று முழுதும் ஓய்வெடுத்துக் கொள் என்று மாஜி கூறியிருந்தாலும், வீட்டிற்கு வந்து போகும் அக்கம்பக்கத்தார் வரவு நின்றால்தானே? எல்லாருக்கும் ஹரியின் மனைவியைப் பார்க்கும் ஆர்வம். அன்று மாலை அக்கம்பக்கத்துப் பெண்கள் எல்லாரும் கூடி பாட்டுக்கள் பாடுவதும், பரிசுகள் தருவதுமாகப் போனது. கையில் மெஹந்தி இல்லையே என்று எல்லோருக்கும் வருத்தம்.


'அதனால் என்ன? நாமே ஹரியின் கல்யாணத்தை இங்கே கொண்டாடினால் போச்சு' என்று சிரித்தார் பிதா ஜி.


மறுநாளே உள்ளூரில் மக்களைக்கூட்டி விருந்து வைத்தார்கள். எல்லார் வீட்டுப்பெண்களும் வெளியே தோட்டத்தில் கூடி சமைத்தார்கள். மருதாணியும் பாட்டும் கிண்டலும் கேலியுமாகக் கலகலப்பாக இருந்தது. தீபக்கும்,ஆனந்தும் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்துக் குதியாட்டம் போட்டார்கள். கஸ்தூரிக்குப் புதுப்பதவி கிடைத்துவிட்டது. துவிபாஷி ஆனாள். மொழிபெயர்ப்பாளி.



நின்று பேச நேரமில்லாமல் ஹரியின் ஓட்டம் தொடங்கிவிட்டது. பிதா ஜியை வண்டியில் ஏற்றி டவுன் ஆஸ்பத்திரிக்கு அலுங்காமல் கொண்டுபோய் வந்தான். கட்டைப் பிரித்துவிட்டாலும் முன்புபோல் நடக்க முடியாமல் வலி தொடர்ந்தது.

வயதாகிவிட்டதல்லவா? பூரணகுணமாக நாள் செல்லுமாம். நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும் என்றார்களாம். 'அதுதான் ஹரி வந்துவிட்டானே...இனி எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான்' என்றார் மா ஜி.


தீபக்குடன் வீட்டுக்கு வந்த பிரேந்திரருடன் பிதா ஜி பேசிக்கொண்டிருந்தார்.



"ஹரிக்கும் வேலைகள் கூடிவிட்டன. இப்போது அவனும் குடும்பியாகி விட்டானே. முன்புபோல் எப்போதும் வயல்வெளியே கதியாக இருக்க முடியுமா?"


"அதுதான் ஆகாஷின் உதவி இருக்கே,பிதா ஜி."


"அதைத்தான் நானும் சொல்கிறேன். இவன்களுக்கு இப்படி நேரம்காலம் தெரியாமல் இருக்கு. அவர்கள் மனைவிகளுக்கு என்ன பதில் சொல்வது? குடும்பமும் முக்கியமல்லவா? கொஞ்சம் நேரம் ஒதுக்கி அவர்களையும் இங்கே அங்கே என்று கொண்டுபோக வேணுமல்லவா?"


"கஸ்தூரியும் கனகாவும்தான் தோழிகளாக இருக்கும்போது என்ன குறை? லலிதாவுக்குத்தான் நேரமே போதவில்லை. சின்னவன் படாதபாடு படுத்துகின்றான். இவன் (தீபக்கைக் காண்பித்து) சித்திக்கு வால் பிடிப்பவன்."



"உன் வியாபாரம் எப்படி? கடை நன்றாக நடக்கிறதா?"


"அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. இப்போது நிறைய இடங்களில் மிஷின் உபயோகத்தில் இருப்பதால் கொஞ்சம் நன்றாகவே எல்லாம் நடக்கிறது.
ஆமாம். நம்ம வீட்டுக்கும் ஒரு மிஷின் வாங்கிவிடலாமே. ஹரிக்கும் ரொம்ப உதவியாக இருக்கும்."


பக்கத்து டவுனில் ட்ராக்டர்களுக்கான உதிரிச் சாமான்கள் கடையைத்தான் இப்போது நடத்திவருகிறார் லலிதாவின் கணவர். அங்கேயே முன்பு வேலை பார்த்தவர்தான். கடை விற்பனைக்கு வந்தபோது அதை வாங்கி நடத்தலாம் என்றதே லலிதாதான். கொஞ்சம் அங்கே இங்கே என்று பணத்தைப் புரட்டினார்கள். கடனும் மெதுவாகக் கழிந்துகொண்டிருக்கிறதாம்.


நமக்கு அவ்வளவு நிலமில்லையேப்பா. வீணாக மிஷீன் வாங்கிப்போடுவதா என்றுதான் யோசனையாக இருக்கிறது.""


அட.....நீங்கள் என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? நாட்டுநடப்பே தெரியவில்லையா? நம் வேலைக்குப்போக மற்றவர்கள் நிலத்தை உழ வாடகைக்குத் தரலாமே."


ஆகாஷ் வீட்டு நிலத்துக்கும் ஆச்சு. அது உங்க வயலை ஒட்டியே இருக்கிறது.
இன்னும் சொன்னால் எங்கள் நிலத்துக்கும் பயன்படுத்தலாம். உழவு மாடுகள் வைத்துப் பராமரிக்கவும் கஷ்டமாகி வருகிறதே...... "


"ம்ம்ம்ம்ம்ம்ம்.அப்படியே செய்யலாம். ஹரியிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடணும்."


விஷயம் பிரஸ்தாபித்தபோது ஆகாஷும் அங்கே இருந்தான். அவனுக்குத்தான் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஜம்மென்று அமர்ந்து ட்ராக்டர் ஓட்டும் கனவு பலிக்கப்போகிறதா? பலே பேஷ்


ஒரு மாதம்வரை கொஞ்சம் வாழ்க்கை நன்றாகவே ஓடுவதாக இருந்தது கனகாவுக்கு. இடைக்கிடையே அப்பா,அம்மாவென்று நினைத்து அழுதுகொண்டிருப்பாள். அவளைத்தேற்றிச் சிரிக்கவைப்பது நம் கஸ்தூரிதான். கனகா இதுவரை வீட்டுவேலை ஒன்றையுமே செய்யக் கற்றுக்கொள்ளவில்லை. கஸ்தூரியே முன்புபோல் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தாள். இது நல்லதுக்கல்ல என்று நினைத்த மா ஜி
நவ்ஜீத்துடன்(கஸ்தூரியின் மாமியார்) கலந்து ஆலோசித்தார்.


சம்பந்தியம்மா தங்களைவிட மிகப்பெரிய இடம் என்பதால் எப்போதும் மிகவும் பணிவாக இருப்பார் நவ்ஜீத்.


அதனால் என்ன? சின்னஞ்சிறுசுதானே? நிதானமாகத்தான் வேலைகளைப் பழக்கவேண்டும். ? கஸ்தூரி இங்கே வந்து போவதில் எங்களுக்கு ஒருவிதமான ஆட்சேபணையும் இல்லை. ஒரு வேளை அந்தப் பெண், மத்ராசில் வேலை செய்ததில்லையோ என்னவோ....."


இது என்னமோ நிஜம்தான். கனகாவுக்குச் சாய் போட்டுக்கொள்ளக்கூடத் தெரியாது. அவர்கள் வீட்டில் எப்போதும் டீக்கடையில்தான் டீக்கு சொல்லி வாங்குவார்கள். காலை உணவும் அடுத்தவீட்டில் இட்டிலி சுட்டு விற்கும் அம்மாவிடமிருந்தே வந்துவிடும். மற்ற சமையல் வேலைகளை அம்மாவும் பெரியம்மாவும் சேர்ந்தே செய்துவிடுவார்கள். இவள் தொத்தாச் செல்லம். கேட்கவேண்டுமா?


பாவம்,கஸ்தூரி. இங்கேயும், அவள்வீட்டிலும், போதாததற்கு நிலத்திலும் மாங்குமாங்கென்று வேலை செய்துகொண்டிருப்பது ஹரிக்குப் பிடிக்கவே இல்லை. ரெண்டு பெண்களுக்கும் சம வயசாத்தான் அநேகமா இருக்கும்.
அப்ப ஒருத்தி மட்டும் உழைக்கணுமா? மனைவியும் இனி வேலைகளில் பங்கெடுக்கணும். அதுதானே நியாயம்?


"கஸ்தூரி, இனி கனகாவே சமைக்கட்டும். நீ கூடமாடச் சொல்லித்தா."


"ஏண்ணே....அண்ணிக்கு இதெல்லாம் பழக்கமில்லையாம்.............."


"அதுசரி. பழகிக்கிட்டாப் போகுது? அதுக்காக நீயே அவளை உக்காரவச்சுக் கெடுத்துருவ போல இருக்கே. நாளை மறுநாள் உங்க மாமியார் கோவிச்சுக்கப் போறாங்க."


"அவுங்க ஏண்ணே கோவிச்சுக்கப் போறாங்க.? நீயும் மா ஜியும்தான் இப்படிப் பிரிச்சுப் பேசறிங்க........"


"மாமியார் கோச்சுக்கலைன்னா புருசன் கோச்சுக்குவான், அவன் கோவிச்சுக்கலைன்னாலும் நான் அவன்கிட்டே கோவிச்சுக்கோன்னு சொல்லுவேன்."


அன்று இரவு தனிமையில் இருந்த போது, ஆகாஷும் இதையே குறிப்பிட்டான்.
'அவுங்க குடும்பத்து வேலையை அவுங்க பார்க்கட்டும். நீ என்கூட வயலுக்கு வா. எனக்கும் ஜாலியா இருக்கும் ' என்று கண்ணடித்தான்.


"பிஜ்யாவின் புருசனுக்கு வேலை போயிருச்சாம்............"


சேதி கேட்ட லலிதாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அம்ரித்(மைத்துனர்)தின் மாமனார் வந்திருந்தார்.

அரசாங்க வேலைன்னு நிம்மதியா இருந்தோமே. அடடா...என்ன ஆச்சாம்? விஜயா எப்படி இருக்காளோ?

"புதுசா நண்பன் ஒருத்தன் கிடைச்சானாம். அவந்தான் இவனை கொஞ்சம் தப்பான வழியிலே கொண்டு போயிருக்கான். அந்தச் செலவுகளுக்கெல்லாம் பணம் வேணுமே......ஆப்பீஸ் பணத்துலே கை வச்சுட்டானாம். சம்பளம் வரும்போது பார்த்துக்கலாமுன்னு. கூட வேலை செய்யற மத்தவங்களைத்தான் மதிக்காம தலைக்கனமா இருந்தானே. யாரோ வத்தி வச்சுட்டாங்க. இப்ப இப்படி ஆச்சு. கையாடுன பணத்தை அப்பா கொடுக்கறேன்னு சொல்லிப் பார்த்துருக்கார். அதைக் கட்டவும் செஞ்சுருக்கார். ஆனா நடவடிக்கை சரியில்லைன்னு நீக்கிட்டாங்க. திரும்ப மனு கொடுத்துருக்காம். அநேகமா ஒரு வருசத்துக்குள்ளே வேலை திரும்பக் கிடைக்கலாமுன்னு பேச்சு."


"இவந்தான் யார்கிட்டயும் பேசக்கூட மாட்டானே அப்புறம் எப்படி...?"

"தாந்தான் பெரிய ஆளுன்னு நினைப்புலே இருக்கறவங்கதான் இப்படி எங்கியாவது ஏமாந்து போயிக் குழியிலே விழுந்துடறாங்க."


"குழந்தைவேற பிறந்துச்சுன்னு கேள்விப்பட்டோம். பிஜ்யாதான் வரவே இல்லை. நாமாவது போய்ப் பார்க்கணுமுன்னு லலிதா சொல்லிக்கிட்டே இருக்கறா. ஆனா எங்கே ஒழியுது? அண்ணன்காரன் கல்யாணம் முடிச்சு வந்துருக்கான். அவன் ஒரு சமயம் போய்ப் பார்த்துட்டு வருவான்னு நினைக்கறேன்."

அண்ணன் ஒரு சமயம் போகத்தான் செய்தான். அப்பா வந்துபோன கையோடு. 'அப்ப அவன் மனசை முறிக்கிறமாதிரி, எங்கே வந்தேன்னு கேட்டாளாம்.' இவந்தான் காட்டாள் மாதிரி இருக்கிறானே! நாகரிக உலகத்திற்கு லாயக்கில்லை என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறாள்.


ரொம்ப மனவருத்தத்தோடு திரும்பியவன் கண்களைப் பார்த்து மா ஜி வற்புறுத்திக் கேட்டபிறகு, நடந்ததைச் சொல்லி அழுதானாம். பிதா ஜிதான் மற்ற பொண்களுக்கு இது தெரியவேணாம் என்று சொல்லிச் சமாதானம் செய்தார்.


இது நமக்குள்ளே ரகசியமாகவே இருக்கட்டும்.


பயணம் தொடரும்.........................

Sunday, January 20, 2008

திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 9

'இன்றைக்கென்று பார்த்து இந்தப் பெண் எங்கே இன்னும் காணோம்?' என்றவாறே பின்வாசல் கதவை அடிக்கடி எட்டிப்பார்த்தபடி இருந்தார் மா ஜி. கையில் ஒரு தபால்கார்டு. பிதா ஜிக்கும் பரபரப்பு இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் சிரித்தார். 'இத்தனை நாளில் நீயே மத்ராஸி படிக்கக் கற்றுக்கொண்டிருக்கலாம். இப்போது பார்......தவிக்கிறாய்'.


'கொஞ்சம் சும்மா இருங்களேன். ஹரியிடமிருந்து வந்த கடிதம்தான் இது என்று தபால்காரர் முத்திரையைப் பார்த்துச்சொன்னார். இல்லாவிட்டாலும் நமக்கு வேறேங்கே இருந்து கடிதம் வருமாம்? என்ன எழுதி இருக்கின்றானோ? கல்யாணம் நல்லபடி முடிந்ததா? எப்போது திரும்ப வரப்போகிறான்?'


பச்சைக் கடலைச் செடிகளை சின்ன சுமையாகக்கட்டித் தலையில் சுமந்து கொண்டுவந்து 'தொப்'எனத் தரையில் போட்டாள் கஸ்தூரி. 'அங்கே கடலைச் செடியை........' என்று ஆரம்பித்தவளை ....


அதெல்லாம் கிடக்கட்டும். இதைப்பார்'' என்று கடிதத்தைக் கண்முன்னே ஆட்டினார் மாஜி.


தலையில் இருக்கும் தூசியைக்கூடத் தட்டிவிடாமல்,'ஹை...அண்ணன் கடிதமா? என்று ஓடிவந்தாள்.



கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தவளின் முகத்தைப் 'படித்து'க்கொண்டிருந்தார் மா ஜி. கஸ்தூரியின் முகமே முக்கால்வாசி விஷயத்தைச் சொல்லிவிட்டது. அண்ணன் கல்யாணம் முடிந்துவிட்டது. பெண்ணின் பெயர் கனகா. சீக்கிரமாகவே கிளம்பி வந்துவிடுவாராம் புது அண்ணியுடன். பிதாஜியின் கால் குணமாகி வருகிறதா? உங்கள் உடல்நலம் எப்படி என்றெல்லாம் கேட்டு எழுதி இருக்கிறார். இது அண்ணி எழுதித் தந்த கடிதமாம் என்றாள்.


ஹரிக்கு மனசெல்லாம் பிதா ஜியின் கால் கட்டும், மா ஜி எப்படிச் சமாளிக்கிறார்களொ என்றும்தான் இருந்தது. வயல் வேலைகளைப் பற்றிக் கவலை இல்லை. அதெல்லாம் ஆகாஷ் நன்றாகவே பார்த்துக் கொள்வான்.
'இந்தியில் ஒரு கடிதம் எழுதித் தாயேன்' என்று தபால்கார்டைக் கனகாவிடம் நீட்டினான் ஹரி.


ஐய்யோ...எனக்கு அவ்வளவெல்லாம் எழுதத்தெரியாது. இப்போதுதான் எழுத்துக்கூட்டிப் படிக்கச் சொல்லித் தருகிறார்கள். அதுவும் சின்ன வாக்கியங்கள். 'மேரா நாம் ஹரி ஹை' என்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டாள் கனகா.



"அப்ப உனக்கு இந்தி தெரியும் என்று அப்பா சொன்னது? "


"ஆமாம். தெரியும். அதான் இந்தி வகுப்புக்குப் போகிறேனே. இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கு. இன்னும் போகப்போகக் கற்றுக்கொள்வேன்"



ஹரிக்கோ தமிழ் எழுதத்தெரியாது. எந்தக்காலத்திலோ படித்தது. எல்லாம் மறந்து போயிற்றே.......


."சரி. அப்ப நான் சொல்லச்சொல்ல நீயே தமிழில் எழுது. கஸ்தூரி படித்துச் சொல்வாள்."


ஆங்கிலத்தில் எழுதி பையில் பத்திரப்படுத்தி வைத்திருந்த விலாசத்தை எடுத்துக்கொண்டான். தபால் ஆபீஸ் வாசலில் நின்ற ஒருவர் விலாசம் எழுதித் தந்தார். பெட்டியில் போட்டாச்சு.


அப்பாவைக் கொண்டுதான் எழுதச் சொல்லவேண்டும். அவரைப் பார்த்தே ரெண்டு வாரமாகிவிட்டது. இங்கே விட்டுவிட்டுப் போனவர்தான். கனகாவின் வீட்டுச் சொந்தங்களைப் போய்ப் பார்ப்பதும், உயிர்காலேஜ், செத்தகாலேஜ் எல்லாம் போய்வந்ததும், ரெண்டுமூன்று முறை பீச் போனதும் என்று நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.. இதில் மூன்று சினிமா வேறு பார்த்தாகிவிட்டது. இந்த மூன்றுமே கனகா ஏற்கெனவே பார்த்த படங்கள்தானாம்.



கனகா ஒரு சினிமாப் பைத்தியம். பார்த்த படங்களையே அலுக்காமல் திரும்பத் திரும்பப் பார்ப்பாள். அக்கம்பக்கத்தில் 'அக்காவோ, சித்தியோ அத்தையோ' படம் பார்க்கத் துணைக்குக் கூப்பிட்டால் போதும். கிளம்பி விடுவாள்.


அப்பாவை வரச் சொல்லவேண்டும். தானே போய்த் தேட முடியாது. எங்கே இருக்கிறாரோ என்னவோ? நல்லவேளையாக தொரைசாமி(பெரியப்பா) வீட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் சொல்லி அனுப்பியிருக்கிறான்.


தகப்பனும் மகனுமாகக் கிளம்பிக் கல்மண்டபம் அருகே நடந்து கொண்டிருந்தனர். மகன், கண்டிப்பாகச் சொல்லிக்கொண்டிருந்தான், ஊருக்குக் கிளம்பவேண்டிய அவசியத்தை. கையோடு கொண்டுவந்த கார்டில்,
'வந்து கொண்டிருக்கிறேன்' என்று அப்பாவைக் கொண்டுக் கடிதம் எழுதித் தபாலில் சேர்த்தான்..



'இப்போதுதானே திருமணம் முடிந்தது. உடனே பெண்ணைக்கொண்டு போய்விட்டால் இன்னும் திரும்ப அவளைப் பார்க்க எத்தனை நாள் செல்லுமோ என்று, மூணுமாதங்களாவது இருந்தே போகவேண்டும்' என்று தேவாவிடம் ஏற்கெனவே வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருந்தார் முன்சாமி.

"மூணுமாசம் எல்லாம் முடியவே முடியாது. அங்கே எல்லா வேலைகளும் போட்டது போட்டபடி வந்துருக்கேன். பிதாஜிக்கு வேறு மாவுக்கட்டு போட்டுருக்கு. அவரை டவுன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகணும். தங்கச்சிகளும் கவலையாக இருப்பாங்க. உடனே கிளம்பினால்தான் ஆச்சு.
எனக்குவேறு உடம்பு சரியில்லை"


"என்னப்பா ஆச்சு உடம்புக்கு? சொல்லவேயில்லை?"


"வயிறு ஒண்ணும் சரியில்லை. மூணுநேரமும் அரிசி. சரிப்பட்டு வரலை. நானே ரொட்டி செஞ்சுக்கறேன் என்றால், புதுமாப்பிள்ளை சமைக்கிறதா? அதெல்லாம் அசிங்கம் என்று சொல்கிறாங்கள் கனகா வீட்டில். பொண்ணு மாப்பிளைக்கு விருந்து என்று சொந்தக்காரர்கள் வீடுகளுக்குப் போய்ப்போய் போதுமென்னிருக்கு..


"அப்ப அடுத்தவாரம் புறப்படவேண்டும் என்று சொல்லிவிடலாமா?"

"அடுத்தவாரமெல்லாம் தாங்காது. நாளைக்குப்போறென்னு சொல்லுங்க."


"ம்ம்ம்ம்ம்.என்னப்பா நாளைக்கே போகணுமுன்னு சொல்றே.....நடக்கிற காரியமா? உன் மாமனார் வீட்டுலே என்ன சொல்வாங்களொ? அங்கெ உன் சித்தப்பாக்களும், அத்தைகளும் கட்டாயம் பொண்ணுமாப்பிளையைக் கூட்டிக்கிட்டுவரணும்னு அன்னிக்கே சொல்லிட்டுப் போயிருக்காங்க. அவுங்களுக்கு நான் என்னன்னு பதில் சொல்றது?"



"இல்லைப்பா. சித்தப்பாகிட்டேயெல்லாம் நீங்களே சொல்லிருங்க"



"அது எப்படிப்பா? நாளைக்கு நமக்கு அங்கே மரியாதை இல்லாமப் போயிருமே......ஒண்ணுவேணுன்னா செய்யலாம். இப்படியே அம்பத்தூர் போய் எல்லார்ட்டேயும் சொல்லிக்கிட்டு வந்துரலாம். நாளைமத்தநாள் பேச்சு வராதுல்லே......."


ரயிலைப் பிடித்தார்கள்.





'காலையிலே இருந்து காக்கா கூப்புட்டுக்கிட்டே இருந்துச்சு. என்னடான்னு இருந்தேன்....சரியாப்போச்சு' என்றபடி மூத்தாரை வரவேற்றார் தம்பி மனைவி...

"என்ன நீங்க மட்டும் வந்துருக்கீங்க? பொண்ணு வரலையா? "



தேவா, எல்லாவற்றையும் சொன்னதும், 'இருங்க. உங்க தம்பி கடைக்குப் போயிருக்கார். இப்ப வந்துருவார். இன்னிக்கு ராத்திரி பலகாரம்தான். சாப்புட்டுப்போலாம்' என்றார் சித்தி.


தம்பி வந்ததும் எல்லாம் ஒருமுறை விவாதிக்கப்பட்டது.


"சரிண்ணே. அவன் கஷ்டத்தையும் பார்க்கணுமே. எத்தனைநாள்னு அங்கே மாமியார் வீட்டிலே இருக்கமுடியும்? உன் வீடுன்னு இருந்தா அவனுக்கு செளகரியமா இருக்கும். நீதான் உனக்குன்னு ஒரு இடமில்லாமச் சுத்திக்கிட்டு இருக்கே. இங்கெ எங்கூட வந்திருன்னு சொல்லிச் சொல்லி வாய் வலிக்குது.

அவன் போக்குலே விடு. வராமக் கொள்ளாம போயிருவானா என்ன? தொரைசாமியண்ணேகிட்டே சொன்னாப்போதும். அவர் , பக்குவமா விசயத்தை எடுத்துச்சொல்வார்"


"நானும் அப்படித்தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். கடைசி வண்டி போயிரப்போகுது. நாங்க கிளம்பறோம். தங்கச்சிங்ககிட்டே நீயே சொல்லிரு. கத்தப் போறாளுங்க. நான் அப்புறமா ஒரு நாள் வர்றேன்"


விஷயம் கேள்விப்பட்ட தேவாவின் குடும்பம் 'கத்தவில்லை'. அப்பாடி...போய்த் தொலையட்டும் என்ற ஆசுவாசம்தான் முகத்தில்.


வீடு அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. ஆளாளுக்கு அலறிக்கொண்டிருந்தார்கள். சாந்தியும் கனகாவும் ஒரு மூலையில் அமர்ந்து கட்டிப்பிடித்தபடிக் கண்ணீர்தாரை வழியும் முகத்தோடு.


"நாளைக்கேக் கிளம்பணுமுன்னா எப்படி?"


"ஒண்ணுவேணா செய்யலாம். மாப்பிளை முன்னாலே கிளம்பிப் போகட்டும். கனகாவை அப்புறமா நாம கொண்டுபோய் விட்டுட்டு வரலாம். என்ன தொத்தா, சரிதானே?"

தொரைசாமி சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.


வயசும் அனுபவமும் மூத்துக்கிடந்த தொத்தா, 'அது மட்டும் வேணாம்' என்பதுபோலத் தலையை ஆட்டினார்.


"யார் கொண்டு போவா? இங்கேயும் வேலைவேலைன்னு ஓடுனாத்தானே பொழைப்பு. அந்தூரு பாஷைகூடத்தெரியாது. என்னான்னு வழி கண்டுபிடிச்சுப் போவீங்க? தேவாவை நம்பி நான் அனுப்ப மாட்டேன். போனா நீங்க யாராவதுதான் போகணும்.......என்னிக்கிருந்தாலும் இவ அவன் பொண்டாட்டிதான். அவங்கூடத்தானே இருக்கோணும். இப்பவே அவங்கூட அனுப்பறதுதான் நல்லது. இனி உங்க இஷ்டம்..........."


தொத்தா பேச்சுக்கு மறு பேச்சு ஏது?

மறுநாள் செவ்வாயாக் கிடக்கு. வேணாம். புதனுக்குப் புறப்படலாம். பொன்னுக் கிடைச்சாலும் புதன் கிடைக்காது..


அவதி அவதியாக மூட்டைகள் கட்டப்பட்டன. முட்டாய்க் கடைக்காரரிடம் போய் பலகாரங்கள் வாங்கியாந்தார்கள். நாலைஞ்சு ரவிக்கைகள் தைச்சு எடுத்திக்கிட்டுப்போகணும் என்று பசங்களிடம் கொடுத்தனுப்பியாச்சு. 'இன்னிக்கு ராத்திரிக்குள்ளே தச்சு வரணும் ஆமா' என்ற கட்டளையோடு.


சந்தோஷம், துக்கம் எல்லாம் கலந்த ஒரு நிலையில் பிரமிப்பாக இருந்தாள் கனகா. முணுக்கென்றால் அழுகையும், கலீர் என்ற சிரிப்புமாக. பெரியப்பா பையன்வேற, 'புருசன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே,
சில புத்திமதிகளைச் சொல்லுறேன் கேளு முன்னே' என்று பாடிக்கொண்டுக் கலாட்டா செய்து கொண்டிருந்தான்.


"ஏங்க்கா....மூணுநாளா ரயில்லெ போவே? அப்ப துன்றது தூங்கரதெல்லாம் ரயில்லெயா?" பொடிசுகள் கேட்டதும் கண் குப்பென்று நிறைந்தது கனகாவுக்கு.


ரயிலடியில் மொத்தக் குடும்பமும்....ம்ம்ம்ம்..........இல்லையில்லை தொத்தாவைத்தவிர மற்றவர் அனைவரும். தேவாவாவது வருவார் என்று பார்த்தால் அவரைக் காணோம்......

பத்திரமாப் போயிட்டு வாம்மா.

போனதும் கடுதாசி போடு.

பத்திரமாப் பாத்துக்குங்க மாப்பிளை.

எங்களைவிட்டு மொதத்தடவையா பிரிஞ்சு போறா.....
அய்யோ தாங்கலையே.................


ஏகப்பட்ட இரைச்சலுடன் நகர்ந்தது ரயில் வண்டி.


பயணம் தொடரும்.......................

Friday, January 18, 2008

திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 8

தேவாவும் தொரைசாமியும் நெருங்கிய நண்பர்கள்தான். ஆனால் எப்படி இந்தமாதிரி ஒரு குண வித்தியாசம்?
தொரைசாமி மனித மனங்களை நன்றாகப் படித்தவர். தன்னருகே இருக்கும் எவருக்கும் மனக்குமைச்சல் வராமல் பார்த்துக் கொள்வார். வெள்ளம் வருமுன்னே அணைபோடும் கவனம். உதவி என்று வந்துவிட்டால் தட்டாமல் செய்து கொடுப்பார். குடும்பத்தினர் மீது அப்படி ஒரு ஒட்டுதல். மகன் வயிற்றுப் பேரன்களுக்கு முடி இறக்கத்தான் திருப்பதி போய் வந்தார். பெருமாளின் மீது தீராத ஒரு பக்தி. கல்யாணம், பெருமாள் கோயிலில் என்றதும் முதல் ஆளாக சீக்கிரமாகவே வந்துவிட்டார். அது மட்டுமில்லை. கல்யாணத்துக்கு முன்னின்று உதவ வேணும் என்று தேவாவும் கேட்டுக் கொண்டாரே.


ஆற அமர இருந்து இறைவனைத் தொழுது முடித்துவிட்டுக் கொஞ்ச நேரம் காலாற நடக்கும்போது கண்ணில் பட்ட ஒரு ஓட்டலில் காஃபி ஒன்றைக் குடித்துவிட்டு மறுபடியும் கோவிலில் நுழையும்போது, சொல்லி வைத்தாற் போல் பெண்வீட்டுக்காரர்களும், பிள்ளைவீட்டுக்காரர்களுமாக வந்து சேர்ந்தனர்.

இரு கூட்டமும் ஒன்றை யொன்று பார்த்த பார்வையே ஒரு மாதிரி இருந்தது.
இன்னும் பெண்ணும் மாப்பிள்ளையும் வந்து சேரவில்லை. அவர்களுக்குத் தனியாக வாடகைக்கார் ஏற்பாடு செய்துள்ளதாக முன்சாமி தெரிவித்தார்.

குடும்ப சம்பிரதாயங்கள் வெவ்வெறாக இருந்தபடியால் ஒரு சிறு குழப்பம். பெண் வீட்டுக்காரர்கள் தேவாவிடம் கேட்டதற்கு, எல்லாம் உங்கள் இஷ்டம் என்று சொல்லிவிட்டாராம். தம்பி தங்கைகளைக் கேட்டால் எந்த பூதம் கிளம்புமோ என்று உள்ளூர ஒரு பயம். சம்பந்தியே பச்சைக்கொடி காட்டியாச்சு. இன்னும் என்ன?

கனகாவின் வீட்டிலும் எல்லாம் தொத்தா சொல்படியே. கல்யாண விருந்து வீட்டிலேயே ஏற்பாடு ஆனது. சமையலுக்கு என்று ஒரு ஆளைப் போட்டுவிடலாம். அக்கம்பக்க சொந்தங்கள் கூடவே இருந்து உதவி செய்யும். தாலிகட்டி முடிந்ததும், அவர்கள் பேட்டையில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு முதலில் வந்து பொங்கலிட்டுப் பூசையைச் செய்துவிடலாம்.
"நியாயமாப் பார்த்தால் நம்மூட்டு வழக்கப்படி கல்யாணமே ஆத்தா முன்னாலேதான் நடத்தணும். மத்த எல்லாத்துலேயும் நம்மிஷ்டத்துக்கு வுட்டதாலே.....அவுங்க கோயிலில் தாலி கட்டட்டுமுன்னு நாமும் விட்டுக் கொடுக்கணும்தானே?"


தொத்தாவுக்கு பெரிய மனசு.

தாலியை முகூர்த்தத் தேங்காய்மேல் வைத்து ஆசீர்வாதத்துக்குக் கொண்டுவரும்போதே...... பார்வையால் அளந்தனர் பிள்ளைக்குச் சொந்தக்காரர்கள். சுகுமாரனின் அம்மா மட்டும் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்தார். தனக்குத்தானே போட்டுக்கொண்ட கட்டுப்பாடு.

கிளிப்பச்சை நிறத்தில் புடவையணிந்திருந்த மணப்பெண்ணைக் கண்டதும், இன்னொரு பார்வைப் பரிமாற்றம்.

'அந்த மிட்டாய்க்கலர் புடவைதான் பொண்ணுக்கு அம்மாவா?' கிசுகிசுப்பான குரலில் கேட்ட அண்ணிக்கு, 'யாருக்குத் தெரியுது' என்று அசுவாரசியமாய் பதில் வந்தது நாத்தனாரிடமிருந்து.
கனகாவின் கழுத்தில் தாலி ஏறியது. திருவேங்கடத்தின் சித்தப்பா மகள் தாலி முடிய நின்றதற்காக நாத்தனார் சீராகக் கிடைத்தது ஒரு புடவை. அதன் நிறத்தைப் பார்த்ததும் அவள் முகம் வெளிறியதோ?

தேவாவின் குணத்தையறிந்த குடும்பம், ஒன்றும் பேசாமல் மெளனமாக இருக்க முயற்சித்தது. தொரைசாமி கவனித்துக்கொண்டே இருந்தார்.
ஒரே ஜாதியில் நடக்கும் கல்யாணங்களில் கூட எதாவது குற்றங்குறைகளைக் கண்டுபிடித்துச் சண்டைக்கு நிற்கும் குணம் கொண்ட மக்கள். அதிலும் இது ஜாதி விட்டு ஜாதி. போதாததற்கு துன்னூறும் நாமமும் என்ற பிரிவு வேற. சொல்லணுமா?

கல்யாணப் பரிசாக குடும்பம் முழுசும் சேர்ந்து வாங்கிய நெக்லெஸ் பெட்டியைத் திறந்து காண்பித்தபடி திருவேங்கடத்தின் கைகளில் திணித்தார் மூத்தச் சித்தப்பா. கண்கள் விரியப் பார்த்தாள் கனகா. இந்த நகைக்குப் பின்னால் இருந்த கதையை அவள் அறிவாளா?

திருவேங்கடத்தின் திருமணப்பத்திரிக்கை கிடைத்தவுடன் கூடிய அவசர 'மகாநாட்டிலே'யே இதுபற்றித் 'தீர்மானம்' எடுக்கப்பட்டது. ஆளாளுக்குச் சில்லரையாக எதாவது செய்யாமல் மொத்தமாகச் சேர்த்து ஒரு கண்ணியமான பரிசாகத் தரலாம் என்று சொன்னதே சுகுமாரனின் அம்மாதான். 'அட! பரவாயில்லையே.... எல்லோரைக் காட்டிலும் இளையவளாக இருந்தாலும் கருத்தானவளாக இருக்கிறாளே' என்று மகிழ்ந்தார் பெரியக்காவின் கணவர்.

'எவ்வளவுன்னு தர்றது?' என்று முணுமுணுத்த பெரிய அண்ணியிடம், 'அந்தப் பொட்டப்பசங்க கல்யாணத்துக்குத்தான் நாம ஒண்ணுமே செய்யலை. இதுதான் அவுங்க வீட்டுலே கடைசிக் கல்யாணம். இதுக்காவது நிரக்கச் செய்யணும் இல்லையா?' என்றாள்.

"அவன் எந்தக் காட்டுலேயோ கொண்டு கல்யாணத்தை வச்சான். நமக்குச் சொல்லக்கூட இல்லை. இதுலே என்னான்னு செஞ்சிருக்கமுடியும்?"

"ஆமாம். சொல்லிட்டாலும்....... அதுக இங்கே இருந்தப்ப ஒரு நல்ல நாள் பொல்லநாளுக்குக்கூட ஒண்ணும் வாங்கித் தரலை சித்தப்பன்மாருங்க.....
நாமளும் நியாயமா இருக்க வேண்டாமா?"

'நியாயத்தைப் பற்றி யாரு பேசறது....... ' மாமியாரின் நகைகளை எல்லாம் இளைய நாத்தனார் எடுத்துக்கொண்ட கடுப்பு அந்த அண்ணிக்கு இருந்தது. ஒன்றும் பெரிய நகைகள் இல்லையென்றாலும் அந்த ரெட்டைவடம் சங்கிலிக் கொஞ்சம் கண்ணில் உறுத்தத்தான் செய்தது. அதுபோக நாலு கம்பி வளையலும், ஒரு காப்பும்தான். மற்றதெல்லாம் சிறுகச்சிறுக, எல்லாரும் அவர் உயிரோடு இருந்தபோதே அடித்துக்கொண்டு போய்விட்டார்களே.

கடைசித்தங்கை இளவயதிலேயே விதவையாகிப் போன வருத்தத்தில் மற்ற அக்காமார்கள் ,'போகட்டும். அவள்தானே அம்மாவைக் கடைசிவரை வைத்துப் பார்த்துக்கொண்டாள்' என்று விட்டுவிட்டனர்.

எப்போதும் போலவே மூத்த அக்காவின் கணவர்தான் எல்லோரையும் ஒருவிதமாகச் சமாளித்துச் சமாதானப்படுத்தினார். அக்காவும், பெரிய அண்ணியும்தான் நகைக்கடைக்குப்போய் இதை வாங்கி வந்தனர். மூணரைப் பவுனுக்கு பார்க்கக் காத்திரமாகவே இருந்தது.

தொத்தா கோவிலுக்கு வரவில்லை. உடம்பும் முடியவில்லை. அதேசமயம் அங்கே நடக்கும் சமையலை மேற்பார்வை செய்ய ஆள் வேண்டாமா?
பெண்ணும் மாப்பிள்ளையும் முதலில் போய் தொத்தாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டுப் பேட்டை மாரியம்மன் கோவிலுக்குப் போயிரணும். அங்கே அதற்குள் பொங்கலிட ஆரம்பித்து எல்லாம் தயாராக இருக்கும். படையலை முடித்துக்கொண்டு வீட்டில் விருந்து.

இனி கல்யாண விருந்தில் கலாட்டா ஆகுமோ என்று நினைத்த தொரைசாமி, அக்காள் கணவரை ஒரு ஓரமாக அழைத்துப்போய், 'உங்களுக்கெல்லாம் ஓட்டலில் சாப்பாட்டுக்குச் சொல்லி இருக்கு. அங்கே நேராப் போயிரலாமா?' என்று கேட்டார்.


எந்த ஓட்டலில்? அங்கே வீட்டில் சமையல் நடக்குதே என்று விழித்த தேவாவிடம், 'எல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ பொண்ணு மாப்பிள்ளைக்கூடப் போ' என்றார்.

'அதான் தாலிகட்டியாச்சே. இனி அவுங்க பொறுப்பு' என்று சொல்லிச் சிரித்தார் தேவா. வாடகைக்காரில் மணமக்களையும், பெண்ணின் பெற்றொர்களையும்,
கனகாவின் தம்பி தங்கைகளையும் அடைத்து அனுப்பியானது.

மணி ஒன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. பெண்ணின் பெரியப்பாவுடன் என்னவோ பேசிவிட்டு, வில்லிவாக்கத்திலிருந்து பூக்கடை போகும் பேருந்தில் தேவாவின் வீட்டாரை ஏற்றிக்கொண்டு தேவாவுடன் கிளம்பினார் தொரைசாமி.

பெண்வீட்டுக்காரர்கள் தங்கசாலை வழியே ராயபுரம் புறப்பட்டார்கள்.

பாரி முனையில் இறங்கி அங்கே இருந்த ஒரு ஓட்டலில் எல்லோருக்கும் 'கல்யாண விருந்து'. தேவாவின் பக்கத்து ஆட்கள் பதினாலே பேர்கள்தான்.
உணவு முடிந்ததும் எல்லோருமாகப் பெண் வீட்டுக்குப் போவதா வேண்டாமா என்று ஒரு சின்ன விவாதம்.

'இப்போதே நேரமாகிவிட்டது. செண்ட்ரல் போய் அம்பத்தூர் ரயில் பிடிக்கலாம். திருவேங்கடத்தையும் பொண்ணையும் நம் வீட்டு விருந்துக்கு அழைத்தால் போயிற்று' என்றார் அக்காவின் கணவர். எல்லாம் தொரைசாமியின் பக்கத்தில் அமர்ந்து சாப்பிடும்போது உருவான திட்டம்தான்.

அங்கே பெண்வீட்டில் அவ்வளவாக வசதிகள் போதாது. சாக்கடைச் சந்து மாதிரி இருக்கும் தெருவின் வழியாகப் போகவேண்டும். 'படித்தவர்கள்' யோசிப்பார்களோ....... கனகா வீட்டினரைப்பற்றி இருக்கும் எண்ணத்துக்கு இன்னும் மரியாதைக் குறைவு ஆகிவிடுமோ 'என்றுதான் தொரைசாமிப் பக்குவமாகத் திட்டத்தை மாற்றிவிட்டிருக்கிறார்.

அவர் நினைத்ததில் தப்பே இல்லை என்கிற மாதிரிதான் இருந்தது தேவாவின் குடும்பம் தனித்து ரயிலடியில் விட்டபோது. தொரைசாமியும் தேவாவும் அப்படிப் போனார்களோ இல்லையோ, ஆரம்பித்துவிட்டது கச்சேரி.
ஒவ்வொன்றையும் கவனமாக ஞாபகப்படுத்தி அர்ச்சனை செய்துகொண்டு வந்தார்கள். அவ்வப்போது இடையில் சொல்லிக்கொண்டது, 'நல்லவேளை அம்மா உயிரோடு இல்லை, இதையெல்லாம் பார்க்க'

படிப்பும் பணமும் இருக்குமிடத்தில் பண்பு வரவேண்டும். ஆனால் பாசாங்கல்லவா வந்து முன் நிற்கிறது!

தேவாவின் குடும்பத்தில் உண்மையான மகிழ்ச்சியோடு காணப்பட்டவன் ஒரே ஒரு ஆள்தான். சுகுமாரன்.

கனகா வீட்டில் கல்யாண சாப்பாடு ஒரே அமர்க்களமாக இருந்தது. அண்டை அயல் மக்களும் குழந்தைகளும் குடும்பங்களுமாக மகிழ்ச்சியுடன் ஒரே கலாட்டா. ரொம்ப நெருங்கிய சொந்தங்கள் போலவே அக்கா, மாமா, பெரியப்பா அத்தை என்று உறவாடிக்கொண்டிருந்தனர் அனைவரும். அதில் முக்கால்வாசிப்பேர் முன்சாமியிடம் வேலைக்கு இருக்கும் தினக்கூலி ஆட்கள்தான் என்று சொன்னால் நம்புவதற்குக் கஷ்டம்தான்.

விருந்தின் சுவை அதன் ருசியில் இல்லை!

பிள்ளைவீட்டு ஆட்கள் வராதது நம் தொத்தாவிற்குக் கொஞ்சம் வருத்தத்தைத் தந்தது. தொரைசாமி சற்றுநேரம் தொத்தாவருகில் அமர்ந்து பேசிச் சரிக்கட்டி விட்டார்.

திருவேங்கடத்துக்குக் கண்ணைக்கட்டி காட்டில் விட்டாற் போல இருந்ததென்னவோ நிஜம். அவனை சகஜ நிலைக்குக் கொண்டுவர நம் தொரைசாமியை விட்டால் வேறு யார்?

சிறிது ஓய்வு எடுக்கச் சொல்லி அறையில் தனித்து விடப்பட்டவனை, குழந்தைப் பட்டாளங்கள் கண்ணை மூட விடவில்லை. மாலை வெய்யில் தணிந்ததும் அடுத்த தெருவில் ஃபோட்டோ பிடிக்கப் போய்வந்தார்கள். மாலையும் கழுத்துமாகக் கல்யாணப் போட்டோ. அப்புறம் ஸ்டுடியோக்காரரின் வற்புறுத்தலால் பிறைநிலவில் அமர்ந்து ஒன்று.
நம்ம ஹரியும் கனகாவும் நிலவையே பிடித்துவிட்டார்கள்.

( கதை(?) நடந்த காலக்கட்டம் 1950 களில் )


பயணம் தொடரும்................................

Sunday, January 13, 2008

திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 7

'சூடாக் கொஞ்சம் காபி எடுத்து வரவா?' என்று கேட்டபடி உள்ளே போன கடைசித் தங்கையைப் பார்த்துத் தலையை ஆட்டினார் தேவா. அதிர்ச்சி அடைந்தவராகத் திண்ணைமீது உட்கார்ந்திருந்தவர் கை தாடியை நீவியவாறு இருந்தது.


"அம்மா இப்படித் திடீரென்று.......ச்சே...... உள்ளூரில் இருந்திருக்கலாம்..
யாருக்குத் தெரியும் இப்படியெல்லாம் நடக்குமென்று. போனமுறை வந்திருந்தபோது நல்லாத்தானே இருந்தார்கள்!"



"ஏண்ணே.......அதுவே கிட்டத்தட்ட ரெண்டுவருசம் ஆச்சே.ஆமாம் நீ எங்கே போயிருந்தே? ஒரு கடுதாசியாவது அப்பப்பப் போட்டுருக்கலாமுல்லே?"

"......................"


"ஆளு எல்லாம் அனுப்பி உன்னைத்தேடு தேடுன்னு தேடி அலைஞ்சுட்டோம். கடைசியில் சுகுமாரந்தான் எல்லாம் செய்யும்படி ஆச்சு... என்னத்தைச் சொல்றது போ. ஆனா அம்மா மனசு ரொம்ப அடிச்சுக்கிச்சு.வருவே வருவேன்னு வழி பார்த்துக்கிட்டே இருந்தாங்க. ஹூம்...."


"ப்ச்....."


"குடும்பத்துலே எல்லாருக்கும் மூத்தவன் இப்படி செஞ்சுட்டியே..."


"ஏம்மா..நீ வேற. நான் என்ன வேணுமுன்னா செஞ்சேன். காசிக்குப்போயிட்டு வரலாமுன்னு கிளம்பிப்போனவனை விதி எங்கியோ கொண்டு போயிருச்சு.
திருவேங்கடத்தைப் போய்ப் பார்த்துட்டு அங்கே இருந்துதான் நேரா இங்கே வந்தேன்"


" அட! நல்லா இருக்கானா? பொண்ணுங்க எப்படி இருக்காளுங்க? லலிதாவுக்குக் கல்யாணம் முடிஞ்சதா முந்தி ஒரு லெட்டர் வந்துச்சு. அப்புறம் ஒண்ணுத்தையும் காணோம்"



" மூணு பேருக்குமே கல்யாணத்தை ஜாம்ஜாமுன்னு நடத்திப்புட்டான். கெட்டிக்காரப்பய. தங்கச்சிங்க மேலே ரொம்பப் பாசமாத்தான் இருக்கான். பெரியவளுக்கு இப்போ ரெண்டு பசங்க. உள்ளூர்லேதான் கட்டிக்கொடுத்துருக்கு அவளையும், கஸ்தூரியையும். விஜயாதான் கொஞ்சம் தள்ளி வேற ஊரில். அது பெரிய டவுன் "


" பரவாயில்லையே.....அப்ப மகன் கல்யாணம்தான் பாக்கின்னு சொல்லு"


" ஆமாம்மா...அது விசயமாத்தான் அம்மாகிட்டேக் கேக்கலாமுன்னு வந்தேன்............ நம்ம சொந்தத்துலே எதாவது பொண்ணுங்க இருக்கா?"


" ஆ(ஹ்)ங்.............. மூத்தவன் நீ. எங்கிட்டே கேக்கறே? ரெண்டு நாள் இருப்பேல்லே?"



" இருக்கலாம். ஆனா இன்னும் தொரைசாமியைப் பார்க்கலை. திருப்பதிக்குப் போயிருக்கானாம். நாளைக்கு வரேன்னு சொல்லியிருக்கேன்."


" ஆமாம்.....எங்களையெல்லாம் விட உனக்கு சிநேகிதக்காரங்கதானே ஒசத்தி. போ, போயிட்டு வா"


"அட, நீ என்னம்மா? இன்னிக்கு நேத்தாப் பழக்கம்? அது இருக்கட்டும். அவன் வீட்டுலே கொஞ்சம் சாமானுங்களைப் போட்டுட்டுப் போனேன். அதையெல்லாம் எடுக்கணும்"



இரவு சாப்பாட்டின் போது, பஞ்சாப் விவகாரங்களையெல்லாம் சொன்னார். 'கதையாட்டம் இருக்கு' என்றபடி ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தான் சுகுமாரன்.



உறவினர் வீட்டில் கல்யாண வயசில் பெண்கள் இருக்கின்றார்களா என்ற ஆராய்ச்சி நடந்தது. 'பெரியக்காவோட கடைசிப்பெண் இருக்கா. ஆனா படிக்கிற பொண்ணை எப்படிக் கேக்கறது?'

'டக்' என்று ஆர்வம் வடிந்து போனது. இப்ப எல்லாப் பொண்களும்தான் படிக்கிறாங்க.


திருவேங்கடத்துக்கோ படிப்பில்லை. யாரு பொண்ணு கொடுப்பா? அதுவும் அம்மாந்தூரம்............ நம்மாளுங்க யாரும் தரமாட்டாங்க.



அங்கங்கே உறவினர்களுடன் இதுபற்றிப் பேசியதில், 'ஐய்யோ.....தேவா பையனுக்கா? எதை நம்பிக் கட்டிக்கொடுக்கறது? அந்தப் பேச்சே வேண்டாம்' என்று ஒரே மாதிரி பதில் வந்தது.



தன் ஆப்த நண்பன் தொரைசாமியுடன் சேர்ந்து ஆலோசித்தார் தேவா. "பொண்ணுக்கு இந்தி தெரிஞ்சிருக்கணும். இல்லேன்னா கஷ்டமாயிரும். அதை வச்சுக்கிட்டே கொஞ்சநாளில் அவுங்க பேசற பாஷையைப் புடிச்சிறலாம்."


தெரிந்தவர்களிடம், அதுவும் உறவுக்காரர்களிடம் சொல்லிவைத்துப் பெண் கிடைப்பது என்பது நடக்காத காரியமென்று புரிந்தது.



"பொண்ணுக்கும் பொடவைக்கும் பிணைபடக்கூடாது. நாளைக்கு எதாவது ஒண்ணு ஆச்சுன்னா நம்ம தலையை உருட்டுவாங்க"


' கலம் மேஜ் பர் ஹை'

கிதாப். குர்ஸி. ஆத்மி. லட்கி,

ஜமீன் பர் காகஜ் ஹை

மேரா நாம் ராம் ஹை

மெய்(ன்) இஸ்கூல் ஜாதா ஹூ(ம்) '



அடடே!! பொண்ணுக்கு நல்லா இந்தி தெரியும்போல இருக்கே......

அங்கே இங்கே என்று தேவாவின் நட்புகள் தேடியதில் கிடைத்தவள் கனகா.
அட, நம்ம முன்சாமியண்ணனின் தம்பி பொண்ணுப்பா. நல்லாப் படிச்ச பொண்ணு. எட்டாப்பு முடிச்சுருச்சு. பக்கத்துலே ஒரு இந்தி வகுப்பு நடக்குதுன்னு அங்கே போய்க்கிட்டிருக்கு. மூணே பரிட்சைதானாம். முடிச்சுட்டா, இந்திப் பண்டிட் வேலைக்கு(???) போலாமாம்.



"ஆமாம். அவுங்க வேற ஜாதியாச்சேப்பா. நம்மூடுங்களிலே பொண் எடுப்பாங்களா? "


"ஐய்ய.............நம்ம தேவாண்ணே அப்படிப் பட்ட ஆளா? எப்பனாச்சும் ஜாதி பத்திப் பேசிக்கீறாரா? "


"அட, நீ ஒண்ணு. முன்சாமியண்ணன் மொதல்லே இதுக்கு சம்மதிக்க வேணாமா? அத்தச் சொல்லு. "



"சரி..தேவாவை விடு. அவங்க சாதி சனம்? மொதல்லே அம்மாக்கெளவி என்ன சொல்லுமோ? "


"ஏஏஏ......கெய்வி எங்கே இருக்கு? அதான் போய்ச்சேந்துருச்சே......அது ஒரு கோராமை.... தேவா எங்கிய்யோ போய்ட்டாப்பல. அங்கே பொணத்தை வச்சுக்கிட்டு அல்லாடுறாங்க. இங்கே ஆள் வந்து தேவா எங்கே எங்கேன்னு தொளைச்சு எடுத்துட்டாங்கபா. உனக்குத்தான் தெரியுமே...தேவா அப்படிச் சொல்லிட்டுப்போற ஆளா? போனா போனவிடம் வந்தா வந்தவிடம்...
கடைசியிலே பேரன் கொள்ளி வச்சானாம். "



"தேவா வீட்டுலே இப்ப அதுதான் மூத்தது. மத்தவங்க இவர் பேச்சைக் கேட்டுத்தான் ஆவணும். "


முனுசாமியின் தயவால் துறைமுகத்தில் வேலை செய்யும் கூட்டம் இப்படி அலப்பரைந்துகொண்டு இருந்தது. சரக்கு ஏத்த இறக்க என்று இருக்கும் சின்ன ஒப்பந்தக்காரர் முனுசாமி. இவருடைய தம்பி சின்னசாமியும் அண்ணன் கூடவேதான் இருந்து தொழில் செய்துகொண்டிருக்கிறார். இவர் மகள் கனகாதான் இப்போதையக் காட்சியின் நாயகி.



வீட்டுக்கூடத்தில் ஓரமாகப் படுத்திருந்த தொத்தாவைச்சுற்றி உட்கார்ந்து பேச்சு நடந்துகொண்டிருந்தது. 'என்னடா சொல்றே......நம்ம தேவாவோட பையனுக்காக் கேக்கறாக?'


"ஆமாம் தொத்தா. தேவாவை ஒனக்குத் தெரியாதா? அவுங்கப்பாரு காலத்துலே இருந்தே நமக்குப் பழக்கம்தானே? "

"அதாம்ப்பா எனக்கும் ரோசனையா கிடக்கு. தேவா பொண்டாட்டி பட்ட கஷ்டத்தையும் பாத்தவதானே நான்? "


"அதுவுஞ்சரிதான். ஆனா நாம அவரு பையனுக்குத்தானே பேசறோம்.
அவன் கல்யாணம் முடிச்சுக் கூட்டிட்டுப் போயிருவானில்லெ....நல்ல அம்சமான பையந்தான்."

"இருந்தாலும்....... "


"பையன் போனவிசை வந்துருந்தப்ப நீ கூடப் பார்த்தயே....காணாமப்போனவன், கிடைச்சுட்டான்னு தேவா இங்கெ கூட்டியாந்து காமிச்சுச்சு இல்லெ. நல்ல பணக்காரவங்கதான் அவனை எடுத்து வளத்தவங்க. தேவாகூட அங்கெ போய் நாலு மாசம் இருந்துட்டு வந்து கதைகதையாச் சொல்லுச்சு. நல்லமாதிரி சனங்களாம். தங்காச்சிகளைக் கொண்டுபோன சடுதியில் மூணு பேருக்கும் கண்ணாலத்தை முடிச்சுட்டானாம். கெட்டிக்காரன்.....



நம்ம பொண்ணை நல்லாப் பாத்துக்குவாங்க. என்ன தொலைதூரமாப் போச்சு...... நினைச்சா கொண்டா வரக் கொள்ள முடியாது. மத்தபடி செல்வாக்கா இருப்பா. "


அவர்கள் வீட்டில் எதுவாக இருந்தாலும் 'தொத்தா' சரி என்று சொன்னால்தான் நடக்கும். சித்தப்பாவின் மனைவி. வீட்டிலே தற்சமயம் இருக்கும் பெருந்தலை.


'ம்ம்ம்ம்ம்ம்...... ஒம்பொண்டாட்டி என்ன சொல்றா?' என்றபடி எழுந்து சுவரில் சாய்ந்து உட்கார்ந்தார் தொத்தா.


நடப்பது தன் கல்யாணப்பேச்சு என்று தெரிந்தாலும், என்ன முடிவு ஆகுமோ என்று மனதில் ஒரு பதைப்புடன், சின்னப்பாட்டியின் அருகில் ஒட்டி உட்கார்ந்து பெரியப்பா, பெரியம்மா இன்னும் மற்றுள்ளோரின் வாயைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கனகா.


"ஏண்டி.. உனக்கிஷ்டம்தானா? "


வெட்கச்சிரிப்புடன் தலையை ஆட்டினாள் கனகா. போனமுறை இங்கே வந்த ஹரியைப் பார்த்திருக்காள். அவந்தான் தனக்கு என்று பேச்சு வந்ததில் இருந்து கட்டாயம் நடக்குமா? எப்படியாவது நடக்கணுமே என்ற பதற்றத்தில் இருந்தாள்.


மூணுநாள் ரயில் பயணமாமே........ அங்கெ எப்படி இருக்கும் ஊரெல்லாம்? சோறே கிடைக்காதாமே...... ரொட்டியைத் தின்னா வவுத்துக்காகுமா..... ....
ச்சீ...இதென்ன சோத்தைப் பத்தி நினைப்பு....


'அதுகிட்டே என்னாத்தைக் கேக்கறது? அது கொழந்தைப்புள்ளெ. கட்டிக்கன்னா கட்டிக்கிடப்போகுது. எங்களையெல்லாம் கேட்டுக்கிட்டா கண்ணாலம் ஆச்சு?' இடையில் புகுந்தாள் கனகாவின் அம்மா சாந்தி.


ரோஸ்கலரில் அச்சடித்தக் கல்யாணப் பத்திரிக்கையைப் படித்தவாறே 'பொண்ணு பேரு கனகாவா?' என்றாள் தேவாவின் இளைய தங்கை.


'அண்ணனுக்கு புத்தி கெட்டுப்போச்சு' என்று மனதில் எண்ணம் ஓடியது.


'ஆமாம். நம்ம கன்னியப்பன் இருந்தாரில்லை அவர் பேத்தி' என்றபடி தேவா முகமெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தார்.


"திருவேங்கடத்துக்கு லெட்டர் போட்டுட்டேன் . அடுத்தவாரம் கிளம்பி வந்துருவான். நான் இன்னும் நம்ம வீட்டு ஆளுங்களுக்கு பத்திரிக்கை வைக்கணும். கிளம்பறேன். மறக்காம கல்யாணத்துக்கு வந்து சேருங்க "


நம்ம வீட்டில் கல்யாணம் நடக்கப்போகுதா என்று சுகுமாரனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.



எதிர் பார்த்தது போலவே மறுநாள் தேவாவின் தம்பி வீட்டில் 'அவசரக்கூட்டம்' ஏற்பாடானது.


"இதென்ன அண்ணன் இப்படிச் செஞ்சுட்டார்?"


"நல்லவேளை அம்மா போய்ச் சேர்ந்துட்டாங்க, இந்தக் கண்றாவியெல்லாம் பார்க்காம."


"ப்ச்.......எப்ப நம்ம பேச்சை கேட்டுருக்கார்? எல்லாம் அவருக்குத் தோணியபடிதான்."


"ஏண்டா உனக்கு கன்னியப்பன் யாருன்னு ஞாபகம் இருக்கா? "

"அடப் போக்கா..... உனக்கே அவர் யாருன்னு தெரியலைன்னா எனக்கெப்படி?"

"ஆனாலும் இப்படிப்போய் பொண்ணெடுப்பாருன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை"


"அதுக்கு அவரைக் குத்தம் சொல்லி என்ன செய்ய? நீங்க யாராவது பொண்ணைக் குடுக்கறேன்னு சொன்னீங்களா? "


சமயம் பார்த்து மூத்த நாத்தனாரைச் சீண்டினார் மூத்த தம்பி மனைவி.
அந்தம்மா மட்டும் சும்மா இருப்பார்களா?


'அதுக்காக, டாக்டர் படிச்சுக்கிட்டு இருக்கும் பொண்ணை அவனுக்குக் கட்டிவைக்கணுமா?' என்று நொடித்தார்.





(பெரிய குடும்பமாக இருப்பதால் எல்லோரையும் பேர் சொல்லி அறிமுகம் செய்வது சற்றுச் சிரமம்)


சண்டை உருவாகும் நேரம் என்று உணர்ந்த அவர் கணவர், 'ஞாயித்துக்கிழமையா இருக்கு. லீவுகீவு ஒண்ணும் போடவேண்டாம்' என்று பேச்சை மாற்றினார்.

"நல்லவேளை கல்யாணத்தைக் கோவிலில் வச்சுருக்காங்க. அண்ணந்தான் கண்டிப்பாச் சொன்னாராம். எங்க அம்மாவுக்கு இந்தக் கோயில்தான் ரொம்பப் பிடிக்கும். அங்கேதான் வைக்கணுமுன்னு...."


வில்லிவாக்கம் பெருமாள் கோயிலில் கல்யாணம். முகூர்த்தம் பத்தரை பன்னெண்டு. அன்று காலையில் ஒம்போது மணி லோக்கலில் அம்பத்தூரில் இருந்து வில்லிவாக்கம் செல்வது என்று முடிவு செய்தனர்.
'எல்லாரும் கரெக்டா வந்துருங்க' என்றதோடு ''அவசரக்கூட்டம்' ஒரு முடிவுக்கு வந்தது.


கடிதம் வந்தது முதல் ஒரு பரபரப்பு பிதா ஜியைத் தொற்றிக்கொண்டது. மா ஜியும், அவரும், ஹரியும் சேர்ந்து மத்ராஸ் போகவேண்டும் என்று முடிவு செய்தார். இங்கே மற்ற வேலைகளை ஆகாஷ் பார்த்துக் கொள்வதாகச் சொன்னான். கஸ்தூரிக்கும் லலிதாவுக்கும் அண்ணன் கல்யாணம் பார்க்க ஆசை இருந்தாலும், இங்கே கடமைகள் காத்திருந்தன. எப்படியும் இங்கேதானே வந்து சேரப் போகிறான். அப்போது அண்ணியைப் பார்த்தால் போச்சு என்று ஒருவரை ஒருவர் ஆறுதல் படுத்திக்கொண்டனர்.




பிரயாணத்திற்குக் கொஞ்சம் புதுத்துணிகள் வாங்கலாம் என்று பக்கத்து டவுனுக்குப் போனார்கள் பிதாஜியும் ஹரியும். என்னவோ போதாத காலம்,
பஸ்ஸில் இருந்து இறங்கும்போது கால் தவறி விழுந்துவிட்டார் பிதா ஜி. ஏற்கெனவே இருந்த கால்வலியுடன் இப்போது எலும்பு முறிவும் சேர்ந்து கொண்டது.


கட்டுப்போட்ட காலுடன் யாத்திரை கஷ்டம் என்பதால் பயணத்திட்டம் எல்லாம் மாறியது. கணவரைக் கவனித்துக் கொள்ள மா ஜி தேவைப்பட்டார். வயதானவருக்குக் கூடமாட உதவ ஆள் வேணாமா?



தனித்துப் பயணம் செய்துதான் ஆகவேண்டும் என்று ஹரி புறப்பட்டான். கல்யாணத்தைத் தள்ளிப்போடலாம் என்று தீர்மானித்தவனை வற்புறுத்தி வழியனுப்பி வைத்தனர் கிராமத்தினர்.


பயணம் தொடரும்........................




நாளைக்குப் பொங்கல் பண்டிகையாச்சே. அன்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாளுக்கான வாழ்த்து(க்)கள்.

Friday, January 11, 2008

திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 6


ஹரி, ஹரி என்று கூப்பிட்டுக்கொண்டே ஓட்டமும் நடையுமாக வந்த ஹர்ஜீத்தைக் கண்டதும் என்னவோ ஏதோ என்று பயந்துவிட்டான் ஹரி. போதாததற்கு 'உன் அப்பா...... வந்திருக்கார்' என்றதும், 'ஐயோ.... அவருக்குக் கால்வலி என்று நேற்று இரவில்கூட தைலம் தேய்த்து விட்டேனே..இத்தனை தூரம் எதற்காக வந்தார்?' என்று அவனுக்குப்பின் பார்வையை ஓடவிட்டான்.

உடனே அவன் எண்ணத்தைப் புரிந்துகொண்ட ஹர்ஜீத், 'உன் அசல் அப்பா வந்திருக்கிறார். நல்லவேளையாக அவர் பஸ் விட்டு இறங்கும்போது, அந்தப் பக்கம் நான் இன்னொரு வேலையாகப் போய்க் கொண்டிருந்தேன். அப்புறம் அவர் யாரென்று தெரிந்ததும் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு இங்கே உன்னிடம் சொல்ல வந்தேன். சீக்கிரம் ஓடு. மாலையில் சந்திக்கலாம்' என்றபடி வேறு திசையில் விரைந்தான்.




வீட்டுக்கு வந்தபோது அவன் கண்ட காட்சியை என்னவென்பது!!! ஏதோ காலங்காலமாய்ப் பழகிய நண்பருடன் இருப்பதுபோலத்
தகப்பனும் பிதா ஜியும் வீட்டின் வெளி முற்றத்துக் கட்டிலில் அமர்ந்து சிரித்துப்பேசிக் கொண்டிருந்தார்கள். ரெண்டு லோட்டா நிறைய சாய். இன்னும் சில இனிப்புகள் உள்ள தட்டும் அவர்கள் முன் வைக்கப்பட்டிருந்தது. கஸ்தூரியும், மா ஜியும் திண்ணையில் அமர்ந்து அவசர அவசரமாகப் பச்சைப் பட்டாணிகளை தோலுரித்துக் கொண்டிருந்தனர்.



பஞ்சாபியில் ஹரி எழுதிக்கொடுத்திருந்த விலாசத்தைக் காட்டிப் பல இடங்களில் விசாரித்துக்கொண்டு சரியான வீட்டிற்கு வந்திறங்கியவர் தேவாதான். கிராம எல்லையில் இருக்கும் ரோட்டோர பஸ் நிறுத்தத்தில்
இறக்கிவிடப்பட்டவர், அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த ஹர்ஜீத்தை நிறுத்தி வழி கேட்டிருக்கிறார். ஹரியின் நண்பனான அவன், அவர்தான் ஹரியின் தந்தை என்று அறிந்ததும் பதறியடித்துக்கொண்டு வீட்டுக்கே கூட்டிவந்துவிட்டான். மூன்றாம் முறையாகத் தான் வந்து சேர்ந்த விவரத்தை ஹரியிடம் விவரித்தார் தேவா.




சின்னவயதில் பட்டாளத்தில் ஸ்டோர்ஸ் பகுதியில் சில வருடங்கள் வேலை செய்ததின் பலனாகத் தேவாவுக்கு இந்தி மொழி தெரியும். அந்த மொழியறிவைக் கொண்டுதான் வடக்கே இவ்வளவு நாள் சுற்ற முடிந்தது.


திடீரென்று மா ஜிக்கு நினைவு வந்தது, லலிதாவுக்குத் தகவல் சொல்லியனுப்பவில்லையே என்று. நான்போய்ச் சொல்கிறேன் என்ற ஹரியைத் தடுத்துவிட்டுக் கஸ்தூரி ஓடினாள். 'ஏற்கெனவே இந்தப் பெண்ணுக்கு நடக்கத்தெரியாது. எப்போதும் ஓட்டமும் துள்ளலும்தான். இப்போது பெற்றவரைப் பார்த்தபின் ........ நின்று நிதானமாக நடப்பாளா என்ன?' என்றார் மா ஜி.


அடுக்களையில் அமர்ந்து ஆனந்துக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த லலிதாவின் முன் போய் தொப்பென்று குதித்து, மூச்சுவாங்க நின்றாள். "அக்கா, நம்ம அப்பா வந்திருக்கார்"


இவள் குரலைக்கேட்டு, பால்வழியும் வாயோடு தலையைத் திருப்பிப் பார்த்தான் ஆனந்த். ஆறுமாதம் ஆகிறதல்லவா? ஆட்களையும் குரல்களையும் அடையாளம் தெரிகிறது. பின்புறத் தோட்டத்தில் மண்ணில் விளையாடிக் கொண்டிருந்த தீபக், குரல்கேட்டுப் பாய்ந்து வந்தான், 'தூக்கு தூக்கு' என்று கைகளைத் தூக்கியவாறு.



'சட்' என்று அவனை அணைத்துத் தூக்கி இடுப்பில் வைத்தவள், 'நான் இவனைக் கொண்டுபோகிறேன், நீ கிளம்பி வா' என்றபடி ஓடத் தொடங்கினாள்.



'அவனுக்கு வேறு சட்டை மாற்றிக் கொண்டுபோ' என்ற லலிதாவின் குரல் காதில் விழுந்தால்தானே?


அன்று முழுவதும் வீடு நிறைய ஆட்கள் வருவதும் போவதுமாகவே இருந்தது. தேவா வந்த 'கதை'யைச் சொல்லிச் சொல்லி பிதா ஜிக்கு வாய் வலி வந்துவிட்டிருந்தது. கேட்டுக்கேட்டுக் காது புளிக்காதவரை சரி என்று சிரித்துக் கொண்டிருந்தாள் கஸ்தூரி.


மகள்களையும் பேரன்களையும் சம்பந்தி வீட்டாரையும் பார்த்து மகிழ்வுடன் இருந்தார் தேவா. பிதா ஜியும், மாதா ஜியும் எல்லாம் ஹரியின் பொறுப்புதான் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.


'அட! இவ்வளவு சின்னவன் இத்தனை நறுவிசாகக் காரியம் செய்து வைத்திருக்கிறானே!!! என்ன இருந்தாலும் என் மகன் அல்லவா? பாவம். அவன் தாய்க்குத்தான் இதையெல்லாம் இருந்து பார்க்கக் கொடுத்துவைக்கவில்லை.' கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றிருந்த தேவாவுக்கு எப்படியோ மகள்களின் கல்யாணச்சுமை தன்னை விட்டுப்போனதே மகா திருப்தியாக இருந்தது.



இரவு உணவு முடித்தபின் வருங்கால மாமனாரைக் காணவந்த ஆகாஷ், கஸ்தூரியிடம் 'இரண்டு' என்று இருவிரல்களைக் காட்டினான். 'என்ன இரண்டு?' என்று பொய்க் கோபம் காண்பித்தவளிடம் எனக்கு ரெண்டு மாமனார் என்று சிரித்தான்.


பிஜ்யாவையும் பார்த்துவிட்டுப் புறப்படலாம் என்று இருந்தவரை, இன்னும் இரண்டு மாதத்தில் நடக்க இருக்கும் கஸ்தூரியின் திருமணத்திற்கு இருந்துவிட்டே போகவேண்டும் என்று கண்டிப்பாக சொன்னார் பிதா ஜி.
தேவாவுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்வது சுலபம். பேச்சு சாமர்த்தியம் அப்படி. தெரிந்தவர் தெரியாதவர் என்ற வேறுபாடே கிடையாது. எல்லாரையும் பேசியே வளைத்து விடுவார்.



அப்பா வந்த விவரமும், கஸ்தூரியின் திருமணத்துக்கு நாள் குறித்த விவரமும் பிஜ்யாவுக்குப் போய்ச் சேர்ந்தது. 'தன் தந்தையுடன் ஒட்டுதல் இல்லாத உறவில் மட்டுமே' இருந்தவளுக்கு இது ஒன்றும் பெரிதாக இல்லை. மேலும் ஆகாஷை இன்னும் வேலைக்காரன் என்ற நிலையில்தான் வைத்திருந்தாள். ஆங்....பெரிய கல்யாணம். பார்க்கலாம். முடிந்தால் போகாமலிருக்க வேண்டும் என்ற எண்ணமே அவள் மனதில்.



அதற்கு ஏற்ற மாதிரியே சந்தர்ப்பமும் அமைந்தது. கருச்சிதைவைக் காரணம் காட்டிக் கல்யாணத்திற்குப் போகாமல் தப்பித்தாள். பிஜ்யா நினைத்தமாதிரி நகரவாழ்வும் அமையவில்லை. வீட்டிலும் ஓய்வே இல்லாமல் இருந்தது. பெரிய குடும்பம். மூத்த மைத்துனர்கள் இருவருக்கும் ரெவ்வெண்டு குழந்தைகள். இதில் உள்ளூரில் கல்யாணம் முடித்த பெரிய நாத்தனார் குடும்பத்துடன் வாரம் ஒரு முறையாவது வந்துவிடுவார். அவருக்கு மூன்று குழந்தைகள். பெரியது இரண்டும் பாட்டிச் செல்லம். இங்கேயே அடிக்கடித் தங்கிவிடுவார்கள். ஆறு குழந்தைகளும் சேர்ந்து வீட்டையே ரெண்டுபடுத்தும். எப்போதும் விளையாட்டுதான்.


சமையல் வேலை முழுவதும் வீட்டுப் பெண்களுடையது. மாமியார் எப்போதும் கொஞ்சம் சிடுசிடுப்பாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வார். மாலை ஜீத் வீட்டுக்கு வந்ததும் பிள்ளைகளுடனே நேரம் போய்விடும். ஆற அமரக் கணவனுடன் பேசக்கூட நேரம் கிடைப்பதில்லை. இதெல்லாம் சேர்ந்து பிஜ்யாவின் மனதில் சோர்வு அதிகமாகியது. வீட்டில் மற்ற பெண்களுடன் அவ்வளவாக ஒட்டாமலே இருந்தாள். இந்த அழகில் எல்லோரும் தன்னை மதித்து வந்து பேசவேண்டும், தன்னுடைய தேவைகளைக் கவனிக்கவேண்டும் என்றெல்லாம் அனாவசியமான எண்ணங்களை வளர்த்துக்கொண்டுத் துயரப்பட்டாள். 'சட்' என்று எதிலும் திருப்தி இல்லாத சுபாவம்.



ரெண்டு மாதம் ஓடியது தெரியவே இல்லை. இப்போது பஞ்சாபி மொழியையும் ஆரம்பத்தில் தப்பும் தவறுமாகப் பேசியேக் கற்றுக் கொண்டுவிட்டார் எளிய முறையில், மிகவும் நன்றாகவே நடந்தது நம் கஸ்தூரியின் திருமணம். குறைந்தபட்சம் தன் மக்களில் ஒருவர் கல்யாணத்தையாவது பார்த்து ஆனந்திக்கும் பாக்கியம் தேவாவுக்குக் கிடைத்தது. அதிலும் ஒரு சிறுதுரும்பையும் தூக்கிப்போடும் அவசியம்கூட இல்லாமலேயே!!!!



மருமகனான பின்பும் ஆகாஷ் முன்போலவே ஹரியுடன் சேர்ந்து எல்லா வேலைகளையும் கவனித்துவந்தான். குடும்பஸ்த்தன் ஆகிவிட்டானே என்று மா ஜிதான் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே மாதாமாதம் செலவுக்குக் கொடுக்கச் சொன்னார்கள். கஸ்தூரியும் காலையில் வந்து இங்கே மா ஜியுடன் கூடவே இருந்து வீட்டுவேலைகளைக் கவனித்துக்கொண்டாள்.
எல்லாம் நவ்ஜீத்தின் ஏற்பாடுதான். திடீரென்று எல்லாரும் போய்விட்டால்.... மா ஜிக்குக் கஷ்டமாச்சே? பாவம். அவர்களுக்கும் இப்போதெல்லாம் உடல்நிலை அவ்வளவாக நன்றாக இல்லை. குறைந்த பட்சம், ஹரியின் திருமணம் முடிந்து வீட்டுக்கு மருமகள் வரும்வரையிலாவது ஒத்தாசையாக இருக்கவேண்டும் என்று உறுதியாக இருந்தார்.



இதற்கிடையில் தேவாவும் ஊருக்குக் கிளம்பினார். போகும்போது பிஜ்யாவைப் பார்த்துவிட்டு அங்கேயும் கொஞ்சநாள் இருந்துவிட்டுப் போகலாமே என்று இருந்தார். ஒரு நாளிலேயே இவருக்கு நிலமை புரிபட்டது. என்ன இருந்தாலும் நகர வாழ்க்கை அல்லவா? நின்று பேச யாருக்கு நேரம் இருக்கிறது? ஜீத்தின் தகப்பனார் அங்கே ஒரு சிறு வியாபார நிறுவனத்தை நடத்தி வந்தார். மூத்த மகன்கள் இருவருக்கும் அங்கேயே வேலை. மாப்பிள்ளைக்கோ அரசு வேலையின் அதிகார மிடுக்கு. சம்பந்தியம்மாவோ, முகத்தில் சதா ஒரு சிடுசிடுப்புடன். அவர்களிடம் என்னவென்று பேசுவது?



பிஜ்யாவும் எப்போதும் ஏதோ பறிகொடுத்தாற்போல் இருந்தாள். கிராமத்தில் லலிதா வீட்டிலும், கஸ்தூரியின் மாமியார் நவ்ஜீத் வீட்டிலும், ஹரியின் பிதா ஜியுடனும் அரட்டையடித்து நேரம் போக்குவதைப் போல இங்கே நடந்து கொள்ள முடியாது. மூன்றாம்நாளே ஊருக்குக் கிளம்பியவரை யாரும் வாய் வார்த்தையாகக் கூட 'இன்னும் சில நாள் இருந்துவிட்டுப் போகலாமே' என்று கூறவில்லை. மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே என்று புறப்பட்டுவிட்டார்.


ஏற்கெனவே ஹரியின் திருமணத்தைப் பற்றி வேண்டியது சொல்லியாகி விட்டது. பேசாமல் நம்மூர் பெண்ணைக் கட்டுவதுதான் நல்லது என்று அவன் மண்டையில் உருவேற்றி இருந்தார்.


"உனக்குப் பொருத்தமான பெண் நம் உறவிலேயே கிடைக்கும். கவலைப்படாதே. நான் போய் எல்லாவற்றையும் சரி செய்துவிட்டுக் கடுதாசி போடுகிறேன். புறப்பட்டு வா"


'கஸ்தூரியைப்போல் ஒரு பெண் கிடைத்தால் போதும். வீட்டுக்கு மங்களகரமாக இருக்கும்' என்ற மா ஜியின் நம்பிக்கைக்கு , 'நானாச்சு. நல்ல பெண்ணாகப் பார்த்து வைக்கிறேன்' என்ற வாக்கினால் உரமிட்டு வளர்த்துவிட்டு வந்திருந்தார்.


"உடனே ஊருக்குப்போய்ப் பெண்தேட வேண்டும். ச்சலோ மத்ராஸ்"

பயணம் தொடரும்....................

Tuesday, January 08, 2008

திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 5




ம்ம்ம்ம்ம்ம்ம்....இப்ப என்ன அதிசயமா நடந்துபோனது என்று நீங்கள் எல்லாம் 'உம்' என்று முகத்தை வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்? ஊர் உலகில் இல்லாததா? விருப்பமில்லை என்றுதான் அவளே அங்கிருந்து வீட்டுக்கு ஓடி வந்துவிட்டாளே........நான் கூட அந்தக் காலத்துலே இப்படி'' என்று ஆரம்பித்துவிட்டு, மா ஜியின் முறைப்பைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே தலையை மறுபுறம் திருப்பிக்கொண்டார் பிதா ஜி. ஆனாலும் அவர் சிரிப்பதைக் குலுங்கும் முதுகில் தெரிந்துகொண்ட ஹரிக்கும் சிரிப்பு வந்தது.

'போதும். உங்கள் பிரலாபம்' என்ற மா ஜியிடம்,'நானும் அதைத்தான் சொல்கின்றேன். போதும்.....இதை அப்படியே விட்டுவிட்டால் போதும் இல்லை....மேற்கொண்டு இதைப்பற்றி இன்னும் எதாவது செய்யலாம் என்று இருந்தால்.........ம்ம்ம்ம்.
எந்த முடிவா இருந்தாலும் அதைக் கஸ்தூரிதான் எடுக்கவேண்டும்.
நன்றாக யோசனை செய்து ஒரு முடிவைச் சொல்லும்மா என்றார் பிதா ஜி.

இந்த ஒருவாரமாக வீட்டில் ஒரு பயங்கர அமைதி. பிதா ஜிதான் இறுக்கத்தைக் குறைக்க எவ்வளவோ முயன்றார் 'அன்று' முதல் ஆகாஷ் வேலைக்கும் வரவில்லை. அவனுக்கும் அவர்கள் வீட்டில் நல்ல மண்டகப்படி. அண்ணிமாரும், அம்மா நவ்ஜீத்தும் வறுத்தெடுத்துவிட்டார்கள்.

"அந்தப் பெண் கஸ்தூரி, எங்களையெல்லாம் வயலில் பார்க்கும்போது எவ்வளவு ஆசையாக ஓடிவந்து பேசுவாள். கள்ளங்கபடமில்லாத கலகலச் சிரிப்பு. இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஹரியோடு பேசமுடியும்? தினமும் அவனைப் பார்த்தே ஆகவேண்டுமே. அவன் வயலைக் கடந்தல்லவா நம்மிடத்துக்குப் போகவேண்டும்....."

"அவர்கள் எவ்வளவு வசதியான குடும்பம். நம்முடைய ஏழ்மையைப் பொருட்படுத்தாமல் எப்போதும் நட்புடன் இருப்பார்களே. இவன் இப்படி விளையாட்டுத்தனமாகச் செய்துவிட்டானே? பெரியவர் என்ன சொல்வாரோ?
வேலைக்கு வராதே என்று விரட்டிவிட்டால் எங்கே போவான்? குடும்பத்துக்கே கெட்ட பெயரை உண்டாக்கிவிட்டாயேடா "

" போடா..போ. பெரியவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேள். . எங்கிருந்தோ தூரதேசத்தில் இருந்து வந்த அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடு படும்? தவறுதலாக அப்படி நடந்துகொண்டேன் என்று அவளிடமும் சொல்"

இவர்கள் எரிச்சல்படுவதைப் பார்த்து, உள்ளூரப் பயம் இருந்தாலும், அந்த வயதுக்கே உரிய அசட்டுத்தைரியத்துடன் 'நான் செய்தது அப்படி என்ன பெரிய தவறு? விருப்பம் இல்லை என்றுதானே ஒன்றும் சொல்லாமல் போய்விட்டாள். அதற்கு ஏன் நீங்கள் அனைவரும் இந்தக் குதி குதிக்கிறீர்கள்?' என்று முரண்டினான் ஆகாஷ்.


இருட்டுப் பிரியும் அதிகாலையில் பாலைக் கறந்துவிட்டு, கிணற்றடிக்குப் போன ஹரி, அரையிருட்டில் நிற்கும் உருவத்தைக் கவனித்துவிட்டான். தலையைக் குனிந்தபடி நின்றிருந்த ஆகாஷ், 'நான் வேலைக்கு வரலாமா? என் மனதில் அன்று அப்படித் தோன்றியதைச் சொன்னேன். தவறாக இருந்தால் மன்னிக்கணும்' என்று மெல்லிய குரலில் கூறினான்.

அவனை உற்று நோக்கிய ஹரிக்கு, 'சட்' என்று ஒரு இரக்கம் வந்தது. 'நானா உன்னை வேலைக்கு வரவேண்டாமென்று சொன்னேன். நீயாகத்தானே வரவில்லை. இந்த ஒரு வாரமும் பயந்து கொண்டு ஒளிந்திருந்தாய் அல்லவா?' என்று சிரித்தான். மா ஜியும் பிதாஜியும்தான் ரொம்பக் கோபமாக இருக்கிறார்கள் என்றும் சொல்லிவைத்தான். இதைக்கேட்ட ஆகாஷின் கண்களில் மெல்லிய கலக்கம்.

கஸ்தூரிக்கு எல்லோரையும் பிடிப்பதுபோலவே ஆகாஷையும் பிடிக்கும். அவனுடன் எப்போதும் சிரித்துப் பேசுவாள். அதற்காக அவனைக் கல்யாணம் செய்துகொள்வது...... நினைத்தும் பார்த்ததில்லை. அக்கா, கல்யாணத்திற்குக்
காத்திருக்கும்போது நான் எப்படி? முதலில் அவன் மீது எனக்கிருக்கும் அன்பு
விசேஷமான ஒன்றில்லையே........

மா ஜியுடன் ஒரு நாள் தனித்திருக்க நேர்ந்தபோது, தன்னுடைய குழப்பத்தைச் சொல்லி, என்ன செய்யலாம் என்று கேட்டாள். தாயன்பு மிக்க மா ஜி அவள் தலையை வருடியபடி ஆதரவாகவும் மிகுந்த கவனத்துடனும் தன்னுடைய எண்ணங்களைக் கூறினார்.

"நான் திருமணம் முடித்து இந்த ஊருக்கு வந்ததுமுதல் நவ்ஜீத்துடன் பழக்கம். நம் வயலுக்குப் பக்கத்தில் இருப்பதால் தினமும் ஒருமுறையாவது சந்தித்துப் பேசாமல் இருந்ததில்லை. நல்ல மரியாதைப் பட்ட குடும்பம். காசு பணத்தில்தான் அவர்கள் ஏழையே தவிர குடும்பத்தில் அன்பு, பாசம் என்று கணக்கெடுத்தால் நம்மையெல்லாம் விட செல்வந்தர்கள் என்றுதான் சொல்லவேண்டும். அங்குவந்த மூன்று மருமகள்களையும் சொந்தப்பெண்போன்றே நடத்துகிறார்கள். நீயும் இங்குவந்த நாளில் இருந்து கவனித்திருப்பாயே.....எப்போதாவது சண்டை, சச்சரவு என்று விரும்பத்தகாதவைகள் அங்கே நடந்துள்ளதா? பெண்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கும் வீடு, கோயிலுக்குச் சமம் அல்லவா? அந்த வீட்டுப் பையன்களும் தங்கமானவர்கள்தான். அதிலும் ஆகாஷ் ஊருக்கே ஒரு செல்லப்பிள்ளை. எந்த வம்பு தும்புக்கும் போகாதவன்.

ஆனால் இதில் உன் விருப்பம்தான் மிகவும் முக்கியம். நாங்கள் அவனைக் குழந்தை முதல் பார்த்துக் கொண்டிருப்பதால் குற்றங்குறைகள் எங்கள் கண்களில் படாமல் போயிருக்கலாம். நீயே நன்றாக யோசனை செய்து சொல். ஹரியும் உன் விருப்பப்படியே செய்யலாம் என்று நினைக்கிறான்.

பிஜ்யா மட்டுமே 'அந்த வேலைக்காரன் ஏதோ உளறினான் என்று விடாமல், எதற்காக இப்படிக் கூடிக்கூடிப்பேசுகிறார்களோ?' என்ற ஏளனத்துடன் இருந்தாள்.

கஸ்தூரியும் பலவிதமான சிந்தனைகளுக்குப் பிறகு, தனக்கு ஆகாஷை மணம் முடிக்க விருப்பம்தான் என்றாலும் முதலில் பிஜ்யாவின் மணம் முடியவேண்டும் என்று மா ஜியிடம் கூறினாள். நியாயம்தானே?

நவ்ஜீத்திடம் ஒரு நாள் மா ஜி இந்த விவரங்களைக் கூறினது ஆகாஷுக்கு எட்டியது. எத்தனை வருடங்கள் ஆனாலும் கவலை இல்லை. கஸ்தூரிக்காக இந்த ஜென்மம் முழுவதும் காத்திருப்பேன் என்று கடைசி அண்ணியிடம் வசனம் பேசினானாம்:-) இப்போதெல்லாம் பக்கத்து டவுனில் சினிமா பார்க்கப் போய்வருகிறானல்லவா?

லலிதாவின் இளைய மைத்துனர்களுக்குக் கல்யாணம் நிச்சயமானது. பிள்ளை வீட்டுக்காரர்களின் சில சடங்குகளுக்கு மா ஜியுடன் பிஜ்யாவும் கஸ்தூரியும் போய்வந்தனர். வரமாட்டேனென்று முரண்டு பிடித்தவளைக் கெஞ்சிக்கூத்தாடிக் கால்பிடித்து, வழிக்குக் கொண்டுவந்தாள் கஸ்தூரி. 'இந்தச் சின்னவளுக்கு இருக்கும் பொறுப்பும், பொறுமையும், சாமர்த்தியமும் யாருக்கும் வராது' என்று பெருமிதம் அடைந்தார் மா ஜி.

'எல்லாம் நன்மைக்கே' என்று ஒரு பழமொழி உண்டல்லவா? அதைப்போன்றே இதிலும் ஒரு நன்மை விளைந்தது. லலிதாவின் மைத்துனன் அம்ரித்தின் மனைவியின் தூரத்து உறவினர் ஒருவர் பிஜ்யாவைப் பார்த்ததும் தங்கள் மகன் ஜீத்துக்குப் பொருத்தமாக இருப்பாளென்று நினைத்தார். அவர் மனைவிக்கு, மத்ராஸிப் பெண்'' என்ற தயக்கம் இருந்தாலும் கல்யாண வீட்டில் லலிதாவின் அனுசரணையைக் கண்டதாலும், பர்மீந்தர் தன் மருமகளைப் பற்றி ஊர்முழுதும் புகழ்ந்து கொண்டிருந்த செய்தியை முன்பே கேட்டிருந்ததாலும், லலிதாவின் தங்கை என்பதால் அவளும் நல்ல குணவதியாகவே இருக்கவேண்டும் என்றும் நம்பினார். ஜீத்தும், பிஜ்யாவின் அழகைக் கண்டு அதிசயித்துப் போயிருந்தான்.

மெல்ல இவ்விஷயம் லலிதாவை எட்டியது. அவளுக்கும் பரம சந்தோஷம்.

''மாப்பிள்ளைக்குக் கம்பீரமான தோற்றம். நன்றாகப் படித்திருக்கிறார். பிலாஸ்பூரில் அரசாங்க வேலையில் இருக்கின்றார். மூத்த அண்ணன் இருவருக்கும் இரண்டு தங்கைகளுக்கும் திருமணமாகி விட்டது. இன்னும் ஒரு தங்கைதான் பாக்கி. செல்வத்துக்கு குறைவில்லை. பிஜ்யா கொடுத்து வைத்தவள்தான்''

'' அப்பாடா..... இந்தப் படிக்காட்டை விட்டுத்தொலைத்து, நகரில் போய் வசிக்கலாம். நல்ல சம்பளமாமே. நாகரீக வாழ்க்கைக்குக் குறைவிருக்காது. முக்கியமாக, இந்தக் கஸ்தூரி ஒரு வேலைக்காரனை மணக்கப் போகிறாளாமே.... அதை விடக் கேவலம் உண்டா? இதெல்லாம் நடக்குமுன் இங்கிருந்து போய்விடலாம். இப்படி ஒரு வரன் வந்ததே என் அழகினால்தான்'' பிஜ்யாவுக்குத் தலைகால் புரியவில்லை. மகிழ்ச்சியை அதிகம் வெளிப்படுத்த வேண்டாமே என்று கூடுதல் கவனமெடுத்துக் கொண்டிருந்தாள்.

இரண்டு திருமணங்களையும் ஒரே சமயத்தில் வைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்த மா ஜி, இதைப் பற்றிப் பர்மீந்தரிடம் ஆலோசனை கேட்டார்.

' முதலில் பிஜ்யாவின் திருமணம் முடியட்டும். ஆகாஷ், கஸ்தூரி திருமணத்திற்கு என்ன் அவசரம்? இன்னும் சில மாதங்கள் கழித்து வைத்துக்கொள்ளலாம். இப்போது அவ்வளவாக வசதிப்படாது' என்றார் பர்மீந்தர்.

'நகரவாசிகளின் ஆடம்பரத்திற்கு நம்மால் ஈடுகட்ட முடியுமா? அவர்கள் எதிர்பார்ப்புகள் எல்லாம் எப்படி இருக்குமோ என்னவோ? எளிய முறையில்தான் ஆகாஷின் திருமணம் நடத்த முடியும். இதற்கே கொஞ்சம் கடன் வாங்கவேண்டித்தான் ஆகவேண்டும். நாம் கொஞ்சம் ஒதுங்கி இருக்கலாம்' என்ற எண்ண ஓட்டம் அவர் மனதில்.

மூன்றே மாதங்களில் பிஜ்யாவின் திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு மனமகிழ்ச்சியுடன் செய்தான் ஆகாஷ். படித்த மாப்பிள்ளை என்ற பயபக்தியுடன் ஹரியும் மா ஜி, பிதா ஜியின் ஆலோசனைகளை அனுசரித்து, கூடுமானவரையில் விமரிசையாவே கல்யாணத்தை நடத்தி முடித்தான்.

அதே மாதத்தின் கடைசியில் ஆகாஷ், கஸ்தூரியின் நிச்சயதார்த்தம் வீட்டளவில் நடந்தது. அடுத்த அறுவடை முடிந்தபின் டும் டு டும்.


மதராசில் பாட்டிக்கு உடம்பு ரொம்ப முடியாமல் போனது. பக்கவாதம் வந்து
இடதுகைப்பக்கம் செயலில்லாமல் படுத்தபடுக்கையானார். மரணம் அடுத்துவந்து நிற்பதை உணர்ந்தவருக்கு மகன் இருக்குமிடம் தெரியாமல் மனம் அலைபாய்ந்தது. மற்ற குடும்பத்தினர் அவ்வப்போது வந்து சென்றனர். தேவா இருக்குமிடம் யாருக்கும் தெரியவில்லை. வீட்டில் நோயாளி இருப்பதால் வேலைகள் கூடின. அதன் காரணமாகவே ஒரு சிடுசிடுப்பு வந்து ஒட்டிக்கொண்டது இளையமகள் முகத்தில்.

தெருவில் சாமி ஊர்வலம் வந்துகொண்டிருக்கிறது. ஸ்ரீ ராம நவமி. வீட்டில் இருந்த அனைவரும் வாசலில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சுகுமாரன் தேங்காய் பழத்தட்டுடன் நின்றுகொண்டிருந்தான். சாமி வீட்டு வாசலில் வந்ததும் தீபாராதனை ஆனது. கற்பூர ஆரத்தியைப் பாட்டிக்குக் காண்பிக்க உள்ளே வந்தான். 'பாட்டி, பாட்டி. சாமி வந்துட்டுப் போயாச்சு. இந்தா ஆரத்தி' என்றான். கண் திறக்காமல் கிடந்தவர் நெற்றியில் கற்பூரச்சூட்டை ஒற்றிவிட்டுத் தேங்காயைத் தின்பதற்காக அவசரமாக அம்மிக்கல்லுக்கு ஓடினான். சாமியின்கூடவே பாட்டியும் போனது யாருக்குமே தெரியாது.

அன்று ஞாயிறு என்பதால் வீட்டில் உறவினர் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கூடத்தில் அமர்ந்து கதையளந்து கொண்டிருந்த பாட்டியின் கடைசி மருமகள் ஏதோ எடுக்கவென்று மாமியார் படுத்திருந்த இடத்துக்கு போனவள் பாட்டியின் முகத்தில் உட்கார்ந்திருந்த ஈயை விரட்டும்போதுதான் லேசான சந்தேகம் தோன்றியது.

அடடடா...... என்ன ஒரு சாவு!! ஸ்ரீராமனே நேரில் வந்து கொண்டுபோயிட்டான்!!

தேவாவின் நண்பர் வீட்டுக்கு ஆள் போனது. அவருக்கும் தெரியாதாம். காசிக்குப் போகிறேன் என்று சொல்லிப்போனவர் இன்னும் வரவில்லையாம். எங்கே இருக்கிறாரோ? யாருக்குத்தெரியும்? விவரம் கிடைத்தால் சொல்லி அனுப்புகிறேன் என்றாராம்.

பாவம். மகனின் கையால் கொள்ளிவாங்கக் கொடுத்து வைக்கவில்லை. எல்லாரும் கூடிப்பேசி, பேரன் கையால் ஆகட்டும் என்றதால் சுகுமாரன்
கிரியைகளைச் செய்தான். பாட்டியின் வீடு அவனுக்கு என்று முடிவாகி இருந்ததும் ஒரு காரணம்.

தேவா, கல்கத்தாவை விட்டுக் கிளம்பி மதுராவிலே சிலமாதங்கள் சுற்றித்திரிந்துவிட்டு, 'மகனைப் பார்க்கலாம்' என்ற யோசனையுடன் ரயில் ஏறினார்.

பயணம் தொடரும்...................

Friday, January 04, 2008

திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 4





சுறுசுறுப்புக்குப் பொருள் கஸ்தூரி என்று அகராதியில் சேர்க்கவேண்டியதுதான் பாக்கி. பட்டாம்பூச்சியைப்போல் ஒரு இடத்தில் உட்காராமல் ஓடித் திரிந்துகொண்டிருந்தாள். புன்னகை ஒன்று முகத்தில் நிரந்தரமாக வந்து உட்கார்ந்து கொண்டது. அக்காவின் புகுந்தவீட்டின் மூலைமுடுக்குகள் எல்லாம் அத்துப்படி ஆகி இருந்தது. எதோ சொப்பனத்தில் நடந்ததோ என்னும் திருமணம்.



ராத்திரியில் கல்யாணம் என்றதுமே ஒருபரபரப்பு அவளைத் தொற்றிக்கொண்டது. சீக்கியர்கள் திருமணங்கள் பகலிலும் இந்துக்களின் திருமணங்கள் இரவிலுமாம்.
மருதாணி இட்டுக்கொள்வதில் இருந்து கல்யாணப் புடவைவரை எல்லாமே இதுவரை காணாத விதத்தில்.


கல்யாணப்புடவை என்ன புடவை? அதுவும் தொளதொளவென்றிருந்த பஞ்சாபி சல்வார் சூட்தான். அதில் வைத்துத் தைத்திருந்த பாசிமணிகள், பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் ஜொலித்த ஜொலிப்பு இன்னும் மனதிலேயே நின்றது. விருந்திலும் இனிப்பிலும் ஒரு குறைவும் இல்லை. எல்லாம் பாலும் சர்க்கரையுமாகத் திகட்டத் திகட்ட இருந்த இனிப்புவகைகள்.


லலிதா எதிர்பார்த்ததைவிட எக்கச்சக்கமான அன்பும் ஆதரவுமாக இருந்தனர் புகுந்த வீட்டினர். அந்த வீட்டின் மகாராணியேதான். மாமியாரும், கணவரும், மைத்துனர்களும் அப்படித் தாங்கினார்கள். அவர்கள் நடந்துகொள்ளும் விதம் பார்த்தால், இத்தனைநாள் எப்படித்தான் வீட்டு நிர்வாகம் தானில்லாமல் நடந்ததோ என்னும் மலைப்புத்தான். பெண்குழந்தைகள் இல்லாத மாமியார், தன் முழு அன்பையும் மருமகள் மேல் செலுத்தினார். 'பாவம். மூத்தவளுக்குத்தான் கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது' என்று இவளே நினைத்துப் பரிதாபப் படும்படி ஆனது.



மாமியார் தன் தோழியைப் பார்க்கும் சாக்கில் புது மருமகளையும் இங்கே அவ்வப்போது அழைத்துவந்தார். பிஜ்யாவுக்குத்தான் இப்போது வேலை கூடுதல் என்னும் எண்ணம் லலிதாவுக்கு. இங்கே வந்தவுடன் பரபரவென்று அவள் கைவேலைகளையெல்லாம் பிடுங்கிச் செய்து கொடுப்பாள். இரண்டொருமுறை இதைக் கவனித்த கஸ்தூரி, முன்னிலும் அதிகமாய் வீட்டுவேலைகளில் பங்கெடுத்தாள்.



' எங்கள் மூவரில் நாந்தானே ரொம்ப அழகு. அது எப்படி என்னை விட்டுவிட்டு, அக்காவைப் பெண் கேட்கலாம் ? இருக்கட்டும். எனக்கு வரப்போகும் கணவன், அத்தானைவிட கம்பீரமாக இருக்கவேண்டும். நல்ல வசதியான பணக்கார வீட்டிற்குத்தான் நான் போகப்போகிறேன்.'

கொஞ்ச நாட்களாக பிஜ்யாவின் மனதில் எதேதோ எண்ணங்கள். அதுவும் இரவில் தூக்கம் வராமல் இருக்கும் நாட்களில் அவளே பயப்படும் அளவுக்கு
வேண்டாத எண்ணங்கள் எல்லாம் ஆட்டம் போட்டன. அதுவும் லலிதா வந்து போகும் நாட்களில் மனதின் கூச்சல் அதிகமானது. அக்காவைப் பார்க்கும்போதெல்லாம் லேசான பொறாமை எழுந்தது.


சுரத்தில்லாமல் எப்போதும் எதோ கனவுலகில் இருந்த பிஜ்யாவைக் கவனித்த மா ஜி, கஸ்தூரியைக் கொஞ்சம் கண்டித்து வைத்தார். 'வயல்வெளிகளுக்கும், தோழி வீட்டிற்கும், லலிதாவின் வீட்டிற்குமாகப் போகும்போது பிஜ்யாவையும் அழைத்துக் கொண்டு போனால் என்ன? பாவம். தனிமையில் பொழுது போகாமல் இருக்கிறாளே' என்றார்.



கஸ்தூரி பலமுறை முயன்று பார்த்தும், பலன் இல்லை. வெளியே போவதில் பிஜ்யாவுக்கு விருப்பமே இல்லை. இதற்காகவெல்லாம் கவலைப்பட கஸ்தூரிக்கு நேரமே ஏது?



பிஜ்யாவின் போக்கு மிகவும் மனக் கவலையைக் கொடுத்தது மா ஜிக்கு. எதிலும் ஈடுபாடில்லாமல் வயசுப்பெண் வீட்டில் இருப்பதும், எதாவது விபரீதம் ஆகிவிடுமோ என்றும் அடிவயிற்றில் ஒரு பயம்.
ஹரியிடம் மா ஜி என்ன சொன்னாரோ.....ஒரு நாள் வீட்டிற்கு புதிய ரேடியோப் பெட்டி வந்தது.



சென்னைக்கு ஒரு கடிதம் நின்று நிதானமா வந்தது. அனைவரின் நலத்தையும் விசாரித்ததோடு, லலிதாவின் திருமணம் முடிந்த விவரமும் எழுதி இருந்தது. பாட்டி, அந்தக் கடிதத்தைப் பத்திரமாக எடுத்து வைத்தார். தேவா வந்தால் காண்பிக்க வேண்டும். 'ஹூம்..அவனெங்கே இருக்கிறானோ? பெண்கள் இங்கிருந்தாலாவது வந்து போவான். இப்போது? பார்த்தே ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது.



கடமைகள் என்று ஒன்றுமே கருத்தில் இல்லாத தேவா, மனம்போன போக்கில் கல்கத்தாவில் ஊர் சுற்றிக்கொண்டிருந்தார். காசிக்குப் போகிறேனென்று கிளம்பி இப்போது கல்கத்தாவில். அங்கங்கே கிடைக்கும் நண்பர்களோடு பொழுது போய்க் கொண்டிருந்தது.


பிஜ்யாவுக்கு சரியான சம்பந்தம் கிடைப்பதுக் குதிரைக்கொம்பாகி விட்டது. ஹரி, உள்ளூரில் யாரைப் பற்றிச் சொன்னாலும் அவளுக்குச் சரிப்படவில்லை. தன் அழகுக்குக்கு ஏற்றவராக இல்லை என்று ஒரு சமயம் முகத்திலடித்தாற்போல் சொல்லவும் செய்தாள்.



காலம் யாருக்காகவாவது காத்திருந்ததாகச் சரித்திரம் உண்டா? இரண்டு வருடங்கள் ஓடிப்போனது. லலிதா இப்போது இரண்டாவது குழந்தையைச் சுமக்கின்றாள். மூத்தவன் தீபக்கின் பிறந்தநாள் போனமாதம் வந்து போனது. அவனைக் கருவில் சுமந்த சமயம் யாராவது பிரேந்தரைப் பார்த்திருக்கவேண்டுமே..... எப்போதும் கிலி படிந்த முகத்துடன் வயல்வெளியிலேயே நேரம் போக்கிக் கொண்டிருந்தான்.



நல்லவேளையாக லலிதாவுக்குச் சுகப்பிரசவம். தீபக், தன் பெயருக்கேற்றார்போல் தகப்பன் முகத்துக்கு ஒளியாக இருந்தான்.
கஸ்தூரியின்கூட ஒட்டுதல் அதிகம். அதுவும் இப்போது 'சவலை' பாய்ந்திருப்பதால் சிணுங்கல் கூடி இருந்தது. கஸ்தூரியின் இடுப்பில்தான்
எப்போதும் சவாரி.


ஹரியின் கூடவே அவனுக்கு உதவியாக வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஆகாஷ் இப்படிச் செய்வான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.



யார் இந்த ஆகாஷ்? ஹரியின் நிலத்துக்கும், அஷோக்கின் நிலத்துக்கும் இடையில் இருந்த சிறிய நிலத்துக்குச் சொந்தக்காரன். அண்ணந்தம்பி நால்வரும், ஒரு அக்காவும் இருக்கும் குடும்பம். இந்தக் கையகல நிலத்தில் வரும் வருமானம் இத்தனைபேருக்கும் போதாதே..... பக்கத்துக் கிராமத்தில் அக்காவைக் கல்யாணம் முடித்து அனுப்பியாகிவிட்டது. அண்ணன்மார்கள் மூவரும் திருமணம் முடித்துக் குடும்பஸ்த்தர்கள் ஆகிவிட்டிருந்தனர். ஆகாஷ்தான் கடைக்குட்டி. குடும்பத்து ஆண்கள் அனைவருமே மற்றவர்களின் நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அப்படி ஹரியின் நிலத்தில் வேலைக்கு வந்தவன்தான் இவன். கூடவே தங்களுடைய பகுதியில் அவ்வப்போது எதாவது பயிரிட்டு வந்தான். வீட்டுப் பெண்கள் அனைவரும்
அங்கே எதாவது செய்துகொண்டே இருப்பார்கள். பருவத்துக்கேற்றபடி காய்கறிகள்.


ஆகாஷ் எப்போதும் இனிமையாகப் பேசுவான். கிராமத்துக்கே அவன் ஒரு செல்லப்பிள்ளை.


அந்த வருட லோ(ஹ்)ரி விழாவுக்கு, தீபக்கையும் தூக்கிவந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் கஸ்தூரி. இன்று யார்யாருடைய காதல் அம்பலமாகப் போகிறதோ என்று ஒரு ஆர்வம்.


படபடவென்று வெடிக்கும் சோளத்தின் இரைச்சலையும் மீறி, 'கஸ்தூரி' என்ற தன் பெயரைக் கேட்டதும் விக்கித்து நின்றாள்.

பயணம் தொடரும்.................