ஹரி, ஹரி என்று கூப்பிட்டுக்கொண்டே ஓட்டமும் நடையுமாக வந்த ஹர்ஜீத்தைக் கண்டதும் என்னவோ ஏதோ என்று பயந்துவிட்டான் ஹரி. போதாததற்கு 'உன் அப்பா...... வந்திருக்கார்' என்றதும், 'ஐயோ.... அவருக்குக் கால்வலி என்று நேற்று இரவில்கூட தைலம் தேய்த்து விட்டேனே..இத்தனை தூரம் எதற்காக வந்தார்?' என்று அவனுக்குப்பின் பார்வையை ஓடவிட்டான்.
உடனே அவன் எண்ணத்தைப் புரிந்துகொண்ட ஹர்ஜீத், 'உன் அசல் அப்பா வந்திருக்கிறார். நல்லவேளையாக அவர் பஸ் விட்டு இறங்கும்போது, அந்தப் பக்கம் நான் இன்னொரு வேலையாகப் போய்க் கொண்டிருந்தேன். அப்புறம் அவர் யாரென்று தெரிந்ததும் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு இங்கே உன்னிடம் சொல்ல வந்தேன். சீக்கிரம் ஓடு. மாலையில் சந்திக்கலாம்' என்றபடி வேறு திசையில் விரைந்தான்.
வீட்டுக்கு வந்தபோது அவன் கண்ட காட்சியை என்னவென்பது!!! ஏதோ காலங்காலமாய்ப் பழகிய நண்பருடன் இருப்பதுபோலத்
தகப்பனும் பிதா ஜியும் வீட்டின் வெளி முற்றத்துக் கட்டிலில் அமர்ந்து சிரித்துப்பேசிக் கொண்டிருந்தார்கள். ரெண்டு லோட்டா நிறைய சாய். இன்னும் சில இனிப்புகள் உள்ள தட்டும் அவர்கள் முன் வைக்கப்பட்டிருந்தது. கஸ்தூரியும், மா ஜியும் திண்ணையில் அமர்ந்து அவசர அவசரமாகப் பச்சைப் பட்டாணிகளை தோலுரித்துக் கொண்டிருந்தனர்.
பஞ்சாபியில் ஹரி எழுதிக்கொடுத்திருந்த விலாசத்தைக் காட்டிப் பல இடங்களில் விசாரித்துக்கொண்டு சரியான வீட்டிற்கு வந்திறங்கியவர் தேவாதான். கிராம எல்லையில் இருக்கும் ரோட்டோர பஸ் நிறுத்தத்தில்
இறக்கிவிடப்பட்டவர், அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த ஹர்ஜீத்தை நிறுத்தி வழி கேட்டிருக்கிறார். ஹரியின் நண்பனான அவன், அவர்தான் ஹரியின் தந்தை என்று அறிந்ததும் பதறியடித்துக்கொண்டு வீட்டுக்கே கூட்டிவந்துவிட்டான். மூன்றாம் முறையாகத் தான் வந்து சேர்ந்த விவரத்தை ஹரியிடம் விவரித்தார் தேவா.
சின்னவயதில் பட்டாளத்தில் ஸ்டோர்ஸ் பகுதியில் சில வருடங்கள் வேலை செய்ததின் பலனாகத் தேவாவுக்கு இந்தி மொழி தெரியும். அந்த மொழியறிவைக் கொண்டுதான் வடக்கே இவ்வளவு நாள் சுற்ற முடிந்தது.
திடீரென்று மா ஜிக்கு நினைவு வந்தது, லலிதாவுக்குத் தகவல் சொல்லியனுப்பவில்லையே என்று. நான்போய்ச் சொல்கிறேன் என்ற ஹரியைத் தடுத்துவிட்டுக் கஸ்தூரி ஓடினாள். 'ஏற்கெனவே இந்தப் பெண்ணுக்கு நடக்கத்தெரியாது. எப்போதும் ஓட்டமும் துள்ளலும்தான். இப்போது பெற்றவரைப் பார்த்தபின் ........ நின்று நிதானமாக நடப்பாளா என்ன?' என்றார் மா ஜி.
அடுக்களையில் அமர்ந்து ஆனந்துக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த லலிதாவின் முன் போய் தொப்பென்று குதித்து, மூச்சுவாங்க நின்றாள். "அக்கா, நம்ம அப்பா வந்திருக்கார்"
இவள் குரலைக்கேட்டு, பால்வழியும் வாயோடு தலையைத் திருப்பிப் பார்த்தான் ஆனந்த். ஆறுமாதம் ஆகிறதல்லவா? ஆட்களையும் குரல்களையும் அடையாளம் தெரிகிறது. பின்புறத் தோட்டத்தில் மண்ணில் விளையாடிக் கொண்டிருந்த தீபக், குரல்கேட்டுப் பாய்ந்து வந்தான், 'தூக்கு தூக்கு' என்று கைகளைத் தூக்கியவாறு.
'சட்' என்று அவனை அணைத்துத் தூக்கி இடுப்பில் வைத்தவள், 'நான் இவனைக் கொண்டுபோகிறேன், நீ கிளம்பி வா' என்றபடி ஓடத் தொடங்கினாள்.
'அவனுக்கு வேறு சட்டை மாற்றிக் கொண்டுபோ' என்ற லலிதாவின் குரல் காதில் விழுந்தால்தானே?
அன்று முழுவதும் வீடு நிறைய ஆட்கள் வருவதும் போவதுமாகவே இருந்தது. தேவா வந்த 'கதை'யைச் சொல்லிச் சொல்லி பிதா ஜிக்கு வாய் வலி வந்துவிட்டிருந்தது. கேட்டுக்கேட்டுக் காது புளிக்காதவரை சரி என்று சிரித்துக் கொண்டிருந்தாள் கஸ்தூரி.
மகள்களையும் பேரன்களையும் சம்பந்தி வீட்டாரையும் பார்த்து மகிழ்வுடன் இருந்தார் தேவா. பிதா ஜியும், மாதா ஜியும் எல்லாம் ஹரியின் பொறுப்புதான் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
'அட! இவ்வளவு சின்னவன் இத்தனை நறுவிசாகக் காரியம் செய்து வைத்திருக்கிறானே!!! என்ன இருந்தாலும் என் மகன் அல்லவா? பாவம். அவன் தாய்க்குத்தான் இதையெல்லாம் இருந்து பார்க்கக் கொடுத்துவைக்கவில்லை.' கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றிருந்த தேவாவுக்கு எப்படியோ மகள்களின் கல்யாணச்சுமை தன்னை விட்டுப்போனதே மகா திருப்தியாக இருந்தது.
இரவு உணவு முடித்தபின் வருங்கால மாமனாரைக் காணவந்த ஆகாஷ், கஸ்தூரியிடம் 'இரண்டு' என்று இருவிரல்களைக் காட்டினான். 'என்ன இரண்டு?' என்று பொய்க் கோபம் காண்பித்தவளிடம் எனக்கு ரெண்டு மாமனார் என்று சிரித்தான்.
பிஜ்யாவையும் பார்த்துவிட்டுப் புறப்படலாம் என்று இருந்தவரை, இன்னும் இரண்டு மாதத்தில் நடக்க இருக்கும் கஸ்தூரியின் திருமணத்திற்கு இருந்துவிட்டே போகவேண்டும் என்று கண்டிப்பாக சொன்னார் பிதா ஜி.
தேவாவுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்வது சுலபம். பேச்சு சாமர்த்தியம் அப்படி. தெரிந்தவர் தெரியாதவர் என்ற வேறுபாடே கிடையாது. எல்லாரையும் பேசியே வளைத்து விடுவார்.
அப்பா வந்த விவரமும், கஸ்தூரியின் திருமணத்துக்கு நாள் குறித்த விவரமும் பிஜ்யாவுக்குப் போய்ச் சேர்ந்தது. 'தன் தந்தையுடன் ஒட்டுதல் இல்லாத உறவில் மட்டுமே' இருந்தவளுக்கு இது ஒன்றும் பெரிதாக இல்லை. மேலும் ஆகாஷை இன்னும் வேலைக்காரன் என்ற நிலையில்தான் வைத்திருந்தாள். ஆங்....பெரிய கல்யாணம். பார்க்கலாம். முடிந்தால் போகாமலிருக்க வேண்டும் என்ற எண்ணமே அவள் மனதில்.
அதற்கு ஏற்ற மாதிரியே சந்தர்ப்பமும் அமைந்தது. கருச்சிதைவைக் காரணம் காட்டிக் கல்யாணத்திற்குப் போகாமல் தப்பித்தாள். பிஜ்யா நினைத்தமாதிரி நகரவாழ்வும் அமையவில்லை. வீட்டிலும் ஓய்வே இல்லாமல் இருந்தது. பெரிய குடும்பம். மூத்த மைத்துனர்கள் இருவருக்கும் ரெவ்வெண்டு குழந்தைகள். இதில் உள்ளூரில் கல்யாணம் முடித்த பெரிய நாத்தனார் குடும்பத்துடன் வாரம் ஒரு முறையாவது வந்துவிடுவார். அவருக்கு மூன்று குழந்தைகள். பெரியது இரண்டும் பாட்டிச் செல்லம். இங்கேயே அடிக்கடித் தங்கிவிடுவார்கள். ஆறு குழந்தைகளும் சேர்ந்து வீட்டையே ரெண்டுபடுத்தும். எப்போதும் விளையாட்டுதான்.
சமையல் வேலை முழுவதும் வீட்டுப் பெண்களுடையது. மாமியார் எப்போதும் கொஞ்சம் சிடுசிடுப்பாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வார். மாலை ஜீத் வீட்டுக்கு வந்ததும் பிள்ளைகளுடனே நேரம் போய்விடும். ஆற அமரக் கணவனுடன் பேசக்கூட நேரம் கிடைப்பதில்லை. இதெல்லாம் சேர்ந்து பிஜ்யாவின் மனதில் சோர்வு அதிகமாகியது. வீட்டில் மற்ற பெண்களுடன் அவ்வளவாக ஒட்டாமலே இருந்தாள். இந்த அழகில் எல்லோரும் தன்னை மதித்து வந்து பேசவேண்டும், தன்னுடைய தேவைகளைக் கவனிக்கவேண்டும் என்றெல்லாம் அனாவசியமான எண்ணங்களை வளர்த்துக்கொண்டுத் துயரப்பட்டாள். 'சட்' என்று எதிலும் திருப்தி இல்லாத சுபாவம்.
ரெண்டு மாதம் ஓடியது தெரியவே இல்லை. இப்போது பஞ்சாபி மொழியையும் ஆரம்பத்தில் தப்பும் தவறுமாகப் பேசியேக் கற்றுக் கொண்டுவிட்டார் எளிய முறையில், மிகவும் நன்றாகவே நடந்தது நம் கஸ்தூரியின் திருமணம். குறைந்தபட்சம் தன் மக்களில் ஒருவர் கல்யாணத்தையாவது பார்த்து ஆனந்திக்கும் பாக்கியம் தேவாவுக்குக் கிடைத்தது. அதிலும் ஒரு சிறுதுரும்பையும் தூக்கிப்போடும் அவசியம்கூட இல்லாமலேயே!!!!
மருமகனான பின்பும் ஆகாஷ் முன்போலவே ஹரியுடன் சேர்ந்து எல்லா வேலைகளையும் கவனித்துவந்தான். குடும்பஸ்த்தன் ஆகிவிட்டானே என்று மா ஜிதான் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே மாதாமாதம் செலவுக்குக் கொடுக்கச் சொன்னார்கள். கஸ்தூரியும் காலையில் வந்து இங்கே மா ஜியுடன் கூடவே இருந்து வீட்டுவேலைகளைக் கவனித்துக்கொண்டாள்.
எல்லாம் நவ்ஜீத்தின் ஏற்பாடுதான். திடீரென்று எல்லாரும் போய்விட்டால்.... மா ஜிக்குக் கஷ்டமாச்சே? பாவம். அவர்களுக்கும் இப்போதெல்லாம் உடல்நிலை அவ்வளவாக நன்றாக இல்லை. குறைந்த பட்சம், ஹரியின் திருமணம் முடிந்து வீட்டுக்கு மருமகள் வரும்வரையிலாவது ஒத்தாசையாக இருக்கவேண்டும் என்று உறுதியாக இருந்தார்.
இதற்கிடையில் தேவாவும் ஊருக்குக் கிளம்பினார். போகும்போது பிஜ்யாவைப் பார்த்துவிட்டு அங்கேயும் கொஞ்சநாள் இருந்துவிட்டுப் போகலாமே என்று இருந்தார். ஒரு நாளிலேயே இவருக்கு நிலமை புரிபட்டது. என்ன இருந்தாலும் நகர வாழ்க்கை அல்லவா? நின்று பேச யாருக்கு நேரம் இருக்கிறது? ஜீத்தின் தகப்பனார் அங்கே ஒரு சிறு வியாபார நிறுவனத்தை நடத்தி வந்தார். மூத்த மகன்கள் இருவருக்கும் அங்கேயே வேலை. மாப்பிள்ளைக்கோ அரசு வேலையின் அதிகார மிடுக்கு. சம்பந்தியம்மாவோ, முகத்தில் சதா ஒரு சிடுசிடுப்புடன். அவர்களிடம் என்னவென்று பேசுவது?
பிஜ்யாவும் எப்போதும் ஏதோ பறிகொடுத்தாற்போல் இருந்தாள். கிராமத்தில் லலிதா வீட்டிலும், கஸ்தூரியின் மாமியார் நவ்ஜீத் வீட்டிலும், ஹரியின் பிதா ஜியுடனும் அரட்டையடித்து நேரம் போக்குவதைப் போல இங்கே நடந்து கொள்ள முடியாது. மூன்றாம்நாளே ஊருக்குக் கிளம்பியவரை யாரும் வாய் வார்த்தையாகக் கூட 'இன்னும் சில நாள் இருந்துவிட்டுப் போகலாமே' என்று கூறவில்லை. மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே என்று புறப்பட்டுவிட்டார்.
ஏற்கெனவே ஹரியின் திருமணத்தைப் பற்றி வேண்டியது சொல்லியாகி விட்டது. பேசாமல் நம்மூர் பெண்ணைக் கட்டுவதுதான் நல்லது என்று அவன் மண்டையில் உருவேற்றி இருந்தார்.
"உனக்குப் பொருத்தமான பெண் நம் உறவிலேயே கிடைக்கும். கவலைப்படாதே. நான் போய் எல்லாவற்றையும் சரி செய்துவிட்டுக் கடுதாசி போடுகிறேன். புறப்பட்டு வா"
'கஸ்தூரியைப்போல் ஒரு பெண் கிடைத்தால் போதும். வீட்டுக்கு மங்களகரமாக இருக்கும்' என்ற மா ஜியின் நம்பிக்கைக்கு , 'நானாச்சு. நல்ல பெண்ணாகப் பார்த்து வைக்கிறேன்' என்ற வாக்கினால் உரமிட்டு வளர்த்துவிட்டு வந்திருந்தார்.
"உடனே ஊருக்குப்போய்ப் பெண்தேட வேண்டும். ச்சலோ மத்ராஸ்"
பயணம் தொடரும்....................
31 comments:
ஓ இன்னும் இவன் வேற இருக்கான்ல... அவனுக்கும் முடியனுமாக்கும். இந்த பிஜ்யா பாவம்... இப்பிடி ஆயிருச்சே.
ரெண்டு வாரத்துல மூணு கல்யாணம் பண்ணி வச்சுட்டீங்க:-))))).
ஏதோ எங்களால முடிஞ்ச மொய்ப்பின்னூட்டம்:-))))))
//ஏற்கெனவே ஹரியின் திருமணத்தைப் பற்றி வேண்டியது சொல்லியாகி விட்டது. பேசாமல் நம்மூர் பெண்ணைக் கட்டுவதுதான் நல்லது என்று அவன் மண்டையில் உருவேற்றி இருந்தார்// இதை இதைத்தான் நான் எதிர்பாத்தேன்
வாங்க ராகவன்.
கதையின் நாயகனே ஹரிதானே? அவனை விட்டுறமுடியுதா?
பிஜ்யா ?
ப்ச்.... (-:
வாங்க தங்ஸ்.
ஒரு கல்யாணத்துலே இன்னொரு கல்யாணம் நிச்சயமாயிருமுன்னு நம்மூர்லே பொதுவாச் சொல்றதுதானே?
ஆமா...மூணு கல்யாணத்துக்கு ஒரே ஒரு மொய்யா?:-)))))
வாங்க ச்சின்ன அம்மிணி.
//இதை இதைத்தான் நான் எதிர்பாத்தேன்//
பின்னே பஞ்சாப் கனெக்ஷன் எப்படி? :-)))))
ம்ம்ம்..இன்னும் ஒரு கல்யாண வேலை பாக்கி இருக்கா! ;))
\\G.Ragavan said...
இந்த பிஜ்யா பாவம்... இப்பிடி ஆயிருச்சே.\\\
ம்ம்..:(
தை பிறக்கப் போவுது;
ஹரி திருமணம் நெருங்கிடுச்சே
உள்ளேன் ரீச்சர். சும்மாவா சொல்லி இருக்காங்க சந்தோஷத்துக்கும் வசதிக்கும் சம்பந்தம் இல்லைன்னு...
//ஆமா...மூணு கல்யாணத்துக்கு ஒரே ஒரு மொய்யா?:-)))))
//
எல்லா கல்யாணத்துக்கும் நான் வந்திருக்கேங்க..என்ன, சாப்பாடு நார்த் ஸ்டைல்ல இருந்ததால வெளுத்துக்கட்ட முடியல..ஹரி கல்யாணத்து மெனு முன்னாடியே சொல்லிரணும் ஆமா:-)))))
இத்தனை நல்ல மா ஜி பிதா ஜி.
பசங்க.
த்ருஷ்டிக்கு பிஜயா.
அப்படியே கண்ணு முன்னால உண்மையான குடும்பத்தைக் கொண்டு வந்தீட்டீங்க துளசி.
ஹரி நல்லா இருக்கணும்.
வாங்க கோபி.
ஆமாம்ப்பா. கல்யாணவேலைகள் தலைக்குமேலே கிடக்கு. நான் ஒருத்தி, எதுக்குன்னுதான் ஆடுவேன்? ;-)))))
வாங்க சிஜி.
இன்னும் மூணே நாள்தான். 'தை தை'ன்னு ஆடணும்:-)))))
வாங்க கொத்ஸ்.
நீங்க சொல்றது 100% சரி:-))))
தங்ஸ்,
பொண்ணு இருக்கற இடம் முதலில் தெரியட்டும். மெனு சொன்னால் ஆச்சு:-))))
வாங்க வல்லி.
மனம் கொஞ்சம் தெம்பாச்சா?
உலகத்தில் நல்லவங்க நிறையப்பேர் இருக்காங்கப்பா. அடையாளம் தெரீஞ்சுக்கறதுதான் கஷ்டமாப் போயிருது:-)))))
//கல்யாணவேலைகள் தலைக்குமேலே கிடக்கு. நான் ஒருத்தி, எதுக்குன்னுதான் ஆடுவேன்? ;-)))))// இதெல்லாம் உங்களுக்கே 'டூ...ஊஊஊஊஊ மச்'ஆ தெரியலையா? :) எப்படியும் பையன் வீட்டுக் கல்யாணத்துல நீங்க செய்யப்போறது மெனு போடற வேலை + சமச்சத பந்திக்கு போகும்முன் டேஸ்ட் பாத்து ஒ.கே பண்ற வேலை ரெண்டுதானே? அதுக்கே இவ்ளோ அலுத்துக்கறீங்களே அப்ப உண்மையில்யே கல்யாணத்தை நடத்தப் போற பொண்ணு வீட்டுக்காரங்க என்ன பாடுபடுவாங்க?
நம்ம விளையாட்டுக்கும் வாங்க அக்கா
உங்க பெஸ்ட் எது?
http://kouthami.blogspot.com/2008/01/blog-post_12.html
அப்படியே எங்க ஊருக்கு அவரை அனுப்பி வையுங்க.
பரமகல்யாணி, சைலப்பர் கல்யாணம் மாதிரி பண்ணிவச்சுரலாம்.
பொண்ணுக்கு எவ்வளவு போடுவீங்க?
புத்தகம் போடும் எண்ணம் ஏதும் உண்டா டீச்சர்?
வாங்க லக்ஷ்மி.
இப்பெல்லாம் பொண்ணு கல்யாணத்துலேயும் மெனு சொன்னாப் போதுமுன்னு ஆகி இருக்கேப்பா:-))))))
அண்ணன் பொண்ணு கல்யாணத்துலே,
ஒரு வேலையும் செய்யாம நாங்கெல்லாம் ஜாலியா இருந்த்குட்டு வந்துட்டோம். இது 14 வருசம் முந்தி.
ஆனா ஹரி கல்யாணம் காலகட்டம் அம்பதுகளின் ஆரம்பத்தில். அப்ப எல்லாம் கல்யாணமுன்னா பொண்ணு வீடோ பிள்ளை வீடோ சாஸ்திரம் சம்பிரதாயமுன்னு ரொம்ப மெனெக்கெட வேண்டித்தான் இருந்துச்சாம்.
அதுதான் நானும் அந்தக் காலக்கட்டத்துக்குப்போய் கொஞ்சமாவது வேலை செஞ்சு கொடுக்கறேன்:-)))))))
வாங்க கண்மணி.
பெஸ்ட் எதுன்னு தெரிஞ்சா நான் ஏன் இப்படி இருக்கப் போறேன்?
திரும்பிப் பார்த்தா ஒண்ணும் தேறாது போல இருக்கே:-))))
வாங்க ஆடுமாடு.
'பரமகல்யாணி' எட்டி உதைக்காதா?
பாவம்ங்க. பல்லாவது பாக்கி இருக்கட்டுமே:-))))
வாங்க காட்டாறு.
புத்தகம்???????
எதைப்போடறது?
போட்டா, வாங்க நீங்க இருக்கீங்கன்னு ஒரு பசுமையான எண்ணம் வந்துருக்கு இப்ப:-)))))
துளசி புத்தகம் போடுங்க நாவல் படிக்க நிறையபேர் இருக்கோம். புத்தகம் போடப்போற கதையை புதுசா எழுதுங்க... இதைத்தான் இப்ப படிச்சிட்டமே :-P
கல்யாண ஸ்பெஷல் ஒவ்வொரு பகுதியும்..
//மாப்பிள்ளைக்கோ அரசு வேலையின் அதிகார மிடுக்கு. சம்பந்தியம்மாவோ, முகத்தில் சதா ஒரு சிடுசிடுப்புடன்.//
பாத்திரங்கள் கண் முன்னே நிழலாட வைக்கும் வர்ணிப்பு....
வாங்க முத்துலெட்சுமி.
புதுசா எழுதறதா? அம்மாடியோவ்.....
இதுக்கே தாவு தீர்ந்து போச்சு.
இதையே புத்தகமாப் போட்டுறலாம். நீங்க இப்ப இதைப் படிச்சுட்டு மறந்து போயிருவீங்களாம். அப்புறம் புத்தகத்தை 'வாங்கி' ப் படிச்சாலும்
முந்தி படிச்சது நினைவுக்கு வராதாம்.
இப்படித்தான் ஆகுமாம்:-)))))
வாங்க பாசமலர்.
'பாத்திரங்களை'க் கண்முன்னே பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். அதான் அப்படிக்கப்படியே வர்ணனை:-)))))
இத எப்படி விட்டுட்டேன் - படிக்காமலேயெ - ம்ம்ம் - இது படிக்காமலேயும் தொடர்பு விட்டு போகலியே - ஓக்கே
//'பரமகல்யாணி' எட்டி உதைக்காதா?//
டீச்சர், அது பஞ்சகல்யாணி. நான் சொன்னது பரகல்யாணி அம்மன். சிவசைலம் கோவில் கேள்வி பட்டதில்லையா?
oops...........
அடடா.... இப்படி அடி சறுக்கிட்டேனே...
சிவசைலம் போனதில்லீங்க ஆடு மாடு.
ஒரு 12 நாள் டூர்னு தமிழ்நாட்டுக்கோயில்கள் பார்க்கப்போனதுதான். அதுவும் ஒரு 38 வருசம் முந்தி. அந்தப் பக்கம் வந்தோமான்னு நினைவில் இல்லை.
பதிவு எழுதப்போறேன்னு அப்ப நினைச்சுக்கூடப் பார்க்கலை!!
Post a Comment