Tuesday, January 22, 2008

திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 10

படபடவென்று இந்தியில் தாளித்துக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டுக் கண் விழித்தாள் கனகா. புறப்படத் தீர்மானித்த ரெண்டு நாளாக ஒரே அலைச்சலாக இருந்ததே. இரவுப் பயணமாக இருந்ததால் 'வேடிக்கை' ஒன்றும் இல்லை. கிடைத்த இடத்தில் சுருண்டு உறங்கிவிட்டாள்.


மெட்ராசைவிட்டு ரொம்ப தூரம் வந்தாய்விட்டது என்று சொல்லியது காதில் விழுந்த மொழிகள். இனி ஹரியின் பொறுப்பு. பகல் நேரக் காட்சிகளுக்குப் பஞ்சமே இல்லை. ஓடி மறையும் ஊர்களையும், எந்த ஊர் என்று இந்தியில் எழுதி இருந்ததையும் படிக்க முயன்று கொண்டிருந்தாள். இவள் எழுத்தைக்கூட்டுவதற்குத் தோதாய் வண்டி நிற்குமா? ஆட்கள் பேசும் வேகத்தையும், சரளத்தையும் பார்த்து, 'போச்சுரா...நாம் கத்துக்கிட்ட இந்தி ஒரு நயாபைசாவுக்குப் பிரயோஜனமில்லை. சரி,இன்னும் கவனிச்சுக் கேட்டாப் புரியும்' என்று இருந்தாள்.


கொஞ்ச நேரத்தில் அதுவும் அலுத்துவிட்டது. நேரம் ஏற ஏற சூடு பொங்கிக்கொண்டு வந்தது. அனல்காற்று. எப்போது போய்ச்சேருவோம் என்று ஹரியைத் துளைக்க ஆரம்பித்துவிட்டாள். இதற்கிடையில் அம்மா அப்பா என்று வீட்டு நினைவுவேறு வந்து பாடாய்ப்படுத்தியது. கொஞ்சமாக அழுதுவைத்தாள்.


ஹரிக்கும் வீட்டு நினைவுதான். மா ஜி எப்படி இருக்கிறார்களோ என்று. அதே சமயம் கிளம்பும்வரை தேவா வந்துசேராததும் ஒரு எரிச்சலை உண்டாக்கியது.


மூன்றாம்நாள் வீடுவந்து சேரும்போது கீரைத்தண்டாய் துவண்டு போயிருந்தாள் கனகா. தன் வயதையொத்த அண்ணியைக் கண்டதும் கஸ்தூரிக்குத் தரையில் கால் பாவவில்லை. பெரியவர்களின் காலைத்தொட்டு வணங்கணும் என்பதில் ஆரம்பித்து செய்யவேண்டிய நியமங்களைப் படபடவெனப் பொழிந்து தள்ளிவிட்டாள். தமிழைக் காதில் கேட்டதும் எதற்கோ ஏங்கிப்போனவளாக இருந்த கனகாவுக்கு உயிர் வந்தது.
எதுக்கும் கவலைப்படாதே அண்ணி. நான் இருக்கேன் என்று தைரியம் சொன்னாள். 'அண்ணி' என்ற வார்த்தை இனிப்பாகவும் அதே சமயம் கொஞ்சம் என்னவோ போலும் இருந்தது கனகாவுக்கு.


சேதி அறிந்து லலிதா குடும்பத்தினர் ஓடோடி வந்தார்கள்.


அன்று முழுதும் ஓய்வெடுத்துக் கொள் என்று மாஜி கூறியிருந்தாலும், வீட்டிற்கு வந்து போகும் அக்கம்பக்கத்தார் வரவு நின்றால்தானே? எல்லாருக்கும் ஹரியின் மனைவியைப் பார்க்கும் ஆர்வம். அன்று மாலை அக்கம்பக்கத்துப் பெண்கள் எல்லாரும் கூடி பாட்டுக்கள் பாடுவதும், பரிசுகள் தருவதுமாகப் போனது. கையில் மெஹந்தி இல்லையே என்று எல்லோருக்கும் வருத்தம்.


'அதனால் என்ன? நாமே ஹரியின் கல்யாணத்தை இங்கே கொண்டாடினால் போச்சு' என்று சிரித்தார் பிதா ஜி.


மறுநாளே உள்ளூரில் மக்களைக்கூட்டி விருந்து வைத்தார்கள். எல்லார் வீட்டுப்பெண்களும் வெளியே தோட்டத்தில் கூடி சமைத்தார்கள். மருதாணியும் பாட்டும் கிண்டலும் கேலியுமாகக் கலகலப்பாக இருந்தது. தீபக்கும்,ஆனந்தும் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்துக் குதியாட்டம் போட்டார்கள். கஸ்தூரிக்குப் புதுப்பதவி கிடைத்துவிட்டது. துவிபாஷி ஆனாள். மொழிபெயர்ப்பாளி.



நின்று பேச நேரமில்லாமல் ஹரியின் ஓட்டம் தொடங்கிவிட்டது. பிதா ஜியை வண்டியில் ஏற்றி டவுன் ஆஸ்பத்திரிக்கு அலுங்காமல் கொண்டுபோய் வந்தான். கட்டைப் பிரித்துவிட்டாலும் முன்புபோல் நடக்க முடியாமல் வலி தொடர்ந்தது.

வயதாகிவிட்டதல்லவா? பூரணகுணமாக நாள் செல்லுமாம். நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும் என்றார்களாம். 'அதுதான் ஹரி வந்துவிட்டானே...இனி எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான்' என்றார் மா ஜி.


தீபக்குடன் வீட்டுக்கு வந்த பிரேந்திரருடன் பிதா ஜி பேசிக்கொண்டிருந்தார்.



"ஹரிக்கும் வேலைகள் கூடிவிட்டன. இப்போது அவனும் குடும்பியாகி விட்டானே. முன்புபோல் எப்போதும் வயல்வெளியே கதியாக இருக்க முடியுமா?"


"அதுதான் ஆகாஷின் உதவி இருக்கே,பிதா ஜி."


"அதைத்தான் நானும் சொல்கிறேன். இவன்களுக்கு இப்படி நேரம்காலம் தெரியாமல் இருக்கு. அவர்கள் மனைவிகளுக்கு என்ன பதில் சொல்வது? குடும்பமும் முக்கியமல்லவா? கொஞ்சம் நேரம் ஒதுக்கி அவர்களையும் இங்கே அங்கே என்று கொண்டுபோக வேணுமல்லவா?"


"கஸ்தூரியும் கனகாவும்தான் தோழிகளாக இருக்கும்போது என்ன குறை? லலிதாவுக்குத்தான் நேரமே போதவில்லை. சின்னவன் படாதபாடு படுத்துகின்றான். இவன் (தீபக்கைக் காண்பித்து) சித்திக்கு வால் பிடிப்பவன்."



"உன் வியாபாரம் எப்படி? கடை நன்றாக நடக்கிறதா?"


"அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. இப்போது நிறைய இடங்களில் மிஷின் உபயோகத்தில் இருப்பதால் கொஞ்சம் நன்றாகவே எல்லாம் நடக்கிறது.
ஆமாம். நம்ம வீட்டுக்கும் ஒரு மிஷின் வாங்கிவிடலாமே. ஹரிக்கும் ரொம்ப உதவியாக இருக்கும்."


பக்கத்து டவுனில் ட்ராக்டர்களுக்கான உதிரிச் சாமான்கள் கடையைத்தான் இப்போது நடத்திவருகிறார் லலிதாவின் கணவர். அங்கேயே முன்பு வேலை பார்த்தவர்தான். கடை விற்பனைக்கு வந்தபோது அதை வாங்கி நடத்தலாம் என்றதே லலிதாதான். கொஞ்சம் அங்கே இங்கே என்று பணத்தைப் புரட்டினார்கள். கடனும் மெதுவாகக் கழிந்துகொண்டிருக்கிறதாம்.


நமக்கு அவ்வளவு நிலமில்லையேப்பா. வீணாக மிஷீன் வாங்கிப்போடுவதா என்றுதான் யோசனையாக இருக்கிறது.""


அட.....நீங்கள் என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? நாட்டுநடப்பே தெரியவில்லையா? நம் வேலைக்குப்போக மற்றவர்கள் நிலத்தை உழ வாடகைக்குத் தரலாமே."


ஆகாஷ் வீட்டு நிலத்துக்கும் ஆச்சு. அது உங்க வயலை ஒட்டியே இருக்கிறது.
இன்னும் சொன்னால் எங்கள் நிலத்துக்கும் பயன்படுத்தலாம். உழவு மாடுகள் வைத்துப் பராமரிக்கவும் கஷ்டமாகி வருகிறதே...... "


"ம்ம்ம்ம்ம்ம்ம்.அப்படியே செய்யலாம். ஹரியிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடணும்."


விஷயம் பிரஸ்தாபித்தபோது ஆகாஷும் அங்கே இருந்தான். அவனுக்குத்தான் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஜம்மென்று அமர்ந்து ட்ராக்டர் ஓட்டும் கனவு பலிக்கப்போகிறதா? பலே பேஷ்


ஒரு மாதம்வரை கொஞ்சம் வாழ்க்கை நன்றாகவே ஓடுவதாக இருந்தது கனகாவுக்கு. இடைக்கிடையே அப்பா,அம்மாவென்று நினைத்து அழுதுகொண்டிருப்பாள். அவளைத்தேற்றிச் சிரிக்கவைப்பது நம் கஸ்தூரிதான். கனகா இதுவரை வீட்டுவேலை ஒன்றையுமே செய்யக் கற்றுக்கொள்ளவில்லை. கஸ்தூரியே முன்புபோல் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தாள். இது நல்லதுக்கல்ல என்று நினைத்த மா ஜி
நவ்ஜீத்துடன்(கஸ்தூரியின் மாமியார்) கலந்து ஆலோசித்தார்.


சம்பந்தியம்மா தங்களைவிட மிகப்பெரிய இடம் என்பதால் எப்போதும் மிகவும் பணிவாக இருப்பார் நவ்ஜீத்.


அதனால் என்ன? சின்னஞ்சிறுசுதானே? நிதானமாகத்தான் வேலைகளைப் பழக்கவேண்டும். ? கஸ்தூரி இங்கே வந்து போவதில் எங்களுக்கு ஒருவிதமான ஆட்சேபணையும் இல்லை. ஒரு வேளை அந்தப் பெண், மத்ராசில் வேலை செய்ததில்லையோ என்னவோ....."


இது என்னமோ நிஜம்தான். கனகாவுக்குச் சாய் போட்டுக்கொள்ளக்கூடத் தெரியாது. அவர்கள் வீட்டில் எப்போதும் டீக்கடையில்தான் டீக்கு சொல்லி வாங்குவார்கள். காலை உணவும் அடுத்தவீட்டில் இட்டிலி சுட்டு விற்கும் அம்மாவிடமிருந்தே வந்துவிடும். மற்ற சமையல் வேலைகளை அம்மாவும் பெரியம்மாவும் சேர்ந்தே செய்துவிடுவார்கள். இவள் தொத்தாச் செல்லம். கேட்கவேண்டுமா?


பாவம்,கஸ்தூரி. இங்கேயும், அவள்வீட்டிலும், போதாததற்கு நிலத்திலும் மாங்குமாங்கென்று வேலை செய்துகொண்டிருப்பது ஹரிக்குப் பிடிக்கவே இல்லை. ரெண்டு பெண்களுக்கும் சம வயசாத்தான் அநேகமா இருக்கும்.
அப்ப ஒருத்தி மட்டும் உழைக்கணுமா? மனைவியும் இனி வேலைகளில் பங்கெடுக்கணும். அதுதானே நியாயம்?


"கஸ்தூரி, இனி கனகாவே சமைக்கட்டும். நீ கூடமாடச் சொல்லித்தா."


"ஏண்ணே....அண்ணிக்கு இதெல்லாம் பழக்கமில்லையாம்.............."


"அதுசரி. பழகிக்கிட்டாப் போகுது? அதுக்காக நீயே அவளை உக்காரவச்சுக் கெடுத்துருவ போல இருக்கே. நாளை மறுநாள் உங்க மாமியார் கோவிச்சுக்கப் போறாங்க."


"அவுங்க ஏண்ணே கோவிச்சுக்கப் போறாங்க.? நீயும் மா ஜியும்தான் இப்படிப் பிரிச்சுப் பேசறிங்க........"


"மாமியார் கோச்சுக்கலைன்னா புருசன் கோச்சுக்குவான், அவன் கோவிச்சுக்கலைன்னாலும் நான் அவன்கிட்டே கோவிச்சுக்கோன்னு சொல்லுவேன்."


அன்று இரவு தனிமையில் இருந்த போது, ஆகாஷும் இதையே குறிப்பிட்டான்.
'அவுங்க குடும்பத்து வேலையை அவுங்க பார்க்கட்டும். நீ என்கூட வயலுக்கு வா. எனக்கும் ஜாலியா இருக்கும் ' என்று கண்ணடித்தான்.


"பிஜ்யாவின் புருசனுக்கு வேலை போயிருச்சாம்............"


சேதி கேட்ட லலிதாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அம்ரித்(மைத்துனர்)தின் மாமனார் வந்திருந்தார்.

அரசாங்க வேலைன்னு நிம்மதியா இருந்தோமே. அடடா...என்ன ஆச்சாம்? விஜயா எப்படி இருக்காளோ?

"புதுசா நண்பன் ஒருத்தன் கிடைச்சானாம். அவந்தான் இவனை கொஞ்சம் தப்பான வழியிலே கொண்டு போயிருக்கான். அந்தச் செலவுகளுக்கெல்லாம் பணம் வேணுமே......ஆப்பீஸ் பணத்துலே கை வச்சுட்டானாம். சம்பளம் வரும்போது பார்த்துக்கலாமுன்னு. கூட வேலை செய்யற மத்தவங்களைத்தான் மதிக்காம தலைக்கனமா இருந்தானே. யாரோ வத்தி வச்சுட்டாங்க. இப்ப இப்படி ஆச்சு. கையாடுன பணத்தை அப்பா கொடுக்கறேன்னு சொல்லிப் பார்த்துருக்கார். அதைக் கட்டவும் செஞ்சுருக்கார். ஆனா நடவடிக்கை சரியில்லைன்னு நீக்கிட்டாங்க. திரும்ப மனு கொடுத்துருக்காம். அநேகமா ஒரு வருசத்துக்குள்ளே வேலை திரும்பக் கிடைக்கலாமுன்னு பேச்சு."


"இவந்தான் யார்கிட்டயும் பேசக்கூட மாட்டானே அப்புறம் எப்படி...?"

"தாந்தான் பெரிய ஆளுன்னு நினைப்புலே இருக்கறவங்கதான் இப்படி எங்கியாவது ஏமாந்து போயிக் குழியிலே விழுந்துடறாங்க."


"குழந்தைவேற பிறந்துச்சுன்னு கேள்விப்பட்டோம். பிஜ்யாதான் வரவே இல்லை. நாமாவது போய்ப் பார்க்கணுமுன்னு லலிதா சொல்லிக்கிட்டே இருக்கறா. ஆனா எங்கே ஒழியுது? அண்ணன்காரன் கல்யாணம் முடிச்சு வந்துருக்கான். அவன் ஒரு சமயம் போய்ப் பார்த்துட்டு வருவான்னு நினைக்கறேன்."

அண்ணன் ஒரு சமயம் போகத்தான் செய்தான். அப்பா வந்துபோன கையோடு. 'அப்ப அவன் மனசை முறிக்கிறமாதிரி, எங்கே வந்தேன்னு கேட்டாளாம்.' இவந்தான் காட்டாள் மாதிரி இருக்கிறானே! நாகரிக உலகத்திற்கு லாயக்கில்லை என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறாள்.


ரொம்ப மனவருத்தத்தோடு திரும்பியவன் கண்களைப் பார்த்து மா ஜி வற்புறுத்திக் கேட்டபிறகு, நடந்ததைச் சொல்லி அழுதானாம். பிதா ஜிதான் மற்ற பொண்களுக்கு இது தெரியவேணாம் என்று சொல்லிச் சமாதானம் செய்தார்.


இது நமக்குள்ளே ரகசியமாகவே இருக்கட்டும்.


பயணம் தொடரும்.........................

28 comments:

said...

போன பதிவில் ஹை ஜாலின்னு சொன்னதுக்கு திட்டினீங்க. ஆனா அப்படித்தானே இருக்கு இந்தப் பதிவு. சரி அடுத்த பதிவில் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.

said...

கனகா வீட்டு வேலைகளைக் கத்துக்கலையா.... பேசாம எல்லாருக்கும் சோத்த வடிச்சிப் போட்டு...சாம்பாரும் ரசமுமா ஊத்துனா... நீ மகராசி உக்காரும்மான்னு சொல்லீரப் போறாங்க. அவ்வளவுதானே :)

பிஜ்யாவுக்கு மட்டும் ஏனிப்படியோ.. ம்ம்ம்ம். முருகா காப்பாத்துப்பா.

said...

கனகா இப்படி பொறுப்பில்லாம இருந்தா எப்படி?

said...

கவனிச்சுக் கேட்டாப் புரியும்
எல்லா மொழிகளுக்கும் உள்ள பொதுவான கடப்பாடு.

Anonymous said...

//கனகா இப்படி பொறுப்பில்லாம இருந்தா எப்படி// ரிப்பீட்ட்டேய்!!! சீக்கிரம் கனகாவுக்கு பொறுப்பு வரவைங்க‌

said...

ஏம்ப்பா கொத்ஸ்,
கஸ்தூரிப்பொண்ணு மாங்குமாங்குன்னு வேலை செய்யுது. அது ஜாலியா இருக்கா?

என்னவோ போங்க.

said...

வாங்க ராகவன்.

இப்பத்தான் இட்டிலி, தோசை, சாம்பார்ன்னு வடக்கத்தியாளுங்க வந்து விழறாங்க. முந்தி இப்படியெல்லாம் இல்லைபோல இருக்கே.

சாம்பார் ரசம் வைக்கத்தெரிஞ்சா அந்தப் பொண்ணு வச்சிருக்காதா?

said...

வாங்க தங்ஸ்.

விளையாட்டுத்தனமா இருக்கு கனகா.

நாமளும்தான் போற இடத்துலே என்ன கஷ்டப்படப்போகுதோ, இங்கே நம்மூட்டுலெ செல்லமா இருக்கட்டுமுன்னு வளர்த்துடறோம்(-:

said...

வாங்க குமார்.

பாயிண்டைப் புடிச்சீங்க.

கவனம் முக்கியம்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

பொறுப்பு என்ன கடையிலா விக்குது? ரெண்டு கிலோ வாங்கிக் கனகாவுக்குத் தரலாம்.

'தனக்குத் தனக்குன்னா முடுக்காக் களை வெட்டுவானாம்' னு சொல்றதுபோல.....

தன்னுடையதுன்னு உரிமைவந்தா பொறுப்பு வருமோ?

அய்யய்யோ...வேற பழமொழி சொல்லி இருக்கணுமோ?

'தானாப் பழுக்காததை தடி கொண்டு அடிச்சா பழுக்க வைக்கறது?'

said...

நல்ல வேளையா பிஜ்யாவுக்கு நடந்ததுக்குப் புதுப் பொண்ணு வந்த நேரந்தான்னு கனகாவச் சொல்லலியே இன்னும்.....

said...

//துவிபாஷிஆனாள்; மொழிபெயர்ப்பாளி.//

அப்போ அங்கே போண்டா கிடைச்சிருக்கும்லெ.......

said...

வாங்க பாசமலர்.

அட! இப்படி ஒரு கோணம் இருக்கோ!!!

said...

வாங்க சிஜி.

ச்சும்மாக் கிடந்த சங்கை ஊதிக் கெடுக்கறது ஒருவேளை இப்படித்தானோ? :-)))))

said...

எப்பவும் நல்லதே நடக்க .. எல்லாரும் நல்லவங்களாவெ இருக்க..
சாத்தியமிருக்கா என்ன..
அப்படி இருந்தா வாழ்க்கையெப்படி நகரும்?கதை எப்படிவளரும்..

said...

\\\பாச மலர் said...
நல்ல வேளையா பிஜ்யாவுக்கு நடந்ததுக்குப் புதுப் பொண்ணு வந்த நேரந்தான்னு கனகாவச் சொல்லலியே இன்னும்.....\\

யப்பா எப்படி எல்லாம் யோசிக்கிறிங்க...சொன்னாலும் சொல்லும் இந்த உலகம் ;))

ம்ம்ம்ம்...அடுத்து என்னாவோ!!?

said...

கதை யதார்த்தமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது - ஏஏஏஏஏகப்பட்ட்ட்ட்ட்ட்டடடடடட கதா பாத்திரங்கள். நினைவில் வைத்துக் கொள்வது சிரமம். துளசிக்கு அபாட நினைவாற்றல்.

said...

said...
கதை யதார்த்தமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது - ஏஏஏஏஏகப்பட்ட்ட்ட்ட்ட்டடடடடட கதா பாத்திரங்கள். நினைவில் வைத்துக் கொள்வது சிரமம். துளசிக்கு அபாட நினைவாற்றல்//


இது!!!!!!!!!!!!!!என்ன அபார னு சொல்லலீருக்கலாம்:)
//
நல்ல வேளையா பிஜ்யாவுக்கு நடந்ததுக்குப் புதுப் பொண்ணு வந்த நேரந்தான்னு கனகாவச் சொல்லலியே இன்னும்//!!!
இதுதான் நம்ம ஊரில நடக்கும் நடந்து இருக்கு.

கனகா முழிச்சுக்கணும். சும்மா நடக்காது சம்சாரம்.பாவம் ஹரி.
எத்தனை நல்ல பிள்ளை.

said...

வாங்க முத்துலெட்சுமி

//எப்பவும் நல்லதே நடக்க .. எல்லாரும் நல்லவங்களாவெ இருக்க..
சாத்தியமிருக்கா என்ன.....//

அதே அதே.

மக்களில் முக்காவாசிப்பேர் நல்லது. கால் வாசி அவ்வளவு நல்லது இல்லைன்னு நானும் நினைக்கிறேன்

said...

வாங்க கோபி.

தமிழ்மணத்துலே இருந்திக்கிட்டா இப்படிக் கேட்டுட்டீங்க? :-)))))

said...

வாங்க சீனா.

ரெண்டு பக்கமும் சேர்ந்தா ஒரு பத்துப் பதினைஞ்சு குடும்பம் தேறும்.அதான்............

நீங்க கவலைப்படாதீங்க. ஷூட்டிங் சமயம் குடும்பத்துக்கு ஒரு கலர்ன்னு
கலர் கோடு கொடுத்துறலாம்.:-))))

said...

வாங்க வல்லி.

சம்சாரம் அது மின்சாரம் இல்லையோ:-))))

//.....இதுதான் நம்ம ஊரில நடக்கும் நடந்து இருக்கு....//

அட! இது என்ன கதை? எடுத்து விடுங்க ப்ளீஸ்.

said...

டீச்சர், ஸாரி.. ஒரு புத்தக வேலையில பிசியாயிட்டே. இன்னும் படிக்கலை. முழுவதும் படிச்சுட்டு பின்னூட்டம் இடறேன்.

said...

அதுவா துளசி,
எங்க கல்யாணம் முடிஞ்சு
ரெண்டு மாதம்.
மாமனாருக்கு கழுத்தில கட்டி.
சரியாப் போச்சு.
இருந்தாலும் என்னை சொன்னாங்க:)
உறவுகாரங்க.
மாமியார் அடக்கினாங்க அவங்களை!!!!

said...

http://yaadayaada.wordpress.com

நீங்க இதை ஒரு புத்தகமாக பொடலாம். குடும்ப கதையாக இருந்தாலும் நல்ல விருவிருப்பா இருக்கு! நன்றி!

said...

வாங்க ஆடுமாடு.

புத்தகவேலையா? அடிச்சக்கை.

விரைவில் வெளியிடுங்க.

நம்ம மக்கள்ஸ் எழுத்தைப் புத்தகமாப் பார்க்கறது ஒரு ஸ்பெஷல் சந்தோஷம்.

said...

வல்லி,

அந்தக் கட்டி தங்கக்கட்டியா?

இருந்திருந்தா மருமகளைப் புகழ்ந்திருப்பாங்க:-))))

said...

வாங்க yaadayaada.


உங்க பெயரை எப்படிச் சொல்ரது?இது என்ன துளசிக்கு வந்த சோதனை!!!!

ஆமாம். அது என்ன குடும்பக்கதையா இருந்தாலும்.......
'
குடும்பத்துலே இயற்கையான நிக்கழ்வுகள்தாங்க விறுவிறுப்பா இருக்கும்.

ட்ருத் இஸ் ஸ்ட்ரேஞ்சர் தேன் ஃபிக்ஷன்' இல்லையோ?

(ஹை...புத்தகம் வாங்க இன்னொரு வாசகர் ரெடி:-)