Wednesday, November 02, 2011

அட! இப்படி ஒரு பயனா!!!!!

ரீ ஸ்ட்டார்ட் என்ற பெயரில் ஆரம்பிச்சு வேலை நடந்துக்கிட்டு இருக்குன்னு சேதி கிடைச்சது. எட்டு மாசத்தில் இத்தனை பரபரப்பா செஞ்சு முடிச்சுட்டாங்கன்றதை நம்புவது கொஞ்சம் கஷ்டம்தான்!!!

நம்மூர் சிட்டி செண்ட்டர்லே கேஷல் ஸ்ட்ரீட் மால் என்பது ரொம்ப பிரசித்தமான இடம். சுற்றுலாப்பயணிகளும் உள்ளூர் மக்களும் இந்த இடத்தை ரொம்பவே கலகலப்பா வச்சுருப்பாங்க. நானும் சில சமயம் ச்சும்மானாச்சுக்கும் கிளம்பிப்போய் ஒரு மூணு மணி நேரம் சுத்திட்டு வருவேன். அதென்ன மூணு மணி கணக்கு? ( இப்போ ரெண்டு மணி நேரமாக் குறைச்சுட்டாங்களாம்) நகர மைய்யத்துக்குப் போகணுமுன்னா எனக்கு பஸ் பிடிச்சுப்போறதுதான் ரொம்பப்பிடிக்கும். பார்க்கிங் இடம் தேடி அல்லாட வேணாம். பஸ் எக்ஸ்சேஞ்சு மேலே அடுக்கு மாடி பார்க்கிங் இருக்குது. அங்கே காரைக்கொண்டு விட்டால் முதல் ஒரு மணி நேரத்துக்கு இலவசம். அடுத்து வரும் நேரத்துக்கு மணிக்கு ரெண்டரை டாலர் கொடுக்கணும்.

பேருந்துக் கட்டணம் மூணு டாலர் இருபது செண்ட்.($3.20) ரெண்டு மணி நேரத்துக்குள்ளே திரும்பி வந்துட்டால் அதே பயணச்சீட்டைக் காமிச்சுட்டு பயணிக்கலாம். கூடுதல் கட்டணம் இல்லை. நகரத்தின் வேற பகுதிகளுக்கு இன்னொரு வழித்தடத்துலே போகணுமுன்னாலும் அதே சீட்டில் பயணிக்கலாம். எல்லாம் அந்த ரெண்டு மணி நேரத்துக்குள்ளே இருக்கணும். நம்மூர்லே பாருங்க மக்கள்ஸ் எல்லாம் பொதுவா கார் வச்சுக்கிட்டு அங்கே இங்கேன்னு பறக்கறதால் பேருந்துகளுக்குப் பயணிகளை வரவழைக்க என்னெல்லாமோ சலுகைகள் கொடுத்துருக்காங்க.

அதுலே ஒன்னு டெபிட் கார்டு மாதிரி பஸ் கார்டு ஒன்னு. பத்து டாலர் கொடுத்து ஒரு கார்டு வாங்கிக்கிட்டால் ஒவ்வொரு முறை பேருந்தில் ஏறும்போது அங்கே வச்சுருக்கும் ஒரு ரீடர் மெஷீனில் நம்ம கார்டைக் காமிச்சவுடன் அது ரெண்டு டாலர் முப்பது செண்ட் ( $2.30) எடுத்துக்கும். ரெண்டு மணி நேரத்துக்குள் இதுலேயே சிட்டிக்குப்போய் குறிப்பிட்ட ஒரு வேலையை முடிச்சுக்கிட்டுத் திரும்பிடலாம். கூடுதல் நேரம் ஆயிருச்சுன்னா இன்னொரு $2.30 கார்டுலே இருந்து போயிரும். ஆனால்.... ஒரு நாளைக்கு ரெண்டு முறைக்கு மேலே காசு எடுக்காது. ஒரு முறை $4.60 எடுத்துக்கிட்டால்.... அன்றைக்கு முழுசும் இனி செய்யப்போகும் பயணங்கள் எல்லாமே இலவசம். சுற்றுலாப் பயணிகள் நாள் முழுக்க வெவ்வேற வழித்தடங்களில் பயணம் செஞ்சாலும் மெட்ரோ கார்டு நாலு அறுபதுக்கு மேல் காசு கழிச்சுக்காது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 4.60 கொடுத்துப் பயணம் செஞ்சவங்களுக்கு (அதான் $23 பேருந்துக்காசு கொடுத்துருப்பீங்களே)வார இறுதி சனி ஞாயிறு முழுசும் 48 மணி நேரம் முற்றிலும் இலவசமே இலவசம்.

கார்டுலே அஞ்சு டாலர் பாக்கி இருக்கும்போது அந்த ரீடர் மெஷீன் மஞ்சவிளக்குப்போட்டுச் சொல்லும். காசு ஒன்னும் இல்லைன்னா சிகப்பு விளக்கு. கார்டுலே காசு டாப் அப் பண்ணிக்கணுமுன்னா டிரைவர் கிட்டே காசு கொடுத்து செஞ்சுக்கலாம். (இங்கெல்லாம் வண்டிக்கு ட்ரைவர் மட்டும்தான். கண்டக்ட்டர் கிடையாது) தனியா காசு கொடுத்து டிக்கெட் வாங்காம கார்டு வச்சுக்கிட்டுப் பயணிச்சால் முதலில் கார்டு எடுத்துக்கும் $ 2.30க்கு முதல் ரெண்டு மணி நேரத்தில் எத்தனை பஸ்களில் வேண்டுமானாலும் ஏறிப்போய்க்கிட்டே இருக்கலாம்.

பதினெட்டு வயசுக்குக் கீழ் உள்ள பயணிகளுக்கு மேலே சொன்ன எல்லாத்துக்கும் அரை வாசி கட்டுனால் போதும். அஞ்சு வயசுக்குக் கீழேன்னா (பெரியவங்க யாராவது கூட வரும் பட்சத்தில் ) கட்டணமே இல்லை! ( இங்கே 15 வயசுவரை பிள்ளைகளைத் தனியா விடமுடியாது. குறைஞ்சபட்சம் பேபி சிட்டராவது இருக்கணும். நோ ஹோம் அலோன் அலௌட்.பதினெட்டு ஆச்சுன்னா பசங்க தனியா ஃப்ளாட் வாடகைக்கு எடுத்துக்கிட்டுப் போயிடலாம். அது தனிக்கதை)

இவ்வளவு சலுகைகள் கொடுத்தும் பாதிக்குமேல் காலியாத்தான் பஸ் ஓடுது. சிலசமயம் நாம் ஒரே நபராக்கூட இருப்போம்.

நிலநடுக்கம் வந்து எங்க செண்ட்ரல் சிட்டி அழிஞ்சே போச்சு. நகர மைய்யத்துக்கு வரும் சாலைகளை எல்லாம் வேலி போட்டு அடைச்சுட்டாங்க. யாருக்கும் அங்கே என்ன ஆச்சுன்றது தொலைக்காட்சி காமிக்கிறதை வச்சுத்தான் தெரியவந்துருக்கு.

உயிரிழப்பு, பாரம்பரியம் உள்ள நல்ல கட்டிடங்கள் இடிஞ்சு விழுந்ததுன்னு பலவித நஷ்டங்கள் ஆச்சுன்னாலும் செண்ட்ரல் சிட்டி வர்த்தகம்தான் ஒரேடியா பாதிக்கப்பட்டுருச்சு. அதுலே முதலீடு போட்டு வியாபாரம் செஞ்சவங்களுக்கு இன்ஷூரன்ஸ் காசு கொடுத்தாலும் அங்கே வேலை செஞ்சுக்கிட்டு இருந்த தொழிலாளிகள் அனைவருக்கும் வேலை போயிருச்சே!

ஊர்மக்கள் எல்லாம் நகரமே கண்முன்னால் காணாமப்போனதால் மனசு ஒடைஞ்சு போயிட்டோம். நகரில் மீண்டும் கொஞ்சம் கலகலப்பைக் கொண்டு வரணுமுன்னால் கடை கண்ணிகள் வந்தால்தானே நடமாட்டம் இருக்கும்?
புதுமாலில் அங்கங்கே பூச்செடிகளை வச்சுக் கொஞ்சம் கண்ணுக்கும் விருந்து வச்சுருக்காங்க.

சிட்டி மாலை திரும்பக்கட்டி எழுப்பணுமுன்னா நிறைய வருசங்கள் ஆகும். இப்போ இருக்கும் நிலையில் யாரும் முதலீடு செய்ய முன்வரலை. அப்பத்தான் இந்த ரீ ஸ்ட்டார்ட் எண்ணம் வந்து இதைக் கண்டெயினர் மாலா ஆக்கிடலாமுன்னு வேலை நடக்க ஆரம்பிச்சு செஞ்சும் முடிச்சுட்டாங்க. முழு மாலையும் இல்லை. மூணுலே ஒரு பாகமுன்னு வச்சுக்கலாம்.
நாவ்வாலு கண்டெய்னர்களைப் பக்கம்பக்கமா அடுக்கி உள்புறம் வெட்டி எடுத்து ஒரு பெரிய அறையா மாற்றி உள் அலங்கார வேலை, தண்ணீர், மின்சார இணைப்புகள் எல்லாம் கொடுத்து, மாடி வேணுமுன்னா இன்னொரு கண்டெயினரை அதன் தலையில் ஏத்தின்னு இப்ப 61 கண்டெயினர்களை வச்சு பக்காவா ஒரு ஷாப்பிங் ஏரியா உருவாகிருச்சு.
அழிவுக்குப்பின் முதல்முறையா குடும்பம் நகரத்துக்குள்ளே வந்துருக்கோ?

நாலு நாளைக்கு முந்தி சனிக்கிழமை அதுக்குத் திறப்பு விழாவும் ஆச்சு. எங்கேயும் போக இடமில்லாத வெறுப்பில் இருந்த ஊர் மக்கள் கிடைச்ச சான்ஸை விடுவோமா? முதல் நாள் திருவிழா மாதிரி நகர இடமில்லை(யாம்) டிவியில் காமிச்சாங்க.
நாங்க மறுநாள் ஞாயிறு கிளம்பிப்போனோம். ஏவான் நதியின் மறுகரையில் ஒரு பார்க்கிங் கிடைச்சது. பாலத்தைக் கடந்தால் ப்ரிட்ஜ் ஆஃப் ரிமெம்பரன்ஸ். அதுக்கு நேரெதிரில் சிட்டி மால்.

Ripley's believe it or not vice president (archives and exhibitions) Edward Meyer வந்து பார்த்துட்டு, பாராட்டிப்பேசிட்டு படங்கள் எடுத்துக்கிட்டுப் போனாராம். அடுத்த வருச புத்தகத்துலே கண்டிப்பாப் போடவேண்டிய விஷயமுன்னும் சொல்லிட்டுப் போயிருக்கார். உண்மைதான்..... தலையை உயர்த்திப் பார்க்காதவரை இது கண்டெயினர் என்று நம்புவது கஷ்டம்தான்!
அம்மாவை எதிர்பார்த்து........செல்லங்களுக்கு உள்ளே அனுமதி இல்லை:(
மாலுக்கு நடுவே ட்ராம் பாதைக்கு ரெண்டு பக்கமும் தெற்கு வடக்குன்னு ரெண்டு பகுதியாப் பிரிச்சு கடைகளை உருவாக்கிட்டாங்க. கொஞ்சமா செலக்டட் கடைகள். இங்கிலாந்து பழைய ஸ்டைலில் ஒரு க்ரோஸரி ஷாப் எனக்குப் பிடிச்சது. நம்மது 'தெ மோஸ்ட் இங்லீஷ் ஸிட்டி அவே ஃப்ரம் இங்லாண்ட்' ஆச்சே:-)
ஏற்கெனவே அந்த ஸ்டைலில் இங்கே இருந்த பேலண்டைன் (Ballantynes) என்ற கடையின் ஒரு பகுதியை மட்டும் பெரிய Barn ஸ்டைலில் வச்சுருக்காங்க. அடுக்களைக்கான சின்னச்சின்னக் கருவிகள் மீது எனக்கு மோகம் என்பதால் அதைப் பார்வையிட்டேன். பீன்ஸ் வெட்டும் கருவி சரி. வாழைப்பழம் துண்டு போடும் கருவிதான் ஏமாத்தமாப் போச்சு. பழத்தை ஸ்லைஸ் மட்டும்தான் செய்யுது. நல்லா இருக்கே! அப்போ யார் உரிச்சுக் கொடுப்பாங்களாம்?
இந்தக் கடையின் மறுமுனை சரியா நகர மைய்யத்து சாலையில் இருக்கு. நகரைப் பார்க்க முடியாதபடி மரச்சட்ட வேலிபோட்டு அடைச்சுருக்காங்க. ஆனாலும் நகரம் இப்போ எப்படி இருக்குன்னு பார்க்கும் ஆர்வம் இருக்காதா? அதான்....... உட்கார அமைச்சிருக்கும் மேடையில் ஏறி கண்ணுலே எதாவது படுதான்னு பார்க்குது சனம்.
மரச்சட்ட வேலியின் இன்னொரு பக்கம் எங்க கதீட்ரலைப் பார்த்த மாதிரி இருக்கு, அந்த சட்டங்களுக்கிடையில் உள்ள இடுக்குகளில் கண்ணை வச்சுப் பார்த்தால்.................. இடிஞ்சு விழுந்த கோவில்................... அதென்னவோ ஒவ்வொரு முறை கதீட்ரலை நினைச்சாலும் பார்த்தாலும் அடிவயத்தில் இருந்து ஒரு துக்கம் கிளம்பி பந்து போல் நெஞ்சை அடைச்சு.................... என்னதான் அடக்கினாலும் பீறிவரும் கேவலையும் பெருகி வரும் கண்ணீரையும் அடக்கவே முடிவதில்லை:(
எனக்கே இப்படி இருந்தால் 'சம்பவம்' நடந்த சமயம் ஊரில் இருந்த மக்களுக்கு எப்படி இருந்துருக்கும்? கடவுளே..... கண்ணுக்கு முன்னால் ஒரு நகரம் அழிஞ்சு கிடப்பதைப் பார்க்கும்படி ஆச்சே............. மற்ற பயணங்களில் எதாவது அழிவுகள் நடந்த இடங்களைப் பார்க்கும்போது 'ஐயோ' என்ற ஒற்றைச் சொல்லுடன் கடந்து போயிருப்போம். இடாலி பொம்பெய் (Pompeii) அழிவுகளைப் பார்த்தது நினைவில் வந்து போச்சு.

எங்க நகரசபை, மக்களுடைய மனசைப் புரிஞ்சுக்கிட்டு இடிபாடுகளை அகற்றவும் பழுதான கட்டிடங்களை இடிச்சு எடுக்கவும் வெளிநாட்டு மக்களை ஏற்பாடு செஞ்சுருக்கு. எந்த விதமான எமோஷனல் அட்டாச்மெண்டும் இல்லாமல் அவுங்கபாட்டுக்கு வேலைகளை செஞ்சுக்கிட்டே இருக்காங்க.

பண்டிகைக்காலம் வேற சமீபிக்குது. மக்கள் கொஞ்சமாவது உற்சாகமா இருக்கணும். போனதைப்பற்றித் துக்கப்படாமல் வாழ்க்கையை முன்னோக்கிப் பார்க்கணுமுன்னு நகர சபை ஏற்படுத்தி இருக்கும் தாற்காலிக மால் சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்து இழுக்குமுன்னு நினைக்கிறேன். நகருக்கு வருமானமும் வேண்டித்தானே இருக்கு?
PIN குறிப்பு: எங்க ஐடியாவைத் திருடிட்டாங்கன்னு இங்கிலாந்தில் ஒருவர் புலம்பிக்கிட்டு இருக்காருன்னு ஒருநாள் தொலைக்காட்சியில் காமிச்சாங்க. மெய்யாலுமா??????


28 comments:

said...

Oops........ $ 2.30 என்பதை $ 2.40 ன்னு தட்டச்சிட்டேன். ஆனால் திருத்த விடமாட்டேங்குதே இந்த ப்ளொக்கர்:(

said...

//இங்கே 15 வயசுவரை பிள்ளைகளைத் தனியா விடமுடியாது. //

அடப் பாவமே!

//எங்க நகரசபை, மக்களுடைய மனசைப் புரிஞ்சுக்கிட்டு இடிபாடுகளை அகற்றவும் பழுதான கட்டிடங்களை இடிச்சு எடுக்கவும் வெளிநாட்டு மக்களை ஏற்பாடு செஞ்சுருக்கு.//

ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

//கன்டெய்னர் மால்//

நல்லா தான் இருக்கு!

said...

பஸ் கார்ட் பற்றி அழகாக விளக்கி இருக்கீங்க.
படங்கள் அருமை அதிலும் கண்டெயினர் மால் படங்கள் மிக அழகாக இருக்கு.

//ஊர்மக்கள் எல்லாம் நகரமே கண்முன்னால் காணாமப்போனதால் மனசு ஒடைஞ்சு போயிட்டோம்.//

சீக்கிரமே பழையபடி சந்தோஷம் திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.

said...

கண்டெயினர் மால் நல்ல ஐடியா. ஏறிப்போக படிக்கட்டும்
கட்டிட்டாங்களா. அழிஞ்சதைப் பார்க்க மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கும். இப்பதான் நாளோரு மேனிபொழுதொருவண்ணம் டர்க்கி, அங்க இங்கனு பூகம்பம் வந்துக் கிட்டே இருக்கேப்பா.
ஆனாலும் இவ்வளவு அழகா ரீகன்ச்ட்ரக்ஷனுக்கு வழி செய்தாங்களே, அவங்களைப் பாராட்டணும்.

said...

வாங்க தருமி.

15 வயசுக்கே பாவம் பார்த்தால் 18 வயசுக்கு என்ன சொல்லப்போறீங்க? இங்கே இன்று முதல் நாலு நாளைக்கு (நாலே நாள்) பட்டாஸ் விற்பனை அரசு அனுமதிச்சு இருக்கு. எல்லாம் நவம்பர் 5 அன்று Guy fawkes Day வருதே அதுக்காக இந்த விற்பனை.

எல்லாம் புஸ்வாணம், கம்பி மத்தாப்பு, வானத்தில் போய் ஒளிச்சிதறல் ஆகும் வகைகள் மட்டும்தான். சப்தம் உள்ள வெடிகள் அனுமதிக்கப்படலை.

நாம் கொஞ்சம் கம்பி மத்தாப்பு, Boom Box ன்னு கொஞ்சம் வாணவேடிக்கை வாங்கி வந்தோம். கம்பி மத்தாப்பூவை அடுத்த தீபாவளிக்கு எடுத்து வச்சுக்கணும். அன்னிக்கு ஓசைப்படாம வீட்டுத் தோட்டத்தில் கொளுத்தி பண்டிகையைக் கொண்டாடணும்

ஆனால் 18 வயசுக்குக் கீழே இருப்பவர்கள் பட்டாஸ்களை வாங்கிக்க முடியாது. No sale of Fireworks if you are under 18.

இது எப்படி இருக்கு?

said...

வாங்க ராம்வி.

பிரார்த்தனைகளுக்கு நன்றி. மனசை உற்சாகப்படுத்திக்கத்தான் வேணும்.

said...

வாங்க வல்லி.

கட்டாயம் மனதாரப் பாராட்டத்தான் வேணும்ப்பா.

பூமி மாதா அடங்க மாட்டேங்கறாளே:(

said...

கண்டெய்னர் மால் அருமையான ஐடியா.. இங்கேயும் சில பில்டர்கள் அவங்களுக்கான சைட் ஆப்பீஸை இப்படித்தான் உருவாக்கறாங்க. உள்ளே ஏசி, ஃபர்னிச்சர்ன்னு பக்காவா இண்டீரியர் செஞ்சுக்கறாங்க. வெளியே வந்து பார்த்தாத்தான் தெரியுது அது கண்டெய்னர்ன்னு. அடுத்த ப்ரொஜெக்ட் செய்யும்போது இந்த கண்டெய்னர் வண்டியில ஏறி அங்க போயிடும்.

//வாழைப்பழம் துண்டு போடும் கருவிதான் ஏமாத்தமாப் போச்சு. பழத்தை ஸ்லைஸ் மட்டும்தான் செய்யுது. நல்லா இருக்கே! அப்போ யார் உரிச்சுக் கொடுப்பாங்களாம்?//

எங்கிட்டயும் முட்டையை ஸ்லைஸ் செய்யற கருவியொண்ணு இருக்குது. யாராவது முட்டையை அவிச்சு, தோலுரிச்சுக் கொடுத்தா ஸ்லைஸ் செய்யலாம்ன்னு இருக்கேன்.. பார்க்கலாம் ;-)

said...

இந்த பஸ் கார்டு மாதிரி எங்கூர்ல ட்ரெயினுக்கு டூரிஸ்ட் பாஸ் கொண்டாந்துருக்காங்க. ஒரு நாள் ரெண்டு நாள் மூணு நாள்ன்னு விதவிதமா இருக்கு. ஒரு நாளுக்கான பாஸ் ஜஸ்ட் அம்பது ரூபாய்தான். எந்த ட்ரெயினில் வேணும்ன்னாலும், எத்தனை தடவைகள் வேண்ணாலும் பயணிக்கலாம்.. வெளிநாட்டுக்காரங்களை எங்கூருக்கும், ட்ரெயின் சவாரி காமிக்கவும் சுற்றுலாப் பயணிகளை இழுக்கும் முயற்சி இது :-)

said...

இயற்கைப் பேரழிவு என்பது நம் கட்டுப்பாடுகளையெல்லாம் தாண்டியது. நம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் இயற்கை செய்வதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. வலிதான். மருந்து இல்லாத வலி. இயற்கையே எங்கள் குற்றங்களை மன்னிப்பாயாக!

இந்தப் பதினஞ்சு வயசுப் பிரச்சனை மேற்கத்தியப் பண்பாட்டில் உள்ளதுதானே. நெதர்லாந்தில் பணி புரிந்த பொழுது ஒரு டச்சம்மா குடும்பத்தைப் பற்றி ஊரைப்பற்றியெல்லாம் கேள்வி கேட்டார். ஊரைப் பற்றிச் சொன்னதும்... பெற்றோர் இருக்கும் ஊர் எவ்வளவு தூரம் இருக்கும் என்று கேட்டார். பெற்றோர் பெரும்பாலும் என்னோடுதான் இருப்பார்கள் என்று சொன்னேன்.

அவரால் வியப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் படித்து வேலைக்கு வேறு ஊருக்கு வரும் வரை பெற்றோரோடு இருந்தேன் என்பதே அவருக்கு வியப்பு.

what do you for privacy? என்று கேட்டார். It is difficult to be without parents than being without privacy for most of the Indians. இப்படி ஒரு பதிலைச் சொல்லிச் சமாளித்தேன். பிறகு அவர் ரொம்ப நேரமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தார்.

இவர் இப்படியென்றால் இன்னொருவர் வேறு மாதிரி. கூடப்பிறந்தவர்கள் எத்தனை பேர், என்ன செய்கிறார்கள் என்பது போன்ற கேள்விகளைக் கேட்டார். சகோதரிகளுக்குத் திருமணம் ஆனதைப் பற்றிச் சொன்னேன். இந்தியாவில் திருமண வீட்டில் சாப்பாடு போடுவார்களாமே, உண்மையா? உங்கள் வீட்டிலும் போட்டீர்களா? என்று கேட்டார். ஆமாம். சாப்பாடு போட்டோம் என்றேன். எத்தனை பேர் வந்திருந்தார்கள் என்று அடுத்த கேள்வி. ஒரு ஆயிரத்தைனூறிலிருந்து இரண்டாயிரம் இருக்கும் என்றேன். அவரால் அதற்கு மேல் யோசிக்கவே முடியவில்லை. You fed 1500 people? Are you from any royal family of India? இப்படிக் கேட்டார். ஆயிரம் பேர் திருமணத்திற்கு வருவதே அவர்களுக்கு மிகப் பெரிய விஷயம். இதில் அவர்களுக்குச் சாப்பாடு வேறு. நெதர்லாந்தில் அவர் அழைத்தால் ஆயிரம் பேர் திருமணத்திற்கு வர மாட்டார்கள் என்பது ஒன்று... அப்படி வந்தாலும் அவர்களுக்கு உணவிட்டால் அவர் ஓட்டாண்டியாகி விடுவார் என்பதும் உண்மை.

said...

Ripley's believe it or not vice president (archives and exhibitions) Edward Meyer வந்து பார்த்துட்டு, பாராட்டிப்பேசிட்டு படங்கள் எடுத்துக்கிட்டுப் போனாராம். அடுத்த வருச புத்தகத்துலே கண்டிப்பாப் போடவேண்டிய விஷயமுன்னும் சொல்லிட்டுப் போயிருக்கார்/

நியூஸி புதிதாக மலரட்டும்!

said...

அழகான நாட்டுக்கு கண் பட்டாற் போல ஒரு சோதனை.
ஆனால் அந்த ஆட்சியாளர்களை பாராட்ட வேண்டும்,நேர்த்தியாக புனர்நிவாரணம் செய்வது வியப்பாக உள்ளது.

said...

அட சூப்பர் ஐடியா ;-)

said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

said...

// எங்க ஐடியாவைத் திருடிட்டாங்கன்னு இங்கிலாந்தில் ஒருவர் புலம்பிக்கிட்டு இருக்காருன்னு ஒருநாள் தொலைக்காட்சியில் காமிச்சாங்க. மெய்யாலுமா??????//

ஆதிலே மனுசன்னு ஒத்தன் உண்டான காலத்துலேந்து இன்னி வர்ற ஏழு ஐடியாதான் இருக்கு.
அதாவது ஏழுவிதமான கருத்துக்கள் . ஏழுவிதமான மனிதர்கள், ஏழுவிதமான கடல்கள், வானங்கள்,
பட்சிகள், மிருங்கள். மற்றதெல்லாமே இந்த ஏழுவோட ஸப் டிவிஷன்ஸ் தான்.

அதே மாதிரி ஏழுவிதமான கற்பனைகள் தான் உண்டு. மற்ற வையெல்லாமே இந்த ஏழுவித‌
கற்பனைகளை கூட்டி, குறைச்சு, பெருக்கி வகுத்து , நம்மது அப்படின்னு சொல்வது தான்.

அதனாலே காபி ரைட்டு, எங்க ஐடியாவைத் திருடிட்டான்னு யாரு சொல்றதும் சரின்னு
தோணல்ல...

நல்ல வேளை, கம்பனும், வள்ளுவனும் காபி ரைட்டுன்னு ஒண்ணு வாங்கி வச்சுக்கல்ல...

மீனாட்சி

said...

மீண்டும் புத்துயிர் பெறுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடரட்டும் அவர்கள் பணி.

said...

எத்தனை இடர் வந்தாலும் மனிதன் தன் முயற்சியால் இயற்கையை வெல்லவே முற்படுவான்.

இதுவொரு வரலாற்று பகிர்வும் கூட!

said...

நல்ல வர்ணனை.

said...

வாங்க அமைதிச்சாரல்.

நான் முட்டையை அவிச்சுத் தரலாமுன்னா...... முடியாது போலிருக்கே!கொலஸ்ட்ரால் அளவு கூடிப்போயிருக்குன்னு டாக்குட்டரம்மா சொல்றாங்க:(

டூரிஸ்ட்டுகளுக்கு வசதி செஞ்சு கொடுத்தால்தான்ப்பா நாட்டுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். உங்க அரசுக்கு எங்கள் பாராட்டுகள்.

said...

வாங்க ஜீரா.

வெள்ளையர்களுக்கு இன்னும் நம்மேல் உள்ள வியப்புகள் போகலை. நேத்து டாக்குட்டர் விஸிட் போனப்ப..... என்ன கோல்ட் எல்லாம் நிறையப்போட்டுருக்கே! ஏதும் விசேஷமான்னு கேட்டாங்க. ஆமாம்....ஃபெஸ்டிவல் ஆஃப் லைட் வந்துச்சுன்னேன்.

போட்டுருந்த நகை வெறும் தாலிச்செயின்தான். அடுத்தமுறை வேணுமுன்னா காசு மாலை போட்டுக்கிட்டுப் போகலாமான்னு ஒரு எண்ணம்:-))))))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

கிறைஸ்ட்சர்ச் நகரத்துக்கு உங்கள் ஆசிகள் வேணும்.

கதீட்ரலைத் திருப்பிக்கட்ட அம்பது மில்லியன் பட்ஜெட் இப்போதைக்கு!

said...

வாங்க வெற்றிமகள்.

ஆட்சியாளர்கள் தினம் சொல்லடி பட்டுக்கிட்டு இருக்காங்க. உள்ளூர் மக்கள், குறைகள் தீர்க்கப்படலைன்னு சாட்டிக்கிட்டே இருக்காங்க கையில் எடுத்த சாட்டையுடன்!

இன்னும் ரெண்டு வாரத்துலே தேர்தல் வருது. எதிர்க்கட்சிகள் தூபம் போடுவதும் அதிகரிச்சு இருக்கு:(

said...

வாங்க கோபி.

பாராட்டிய நல்ல உள்ளம் வாழ்க!!!!!!

said...

வாங்க உலக சினிமா ரசிகன்.

நூலகத்தைப் பொறுத்தவரை அம்மா செய்வது அட்டூழியம்:(

said...

வாங்க மீனாட்சி.

ஆஹா.... ஏழுன்னா ஏழுதான்!!!!! இதை ஏழு கடல்தாண்டி இருந்து சொல்றேன்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

said...

வாங்க மாதேவி.

அருமை, ஆஹா, ஓஹோன்னு நாம் சொல்லி ஊக்குவிக்கணும்தான்:-)

நன்றிப்பா.

said...

வாங்க சத்ரியன்.

இந்த வருசம் பிறந்த குழந்தைகளுக்கு இப்படி ஒரு நகர அமைப்பு முந்தி இருந்ததுன்னு வரலாறுதான் சொல்லணும். சொல்லும்.

வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்.

said...

வாங்க டாக்டர் ஐயா.

வருகைக்கு நன்றி.