Thursday, January 25, 2007

தில்லி ச்சலோ




லேசான பனிமூட்டத்துக்கிடையே தில்லி விமானம் தரையைத் தொட்டது.அப்பாடா..... என்ன ஒரு ஆசுவாசம். பின் ஸீட்டுத் தொணதொணப்புலே இருந்துஎப்படியாவது தப்பிச்சு ஓடிரணும்.......


அமெரிக்கா ரிட்டர்ன் அன்பர், அமெரிக்கக் கனவு காணும் தோழரைக் 'கப்'ன்னுபிடிச்சுவச்சு, கனவுகளை விதைச்சு வெள்ளாமை அள்ளிக்கிட்டு இருந்தார். கண்கள்விரிய அந்த அப்பாவி(!) நண்பரும் கேட்டது கேட்டபடி. வாய் மட்டும் கொஞ்சம் பிளந்தமாதிரி இருந்துச்சு. வழக்கமாச் சரியாக் கேக்காத என் காதுகளுக்கு அன்னிக்குன்னு கெட்ட நேரம்.என் பக்கத்துலே இருந்த கோபாலுக்குக் கழுத்துலே இருந்து ரத்தம் கொட்டறமாதிரி தோணுச்சு.'போதும்டா... கொஞ்சம் நிறுத்தேன்'ன்ற மாதிரி ஒரு ஹீனப் பார்வையை அனுப்புனார். அன்பர் அதையெல்லாம் கவனிக்கற மூடுலே இல்லை. தன்னுடைய கருத்துக்களை ஆணித்தரமாச் சொல்லணுமுன்னு( இல்லாட்டா கனவுக்காரர் தூங்கிருவார்னு பயம் போல இருக்கு) அடிச்சுப் பேசிக்கிட்டே இருந்தார். என் இருக்கை முதுகுக்குப் பின்னால் இருக்கும் அவரோட சாப்பாட்டு ட்ரேயை, ஒருவேளை இந்த மாதிரி அடிச்சே உடைச்சிரலாமுன்னு அவருக்கு அப்படி ஒரு வெறி.


"சிகாகோவுலே ரன்வேயிலே ப்ளேன்கள் 20 நிமிஷம் வரிசையில் காத்துக்கிடக்கும். இந்த ஜெட் ஏர்வேஸ் ப்ளேன்......இதெல்லாம் இங்கேதான் பிரமாதம். அங்கே வந்து பார்க்கணும்....."


இத்தியாதிகள்.................


எனக்கும் காதுலே இருந்து ரத்தம் துளித்துளியாச் சொட்ட ஆரம்பிச்சது........... லேசாத் திரும்பிப் பார்த்தேன். என் பார்வையைச் சந்திச்ச உணர்வு கூட இல்லாமல் 'மகிமை'யில் அளப்பு.


அவருக்கு பயந்து, அடுத்த பஸ்ஸில் கட்டடம் வந்தோம். அய்யகோ........ இதோ நம்முன்னாலே அதே 'கட்டம் போட்டச் சட்டை'

'என்னாலே இதுக்குமேலே ஒரு வினாடிகூட முடியாது. தலை தொங்கிரும். பெட்டியை அப்புறமா எடுக்கலாம். அந்த ஆள் மொதல்லே வெளியே போகணும். பெட்டி கிடைக்கலைன்னாலும் பீடை போச்சு'ன்னு இவர் எதிர்ப்புறமா ஓடறார்:-)


தூணுக்குப் பின்னே இருந்து ஒளிஞ்சு பார்த்தேன். ஹைய்யா.........விடுதலை.


ஹோட்டலுக்கு ஒரு முப்பத்தைஞ்சு நிமிஷக் கார்ப்பயணம். அறை அமர்க்களமா இருந்துச்சு. ஐய்யோ...... இதென்ன ஒரு 'ஸீ த்ரூ விண்டோ' படுக்கைஅறைக்கும் பாத்ரூமுக்கும் இடையிலே! கஷ்டகாலம்டா........... நல்லவேளை ஒரு 'புல் டெளன்' கர்ட்டன் இருக்கு! பிழைச்சோம்.


பஃபே ப்ரேக்ஃபாஸ்ட். கல் இட்டிலி, குட்டி ஊத்தப்பம், சாம்பார், சட்னின்னு தென்னிந்திய உணவுகூட இருக்குன்னு படாப் பெருமையோட வச்சிருந்தாங்க. தோசை வேணுமுன்னா செஞ்சு தருவாங்களாம்.ப்ரைடு ரைஸ், ச்சிக்கன் கறி, பிட்ஸா, நூடுல்ஸ் வகைகள், ப்ரெட் அண்ட் பேஸ்ட்ட்ரீஸ்ன்னு ஏராளம்.ஆனா எதுவுமே வாயில் வைக்க வழங்கலை. ( இங்கே சரவணபவன் இருக்காமே. முதல்லே அதைக்கண்டுபிடிக்கணும்)


எட்டுமணிக்கு இவர் ஆஃபீஸுக்குக் கிளம்புறார். இனி என் ராஜாங்கம். இந்த முறையாவது மொதல்லே லக்ஷ்மிநாராயணன் கோயில் போகலாம்னு புறப்பட்டேன். இதுக்கு முந்தி இந்த ஊருக்கு வந்தது 94-ல். தெரியாத்தனமா ஜூனில். பொன் வறுவலா வறுபட்டுத் திரும்புனோம். அப்போ ஊர்சுத்திப் பார்க்கக் கிளம்புனவுடன்,முதல்லே கோயில்ன்னு முடிவு செஞ்சு, 'பிர்லா மந்திர் போங்க'ன்னு பஞ்சாபி டாக்ஸி ஓட்டுனரிடம் சொன்னதும், சரின்னு தலையை ஆட்டிட்டு அவர் கொண்டுபோய் விட்ட இடம் ஹுமாயூன் டோம்ப்.


பிர்லாவால் கட்டப்பட்ட லக்ஷ்மிநாராயணன் கோவில் இந்த பன்னிரெண்டரை வருஷத்தில் அப்படியேதான் இருந்துச்சு. ஆனா ஏகப்பட்ட கெடுபிடிகள். செல்பேசி, கேமரா எல்லாத்தையும் வாங்கி வச்சுக்கிட்டாங்க. அப்புறம் எலெக்ட்ரானிக் கேட். பரவாயில்லை. எப்போ குண்டு( என்னைச் சொல்லலை) எந்த ரூபத்தில் வருமுன்னு அவுங்க பயம் அவுங்களுக்கு. அதுக்கப்புறம் 'உடல்தடவல்'தான் கொஞ்சம் அசிங்கமா, சொல்லப்போனா ஆபாசமா உணர்ந்தேன்.


கோயிலுக்குள்ளில் மாற்றமே இல்லாததால் படம் எடுக்க முடியாதது ஒரு குறையாத் தெரியலை. அதான் போனமுறை நிறைய எடுத்தாச்சே. வெளியே வந்ததும்தான் கவனிச்சேன், தொட்டடுத்து ஒரு புத்தர் கோயில். ச்சின்னக் கோயில்தான். பக்கத்துக் கோயிலின் ஆரவாரம் ஏதும் பாதிக்காத நிலை. படு அமைதி. உள்ளெ யாரும் இல்லை,புத்தரைத்தவிர. ஏகாந்த சேவை!


அடுத்து கரோல்பாக். அஜ்மல்கான் ரோடின் அழுக்கு சந்துகளில் அலைஞ்சேன். பகல் பன்னிரெண்டு மணிக்குச் சாவகாசமாகக் கடை திறக்கும் சோம்பல், கடைவாசலில் ச்சும்மா ஒரு கால் வாளித் தண்ணியை ஊத்தி நானும் வாசலைக் கழுவினேன்ன்னு பாவ்லா காமிக்கும் கடைப்பையன்கள், கண்ணும் கருத்துமா தங்கக் கம்பியில் கிறிஸ்ட்டல் மணிகளைக் கோர்த்து முடுக்கும் இளைஞன் ( பெயர் காலா), இன்னொரு சந்தில் ஸ்டூல் மேலே அடுக்கி வச்ச அழுக்கு நிற டப்பாக்கள். அதுக்குப் பக்கத்தில் ஒரு செம்புப் பாத்திரத்தில் துப்பட்டாத் துணிகளுக்குச் சாயம் போடும் ஆள், எல்லாம் பார்க்க ஒண்ணுபோலவே இருக்கும் நிறமே தெரியாத டப்பாக்களிலே இருந்து டக்னு ஒரு சிட்டிகை அழுக்குப்பொடி எடுத்துத் தூவறார். மாயாஜாலம்போல அழகான கலர் வருது.


தலை இடிச்சுக்காம குனிஞ்சு ஒரு கடைக்குள்ளெ நுழைஞ்சு பார்த்தால் ஆக்ஸிடைஸ்டு செஞ்ச அசல் தங்க, வைர நகைகள். 'அப்பா வரும்வரை கடையைப் பார்த்துக்குவேன், அதுவும் இந்த மாசம் கடைசி வரைதான். அடுத்தமாசம் 'கிங்ஃபிஷர்'லேவேலைக்குச் சேரப்போறேன்'னு சொன்ன இஞ்சிநீயரிங் முடிச்ச சேட்டுப் பையன், என்னைப் பார்த்ததும் ஒரு பாலாஜி பெண்டண்ட்டைக் காமிச்சார். வைரமா இழைச்சிருந்தது. விலையும் அதிகமில்லை, வெறும் ரெண்டரை லட்சம்தான்:-) தினமும் லகரங்களில் வியாபாரம் நடக்கும் ச்சின்னக் கடைகள் இருக்கும் சந்துக்கு 'டயமண்ட் தெரு'ன்னு பெயர்.


அங்கே இருந்து திரும்பி வர்ற வழியில் விண்ணையும் மண்ணையும் தொடற அளவுலே ஒரு ஹனுமான் சிலை.இன்னும் செஞ்சு முடியலை. 'நான் தில்லி வந்த நாளாப் பார்க்கறேன். இன்னும் கட்டி முடியலை'ன்னு சொன்னகார் ஓட்டுனரைக் கேட்டேன், 'வந்து எத்தனை நாளாச்சு?' இது பத்தாவது வருஷமாம்!


பிரிட்டிஷ்காரர்களின் ஸ்பெஷாலிட்டியான 'ரவுண்ட் அபெளட்'கள் நகரமெல்லாம் சிதறிக்கிடக்கு. தெருக்களில் போக்குவரத்துக்கு லேன்கள் இருந்தாலும் அதையெல்லாம் கண்டுக்காமல் வரும் கார்கள், ஆட்டோக்கள். பின் பக்கமோ, இல்லை பக்க வாட்டிலோ அடிபடாத கார் வச்சிருக்கறவங்களுக்கு ஒரு பரிசுகூட கொடுக்கலாம். ட்ராஃபிக் லைட் பச்சையா மாறக்கூடாதுன்ற ஏக்கத்தோடு, கார் ஜன்னலைத் தட்டி பிச்சை கேட்கும் பெண்கள், கைக்குழந்தையோடு நிதானமா குறுக்கே நடமாடுறாங்க.


ஜன்பத் ஏரியாவில் ஒரு சுத்து. ராஜ்பாத் வந்தேன். இண்டியா கேட், மசமசன்னு பனிப்புகையில். இப்பெல்லாம் அங்கே காரை நிறுத்தவே கூடாதாம். அப்படி ஒரு கெடுபிடி. குடியரசு தின விழாவுக்குத் தயாராகும் அவசரம். பச்சைக் கலர்ஸ்டீல் ஃப்ரேம்கள் வச்சு கேலரி இருக்கைகள் அடுக்கடுக்காக் காத்திருக்கு. டிக்கெட் விற்பனையும் தொடங்கிருச்சு.


நார்த் விங், சவுத் விங், குடியரசுத் தலைவர் நம்ம கலாம் மாளிகை, பார்லிமெண்ட் கட்டிடம்னு சுத்திவந்தப்ப, இதுதான் சோனியா காந்தியின்'வீடு'ன்னு சொன்னார் ட்ரைவர். பிரதமர் பங்களாவைக் கடந்து போனேன். படு சுத்தமாப் பளிச்சுன்னு இருக்கும் தெருக்கள். இன்னொரு சாலையில் ரெண்டு பக்கமும் அடர்த்தியான நாவல் மரங்கள். உள்ளூர் மரங்களை நட்டு, நகரத்தைப் பசுமையா வச்சுக்குங்கன்னு சொல்லும் மாநகராட்சி விளம்பரங்கள் ஒரு பத்துப் பதினைஞ்சு மரங்களோட பட்டியலைப் பேனரில் பதிச்சு வச்சுருக்கு. அதுலே இந்த மரமும் இருக்கு.


ஒருநாள் ராஜ் பாத்தில் குதிரைவீரர்களின் அணிவகுப்பு. போனாப் போகட்டுமுன்னு அஞ்சு நிமிஷம் நின்னு பார்க்க அனுமதி கிடைச்சது. அடுத்தபக்கம் சிகப்பு உடை அணிஞ்ச ஒரு குழுவினர் பேண்ட் வாத்தியங்களோடு. மூணுமாசமா தினமும் வெவ்வேற குழுக்களின் அணிவகுப்பு ஒத்திகையாம். நாடு முழுக்க நேரடி ஒளிப்பதிவாகும் விழாவுக்கு கவனம் எடுத்துச் செய்யறதுதானே முறையும்கூட. இல்லையா?


ஆச்சு, நாளைக்கு இன்னேரம் விழா தொடங்கி நடந்துக்கிட்டு இருக்கும். 56 ( சரியா?)வது குடியரசு தினம் அமோகமாநடக்கட்டும். இங்கே தொலைக்காட்சியில் ஒரு பத்து வினாடியாவது( அதானே, இது என்ன இங்கிலாந்துலேயா நடக்குது? நாள் கணக்காத் திரும்பத் திரும்பக் காமிக்க) காட்டுவாங்கன்ற நம்பிக்கை இருக்கு. பார்க்கலாம்.


அனைத்து நண்பர்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்து(க்)கள்.


இன்னொரு சமயம் ஆறுதலா, தில்லியைப் பத்திக் கொஞ்சம் உங்ககிட்டே சொல்லிக்கணும். நிறைய விஷயம் இருக்கு.


29 comments:

Anonymous said...

அப்பா எங்க எழுதாம escape ஆயிடுவேங்களோன்னு நினச்சேன்.. 1 மாசமா ரொம்ப bore உங்க blog படிக்காம.. நான் முதல் பின்னூட்டம் குடுக்கனும்னு தான் முந்தைய பதிவுல comment போடல

said...

வந்துட்டேன். உள்ளேன் டீச்சர்.

said...

டீச்சர், ஒரு சந்தேகம். நாளைக்குத்தானே குடியரசு தினம்? நீங்க ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாட மாட்டீங்களே! ;-D

said...

வாங்க மீனாப்ரியா.

அடடா..... புல்லரிக்குது. எனக்கு இப்படி ஒரு வாசகி!!!!!!

Anonymous said...

"பின் பக்கமோ, இல்லை பக்க வாட்டிலோ அடிபடாத கார் வச்சிருக்கறவங்களுக்கு ஒரு பரிசுகூட கொடுக்கலாம்".....

நான் டில்லி சென்று வந்தவுடன் இதே வார்த்தைகளை தான் சொன்னேன் :)

said...

கொத்ஸ்,
ஆஜர் போட்டாச்சு.
இன்னும் ஏழரை மணிநேரத்துலே 26 பிறக்கப்போகுதுல்லே?

ப்ளொக்கர் படம்போடச் சொதப்புமேன்னு கவலை. என்னமோ அது இன்னிக்குச்
சமர்த்தா படங்களைப் போட்டுருச்சு. அதான் காற்றுள்ளபோதே..................

அப்புறம் இன்னொண்ணு. ஆகஸ்ட் 14 தேதி ராத்திரிதான் சுதந்திரதினம் கொண்டாடணும்:-))))

said...

இப்பிடியெல்லாம் எழுதறதாலத்தான் உங்க வலைப்பதிவு மதிப்பு $30,000க்கும் மேலே!! (உங்களோட 'மதிப்பு' நான் சொல்லித்தான் தெரியணுமா என்ன ? :O)

எடுத்து விடுங்க உங்க பயணக்கதைய!

Anonymous said...

உங்கள் பக்கம் திறக்கவே இவ்வளவு நேரம் ஆகிவிட்டது.
டெல்லி ஏதோ கொஞ்சம் முன்னேறி இருக்கிறதாக தெரிகிறதே?

Anonymous said...

//வடுவூர் குமார் said...
உங்கள் பக்கம் திறக்கவே இவ்வளவு நேரம் ஆகிவிட்டது.
டெல்லி ஏதோ கொஞ்சம் முன்னேறி இருக்கிறதாக தெரிகிறதே?//

தில்லியின் மானத்தைக் காத்ததற்கு நன்றி துளசி.

said...

டில்லிக்கு ராஜான்னாலும் டீச்சர் சொல்லைத் தட்டாதே அப்படீன்னு ஏன் எழுதாமப் போனாங்களோன்னு தெரியலைன்னே நெனைக்கிறதத் தவிர இப்ப வேறொன்னும் செய்ய முடியாது.

அந்த பிர்லா மந்திருக்கு நானும் போயிருக்கேன். எல்லாம் பளிங்குக் கல்லு. செருப்புகளையெல்லாம் சாக்குக்குள்ள போட்டு வெச்சாங்களா? பிர்லா மந்திரத்துல மட்டுமில்லை ஆக்ராவுல தாஜ்மகால், கோட்டை எல்லா எடத்துலயும் இப்படித் தடவித்தான் பாக்குறாங்க. என்ன செய்றது...செக்குருட்டி முக்கியம்ல.

ராஜபாத்தை படம் பிடிச்சுட்டீங்க போலிருக்கே. அப்படியே அப்துல்கலாம் கிட்ட போயி தமிழ் வலைப்பூக்களைப் பத்தியும் பேசியிருக்கலாமே. அவரும் ஒரு தமிழ் வலைப்பூ தொடங்கீருப்பாரு. ஹி ஹி. அப்படியே ரெண்டு மாசத்துல மூடீருவாரு.

ஓ! அந்தப் பையனுக்குக் கிங்பிஷர்ல வேலை கிடைச்சிருக்கா? அங்க செவசெவன்னு இருக்குறவங்களத்தான் வேலைக்கு எடுப்பாங்க. பிளைட்ல போகும் போது பாத்திருக்கேனே!

அந்த அமெரிக்க நார்த்திய அங்க என்ன பண்றாருன்னு கேளுங்க. டாக்கி ஓட்டிக்கிட்டிருப்பாரு. இல்லைன்னா கடை கண்ணி வெச்சிருப்பாரு. அது தப்புன்னு சொல்லலை. அதுக்கே இந்தப் போடுன்னா...பெரிய வேலை செஞ்சி இந்திரா நூயி மாதிரி வந்துட்டா!!!!!!!!!!!!

said...

படு அமைதி. உள்ளெ யாரும் இல்லை,புத்தரைத்தவிர// துளசி, அது தானே வேணும் :-)

said...

ஷ்ருதி,

வாங்க வாங்க.

நீங்களும் இதையே எழுதுனீங்களா?

அதாங்க 'பெரியமனுசங்க எல்லோரும்
ஒரே மாதிரி சிந்திப்பாங்களாமே':-)))))

ஹாஹாஹா

said...

ஷ்ரேயா,
உண்மைக்கும் 30,000$? அப்ப அதுலே இருந்து கொஞ்சம்
செலவுக்கு எடுத்துக்கலாமா? :-)))

உங்க பயணக்கதையை இன்னும் படிக்கலைப்பா(-:

said...

வாங்க வடுவூராரே.

நல்லாத்தாங்க முன்னேறி இருக்கு ஒரு பக்கம்.
அதோட மறுபக்கம்தான்............

said...

லட்சுமி,

தலைநகர் மானம் காப்பாடவால, காதா?

said...

வாங்க ராகவன்.

சாக்கு மூட்டையில் வைக்கலை. அது வேற இடத்தில் நடந்துச்சு. இங்கே இப்ப எல்லாம்
அடுக்குவரிசை ஷெல்ஃப் இருக்கு செருப்புக்கு:-)

எங்கே தலைவரைப் பாக்கறது? அவர்தான் தமிழ்நாட்டுக்குப் போயிருந்தாரே!

சேட்டுப்பையன் உண்மைக்குமே செவசெவன்னுதான் இருந்தான். நல்ல சிரிச்ச முகம்.
ஆண்ட்டி ஆண்ட்டின்னு கூப்புட்டுப் பேசினான்ப்பா. இன்ஸ்டண்ட் மருமான்:-)

அமெரிக்க அன்பரைக் கேட்கத் தவறிய கேள்வி- நீங்க அங்கே எங்கே வேலை செய்யறீங்க?

ஒருவேளை 'வலைபதியறேன்'ன்னு சொல்லி இருந்தா எப்படி இருந்துருக்கும்:-)))))

said...

உஷா,

வாங்க. அதான்ங்க நான் உள் அமைதி தேடும்போது, இங்கே என் தலையை
உருட்டி விளையாடுதுங்க மக்கா.

Anonymous said...

//இதுதான் சோனியா காந்தியின்'வீடு'ன்னு சொன்னார் ட்ரைவர். பிரதமர் பங்களாவைக் கடந்து போனேன். //
அக்கா!
நீங்க சோனியா காந்தி வீட்டின் பின் பிரதமர் மன்மோகன் சிங் பங்களாவைத் கடந்து சென்றதைத்தானே கூறுகிறீர்கள்.
ஏன்? கேட்டேனா! சிலர் சோனியா தான் பிரதமர் என்கிறாங்க!
விமானத்தில் மிக அறுத்துவிட்டார். பின்னிருக்கை அன்பர்...
யோகன் பாரிஸ்

said...

துளசி, டெல்லி யெல்லாம் இருக்கட்டும். பிளேன் கீழே இறங்கினதுலே இருந்து இதுவரை என்ன நடந்ததுனு விவரமா 40
பதிவு போடணும்.
ஆமாம் கறாராச் சொல்லிட்டேன்.

அதென்ன உங்களைப் பார்த்ததும் பாலாஜி பென்டந்த்தைக் காட்டினான் அந்தப் பையன்?
பார்த்தாலே தெரியுமா ஏடுகொண்டலவாடா பக்தைனு:-)
நம்ம ஊருத் தலைவர் வருத்தப் பட்டாரம், நீங்க வந்துட்டுப் போன சேதி கேட்டு.
குடியரசு தின வாழ்த்துகள் உங்களுக்கும்.

Anonymous said...

//இங்கே சரவணபவன் இருக்காமே. முதல்லே அதைக்கண்டுபிடிக்கணும்//

கன்னோட் ப்ளேஸ்ல ஒன்னு, ஜன்பத் ரோட்ல ஒன்னு இருக்கு டீச்சர்.

கரோல் பாக்ல ஒன்னு இருக்குனு கேள்வி பட்டிருக்கேன்..போனதில்ல..

said...

வாங்க யோகன்.

//சிலர் சோனியா தான் பிரதமர் என்கிறாங்க!//


அடடா..இப்படி பிட்வீன் த வார்த்தைகள் ............

said...

வல்லி வாங்க வாங்க.

இப்படி 40 எழுதலாம்தான் அவ்வளவு விஷயமும் இருக்கு. ஆனா
மக்கள்ஸ் அடிக்க வந்துருவாங்கப்பா:-)

அங்கங்கே நம் மக்கள்ஸ் 'திகில்'லே தவிக்கிறாங்களாம்:-)

said...

வாங்க கப்பி பய.

கன்னாட் ப்ளேஸ்லே P15 லே இருக்கறதுதாங்க நல்லா இருக்கு. ஜன்பத் சுமார்தான்.
கரோல்பாக்லே போலிஸ் ஸ்டேஷன் பக்கத்துலே இருக்காம். நானும் போகலை.

பனானா லீஃப் போயிருந்தோம், நானும் இன்னொரு வலைப்பதிவரும். அங்கேயும்
ரொம்ப சுமார்தான்.

Anonymous said...

அப்பாடி!! அதுக்குள்ள 2 பதிவு.
பின்னூட்டம் போட ப்ளாக் ஒரே தடங்கல் பண்ணீடே இருக்குது. இனி நிறைய பிரயாணக்கதகள கேக்கலாம்னு சொல்லுங்க.

said...

துளசி அக்கா,


டெல்லி பிர்லா மந்திர் / ஆர்.கே. புரம் மலைமந்திர் எல்லாம் பழசு.

புதிய அக்ஷர்தாம் ஸ்வாமிநாராயணன் கோவில் போனீங்களா?

சிமிண்ட், கான்க்ரீட் பயன்படுத்தாம ஒரிஜினல் இந்தியப் பாரம்பரிய ஸ்தபதி சாஸ்திரப்படி கட்டப்பட்ட மிகப்பெரிய இந்துக் கோவில்-கலை-பண்பாட்டு மையம். 2005ல் அப்துல்கலாம் திறந்துவைத்தார்.

மிஸ் பண்ணியிருக்கமாட்டீங்க.

புதுதில்லி கொஞ்சம் பராக்கு பாக்க வைக்கும். பழைய தில்லி..அய்யோ பாபோய் நாகு ஒத்துரான்னு ஓடவைக்கும் :-))

said...

அக்காவ் வணக்கம்!!!!
தாமரைக்கோவிலு என்ன பாவம் செஞ்சுது? கொஞ்சம் அதுக்கும் ஹலோ சொல்லிருக்கலாமுல்ல?

சரி, சரி..... மேலே படிக்கிறேன்

said...

வாங்க சின்ன அம்மிணி.

மனசுக்குள்ளே இந்தப் பயணத்தைப் பத்தி மட்டும்
ஆயிரம் பதிவு போட்டாச்சு:-)

உங்களையெல்லாம் 'சோதிக்க' விரும்பாததால் கொஞ்சம் அடக்கித்தான்
வாசிக்கணும்:-)

said...

வாங்க ஹரிஹரன்.

//புதிய அக்ஷர்தாம் ஸ்வாமிநாராயணன் கோவில் போனீங்களா? //

பின்னே?

//மிஸ் பண்ணியிருக்கமாட்டீங்க//

460 யானைகள் இருக்கேப்பா:-)

said...

வாங்க கஸ்தூரிப்பெண்ணே.

//தாமரைக்கோவிலு என்ன பாவம் செஞ்சுது? கொஞ்சம்
அதுக்கும் ஹலோ சொல்லிருக்கலாமுல்ல?//

போனமுறை 'ஹலோ' சொல்லியாச்சு.
இந்த முறை 'புதியவர்'களுக்கு மட்டும்:-))))


அதுக்குன்னே ஒரு தனிப்பதிவு போடணும்.