Monday, December 01, 2025

நமக்கு நாளைக்குத்தான் அப்பாய்ன்ட்மென்ட்டாம் !

நமக்கு உதவி செஞ்சுக்கிட்டு இருந்தவர்தான் ( சீனப்பெண்மணி)  காணாமப்போன பொட்டிகளைத் தேடிக்கொடுக்கும் பகுதிக்குக் கூட்டிப்போனாங்க.  அங்கே போனால் ஏற்கெனவே ஒரு இருவது நபர்கள். தனித்தனியாக் கூப்ட்டு விசாரிச்சு, அதுக்கான விண்ணப்பத்தை நிரப்பி வாங்கிக்கிட்டாங்க. கூடிநின்ன  மக்கள்ஸ் எல்லோரும் ஜெட்ஸ்டாரர்களே !   ஓஹோ.... எங்க பொட்டிகளை க்வாண்டாஸில் ஏத்தவே இல்லைன்னு தெரிஞ்சு போச்சு. 

அங்கே இருந்த ஒரு பயணி, ஹாலோவினுக்குத் தயாரா வந்துருக்காங்க.  அனுமதி கேட்டு ஒரு க்ளிக்ஸ். நெட்லே  போடவான்னு கேட்டுக்கிட்டேன்! 
இத்தனை கலாட்டாவிலும் நம்மைவிட அதிகப் படபடப்புடன் இருந்தது யாருன்னா..... அந்த உதவியாளர்தான். இனி காத்திருந்து என்ன பயன்?  நீங்க போங்க. நாங்க டாக்ஸி எடுத்துக்கறோமுன்னு சொன்னாலும் கேக்காம  டாக்ஸி வரும் பகுதிக்குக் கூட்டிப்போய் டாக்ஸியில் ஏறும்வரை கூடவே இருந்தாங்க. அவுங்களுக்கு நன்றி சொல்லிட்டு, ஒரு க்ளிக் ! 
                                             
லிட்டில் இண்டியாவுக்குப் போறோம்.  தங்குமிடம் அங்கேதான். நம்ம சிங்கைச்சீனுவுக்குப் பக்கத்துலே இருக்கணும் என்பதுதான்  என் ஒரே  கண்டிஷன்.  முதல் முறையாக ஹாலிடே இன். நாம் எப்பவும் தங்கும் பார்க் ராயல், நியூபார்க், பார்க் ராயல்னு   அப்பப்பப் பெயரை மாத்தி மாத்தி வச்சுக்கிட்டு இருந்துச்சு . இப்ப அது  நோவாட்டெல்லாம்!    சமீபகாலமா ரங்கூன் ரோடில்    பார்க்  ஹொட்டேல், ஃபேரர்பார்க்னு இருந்ததுதான் இப்ப ஹாலிடே இன். எல்லாம்  காசும் வியாபாரமும்தான். 

நாம் வழக்கம்போல் ஹொட்டேல் புக் பண்ணும்போது,  பார்க் ராயலில் டிக்கெட் விவரம் விசாரிச்சால்  நானூறுன்னு கூசாமல் பதில் வருது. அடுத்து கொஞ்சம் மலிவா ஏதாவது கிடைக்குதான்னு வலைவீசுனதில்  ஹாலிடே இன் பாதிக்குப் பாதி விலையில் !
அங்கேதான் இப்போப் போறோம். ஹொட்டேல் போய் செக்கின் செஞ்சு அறைக்குள்  நுழையும்போது  மணி எட்டரை. 

 சிங்கைக்கு ஆறு மணிக்குப் போயிருவோம்.  லிட்டில் இண்டியா ஹொட்டேலுக்குப் போய்ச்  எப்படியும் ஏழு ஆகிரும். சட்னு ஒரு ஷவர் எடுத்துட்டுப் பெருமாளைப்போய் ஸேவிக்கலாம் என்றெல்லாம் மனக்கோட்டை கட்டி வச்சுருந்தேன்.

 'போச்சா  போச்சா.... ப்ளான் எல்லாம் பாழாப்போச்சா '............. இனி கிளம்பிப்போனாலும்  பூட்டியிருக்கும் கோவில்தான்.... ப்ச்....
போகட்டும். பெருமாள், நாளைக்குத்தான்  அப்பாய்ன்ட்மென்ட் கொடுத்துருக்கார்!

அறையில் இருந்து பார்க்கும்போது செராங்கூன் ரோடு, தீபாவளி  விளக்கலங்காரம் அட்டகாசமா இருக்கு. அறை வசதியும் நல்லாவே இருக்குதான் !

'ரொம்பக் களைப்பா இருக்கு.  இங்கேயே ரூம் சர்வீஸ் வாங்கிக்கலாமு'ன்னார் நம்மவர். 

'எதுக்கு? கோமளவிலாஸ் இருக்கே'ன்னேன். 

"யாரு அவ்ளோதூரம் நடக்கறது ?"

"எதுக்கு நடக்கணும். இதோ பக்கத்துலேயே இருக்கே!  நம்ம டாக்ஸி  ஹொட்டேலுக்குத் திரும்பும்போது   கோமளவிலாஸ் போர்டு பார்த்தேன்."
 ( முக்கியமானதெல்லாம் சட் னு கண்ணுலே பட்டுருமே ! )


அப்படியா ? ஆமாம்....அதோ அந்தக் கட்டடம்னு ஜன்னல் வழியாக் காமிச்சேன்.   இங்கிருந்து ஒரு ரெண்டுமூணு நிமிட்லே  போயிடலாம். 
இவ சொல்றது சரியோன்ற யோசனையில் என்னோடு வந்தார்.  என் நொண்டிகால் நடையில் கூட  நாலு நிமிட்தான் ஆச்சு !
என்னோட கவலையெல்லாம் பழைய கோமளவிலாஸ் என்ன ஆச்சோன்றதுதான்!

கல்லாவில் இருந்த பெண்ணிடம், விசாரிச்சேன்.  அது அங்கேயேதான் இருக்காம்! அப்பாடா....

இது ஆரம்பிச்சு ரெண்டு வருஷம்தான் ஆச்சாம். ஆனால் அதுக்குள்ளே சோஃபா இருக்கைகள் எல்லாம்  நிறமெல்லாம் போய் பல்லிளிச்சு கிடக்கு.  என்ன சாப்பிடறீங்கன்னு கேட்டுக்கிட்டே மெனுவை நீட்டினார் சர்வர் விக்னேஷ் . ஊர்க்காரர்.
                                    

                

                               
 ஒட்டிவச்சுருந்த போஸ்டர்களைப் பார்த்தவள், நம்மவருக்கு  அந்த 'டிஃபனும், எனக்கு ரெண்டு இட்லியும்னு சொன்னேன்.  போதுமா? நீ  மத்யானம் கூடச் சாப்பிடலையேன்னார் நம்மவர் . படத்தைப் பார்த்தாலே நிறைய இருக்குமுன்னு தோணுது. ஷேர் பண்ணிக்கறேன்னேன்.

அதே போல நிறையத்தான் இருந்தது. சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல் , வடை 50% எனக்கு.  கடைசியில் காஃபியா டீயான்னு கேட்டதுக்குக் காஃபின்னேன். அதிலும் அரைப்பங்கு !  வயிறு போதும் போதுமுன்னு என்  காதில் கதறுச்சு !
செராங்கூன் ரோடு ஜொலிக்குது !  கண்ணுக்கு எட்டும் தூரம்வரை ரெண்டு திசைகளிலும்  அழகோ அழகு!

வயிறு நிறைஞ்சு போனதால்.... நிம்மதியா வேடிக்கை பார்க்கிறேன்.  எதிர்வாடையில் ஒரே நகைக்கடைகளா இருக்கு.  இதுக்கு  இடையில் சரவணபவன் ! அட!  ஆமாம்.... எதிர்வாடை முழுக்க முந்தி முஸ்தாஃபாதானே இருந்தது, இல்லையோ ? 

சரவணபவன் முன்னால்  ஒரே கூட்டம். உள்ளே போகக் காத்திருக்காங்க போல !
 நேரமாகுது.  சீக்கிரம் தூங்கினால்தான் காலையில் சுப்ரபாத சேவைக்குக் கோவிலுக்குப் போகமுடியும்னு அறைக்குத்  திரும்பிட்டோம்.   நைட்டி மாத்திக்கிட்டு பல்லு தேய்க்கலாமுன்னு என்னோட கேபின் பேகைத் திறந்தால் நைட்டியும் இல்லை !  இதென்னடா வம்பு ? எப்பவும் நைட்டி, ரெண்டுமூணு செட் நல்ல துணிகள், உள்ளாடைகள்,  என் Tablet/ NoteBook, மருந்துன்னு  என் கேபின் பேகில் வச்சுக்கறதுதான் வழக்கம்.  எதுக்கு  ரெண்டு வாரத்துக்கு  ஆளுக்கொன்னுன்னு ரெண்டு செக்கின் பெட்டி ?  இந்தப்பயணத்தில் ஒன்னும் பெருசா வாங்கப்போறதில்லையே........ஒரு பெரியபெட்டி போதுமுன்னு சொல்லி இருவர் துணிகளையும் எடுத்துவச்சவர்,  என் கேபின் பெட்டியை எடை பார்த்துட்டு, ஏழுகிலோவுக்கு அதிகமா இருக்குன்னு  மேலாக இருந்த சிலதுணிமணிகளை எடுத்துப் பெருசில் வச்சாராம். அதுலே போயிருக்கு எனக்கு இப்ப வேண்டிய சமாச்சாரம்.  அட ராமான்னு சலிச்சுக்கிட்டே , உடை மாத்திக்க முடியாமல் காலை நாலரைக்கு அலார்ம் வச்சுட்டுக் கட்டையைக் கிடத்தியாச். 

காலையில் அலார்ம்  கூப்பிடுமுன்பே தூக்கம் கலைஞ்சுருச்சு.  அது எங்கூர் காலை ஒன்பது...... பாடி க்ளாக் செட்டில் ஆகணும்....

குளிச்சுத் தயாராகிப் பொடிநடையில் கோவிலுக்குப் போறோம்.  ஏறக்கொறைய ஒரு 250 மீட்டர் இருக்கலாம். ஆறு நிமிட் நடை.
ஆறு மணிக்கு சுப்ரபாத ஸேவை ஆரம்பிக்கும். 
நாங்க ஆறுமணிக்குக் கோபுரவாசலில் நிக்கறோம்.  வாசலுக்கு நேரெதிராப் பெருமாள் சந்நிதி.  அவர் இன்னும் எழுந்திரிக்கலை.  திரைக்குப்பின் இருக்கார் ! பயணங்களில் எப்போதும் கொண்டுபோகும்  ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் (பெரிய எழுத்து ) புத்தகத்தை இந்த முறை  கொண்டுவரலைன்றது அப்பத்தான் மனசில் உரைக்குது.... அடராமா........
சந்நிதி வாசலுக்கிந்தாண்டை பட்டர் ஸ்வாமிகள்  சுப்ரபாதம் வாசிக்கிறார்.  மைக் வச்சுக்கலை. பூனைக்குரலா இருக்கு. வாசலில் நிற்கும்  எனக்குக் காதுலே விழலை....

உள்ளே முற்றத்தில் இறங்கினவுடன் பழக்க தோஷத்தில் வலப்புறம் பார்த்தேன்.  "ஹை ஆஞ்சி ! நமஸ்காரம்டா. எப்படி இருக்கே ?"
'ஐ ஆம் ஓக்கே' ன்னது செல்லம் :-)

தொடரும்..... :-)

1 comments:

said...

செராங்கூன் ரோட்டு வண்ணமயமாக ஒளிர்கிறது மீண்டும் அங்கு நடந்த உணர்வு. எமக்கும் பழைய கோமளவிலாஸ்தான் பிடித்தமானது.

காலையில் பெருமாள் தரிசனம் மனதுக்கு இனிதாக இருந்திருக்கும்.

வெங்கடேசாய நமக.