நண்பர்கள் அனைவருக்கும் இனிய யுகாதி வாழ்த்துகளுடன் என் பேரன்பும் !
இந்தியப்பயணம் போய் வந்து ஒரு பதினைஞ்சு நாட்கள் ஆச்சு. முதலில் எழுதணுமா, வேண்டாமான்னு (வழக்கம்போல்) ஒரு எண்ணம். போகட்டும் போ..... எழுதியே வைக்கலாமுன்னு அப்புறம் ஒரு தோணல். அதுக்கேத்தாப்போல் சில நட்புகள். தனிப்பட்ட செய்திகளை அனுப்பி 'எப்போ எழுதப்போறே, எப்போ எழுதப்போறே'ன்னு விசாரிச்சாங்களா.... ஹாஹா.... நமக்கு இப்படி ஒரு வரவேற்பான்னு.... எழுத ஆரம்பிச்சுருக்கேன்.
பயணத்தின் ஆதியோடந்தமா ரொம்ப விஸ்தரிப்பு இல்லாம எழுத நினைச்சுருக்கேன். கடவுள் உங்களைக் காப்பாற்றுவாராக !
என்னதான் கவனமா இருக்கோம் என்றாலும் அவசரத்தில் சிலபல குழப்பங்கள் ஏற்படத்தான் செய்கிறது, இல்லை?
உடல்நலக்குறைவு காரணம், போன வருஷம் ஆகஸ்ட்டில் போக வேண்டிய இந்தியப்பயணத்தைக் கடைசி நாளில் ரத்து செய்யும்படி ஆச்சுன்னு ஏற்கெனவே புலம்பி இருந்தேன்.
விசேஷ மருத்துவரைக் கண்டு அதுவரை நடந்த சிகிச்சையின் நிலையைப் பற்றி விசாரிச்சப்ப, 'ரொம்ப மெதுவாகத்தான் குணம் தெரியும். அடுத்த ஆறு மாசம் கழிச்சு, உங்களை மீண்டும் சந்திப்பேன்' என்றார். அப்படியானால் பயணம் போகலாமான்னு கேட்டதும், 'போகலாம். மறக்காமல் வலிநிவாரணி மருந்துகளை சரியான நேரத்துக்கு எடுத்துக்கணும்'னு சொன்னார்.
வேறுவகையான சிகிச்சை முறைகளைப் பின்பற்றலாமான்னு இன்னுமொரு கேள்வி. என்ன முறைன்னு அவர் முழிச்சதும், ஆயுர்வேத சிகிச்சைன்னார் நம்மவர். பிரச்சனை இல்லைன்னு பதில் வந்தது. (ஆறு மாசம் கழிச்சுதான் அடுத்த சந்திப்பு. அதுவரை என்னவாச்சும் செஞ்சுக்கோ.... )
வீட்டுக்கு வந்ததும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஸ்பெஷல் ஏதாவது இருக்கான்னு பார்த்த நம்மவர், ஜனவரி 29க்கு இந்தியா போறோமுன்னார். போகும்போது ரெண்டு நாட்கள் சிங்கப்பூரில் தங்கல். வழக்கம்போல் கோவில் பக்கத்தில் பார்க் ராயலில் ரூம் போட்டாச். திரும்பி வரும்போது சிங்கப்பூரில் தங்கல் கிடையாது. நேராக ஊருக்குத் திரும்பிருவோம். மொத்தம் ஆறு வாரம். கோட்டக்கல் ஆர்யவைத்யசாலாவில் கால்வலிக்கு சிகிச்சை எடுக்கறோம். எல்லாம் தகவல்கள்தான்.
அந்த தேதிகள் சரிப்படுமா? எத்தனை நாட்கள் போகலாம்? இப்படி ஒரு பேச்சும் இல்லை. ராணுவநடவடிக்கையா இருக்குல்லெ ?
ஒரு விநாடி ஙேன்னு முழிச்ச நான், 'அயோத்யா போறோமா இல்லையா ? ' ன்னு கேட்டேன். போறோம். அங்கே தரிசனத்துக்கு ஒரு ஏற்பாடு இருக்கு. அதுலே புக் பண்ணிடலாமுன்னார்.
தினமும் நூற்றைம்பது பேருக்கு தரிசன நேரம் ஒதுக்கித் தர்றாங்களாம். அதைப்பற்றி முதலில் நான் ஒன்னும் கேட்டுக்கலை. அப்புறம்தான் தெரிஞ்சது..... நாம் தரிசனம் செய்ய நினைக்கும் நாளுக்குச் சரியாப் பதினைஞ்சு நாட்களுக்கு முன்னால் கோவில் வலைப்பக்கத்தில் போய் பெயரைப் பதிவு செஞ்சுக்கணும். பெயர் மட்டுமா..... மற்ற தனிப்பட்ட விவரங்களும்தான் ! இந்திய நேரம் ராத்ரி 12 ஆனதும் அந்த சைட் திறக்கும். நாம் , நம்ம விவரங்கள் எல்லாம் அந்தந்தப் படிவத்தில் நிரப்பியதும் நமக்கான நேரம் கொடுக்கப்படும். ரொம்ப சிம்பிள் இல்லை !!!!
இல்லை..... படிவம் நிரப்பிக்கிட்டு இருக்கும்போதே.... அன்றைய கோட்டா முடிஞ்சதுன்னு செய்தி வந்துரும். இந்திய நேரத்துக்கும் நமக்கும் ஏழரை என்பதால்..... காலை ஏழேகாலுக்கெல்லாம் தயாரா கணினியும் கையுமாக உக்கார்ந்திருப்பார் நம்மவர். தினமும் இதுவே ஒரு போராட்டம்..... இப்படிப் பலநாட்கள் போனபின் ஒருநாள் நமக்கு இடம் கிடைச்சுடுத்து !!!! ஃபிப்ரவரி 11 பகல் 3 முதல் 4.30 வரை !
இனி உள்ளுர் பயணத்துக்கு சென்னை- அயோத்யா டிக்கெட் ஏற்பாடு செய்யணும். அதுவும் ஆச்சு. "தரிசன நாளுக்கு முன்னும் பின்னும் ஒன்னும் ரெண்டுமா மூணு நாட்கள் அங்கே தங்கறோம். அங்கிருந்து கிளம்புவது சாயங்காலம் நாலுதான், உனக்கு இன்னும் அரைநாள் கூட ஷாப்பிங் செய்யலாம். "
இங்கே நியூஸி வீட்டில் மற்ற வேலைகளுக்கு(முக்கியமாச் செடிகள்) உண்டானவைகளை ஒருவிதம் சரி ஆக்கினோம். வீட்டுக்குள் இருக்கும் செடிகளுக்கு மகளும், தோட்டத்துச் செடிகளுக்கு பக்கத்துவீட்டுக்காரர் மகளும் பொறுப்பு !
புதுசா ஒரு சங்கடம் இப்போ. வெளிநாட்டிலிருந்து இந்தியா போகும் நம் மக்கள், தங்கம் கொண்டுபோகும் அளவைக் குறைச்சுருக்காங்களாம். நாம் என்ன கிலோக்கணக்குலேயா வச்சுருக்கோம் ? பெண்கள் 40 கிராம், ஆண்கள் 20 கிராம்தானாம். கம்மல், மூக்குத்தி, வளையல், தாலிச் செயின்தான் எப்பவுமே.... அதுக்கும் வச்சுட்டாங்க ஆப்பு.... இருக்கறதுலேயே தேசலா இருக்கும் ஒரு சங்கிலியை மாட்டிக்கிட்டுக் கிளம்பணும்.

கிளம்பும் மூணு நாட்களுக்கு முந்தி, சிங்கைத்தங்கல் ரத்து. சீனப்புத்தாண்டு தினமாம். மக்கள் கூட்டம் அதிகமா இருக்கும் காலம். மேலும் ஏதோ ஒரு வைரஸ் தொற்று வந்துருக்காம். (நமக்குன்னு வருது பாருங்க இப்படியெல்லாம்....) நேராச் சென்னை போய் இறங்கறோமாம். சிங்கையில் தோழியையும், மற்ற நண்பர்களையும் சந்திக்கும் வாய்ப்பு போயே போயிந்தி......

ரெண்டுநாள் முன்பே சென்னைக்குப் போறதால்....நம்ம லோட்டஸ் புக்கிங் எல்லாம் மாத்தவேண்டி இருந்தது. எல்லாம் ஒருவழியா ஆச்சு.
சிங்கையில் ட்ரான்ஸிட்லே கொஞ்சம் வேடிக்கை பார்த்துட்டு சென்னை விமானம் ஏறினோம்.
மறுநாள் காலையில் லோட்டஸ் மக்களின் 'எப்ப வந்தீங்க?' என்றதுக்கெல்லாம் மகிழ்ச்சியாப் பதில் சொல்லிட்டுப் பெருமாளைப் பார்க்கக் கிளம்பினோம். அவரையும் பார்த்து வருஷம் ரெண்டேகாலாச்சே ! கோவில் வாசலில் சாமுண்டி ! சட்னு ஒரு முழம் மல்லிகையை எடுத்து நீட்டுன அன்பை மறக்கவே முடியாது ! இருவது வருஷப்பழக்கம்.
பெருமாளுக்கும் தாயாருக்குமாப் பூச்சரங்களை வாங்கிக்கிட்டு, மொத்தக்காசையும் கொடுக்காம ஒரு பகுதியைக் கடன் வச்சுட்டு, கடன்வாங்கிட்டு முழிக்கறவனுடைய தரிசனமும் ஆச்சு. இனி பேங்குக்குப்போய் உள்ளுர் காசெடுத்தால்தான் கடனை அடைக்க முடியும் !
நம்ம கணக்கிருக்கும் பேங்க் பக்கத்தில்தான் புதுசா வந்துருக்கும் பத்மாவதி தாயார் கோவில். முதல்முறையா அங்கேயும் போனோம். நாம் திருச்சானூரில் பார்க்கும் அதே தாயார் !!! பரவசத்துடன் தரிசனம் ஆச்சு.


களைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், நெருங்கிய தோழி, மறுநாள் ராஜபாளையம் போறாங்க என்பதால் அவசரமாக ஒரு சந்திப்பும், இலவச இணைப்பாக இன்னும் இரண்டு நெருங்கிய தோழிகளையும் அன்றே போய் சந்தித்தோம். நாலு பெண்கள் சேர்ந்தால் எவ்வளவு கொண்டாட்டம் என்பது.... உங்களுக்குத் தெரியாதா என்ன ? அதுவும் எழுத்தாளினிகள் வேற..... கூடவே ரெண்டு செல்லங்களும் !
தொடரும்.......... :-)

3 comments:
முன்னேற்பாடுகளில் ரஜ்ஜுவுக்கு ஒரு ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை இல்லாமல் போனது சோகம்! இந்தியாவபை அலசிப் பார்த்து விட்டு மறுபடி திரும்பி விட்டீர்கள். வாழ்த்துகள்.
முன்னேற்பாடுகளில் ரஜ்ஜுவுக்கு ஒரு ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை இல்லாமல் போனது சோகம்! இந்தியாவை அலசிப் பார்த்து விட்டு மறுபடி திரும்பி விட்டீர்கள். வாழ்த்துகள்.
வாங்க ஸ்ரீராம்,
ரஜ்ஜு, வலியில் கிடந்து துடிக்காமல் பெருமாளிடம் போயிட்டான். அவன் நினைவுகளோடு அவனையும், மகளின் செல்லம் ஜூபிடரையும் வேறொரு வகையில் நம்மோடு கூட்டிப்போனது உண்மை ! விவரம் பதிவில் வரும்.
Post a Comment