அறையைக் காலி செஞ்சதும் நேராப்போய் நின்னது ம்யூஸியம் கார்பார்க்கில்தான். இந்தப்பக்கம் இருக்கும் சுவரின் தலையில் பின் குஷனில் குத்திவச்ச மணிக்குண்டூசிகள் போல ஒரு டிஸைன்.
(தையல்காரிக்கு வேற உவமை தெரியலையேப்பா.... )
பொதுவா இங்கத்து ம்யூஸியம்களில், நாம் இந்தியாவில் பார்க்கும் பழங்காலத்து உலோகச் சிலைகள் எல்லாம் இருக்காது. இங்கத்து சரித்திரம் என்றதே ஒரு நூத்தியெம்பது வருஷத்து சமாச்சாரம்தான். அதுக்கு முந்தி ஒரு ஆயிரம் வருஷங்களுக்கு முன்னே மவொரிகள் இங்கே குடியேறிட்டாங்கன்னாலும், அந்தக்காலத்தில் குடும்பத்துக்கு உணவு, உடை, இருப்பிடம்னு முக்கியத் தேடல்களிலேயே வாழ்க்கை போயிருச்சுல்லே ? சரித்திரமுன்னு சொல்லிக்க ஒன்னும் அவ்வளவா இல்லை. குகைகளில் வாழ்க்கை..... மோஆ என்னும் பெரிய பறவைகள் 'இருந்தது ' என்றதெல்லாம் தான் பதிவாகி இருக்கு. அதுவும் அவைகளின் எலும்புக்கூடை வச்சுத்தான்.
அதனால் நிகழ்காலச் சரித்திரங்கள்தான் பெரும்பாலும். ஆனால் நிலநடுக்கம் பற்றிய விவரங்கள், பூமிப்பந்தின் அமைப்பு, நிலவகைகள், படிமங்கள் இப்படி எல்லா நியூஸி ம்யூஸியங்களிலும் ஒரு பகுதி கட்டாயம் இருக்கும். நாடு இப்படிப்பட்ட நிலத்தில் அமைஞ்சு போனதால்..... எல்லோருக்கும், முக்கியமா இளந்தலைமுறைக்கு இந்த விவரத்தைக் காமிச்சு, ஆபத்து காலத்தில் எப்படி நடந்துக்கறது என்றதுக்கெல்லாம் ஒரு வாழ்க்கைக் கல்வி வேணும்தானே ?
பழைய கப்பல் (HMS Veronica )மணி ஒன்னு புதுசு போல மினுங்கிக்கிட்டு இருக்கு இங்கே! ஒவ்வொரு வருஷமும் 1931 ஆம் வருஷத்து நிலநடுக்க நினைவுநாளுக்கு இந்த மணியை அடிப்பாங்களாம்!
அந்த பயங்கர நிலநடுக்கத்தில் இறந்து போனவங்க பெயர்ப்பட்டியலும், இவுங்களைப் புதைத்த இடத்தின் வரைபடமும் கூட வச்சுருக்காங்க. 256 பேர் மரணம் :-(
சின்ன சனத்தொகை இருக்கும் நாடு என்பதால் ஒரு உயிர் போனாலுமே அது பெரிய இழப்பு.
அடையாளம் கண்டுபிடிக்கமுடியாதவர்களைப்பற்றிய குறிப்பு பார்த்துட்டு, மனசுக்குக் கஷ்டமாப்போச்சு. அந்த குடும்பத்தில் இருந்த எல்லோருமே போயிருந்தா யார் வந்து அடையாளம் சொல்வாங்க ?
அந்த நிலநடுக்க விவரம்தான் விஸ்தாரமா இருக்கு! ஒரு ஃப்ல்ம்ஷோ கூட ஒரு கூடத்துலே நடந்துக்கிட்டு இருக்கு. ஆள் இருக்கோ இல்லையோ அதுபாட்டுக்குத் தொடர்ச்சியா ..... நாமும் ஒரு காமணி நின்னு பார்த்தோம்.... ப்ச்..... பயங்கரம்தான்..... (எங்கூரும் இப்போ ஒரு ஒன்பது வருஷத்துக்கு முன்னே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுருக்கே.... அதனால் எங்களுக்கெல்லாம் நிலநடுக்கமுன்னா மன நடுக்கமும் வந்துரும்.... ஹூம்....என்னத்தைச் சொல்ல? )
நிரந்தரக் காட்சிகளா அமைச்சு இருப்பவை ஒரு பகுதியில்னு சொன்னா...... தாற்காலிக காட்சிகளா மற்ற உலக சமாச்சாரங்கள் காட்சிக்கு வைப்பது சகஜம். டாப்போ ம்யூஸியத்தில்கூட நாய் ஷோ பார்த்தோமில்லை... அதைப்போல இங்கே ஜப்பான் நாட்டு உடையான கிமோனா வரலாறு காட்சி நடக்குது. பார்த்தவுடனே கண்ணைக் கவரும் விதமா ஒன்னும் இல்லை.... ஸில்க் என்பதுதான் விசேஷம்.
எங்கூரிலும் வருஷத்துக்கு ரெண்டு மூணு முறையாவது இப்படி தாற்காலிகக் காட்சிகள் வச்சுருவாங்க. ஒரு முறை டி ஷர்ட் பார்த்தோமே நினைவிருக்கா ?
இப்போதைக்கு எங்கூர் ம்யூஸியத்துக்கு நூத்தியம்பது வயசாச்சுன்னு பழைய சேகரிப்பை எல்லாம் காட்சிக்கு வச்சுருக்காங்க. இன்னும் போகலை. அப்புறம் சிறுவர்களுக்குன்னு தனியா Santa Search, Amazing Animals னு சில பொழுதுபோக்கு (கூடவே கற்றலும் உண்டு ) அம்சங்கள். World's best wildlife photographs from Natural History Museum in London னு ஒரு டூரிங் எக்ஸிபிஷன் கூட நடக்குது. போனவாரம் தான் ஆரம்பிச்சது. அடுத்தவருஷம் மார்ச் மாசம் வரை வச்சுருப்பாங்க. டிஸ்ப்ளே செய்யக் கொஞ்சம் மெனெக்கெடுவாங்க என்றதால் எதுவுமே குறைஞ்சபட்சமா மூணு மாசம். போயிட்டு வந்து சொல்றேன்.
பின்குஷனைப் பக்கத்துலே பார்க்கும் வாய்ப்பு கிடைச்சது.... பெரிய கம்பியில்தான் பந்து இருக்கு !
Yuki Kihara என்ற ஓவியரின் தனிநபர் எக்ஸிபிஷன் ஒன்னும் நடந்துக்கிட்டு இருக்கு. இவுங்க சமோவா நாட்டில் பிறந்து, இளவயதில் மேற்படிப்புக்காக நியூஸி வந்துட்டாங்க. இவுங்க திறமையைக் கண்டுக்கிட்ட, Metropolitan Museum of Art in New York, அங்கே தனிநபர் எக்ஸிபிஷனுக்கு அனுமதி கொடுத்துருக்கு. அந்த ஓவியங்களை இங்கே நியூஸியின் மிகப்பெரிய ம்யூஸியமான Te Papa Tongarewa ஆதரவால்... உள்நாட்டு ம்யூஸியங்களில் டூரிங் எக்ஸிபிஷனாக் காட்சிக்கு வச்சுருக்காங்க. தற்செயலா இங்கே நேப்பியர் ம்யூஸியத்தில் நமக்கும் பார்க்க ஒரு வாய்ப்பு அமைஞ்சுருச்சு பாருங்க. !
பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டு பீங்கான் பாத்திரங்கள் எல்லாம் கண்ணாடிப்பொட்டிக்குள்ளே காட்சிக்கு வச்சுருக்காங்க. வெவ்வேற நாடுகளில் இருந்து கிடைச்சதாம்.
சாயா எவ்ளோ முக்கியம் , இல்லே.... ? சாய் இல்லாமல் நானில்லை.... ஹேவ் அ கப் ஆஃப் டீ :-)
இதே முக்கியம் இசைக்கும் ! சின்னப்புள்ளைகளைக் கவர்ந்து இழுக்கும் பகுதி இது ! அதைத் தொடாதே, இதைத்தொடாதேன்னு எதுவும் இல்லை. தொட்டுப்பாரு. இசையைக்கேளு !
காடு எப்படி நாடாச்சுன்னு இன்னொரு பகுதி..... ரொம்பக் கஷ்டந்தான் பட்டுருக்காங்க.
வெளியே வளாகத்தில் லார்ட் ப்ளங்கெட்டின் உருவச்சிலை. பிரிட்டிஷ் காலனியா இருந்த சமயத்தில் இவர் கவர்னர்.
இந்த ஊரே கலைக்குப்பெயர் போனதுன்னு சொல்றாங்க, இல்லே ? இது கொஃபாய் ன்னு சொல்லும் லோக்கல் பூ ( Kōwhai ) உலோகத்தில் !
சரி வாங்க ,சாலையைக் கடந்து எதிர்வாடைக்குப் போகலாமா?
தொடரும்........... :-)
3 comments:
அருங்காட்சியகத்தினைப் பார்ப்பதே மகிழ்ச்சியான விஷயம். நானும் எங்கே போனாலும் அருங்காட்சியகம் ஒன்றாவது சென்று விடுவது வழக்கம்.
தகவல்கள் நன்று.
வாங்க வெங்கட் நாகராஜ்,
உண்மைதான். சரித்திரம் இருக்கறது அங்கே தானே ?
எல்லாம் அழகு.
Post a Comment