Wednesday, September 05, 2012

கற்றதும் பெற்றதும்

கடந்துபோன (?) குளிர்காலத்தில் செய்த பரிசோதனைகளும் முடிவுகளும் என்னன்னு பார்க்கலாமா?

 தோட்டம்தான் பாடாய்ப் படுத்திருது. நம்ம ஊர்வேற பெண்களூருக்கு தங்கை என்ற உறவுமுறையில் இருப்பதால் தோட்டநகரம் என்ற பெயரைக் காப்பாத்த வீட்டுவீட்டுக்குக் கொஞ்சமாவது தோட்டப் பராமரிப்பு தேவைப்படுதே!

 முதலில் நம்ம தாமரைக்குளம். குளிர் காலம் வரும்போது டிவியில் வரும் வெதர் ரிப்போர்ட் பார்த்துட்டு ( இங்கே இதை 99% நம்பலாம்) பத்து டிகிரிக்குக் கீழே என்றால் ஒரு தெர்மாக்கோல் பலகை(??!!) போட்டு சாயங்காலம் அஞ்சு மணிக்கு மூடி வைக்கணும். காத்தில் பறந்து போகாமல் இருக்க நாலு மூலையிலும் ரொம்பகனமான ஒரு செங்கல்.(நைட் ஸ்டோரேஜ் யூனிட்டில் இருந்து எடுத்தது) வைக்கணும். காலையில் மறக்காமல் இதை அகற்றிடணும். திரும்ப மாலையில் இதுபோல......

 தண்ணீர் உறையும் குளிர்காலம் வந்துட்டால் புழக்கடைப்பக்கம் போகவே படு சோம்பல். ஆனாலும் தாமரையைக் காப்பாத்த அஞ்சு வருசமாப் படாத பாடு பட்டுட்டு, வீட்டை வாடகைக்கு விட்டுட்டு இந்தியா வந்தப்பக், குடித்தனக்காரர்கள் நமக்கு இனி தோட்ட வேலையே வேணாமுன்னு சுத்தமா எல்லாத்தையும் சாகடிச்சுட்டுப் போயிருந்தாங்க.

 எதையும் தாங்கும் இதயம் இதையும் தாங்குச்சு. வாட்டர்கார்டன் கடையில் சொல்லி வச்சு திரும்பத் தாமரைக்கிழங்கு வாங்கி சேவைகள் செய்து அதுலே மொட்டு வந்து மலர்ந்ததும்தான் மஹாலக்ஷ்மி வந்துட்டாடான்னு நிம்மதி.

 இந்த வருசக்குளிர் ஆரம்பிக்குமுன் பரிசோதனையா இருக்கட்டுமுன்னு ரெண்டு செடிகளையும் பக்கெட்களுக்கு இடம் மாற்றி கன்ஸர்வேட்டரியில் வச்சேன். மூணு மாசம் கப்சுன்னு இருந்தவை ஆகஸ்ட் கடைசியில் புது இலைகளை வெளியே கொண்டுவந்து காமிச்சது.


 எங்கூரில் செப்டம்பர் ஒன்று முதல் வசந்தம் என்பதால் (நம்பிக்கைதான் வாழ்க்கை) தாமரைகளை குளத்திற்கு மாத்துனேன். குட்டியா மூணு மொட்டுகள் அடிப்பாகத்துலே தலை நீட்டுது:-)

 போகைன்வில்லாச் செடியையும் கொய்யாமரத்தையும்(?) காக்டெஸ் கன்ஸர்வேட்டரியில் (ரெண்டு கன்ஸர்வேட்டரி இருப்பதால் வேறு படுத்திக்காட்ட இப்படி ஒரு அடையாளப்பெயர் கேட்டோ! )

 குளிர்கால இடமாற்றமுன்னு வச்சதால் அவை இரண்டும் தப்பிச்சது மட்டுமில்லாமல் காகிதப்பூ பூக்கத்தொடங்கி குளிர்காலமுழுசும் கலர் காமிச்சுக்கிட்டே இருந்துச்சு. கொய்யாவும் ஏற்கெனவே இருந்த பிஞ்சுகளையெல்லாம் கொட்டித் தீர்க்காம நிதானமா தினம் ஒன்னு என்று மூத்துப் பழுத்த பழத்தை சப்ளை செஞ்சது. ( தினம் ஃப்ரெஷ் ஃப்ரூட் சாப்பிடணுமுன்னு டாக்குட்டர் சொல்றாங்க)


 பாலியந்தஸ் என்று சொல்லப்படும் ப்ரிம்ரோஸ் செடிகள் வெளியில் தோட்டத்தில் போன சம்மருக்கு நட்டவைகள் குளிர் ஃப்ராஸ்ட் எல்லாத்தையும்தாக்குப்பிடிச்சு நின்னது இதுவரை நான் கவனிக்காத ஒரு விஷயம். குளிர்கால டிப்ரெஷனைப் போக்கவும் கலர் பார்க்கவும்(!) சில செடிகளை வாங்கியாந்து கன்ஸர்வேட்டரியில் வச்சுருந்தேன்.

 மருக்கொழுந்துச்செடி ( இங்கே இதுக்கு மார்ஜோரம் என்னும் பெயர்) கொஞ்சம் காய்ஞ்சமாதிரி இருந்தாலும் தப்பிப் பிழைச்சுருச்சு. லாவண்டரும் அப்படியே! இவையெல்லாம் வெளியில் இருந்தன.

 எலுமிச்சை மண்டையைப் போட்டுருச்சு:(

 நம்ம வீட்டுலே ஒரு ஆறுமாசமா புதுவரவு வெத்திலைச்செடி! எட்டு இலை வந்தாச்சு. இனி வெத்தலைபாக்கு வச்சு(ம்) அழைக்கலாம்.

 இம்பேஷின்ஸ் என்று ஒரு வகைச்செடி. இதுவும் பெயர் தெரியாத இன்னொரு செடியும் கன்ஸர்வேட்டரியிலே வச்சுருந்ததால் இன்னும் உயிரோடும் மலரோடும் இருக்கு:-)



 ஏதோ மீலி பக்ஸ் பீடிக்கும் நோய் வந்து சாகத்தெரிஞ்ச வாழையை மனசைக் கல்லாக்கிக்கிட்டு இலைகளைத் தரிச்சதால் ப்ளேகேர்ள் மாதிரி நின்னது இப்போ இன்னும் நாலு இலைகளோடு!

 காஃபிச் செடியும் இதே மீலிபக்கால் மண்டையைப்போட்டதால் சொந்தக்காஃபிக்கொட்டையில் காஃபி குடிக்கும் அதிர்ஷ்டம் கைநழுவிப்போயிருச்சு:( மொட்டை அடிச்சு வச்சுருக்கேன். வேரிலும் தண்டிலும் உயிர் உள்ள அடையாளம் தெரியுது. பார்க்கலாம்.

 கருவேப்பிலையும் நோயில் அடிபட்டு மீண்டு வந்துருக்கு.(டச் வுட்)

 ஏர்லி சியர்ஸ் என்று பெயர் உள்ள ஒரு வசந்தகாலப்பூக்கள் பல்பு நட்டதால் முளைச்சுவந்து மலர்களோடு நிக்குது. டாஃபோடில் குடும்பமுன்னு சொல்லிக்கலாம். ஒரு கொத்தில் நாலைஞ்சு வெள்ளைப்பூக்கள். பார்க்க நம்மூர் குண்டு மல்லிபோல இருக்கு. நல்ல மனசை மயக்கும் நல்ல நறுமணம்.

 ஹையஸிந்த Hyacinths மலர்கள் தானாகவே பூக்கத்தொடங்கியாச்சு. அஞ்சாறு வருசமாக் கடமை தவறாமல் செயல்படும் வகை!

 எல்லோரும் அவரவர் கடமையை மறக்கூடாதுன்னு செடிகள் நமக்குக் கற்பிக்கின்றனவே!!!! கடமை கடமைன்னதும் இன்னொரு முக்கிய விஷயம் நினைவுக்கு வருது. நமக்கு எழுத்து மட்டுமா கடமை? பயணம் கூடத்தானே?

 சனிக்கிழமை பயணம் போகணும். சிங்காரச்சென்னை அழைத்துவிட்டது.   துளசிதளம் மாணவக் கண்மணிகளுக்கு லீவு விட்டாச்சு.  இனி அடுத்த மாசம்தான் வகுப்புக்கு வரணும்,கேட்டோ!

டீச்சரைக்காணோமுன்னு யாரும் அழாதீங்க:-)

 ஆங்............... டீச்சர்ஸ் டே வேற இன்னிக்கு. யாருக்காவது நினைவிருக்கோ? அனுபவப்பாடம் சொல்லித்தரும் இயற்கையை விட மேலான ஆசிரியர்கள் உண்டோ?

 அகில உலக ஆசிரியர்களுக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

43 comments:

said...

ரீச்சர் அவர்களுக்கு

இந்த மாணவனின் வாழ்த்தாக ஒரு பாடம்.

மருக்கொழுந்துன்னு சொல்லணும். மரிக்கொழுந்து இல்லை.

/மருன்னு சொன்னா வாசனைன்னு அர்த்தம். கொழுந்துன்ன இளம் தளிர். கொழுந்து வெத்தலைன்னு சொல்லறோமே அது மாதிரி. நல்ல வாசனையுடைய இளம் தளிர்களைக் கொண்ட செடி மருக்கொழுந்து. அதான் அதுக்கு அப்படிப் பேரு வெச்சாங்க. அதை மரிக்கொழுந்துன்னு சொன்னா இளம் தளிரா இருக்கும் பொழுதே செத்துப் போகும் இலைகளைக் கொண்ட செடின்னு அர்த்தம் வரும்./

கொத்தனார் நோட்ஸில் இருந்து... :)

said...

கற்றதைக் கண்ணும் கருத்துமாக செயல்படுத்திப் பராமரித்ததில் பெற்றவை உங்கள் பெயர் சொல்கின்றன:)!
அழகான தோட்டம். பாராட்டுகள். நேற்று தாமரையை மொட்டு மலருடன் படம் பிடித்தேன். ப்ரிம்ரோஸ் வகை இங்கும் ஏராளமாய் பூத்திருக்கும்.

said...

வண்ணமயமாக இருக்கிறது பதிவு
வெறுமனே நீர் ஊற்றினால் போதும் என்கிற
சூழல் உள்ள ஊரில் நாங்கள் எவ்வளவு
சோம்பலாய் இருக்கிறோம் என்பது
தங்கள் பதிவைப் படிக்கையில்தான் புரிகிறது

பயணம் சிறப்பாக அமைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

said...

மருக்கொழுந்து....

இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன்.

#நன்றி-கொத்தனார் நோட்ஸ்.

said...

அப்பப்பா... எவ்வளவு அழகாக உள்ளன... வீட்டில் மூன்று செடிகள் இருக்கு... அதில் பூக்கள் பூத்தாலே மனது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்...

இங்கு எத்தனை எத்தனை... அழகான தோட்டம்... வாழ்த்துக்கள்...

said...

ஹைய்யோ.. எல்லாமே அழகழகா இருக்கு. பர்ப்பிள் பூவோட படம் செம ஷார்ப்.

எங்கூட்லயும் மருக்கொழுந்துச்செடி வெச்சுருந்தேன். நாள் கிழமைன்னா, துளசியும் மருக்கொழுந்துமா சேர்த்து மாலையக் கட்டிப்போடுவேன். இப்போ அது சாமி கிட்ட போயிருச்சு. வேற வாங்கியாந்து வைக்கணும்.

said...

இம்பேஷின்ஸ் - அழகிய நிறம். கவர்கிறது. ஆசிரியர் தின வாழ்த்துகள்.

said...

வருஷா வருஷம் உங்கதோட்டத்தைப் பார்த்தாலும் ஒவ்வொரு வருஷனும் புதுசு புதுசா வண்ணம் கண்ணீல் மருக்கொழுந்தா ,கொய்யாவா,தாமரையா.ஆட்டம் போடுகிறதே. வெற்றிலை வேற.மஹராஜா தோட்டம் மாதிரி இருக்குப்பா.வாழ்த்துகள்.

said...

புதுக்கடல் ஆசிரியையே வருக
வலையுலக டீச்சரே வருக
பயணக்கட்டுரை புகழ் பயணியே வருக
கூடவே கோபாலும் வருக
இந்தியாவுக்கு வருக வருக வருக :)

தோட்டம் போட்டு வளக்குற கூட்டம் வளத்துக் கொண்டேயிருக்குது
அதைத் திட்டம் போட்டுப் பறிக்குற கூட்டம் பறித்துக் கொண்டேயிருக்குது :)

மருக்கொழுந்து, வெத்தலைக் கொடியெல்லாம் அழகோ அழகு.

வெத்தலைக் கொடிக்கால்னு சொல்வாங்க. தனிப்பயிரா அத வளக்க மாட்டாங்க. அகத்திக்கீரைய வளரவிட்டு அந்த மரத்துல வெற்றிலைக் கொடியைப் படரவிடுவாங்க. சின்னவயசுல எங்கூர்ல நெறைய இருக்கும்.

வெத்தலைல ரெண்டு வகையுண்டு. வெள்ளவெத்தல ஒன்னு. கருவெத்தல ரெண்டாவது.

கருவெத்தலைல உறைப்பு கூட இருக்கும். இதெல்லாம் ரொம்ப நாளா வெத்தலை போடுறவங்களுக்கு. கொட்டப்பாக்கு களிப்பாக்கு சேத்துப் போடுவாங்க. புதுசாப் போடுறவங்களுக்குச் சமயத்துல கண்ணுல தண்ணி வந்துரும்.

வெள்ள வெத்தலை ரொம்பச் சாது. இது சொகுசாளிகளுக்கான வெத்தலை. சீவலை (அ) வாசனைப்பாக்கு சேர்த்து பன்னீர்ப்புகையிலை சேர்த்து கமகமன்னு மெல்லத் தோதாயிருக்கும். புதுசா வெத்தலை போடுறவங்க வெள்ள வெத்தலைல தொடங்குறது நல்லது.

said...

ஒவ்வொண்ணும் அழகு டீச்சர்.. புதுசு புதுசா பூக்கள்... அசத்தலா இருக்கு!

இந்தியா சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது!

said...

வாங்க கொத்ஸ்.

லீடர் என்பதை நிரூபிச்சுட்டீங்க.
கொத்தனார் நோட்ஸ் சொன்னா அப்பீல் ஏது?

மாத்திட்டேன்.

நன்ரி.oops..நன்றி.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

ஆஹா...பேஷ் பேஷ் தங்கையிடம் இருப்பது அக்காவிடம் இருக்காதா என்ன:-)))) அக்கா ஊரில் பனிமழை இல்லாததால் எப்பவுமே பூக்களோடு இருக்குமே!

தாமரை மலர்ந்ததும் படம் வரணும்,ஆமா:-)

said...

வாங்க ரமணி.

ஊரோடு ஒத்து வாழணுமே! நம்மால் ஊர்ப்பெயர் அசிங்கப்பட்டுறக் கூடாதேன்னுதான் மெனெக்கெடல்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நம்ம தெருவிலே ரொம்பவே சுமாரான தோட்டம் நம்ம வீட்டுலேதான்.

வாக் போறப்பப் பார்க்கும்போது, எனக்கே நாணக்கேடு:(

http://thulasidhalam.blogspot.com/2008/11/blog-post_16.html

மேலே நம்ம தெருவில்!

said...

வாங்க அமைதிச்சாரல்.

துளசியை பலமுறை வச்சுப் பார்த்தாச்சு. நீ இருக்கும்போது நான் ஏன்னு சொல்லிருச்சு அந்த ஹோலி பாஸில்:-)

பர்ப்பிள் & யெல்லோ செம காம்பினேஷன் இல்லை!!!

said...

வாங்க ஸ்ரீராம்.

இம்பேஷின்ஸ்கூட பல நிறங்களில் இருக்கு.

போன கிறிஸ்மஸ் பாஸ்கெட் வாங்குனதிலே இந்த ஆரஞ்சு மட்டுமே வச்சுருந்தாங்க:(

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க வல்லி.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

வெற்றிலை, நம்ம ரமண் பையா வீட்டில் இருந்து அடிச்சுக்கிட்டு வந்தேன்:-))))

சாமிக்குத் தாம்பூலம் கொடுக்கும்போது , இனி ஆப்பிளைக் காமிச்சு வெத்திலை, ஆரஞ்சு காமிச்சுப் பாக்குன்னு சொல்ல வேணாம் பாருங்க:-)))

said...

வாங்க ஜீரா.

வெத்தலைக் கொடிக்காலுக்கு எங்கெ போறது?

சின்னதா ஒரு கட்டிங்(!!) கிடைச்சு இப்ப எட்டு இலை. போதுமென்ற மனசு வந்துருக்கே:-)))

வெத்திலை போடும் பழக்கம், ஆசை எல்லாம் போயே போச்! டெண்டிஸ்ட்டுக்குக் கொடுத்து மாளாது இங்கே:(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உங்க ஊரிலும் இந்தப்பூக்கள் வகைகள் அநேகமா வேற பெயரில் இருக்கும் வாய்ப்பு உள்ளது.

குளிர்காலம் வரும் 4 சீஸன் உங்களுக்கும் உண்டே!

சிகப்புக் கம்பள ஏற்பாட்டுக்கு நன்றிகள்:-)

said...

அனுபவப்பாடம் சொல்லித்தரும் இயற்கையை விட மேலான ஆசிரியர்கள் உண்டோ?

முற்றிலும் உண்மை.

அது என்னவோ தெரியல செடி கொடிகளை இது போன்று டப்பாக்கிளல், தொட்டிகளில் வைத்து வளர்ப்பதே ஒரு தண்டனை போலத்தான் எனக்குத் தெரிகின்றது.

வீட்டில் உள்ள மீன் தொட்டிகளை பார்க்கும் போது இப்படித்தான் தெரிகின்றது.

சின்ன வீடாக இருந்தாலும் புல்தரையோ ஒரு மரமோ, கொஞ்சம் பூக்கள் என்றால் அது மாதிரியான மகிழ்ச்சியைத் தருது. அழகுக்கு வளர்ப்பவர்கள் பெரும்பாலன மக்கள் உண்மையான அக்கறையோடு வளர்ப்பதில்லை. கருகிய அந்த செடிகளைப் பார்க்கும் போதெல்லாம் மனசிற்கு ஒருமாதிரியாக இருக்கும்.

முன் கூட்டிய வாழ்த்துகள்.

said...

பாட்டி எப்படித்தான் நேரம் கிடைக்குதோ...?சரி சரி தமிழ்நாட்டுக்கு வந்தா எங்க ஊருக்கு வாங்க? யாருக்கும் சொல்லாதீங்க (சிவகாசிதான் என் ஊரு)

said...

படங்கள் அருமை. அதென்ன ஒரு பிளாஸ்டி குப்பி எல்லா தொட்டியிலும் சொருகி இருக்கீர்கள்? தண்ணீர் ஊற்றவா?

said...

தோட்டமும் பூக்களும் அதன் பராமரிப்பும் அழகு. வெற்றிலை எங்கள் வீட்டி நிறய்ய பரர்ந்து இருக்கும். அக்கம் பக்கமெல்லாம் வந்து எடுத்திட்டு போவாங்க. கேரளாவில். கறிவேப்பிலை இங்கு கூட நிறய்ய வீட்டில் இருக்கு அதை தங்கம் போல் பத்திரமா வீட்டில் வைத்திருக்காங்க. எனக்கு அது வரல்லை. துளசி, வாழை எல்லாம் நன்றாக வளர்ந்து இருக்கு.
புதினாவும். வருது.
இனிய பயணம் அமைய வாழ்த்துக்கள். மேசேஜ் பார்த்தேன். சந்தோஷம். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். டைம் இருக்கும் போது உங்க தோட்ட பராமரிப்பை எங்களுக்கும் டிப்ஸ் சொல்லி தாங்க.
கன்ஸர்வேட்டிவில் எவ்வள்வு நாட்கள் வைக்கலாம். அதன் + & - சொல்லி தாங்க. டைம் கிடைக்கும் போது. என்ஞாய் யூவர் டிரிப்.

said...

வாங்க ஜோதிஜி.

அடடா.... இப்படி ஃபீல் பண்ணிட்டீங்களே......

இந்தியா போன்ற அதிலும் குறிப்பா தென்னிந்தியாபோல காலநிலை இருந்தால் செடிகளை நிலத்துலேயே வச்சுக்கலாம். இங்கே இருக்கும் குளிருக்கு நிறைய வகைகளை வெளியில் நட்டால் ஒரே வாரத்தில் சங்கு:(

அதிலும் ட்ராப்பிக்கல் வகைகளை வெளியில் வைப்பதை நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது.

மீன்தொட்டி சொன்னீங்க பாருங்க. அந்த மீன்களை ஆற்றிலோ குளத்திலோ விட்டால் மத்த மீன்களுக்கு லஞ்ச் ஆகிரும். இவைகளைக் காப்பாத்தணுமுன்னா நம் கண்காணிப்பில் வச்சால்தான் உண்டு.

பட்ஜி என்னும் சிலவகைப் பறவைகளை லவ்பர்ட்ஸ் உட்பட கூண்டில் வைக்காம சுதந்திரமாப் பறக்க விட்டால் மறுநாளே மண்டையைப் போட்டுரும். வெளியே போய் பொழைக்கத் தெரியாத பயலுக இவை:(

என் மனசுக்கு ஐயோன்னு இருப்பது இந்த போன்ஸாய் மரவகைகளே. இயல்பா வளரவிடாமல் செய்வதுதான் என்னவோ போலிருக்கும்:(

said...

வாங்க நான்.

நேரம் எங்கும் கிடைக்காது. நாமே உருவாக்கிக்கணும்:-))))

யாருக்கும் உங்க ஊரு சிவகாசின்னு சொல்லலை நான் கேட்டோ!

said...

வாங்க குமார்.

அந்த ப்ளாஸ்டிக் தண்டுகள் ஸோலார் லைட்டுக்குள்ளது. தரையில் நட்டுவைக்காம தொட்டிக்குள்ளேயே நட்டுட்டேன்.

இரவில் வரிசையா மின்னும் விளக்குகளைப் பார்த்து ரன்வேன்னு நினைச்சு விமானம் வீட்டுத் தோட்டத்தில் இறங்கிருமோன்னு உள்ளூர எனக்கு பயம் உண்டு:-))))))

said...

வாங்க விஜி.

வாழ்த்துகளுக்கு நன்றி.

கருவேப்பிலை, வாழை, செம்பருத்தி எல்லாம் வருசம் பூராவும் கன்ஸர்வேட்டரியில்தான் வைக்கணும்.

வெய்யில் இருக்குன்னு வெளியில் வச்சால் அன்னிக்குப் பார்த்து சதர்லீ என்று அண்ட்டார்ட்டிக் காத்து வீசும் பாருங்க...... பாவம்.... செடிகள்:(

எனக்குத் துளசிதான் பிரச்சனை. குளிர் வந்தவுடன் ஏஃபிட்ஸ்Aphids என்னும் பூச்சி மேய்ஞ்சுது:(

said...

மயக்குகின்றன தோட்டத்துப் பூக்கள்.
வாழை துளிர்விட்டதில் மகிழ்ச்சி.

பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்.

காத்திருக்கின்றோம். இனிய தொடருக்கு.....

said...

மணி(ண)விழாவுக்கு மனப்பூர்வமான, வாழ்த்துக்கள்..

உங்களுக்கும் , ஸ்பெஷலான உங்களைப் பெற்றதற்காக(உங்கள் வாக்குப்படியே) லக்கி ஸ்பெஷலான கோபால் சாருக்கும் !

நிறைந்த அன்பும்,நிலைத்த நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்..

38 + 60...ம்...நல்ல காம்பினேஷன்!

said...


Mrs. துளசி கோபால் & Mr. கோபால் அவர்களுக்கு:
வாழ்த்துக்கள்! Long Live Young Couple!
ஒரு கேள்வி?
அந்த கருப்பு வெள்ளை படத்தில் இருக்கும் பீச் [beach] சென்னையில் உள்ள 'பட்மோட்' பீச்சா. பட்மோட் பீச் அடையாறு கடலில் கலக்கும் முகத்துவாரம். அதற்கு செல்ல Foreshore Estate பீச் வழியாக செல்லவேண்டும். பெசன்ட் நகர் வழியாகவும் வரலாம்.

மந்தைவெளியில் வசிக்கும் போது நண்பர்களுடன் 'பட்மோட்' பீச் சென்று அங்கு குளிப்போம். அங்கு அலைகள் கம்மி பௌர்ணமி அமாவாசை நாட்களைத் தவிர (அப்போ, High tides). இப்போது கடல் அந்தப் பாதையை அரித்துவிட்டது .

கோபால் முகம் தெரிந்த முகமாக இருக்கிறது! கோபால் சென்னையா? நீங்களும் சென்னை தானா?

said...

வாங்க மாதேவி.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

said...

வாங்க அறிவன்.

ஆஹா.... அதென்ன 38!!!!!!

மனசு துள்ளுதே:-)))))

எனக்கு 38ன்னா கோபாலுக்கும்தான் 38.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க நம்பள்கி.

வாழ்த்துகளுக்கு நன்றி.

அந்தப்படம் காலடி ( கேரளா. ஆதிசங்கரர் பிறந்த ஊர்) பெரியாறு நதியில் எடுத்தது.

கோபால் பிறந்த ஊர் போடிநாயகனூர்.

சென்னையிலொரு வருடம் இருந்தார். 1975.

நான் சென்னைக்காரின்னு சொல்லலாம். இந்திய வாழ்க்கையில் பெரும்பகுதி சென்னையில்தான்.

said...

துளசி தளத்துக்கும் திரு.கோபால் அவர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்!

said...

நான் மணிவிழாவும் 38 ஆவது மணவிழாவும் கிட்டத்தட்ட இயைந்து வருவதைக் குறிப்பிட்டேன்..

:))

said...

டபுள் டக்கர் வாழ்த்துக்கள் !

said...

டீச்சர் டீச்சர் எப்படி இருக்கீங்க?? new zealand எப்படி இருக்குது?? என்ன சொல்லுது??

said...

ம்ம்...டீச்சர் எங்களையெல்லாம் விட்டுட்டீங்க...நடக்கட்டும் நடக்கடும் :)))

5 வருடங்கள் இருக்குமோ உங்கள் பதிவிற்கு வந்து

மணி விழா வாழ்த்துகள்

ப்ரியங்களுடன்
கல்வெட்டு (எ) பலூன்மாமா

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்.

பிறந்தநாளுக்குப் பதிவிட்டுச் சிறப்பித்த நாச்சியாருக்கும் எங்கள் நன்றிகள்.

said...

வாங்க அறிவன்.

அப்ப....கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் கணக்கு சரியாத்தான் வருதோ:-))))))

டபுள் வாழ்த்துகளுக்கு டபுள் டபுள் நன்றிகள்.

said...

வாங்க இவனே,

எங்கே ரொம்ப நாளா ஆளைக் காணோம்?

நல்லா இருக்கீங்களா?

போனவாரம்தான் கல்யாணம் கட்டிக்கிட்டுத் திரும்பவந்த மணமக்களை வரவேற்ற உற்சாகத்தில்
நியூஸிலாந்து நல்லாத்தான் இருக்கு.

said...

வாங்க கல்வெட்டு.

வணக்கம். நலமா? நம்மூட்டுப் பக்கம் வர்றதை நிறுத்தியே வருசம் அஞ்சாச்சா!!!!! அச்சச்சோ!!!! ஏன் இப்படி?

கடைசியில் மணிவிழா உங்களை இட்டாந்துருக்கே!!!!

விழாவைப் பற்றிச் சட்ன்னு ஒரு முடிவுக்கு வரமுடியாமல் கொஞ்சம் தவிப்பு இருந்துச்சு. அதான் நிறைய நண்பர்களுக்குத் தகவல் அண்ட் அழைப்பு சொல்லமுடியாமப் போயிருச்சு

வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

எழுபதுக்கு நீங்க வர்றீங்க...ஆமாம்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அருமையான தகவல். பகிர்ந்தமைக்கு இனிய நன்றிகள்.