Wednesday, March 30, 2011

பிரபலத்தின் மறுபாதியா இருந்ததுக்கு தண்டனையோ:(

இது மூணாவது வருசமாம் இங்கே சண்டிகரில். எது? அந்த ஆர்ட்ஸ் அண்ட் ஹெரிடேஜ் ஃபெஸ்டிவல். டிக்கெட்டுன்னு ஒன்னும் இல்லை. பாஸ் வந்து வாங்கிக்கோன்னு தினசரியில் இருந்துச்சு. இவர் வேலை முடிஞ்சு வந்து நாம் போகும் நேரமும் தாகூர் தியேட்டர் வேலை நேரமும் ஒத்துவரலை. அடிச்சுப்பிடிச்சு நேரம் உண்டாக்கி அங்கே போனால்............. கிடைச்சது. பரதநாட்டியத்துக்கு மட்டுமே . மத்ததெல்லாம் தீர்ந்து போச்சாம். கைவிரிச்சுட்டார் கவுண்ட்டரில் இருந்தவர். கொடுத்துச் சிவந்த கை! சாணக்யா நாடகம் போச்:(

நடனக்கலைஞர், கூடவே தனியா நடனப்பள்ளி நடத்தறாங்க. வீட்டு உள் அலங்கார நிபுணர். சினிமாவில் கதாநாயகனுக்கு ஆடை வடிவமைப்பு இப்படி பன்முகத்திறமை வாய்ஞ்ச பெண்மணி. ஆதரவற்ற முதியோர்கள் குழந்தைகள் இல்லம், உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கான மறுவாழ்வு இல்லம் இப்படி பல தரும காரியங்களுக்கு ஓசைப்படாம உதவி செய்யும் நல்ல குணம், அவுங்களுக்கு நிதி திரட்ட நடனக்கச்சேரிகள் இலவசமா நடத்தித்தருவதுன்னு வாழ்க்கையை படு பிஸியா வச்சுக்கிட்டாங்க.

ஆறரைக்கு நிகழ்ச்சி. நாங்கள் போய்ச்சேரும்போதுதான் அவுங்களும் உள்ளே நுழைஞ்சாங்க. வாசலில் சண்டிகர் ஸ்பெஷல் குதிரைகள், ராக் கார்டன் பசங்க, பூந்தொட்டிகள் இப்படி அணிவகுப்பு. தீபம் ஏற்றும் அமைப்பில் இருந்த அலங்கார வளைவில் விளக்கு வச்சுக்கிட்டு இருந்தார் ஒருவர்.

ச்சீப்ப்ப்ப்ப் கெஸ்ட்டு காமணி லேட். குத்துவிளக்கேத்தி வச்சுத் துவக்கினார். விளக்குலே எண்ணெய் ஊத்தலைன்னு நினைக்கிறேன். கொளுத்திய ரெண்டாவது நிமிசம் (அவர் மேடையை விட்டு இறங்குனதும்) அணைஞ்சே போச்சு.
காத்திருந்த நேரத்தில் 'பிரியா கோவிந்த்' வந்து ஆடக்கூடாதான்னு கோபாலுக்கு ஒரே மனத்தாங்கல். ஏனாம்? இப்போ ஆடப் போறவங்களுக்கு என்ன குறைச்சல்? இதுவரை இவுங்க ஆடிப் பார்த்துருக்கீங்களா? அதெப்படி எல்லா ஆம்பளைகளுக்கும் ஒருத்தரை பற்றி முன்முடிவு வந்து உக்காந்துக்குது? மீடியா ஊதி ஊதி வேண்டாததையெல்லாம் பெருக்கி வைக்க அப்படியே அதை உண்மைன்னு நம்பிருவீங்களா? பிலுபிலுன்னு பிடிச்சுக்கிட்டேன். இல்லை..... நடனக்கச்சேரி சீஸன்லே பேர் அடிபடலையேன்னு...............ஒருவேளை அவுங்களுக்குச் சிலபல காரணங்களால் சென்னையில் ஆடப்பிடிச்சிருக்காது! இவுங்க நல்லாவே ஆடுவாங்களா இருக்கும். இங்கே சண்டிகரில் கிடைப்பதே அபூர்வம். அதிலும் பைசா செலவில்லாம பார்க்கப்போறீங்க. புண்ணியத்துக்கு பசு தானம் கிடைச்சா பல்லைப் பிடிச்சு பார்க்கணுமா?
நடனமணி யாருன்னு சொல்லலை பாருங்க....... நம்ம வாணி கணபதிதான். கணேச வந்தனத்தோடு முதல் ஐட்டம். கணேச சுப்ரபாதமுன்னு சொன்னாங்க. மணி ஓசை ஒலிக்க யானை காதுகளை அசைச்சுக்கிட்டே அசைஞ்சு வந்துச்சு. நடனத்தைச் சொன்னேன். அவுங்க சைஸைச் சொல்லலைங்க. நல்லா ச்சிக்குன்னு ஒல்லியாத்தான் இருக்காங்க. ரொம்ப லேசா, கொஞ்சமா உடல் கட்டுவிட்டுருக்கு. ஒப்பனையையும் மீறி முகத்தில் வயசு தெரியுது. மற்றபடி நல்லாவே இருக்காங்க.
அடுத்து புரந்தரதாஸரின் ஜெகத்தோ தாரண............யசோதா அந்தப்பிள்ளை கண்ணனை வாரியெடுத்துக் கொஞ்சி, சோறூட்டி, அவனோடு விளையாடி, அவன் செஞ்ச குறும்புக்காக மரத்தில் கட்டிப்போட்டு, தூங்காமல் ஆட்டம் காட்டுபவனை மடியில் போட்டு தாலாட்டி..............அப்படியே கோகுலத்தில் போய்ப் பார்த்த ஒரு எஃபெக்ட்டு!
எனக்கு என்ன ஆச்சரியமுன்னா.......... ஆடிக்கிட்டே சடால்னு கீழே சம்மணம்போட்டு உக்காருவது, சட்னு அப்படியே எழுந்திருப்பது .... நானோ முட்டி வலி கேஸ். கையைக் கீழே ஊன்றித்தான் உக்காரணும் எழுந்திருக்கணும். முதலாவதாக கீழே உக்காரணுமுன்னு நினைச்சாவே வயித்தைக் கலக்கிரும். நம்மால முடியாத ஒரு காரியத்தை லகுவா அப்படியே லட்டாட்டம் செஞ்சு காமிக்கும்போது .............கண்ணு பிதுங்கி வெளி வந்துருமோன்னு எனக்கே பயமா இருக்கும் என் பார்வையை நினைச்சால்.
நடராஜர் அஞ்சலின்னு ஒரு ஐட்டம். டமருகம் ஒலிக்க நல்லாவே இருந்துச்சு. புது ஐட்டமா ஜுகல்பந்தின்னு ஒன்னு செஞ்சாங்க. நிகழ்ச்சியின் ஆரம்பத்துலேயே மேடையில் ஒரு மைக் இருப்பதைப் பார்த்தேன். பொதுவா கதக் ஆட்டத்துக்குத்தான் இப்படி மைக் வைப்பாங்க. தாளக்கட்டும் ஜதியும் பாத வேலைகளுடன் ஒன்னுக்கொன்னு ஈடு கொடுத்து எப்படி வருதுன்னு காமிக்க. ஏறக்கொறைய அதே போல கஞ்சிரா வாசிப்புக்கு இவுங்க ஃபுட் ஒர்க் ஆடிக்காமிச்சாங்க. தேசபக்தி பாடல் ஒன்னும் வருமுன்னு சொன்னப்ப..... நான் ஊகிச்சது வந்ததுலே எனக்கு மகிழ்ச்சி. எப்படி என் கணிப்புன்னு கோபாலுக்கு ஒரு வெற்றிப்பார்வை வீசினேன்:-) வந்தே மாதரம்...................
ஒவ்வொரு அயிட்டத்துக்கு முன்னாலும் அதை பற்றி அழகா விவரிச்சதுலே டர்பன்காரர்களுக்கு ரொம்பவே சந்தோஷமுன்னு அப்பப்ப வாரிவிட்ட கைதட்டுகளில் தெரிஞ்சது.

கடைசியா..............மீரா பஜன் ஒன்னு. இதிலும் தொடக்கம் யானைதான். கஜேந்திரன் காலை முதலை கவ்விப்பிடிச்சுக் குளத்துக்குள் பிடிச்சிழுக்க, காப்பாத்துன்னு யானை கண்ணீருடன் கதறி அழைக்க......கருடன்மேல் ஏறி நொடிக்குள் பறந்து வந்த மகா விஷ்ணுவே, பாலகன் பிரஹலாதனுக்காக நரசிங்கமா வந்தவரே........த்ரௌபதியின் மானம் காத்த.............. இந்தக் கட்டம்
சகுனியுடன் தருமர் சூதாட்டம் ஆடுனதில் இருந்து விஸ்தரிச்சு நடக்குது. ஒவ்வொரு ஆட்டத்திலும் சகுனி ஜெயிக்க, துரியோதனின் சிரிப்பு மகிழ்ச்சி, பாண்டவர்களின் துயரம்....கடைசியில் த்ரௌபதியைப் பணயம் வைப்பது..... துச்சாதனன் போய் அவளை சபைக்கு இழுத்து வருவது, புடவையை உருவும்போது, கையாலாகாத அஞ்சு கணவர்களைப் பார்த்துப் புலம்பி கடைசியில் கோவிந்தனை சரணடைவதுன்னு............... அட்டகாசமான அபிநயம்.

துடிக்கும் த்ரௌபதியைப் பார்த்து எனக்கு(ம்) நெஞ்சு அடைச்சு கண்கள் குளம்கட்டி அருவியானதென்னவோ நிஜம். அற்புதனமான ஒரு நடனம் பார்த்த மனநிறைவு. திரும்பிக் கோபாலைப் பார்த்தேன். அதிசயிச்சுப்போய் மிரண்ட பார்வையுடன் இருந்தார்! (இதுக்குத்தான் சொல்றது யாரையும் முன்முடிவோடு அணுகலாகாதுன்னு! எந்தப்புத்துலே எந்தப் பாம்பு இருக்கோ???)

ஒப்பனையில் கொஞ்சம் பின் தங்கி இருக்காங்களோன்னு ஒரு சம்சயம் எனக்கு. மத்தபடி அவுங்களோட இசைக்குழுவில் வந்த அஞ்சு பேரையும் கவுரவமா அறிமுகப்படுத்துனது எனக்குப் பிடிச்சு இருந்துச்சு. வழக்கமா அவுங்க அம்மாதான் பாட்டு பாடுவாங்களாம். அவுங்க மறைஞ்சு ரெண்டு வருசம் ஆகிருச்சு,ஆனாலும் அவுங்களோட ஆத்மா என்கூடவேதான் இங்கே இருக்குன்னு சொன்னது மனசுக்கு இதமா இருந்துச்சு. இசைக்குழுவின் பாடகர் பாலு அவுங்க அம்மா தேர்ந்தெடுத்தவர்தானாம். அருமையாப் பாடினார்.


இந்தப் பதிவு எழுதுமுன் வாணியைபற்றி இன்னும் எதாவது குறிப்புகள் கிடைக்குமான்னு தேடுனா....................... சொந்த வாழ்க்கையில் கடந்துபோன சம்பவத்தையெல்லாம் ஜூஸியாக் கொடுத்துவச்சுருக்காங்க சிலர். இவுங்களுடைய தனிப்பட்ட திறமைகளைக் கண்டுக்க ஆளே இல்லை என்றது மனசுக்கு வருத்தமா இருந்துச்சு.

மறுநாள் உள்ளூர் தினசரியில் இவுங்க நிகழ்ச்சியைபற்றி ஒரு சின்னக் கட்டுரை வந்துருக்கு. பாய்ஞ்சு பாய்ஞ்சு எடுத்தபடங்கள் எல்லாம் எங்கே போச்சோ தெரியலை. த்ராபையா ஹைதரலி காலத்துப் படம் ஒன்னை ஸ்கேன் செஞ்சு போட்டு அவுங்க ஆத்தாமையைத் தீர்த்துக்கிட்டாங்க. அதுகூட ப்ரிண்ட் ஒழுங்கா இல்லாம கலர் மை இங்கிட்டும் அங்கிட்டுமா நகர்ந்து போய் .................... என்ன ஜனங்களோ!! ச்சீன்னு வெறுத்துப்போச்சு. பயனா ஒரே ஒரு குறிப்பு மட்டும் கிடைச்சது, அவுங்க நடனப்பள்ளியைப் பற்றி. எண்ணிப் பத்து மாணவர்களுக்கு மட்டுமே நடனம் சொல்லித் தருவாங்களாம். பெரிய கூட்டத்தைச் சேர்த்துவச்சுக்கிட்டு கும்பலில் கோவிந்தா இல்லாம தனித்தனியாக் கவனிச்சுச் சொல்லித்தரத்தான் இத்தனை குறைவான எண்ணிக்கையாம்.

என்ன உலகமப்பா.............. பிரபலத்தின் மறுபாதியா இருந்ததுக்கு தண்டனையோ:(

PIN குறிப்பு: இனி யாராவது தமிழில் இவுங்க பேரைப்போட்டுத் தேடினால் குறைஞ்சபட்சம் இந்தப் பதிவு வரட்டும்!



28 comments:

  1. அவங்க பள்ளிபற்றி விவரம் இணையத்துல இருக்கா.. அறியத்தாங்களேன்..

    சமீபத்தில் ஒரு அரங்கேற்றத்தில் அவங்க காம்பியரிங் செய்ய வந்திருந்தாங்க.. அவங்களே பாதி நடனத்தை நின்றபடி பாவத்துடன் விவரித்துவிட்டார்கள். அழகா இருந்தாங்க...

    ReplyDelete
  2. உங்க பி.கு. - எனது மனம் நிறைந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும் - உங்களுக்கு!!

    நடனம் குறித்த உங்களின் விளக்கங்களும் சுவாரஸ்யம்.

    பதிவை ரொம்ப விசனத்தோட எழுதினீங்க போல - ஒன்றிரண்டு எழுத்துப் பிழைகள் இருக்கே - வழக்கத்துக்கு மாறா!! (பணயம் - பயணம்)

    ReplyDelete
  3. ஒருத்தரோட தனி வாழ்கையை பத்தி கவலைப்படாம, அதுனால முன்முடிவுகள் எடுத்துக்காம அதிலும் குறிப்பா பெண்களை அவங்களோட தனிப்பட்ட ஆளுமைய மட்டும் வச்சு மதிப்பிட நம்ம சமூகம் ரொம்ப தூரம் போக வேண்டியிருக்கு. நல்ல பதிவு.. உங்களோட வர்னணையும், போட்டோக்களுமா சேர்ந்து நானும் நேர்ல நிகழ்சிய பாத்தா மாதிரி ஒரு தோணல். :))) நன்றி.

    ReplyDelete
  4. பொதிகையில் இவங்களோட பேட்டி ஒண்ணு பார்த்தேன்.
    ரொம்ப நாகரீகமா எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னாங்க.நடனக் கலைக்குத் தன்னை அர்ப்பணித்த கதையை விவரமாகச் சொன்னார்.

    மகிழ்ச்சியாகத்தான் அந்த நிகழ்ச்சி முடிந்தது.எனக்குத் தான் ஏதோ ஒரு ஆதங்கம்.

    ReplyDelete
  5. பெண்களில் அவங்களுக்குன்னு இருக்கும் தனித்திறமை 'நிழல்'ல மறைஞ்சுபோயிடறது வருத்தம் தரக்கூடியதுதான்..

    ஆனாலும், முடங்கிடாம எழுந்து நிக்கிறதுக்கு இவங்களை கண்டிப்பா பாராட்டணும்..

    ReplyDelete
  6. அற்புதமான நடனத்தை படிச்சுப் பார்த்தேன் டீச்சர் :)

    ReplyDelete
  7. படங்கள் நல்லா இருக்குப்பா. ரொம்ப அழகா இருக்காங்க. த்ரௌபதி கதை உருகத்தான் வைக்கிறது.:9

    ReplyDelete
  8. பல முறை உங்கள் எழுத்துக்களை படித்து முடிக்கும் போது ஒரு ரௌத்தரம் பழகு போல ஏன் எழுதாமல் இருக்கீங்கன்னு நினைத்துக் கொள்வேன். கடைசி வரிகளை அதற்கான தொடக்கம்போல எடுத்துக் கொண்டேன்.

    பாட்டு பக்கத்தில் ஒலிக்கின்றது.

    அமைதியான நதியினிலே ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
    ...................

    ReplyDelete
  9. படங்களும் பகிர்வும் அருமை. பெங்களூரில்தான் இருக்காங்க. அவங்க நிகழ்ச்சிகள் அல்லது கலந்து கொண்ட விழாக்கள் என செய்திகள் அடிக்கடி வரும். இங்குள்ள எல்லா பத்திரிகைகளும் ரொம்ப மதிப்பா முக்கியத்துவம் தந்தே எழுதுவார்கள்.

    ReplyDelete
  10. இவர் ஒரு மிகச் சிறந்த இன்ட்டீரியர் டிசைனரும். அது குறித்த படங்களும் செய்திகளும் கூட அடிக்கடி பத்திரிகைகளில் வரும்:)!

    ReplyDelete
  11. எனக்குப் பிடித்தவங்க வாணி கணபதி. அவர் கமலை மணந்த போதிலிருந்து பிடிக்கும். இப்பவும் ரொம்ப அழகாவே இருக்காங்க.

    //எனக்குத் தான் ஏதோ ஒரு ஆதங்கம்.// கரெக்டு வல்லிம்மா. அவங்க நல்லா கல்யாணம் பண்ணிட்டு இருந்திருக்கலாம்னு நினைச்சுப்பேன்.. ஏன்? தெரியாது:-(

    உண்மையை சொல்ல, பழி வாங்க பல வாய்ப்புகள் இருந்தாலும், நல்லவங்களா இருக்கணும்னு நினைப்பது பெரிய விஷயம்.

    ReplyDelete
  12. உங்கள் பதிவுகள் அனைத்தும் விரிவாகவும், அழகாகவும் உள்ளன. படிக்க படிக்க நேரில் சென்று பார்த்த ஒரு நிறைவை தருகிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  13. வாங்க கயலு.

    அவுங்க பெண்களூரில் இருக்காங்க. பள்ளியும் ஒருவேளை அங்கேதான் இருக்குமோ?

    மடல் அனுப்பி இருக்கேன். பதில் வந்தால் பார்க்கலாம்.

    ReplyDelete
  14. வாங்க ஹுஸைனம்மா.

    துக்கம் விரல்வழியோடி இருக்கலாமோ!!!!

    சுட்டியதுக்கு நன்றிப்பா. திருத்திட்டேன்.

    பயணக்கதை எழுதும் பழக்கத்தில் விரலுக்கு வேறொரு அறிவும் இல்லை.
    அதென்ன எப்பப்பார்த்தாலும் பயணம் வேண்டிக் கிடக்கு? :-)))))

    ReplyDelete
  15. வாங்க லக்ஷ்மி.

    பஸ்ஸுலே ஏத்திவிட்டதுக்கு நாந்தான் நன்றி சொல்லணும். அதுவும் அங்கே நீங்க சொன்ன பதில்கள் அருமை. என்னால் அப்படி சொல்ல முடியாது. சொதப்பி இருப்பேன்:-)

    போகுமிடம் வெகுதூரமில்லைன்னு சொல்லிக்க ஆசை இருக்கு. ஆனால் வெறும் ஆசையை வச்சுக்கிட்டுப் போராட முடியுதா?:(

    ReplyDelete
  16. வாங்க வல்லி.

    நமக்குத்தான் எதுக்கெடுத்தாலும் ஒரு ஆதங்கம்.

    நடந்தவை நல்லதுக்கேன்னு எடுத்துக்கணும் இனி.

    ReplyDelete
  17. வாங்க அமைதிச்சாரல்.

    திறமை என்னும் விளக்கை கூடை வச்சு மூடினால் ஓரளவாவது வெளியில் தெரியும். ஆனால் குடத்தை வச்சு மூடிடறாங்களே:(

    மண்குடமா இருந்தா உடைச்சுவிடலாம். ஆனால் இது எவர்சில்வர் குடமால்லே இருக்கு!

    ReplyDelete
  18. வாங்க சுசி.

    நான்பெற்ற இன்பம் நம்ம எல்லோருக்கும்:-))))

    ReplyDelete
  19. வாங்க ஜோதிஜி.

    நம்ம நாட்டுலே ரௌத்திரம் எதுக்குன்னு பழகறது?

    தலைக்குமேலே வெள்ளம் போயிருக்கே:(

    ReplyDelete
  20. வாங்க ராமலக்ஷ்மி.

    தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு.............

    வேண்டாததைத் தூக்கிப்பிடிக்க நமக்குச் சொல்லித்தரணுமா?

    ReplyDelete
  21. வாங்க கெக்கே பிக்குணி.

    உண்மை உண்மை!!!!!

    ReplyDelete
  22. வாங்க PVS.

    வணக்கம். நலமா?

    முதல் வருகைக்கு நன்றி.
    மீண்டும் வரணும்.

    ReplyDelete
  23. டீச்சர்!வாணி கணபதி பற்றி நீங்கள் சொன்னதும் மனதில் ஏதோ நெருடல்...

    மேலே சொல்லத் தெரியல எனக்கு.

    ReplyDelete
  24. நடனங்களை நேரிடையாகப் பார்த்த நிறைவைத் தருகிறது பதிவு.

    ReplyDelete
  25. வாங்க ராஜ நடராஜன்.

    //மேலே சொல்லத் தெரியல எனக்கு.//

    பரவாயில்லை. மௌனம் கூட பலசமயம் பேசும்!

    ReplyDelete
  26. வாங்க மாதேவி.

    வீடியோ க்ளிப் இருக்கு. கொஞ்சமா ஒரு 6 நிமிசம் எடுத்தேன்.
    வலை ஏற்ற நேரமில்லாமல் போச்சு.

    ReplyDelete
  27. requesting you to visit our blog once!! முடிஞ்சா ஒரு கருத்து எழுதுங்க!!

    http://sagamanithan.blogspot.com/

    ReplyDelete
  28. வாங்க சகமனிதன்.

    தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும். பயணத்தில் இருந்தேன்.

    உங்க வலைப்பக்கம் அருமையான அரசியல் பதிவுகளோடு நல்லா இருக்கு.

    ReplyDelete