Friday, January 22, 2010

சூரியனையேத் தூக்கிட்டுப் போயிட்டாங்கப்பா!!! (குஜராத் பயணத்தொடர் 6)

மேடம் இதர் தேக்கியே..... இஸ்கா நாம் சூர்ய kகுண்ட் ஹை. இஸ்மே தீனோ பக்வான் கா மூர்த்தி ஹை.... இதர் தேக்கியே மேடம்.... தலையை ஒரு பக்கமாச் சாய்ச்சுக்கிட்டே பூபேந்த்ரா விளக்கிக்கிட்டுப் போறார். அரசாங்கம் அங்கீகாரம் செஞ்சிருக்கும் வழிகாட்டி. முதலில் கைடு வேணுமான்னு கோபாலுக்கு கொஞ்சம் யோசனை. எல்லாம் ஒருவேளை எனக்கே(!) தெரிஞ்சுருந்தா!!!! அதெல்லாம் லேசுப்பட்ட காரியம் இல்லை.போன ஜென்மத்தில் நான் இங்கே வரலை. அதனால் விளக்கம் சொல்ல ஒரு ஆள் இருக்கட்டுமே. (பெரியமனசு செஞ்சேன்)

மொதேரா என்ற ஊருக்கு வந்துருக்கோம். சூரியனுக்கான கோவில் இருக்குமிடம். இப்போது தொல்பொருள் இலாகாவின் பொறுப்பில். நம்ம நாட்டில் இந்திய தொல்பொருள் சம்பந்தமான இடங்களைப் பார்க்க நுழைவுச்சீட்டு வெறும் அஞ்சே ரூபாய்கள்தான். இடம் குறிப்பிடாமல் பொதுவா ஒன்னு அச்சடிச்சு வச்சுருக்காங்க. ஆக்ராவுக்கு மட்டும் கொஞ்சம் கூடுதலாம்.

ஸோலாங்கி அரசர்கள் ஆட்சியில் ராஜா முதலாம் பீமதேவ் கட்டி இருக்கார். 1022 வது ஆண்டு. கிட்டத்தட்ட ஆயிரம் வருசப் புதுசு! இன்னும் சரியாச் சொன்னால் 988 வருசம். கட்டி முடிக்க 36 வருசம் ஆச்சாம்! அருமையாப் பராமரிச்ச தோட்டத்தில் புகுந்து நடக்கறோம். ஒரு அழகான நாய் தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஜாலியா ஒரு கூட்டமா ஓடிவிளையாடுது. எல்லாப் பசங்களும் நல்ல ஆரோக்கியமா இருக்குதுங்க.

சூர்யக் குளத்தில் அழகான படிக்கட்டுகள். இதுலே 'ஆண், பெண்'ன்னு இருக்காம். ஒரு படி நல்ல உயரமாகவும். ஒன்னு அதைவிடக் கொஞ்சம் உயரம் கம்மியாவும் இருக்கு. கம்மியா இருப்பது ஆண். உயரப்படி பெண். அதுலே தம்பதியர் நிற்கும்போது தலை உயரம் சமமா இருக்குமாம்! அட! ஆமாம்!! இந்தக் குளத்தை ராமர் குளமுன்னும் சொல்றாங்களாம். ராவணனுடன் போர் முடிஞ்சு அவுங்க அயோத்திக்குத் திரும்பும் சமயம், ராமனுக்கு ஏற்பட்ட ப்ரம்மஹத்தி தோஷத்தை நீக்க, வேள்வி நடத்த வேண்டி இருந்தது. குலகுருவான வசிஷ்டர், தர்ம ஆரண்யம் என்ற காட்டுப்பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கே போய் யாகம் செய்யச் சொன்னாராம். அதுதான் இப்போது கோவில் உள்ள இடமுன்னு ஒரு 'கதை' இருக்கு.
பச்சைப்பசேலுன்னு தண்ணி. பார்க்க இதுவும் ஒரு அழகுதான். முன்பொரு காலத்துலே அருமையான நீர் ஊற்றுக்கள் இதுக்கடியில் இருந்து சுத்தமான நீராக இருக்குமாம். இப்போ வெறும் மழைநீர் தேங்கிப் பாசிபிடிச்சுக் கிடக்கு. இந்தக் குளத்தின் அடுக்குப்படிகட்டுகளில் சின்னதும் பெருசுமா 108 சந்நிதிகள். அதுலே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூவரும் மூன்று பக்கங்களில் இருக்காங்க. அதிலும் விஷ்ணு, (நமக்கு வலப்பக்கம்) தெற்குப் பக்கம் தலைவச்சுப் படுத்துருக்கார். கைகால் அமுக்கும் ஸ்ரீதேவியைக் காணோம்! பெருமாளுக்கு ஒரு காலே இல்லை. ஆனா பக்கத்துலே ஒரு யானை இருக்கு:-)

புள்ளையார் தன் மனைவியை அணைச்சுப்பிடிச்சபடி உக்கார்ந்துருக்கார் ஒரு சந்நிதியில்.

அந்தக் காலத்துலே யாத்திரை செஞ்சு வரும் ஆட்கள் பத்துப்பதினைஞ்சுநாள் நடந்தே வருவாங்களாம். குளத்தில் மூழ்கிக் குளிச்சு அந்த 108 சந்நிதிகளையும் வணங்கி கோவிலுக்குள் போவாங்களாம். அதுவும் அந்தக் கடைசிப் படிக்கட்டில் இருந்து கோவில் முன்வாசலுக்கு உயரம் 52 அடிகளாம். மொத்தம் மூணுபகுதிகளா இருக்கு கோவில். குளம், சபை மண்டபம், சூரியன் கோவில்.(இது முன்மண்டபமும் கருவறையும்)

சபை மண்டபத்தில் ஏறிப்போகுமுன் வடக்கே ரெண்டு அலங்காரத்தூண்கள் இருக்கும் மேடைக்குக் கூட்டிப்போனார். இதே மாதிரி ரெண்டு தூண்கள் சபா மண்டபத்தின் எதிரிலும் (குளத்துக்கும் மண்டப வாசலுக்கும் இடையில்) இருக்கு. வடக்குப் பகுதி மேடைக்கு ஆறுபடிகள் ஏறி அந்த ரெண்டு தூண்களுக்கிடையில் கோவிலுக்குள் நுழையணுமாம். அப்போ இடது பக்கம் சபா மண்டபமும் நமக்கு வலது பக்கம் சூரியன் சந்நிதியுமா இருக்கும்.
முழுக்க முழுக்க மணல் கற்கள் கொண்டு கட்டியிருக்காங்க. சிமெண்டு இல்லாத அந்தக் காலக்கட்டங்களில் தனித்தனியாச் செஞ்ச பாகங்களை எப்படி இணைச்சுருப்பாங்கன்னு எப்பவும் எனக்குத் தோணும் சந்தேகத்துக்கு இங்கே விளக்கம் கிடைச்சது.

ஒவ்வொரு பகுதியா வேலைப்பாடுகளைச் செதுக்கிய பிறகு சேஷம் என்ற மரத்தின் துண்டுகளை வச்சு இணைச்சிருக்காங்க. dowel reinforced butt joint. இந்த முறை பல ஆயிரக்கணக்கான வருஷங்களா இணைப்பு வேலைகளில் பயன்பட்டு வருது. சில பெரிய தூண்களில் இதே முறையில் கற்களையே செதுக்கியும் வச்சுருக்காங்களாம்.மாதிரிக்கு ஒரு தூணையும் காட்டினார் பூபேந்த்ரா.

வெகுதூரத்துலே இருந்து யானைகள் மூலமா பெரிய பெரிய மணல் கற்களைக் கொண்டு வந்துக்காங்க. அந்த நன்றியை மறக்காமல் கோவிலில் 1200 யானைச்சிற்பங்களைச் செதுக்கி வச்சுருக்காங்களாம். எங்கே பார்த்தாலும் யானையோ யானைதான்.

அந்த சபா மண்டபத்தில் 52 அலங்காரத்தூண்கள். ஒவ்வொரு தூண்களிலும் கண்ணைவச்சா எடுக்க முடியலை. ஹைய்யோ.... என்ன ஒரு நுணுக்கமான வேலைப்பாடு! நீங்க எதைப்பார்த்தாலும் பார்க்காட்டாலும் இந்த சபா மண்டபத்துச் சிற்பங்களைக் கட்டாயம் பார்க்கத்தான் வேணும். அத்தனையும் அழகு. ராமாயண மகாபாரதக் காட்சிகள் ஏராளம். சீதையைக் கவர்ந்துகொண்டு புஷ்பக விமானத்தில் பறக்கும் ராவணன், வாலி சுக்ரீவன் சண்டை, ராவணனுடன் நடந்த போரில் அடிபட்டு மயக்கமான லக்ஷ்மணனை தன் மடிமீது தாங்கிக்கொண்டு அனுமன் கொண்டுவரப்போகும் சஞ்சீவி மலைக்காகக் காத்திருக்கும் ராமன், குற்றவாளிகளை யானையைக்கொண்டு தலையை இடறச்செய்யும் சிற்பம், உறங்கும் கும்பகர்ணனின் மீதேறி விளையாடும் வானர வீரர்கள், சிறுவர்களாக இருந்தபோது மரத்தில் ஏறி விளையாடிக்கொண்டிருக்கும் கௌரவச் சகோதரர்களை தன் அசாத்திய உடல்பலத்தால் மரத்தை உலுக்கிக் கீழே விழச்செய்த பீமனின் செய்கை (பாண்டவர்கள் மீது துரியோதனனின் வெறுப்புக்கு முதல்காரணமாகச் சொல்லப்படும் சம்பவம் இது), த்ரௌபதி சுயம்வரத்தில் அர்ச்சுனன் மீன்வடிவ யந்திரத்தை வீழ்த்தியது, பீமனும் துரியோதனனும் செய்த கதாயுதச்சண்டை, குழலூதும் கண்ணன், வெண்ணை கடைந்தெடுக்கும் பெண்கள், கோவர்தனகிரியைக் குடையாய் பிடித்த கண்ணன் இப்படி....ஏராளம்.

மண்டபத்தின் கிண்ணக்கூரைகளுக்குள்ளில்.... எப்படித்தான் செதுக்குனாங்களோ!!!! வளைவுகளும் தோரணங்களுமாக் கல்லில் ஒரு அட்டகாசம்!
அடுத்து கருவறை இருக்கும் முன்மண்டபத்துக்குள் போனால் பளிங்குத் தூண்களில் இன்னும் பலவித சிற்பங்கள். பாலியல் சிற்பங்களும் நிறைய இருக்கு. மேடம்...இதர் தேக்கியே oh zamaana mein lesbian pyaar bhi thaa. வழிகாட்டியின் குரல் பலமாக ஒலிச்சதும் அங்கே இருந்த சில இளைஞர்களின் கவனம் அந்தத் தூண்கள் மேல் திரும்புச்சு.

கிழக்குப் பார்த்தக் கருவறைக்குள்ளே எட்டிப்பார்த்தால் ஒன்னுமே இல்லை. ஒரு ஆழமான பள்ளம். ஏழு அடி உயர சூரியனின் தங்கச்சிலை இருந்ததாம். அதன் நெற்றியில் ஒரு பெரிய வைரக்கல்லைப் பதிச்சு வச்சுருந்தாங்களாம். வருசத்தின் ரெண்டு நாட்கள் காலையில் உதிக்கும் சூரியனின் முதல் கிரணங்கள் அந்த வைரக்கல்லில் பட்டு அந்த இடமே ஜொலிக்குமாம். அது 21 மார்ச், 22 டிசம்பர் தேதிகளில் (ஆஹா ஷார்ட்டஸ்ட் டே, லாங்கஸ்ட் டே சமயம்!!)

எல்லாம் சரி. சிலை இப்போ எங்கே? அந்த கிடுகிடுப்பள்ளம் ஏதுக்காக?

கஜனி முகமது வந்து கொள்ளையடித்த கோவில்களில் இதுவும் ஒன்னு. சிலைகளைப் பிரதிஷ்டை செய்யுமுன் ஏராளமான தங்கமும், நவரத்தினக்களும் சிலையின் பீடத்துக்கடியில் புதைக்கும் வழக்கம் இருந்ததை அறிந்து கொண்ட கஜனியின் ஆட்கள் எதையும் விட்டுவைக்காமல் கொண்டுபோய்விட்டார்கள். போகும்போதே தங்கள் வெற்றியைக் கொண்டாட அங்கங்கே பலசிலைகளை உடைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அதிலிருந்தும் தப்பிப் பிழைத்தவற்றைத்தான் நாம் இப்போ பார்க்கிறோம். காலம் செய்த கோலத்தால் இந்தச் சிற்பங்களின் மூக்குமுழியெல்லாம் கரைஞ்சுபோய் இருக்கு(-:

கருவறையை வலம்வர விஸ்தாரமான வழி இருக்கு. கருவறையைச் சுத்தி சூரியனின் 12 சிற்பங்கள் சுவரில் அங்கங்கே.. மாவிலை தோரணங்கள் போல சுத்திவர ஒரு செதுக்கல். இந்த 12 உருவங்கள் 12 மாசங்களைக் குறிக்குதாம். அப்போ அந்த 52 தூண்கள்? வேறென்ன... வாரம்தான்!!
கோவிலின் வெளிப்புறத்தில் மனிதவாழ்க்கையின் ஆரம்பம் முதல் கடைசிவரையுள்ள சிற்பங்கள். பிறப்பிலிருந்து இறப்பு வரை. இறந்தபின் வீட்டார் துக்கம் அனுஷ்டிக்க உக்காந்து அழுவதுகூட இருக்கு!
அங்கங்கே ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன், பிள்ளையார், அர்த்தநாரீஸ்வரர், கலைமகள் இப்படிச் செதுக்கித்தள்ளி இருக்காங்க. ஒரு இடத்தில் அண்ணாந்து பார்த்தப்போ உயிரோடு ரெண்டு ஆந்தைகள். "மேடம், நான் சொல்றேன். பகலில் ஆந்தைகளைப் பார்ப்பது கடினம். இப்படிப் பார்த்த முப்பதே நாளில் பணவரவு உண்டு.நீங்க ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சவங்க"
'அச்சச்சோ.... இது என்னவோ நெஜம்தான். இப்போ இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்குப் (வழிகாட்டிக்குப்) பணம் கிடைக்கப்போகுதே!"

அரைமணி நேரத்தில் சுற்றிப்பார்க்கலாம் என்று சொன்னவர் நம்ம ஆர்வத்தைப் பார்த்து ஒருமணி நேரம் விவரிச்சுக்கிட்டு இருந்தார். இந்தக் கோவிலில் பூஜை ஒன்னும் இல்லாததால் கோவிலை மூடும் வழக்கம் எல்லாம் இல்லை. அதான் கதவுன்னே ஒன்னும் இல்லையே! ஆனா ஒன்னு இந்த மாதிரி இடங்களுக்குப் போகும்போது , கொஞ்சம் யோசனை பண்ணிக்கிட்டு நிக்காமல் ஒரு வழிகாட்டியை ஏற்பாடு செஞ்சுக்கறது நல்லது. இல்லேன்னா இவ்வளவு விவரங்கள் கிடைச்சிருக்காது.

நம்ம மாமல்லபுரத்தில் நடக்கும் நாட்டிய விழாவைப்போல இங்கேயும் வருடம் ஒருமுறை நாட்டிய விழா நடக்குதாம்.

தொல்பொருள் இலாக்கா கோவிலை ஏற்றெடுத்த சமயம் அங்கங்கே உடைஞ்சு விழுந்திருந்த பாகங்களையெல்லாம் சேகரிச்சு ஒரு மரத்தடியில் வச்சுருக்காங்க. ம்யூஸியம் கட்டப்போறாங்களாம். அப்போ இவையெல்லாம் அங்கே காட்சிக்கு வைக்கப்படுமாம்.

நாங்க வெளிவந்த சமயம் ஒரு பேருந்து நிறையச் சுற்றுலாப் பயணிகள் வந்து இறங்குனாங்க. பக்கத்துக் கட்டிடத்தில் சுற்றுலாத்துறையினர் இயக்கும் ஒரு உணவு விடுதி இருக்கு. எல்லோரும் அங்கே படையெடுத்ததால் நாங்க வேற இடத்துலே சாப்பிடலாமுன்னு 'எஸ்'ஆகிட்டோம். ஒரு அரைமணி நேரப்பயணத்தில் இன்னொரு இடத்தில் டைனிங் ஹால் ஒன்னு இருக்காம். அங்கே போனோம். இடம் சுத்தமா இருக்கான்னு பார்த்துக்கிட்டு டோக்கன் வாங்கினோம். வெறும் 22 ரூபாய்கள்தான். சாப்பாடு பரவாயில்லை.

கொஞ்சம் படங்களை இங்கே ஆல்பத்தில் போட்டுருக்கேன்.


பயணம் தொடரும்.........:-)

31 comments:

  1. சிதைந்த நிலையிலேயே இவ்வளவு அற்புதம்மா இருக்கே... ஒரிஜினலா எப்படி இருந்திருக்கும்.!!!!!.யாராவது டைம் மெஷின் கண்டுபிடிச்சா கொள்ளாம்.

    //பகலில் ஆந்தைகளைப் பார்ப்பது கடினம். இப்படிப் பார்த்த முப்பதே நாளில் பணவரவு உண்டு//.

    கரெக்ட். அதுக்குள்ளேதான் சம்பளப்பணம் வந்துடுமே. :-))).

    ப்ளாகில் பாத்தாலும் பலன் உண்டா.. கேட்டுச்சொல்லுங்க. :-)).

    ReplyDelete
  2. பதிவில் பகலில் பாத்த ஆந்தை காசு கொண்டுவருமான்னு தெரியலயே.. :) ஆனா 30 நாள் ந்கறது நல்ல சேஃப் காலக்கெடு ..

    ReplyDelete
  3. புகைப்படங்கள் அருமை..
    அப்ப பதிவு?
    அதுவும் அருமை..
    :)

    ReplyDelete
  4. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி

    ReplyDelete
  5. வாங்க அமைதிச்சாரல்.

    ஆஹா.... இந்தச் சம்பளப்பணம் ஐடியா தானா அது!!!!!

    பலன் 'மாசக்கூலி' ஆட்கள் எல்லோருக்குமே உண்டாம்:-)))

    ReplyDelete
  6. வாங்க கயலு.

    ஆமாம்ப்பா அது நல்ல டெக்னிக். ஒர்க் அவுட் ஆயிருச்சு:-)

    ReplyDelete
  7. வாங்க எறும்பு.

    அருமைக்கு நன்றிகள்.

    எனக்கும் உங்களையெல்லாம் சந்திச்சது மகிழ்ச்சியா இருந்துச்சுப்பா.

    ReplyDelete
  8. இடுகையின் தலைப்பைக் கொஞ்சம் மாற்றி இருக்கேன்:-)

    ReplyDelete
  9. படங்கள் எல்லாம் அருமை. அந்த சூரியக்குளம், வேலைப்படு மிக்க தூண்கள், அந்த ஆந்தை கூட அழகா இருக்கு.....? இடம் அப்படி...

    ReplyDelete
  10. இங்கெல்லாம் போகமுடியுமோ,முடியாதோ! உங்க புண்ணியத்தில் அருமையான படங்களையாவது பார்க்கமுடிந்ததே.மிக்க நன்றி.

    ReplyDelete
  11. இன்னைக்கு க்ளாஸ் ரொம்பவே சுவாரசியமா இருந்துச்சு. குறிப்புக்கள் எடுத்துக்கிட்டாச்சு.

    ReplyDelete
  12. நாங்களும் பகலில் ஆந்தையைப் பார்த்து விட்டோம்,உங்கள் புண்ணியத்தில்.

    பயணக் கட்டுரை,படங்கள் எல்லாம் அருமை.

    ReplyDelete
  13. இது போன்ற விசயங்களை விக்கி பீடியாவில் இணைக்கின்றீர்களா? செய்ய வேண்டுமே? ஆவணப்படங்கள் இது.

    இதயம்பேசுகிறது மணியன் போல் உலகம் சுற்றும் வாலிபி துளசி கோபால். சரிதானே?

    ReplyDelete
  14. யப்பா..ஆஆஆஆ....எப்படி தான் அவ்வளவு நுணுக்கமாக செய்தாங்களோ!!!!

    படங்களுக்கு மிக்க நன்றி டீச்சர்..;))

    ReplyDelete
  15. வாங்க கண்ணகி.

    சொன்னீங்க பாருங்க அதுலே நூத்துலே ஒரு வார்த்தை.

    இடம் அப்படி!!!! ரசிக்காமல் திரும்ப முடியாது!!!!

    ReplyDelete
  16. வாங்க குமார்.

    என்ன இப்படிச் சொல்லிட்டீங்க?

    போனமாசம் வரை எனக்கும் அங்கே போகச் சான்ஸ் கிடைக்குமா என்பதே தெரியாமத்தான் இருந்துச்சு. வேளைன்னு ஒன்னு வந்துட்டா....போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான்.

    அந்த சேஷம் மர இணைப்பைப் பார்த்ததும் உங்க நினைவு வந்ததென்னமோ நெஜம்.

    ReplyDelete
  17. வாங்க புதுகைத் தென்ரல்.

    குறிப்பு எடுத்தது நல்லதாப் போச்சு. இது பரிட்சைக்கு வரும் பகுதி:-))))

    ReplyDelete
  18. வாங்க கோமதி அரசு.

    நீங்க தொடர்ந்துவருவது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு.

    ReplyDelete
  19. வாங்க ஜோதிஜி.

    விக்கிப்பீடியா.....
    முன்பே ஒருமுறை நம்ம ரவிஷங்கர் நியூஸியை பற்றி நாடுகள் என்ர வரிசையில் விக்கிபீடியாவில் எழுதித்தரச் சொல்லி இருந்தார்.

    இந்த நாட்டுச் சரித்திரத்தைச் சட்னு ஒரு பக்கத்தில் அடக்க முடியலை. அதுவுமில்லாம நான் நடக்கும் நடை வேற மாதிரி:-)
    அதான் இதுவரை மூச் விடலை(-:

    இப்போ இதை இணைப்பதென்றாலும் நடையை மாத்தணுமே!

    நீங்க சொல்லும் மணியன் அவர்கள், நியூஸிப் பயணத்தை எழுதுமுன்பு அங்கே வந்துருந்தார்.அது ஆச்சு 20 வருசம். நம்ம வீட்டில்தான் ஒரு வாரம் தங்கி தெற்குத்தீவைச் சுற்றிவந்தார்.

    ஒருவேளை அப்போதிருந்தே பயணத்தொடர் எழுதணுமுன்னு மனசுலே பதிஞ்சுருச்சோ என்னவோ!!!

    ReplyDelete
  20. வாங்க கோபி.
    எனக்கும் வியப்போ வியப்புதான்!!!!!!!!!!

    ReplyDelete
  21. அந்தத்தோரணை வளைவும் சிற்பங்களும் ஆச்சரியப்பட வைக்கின்றன.

    ReplyDelete
  22. என்ன ஒரு நுணுக்கமான வேலைப்பாடு துளசி. இந்தப் பயணத்தையே ஒரு புத்தகமாப் போடலாம் போல
    இருக்கேப்பா.
    ஆனால் படங்கள் கண்டிப்பா வரணும். எப்படி சிமெண்ட் இல்லாமல் பைண்டிங் செய்தாங்க?
    விம் ப்ளீஸ்:)

    ReplyDelete
  23. அருமையான பதிவு. எனது Facebook ல் இப் பதிவைப் பகிர்ந்திருக்கிறேன்.

    ReplyDelete
  24. Fantastic article and superb pictures.

    ReplyDelete
  25. வாங்க மாதேவி.

    அங்கேயாவது மணல்கற்கள். கொஞ்சம் நம்ம இஷ்டத்துக்கு வளைஞ்சு கொடுக்கும். ஆனால் மார்பிள் கற்களிலிலும் இந்த வளைவுகளோடு சென்னையிலேயே ஒரு சமணர் கோவில் இருக்கு!!!

    ReplyDelete
  26. வாங்க வல்லி.

    சரியாப் போச்சு. விடியவிடிய ராமாயணமுன்னு சொல்லலமுன்னு நினைச்சுக்கிட்டு வந்து மீண்டும் ஒருமுறை பதிவைப் படிச்சால்......

    படிச்சால்????

    அந்த விளக்கம் பற்றிய ஒரு பாராவைக் காணோம்!

    ப்ளொக்கருக்குப் பசியோ?
    1200 யனைகளையும் முழுங்கிருச்சேப்பா!!!

    இப்போ இணைச்சுருக்கேன்.

    ஒரு பார்வை பார்த்துருங்க.

    மாப்ஸ் ப்ளீஸ்.

    ReplyDelete
  27. வாங்க டொக்டர் ஐயா.

    ரொம்ப நன்றி.

    முகப்புத்தகத்தில் உங்க இடத்துக்கான
    ஒரு சுட்டியையும் தந்துருங்க.

    உள்ளே நுழைய முடியலை.

    ReplyDelete
  28. வாங்க சந்தியா.

    ரொம்ப நன்றிப்பா.

    மீண்டும் வந்து போகணும் நீங்க.

    ReplyDelete
  29. அருமையான இடங்கள்

    ReplyDelete
  30. வாங்க ஸ்டார்ஜன்.

    இந்தியாவிலே இப்படிப்பட்ட அருமையான இடங்கள் ஏராளமா இருக்கு. அதைப் போற்றிக் காப்பாத்திவைக்கத்தான் நமக்குத் தெரியலை என்பது கொஞ்சம் வருத்தம்தான்.

    ReplyDelete
  31. Please try;_
    http://www.facebook.com/home.php?ref=home#/profile.php?ref=profile&id=750020267

    ReplyDelete