Monday, February 12, 2007

அலை ஓய்ந்தது (-:

நெடுநெடுன்னு உயரமாவும், ஒல்லியாவும் இருந்த இளைஞர் ஒருத்தர்
கூட்டம் நடந்து கொண்டிருக்கும் சமயம் வந்துசேர்ந்தார். நாங்க அப்ப பேசறதையெல்லாம்
பேசிமுடிச்சுட்டோம்ன்ற நிலை. வந்தவர் கையிலிருந்த ஒரு இனிப்புகள் நிறைந்த பாக்ஸ்
திறக்கப்பட்டு எல்லோருக்கும் இனிப்புகள். அருமையான மில்க் ஸ்வீட்ஸ். சிலருக்கு
அவரை ஏற்கெனவே தெரிஞ்சிருந்துச்சு. சாகரன்னு தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டார்.
'சாகரனின் அலைகள்'னு எழுதுறவர். இருட்டும் வேளை. மசமசன்னு ஒரு மங்கல்.
நேராய் என்கிட்டே வந்தவர்,'வணக்கம் அக்கா. நல்லா இருக்கீங்களா?'ன்னு கேட்டார்.



வலைமூலம் எனக்குக் கிடைத்தக் கணக்கில்லாச் சொந்தத்தில் இவரும் ஒரு தம்பின்னு
நினைச்சேன். 'நாந்தாக்கா கல்யாண்'ன்னு சொன்னார். எனக்கு அதிர்ச்சி. தேன்கூட்டில் இருந்து
அப்பப்ப அவுங்க புதிய திட்டம்,மாற்றம்னு எதாவது பரிசீலிக்கும்போது ,'அக்கா... இந்த மாதிரி
...... ஒரு விஷயம் பரிசிலிக்கப்போறோம். உங்க தளத்தை வச்சு சோதனை செய்யலாமுன்னு
இருக்கேன். என்ன சொல்றீங்க? இதுலே ஏதும் ஆபத்து இல்லை'ன்னு கேட்டு மடல்கள்
அனுப்புவார். நான் ஒரு க.கை.நா என்றபடியாலே ஒண்ணும் புரியாது. என்ன ஏதுன்னு
நொச்சுநொச்சுன்னு விளக்கம் கேப்பேன். பொறுமையா பதில் சொல்வார். பரிசோதனைக்கு
இருக்கற எலியா நாம? சரி.. இருந்துக்கலாமுன்னு அதுலே பங்கெடுத்துருக்கேன். அந்த
மடல்களின் சொந்தக்காரர்தான் இவர்ன்னு தெரிஞ்சதும், மகிழ்ச்சியாத்தான் இருந்துச்சு.



தேன்கூடு ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சு. இந்த ஆண்டுவிழாவை உங்க எல்லோரோடும்
கொண்டாடி, சந்தோஷத்தைப் பகிர்ந்துக்கணுமுன்னுதான் இனிப்போட வந்தேன்னு சொன்னார்.
பழகுவதற்கு இனிமையான மனிதர். அங்கே இருந்த கொஞ்ச நேரத்துலேயே கலகலப்பா
எல்லார்கிட்டேயும் பேசிச் சிரிச்சுக்கிட்டு இருந்தார்.



அதுக்கப்புறமும், அவர் ச்சென்னையிலிருந்து திரும்பிப்போகு முன்னே சிலதடவைகள்
செல்லுலே கூப்புட்டுப் பேசுனார். அருமையான நகைச்சுவையோடு நாட்டுநடப்பு, ஊர் நடப்புன்னு நிறையப் பேசுனோம்.



இங்கே நான் திரும்பி வந்தபிறகு, ஒரு முறதமிழ்மணத்துலே 'பிங்'செய்யமுடியாமப் போச்சு. சரி, தேன்கூட்டுலேயாவது நம்ம பதிவு தெரியுதான்னு பார்க்க அங்கே போனா அங்கேயும் நம்மளைக் கண்டுக்கலை.
அப்பதான் தேன்கூட்டுக்கு ஆதரவு திரட்டறதுக்காகவே நான் ச்சென்னைக்குப் போனேன்னு ஒரு 'கிசுகிசு' வந்திருந்துச்சு.



என்னடா.... இது எனக்கு? "இப்படியெல்லாம் மக்கள்ஸ் வதந்தி பரப்பிக்கிட்டு இருக்காங்க. இங்கே வந்து பார்த்தா
என் பதிவைக்கூட உங்க தளம் காமிக்கலை.கடைசியில் நானே பிங் செய்ய வேண்டியதாப்போச்சு'ன்னு ஒரு புகார்
அனுப்புனேன். அப்பவும் அதுக்குப் பொறுமையாப் பதில் அனுப்புனது நம்ம கல்யாண்தான்.



இதுதான் நான் அனுப்புன மடல்:


சரியாப்போச்சு.
அங்கங்கே எதோ 'நான்'தான் தேன்கூட்டுக்கு வரிஞ்சுகட்டி ஆள் சேர்க்கிறதா
'கிசுகிசுக்கள்' வந்துக்கிட்டு இருக்கு.அப்படியான்னு இங்கே வந்து பார்த்தா நம்ம ப்ளொக்லே போட்ட
புதுப் பதிவுகளைக்கூடக் காட்ட மாட்டேங்குறீங்க. அப்புறம் 'பிங்' பண்ணி விட்டுருக்கேன்.

ஏங்க தானாவே பதிவுகள் 'இடுகைகள்' பக்கத்திலே வராதா?
ஒண்ணும் புரியலையேங்க.

என்றும் அன்புடன்,
துளசி கோபால்

அதுக்கு வந்த பதிலும் இதோ.


Thulasi Madam,

Vanakkam.

அட.. என்னங்க மேடம் இப்படி சொல்லிட்டீங்க?!

Nothing like that. There is a logic... based on which, there is 2 different aggregating
styles. one is to aggregate once in every 1 hour. another is to aggregate in 24 hours.
If you do post regularly like every 15 days. it will automatically add it up to the 1 hour
method. Otherwise wait for 1 day.

By the way, if you can, please use ping itself whenever you post. It really reduces
lots of over heads in the backend side.

Kisu - Kisu pathi ellam kavalaipadatheenga. Crooked minded peoples are there
at all places.

Anbudan,
Kalyan.

இப்படியெல்லாம் நல்ல நட்போடு இருந்த ஒருத்தர் திடீர்னு மறைஞ்சதா, நம்ம மதியின் பதிவைப்
பார்த்ததும் ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்.

சாகற வயசா இது? இன்னைக்கெல்லாம் இருந்தாலும் ஒரு முப்பத்திரெண்டைத் தாண்டுவாரா என்ன?
சாகரனின் அலைகள் இப்படி ஓய்ஞ்சது ஒரு திடுக்கிடும் செய்திதான்.

அன்னாருக்கும், அவர் குடும்பத்தினருக்கும், அவரின் உற்ற நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளும் நேரம், கல்யாணுக்கு என் கண்ணீர் அஞ்சலி.

29 comments:

  1. ரொம்ப சோகமான விஷயம்தான். அவரின் குடும்பத்திற்கு எனது அனுதாபங்கள்.

    ReplyDelete
  2. இத்தனை இளம் வயதா?
    சோகம். ரெம்ப சோகம் அக்கா.

    என்னோடும் மின்னஞ்சல் தொடர்பு வச்சிருந்தார்..

    ReplyDelete
  3. முத்தமிழ் மன்றத்தின் இனிய நிர்வாகியை இழந்து தவிக்கிறோம். பழகுதற்கு இனியவர், வயதால் இளையவர்.

    இவற்றை எல்லாம் பார்க்கும்போது கடவுள் என்பதே வெறும் மாயையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    அவரது இழப்பால் வாடும் அவரது தாய், தந்தை, மனைவி, குழந்தை ஆகியோருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை.

    சோகத்தில் முத்தமிழ்மன்ற குடும்பமும் பங்கு கொள்கிறது!

    ReplyDelete
  4. என் அனுதாபங்களும் கூட. 2004-ல் அவர் முதன் முதலில் மரத்தடியில் அறிமுகம் செய்து கொண்ட போது அவருடம் மெயில் தொடர்பு வந்தது.

    நான் சவுதியிலே வேலை பார்த்த கம்பெனியில் வேலை பார்க்கிறார் என்றவுடன் ஆர்வம் கொண்டு தொடர்பு கொண்டது தான்.

    அவரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    அவருக்கு வர்ணிகா எனற ஒரு 3 வயது செல்ல மகள் இருப்பது தெரிந்தது.
    ஒன்று புரியாத வயதில் தந்தையை இழந்த வர்ணிகாவுக்கு என் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும்.

    அன்புடன்
    சீமாச்சு...

    ReplyDelete
  5. //அன்னாருக்கும், அவர் குடும்பத்தினருக்கும், அவரின் உற்ற நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளும் நேரம், கல்யாணுக்கு என் கண்ணீர் அஞ்சலி. //

    கண்ணீர் அஞ்சலியில் நானும் பங்குகொள்கிறேன்... மிகவும் வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
  6. மிகவும் வருந்தத்தக்க செய்தி. அவருக்கு என்னுடைய அஞ்சலி. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். :-(

    ReplyDelete
  7. மன்னிக்கவும்.

    ஜூலை 1978ல் பிறந்தவர்.
    28 வயது மட்டுமே அவருக்கு.

    ReplyDelete
  8. கொத்ஸ், சிறில்,மூர்த்தி, சீமாச்சு, கோவி.கண்ணன், ஜி,

    நன்றி.

    சிறில்,

    வயசுகூட 28 தானாம். நம்ம மூர்த்தி எழுதி இருக்கார் பாருங்க.
    நான்கூட அதிகம் இருந்தால் 32க்கு மேலே இருக்காதுன்னுதான் நினைச்சேன்.
    28ன்னதும் கதி கலங்கிப் போய்ட்டேன். சோகத்தோட சுமை இன்னும் கூடிருச்சு.

    ReplyDelete
  9. எப்படித்தான் இப்படி நடக்கிறதோ.
    கல்யாணம் ஆகிக் குழந்தையும் இருக்காமே.
    என்ன அப்படி ஒரு அதிர்ச்சி அட்டாக் வந்ததோ.
    ரொம்பப் பாவம் குடும்பம்.
    அம்மா,அப்பாக்களுக்கு இதைவிட சோகம் உண்டா.

    ReplyDelete
  10. மனசு கேக்கலங்க.
    என்ன வாழ்க்கை இது?

    ReplyDelete
  11. இன்று காலை தமிழ்மணத்தை திறந்தவுடன் செய்தி அறிந்து மிகவும் வருத்தமாகியது மனது. இறப்பு என்பது எந்த வயதில் வந்தாலும் குடும்பத்துக்கு மிகவும் துயரமானது தான்.ஆனால் இளவயதில் எனும்போது அவருடைய கனவுகள் ,மனைவி , குழந்தை எல்லாம் கவனம் பெற்று கலங்க வைக்கிறது.

    ReplyDelete
  12. பார்த்ததில்ல, பேசுனதுல்ல, ஆனாலும் கதி கலங்குது மரணத்த கேட்டு!!!
    இதெல்லாம் ஒரு சாகற வயசா? ஏனிப்படி நடக்குது? போதும் நீ பண்ண சேவைன்னு, திரும்பி கூப்பிடும்போதுகூடவா, கண்ணு முழிச்சு பார்க்க்கூடாது, தப்பான ஆள கூட்டிவந்தோன்னு!!!
    ஒன்னும் புரியல போங்கக்கா!!!

    ReplyDelete
  13. அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். மிகவும் வருத்தமாக இருக்கிறது.

    இப்படியான அகால இழப்பிற்கு யாரால் என்ன ஆறுதல் சொல்லித்தேற்ற முடியும்?

    கந்தன் தான் வழிகாட்ட வேண்டும்.

    ReplyDelete
  14. :-((( என்னை விட இளையவர்... சாகிற வயசே இல்லை... மனசு ஆறலை... :-(

    தகடூர் மொழி மாற்றியை தனியே வலையேற்ற முடியாமல் தவித்த போது உடனடியாய் மின்னஞ்சல் தொடர்பு கொண்டு முதல் ஒரு வருடம் இலவசமாக வலை வழங்கி இடத்தினை அளித்தார். பின் மேலும் காலவரையறையின்றி நீட்டிக்க வேண்டுமெனில் செய்கிறேன் என மடல் இட்டிருந்தார்.

    ஆனால் முன்பு தகடூர் மாற்றிக்கு மட்டுமே ஏற்படுத்திய தளம் இப்போது என் சொந்த பயன்பாட்டுக்கும் இருப்பதால் நான்தான் வேறு வலை வழங்கி சேவைக்கு மாறிவிட்டேன். பின்னாளில் அவரிடம் தெரிவித்தபோது அதைக்கூட ஏன் முன்பே சொல்லவில்லை என அவர் கோபிக்கவில்லை.

    ஒருமுறை கூட நேரில் பார்த்துப் பேசும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை என்பதை எண்ணி வருந்துகிறேன்.

    சத்தமில்லாமல் அவர் செய்த தமிழ்ப்பணிகளால் பயனுற்றோர் ஏராளம்.

    அன்னாரின் இழப்பு தமிழ் வலைப்பதிவுலகில் ஈடு செய்ய முடியாதது.

    அவரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  15. வல்லி, கஸ்தூரிப்பெண், முத்துலட்சுமி, ராம்ஸ்

    இந்த துக்கத்தை எப்படித்தான் தாங்கப் போறாங்களோ அவரோட குடும்பத்தினர்?
    மனசே வெறுத்துக்கிடக்கு.

    சிறில்,

    நானும் இப்படித்தான் புலம்பிக்கிட்டு இருக்கேன்.
    ஒண்ணூம் ஓடலை இன்னிக்கு(-:

    கோபி,

    அருமையான மனிதர்ப்பா. ஒருத்தரோட மறைவுக்குப்பின்னே இப்படி
    நம்மாட்கள் மனசு துடிக்குதுன்னா எவ்வளவு நல்லவரா இருந்துருக்கணும்?
    ஆனாலும், இது அநியாயமான மரணம்(-:

    ReplyDelete
  16. துளசியக்கா,

    கடல் கடந்து வாழும் தமிழர்களிடையே ஒரு இணைப்பாக இருக்கும் தேன்கூடு திரட்டியை நிறுவியவர். யார் என அறியாமல் இந்தச் சேவையைப் பயன்படுத்தி வருபவன் நான்.

    என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    குடும்பத் தலைவனை இழந்து வாடும் துணைவியார், குழந்தை, குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

    தொலைவிலிருந்து வெறும் அனுதாபம் மட்டுமே தெரிவிக்க இயலும். அது மட்டுமே போதாது.

    இழப்பிலிருக்கும் அவரது குடும்பத்தார்க்கு, சிறு குழந்தையின் கல்வி-எதிர்காலத்திற்காக வேறு எந்த வகையிலும் உதவியாய் இருக்க இயலுமெனில் என்னால் இயன்ற உதவியைச் செய்யச் சித்தமாயுள்ளேன்.

    29 வயது மரணிக்கிற வயதா? :-((

    ReplyDelete
  17. ஹரிஹரன்,

    நானும் இதைப்பத்தி யோசனையாத்தான் இருக்கேன். நம்ம மதியும் உதவிகள் எதாவது
    செய்யணுமுன்னுசொல்லிக்கிட்டு இருக்காங்க. எந்தமுறையில்ன்னு தெரியலை.
    எதா இருந்தாலும், இப்போதைக்குச் செய்யவேண்டிய அவசியமான உதவிகளை நாம
    இங்கிருந்து ஒண்ணும் செய்ய முடியாது.

    ஊரில் நடக்க வேண்டிய விஷயங்கள் முதலில் நடக்கணும். அப்புறமா குடும்ப நண்பர்களா
    இருக்கும் சென்னை வலை நண்பர்கள் சேர்ந்து, தேவையான உதவிகளைப்பத்திக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு
    எல்லாரும் சேர்ந்து செய்யலாம்.

    ReplyDelete
  18. நேற்று இரவு செய்தி கேள்விபட்டதிலிருந்து இன்னும் மனம் ஆற மாட்டேங்குது. மரணம் எவ்வளவு கொடுரமானது. அவர் குடும்பத்தினர் இந்த பேரிழப்பிலிருந்து மீண்டுவரவேண்டும்.

    அதற்காக நம் வலை நண்பர்கள் கூட்டுப்பிரார்த்தனை செய்யலாமே. எண்ணற்ற இதயங்களின் பிரார்த்தனையும் அன்பும் அந்த குடும்பத்திற்குப் போய்ச்சேருமே....( என் வலையில் எழுதியிருந்தேன். ஆனால் புதிய பிளாக்கர் மாற்றம் காரணமாக உள்ளீடு செய்ய முடியவில்லை)

    ReplyDelete
  19. திரு. கல்யாண் அவர்களின் ஆன்மா சாந்தியடைய முருகனை வேண்டுகிறேன்.
    அவரது குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    வரும் புதனன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அவர் இல்லத்தில் ஈமக்கிரியை நடைபெற இருப்பதாக முத்தமிழ்மன்றத்தில் படித்தேன்.
    முடிந்த அன்பர்கள் போய் அஞ்சலி செலுத்தினால் எங்களைப் போன்ற இயலாதவர்களுக்கு ஒரு ஆறுதலாய் இருக்கும்.

    முருகனருள் முன்னிற்கும்.

    ReplyDelete
  20. மக்கள்ஸ்,

    நம்ம கல்யாண் அவர்களின் ச்சென்னைவீட்டு விலாசம், ஒரு நண்பர்மூலம் கிடைத்துள்ளது.

    ஈமச்சடங்குகளில் கலந்துகொள்ள விரும்பும் ச்சென்னை அன்பர்கள் தனிமடலிட்டால்
    விலாசம் தருகிறேன்.

    தங்கள் மெயில் ஐடிகளுடன் வரும் பின்னூட்டத்தை வெளியிடமாட்டேன்.

    ReplyDelete
  21. மிகவும் துக்காரமான செய்தி.அன்னாரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  22. துளசிம்மா

    ஆட்டோவில் வர்றப்ப நாம் பேசிட்டு வந்தது இப்போ மாதிரி இருக்கு.

    எத்தனையோ விஷயம் இருக்க கல்யாணைப்பத்தி ஏன் நீங்க சொல்லணும், நான் கேட்கணும்

    விதி வலியது
    அதை மீற முடியாதும்மா

    இதிலிருந்து எப்படியும் வெளியே வந்துதான் ஆகணும்
    ஆனாலும் முடியல
    பாரமா இருக்கு

    ReplyDelete
  23. மிக வருத்தமான செய்தி.
    ஒரு சிறந்த அறிவாளி என்பதை விட சிறந்த மனிதர் இழப்பைதான் என்னால் தாங்க முடியவில்லை.
    அவருடன் இதுவரை பழகியது இல்லை. ஆனால் பழகியவர்கள் எழுதியதை படிக்கும்போது அவரை பாராமல் இழந்துவிட்ட சோகம் அதிகம் தெரிகிறது.

    :(((((


    சென்ஷி

    ReplyDelete
  24. முத்துகுமரன், சிவா எஸ்.கே ஐயா, செல்லி., மதுமிதா, சென்ஷி

    நன்றிங்க, வருகைக்கும், வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டதற்கும்.

    இன்னும் மனவருத்தம் குறையலை. சமாதானக்கேடா இருக்கு.
    எழுதிவச்சப் பதிவுகளைப் போடவும் மனசு வரலை.

    கல்யாணுடைய அடக்கம் முடியும்வரை பதிவு வேண்டாமுன்னு முடிவு.

    ReplyDelete
  25. அக்கா!
    நேரடித் தொடர்பென்னு ஏதுமில்லை;அவர் பதிவு ஒன்னோ;இரண்டோ படிச்சதா ஞாபகம்;ஆனாலும் நம்ம மத்தியில் உலாவிய ஒருவர்;திறமைசாலியும்;எல்லோரையும் அரவணைத்துப் போபவரும் இவ்வளவு சொற்ப வயதில் ஓய்ந்தது. மிக வேதனையாக இருக்கிறது.
    அவர் ஆத்மா சாந்தியடையட்டும்; காலம் அவர் குடும்பத் துயரைக் கரைக்கட்டும்.

    ReplyDelete
  26. இவ்வளவு சின்ன வயது என்று தெரிந்தது மனம் ரொம்ப பாரமாகி விட்டது

    ReplyDelete
  27. ஒரு வருடம் ஆகி விட்டது. அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete