Monday, March 04, 2013

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது!!!!


உண்மைதான் போல! உள்ளுர் மக்களுக்கு தங்கள் ஊரைப்பற்றியும்  மாயூரநாதரையும் முக்கியமா அபயாம்பிகையைப் பற்றியும் ரொம்ப  ரொம்ப உசந்த அபிப்பிராயம்!  பெரிய கோவில் என்றால் இந்த ஊர் மக்களுக்கு மாயூரநாதர் கோவில்தான்!  ஊரும் லேசுப்பட்ட ஊர் இல்லை.  காசிக்குச் சமமான ஊராம். காவிரி நதியின் கரையில் இருக்கும்  ஆறு தலங்கள்  காசிக்குச் சமம் என்கிறார்கள்.   திருவையாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர், திருவாஞ்சியம், திருசாய்க்காடு வரிசையில்  இந்தத் திருமயிலாடுதுறை.  இதுக்கு மாயூரம். மாயவரம், மயிலாடுதுறைன்னு பல பெயர்கள்.

மாயவரத்தின்  புகழ்பெற்ற  மணிக்கூண்டை க் கடந்து போகும்போதுதான்  அச்சச்சோ  க்ளிக்கலையேன்னு தோணி, க்ளிக் க்ளிக்.  சரியா வரலை.  ஓடும்வண்டியில் இருந்து எடுக்கும் படங்கள்  சொதப்பலாத்தான் ஆகிப்போகுது பலசமயங்களில்:(

இந்தப்பக்கங்களில்  எல்லாக்கோவில்களுக்குமே வயசு ரெண்டாயிரமுன்னு  ஒரே குத்துமதிப்பாச் சொல்றது போலவே இங்கேயும்!  நாம் வேணா ஒன்னு செய்யலாம் உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்..... 1500ன்னு வச்சுக்கலாம்.  சரியான காலம் யாருமே எழுதி வைக்கலை பாருங்க:(  குலோத்துங்க சோழர்காலத்துலே கோவிலை புனரமைப்பு செஞ்சாருன்னு ஒரு சரித்திரக்குறிப்பு  இருக்காம். (அதுவும்  இவர்  ஒன்னாமவரா, ரெண்டாமரா மூணாமவரான்னு தெரியலை:(  தெரிஞ்சவுங்க சொல்லலாம் ப்ளீஸ்) மூணாமவர்ன்னு வச்சுக்கிட்டாலும்  அவர் ஆண்ட  நாற்பது ஆண்டுகாலத்தில் (கி.பி. 1178-1218)  புனரமைப்பு நடந்துருக்கணும்.  ஆனால் கோவில்  இப்பவும் கூட  நல்லா ஸ்ட்ராங்காத்தான் இருக்கு.

கிட்டத்தட்ட ஒரு  முக்காலரைக்கால் ஏக்கர் விஸ்தீரணம். சரியாச் சொன்னால் 85  செண்ட். கிழக்கு பார்த்த ராஜகோபுரத்துக்கு ஒன்பது நிலை !  பிரமிப்போடு பார்த்துக்கிட்டே  நாலேமுக்கால் மணிவாக்கில்  கோவிலுக்குள் நுழைஞ்சோம்.  கோபுர வாசலே கூட அகலம் அதிகமுள்ள கட்டுமானம்.  இந்த ராஜகோபுரத்துக்கு  இந்த வருசம் ஐநூறாவது பொறந்தநாள்!    கட்டிய காலம் கிபி  1513-1515,  கோவில் குறிப்பு சொல்லுது. கருங்கல் பாவிய பாதை நீளமாப்போகுது  கோபுரவாசலின் அடுத்ததிறப்புக்கு வந்தால்  மரங்கள் அடர்ந்த வெளிப்பிரகாரம்.

சட்னு கண்ணில் விழும் குளம். இதுவும் நல்ல சுத்தமாவே இருக்கு.நடுவில்  குட்டியா ஒரு நீராழி மண்டபம். ப்ரம்ம தீர்த்தம். சாக்ஷாத் ப்ரம்மனே உண்டாக்கியது என்று நம்பிக்கை!





அழகான தூண்களுடன் இருக்கும் முன்மண்டபத்து விதானங்களில் கண்ணைப்பறிக்கும் வண்ண ஓவீயங்கள். ஃப்ரேம் போட்டு வச்சமாதிரி இருக்கு!  அதையும் கடந்து நெடும்பாதையில் போறோம். கோவில் உள்பிரகாரத்துக்குள் நுழைஞ்சவுடனே கொஞ்சம் இருட்டா இருந்துச்சு. பவர்கட் கோவிலையும் விட்டு வைக்கலை:(


கண்ணில் பட்ட புள்ளையார் மற்றும்  கடவுளர்களைக் கும்பிட்டபடியே மூலவரையும் தரிசனம் செஞ்சோம். அதென்னவோ  குருக்கள்கூட யாருமில்லை அங்கே. அபி அப்பா ஊரில் இருந்துருந்தால்  நல்ல விளக்கம் சொல்லி இருப்பார்.  கூட்டமும் அதிகமில்லை. அங்கொன்று இங்கிரண்டு என்றுதான்..... ஏகப்பட்ட சிவலிங்கங்கள்!  வழக்கமான சிவன் கோவில்களில் இருக்கும்  சமயக்குரவர் நால்வருடன்  அறுபத்துமூவர்.  நடராஜரும் சிவகாமியும், தக்ஷிணாமூர்த்தியும் ...அப்புறம்..... சரியா நினைவுக்கு வரலை:(

அபயாம்பிகைக்குத் தனிக்கோவிலாகவே அமைஞ்சுருக்கு!  ப்ரகாரத்தின் மதில்சுவரில் உள்ள வாசல் வழியா இங்கே  வந்தோம். சந்நிதி வெளியே கம்பிகேட்.  உள்ளே  கண்ணுக்கு நேரா ரொம்ப தூரத்தில்  இருக்காள்.  கிட்டே போய் தரிசிக்க முடிஞ்சது.  ஹம்மா........நிகுநிகுன்னு கொள்ளை அழகு!   ஆளுயரம். அபய ஹஸ்தம் காண்பிக்கும்  அபயாம்பிகை!

தக்ஷயாகம் நடந்து முடிஞ்சு சிவனின் கோபத்துக்கு ஆளான  தாக்ஷாயணியை  மயிலாகப்பிறந்து என்னை வழிபடுன்னு சிவன் சபிச்சுட்டார்.  மயிலாக இருந்து  தவம் செய்த ஊர் என்கிறார்கள். நம்ம சிங்காரச் சென்னையிலும்  கயிலைக்குச் சமமான மயிலை என்று  கோவில்வாசலில் எழுதி வச்சுருக்கும் மயிலாப்பூரும் இப்படித்தான் அம்பாள் மயிலாக பிறவி எடுத்து ஈசனை  வழிபட்ட தலம் என்று  ஊரின் பெயர்க்காரணம் சொல்லுவதைப்போலவே இங்கும்.

எனக்கு என்ன ஒரு சந்தேகமுன்னா.... தக்ஷனின் யாகத்தில் விழுந்து  உயிரைவிட்ட மனைவியின் உடலை சிவன்  கையில் எடுத்துக்கிட்டு கோபம் கொந்தளிக்க உலகெல்லாம் அலைஞ்சு திரிஞ்சதையும்  அதைக் கண்கொண்டு  காணமுடியாத  விஷ்ணு தன் சுதர்சனத்தால் உடலை துண்டுகளாக்கியதும். அவை தெறித்து (பண்டைய)  பாரதம் முழுசும் சிதறி  விழுந்து  சக்தி பீடங்களானதும் புராணக்கதையாக படித்தும், அந்த இடங்களில் சிலதைப் பார்த்தும் தெளிஞ்சதால்   ஏன் 'தக்ஷயாகம் எபிஸோட்'லே இந்த ஸீன்  இன்னொருக்கா நடந்ததா வருது என்பதுதான்.

குடும்பச்சண்டையில் மனைவி தீக்குளிப்பு விவரம் இங்கே பாருங்க நேரம் இருந்தால்!

ஒருவேளை  பழைய சண்டையெல்லாம்  முடிஞ்சு மறுபடி அம்பாளும் ஈசனுமிணைஞ்சு  கயிலையில்  நிம்மதியா, ஓய்வா இருந்த ஒரு நாளில்....  வேற எதோ ஒரு நிகழ்வைப்  பார்த்து கொசுவத்தி  ஏத்தி இருக்கலாம்.  ஏங்க உங்களை ஒன்னு கேக்கலாமா? இப்படி அன்பா இருக்கும் உங்களுக்கு அப்படி ஒரு கோபம் அன்னைக்கு ஏன்  வந்துச்சுன்னு   பழசைக்கிளற.....  அம்புட்டுதான்.....  சும்மாக்கிடந்த சங்கை  ஊதுன மாதிரி................  பிடி சாபம்.  மயிலாகப் போ! 

மயில் கோலத்தில் தவம் செய்த மனைவிக்கு தரிசனம் தந்து கூடவே கூட்டிப்போக  ஈசனும் மயில் உருவில் வந்தார்.  மனைவியைக் கண்டதும் ஆனந்தமா தோகை விரித்து ஆடியிருப்பார் இல்லையா? அதான் மயில் ஆடும் துறைன்னு   பெயர் வந்திருக்கலாம்.  அப்புறம் ரெண்டு பேரும் தம் சுய உருவில் இங்கே  சுயம்புவாகத் தோன்றிய மாயூர நாதராகவும், அனைத்து உயிர்களுக்கும் அபயம் தந்து காப்பாற்றும் அபயம்பிகையாகவும் இருந்து நமக்கு அருள் புரியறாங்க.

கோயிலில் இருக்கும் முருகன் சந்நிதியை குமரக்கட்டளைன்னு சொல்றாங்க. இது மட்டும் தருமபுரம் ஆதீனத்தின் பொறுப்பிலுள்ளது. பாக்கி  இருக்கும் கோவில் பகுதிகள், சந்நிதிகள் எல்லாம் திருவாவடுதுறை ஆதீனத்தின்  பொறுப்பிலாம்.

வழக்கமான கோவில் திருவிழாக்கள் மட்டுமில்லாமல்  துலாமுழுக்கு ன்னு ஒன்னு இங்கே விசேஷம்.  காவிரியில் முழுகிஎழுந்து வந்து  ஈசனை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் தீரும் என்று ஒரு  ஐதீகம். (வருசாவருசம்  சேரும்  பாவத்தை  வருசத்துக்கு ஒருக்கா  முழுகி தீர்த்துக்கலாமுன்னு நினைக்கப்படாது.  போன பாவம் போச்சு. இனி புதுப்பாவம் செய்யாம இருக்கணுமுன்னு  மனசில் ஒரு தீர்மானம் எடுத்துக்கிட்டு அதன்படி நடக்கணும்,ஆமா!)

துலா முழுக்கு இவ்விதம் புகழ்பெற்றதற்கு   புராணக் கதை ஒன்னு இருக்கு. ஒரு சமயம் கண்வ மகரிஷி கங்கையை நோக்கிப் பயணம் செய்கிறார். வழியில்  மூன்று பெண்கள் தங்கள் அழகெல்லாம் இழந்து உருக்குலைஞ்ச நிலையில் தள்ளாடி நடந்து வர்றாங்க. யாரு என்னன்னு விசாரிக்கிறார். அவுங்க மூவரும் புண்ணிய நதிகளான கங்கை, யமுனை,சரஸ்வதி!  இந்த நிலைக்கு என்ன காரணமுன்னு கேக்கறார்.  பூலோக மக்கள் , தங்கள் பாவங்களைப்போக்கிக்க  எங்களிடம் வந்து நீராடறாங்க. அவுங்களை விட்டுப்பிரிந்த பாவச்சுமை எங்கள் மேல் படர்ந்து  எங்களை இப்படி ஆக்கிருச்சு. இதுக்கு பரிகாரம் எதாவது கிடைக்குமான்னு தேடிபோறோமுன்னு அழுதுகிட்டே சொன்னாங்க.

கவலைப்படாதீங்க.  இப்படியே போனா  பாரதத்தின் தென்பகுதியிலே காவேரி என்னும் புண்ணிய நதி ஒன்னு ஓடுது. அது மயிலாடும்துறை என்ற ஊரைக்கடந்து  போகும் இடத்தில் நீங்கள் போய் முழுகினால்   உங்கமேல் உள்ள பாவச்சுமை நீங்கிவிடும்.  சீக்கிரம் போங்கன்னார். துலா மாசம் என்று சொல்லப்படும் ஐப்பசி மாதம் முழுசும் இம்மூவரும் நீராடித் தங்கள் மேல் படிந்திருந்த  பாவங்களைப் போக்கிக்கிட்டு,மாயூரநாதரையும்  அபயாம்பாளையும்  வழிபட்டு, தங்கள் சுய ரூபத்தை அடைஞ்சாங்க. கங்கையினும் புனிதமாம் காவேரின்னு உசத்தியாச் சொல்றாராம் கம்பர்.

இதனால் இந்த ஊரையொட்டி ஓடும்  காவேரியில் துலா ஸ்நானம் செய்ய  பக்தர்கள் ஏராளமா வர்றாங்க. மாசமுழுவதும் முங்க முடியாதவர்கள்,  ஐப்பசி மாச அமாவாசையில் முங்கி எழுந்தால் இதே பலன்.  அமாவாசைக்கு வரமுடியலையா? நோ ஒர்ரீஸ். ஐப்பசி மாசக் கடைசி நாளில் முங்கிருங்க. இதே பலன் கிடைச்சுரும்னு சாஸ்திரங்கள் சொல்லுது. நம்ம மதம் ரொம்பவே ப்ளெக்ஸிபிளா இருக்கு  பாருங்க. கடைசிநாள் முழுகுவதை கடைமுழுக்குன்னு கொண்டாடிடறாங்க.

ஐப்பசி மாசம் முழுக்க ரொம்ப பிஸியாப்போயிருச்சு. என் பாவம் தீரவே தீராதான்னு  அழுது புலம்பாதீங்க யாரும். இருக்கவே இருக்கு கார்த்திகை மாசம்.  ஐப்பசி முடிஞ்சு கார்த்திகை பிறக்கும் நாளுக்கும்  இதே பலன் உண்டு. இதுக்குப்புண்ணியம் கட்டிக்கிட்டவர் நினைவா இதுக்கு முடவன்முழுக்குன்னு பெயர் வச்சுருக்காங்க.

ஐப்பசி மாசம் காவேரியில் மூழ்க ஆசைப்பட்டு ஃபிஸிக்கலி சேலஞ்சுடுஆன ஒருவர்  ரொம்ப தூரத்தில் இருந்து புறப்பட்டு இங்கே வந்துருக்கார்.  அவர் வந்து சேரவும் ஐப்பசி மாசம் கடை(சி) முழுக்கு நடந்து முடிக்கவும் சரியா இருந்துருக்கு!  அடடா.... நமக்குக் கொடுத்து வைக்கலையேன்னு மனம் உருகி இறைவனை வேண்டினார். யாராவது கரைஞ்சால் சிவனுக்குத் தாங்கமுடியாது கேட்டோ!  வருத்தப்படாதே, இன்னிக்குக் கார்த்திகை பிறந்துருக்கு.  அதே பலன் இன்னைக்கும் எக்ஸ்டெண்ட் பண்ணிட்டேன். இப்பவே நீ போய் முங்கி நீராடு ன்னு அசரீரியா அனௌன்ஸ் பண்ணினார்.  அவரும்  நீராடி தன் பாவங்களைப் போக்கிண்டார்!

இன்னும் வேற வெர்ஷன்களும் உண்டு. அதை  இன்னொருசமயம் பார்க்கலாம். மேலே சொன்னதுக்குத்தான் லாஜிக் வொர்கவுட் ஆகுதுன்னு என் தோணல்.

இப்படியாக இத்தனை பெருமைகளை உடைய  ஊரை, ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாதுன்னு  உள்ளூர் ஆட்கள் சொல்லிக்கறதுலே என்ன தப்பு??

சரி, வந்து வண்டியிலேறுங்க. இந்தளூர் போகலாம்.

தொடரும்.......:-)


41 comments:

  1. பலமுறை சென்றதுண்டு... படங்கள் சூப்பர்ப்...

    ReplyDelete
  2. அபயாம்பிகை தரிசனம் அற்புதம். யப்பா. எவ்வளோ பெரிய கோயில்மா.
    மேல தீட்டியிருக்கிற ஓவியங்கள் சொல்லிமுடியாத அழகுமா. இவ்வளவு படங்களையும் அருமையாக் கொடுத்த உங்களுக்கும் ஆயிரம் நன்றி . ஆயிரமானலும் துளசிதளம் ஆகுமா:)

    ReplyDelete
  3. Thanks Thulasi Teacher...Eagerly expecting the report about Arangan :)

    ReplyDelete
  4. Ms. துளசி & Mr. கோபால்:
    தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். This is my honest opinion; I envy you both! உண்மையாக...This is what all life is all about. Nothing more nothing less. Enjoy your life.

    எனக்கு இந்த கோவில் குளம் ஆசை சுத்தமாக கிடையாது. ஆனால், என் மனைவி அங்கு போகணும், தங்கணும், கும்பிடனும் என்று சொல்லும் போது...சொன்ன போது,
    நானும் செல்வேன், ஒரு துணையாக...வாழ்க்கையின் துணையாக..

    நம்பினால் நம்புங்கள் என் மனைவி கோவிலுக்கு போகும்போது குழந்தையாகவெ மாறிவிடுவார்கள்.

    ஆம். அந்த அளவு சந்தோசம்; மகிழ்ச்சி. அவர்களே இரண்டு மொழியிலும் சரளாமக ஸ்லோகங்கள் சொல்லி சாமி கும்பிடுவார்கள்.

    நான் போட்ட ஒரே ஒரு condition என் மனைவியுடன் கோவிலுக்கு செல்லும்போது: எங்கும் வருவேன்; ஆனால், அர்ச்சனை கூடாது; அபிஷேகம் கூடாது; முக்கியமாக தட்சணை கூடாது...

    என் மனைவி இதற்க்கு ஒத்துக் கொண்டதால், நாங்களும் இதே கொள்கைளுடன் எல்லா கோவிலுக்கும் சென்று இருக்கிறோம். இனி மேலூம் செல்வோம்.


    ReplyDelete
  5. ஆத்த்த்தாடி! எவ்ளோ பெரிய கோவில்!!! முடிஞ்சா ஒரு தடவை போய் தரிசனம் பண்ணனும்! வழக்கம் போல துளசி டீச்சர் நடைல வந்த சூப்பர் பதிவு! :)

    ReplyDelete
  6. நிகுநிகுன்னு கொள்ளை அழகு! ஆளுயரம். அபய ஹஸ்தம் காண்பிக்கும் அபயாம்பிகை!
    மனம் கொள்ளைகொண்டாள்..

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  7. செல்லும் இடமெல்லாம் கேமரவை தூக்கி அழகாக படம் பித்து பகிரும் பாங்கு சூப்பர்.

    ReplyDelete
  8. பிரம்மாண்டமான கோவில். கலைப்பொக்கிஷமும் கூட. கூட்டிட்டுப் போனதுக்கு நன்றி துள்சிக்கா.

    ReplyDelete
  9. தக்ஷிணாமூர்த்தியும் ...அப்புறம்..... சரியா நினைவுக்கு வரலை://

    தக்ஷிணாமூர்த்தி பக்கம் சந்தன பிள்ளையார் இருக்கிறார் அவர் அருகில் குதம்பை சித்தர் இருக்கிறார்.

    அபயாம்பிகைக்கு மடிசார் கட்டி அலங்காரம் செய்தால் அம்மன் நேரே எழுந்து அருளுவது போல் இருக்கும்.

    துளசி, நீங்கள் மாயூரம் கோவிலின் பெருமையை அழகாய் படங்களுடன் விவரித்தமைக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  10. சிதம்பரம் கோவில் பார்த்திருந்தாலும், மாயவரம் கோவில் இதுவரை பார்த்ததில்லை டீச்சர். பார்க்கத் தூண்டியது உங்கள் பகிர்வு!

    ReplyDelete
  11. கல்லூரி பருவத்தில் மாயவரத்தில் நடந்த உறவினரின் திருமணத்துக்கு சென்ற போது கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அம்பாளின் அழகு இன்றும் கண் முன்னே நிற்கிறது. மடிசார் கட்டும் அழகாக இருக்கும்.

    அப்போ திரும்பும் போது திருச்சியில் வந்து இறங்கி கோவைக்கு சென்றோம். அன்று தான் திருச்சியில் நான் முதன் முதல் காலடி வைத்தது. இன்றோ திருச்சி வாசம்...:)ஆச்சரியமாக தான் இருக்கிறது.

    ReplyDelete
  12. ஆயிரம் ஆனலும் மாயூரம் ஆகாது...

    மாயவரத்தின் பெருமைகளை மிக அழகாக சொல்லியிருக்கீங்க மேடம்.

    படங்கள் அற்புதமாக இருக்கு.

    ReplyDelete
  13. திருப்பதிக்கு போய்விட்டு பாலாஜியைப் பற்றி எழுதாமல் இருந்தாலும் தப்பு இல்லை; ஆனால், மாயவரத்திற்கு போய் விட்டு, மாயவரம் 14 - வருட பாதாள சாக்கடை திட்டத்தைப் பற்றி எழுதா விட்டால் எப்படி?

    இப்ப அங்கு காவிரியில் தண்ணி ஓடுதா? இல்லை அதுவும்...?

    ஒரு முறை A.V.C மண்டபத்தில் திருமனத்திற்க்கு சென்று நாங்கள் மூன்று நண்பர்கள் அருகில் உள்ள காவிரியில் குளித்ததை மறக்க முடியுமா?

    ReplyDelete
  14. மாயவரம் பார்த்ததில்லை. அதை கண்முன் கொண்டுவந்து நிறுத்தி விட்டீர்கள். கங்கை புனிதமான கதை சூப்பர்

    ReplyDelete
  15. அபயாம்பிகை சந்நிதியில் வாயிலைக் கடந்தவுடன் ஒரு இறக்கம் வருமே அதில் என் பிள்ளைகள் இறங்கி ஓடிவருவார்கள். இப்போது பேரக்குழந்தைகளைக் கூட்டி போனால் அவர்களும் இறங்கி ஓடி வருவார்கள். அது போல் குழந்தைகளுக்குப் பிடித்த இடம் அம்மன் சந்நிதி.

    சுவாமி சந்நிதியில் நந்தி மண்டபத்தில் அடிக்கடி பெரியபுராண சொற்பொழிவுகள் நடக்கும், நாயன்மார்கள் திருநட்சத்திரம் அன்று அந்த நாயன்மாரைப்பற்றி பேசுவார்கள். என் கணவர் நிறைய முறை பேசி இருக்கிறார்கள். 63 நாயன்மார்களைப்பற்றியும்.
    திங்கள், புதன், வெள்ளியில் திருமந்திரம் விளக்கவுரை மாலை 6 மணியிலிருந்து 7 மணிவரை நடக்கும். முன்பு எல்லாம் இந்த கோவிலில் கூட்டம் இருக்காது இப்போது கூட்டம் இருக்கிறது.விழாக்களும்ம் சிறப்பாக நடக்கிறது.நவராத்திரி உற்சவம்.
    ஐப்பசி மாதம் 10 நாள் உற்சவம்,(முழுக்குதிருவிழா) மாசி மாதம் சிவன் ராத்திரி உற்சவம் எல்லாம் சிறப்பாக இருக்கும்,. சிவன்ராத்திரி அன்று சிதம்பரம் கோவிலில் நாட்டியாஞ்சலி நடப்பது போல் இங்கும் நடக்கிறது சிலவருடங்களாய். திருவண்ணாமலையில் பெளர்ணமி கிரிஉலா நடப்பது போல் இங்கும் கோவிலைச்சுற்றி 16 முறை வலம் வரும் கூட்டம் அதிகம். நவக்கிரகசந்நிதி அருகில் ஈசானிய மூலையில் இருக்கும் திரு அண்ணாமலையாருக்கு இந்த சுற்று நடைபெறும். கார்த்திகை 30 நாளும் சோமவார சுற்று சுற்றுவார்கள்.
    ஐப்பசி மாதம் 1008 விளக்கு பூஜை. கார்த்திகை மாதம் சோமவாரத்திறகு சங்காபிஷேகம் நடை பெறுகிறது.
    சிறப்புகள் நிறைய உள்ளது மாயூரம் கோவில்.
    உங்களுடன் நானும் மாயவர சிறப்பை பகிர்ந்து கொண்டேன்.
    நன்றி.

    ReplyDelete
  16. காளியாகுடி ஹோட்டலையும் அந்த டிகிரி காப்பியையும் 'கண்டு கொள்ளாமல்' போனதிற்கு எனது 'கடும் கண்டங்கள்..!'

    ReplyDelete
  17. வாங்க திண்டுக்கல் தனபாலன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    மாயூரத்துக்கு இதுதான் முதல்முறை எனக்கு.

    ReplyDelete
  18. வாங்க வல்லி.

    நல்லா நின்னு ரசித்துப்பார்த்துப் படம் எடுக்கணுமுன்னு ஆசை. ஆனால்.....

    நமக்குத்தான் காலில் வெந்நீர் ஆச்சே:(

    விதான ஓவியங்கள் ரொம்பவே அழகுப்பா!!!

    ReplyDelete
  19. வாங்க அருண்.

    நாளை இந்த வேளை(க்கு முன்னமே) வரும்:-)

    ReplyDelete
  20. வாங்க நம்பள்கி.

    நம்ம நாட்டைவிட்டுப்போனபிறகு ரொம்ப மிஸ் பண்ணும் ஒருசில சமாச்சாரங்களில் கோவில்களுக்கு முக்கிய இடம் இருக்கு. இனி எப்பக்கிடைக்குமோ என்றுதான் ஓடி ஓடிப் பார்க்கிறோம்.

    அதுவும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப்பின் மனசு கொஞ்சம் ஆன்மிகப்பக்கம் திரும்புவது என்னவோ உண்மை!

    நாங்களும் கோவில்களில் அர்ச்சனையோ,அபிஷேகமோ, தேங்காய்பழம்பூ கூடையெல்லாம் வாங்கிப்போவதோ இல்லை.

    பயணத்தில் பிரசாதமாக்கிடைச்ச தேங்காய்பழங்களைத் தின்னவும் முடியாமல் தூக்கிப்போடவும் விரும்பாமல் ( ஐயோ....சாமி பிரசாதமாச்சே. எப்படிக் கடாசுவது?) காரில் வச்சுருந்து அது கெட்டுப்போய் நாறி.....

    பெரிய கோவில்களுக்கு அதிலும் பணம் கொழிக்கும் கோவில்களுக்கு உண்டியலில் காசும் போடுவதில்லை.
    சாமிக்கு நாம் போட்டா நிறையப்போகுதுன்னுதான்.

    ஏழைக்கோவில்களில் மட்டும் கொஞ்சம் போடுவதுண்டு. அங்கே இருக்கும் பட்டரையோ,குருக்களையோ
    பார்த்தாலே நிலமை சுமாராப் புரிஞ்சுரும். அப்போ தட்டிலும் கொஞ்சம் காசு போடுவதுண்டு.

    மத்தபடி மனம் உருகி எல்லோரும் நல்லா இருக்கணுமுன்னு பிரார்த்தனை செஞ்சுக்குவேன் மனசுக்குள்ளேயே!

    நியூஸியில் நம்மூரில் இருக்கும் கோவிலுக்குக் கைவீசிக்கிட்டு போவோம். சாமியே சோறு போட்டு அனுப்புவார்:-)

    ReplyDelete
  21. வாங்க தக்குடு.

    நல்லா இருக்கீங்களா? தங்க்ஸ் சுகமா? என்ன ஆளையே காணோம் இந்தப் பக்கத்திலே?

    மாயூரநாதர் புண்ணியத்தில் எல்லோரும் நலமென்று நினைக்கிறேன்.

    கட்டாயம் ஒருமுறையாவது போய்பார்க்கவேண்டிய ஊர்தான் இது. கூடவே கோவிலும்.

    ReplyDelete
  22. வாங்க இராஜராஜேஸ்வரி.

    அண்ணனைப்போலவே தங்கையும் கொள்ளை அழகுதாங்க. குடும்பவாகு!!!!

    ReplyDelete
  23. வாங்க ஸாதிகா.

    உண்மைக்குமே ஃபோட்டோ பித்து பிடிச்சுத்தான் கிடக்கு:-)))))

    ReplyDelete
  24. வாங்க அமைதிச்சாரல்.

    கூட்டிப்போக ஆசை இருந்தாலும் கூட வர்ற ஆர்வம் இல்லேன்னா எப்படிப்பா?

    கூட(வே)வருவதற்கு நன்றிகள்.

    ReplyDelete
  25. வாங்க கோமதி அரசு.

    சரியா எழுதாம உள்ளூர்க்கார்களிடம் குட்டு வாங்குவேனோ என்ற பயம் இருந்துச்சு. தப்பிட்டேன் போல:-))))

    குதம்பைச் சித்தரை கவனிக்கலையே:(

    அபயா அழகுதான்!!!

    போனபிறவியில் அபயாம்பாள்னு ஒரு தோழி இருந்தாள் சென்னையில்.

    அவளையும் கோவிலில் நினைச்சுக்கிட்டேன்.

    ReplyDelete
  26. வாங்க வெங்கட் நாகராஜ்.

    பார்க்கவேண்டிய பட்டியல்கள் இப்படித்தான் வளர்ந்துக்கிட்டே இருக்கு. ஆனால் வேளை வந்ததும் டான்னு கிடைச்சுரும் பாருங்க!

    ReplyDelete
  27. வாங்க ரோஷ்ணியம்மா.

    ஆஹா ஆஹா... இப்படி தம்பதி சமேதரா வந்ததுக்கு நன்றீஸ்.

    நமக்கு எப்போ எந்த ஊருத்தண்ணி குடிக்கணுமுன்னு அவன் போடும் திட்டங்களை நமக்குச் சொல்லிட்டா செய்யறான்? எல்லாம் நினைச்சுப் பார்த்தால் வியப்பேதான்!

    ReplyDelete
  28. வாங்க ரமா ரவி.

    ரசிப்புக்கு நன்றிகள்.

    ReplyDelete
  29. வாங்க நம்பள்கி.

    14 வருச பாதாளச் சாக்கடைத் திட்டமா???? தெரியவே தெரியாதே.

    இப்போ ஒரு அஞ்சாறு வருசமாத்தான் இணையத்துலே செய்திகள் /செய்தித் தாள்கள் எல்லாம் வருது. அங்கத்து சமாச்சாரங்களும் கொஞ்சமாவது தெரிஞ்சுக்க முடியுது.

    பொதுவா, இங்கிலாந்துலே மாடு முட்டிட்டாலும் கூட இங்கே தொலைக்காட்சியில் நீட்டி முழக்கி நாள் பூராவும் காமிப்பாங்க. இந்தியா சமாச்சாரமுன்னா....மூச்:(

    எனக்குத் தெரிஞ்சு இங்கே செய்தியில் வந்தது டில்லி பஸ்ஸில் நடந்த சோகம்தான்.

    ReplyDelete
  30. வாங்க டி. என்.முரளிதரன்.

    வணக்கம்.

    முதல் வருகை போல இருக்கே! நலமா?

    நம்மூர் கதைகளை அடிச்சுக்க ஆளே இல்லையாக்கும்:-))))

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  31. வாங்க கோமதி அரசு..

    மிகச் சிறப்பான தகவல்களுடன் இந்தப் பின்னூட்டம் அதி சிறப்பாக உள்ளது.

    மனம் நிறைந்த நன்றிகள்,

    ReplyDelete
  32. வாங்க நம்பள்கி.

    கடையைப் பார்த்து வச்சேன் மாயவரத்துக்குள் போகும்போதே.

    ஆனால் கயிலை ரிட்டர்ன் கையால் சூப்பர் காஃபி கிடைக்கணுமுன்னு என் கணக்குலே அன்றைக்கு இருந்துருக்கே!!!

    அடுத்தமுறை காளியாகுடி போயிட்டு கோமதி அரசு வீட்டுக்குப் போகணும். எப்படியும் சாப்பிடக்கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க. அதை ஏன் விடுவானேன்:-)))

    காவேரி தீரத்துக்குப் போகலை. வழியில் ஒரு பாலத்தில் போனபோது எட்டிப்பார்த்தேன். நான் போன சமயம் துலாமுழுக்குக்கு இன்னும் 15 இருந்துச்சு. அதனால் எப்படியும் த்ண்ணீர் நிறையதான் இருக்கணும் இல்லை?

    ReplyDelete
  33. தினகரன் வசந்தம் இதழில்(மகளிர் தின சிறப்பு மலர்) இணையத்தைக் கலக்கும் இலக்கியபெண்கள் வரிசையில் நீங்கள் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள் துளசி. ராமலக்ஷ்மி பதிவு மூலம் அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
  34. வாங்க கோமதி அரசு.

    நானும் ராமலக்ஷ்மி மூலம்தாம் தெரிஞ்சுக்கிட்டேன்.

    நம்ம எழுத்தை இலக்கிய வரிசையில் சேர்த்த அதிர்ச்சி இன்னும் தீரலை, கேட்டோ:-))))

    ReplyDelete
  35. டீச்சர், எங்க ஊர ரவுண்டு கட்டி அடிக்கிறீங்க போல... அந்த குளக்கரைகளில் அமர்ந்து படித்த நாட்கள் நினைவிற்க்கு வந்தன.

    அப்படியே இந்தளூர்ன்னா, திருஇந்தளூர்தானே? அடுத்து பரிமள ரெங்கனாதரப் பற்றிய பதிவா?

    ReplyDelete
  36. Hello Madam,

    Where Can I buy your book on New Zealand?
    Thanks.

    ReplyDelete
  37. Hello Madam,

    I am interested to buy your book on New Zealand.Kindly give me some information on where and How to buy?
    Thanks.

    ReplyDelete
  38. Hello Madam,

    I am interested to buy your book on New Zealand.Kindly give me some information on where and How to buy?
    Thanks.

    ReplyDelete
  39. வாங்க அரசூரான்.

    பயணத்தில் ஒரு நாள் உங்களூருக்கு வந்தேன்.

    பரிமளரெங்கனைப் பற்றி எழுதியாச்சு.
    இதுக்கு அடுத்த பதிவைப் பாருங்க:-)

    பரிமளரெங்கநாதர் என்னும் மருவினிய மைந்தனின் வீரசயனம்!

    ReplyDelete
  40. Hi Kathir,

    Thanks for your interest on book about NZ.

    Hope you can read Tamil.

    http://thulasidhalam.blogspot.co.nz/2010/06/blog-post_12.html


    The book details are below.
    பதிப்பகத்தில் இருந்து வந்த மடல்:

    Pls Send Rs. 230/- for All (Local & Outstation)


    நூல்கள் வாங்க விரும்புபவர்கள் தங்கள் முகவரியைத் தெளிவாக (தொலைபேசி எண்ணுடன்) எழுதவும்.
    சந்தியா பப்ளிகேஷன்ஸ் என்ற பெயரில் வரைவோலை அல்லது பணவிடை
    அனுப்பினால் உடனே நூல்களை அனுப்பி வைக்கிறோம்.

    மேலும் விவரங்களுக்கு அணுகவும்:
    சந்தியா பதிப்பகம்

    எண் 57, 53ஆவது தெரு, 9வது அவென்யூ

    அசோக் நகர், சென்னை - 600 083

    தொலைபேசி 24896979

    அலைபேசி 98411 91397

    ReplyDelete
  41. ஒன்பது நிலைக் கோபுரத்துடன் மாயூரம் கொள்ளை அழகு.

    ReplyDelete