
ம்மா ம்ம்ம்ம்மான்னு குரல் கொடுத்துக்கிட்டே வீட்டுக்குள்ளே ஓடிவந்து நிக்கிற கப்புவைப் பார்த்ததும்'பசங்க' இங்கே ரொம்பக் கஷ்டம் வைக்காம 'செட்டில்' ஆகிட்டாங்கன்னு சந்தோஷமாத்தான் இருந்தது.
கொஞ்ச நாளைக்கு முன்னால்வரை , அடுத்தவீட்டுக்குப் போய் அங்கே செடிப் புதரில் படுத்திருந்துட்டுபசியெடுக்கும் நேரம் மட்டும் இங்கே வந்துக்கிட்டு இருந்தவந்தானே இவன்.
நேரத்துக்குச் சாப்புடாம ஒரே எலும்பும் தோலுமா ஆயிட்டான் பாருங்க. ஏதோ இப்பவாவது கொஞ்சம் ஒடம்புதேறட்டும். வயிறெல்லாம் எப்படி ஒட்டிப் போயிருச்சு . பாவம்.
வேளாவேளைக்குச் சாப்புடறதும், தோட்டத்துலே இருந்த ஒரே மரத்தடியிலே தூங்கறதுமா நாள் போய்க்கிட்டு இருந்தது.அடுத்தவீட்டுப் புதரை இப்ப குத்தகைக்கு எடுத்திருக்கிறது நம்ம ஜி.கே. ஒருத்தன் மாத்தி ஒருத்தன்!
ரெண்டு வாரத்துக்கு முன்னே வீட்டுக்குள்ளெ வந்தவனைத் தூக்கும்போது கொஞ்சம் கனமாக இருந்தான். வயிறும்நிறைஞ்சமாதிரி இருந்தது. இவன் கொஞ்சம் பயந்த சுபாவம்தான். யாராவது வீட்டுக்கு வந்திருந்தாங்கன்னா போய்ஒளிஞ்சுக்குவான்.
அப்படிப்பட்டவன், ரொம்ப அதிசயமா ஒரு நாளு நடந்துக்கிட்டான். 'மெளனம் சுரேஷ்' குடும்பத்துடன் வந்திருந்தப்பதானாய் வந்து கூட்டத்துக்கு நடுவிலே நடுநாயகமா எங்க காலடியிலே வந்து உக்காந்துக்கிட்டது எங்களுக்குரொம்ப ஆச்சரியமாப் போச்சு.
மறுநாள் வழக்கம்போல அதிகாலையில் வந்து எழுப்பினான். 'ம்மா, ம்மா'ன்னு கூப்புட்டுக்கிட்டே தலையிலேவந்து உக்காந்து 'குர்குர்ன்னு பர்( purr)'பண்ணறதுதான் தினமும் எனக்குத் திருப்பள்ளி எழுச்சி.
கண்ணுலே மட்டும் கண்ணீர் வர்றமாதிரி இருந்தது. எதுக்கும் 'வெட்'கிட்டே காமிச்சரலாமுன்னு ஒரு நேரம்வாங்குனேன். மறுநாள் செவ்வாய்க்குத்தான் கிடைச்சது. நம்ம வீட்டுலேதான் 'வெட்'க்குக் கொண்டுபோறதே ஒருஅட்வெஞ்சர் ரைடாச்சே. நைஸாப்பேசி வீட்டுக்குள்ளேயே வச்சிருந்தேன். கூண்டுக்குள் வைக்கும்போதும்வழக்கமா வர்ற எதிர்ப்பு ஒண்ணுமில்லாமல் அமைதியா இருந்ததே மகா ஆச்சரியம்.இந்தப் பதினாறு வருஷத்துலேமுதல்முறையாச் 'சொன்ன நேரத்துக்கு'க் கொண்டுபோனோம். வழியெல்லாம் வழக்கமான 'குய்யோமுறையோ கூவல்'கூட இல்லை!
நம்ம 'ஷான் கானரி'ஆலன் பரிசோதிச்சார். கூடவே எங்க தலையிலே ஒரு குண்டைத் தூக்கியும் போட்டார். நுரையீரலில்இருந்து தண்ணீர் வழிஞ்சு வயித்துலே தேங்குதாம். இதயமும் பழுதடைஞ்சிருக்காம். அதீதவலியாலேதான் கண்ணுலேதண்ணீர். கடவுளே......
உடனே சிகிச்சையை ஆரம்பிச்சிருங்கன்னு சொன்னதுக்கு, இன்னொரு இடியைப் போட்டார். இதுக்கு நிவாரணம்இல்லையாம். வாழ்க்கையோட கடைசிக் கட்டத்துலே இருக்கானாம்.அப்போதைக்கு மட்டும் வலி நிவாரணமாஒரு ஊசி போடலாமே தவிர வேற ஒண்ணும் செய்யமுடியாதாம். சீக்கிரமா நாங்க முடிவு(!) எடுக்கணும்.
பொங்கிவர்ற கண்ணீரை மட்டுப் படுத்தமுடியாம நிக்கிறோம். சரி என்று தலையாட்டிவிட்டு வீட்டுக்கு வந்தோம்.கூண்டைத் திறந்ததும் துள்ளி ஓடும் ஓட்டம் இல்லை. 'தூக்கி வெளியே விடேன்'ன்னு சொல்லுது அதோட பார்வை.
கனத்த மனசோடயே புதன் கழிஞ்சது. வியாழன் காலையிலே என்னை எழுப்ப வந்தவனுக்குக் கட்டில்லே குதிச்சுஏறமுடியலை. கீழே நின்னுக்கிட்டே 'ம்மா ம்மா'ன்னு ஹீனக்குரல். கோபால்தான் அவனைத்தூக்கி என் மடியிலேவச்சார். வயிறு ரொம்பவே ஊதிப்போயிருந்தது. மெதுவாத் தடவிக் கொடுத்தவுடனே நீர் பிரிய ஆரம்பிச்சது. திட்டவும்மனசு வரலை. அப்புறம் விரிப்புகளையெல்லாம் எடுத்துத் துவைக்கப்போட்டேன்.
வழக்கமான மரத்தடியிலே தலையைக் குனிஞ்சுக்கிட்டு உக்கார்ந்திருக்கான். சாப்பாடும் ரொம்பக் கொஞ்சமாவேசாப்பிட்டான். மனசைக் கல்லாக்கிக்கிட்டு 'வெட்'க்கு ஃபோன் செஞ்சு, முடிவைச் சொன்னேன். வெள்ளியா இல்லேன்னாசனியான்னு கேட்டார். கோபாலும் கூட இருக்கணுமுன்னு இருந்ததாலே சனிக்கிழமைன்னு சொன்னேன்.
வெள்ளிக்கிழமை பொழுது விடிஞ்சப்பவே 'பகீர்'ன்னு இருந்துச்சு. இன்னும் ஒரு நாள்தான் இருப்பான். எதுலேயும்மனசில்லாம என்னவோ செஞ்சோம் போனோமுன்னு நாள் போச்சு. மரத்தடியை விட்டு நகராம இருக்கான். கிட்டப்போய் பக்கத்துலே உக்கார்த்தேன். பெரிய பெரிய ஈங்க அவனைத் தொந்திரவு செய்யுதுங்க. முற்றும் துறந்த முனிவரைப்போல யோக நிஷ்டையில் இருக்கான். வாலை ஆட்டி அந்த ஈக்களைத் துரத்தவும் இல்லை. அதுங்களும் அவன் மேலேயேமுட்டைவச்சுக்கிட்டு இருக்குதுங்க. மனசு கேக்காம உள்ளே தூக்கிவந்து சுத்தம் செஞ்சேன். அப்பப் பார்த்து நம்ம'வெட் க்ளினிக்'லே இருந்து கூப்பிட்டாங்க. சனிக்கிழமை நம்ம 'ஷான்' ஏதோ அவசர வேலையாக வெளியே போறாராம்.அதனாலே வேற ஒரு 'வெட்' நம்மைக் கவனிப்பாராம்.
யோசிச்சுச் சொல்றேன்னு சொன்னேன். நல்லா யோசனை செஞ்சப்ப, கப்புவுக்குப் பழக்கமான ஷான் இருந்தாத்தான்நல்லது. புது ஆளைப் பார்த்தால் அவன் மிரளக்கூடும். போற நேரத்துலே மனசமாதானம் முக்கியமில்லையா?மறுபடி 'ஷான்'கூடப் பேசினேன். அவர் புரிஞ்சுக்கிட்டார். 'சரி. இன்னிக்கு இரவே நீங்க கொண்டுவாங்க. எட்டுமணி வரைக்ளினிக் வேலைகள் இருக்கு. நான் காத்திருக்கேன். அதுக்கப்புறம் வேண்டியது செய்யலாம்.எட்டரைமணிக்குஎல்லாம் முடிஞ்சுரும்'ன்னு சொன்னார்.
எட்டுமணிக்குக் கொண்டுபோனோம். அழுதுஅழுது எனக்குப் பயங்கரத் தலைவலி. எத்தனை மாத்திரைபோட்டுக்கிட்டும்வலி அடங்கலை. உள்ளே கொண்டு போனோம். மேசையில் கிடத்துனோம். இனி ஒருமுறை என்னாலே இதையெல்லாம்தாங்கமுடியாது. கடவுளே.... கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா?
ஊசிக்கு எல்லாம் தயார் செஞ்சாங்க. 'ஹெவி டோஸ் மயக்கமருந்துதான். உயிர் அடங்குறப்ப ஒரு ரீஃப்ளெக்ஸ் இருக்கும்.உடம்பு தூக்கிப்போடும், பயந்துராதீங்க. அவனுக்கு வலி தெரியாது. க்வாலிட்டி ஆஃப் லைப் போக ஆரம்பிச்சிருச்சு.ஹீ டஸ்ந் கேர் எனிமோர். பார்த்தீங்களா, முதுகுலே ஈ முட்டைகளை'ன்னு சொன்னார். ஷானோட கண்ணுலேயும்கண்ணீர் கட்டியிருந்துச்சு. குனிஞ்சு அவனோட தலையிலே ஒரு முத்தம் கொடுத்தார்.
ஊசி போட்டாச்சு. தலையைத் தடவிக் கொடுத்துக்கிட்டே நின்னேன். ஒரு அஞ்சு வினாடிதான். உடம்பு தூக்கிப் போட்டுச்சு.அப்புறம் அடங்கிடுச்சு. கண்ணைத் திறந்து என்னப் பார்த்துக்கிட்டே போயிட்டான்.
அழற எங்களைத் தேற்றாம ஷானும் கூடவே அழறார். 16 வருஷ வாழ்க்கை நொடியிலே முடிஞ்சது. அருமையானராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கான்.
இங்கே வளர்ப்பு மிருகங்களுக்கு ஒரு எரியூட்டும் இடம் இருக்கு. அங்கேயே கொண்டுபோய் எரியூட்டி, பிறகு அஸ்தி தரும் சேவைக்கும் சேர்த்து வேண்டிய ஏற்பாடுகளைச் செஞ்சுட்டு காலிக் கூண்டோட வீட்டு வந்தப்ப ஒம்போதரைமணி ஆயிருந்திச்சு.
யாருக்கும் யார்கூடவும் பேசவும் விருப்பமில்லாம, வீடே அமைதியா அழறமாதிரி இருந்துச்சு. திங்கள் கிழமை'வெட் க்ளினிக்'லே இருந்து ஒரு ஆறுதல் கடிதம் வந்து, அடங்கியிருந்த அழுகையைக் கிளப்பி விட்டுருச்சு. மறுபடிபுதனன்று கூப்பிட்டாங்க, அஸ்திப் பெட்டி வந்துருச்சுன்னு. போய் வாங்கிக்கிட்டு வந்தேன். ஷானும், அங்கே வரவேற்பு வேலையில் இருக்கும் பெண்ணும் எங்க துக்கத்துலே பங்கெடுத்துக்கிட்டாங்க. புத்திர சோகம்ன்னா என்னன்னு இப்பத்தான்முழுசாத்தெரியுது.
வீடு முழுக்க ஒரு மாதிரியான வெறுமை. ஜி.கே.வும் சாப்பாட்டு நேரத்துக்கு மட்டுமே ஆஜர். இப்ப ஒரு மாசமாத்தான்ஜி.கே. வீடுதங்க ஆரம்பிச்சுருக்கான். மெதுமெதுவா கப்புவோட இனிய நினைவுகளோட வீடு பழைய நிலைக்குத் திரும்பிக்கிட்டு இருக்கு. அடுக்களை ஜன்னலில் பாத்தா கப்புவோட மரம் நிக்கும். நேத்து அதனடியிலே கறுப்பா ஒரு உருவம்.பதறிப்போய்ப் பாத்தா, நம்ம ஜி.கே. படுத்திருக்கார். இன்னிக்குக் காலையில் கப்பு போலவே வந்து எழுப்ப முயற்சிக்கிறார்.
ஆச்சு, இன்னையோட கப்பு ஸ்ரீவைகுண்டம் போய் 96 நாள். சொர்க்கவாசல் கதவு திறக்கும்போது அங்கே வெளியிலே நிக்கற உயிர்களை பெருமாளே கையைப் பிடிச்சுக் கூட்டிட்டுப் போவாருன்னு ஒரு ஐதீகம் இருக்காமே. இன்னிக்கு வைகுண்ட ஏகாதசியாச்சே. கப்புவையும் உள்ளே அழைச்சுக்கிட்டுப் போயிருக்கணுமுன்னு மனசு தீர்மானமாச் சொல்லுது.
பின்குறிப்பு: கப்புவின் கடைசி நாட்கள் பத்தி எழுதணுமுன்னு ஆரம்பிச்சு, முடிக்க முடியாமலேயே மனசு கனத்துபோய்வச்சிருந்ததை இன்னிக்கு முடிச்சு அனுப்பறேன்.
வளர்ப்பு மிருகங்களை இழந்து தவிக்கிற எல்லோருக்கும் இதை அர்ப்பணிக்கின்றேன்.