Monday, September 19, 2016

கோதண்டராமர் கோவில்! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 88)

பொழுது ரொம்பவே இனிமையாக விடிஞ்சதா நினைவு. யானையின் ஸ்பெஷல் நாள் இன்றைக்கு! சீக்கிரம் தயாராகிக் கீழே போய்  ஹொட்டேல் தரும் பஃபே ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு உடனே கிளம்பினோம். சுமாராத்தான் இருந்தது.  ரெண்டு இட்லி வடைக்கு மேல்  என்னன்னு சாப்புடறது ?

இன்றைக்கு தனுஷ்கோடிவரை போய் வர ஒரு திட்டம்.  நேரா கோவிலுக்குப் போகும்  சாலையில் போய்  மேற்கு கோபுரவாசலில் ரைட் எடுக்கணும்.
நம்ம ஹொட்டேலை விட்டுக் கிளம்புனா....   கொஞ்ச தூரத்துலேயே  ஒரு அழகான சிற்பம் இருக்கும் கட்டடம் , வா வான்னு கூப்டது. ஆனால்  ஏதோ பழுதுபார்க்கும் வேலை (பெயிண்டிங்?) நடக்குது. ஸ்ரீக்ருஷ்ணப்ரணாமி மங்கள் மந்திர். ப்ரைவேட் கோவில்னு கோபாலுக்கு எண்ணம்.
தேவர்களும் அசுரர்களுமா மந்தாரமலையை மத்தாக வச்சு பாற்கடலைக் கடையறாங்க.  வாசுகிக்கும் அஞ்சு தலை இருக்கு!  பாற்கடலில்  தோன்றிய செல்வங்கள் எல்லாம்  கூட  இருக்கு. வெள்ளையானையான  ஐராவதம் அழகோ அழகு! காமதேனு,  லக்ஷ்மி,  தன்வந்த்ரி, உச்சைசிரவஸ் என்னும்   வெள்ளைக்குதிரை, மலையின் மீது ரொம்பவே அழகான சிவனின் திருமுகம் எல்லாம்  பார்க்கப்பார்க்க அருமைதான்!  இவ்ளோ அழகான கட்டிடத்தின் தலையில் மூணு  சிவலிங்கங்கள்  ஓவர்ஹெட் டேங்க் என்னும் பெயரில்:-(
வலம் பிரிந்து போன நாம்  முகுந்தராயர்சத்திரம் என்ற ஊருக்குப் போகணும்.  ஆனால் போகும் வழியிலேயே ஒரு பத்து கிமீ தூரத்தில் இடதுபக்கம் பிரிஞ்சு போகும் ரோடுக்குள் போறோம்.  அந்தக் கடைசியில் ஒரு கோவில் இருக்கு. ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவில். ராமர் கோவில்தானே? அப்படி என்ன விசேஷமுன்னால்....  இங்கேதான் விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செஞ்சு வச்சுருக்கார் ராமர்!
எனக்குத் தெரிஞ்ச ராமாயணக்கதைப்படி  அண்ணன் ராவணன், சீதையைக் கவர்ந்து வந்தது அடாத செயல்னு சொன்ன தம்பி விபீஷணனை காலால் எட்டி உதைச்சு இழிவு படுத்தறான் .  விபீஷ்ணன்,  இலங்கையில் இருந்து கிளம்பி  ராமனைத் தேடிவந்து  சரணாகதி பண்ணினதும்,  இலங்கை மன்னன் ராவணனுக்கு  தன் கையால் மரணம் என்பதை நிச்சயித்துவிட்ட ராமன்,   இப்பவே உன்னை இலங்கைக்கு அரசன் ஆக்குக்கிறேன்னு  பட்டாபிஷேகம் செய்தான்னு கதை.
ஆனால் கோவிலில் வச்சுருக்கும் தகவல் பலகை,  ராவணன் அழிஞ்சு  போர் முடிஞ்சதும்  விபீஷணனுக்கு ராமர் பட்டாபிஷேகம் செய்த இடமுன்னு சொல்லுது. போர் இலங்கையில் முடிஞ்சதும், அங்கே வச்சு  புது அரசனுக்குப் பட்டாபிஷேகம் பண்ணாமல் இவ்வளவு தூரம் வருவாங்களா என்ன?

ரொம்பப்பெரிய கோவில் இல்லை. ஒரு கட்டடம்தான். பனிரெண்டு படிகள் ஏறிப்போகும் உயரத்தில் கட்டி இருக்காங்க. கடலில் தண்ணீர் அதிகம் வரும் சமயம் கோவிலுக்குள் நீர் புகாமல் இருக்கத்தான் இவ்ளோ உயரம்.  இப்போ நாம் வந்த  சாலை கூட சமீபத்துலே போட்டதுதானாம்.  முந்தியெல்லாம் வந்து போகக் கொஞ்சம் சிரமம்தானாம். பட்டர்ஸ்வாமிகள் சொன்னார்.
கோவில் முகப்பில் ராமலக்ஷ்மண சீதை ஆஞ்சியுடன் விபீஷணனும் இருக்கார். அறுவரானோம் என்பது  இவரைச் சேர்த்துத்தானே?
நடுவில் பெரிய ஹால். சுத்தி வெளிப்புறம் அகலமான வெராந்தா! வளைவு வளைவா டிசைன் செஞ்ச வெராந்தா சுவர் தனி அழகு!  மேலே  பழைய படத்தில் இந்த  அழகு தெரியும்.  இப்பப் படிக்கட்டுகளுக்கு மேல் தகரக்கூரை போட்டு  பார்க்கவே வங்கரபங்கரயாக் கிடக்கு   :-(

கோவில் முன்பக்கத்து வியூவை இதுக்கு மேல் அசிங்கம் பண்ண முடியாது :-(

இதுக்கு மற்ற கோவில்களில் போட்டு வைக்கும்  சாதாரணக் கூரையே மேல் !
 இல்லைன்னா  லேசா ரெண்டு பக்கமும்  வளைவு இருக்கும்  பெரிய கூரை பந்தல் போல போட்டுருக்கலாம்.


 கோவில் முன்வாசலில் கடல்.  தலையைத் திருப்பி இடப்பக்கம்  (மேற்குநோக்கி) பார்த்தால்  ராமேஸ்வரம் கோவில் தெரியுது.


1964 இல் ஒரு பெரும் புயல் அடிச்சதுலே தனுஷ்கோடி பூராவும் அழிஞ்சு போச்சு. அப்போ இந்தக் கோவிலும் பாழாகிருச்சாம்.  அப்புறம் திரும்பக்  கட்டி இருக்காங்க.  அப்போதான் இப்படிக் கொஞ்சம் உயர்த்திக் கட்டி இருக்கணும். 1978 இல் தமிழ்நாட்டு கவர்னரா இருந்த திரு. ப்ரபுதாஸ் பட்வாரி அவர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்துருக்குன்னு  கல்வெட்டு சொல்லுது.
காலையில் 7 மணிக்குக்  கோவில் திறந்தால்... சாயங்காலம் 6 மணிக்கு சாயரக்ஷை பூஜை முடிஞ்சு கோவிலை மூடிட்டு பட்டர்  வீட்டுக்குப் போயிடறார்.  ராமேஸ்வரம் யாத்திரை வரும் பக்தர்கள் தனுஷ்கோடிக்குப் போகும் வழியில் ஏராளமாவந்து போன காலம் உண்டுன்னார். புயல் அழிவுக்கு அப்புறம்  ராமேஸ்வரம்   வரும் பக்தர்கள்  தேடிக்கிட்டு வந்தால்தான் உண்டு.   அது  இவருடைய தகப்பனார் சொல்லி  இருக்கணும்.  ஆச்சு  52 வருசம். பட்டர்  சின்ன  வயசுக்காரர். முப்பது கூட ஆகி இருக்காது.  சட்னு ஆரத்தியைக் காமிச்சு சடாரி தீர்த்தம்  முடிச்சுட்டு, நாம் உள்ளே நுழையும்போது  விட்டு வச்ச பேச்சை செல்லில் தொடர்ந்தார். தனியா விட்டுவிட்டுன்னு போரடிச்சுக்  கிடக்கறார் போல..........

கருவறையில்  கோதண்டம் ஏந்திய ராமர்,   வில்லுடன் லக்ஷ்மணர், சீதை, அனுமன்  இருக்காங்க.  ராமரை வணங்கியபடி விபீஷணனும் கூடவே!   நம்ம ஆஞ்சிக்கு இங்கே 'பரிந்துரைத்த  ஆஞ்சநேயர்'  என்றுபெயர்.  விபீஷணன், இலங்கையை விட்டுக் கிளம்பி ராமலக்ஷ்மணரைத் தேடிக்கிட்டு  வர்றான்.  அங்கிருந்த சுக்ரீவன் மற்றும் அவனுடைய படையினர் அனைவருக்கும், இவன் எதிரியின் கோட்டையில் இருந்த  வந்த  ஒற்றனோன்னு ஒரு சந்தேகம். அப்ப நம்ம ஆஞ்சிதான், ' இல்லை. இவர் நல்லவர், வல்லவர், நாலும் தெரிஞ்சவர்.  ராவணன் சபையில் கூட ,  தைரியமா எழுந்து, சீதையை கவர்ந்து வந்தது  சரி இல்லை. கொண்டு போய் ராமனிடம் விட்டுடணுமுன்னு  சொன்னவர். தாராளமா இவரை   நம்பலாமு'ன்னு பரிந்து உரைத்தாராம்!
வாசலில் போர்டுலே  போருக்குப்பின் பட்டாபிஷேகம் என்று சொன்னதை நியாயப்படுத்தும் வகையில்   கருவறையில் சீதையும் இருக்காங்க.   ஆனால்....    விபீஷணனுக்கு  இங்கே  ஏற்கெனவே பட்டாபிஷேகம்  செஞ்சப்ப சீதை  இங்கிருக்க வாய்ப்பில்லை தானே? சீதை  பிற்காலத்தில் இங்கே  பிரதிஷ்டை செய்யப்பட்டுருக்கலாம்.  என் நியாயமுன்னு ஒன்னு இருக்குல்லே :-)





கோவிலுக்கு முன்னால் இருக்கும் கடலில் கற்களை அடுக்கி வச்சாப்போல ரெண்டு  சாமிகள்.   சிந்தூரம் பூசி இருப்பது ஆஞ்சி. அப்ப இன்னொன்னு...........   ராமனோ?  ராமன் எப்போ ஒற்றைக்கு இருந்தான்? சதாசர்வகாலமும் லக்ஷ்மணன் கூடவே  இருப்பதுதானே வழக்கம்? ராமனும் லக்ஷ்மணனும்னு நினைச்சுக்க வேண்டியதுதான் !  கடல் நுரைச்சுக்கிட்டு இருக்கு இங்கே.

 இதுக்கு கதையும் காரணமும் இன்னும் கண்டுபிடிக்கலை போல..... ராமன் சோப்புப் போட்டுக் குளிச்சதால் வந்த நுரைன்னு  சொல்லிடலாமா?

தர்ப்பணம் பண்ணிவைக்க  ஒரு சின்னக்குடிசை போட்டு வச்சுருக்காங்க.  இந்த சோத்துக்கு அங்கெ ஏராளமான  காக்கைக்கூட்டம்!
கடல்பறவைகள்  ஷாக்,  ஸீகல் ஏராளம்.  ஒரு முள்மரத்தில்  பருந்து ஒன்னு !  அழகோ அழகு!   பெரிய திருவடி!



ஆனிமாசம் பட்டாபிஷேக அனிவர்ஸரிக்கு  ராமேஸ்வரம் கோவிலில் இருந்து  ராமர் அண்ட் கோ வும், விபீஷணனும் கிளம்பி இங்கே வந்து மீண்டும் பட்டர் கையால் முடி சூட்டிக்கிட்டுத் திரும்பிப் போறாங்க.
பட்டரிடம் அனுமதி கேட்டு, சுவரில் இருக்கும் சித்திரங்களையும் கருவறைக்கு வெளியேயும் கொஞ்சம் படங்களை எடுத்துக்கிட்டேன்.



செல்லில் பேசும் ஜோரில், அனுமதி கேட்டவுடன் தலையை ஆட்டிட்டுப் பேச்சில் மூழ்கிட்டார்!

வாங்க, நாமும் கிளம்பி தனுஷ்கோடி போகும் சாலையில் சேர்ந்துக்கலாம்.
தொடரும்...........  :-)


Sunday, September 18, 2016

ஆதலினால் பயணம் செய்வீர் !

வகுப்புக்  கண்மணிகளே!

 பயணம் அமைஞ்சுருக்கு.  வரச்சொல்லி இருக்கார் பெரும் ஆள்.  இந்த முறை கொஞ்சம்  கடினமான பயணமாக இருக்கலாம்.  அதைப் பற்றி நாம் ஏன் கவலைப்படணும்?  எல்லா பாரத்தையும்  அவன் மேல் போட்டுட்டு இதோ  கிளம்பணும், இன்னும் சில மணி நேரங்களில்.

இந்தவாட்டி  கொஞ்சம் நீண்ட பயணமும் கூட ....   ஏற்கெனவே ஆரம்பிச்சுப் போய்க்கிட்டு இருக்கும் தொடர் முடிஞ்சபாட்டைக் காணோம்.  அதனால்  கொஞ்சம் எழுதி ட்ராஃப்டில் போட்டு வச்சுருக்கேன்.

அவைகளை வாரம் ஒரு பதிவு என்று வெளியிட உத்தேசம்.  அதுகூட போகும் இடத்தில் கிடைக்கும்  இணையத் தொடர்பைப் பொறுத்ததே!

நம்ம வகுப்புக் கண்மணிகள்,  'ஹைய்யா... லீவு'  என்று ரொம்பவே சந்தோஷப்பட்டுடக் கூடாது பாருங்க....  :-)

சேமிப்பில் இருப்பவை தீர்ந்து போவதற்குள் திரும்பி  வந்துடலாம். நம்பிக்கை தானே வாழ்க்கை,       இல்லையோ!

எல்லோரும் நல்லபிள்ளைகளா நடந்துக்குங்க.



என்றும் அன்புடன்,
துளசி டீச்சர்.

Friday, September 16, 2016

கந்தமாதன பர்வதம் ! ராமேஸ்வரம் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 87)

ரொம்பப் பக்கத்தில்தான் கந்தமாதன பர்வதம் என்று ராமர் பாதம் இருக்கும் மலை இருக்கு. அங்கேயும் போயிட்டு வந்துடலாமேன்னு போனோம். ராமநாதஸ்வாமி கோவிலில் இருந்து மூணு கி மீ இருக்கும்.  என்னுடைய  முந்தையப் பயணத்தில் ஒரு குதிரை வண்டியில் இங்கே வந்தோம்.  அப்போ பொட்டல்காடா ஒன்னுமே இல்லாமல் இருந்த  இடம்,   இப்போ ஊர் வளர்ந்துபோய் ரெண்டுபக்கமும் வீடுகளும் நெருக்கமாக் கடைகளும் சந்துபொந்துள்ள தெருக்களுமாக் கிடக்கு.
நல்ல படிகளுடன் மேலேறிப்போகும் விதமாக்கட்டி எழுப்பி இருக்காங்க.  கீழே பயணிகளுக்கான  தீனிக் கடைகள்.  இளநீர் கடையை மட்டும் பார்த்து வச்சுக்கிட்டேன்:-)

மேலேறிப்போனால் ஒரு கருவறை மட்டும் நடுவிலே. சுத்திவர வெராண்டா கைப்பிடிச் சுவருடன் இருக்கு. கருவறையை ஒட்டியே திண்ணை போன்ற அமைப்பு.  கருவறைக்குள்ளே  தரையில் கல்லில் பதிந்த ராமனின் பாதங்களின் தடம். தீபாராதனை காமிச்சார் பூசாரி.  கும்பிட்டுக்கிட்டோம்.
மேலே: சுட்டபடம்தான். ரொம்பப் பழசு போல. இப்ப கருவறைக்கும் வெளிப்புற தூண்களுக்குமிடையில் திண்ணை போலக் கட்டி  விட்டுருக்காங்க.

ராமலக்ஷ்மணர்கள் சுக்ரீவனின் சேனையுடன்  இங்கே வந்து சேர்ந்துட்டாங்க. உயரமான இடமா இருப்பதால் ,  இங்கிருந்து இலங்கை தெரியுதான்னு  ராமர்  குன்றின் மேலேறி வந்து நின்னு பார்த்தாராம். அப்ப அவர் பாத அடையாளம் பதிஞ்சுபோச்சுன்னு  ஒரு ஐதீகம். பாவம்.... அவருக்கு யார் இந்த ஐடியா கொடுத்தாங்களோ.....  இப்பவும் இங்கே நின்னு பார்த்தால் இலங்கை தெரியுதுன்னு  கட்டிவிட்ட கதைகள் உலாத்துதே  :-)

இல்லையில்லை, ராமருக்காக  வானரங்கள் பாலம் கட்டும் வேலைக்காக கற்களைக் கொண்டு வந்து  சேர்த்தப்ப,  இதன் மீது இருந்து வேலை நடப்பதைக்  கவனிச்சுக்கிட்டு இருந்தார்னு ஒரு கதையும் உண்டு.   நட்புக்காக போனாப் போகட்டுமுன்னு   வந்து  உதவி செய்யும்போது....   ராமன் மேஸ்த்ரி வேலை செஞ்சாராக்கும்...........  ஆனாலும் நம்மாட்களின் கற்பனைத் திறனுக்கு எல்லையே இல்லை !!!

சுந்தரகாண்டம் வாசிக்கும்போது,  ஆஞ்சி  ஒரு மலையின் மேலேறி அங்கிருந்து தாவி இலங்கையை நோக்கிப்  பறந்து போனார்னு  வரும். அப்போ அந்த  மலையின் மீது இருந்த பூ மரங்கள் , ஆஞ்சியின்  பாதங்கள் அழுந்தினதால்   அந்த  அதிர்ச்சியில் தங்கள் மேல் இருந்த மலர்களை உதிர்த்தனன்னு  இருக்கும். இவ்ளோ பூ மரங்கள் இருக்கும்  மலை ( இப்போ  சின்னக் குன்றின் அடையாளம் கூட இல்லை) எவ்ளோ வாசனையா இருந்துருக்கும்.  அதான் கந்தமாதன பர்வதமுன்னு பெயர் வந்துருக்கலாமோன்னு எனக்கொரு சம்ஸயம். கந்தம் =  மணம்.

 வலம் வரும்போது  எல்லா திசைகளிலும்  ராமேஸ்வரம் முழுக்கத் தெரியுது.  முள்மரங்கள் போல ஏராளமா இருக்கு இந்தப் பக்கங்களில்.  அந்தப் பச்சைகளுக்கு இடையில் மஞ்சளாத் தெரியும் கோபுரம் அழகுதான்.
கோவிலில் இருந்து வெளியே வந்தமே, அப்போ நேரா அறைக்குப்போய் கெமரா கொண்டு வந்துருக்கலாம்.  என்னவோ அப்போ தோணலை.  என்ன மடத்தனம்  பாருங்க.....
அந்தத் திண்ணையிலே உக்கார்ந்தால்  சுகமான காத்து, ஆனந்தமா இருக்கு.  பத்து நிமிசம் உக்கார்ந்துட்டுக் கீழே இறங்கி வந்து இளநீர்  வாங்கிக் குடிச்சுட்டு அறைக்கு வந்தோம்.

எல்லாருக்கும் ஒன்னரை மணி நேர ஓய்வு கொடுத்தேன்.  மணி ஆறாகுது.  ஏழரைக்குக் கிளம்பிப்போய் சாப்பிட்டு வரலாமுன்னு ப்ளான்.
ஓலைப்பொட்டியில் இருந்து  மரச்சொப்புகளை வெளியில் எடுத்து வச்சு ஆசை தீரப் பார்த்தேன். அந்தக்காலம் போல நிறைய வகைகளும் இல்லை, கையில் எடுத்தால்      நல்லா மொழு மொழுன்னும் இல்லை.  கிடைச்சதே  அதிகம். குற்றம் சொல்ல வேணாமுன்னும் தோணுச்சு.

WIFI  இருக்குன்னாங்களேன்னு பார்த்தால் வேலை செய்யலை. வரவேற்புக்கு ஃபோன் செஞ்சால்  கீழே தரைத்தளத்தில் மட்டும்தான் வேலை செய்யுமாம். போச்சுடா.....    ஃபைவ் ஸ்டார் ஹொட்டேல்னு பேர் வச்சுக்கிட்டு..........  ப்ச்........
கீழே இறங்கிப்போனால்.........   லாபி முழுசும் மக்கள் வெள்ளம்.  பகலில் யாரும் இல்லாமல் காலியாக் கிடந்த இடம், இப்படி!  சுற்றுலாப்பயணிகள்!  சுத்திப் பார்த்துட்டு, இருட்டுனதும் கூட்டுக்கு  வந்தாச்சு :-) ஆளுக்கொரு ஸ்மார்ட் ஃபோனுடன்  WIFI க்காகக் கூடுன கூட்டம்!  நாமும்  ஜோதியில் கலந்தோம்.


காகிதக்கூழில் செஞ்ச ராமாயணக் காட்சிகள்  இருக்கும்  சுவர் அலங்காரம் உண்மைக்குமே ரொம்ப அழகா இருந்துச்சு.


ஏழரைக்குக் கிளம்பி  கோவிலை நோக்கிப்போறோம். அங்கேதான்  கடைத்தெரு, சாப்பாட்டுக் கடைகள் எல்லாம் இருக்கு. சபரீஷ் ரெஸ்ட்டாரண்டுன்னு ஒன்னு கண்ணில் ஆப்ட்டது.  பார்க்கவும் ஓக்கே.
உள்ளே போனால் எதிர்பாராத வகையில் அன்பான உபசரிப்பு.  உள்ளேயும் நல்லாவே இருந்தது.  எனக்கு இட்லி கிடைச்சது. நம்மவருக்கும் சீனிவாசனுக்கும் அவரவர் விருப்பப்படி.

நமக்குப் பரிமாறியவர்  பெயர்  குமார்னு நினைக்கிறேன்.  புதுமாப்பிள்ளை!  மனநிறைவோடு வாழ்த்திட்டு, மறுநாள்  பகல் சாப்பாடு இங்கேதான்னு சொல்லிட்டு வந்தோம்.


தொடரும்..........  :-)