Friday, June 24, 2016

அரிமேயவிண்ணகரம் (திருநாங்கூர்) (இந்தியப் பயணத்தொடர். பகுதி 51)

இந்தத் திருநாங்கூர் கோவில்கள் ஒவ்வொன்னும் ஒவ்வொரு பக்கத்தில் இருக்கு. அதிக தூரமில்லை என்றாலும் வழி காமிச்சுக் கொடுக்க யாராவது கூட இருந்தால் தான் நல்லது.  மேலும் ஒரு கோவிலுக்கு ஒரு பட்டர்னு இல்லாம, ஒரே பட்டர் ஸ்வாமிகள் ரெண்டு மூணு கோவில்களுக்கு பூஜை செய்யறார்.  வழிகாட்டியா வர்றவங்களுக்கு இந்த விவரம் பூராவும் தெரியுது.  பட்டர்களின் செல்ஃபோன் நம்பர், எந்த நேரத்துலே எந்தக் கோவில் திறந்துருக்கும், பட்டர் ஸ்வாமிகள் எப்போ எந்தக் கோவிலில் இருப்பார் என்ற   தகவல்கள் எல்லாம் அத்துபடி. நாம் ஒரு கோவிலை நோக்கிப் போகுமுன்னே அங்கே ஆள் இருக்கான்னு  செல்லில் கூப்புட்டுக் கேட்டுக்கிட்டே வழி சொன்னார்   நம்ம குமார்.
இவர் ஒரு காலத்தில் வியாபாரம் செஞ்சுக்கிட்டுதான் இருந்தாராம்.  அப்புறம் இப்போ ஒரு ஏழெட்டு வருசமாத்தான் கைடு வேலை பார்க்கிறேன்னார்.

நாம் அடுத்துப்போன இடம் குடமாடுகூத்தன் கோவில். அரிமேய விண்ணகரம். திருநாங்கூர் திவ்யதேசத்தில் இதுவும் ஒன்னு. சின்னதா இருந்தாலும் பளிச்ன்னு இருக்கும் ராஜகோபுரம் மூணு நிலையில்.
ராஜகோபுரத்துக்கு வெளியிலேயே பெரியதிருவடிக்கு சந்நிதி.  பலிபீடம் மட்டும் இருக்கு. கொடிமரம் இல்லை.
ஒரு நாலு வருசங்களுக்கு முந்தி கும்பாபிஷேகம் நடந்துருக்கு. இன்னும் பரவாயில்லாமல்  இருக்கு. நீளமான முன்மண்டபத்துக் கூரையில் தசாவதாரம், ராமாயணம், பாகவதம் காட்சிகளை வரைஞ்சு வச்சுருக்காங்க.
கண்ணுக்கு நேரா குடமாடுகூத்தனின் சந்நிதி. இப்பதான் கோவில் முன்மண்டபத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்யறாங்க ஒருத்தர்.
கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 9 முதல் 12. மாலை 4 முதல் 6  என்று இருந்தாலும் கோவில் திறந்து இருக்கே தவிர,  பட்டர் ஸ்வாமிகள் இருப்பது உத்தரவாதமில்லை. அவரும் ரெண்டு மூணு கோவில்களைப் பார்த்துக்க வேண்டி இருப்பதால் இங்கேயுமங்கேயுமாத்தான் போய்வர்றார்.  என்ன செய்யறது?



 குடமாடும் கூத்தனைக் கம்பி வழியா தரிசனம் செஞ்சுக்கிட்டு, அப்படியே   பக்கத்தில் இந்தாண்டை இருக்கும்  ஸ்ரீராமர்  சந்நிதிக்கும் ஒரு கும்பிடு போட்டுட்டு,  ஒரு பத்து நிமிசம் போலக் கோவிலை வலம் வந்து மற்ற சந்நிதிகளில் போய் கும்பிட்டு வந்தோம்.
மூலவர்  குடமாடு கூத்தன்.  இருந்த கோலம். காலடியில் ஒரு பானை! வெண்ணெய்ப் பானை. மூலவர் சுதைச் சிற்பம் என்பதால் அபிஷேகம் கிடையாது. தைலக்காப்புதான்.

உற்சவர்  நாலு கைகளோடு இருக்கும்  சதுர்புஜ கோபாலன்.
தனிச்சந்நிதியில் தாயார். பெயர் அமிர்தகடவல்லி. வலத்தைத் தொடர்ந்தால்  அந்தாண்டை சூடிக்கொடுத்த சுடர்க்கொடி தனிச் சந்நிதியில்.  கொஞ்சம்(!) சின்னதா இருக்கு  சந்நிதி. நாலுபடிகளேறிப்போய் ஸேவித்துவிட்டு, தூமணி மாடம் ஆச்சு.
கோவிலுக்கு நம்ம மஹாரண்யம் முரளிதர ஸ்வாமிகள்தான் கொஞ்சம்  நிதி உதவி, பராமரிப்பு  செய்யறார். போர்டில் தகவல் இருக்கு.  மாசம் முழுக்க  ஒரு ஆயிரம் ரூதான் சம்பளம் என்றால்....   பட்டர்கள் நிலை கஷ்டம்தான் இல்லையோ.....

தமிழக அரசுதான் எல்லாக் கோவில்களையும் அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வந்துருச்சே.... அப்ப அரசு சம்பளம் வருமான்னு  கேக்கணும். இந்தக் கோவில்களில் எல்லாம் பக்தர்கள் கூட்டங்கூட்டமாக  வர்றமாதிரி தெரியலை.  சீஸன் அனுசரிச்சு  அப்பப்போ வருவாங்கபோல.  மேலும்  இந்த 108 திவ்யதரிசனக் கோவில்கள்   ஆசை உள்ளவர்கள் வந்துட்டுப் போவாங்கதான். ஆனால் அடிக்கடி வருவாங்களா என்ன?

பட்டர்களுக்கும் குடும்பம் குழந்தைகுட்டின்னு இருக்கும்தானே?  இப்படி வருமானம் என்றால் யார்தான் பிள்ளைகளை கோவில் வேலைக்குன்னு அனுப்புவாங்க?  பெருமாள் மேலுள்ள அன்பால் சிலர் வருவாங்கன்னு  நினைக்கிறேன். அதுவும்   எத்தனை தலைமுறைக்கு? 
திருநாங்கூர் கருட சேவை என்பது ரொம்பவே ப்ரசித்தி என்பதால்  அப்போ மட்டும் கூட்டம்   இருக்கும். ஒவ்வொரு கோவிலில் இருந்தும்  கருடவாகனத்தில் பெருமாள் புறப்பட்டுப்போய் இன்னொரு கோவிலில் ஒன்றாய் சேர்ந்து ஸேவை சாதிப்பார்கள். மொத்தம் பதினோரு  பெருமாள்கள். இங்கேயே வாகன மண்டபத்தில் ஒரு சில கோவில்களின் கருடவாகனங்கள் பார்த்தோம்.

இந்த நாங்கூர் பகுதியை ஒரு காலத்தில் நாகராஜனான தக்ஷகன்/தட்சன்  என்பவன் நிர்மாணிச்சு இங்கே தங்கி இருந்து  ஸ்ரீநாராயணரை வழிபட்டு வந்துருக்கான். அப்போ இதுக்கு நாகபுரம்னு ஒரு பெயர் இருந்துருக்கு. அந்தக் காலக்கட்டத்தில் உத்தங்க   மகரிஷிக்கு தரிசனம்  கொடுத்துருக்கார் நம்ம  குடமாடு கூத்தர். எப்படின்னு பார்க்கலாமா?

உத்தங்கர் சின்ன வயசில் வைதர் என்ற குருவிடம் வேதங்களைக் கற்று முடிச்சார். குரு தட்சிணை தர வேண்டிய சமயம், குருபத்தினி  கேட்டது  உள்ளூர் அரசியின் காதணிகளான குண்டலங்கள்.
உத்தங்கரும்  அரண்மனைக்குப்போய் அரசனிடம் , குருதட்சிணைக்காக அரசியின்  காது குண்டலங்கள் வேணுமுன்னு கேட்டுருக்கார்.  அரசனும் அரசியும்  ஒரு சொல்லும் பேசாது  குண்டலங்களைத் தானம்  செஞ்சுடறாங்க. அதை எடுத்துக்கிட்டு இவர்  குருகுலத்துக்குப் போய்க்கிட்டு இருக்கார். வழியில் சொல்லமுடியாத தாகமும் பசியுமா இருந்துருக்கு.

அப்போ எதிரில் ஒரு இடையன், தலையில் வச்ச குடத்துடன் ஆடிக்கிட்டும் பாடிக்கிட்டும்  வர்றான்.  அவன் வச்சுருக்கும் குடத்தில் வெண்ணையோ தயிரோ இருக்குமுன்னு நினைச்சு, எனக்கும் கொஞ்சம் குடத்தில் இருப்பதைக்கொடுன்னு கேக்கறார்.
அதுக்கு அந்த இடையன், இதுலே மாட்டுச்சாணமும் கோமியமும்தான் இருக்கு.  வர்ற வழியில் ஒரு குருகுலத்துலே இருந்த குருவுக்கும் இதைத் தான் கொடுத்தேன். அருவருப்பில்லாமல் சாப்பிட்டார்னு சொல்றான். குருவே சாப்பிட்டதுன்னா இது குருப்ரஸாதமுன்னு  நினைச்சு, எனக்கும் கொஞ்சம் தான்னு கேட்டு  வாங்கித் தின்னுட்டார்.  அப்போ கையில் இருந்த கமண்டலத்தைக் கீழே மரத்தடியில் வச்சுருந்தார்.  அதை நைஸா தக்ஷகன் எடுத்துக்கிட்டுப்போய் ஒரு இடத்தில் புத்துக்குள் ஒளிஞ்சுக்கறான்.  இவனுக்கு இந்தக் குண்டலங்கள் மேலே ரொம்பநாளா ஒரு கண்ணு.

எப்படி குண்டலத்தை மீட்கலாமுன்னு  இடையனிடம் கேட்க,  இதோ அங்கே குதிரையில் வர்ற ஆளிடம் கேட்டுப் பார்க்கலாமுன்னு சொல்றான். குதிரைக்காரரிடம் சமாச்சாரத்தைச் சொல்லி புத்தாண்டை கூட்டிப்போய் காமிக்கிறாங்க. குதிரை கனைச்சதும் அதன் வாயில் இருந்து  தீ புறப்பட்டு புத்துக்குள் பரவுது.      அனல்    தாங்காத  தக்ஷகன் வெளியே வந்து  கமண்டலத்தைத் திருப்பித்தந்தான்.

இடையனுக்கும், குதிரைக்காரருக்கும் நன்றி சொல்லிட்டு, குருகுலத்துக்கு வந்து சேர்ந்த உதங்கர்  குருபத்னியிடம், குண்டலங்களை சமர்ப்பிக்கிறார். குருவிடம் நடந்த கதைகளைச் சொல்றார்.
உன்னை சோதிக்கவே  இதெல்லாம் நடந்தது. குடத்துடன் ஆடிப்பாடி வந்தவன் சாக்ஷாத் பரம்பொருள் இறைவனே. குடத்தில் இருந்தது  சாணியும் கோமியமும் இல்லை.  அம்ருதம். இதை நீ சாப்பிட்டதால்தான் அந்தப் பகுதியின் விஷக் காத்தில் இருந்தும், தீயின் உஷ்ணத்தில் இருந்தும் தப்ப முடிஞ்சது. குதிரைக்காரனா வந்தவன் இந்திரன். குதிரையா வந்தது அக்னி. உன்னுடைய குருபக்தியைக் கண்டு எல்லோருக்கும் சந்தோஷம்னு சொல்லி வாழ்த்தி அனுப்பினார்.இதே உதங்கர்,  பிரபை என்னும் மங்கையை மணந்து தர்மம் அனுசரித்து வாழ்ந்துவந்தார்.
அதே சமயம் இந்தப் பிரபையைப் பற்றிய கதை ஒன்னு வேற இடத்தில் வாசிச்சேன்.  இவள் பழைய ஜென்மங்கள் ஒன்றில் விலைமகளா இருந்தாளாம். அப்போ சிவ பக்தரான வேதியரிடமிருந்து ஒரு சிவலிங்கத்தை அபகரிச்சு, தினமும் பூஜை செஞ்சு வழிபட்டுக்கிட்டு இருந்தாள். அதன் பலனாகத்தான் இந்தப்பிறப்பில் நல்ல ஒரு தெய்வாம்சம் கிட்டிய முனிவருக்கு மனைவியாகும் பாக்கியம் கிடைச்சதாம். ஒரு சமயம் காசிக்கு தம்பதிகள் பயணம் போயிருக்காங்க. கங்கையில் நீராடும்போது, முதலை ஒன்னு  பிரபையைக் கவ்வி இழுத்துக்கிட்டுப் போய் முழுங்கிருது. மனைவியை இழந்து உதங்கர் இறைவனிடம் பிரலாப்பிக்கும்போது, அவள் இப்பிறவியில் செய்த புண்ணியத்தால்  சொர்க்கத்தில் சுகமாக இருகிறாள்னு பெருமாள் சொன்னதாக இருக்கு.

வஞ்சனையால் வந்தவள்த னுயிருண்டு வாய்த்த தயிருண்டு வெண்ணெயமு துண்டு, வலிமிக்க
கஞ்சனுயி ரதுவுண்டிவ் வுலகுண்ட காளை கருதுமிடம் காவிரிசந் தகில்கனக முந்தி,
மஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து வளங்கொடுப்ப மாமறையோர் மாமலர்கள் தூவி,
அஞ்சலித்தங் கரிசரணென் றிரைஞ்சுமணி நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

 திருமங்கையாழ்வார் - 1238 -1247 - 10 பாசுரங்கள்.

திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார்.  இந்தப் பக்கத்துக்குக் கோவில்களுக்கெல்லாம் வஞ்சனையே இல்லாம பப்பத்து பாசுரம் பாடிய மனசை என்னன்னு சொல்றது!!!

இதுக்குள் நம்ம குமார் தகவல் சொல்லியபடியால்  பட்டர் அவசர அவசரமா வந்து சேர்ந்தார். இப்பத்தான் இங்கே காலை பூஜைகளை முடிச்சுக்கிட்டு வேறொரு கோவிலுக்குப் பாதிவழியில் போய்க்கிட்டு இருந்துருக்கார்.
வந்ததும் சந்நிதியைத் திறந்து  குடமாடும் கூத்தருக்கு தீப ஆரத்தி செய்து நமக்குத்  தீர்த்தம் சடாரி ஆச்சு.  உடனே  சந்நிதியைப் பூட்டிக்கிட்டு  அடுத்த கோவிலுக்கு வரச்சொல்லிட்டுப் போனார்.  பைக் வச்சுருப்பதால் இங்கே அங்கேன்னு ஓட  முடியுது!

 தொடரும்..........  :-)



PINகுறிப்பு:  இப்போ உதங்கரா இல்லை உத்தங்கரான்னு இன்னொரு சந்தேகம். வெவ்வேற இடத்தில் வெவ்வேறயா இருக்கே...

Wednesday, June 22, 2016

அண்ணன் பெருமாள் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 50)

இந்த வாண்டையார் ஹொட்டேலில் வெளிமுற்றத்தினொரு பக்கம் தங்கும் அறைகளும், இன்னொரு பக்கம் சதர்ன் ஸ்பைஸ் மல்ட்டி குஸீன் ரெஸ்ட்டாரண்ட் என்ற பெயரில் ஒன்னுமா இருக்கு. முற்றத்துக்கு நேர் எதிரில் மணிக்கூண்டு. காலையில்   ஏழரைக்கு முற்றம் கடந்து  டைனிங் ஹால் போனோம். இட்லி, கேஸரி, காஃபி கிடைச்சது. ரொம்பவே சுமார் ரகம்.
இன்றைக்கு நிறைய  பயணம் என்பதால்  சிதம்பரம் விட்டுச் சட்னு கிளம்பணும். எட்டுமணிக்குச் செக்கவுட் செஞ்சுட்டுக் கிளம்பியாச். நேரா சீர்காழிதான். அங்கிருந்து  ஒரு எட்டு கிமீ போனால் திரு வெள்ளக்குளம் என்ற ஊர்.  இப்படிச் சொல்றதை விட அண்ணன்கோவில் என்றால் எல்லோருக்கும் புரிஞ்சுருது.
சீர்காழிக்குப் பக்கத்திலேயே திருநாங்கூர் திவ்யதேசங்கள் என்ற பெயரில் ஒரு  6 கோவில்கள் இருக்கு.  மேலும்  இந்தக் கோவில்களைச் சுத்தி இன்னும் ஒரு  7 கோவில்கள். மொத்தம் பதிமூணு   கோவில்கள்.  இவை எல்லாமும் நம்ம 108 வைணவ திவ்ய தேசக்கோவில்களில் சேர்த்தி என்பதால் இவைகளை தரிசனம் செஞ்சு நம்ம பட்டியலில், இதுவரை  பார்த்த எண்ணிக்கைகளைக் கூட்டிக்கலாம் என்பது நம்ம பயண நோக்கம்:-)

நேத்து சீர்காழி தாடாளன் கோவிலில் ஒரு வரை படம் பார்த்தமே...  அது ரொம்ப நல்ல உதவி. அங்கே கிடைச்ச தகவல்தான் இங்கே கைடு கிடைப்பார் என்பது.

நல்லவேளையா கைவசம் கூகுள் மேப்புக்கு ஆக்ஸெஸ் இருந்ததால் கோபால் பார்த்துச் சொல்லச்சொல்ல கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்தாச்சு.
இடது பக்கம் கோவில் திருக்குளம். ஸ்வேதா புஷ்கரணி. (ஸ்வேதம் = வெள்ளை)

திருவெள்ளக்குளம் என்ற ஊர் பெயருக்குக் காரணி இந்த புஷ்கரணிதான். குளத்தின் நடுவில் இருக்கும் நீராழிமண்டபத்தைச் சீர்ப்படுத்தும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு.
குளக்கரையில் நம்ம ஆஞ்சிக்கு ஒரு சந்நிதி.  குட்டியா, கை கூப்பிய நிலையில் கோவில் வாசலைப் பார்த்தபடி நிக்கறார். அவருக்கு ஒரு கும்பிடு போட்டபின்  கோபுரவாசலைக் கடந்து உள்ளே போறோம்.
ராஜகோபுரத்துக்கும் ஒரு முக்காடு. புனரமைப்பு வேலைகள்!

கோவிலுக்குள்  வழக்கமான பலிபீடம், கொடிமரம், பெரிய திருவடி கடந்து நேரா உள்ளே அண்ணன் இருக்கார். நேராப்போய் மூலவரை ஸேவித்தோம். தீபாராதனை, தீர்த்தம் சடாரி, துளசிதளம் கிடைச்சது. கூடவே கோபாலின் கழுத்தில்  'துளசி இல்லாத' ஒரு மாலை!!  
 
மஹாரண்யம் ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் இந்தப் பக்கத்துக் கோவில்களுக்கெல்லாம்   சுத்தப் படுத்துதல், கோவில் கதைகளை எழுதி வைத்தல் போன்ற கைங்கரியங்கள்  பண்ணி இருக்கார்.

அங்கே இருந்த ஒருவரிடம்  வழிகாட்டி கிடைப்பாரான்னு  விசாரிச்சோம்.  நாம் தேடி வந்த வழிகாட்டி அவர்தான்னு தெரிஞ்சது. பெயர் குமார். திருநாங்கூர் கோவில்களுக்கு நம்மோடு வந்து  வழிகாட்டப் போறார். என்ன சார்ஜ்னு கேட்டப்ப,   ' உங்க இஷ்டம்'  என்றார்.

முதல்லே இங்கே கோவிலைச் சுத்திட்டு வரலாம்.  அண்ணன் பெருமாள் என்று மூலவரைக் கூப்பிட்டாலும், இவர் பெயர் ஸ்ரீநிவாஸன். தாயார் அலர்மேல் மங்கை. அட என்று நினைக்கும்போதே.... இந்தக் கோவிலுக்குத் தென் திருப்பதின்னு ஒரு பெயரும் இருக்குன்றதைச் சொன்னார்.

இந்தத் தென்திருப்பதி என்ற பெயரில் இன்னும் சில கோவில்களைப் பார்த்திருக்கேன். எல்லாம் நம்ம வசூல்ராஜாவின் கிளை ஆஃபீஸ்கள் என்றதே!  திருப்பதிக்கு வேண்டிக்கிட்டு, அங்கே போகமுடியலைன்னா, இப்படி ப்ராஞ்ச் ஆஃபீஸ்களில்  பணத்தைக் கட்டிடலாம். ஹெட் ஆஃபீஸுக்குத்தான் போய் கட்டணும் என்பதில்லை. ரொம்ப ஃப்ளெக்ஸிபிள்ப்பா.  நல்ல நெட் வொர்க்!

கோவில் , திருப்பதி கோவிலைவிடப் பழசு என்பதாலும், பாசுரம் பாடி மங்களாசாஸனம் செய்த திருமங்கை ஆழ்வார் முதலில் இங்கே வந்து பாடியதால் இவரை, திருப்பதி சீனுவுக்கு  அண்ணன் என்று சொல்லி இருக்கார்.

கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்,
நண்ணார்முனை வென்றிகொள்வார் மன்னு நாங்கூர்,
திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக் குளத்துள்
அண்ணா,அடியேன் இடரைக் களையாயே.


கோவிலை வலம் வர்றோம். முதலில் நம்ம தாயார் சந்நிதி. அலர்மேல் மங்கை! பத்மாவதி. சந்நிதி மூடி இருந்தாலும் கம்பிக் கதவின் வழியாகத் தரிசனம் ஆச்சு. சின்ன உருவம்தான்.
தாயார் சந்நிதி மண்டபத்துக்குள்ளேயே இன்னொரு சின்ன சந்நிதியில் குமுதவல்லித் தாயார். இது  குமுதவல்லியின் அவதார ஸ்தலமாம்.
யார் இந்தக் குமுதவல்லி?  நம்ம திருமங்கையின் மனைவிதான்! என்ன ஏதுன்னு கொஞ்சம் கதை கேக்கலாமா?
இங்கே  குளத்தில் ஏராளமா எப்போதும் குமுதமலர்கள்  இருக்குமாம். தேவகன்னிகையர் இங்கே வந்து யாருக்கும் தெரியாமல்  அல்லிகளைப் பறித்துப்போய் இஷ்ட  தெய்வத்துக்கு வழிபாடு செய்வாங்க போல. இப்படி தினமும் நடந்து வரும் காலத்துலே, ஒரு நாள்  ஒரு மானிடன் கண்ணுலே பட்டுடறாள் ஒரு தேவகன்னிகை.  இதனால், தேவலோகம் திரும்பிப்போகும் சக்தி போயிருது. பெண்ணாகவே பூமியில் தங்கி இருக்கும் நிலமை. குமுதா என்ற பெயரில் அறியப்படுகிறாள்.

இன்னொரு வெர்ஷனும் இருக்கு.  தேவலோக மங்கையான சுமங்கலை, தன் தோழிகளோடு சேர்ந்து இமயமலைக்கருகில் உல்லாசப்பயணமாச் சுத்திக்கிட்டு இருக்காள். அப்போ கபில முனிவரின் ஆஸ்ரமத்தாண்டை வந்துருக்காங்க. சிஷ்யப்பிள்ளைகளுக்குப் பாடம் நடத்திக்கிட்டு இருக்கார் முனிவர். அந்த சிஷ்யப்பிள்ளைகளில் ஒருவர்  கொஞ்சம்கூட அழகே இல்லாமல்  இருந்துருக்கார். அவரைப் பார்த்ததும் சுமங்கலைக்குச் சிரிப்பு வந்துருது.  சிரிப்புச் சத்தம் கேட்ட கபில மகரிஷி,  கோபமாத் திரும்பிப் பார்த்தார். பலன்?  வேறென்ன... 'பிடி சாபம்'தான். பூலோகத்தில் பிறக்கக் கடவாய்.........
சரி....   கதைகள் எப்படி ஆனாலும்,  குமுதா  என்ற பெயரில்  இந்த ஊரில் இருக்காள்.

படைத்தளபதி ஆக இருந்த நீலனுடைய வீரத்தைக் கண்ட சோழ மன்னர், பரகாலன் என்று  ஒரு பட்டப்பெயர் கொடுத்து,  ஆலிநாடு என்னும் ஒரு சின்ன நிலப்பகுதிக்கு அரசன் ஆக்கி இருந்தார்.  நீலன் ஒருமுறை, குமுதாவைக் கண்டு, அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறான். இவள்தான் தேவகன்னிகையாச்சே. சட்னு சம்மதிக்காமல் சில நிபந்தனைகள் போடறாள்.

முதல் நிபந்தனை, இவர்  வைஷ்ணவராக ஆகணும். எப்படி? பஞ்ச  சம்ஸ்காரம் செஞ்சுக்கணுமாம். சுருக்கமாச் சொன்னா தோளில் சங்கு சக்ர முத்திரை போட்டுக்கறது. இதை ஒரு ஆச்சாரியன் செய்வார்.  தாப, புண்ட்ர, நாம, மந்த்ரம், யாக  சம்ஸ்காரம் என்ற அஞ்சு விதமான சடங்கில்  இது ஒன்னு. நாம் முத்திரை போட்டுக்கிட்டவங்கன்னு  சுருக்கிடறோம். இதைப்பற்றி இன்னும் விரிவா  இன்னொரு சமயம் பார்க்கலாம்.

இது என்ன பிரமாதமான்னுட்டு  நீலன் நேராப்போனது, ஒப்பிலியப்பனைத் தேடித்தான். திருநறையூர் நம்பியிடமே முத்திரை போட்டுக்கும் பாக்கியம் இவருக்குக் கிடைச்சுருது. திரும்பி வெள்ளக்குளம் வந்தவர், 'ஆச்சு'ன்னார். இல்லை... இன்னும் ஆகலைன்னாள் குமுதா.
நீங்கதான் குறுநிலமன்னர் ஆச்சே...  தினமும் வைணவ அடியார்கள் 1008 பேருக்கு   அன்னதானம் செய்யணுமுன்னு அடுத்த நிபந்தனை. எவ்ளோ நாளுக்கு?  ஒரு வருசம், செய்யும். அப்புறம் பார்த்துக்கலாமுன்னு சொல்றாள்.

எந்த தானம் செய்யறதுன்னாலும், மனைவியோடு சேர்ந்து செஞ்சால்தான் பலன் என்று சாஸ்த்திரங்கள் சொல்லுதே! அதன்படி அன்னதானம் தொடங்கறதுக்கு முன்னால் கல்யாணமும் ஆச்சு.

தினமும் ஆயிரத்தெட்டு அடியார்களுக்கு அன்னமிடல். எல்லோரும் சாப்பிட்டானதும்தான் இவுங்க சாப்பிடணும். என்னதான் ராசான்னு இருந்தாலும் தினம் இம்மாம்பேருக்கு விருந்துன்னா.... கை இருப்பு கரையத்தானே செய்யும்....  சோழ மன்னனுக்குக் கட்டவேண்டிய கப்பத்தொகை பூராவும் இங்கே சாப்பாட்டுலேயே செலவாகிப்போச்சு. கையில் காசு இல்லைன்னா...  திருடியாவது அன்னதானம் பண்ணணும் என்று  வழிப்பறி, கொள்ளைன்னு   இறங்கிடறார் திருமங்கை.
ஒருநாள் காட்டுக்குள்ளே வந்துக்கிட்டு இருந்த  கல்யாணகோஷ்டி, ஏராளமா நகையும் நட்டுமா வருதுன்னு  சேதி.  போய்  அனைவரையும் மிரட்டி எல்லாத்தையும் கொள்ளை அடிச்சாச்சு.  மாப்பிள்ளை காலில் போட்டுருக்கும் மெட்டியைக் கழட்ட முடியாமத் திணறினார்.  அந்தக் காலத்தில் ஆண்கள் காலில் மெட்டி போடும் பழக்கம் இருந்துருக்கு. எதிரே நிலம் நோக்கி நடந்து வரும் பெண்களுக்கு, இவர் கல்யாணம் ஆனவர்னு தெரிவிப்பது இந்த மெட்டிதானாம்.

சின்ன மெட்டி, கழட்டவரலை... போனாப் போகட்டுமுன்னு விட்டுருக்கலாம். துளித்தங்கமுன்னாலும் அதை வச்சு ரெண்டு ஆளுக்கு சாப்பாடு போடலாமேன்னு  கழட்டித் தரச்சொல்லி மிரட்டறார். அதான் கழட்டவே வரலையே....  சரி நான் கழட்டி எடுக்கறேன்னு குனிஞ்சு  மாப்பிள்ளையின் கால் விரலில் இருக்கும் மெட்டியைப் பல்லால் கடிச்சு உருவப் பார்க்கிறார். ஊஹூம்... அப்பவும் எடுக்க வரலை.... இவர் குனிஞ்சு  பல்லால் மெட்டியைக் கழட்ட முயற்சி பண்ணும்போது, மாப்பிள்ளையின் கை இவர் தலையைத் தடவுது.  மாப்பிள்ளை அப்படியே குனிஞ்சு,  இவருடைய  காதில் என்னவோ சொல்றார்.  உடம்பெல்லாம்  தூக்கிவாரிப் போட்டாப்ல ஆகிருது.
போகட்டும்னு நகை மூட்டையை எடுக்கக்  கைநீட்டறார். மூட்டையைத் தூக்கமுடியாதபடி அவ்ளோ கனம்!  அசைக்கக்கூட முடியலை.  பொண்ணு மாப்பிள்ளை மந்திரவாதிகளோன்னு  தலையைத் தூக்கிப் பார்க்க.............  சங்குசக்ரதாரியாகப் பெருமாள் காட்சி கொடுக்கறார்.

குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும் நாமம்.

முதல் பாசுரம் திருமங்கையின் நாவில் இருந்து வந்தது.
இந்த 108 திவ்யதரிசனக் கோவில்களில் 84  கோவில்களுக்குப்போய் மங்களசாஸனம் செஞ்சவர் இவர்தான்.  வொர்ல்ட் ரெக்கார்ட் !

மேலே: சுட்டபடம். தினமலருக்கு நன்றி.

நீலன், திருமங்கை ஆழ்வாரானதும் குமுதவல்லிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமப் போச்சு! அவளுக்குத்தான் இங்கே தனிச்சந்நிதி இருக்கு!
கப்பப்பணம் பாக்கி வச்சவரை, சோழமன்னன் பிடிச்சு சிறையில் போட்டது, காஞ்சிப் பேரறிவாளன் அருளால் நிதி  கிடைச்சதுன்னு  திருமங்கையின் கதை நீண்டு போகுது. அதை இன்னொருநாள் பார்க்கலாம்.

காலையில் ஏழுமணிக்குத் திறந்தால் ராத்ரி எட்டுவரை கோவிலை மூடறதே இல்லை. இப்படி எல்லாக் கோவில்களும் இருக்கப்டாதான்னு மனசு ஏங்கியது உண்மை.


இங்கே  சஷ்டியப்த பூர்த்தி,  பீமரத சாந்தி, சதாபிஷேகம் செஞ்சுக்கறது ரொம்ப விசேஷமாம். ஏன்னா... ம்ருத்யுவை அடக்கியாண்ட தலமாம். எம பயம் கிடையாது.

பிரம்மாவுக்கு ஒரு சமயம் என்னவோ ஆய்ருச்சு. தான் படைத்த உலகத்தைத் தானே  தீயால் கொளுத்திக்கிட்டு இருக்கார். இதைப் பார்த்த  சிவன், தன்னுடைய சக்தியால் தீயைத் தடுத்து நிறுத்துனதும்,  அந்த தீ அப்படியே ஒன்னு சேர்ந்து  ஒரு பெண்ணா உருவாகி நிக்குது. அந்தப் பெண்தான் ம்ருத்யு தேவி.  உடனே ப்ரம்மா, அந்தப் பெண்ணிடம் மீதி இருக்கும் உலகத்தைப்போய் அழிச்சுட்டு வான்னு கட்டளை இட்டார்.  பெண்ணுரு எடுத்ததால் பாவ புண்ணியத்துக்கு பயந்தவளா இருந்த ம்ருத்யு, அது தன்னால் ஆகாத செயல்னு  மறுத்துட்டாள். கோபம் வந்துருது ப்ரம்மாவுக்கு.
உன் பார்வை பட்டவர்களுக்குப் பலவித நோய்கள் உண்டாகும். அதனால் அவுங்கெல்லாம் செத்துப் போயிருவாங்க. நீ தான் மரணத்துக்குக் காரணமா இருப்பாய்னு சபிக்கிறார். 'போய், எமனுக்கு அசிஸ்டென்ட்டா இரு'ன்னதும் வேற வழி இல்லாம கொடுத்த வேலையைச் செய்யும்படி ஆகிருச்சு.


சூரிய குலத்தில் வந்த துந்துமாறன் என்ற அரசனுக்குப் பிறந்தவன் இளவரசன் ஸ்வேதன். இவனுக்கு ஒன்பது வயசில் மரணம்  என்று  ஜாதகம் கணிக்கும்போது தெரியவந்தது. ம்ருத்யுவால் மரணம் என்று தெரிஞ்சுக்கிட்ட  பாலகன்,  இங்கே கோவிலுக்கு வந்து, மரணபயத்தைப் போக்கும்படி பெருமாளிடம் வேண்டிக்கிட்டு, புஷ்கரணியின் கரையில் இருந்த வில்வ மரத்தடியில் உக்கார்ந்து, வில்வ இலைகளால் பெருமாளுக்குப் பூஜை செய்தபடி ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை  இடைவிடாது  ஜெபிக்கிறான்.  பெருமாளும் மனம் இரங்கி, அவன் முன் தோன்றி, மார்க்கண்டேயனைப்போல் நீயும் மரணத்தை வென்றவன்னு அவனுக்கு ஆசி அளித்துக் காப்பாற்றினார்.

அந்த வில்வமரம் சிவனுடைய சாந்நித்யமாக இங்கே  தலவிருட்சமாகவும் இருக்கு.

கோவிலில் தரை போடறாங்க போல....  கடப்பைக்கல் சதுரங்கள் வந்து இறங்கி இருக்கு. தூசு படாமல் இருக்க வாகனங்கள் எல்லாம் வலைப்போர்வைக்குள்.
மடப்பள்ளியாண்டை உரலும், ஆட்டுக்கல்லுமா இருக்கு. உபயோகத்தில் இருக்கறமாதிரி தெரியலை. தொட்டடுத்துக் கிணறு. பத்துப்பாத்திரங்கள் தேய்க்கப் போட்டுருந்தாங்க. கிணற்றில் தண்ணி இருக்கு என்பதே சந்தோஷம்.
ஆண்டாள் சந்நிதியைப் பார்த்த நினைவு இல்லை. சுத்தி வந்தவள் முன்மண்டபத்துக் கொடிமரத்தாண்டை வந்தப்ப, குட்டிப்பையன் வந்து  நின்னான். பெயர் என்னன்னு கேட்டப்ப, சங்கு சக்ரதாரி போல கைகளை உயர்த்திக்கிட்டே 'சீனிவாசன்'னு   சொன்னது ஜோர்!
கொடிமரத்தின் பக்கத்தில் நின்னு மூலவரை ஒரு முறை சேவிச்சு, கேமெராக் கண்ணை உள்ளே அனுப்பினேன். மங்கலாக வந்தார்.

நமக்கு வழி காட்டப்போகும் குமாரை நம்ம வண்டியில் ஏத்திக்கிட்டு அடுத்த திவ்யதேசக் கோவிலுக்குக் கிளம்பறோம். இனி எல்லாம் குமார் கொண்டுபோகும் வழிதான்!

தொடரும்........  :-)




Monday, June 20, 2016

ஆறுகாலமும் அர்த்தஜாமமும் !!!!(இந்தியப் பயணத்தொடர். பகுதி 49)

சீர்காழியிலிருந்து  கிளம்பி சிதம்பரம் வந்து சேரும்போதே மணி ஏழரைக்குச் சமீபம். கோவிலுக்கு ஒன்பது மணிக்குப் போயிறணும் என்பது  எனக்கு. பத்து மணி பூஜைக்கு எதுக்கு ஒன்பதுக்கேன்னார் நம்மவர்.   வேணாம்.....   போனமுறையும் இப்படிச் சொல்லிக் கடைசியில் போகமுடியாமல் போயிருச்சு. அதனால்  சீக்கிரம் போகணும். உங்களால்  முடியாதுன்னா சொல்லுங்க நான் போயிட்டு வரேன்னு  சின்னதா ஒரு அஸ்த்திரம் எய்தேன்:-)


அப்பப் போற வழியிலேயே எங்கெயாவது  ராச்சாப்பாட்டை முடிச்சுக்கிட்டா நல்லதுன்னார். அந்த எங்கேயாவது  எங்கேன்னு எனக்குத்தெரியும்!  மூணரை வருசத்துக்குமுந்தி சாப்பிட்ட சிதம்பரம் கொத்ஸூ ருசி இன்னும் அவர் நாக்கிலே இருந்து மறையலையே...

அதே கடையைத் தேடிப்போனோம். தேடறதுன்னா.... நம்ம சீனிவாசன் கிட்டே சொன்னால் போதும். அவர் கரீட்டாக் கண்டுபிடிச்சுடுவார். தில்லை ஸ்ரீ கணேஷ் !

உள்ளே போய் உக்கார்ந்தாச்சு. கொஸ்து  நோட்டீஸ் இருக்கான்னு கண்கள் தேடுனது உண்மை. ஆனால் காணோம். என்ன வேணும் என்று கேட்டு மெனுவை ஒப்பித்தவர் கொத்ஸ்/கொஸ்து பெயரையே சொல்லலை.

கேட்டதுக்கு திருதிருன்னு முழிச்சார்.  இந்த இடம்தானான்னு எனக்கு லேசாய் ஒரு சந்தேகம்.  வந்துட்டோமேன்னு  ரெண்டு இட்லிகள் சொல்லி, ரெண்டு வகைச் சட்னிகளோடு சாம்பாருமா  வந்தது. அப்புறம்  ஒரு காஃபி.

கல்லாவில் இருந்தவரிடம் கொஸ்து விசாரணை. எப்போ, எங்கேன்றார். வியாபாரம் கைமாறி இருக்கு.  போனவருசம் முதல் புது மேனேஜ்மென்ட்.  நம்மவருக்கு  ஒரே ஏமாற்றம். போயிட்டுப் போறது.  ஊர் திரும்பினதும் சின்ன  வெங்காயம் போட்டு நானே செஞ்சு தர்றேன்னு தேற்றினேன்:-)

இருட்டில் என்னத்தைப் படம் எடுப்பது? மேலும் கோவிலுக்குள் பூஜை நேரம் படம் எடுக்க அனுமதிக்க மாட்டாங்கதானே? தத்துவ யோசனை மனசில்.  கெமெராவை சார்ஜரில் போட்டு வச்சுட்டுக் கோவிலுக்கு ஒன்பது மணிக்குப் போய்ச்  சேர்ந்தோம்.

அந்த நேரத்திலும் கூட்டம் இருக்குதான்.  நேரா மூலவர் நடராஜனை போற போக்கில் கும்பிட்டுக்கிட்டு பக்கத்து  சந்நிதிக்குள் போறோம்.  கோவிந்தராஜர் கிடப்பில். நிம்மதியாக ஸேவிக்க  முடிஞ்சது. கையில் விழுந்த தீர்த்தம் ஒரே இனிப்பு. நல்லவேளை . வாங்கினதும் நேராத் தலையில் தடவாமல் தப்பிச்சேன். நாபிக் கமலத்தில் ப்ரம்மன் இருப்பதைப் போனமுறை கவனிக்கலையேன்ற குறை தீர்ந்தது.
மணி இப்போ ஒன்பதரை ஆகப்போகுதே. எப்போ அர்த்தஜாமப்பூஜையோ என்ற  ஆர்வத்தில் நடராஜன் சந்நிதிக்கு முன் நின்னுக்கிட்டு இருந்தேன். யாரையாவது விவரம் கேட்டுக்கலாமேன்னு  சுத்தும் முத்தும் பார்த்தப்ப , ஒரு பெண்மணி கண்ணில் பட்டாங்க. இங்கே சிவன் சந்நிதிக்கு இடதுபக்கம் படிக்கட்டுகள் இறங்கிப்போகுது. சந்நிதிக்கு நேராக இருக்கும் நடை ஒரு திண்ணைபோல அமைஞ்சுருது. அந்தத் திண்ணையின் தூணோரம் சாய்ஞ்சபடி  இன்னொரு மனிதரிடம் என்னமோ பேசிக்கிட்டு இருந்தாங்க. எளிய முகம். ரொம்பவே சிம்பிள் உடை.

மெள்ள அவுங்ககிட்டப்போய் விசாரிச்சேன். முதல்முறையா வர்றீங்களான்னதுக்கு  ஆமாம்னு பலமாத் தலை ஆட்டினேன்.  கூடவே இந்த அர்த்தஜாம பூஜையை  மூணரை வருசத்துக்கு முந்தி வந்தப்ப தவறவிட்டுட்டேன்னு  ஆத்தாமையோடு சொன்னேன்.

ஸ்படிக லிங்கத்துக்கு இப்போ பூஜை நடக்கப்போகுது. அது முடிஞ்சவுடன் அர்த்தஜாம பூஜை நடக்கும். நீங்க  ஸ்படிக லிங்கப் பூஜை  பார்த்திருக்கீங்களான்னு  கேட்டப்ப , இல்லையேன்னதும்,  வலக்கைப் பக்கம் கை காமிச்சு அங்கே நின்னு பார்த்தால் நல்லாத் தெரியுமுன்னு சொன்னாங்க. அங்கே போய் நின்னவள், சரியான்னு பார்வையால்கேட்டதும், இன்னும் கொஞ்சம் முன்னால்  போங்கன்னு கையைக் காமிச்சாங்க.
மண்டபத்தின் இடதுபக்க ஓரம் அது.  மேடைஓரத்தையொட்டியே  நெருக்கமா நிக்கறேன்.முன்னால் மேடைக்கும் தரைக்கும் ஒரு பலகை வச்சுருக்கு. பின்னால் யாரும் இல்லை. கொஞ்சம் தள்ளி ஒரு அம்மா, தரையில் கோலம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. அஞ்சு நிமிசம் போல் ஆச்சு. மேடையில் நடமாட்டம் தெரிஞ்சது.

பூஜை மணி முதலில் ஒலிச்சது. ஆரம்பிச்சாச்சுன்னு கை காமிச்சாங்க நம்ம கைடு. பளிச்ன்னு  உடையோடு ஒரு தீக்ஷிதர் உள்ளே இருந்து ஒரு  அலங்காரப் பெட்டியைக் கொண்டு வந்தார். அதை மேடையில்  இது போல இருந்த (சுட்ட படம்)ஆவுடையார் நடுவில் வச்சுப் பெட்டியைத் திறந்ததும்   உள்ளே ஒரு பொன் லிங்கம்.
ரெண்டு கைகளால் அதைத் தூக்கினவுடன் பெட்டியை இன்னொரு தீக்ஷிதர்  எடுத்து வேற இடத்தில் வச்சார். இப்போ பொன்லிங்கம் அந்த மேடையில். நாலைஞ்சு எண்ணெய் விளக்குகள் பெருசும் சின்னதுமா அங்கே சுத்திலும்  இருந்தன. தலையைத் திருப்பி, நம்மவர் இருக்காரான்னு பார்த்தால் இருந்தார். கூடவே ஓசைப்படாமல் ஒரு பெரிய கூட்டம் நமக்குப் பின்னால்!

அந்தப் பொன் லிங்கத்தை பக்கவாட்டில்  திறந்ததும் ரெண்டு பிரிவா  வந்தது.  ஓஹோ... இது  லிங்க உருவில்  பொன் உறைப்   பெட்டி! உள்ளே கண்ணாடி போல் நிறமில்லாத ஒரு லிங்கம். அதை மட்டும் திரும்பக் கையில் எடுத்ததும், பொன் லிங்கத்தின்  பெட்டியை எடுத்து வேற இடத்தில் வச்சுட்டார் அந்த இன்னொரு தீக்ஷிதர்.  பூஜை செய்ய  மொத்தம் ரெண்டு தீக்ஷிதர்கள்.

இப்ப நிறம் இல்லாத  ஸ்படிகலிங்கம் அந்த மேடையில். மேடையில் ஆவுடையார் வெள்ளியில் செஞ்சு வச்சுருக்காங்க. வட இந்தியப்பயணங்களில் சில இடங்களில்  ஸ்படிக லிங்கங்களைப் பார்த்துருக்கேன்.
இந்த  லிங்கம், ஆதிசங்கரர் கோவிலுக்குக் கொடுத்ததாம். ஸ்படிக லிங்கருக்குச் சந்திரமௌலீஸ்வரர் என்னும் நாமம்.  கூடவே  ஆடும் தில்லை அம்பலத்தான் முன்பு ஒரு ஸ்ரீசக்கரமும் பிரதிஷ்டை செஞ்சுருக்காராம்.

அபிஷேகம் ஆரம்பிச்சது. குடங்குடமாத் தண்ணீரும், பாலும், மற்ற திரவியங்களுமா அபிஷேகம் நடந்துக்கிட்டே இருக்கு. என் பாதத்தில் இந்த நீர்த்துளிகள் எல்லாம் தெறிச்சுக்கிட்டே இருக்கு. இடத்தைவிட்டு அசையாமல் மெள்ளக் கீழே பார்த்தேன். பலகையின் அடியில் சின்னதா ஒரு இடைவெளி.  அபிஷேகதாரைகள் கோமுகத்தின் வழியா வெளியே கொட்டுமிடம் அங்கேதான் இருக்கு போல!  ஐயோ  பெருமாளே.... காலில் தெறிக்கிறதே... அபச்சாரமோன்னு கதி கலங்குனது உண்மை. அதே சமயம் இந்த இடத்தை விட்டுத் துளி கூட  பின்னால்  அடி எடுத்து வைக்கமுடியாமல் ஜனத்திரள் எனக்குப் பின்னால்!  எல்லாம் அவன் செயல்னு  பாரத்தை அவன் மேல் போட்டேன்.


அபிஷேகம் முடிஞ்சு அலங்காரம் செய்து தீபாராதனை ஆனதும்,  நாலைஞ்சு சின்னப்பையன்களான தீக்ஷிதர்கள்  மடியில் விபூதியோடு பக்கவாட்டில் இருந்து வந்து எனக்கு முன்னால் (ஐ மீன் பார்வைக்கு முன்னால்) போறாங்க. முதலில் போன சிலரின்  மடியில் இருந்த விபூதியில் கொஞ்சமெடுத்து ஸ்படிகலிங்கத்துக்குத் தூவினதும்  இன்னொரு தட்டில் எடுத்துக் குவிச்சாங்க. இதுதான்  நமக்குத் தரப்போகும் ப்ரஸாதம்.  பின்னால் போன ஒரு குட்டி தீக்ஷிதர் கால் தடுமாறி மடியில் இருந்த  விபூதி எல்லாம் தரையில் கொட்டிப்போச்சு. உடனே மற்ற  குட்டிகள் ஓடிவந்து  குனிஞ்சு எல்லாத்தையும் சேர்த்து எடுத்து உதவி செய்யறாங்க.  இதன் பலன்?

எனக்கு முன்னே குட்டிகளின் பின்பக்க தரிசனம். ஐயோ.... அங்கே லிங்கத்துக்கு  என்ன ஆச்சுன்னு  எம்பிப்  பார்க்கிறேன். திரும்பப் பெட்டிக்குள் போக ரெடியாக, பொன் லிங்கத்துக்குள் போறார் ஸ்படிக லிங்கர். இடையில் என்ன நடந்தது? யாருக்குத் தெரியும்? நம்மவரைக்  கேட்டால் பட்டுத்துண்டால் துடைச்சு எடுத்ததாச் சொன்னார்.  பெட்டிக்குள் வச்சு ஸ்படிக  லிங்கத்தை  எடுத்துக்கிட்டுப்போன அதே நொடியில் என் பின்னால் இருந்த சனம் காணாமப் போச்சு!

நமக்கு வழிகாட்டியா இருந்தவங்ககிட்டே போய் நன்றி சொன்னேன்.  இந்த  சந்திரமௌலீஸ்வரர் என்ற ஸ்படிகலிங்கத்துக்குத் தினமும் ஆறுகால அபிஷேகமும் பூஜையும் உண்டாம். சிவபெருமானுக்கும் இங்கே ஆறுகாலப்பூஜைதான்.  பகலில் மூன்றுகாலம், இரவில் மூன்று காலம் என்று ஆறு. ஒவ்வொரு காலத்தில் ஸ்படிகலிங்க பூஜை முடித்து தான் நடராஜருக்கும், சிவகாமிக்கு தீப ஆராதனை நடக்கும். காலை ஒன்பது மணிக்கு காலை சந்தி, காலை பதினொரு மணிக்கு இரண்டாங்காலம், பன்னிரண்டு மணிக்கு உச்சி கால வழிபாடு. காலை இரண்டாம் காலத்தின் போது ஸ்படிகலிங்க அபிஷேகத்துக்கு பிறகு இரத்தினசபாபதிக்கு அபிஷேகம், கற்பூர ஆரத்தி நடக்கும்.  திரும்ப மாலை 6 மணிக்கு ஸ்படிகலிங்க பூஜை முடிந்து, பெருமானுக்கு சாயரக்ஷை பூஜை நடைபெறும். திரும்பவும்  7 மணிக்கு ஸ்படிகலிங்க பூஜை, அதைத் தொடர்ந்து சிதம்பர ரகசிய பூஜை, அதன் பின்னர் இரண்டாம் கால பூஜை 8 மணிக்கு நிகழும். இரவும்  9.30க்கு ஸ்படிகலிங்க பூஜை முடித்து 10 மணியளவில் அர்த்தசாமப்பூஜை நடக்கும்.

எப்பவாவது  எதோ அசம்பாவிதத்தால் கோவிலைப் பூட்டும்படி ஆச்சுன்னா...   திரும்ப நடை திறக்கும்போது  அந்த நேரத்து ஆறுகாலப்பூஜை டைமுன்னா... விட்டுப்போன காலங்களுக்கும்  சேர்த்து எத்தனை எண்ணிக்கை விட்டுப்போச்சோ அத்தனை முறை தொடர்ந்து அபிஷேகங்கள் செஞ்சுருவாங்களாம். எப்படியும் இந்த ஆறு டைம் என்பது  ஆறுமுறை என்ற கணக்குதானாம்!
பகல் நேரப் பூஜை ஒரு பதினொருமணிக்கு  நடக்கும்போது ரத்தினசபாபதிக்கும் பூஜைகள் உண்டுன்னதும்  அடடா...... நமக்கு இனி இதை அடுத்த முறைக்குன்னு எடுத்து வைக்கவேண்டியதாப் போச்சு. நாளைக் காலையில் இந்த ஊர் விட்டுக் கிளம்பறோம் இல்லையா?

பேசிக்கிட்டு இருக்கும்போதே எனக்கிடதுபக்கம் மேடையில் பலவிதமான டங்காரங்கள் ஜல்ஜல்ன்னு ஒலிக்குது. டமரு போல் ஒரு உடுக்கை. இன்னும் பெயர் தெரியாத சில  இசைக்கருவிகள். இந்தப்பக்கம் வந்து நில்லுங்கன்னு  என்னை நடராஜர் சந்நிதியில் ஒரு இடத்தில் நிறுத்தியவர், என் பின்னாலேயே நின்னுக்கிட்டு, என்ன பார்க்கணும், எதைப்பார்க்கணும் என்றெல்லாம் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. இம்மி அளவும் பிசகாமல், சொன்னதையெல்லாம்  நான்  ஃபாலோ பண்ணினேன்.
64 சிவகலைகள் அனைத்தும் அம்பலக்கூத்தன்பால் வந்து ஓடுங்குவதாக ஐதீகம். இங்கே இந்தக்கோவிலில் அர்த்தஜாம பூஜை மற்ற எல்லா கோவில்களிலேயும் முடிஞ்சபிறகுதான் நடக்குமாம். நடராஜரின் பூஜைக்கு மற்ற எல்லா தெய்வங்களும் தேவதைகளும், ரிஷிகளும் முனிவர்களுமா  வந்து கலந்துக்க உண்டான ஏற்பாடாம் இது.  அப்போ நாமும் இங்கிருந்தால் அனைத்து தெய்வங்களின் ஆசிகளும் கிடைச்சிருமுன்னு ஒரு ஐதீகம்.

நாலைஞ்சு பேர் தேவாரப்பாடல் பாடுனாங்க. எதுவும் காதில் விழாமல்  டங்கார ஓசைகள்! தாளவாத்தியங்கள். ரொம்பப்பக்கத்தில் இருந்த ஒருவர்  பெரிய ஜால்ராவைக் கையில் வச்சு  ஜல் ஜங்குன்னு  அடிச்சுக்கிட்டு இருந்தார்.  தீபாராதனை ஆச்சு. அங்கே பின்னால் இருக்கும் நீலத்திரையைப் பாருங்கன்னதும் உத்துப் பார்த்துக்கிட்டே இருந்தேன்.  மூணு முறை திரையை விலக்கி அங்கே  தொங்கும்  வில்வமாலையைக் காமிச்சார் தீக்ஷிதர்.

 தகதகன்னு தீப ஒளியில் மின்னுது. பின்னே? தங்க வில்வமாலையாச்சே!  அரூபமாய் நிற்கும் ஒருவர் கழுத்தில் தொங்குவது போலத்தான் தெரிஞ்சது.  அரூபம்....   இதுதான் சிதம்பர ரகஸியம்!

'முடிஞ்சுருச்சா'ன்னு கேக்க முகத்தைத் திருப்பினப்ப, என் கூட வாங்கன்னு  திடீர்னு  கருவறைக்குப் பக்கவாட்டில்  ஓடறாங்க அம்மையார். நாங்களும் கூடவே ஓடினோம். என் பக்கத்தில் நில்லுங்க . அப்பதான் நல்லாத் தெரியுமுன்னு சொல்லும்போதே  வாத்தியமிசைக்கத் தொடங்க  சின்னதா ஒரு பல்லக்கு பக்கவாட்டு வாசலில் சிற்றம்பலத்தில்  இருந்து படிகளில் இறங்கிவருது. ரெண்டு நிமிசம் அங்கே நம்முன்னே நிறுத்தி  பூக்கள் தூவி, தீபம் காமிச்சப்போ கவனிச்சேன், உள்ளே திருப்பாதங்கள்.  தங்கமா இல்லே வெள்ளியான்னு தெரியலை. தீவட்டி ஜோதியில் மின்னுது. ஆனாலும் பூக்கள் குவியலா இருந்ததால் அனுமானிக்க முடியலை.

பல்லக்கு நகர ஆரம்பிக்குமுன்னே.........  என் கூடவே வாங்கன்னு  எங்கியோ புகுந்து ஓடறாங்க. கூடவே நாங்களும்......   போய் நின்னது பள்ளியறை சந்நிதிக்கு முன்னால். இங்கே பள்ளியறையில் இச்சா சக்தி, ஞானாசக்தி, க்ரியா சக்தின்னு தேவியர்  இருக்காங்க. ஸ்வாமி இங்கே பள்ளியறையில் இவர்கள் கூடத் தங்கி இருப்பார் என்று ஐதீகம். ஸ்வாமியின் திருப்பாதங்கள் அவர் சார்பா வந்து போகுது! காலை மறுபடி  ஆறுமணிக்குத் திருப்பள்ளிஎழுச்சிப் பாடி, பால் பழங்கள்  நைவேத்யம் செஞ்சு  பூஜிச்சு, ஸ்வாமியின் திருப்பாதங்களைப் பல்லக்கில் வச்சு திரும்ப சிற்றம்பலம் என்னும்  நடராஜர் சந்நிதிக்குக் கொண்டு போவாங்களாம். இப்போ  இங்கேயும் தீபாராதனை ஆச்சு. பள்ளியறைக் கதவை இழுத்துச்  சாத்தும் போதே ஓட ஆரம்பிச்ச அம்மையார் பின்னே, நாங்களும் ஓடிக்கிட்டு இருக்கோம்.

இப்பப்போய் நின்னது ஒரு சந்நிதியின் எதிரே இருக்கும் மண்டபத்தில். சின்ன படிபோல் இருந்த இடத்தில் ஏறி நின்னவங்க, இது மேலே ஏறி நில்லுங்க. அப்பதான் தெரியுமுன்னு சொன்னாங்க.  சந்நிதிக்கும் நாம் நிற்கும் மண்டபத்துக்கும் இடையில் பாதை ஒன்னு ஓடுது. உள்பிரகாரப் பாதை.  திபுதிபுன்னு ஓடிவந்த மக்கள் கூட்டம்  அந்த பாதையை நிறைச்சு நின்னுட்டாங்க. அவுங்க தலைக்கு மேல் நாம் பார்க்கிறோம். மண்டபத்திலும்  கூட்டம் நிறைஞ்சு போச்சு.

எதிர் சந்நிதியில் இருப்பவர் அர்த்தஜாம அழகர்.  கோவில் நடையைச் சாத்தி, அந்த சாவிகளை இவரிடம் ஒப்படைக்கும் சடங்கு இது!  இங்கேயும் தீபாராதனை ஆச்சு. காலையில்  இவரிடம் வந்து வணங்கி, இவர் அனுமதியுடன் கோவில் சாவிகளை எடுத்துப்போய் நடை திறப்பாங்களாம். போறபோக்கில்  ஸ்வாமியையும் பள்ளி அறையில் இருந்து கூப்பிட்டுப் போவாங்கன்னு நினைக்கிறேன்.

இதுதான் கடைசின்னு இருந்தப்ப சனம் நேரே விடுவிடுன்னு பாதையில் போய் அடுத்த பக்கம் இருக்கும் காலபைரவர் சந்நிதிக்குக் கும்பிடு போடறாங்க. நாங்க மண்டபத்திலேயே  இடதுபுறமா நடந்து போய் காலபைரவரைக் கும்பிட்டோம்.  இனி அவர்தான் கோவிலுக்குக் காவல்!

இதுதான் கடைசியான்னு கேக்குமுன், நீங்க வாங்கன்னுட்டு முன்னால் போயிட்டாங்க. அவுங்க போனவழியில்  தொடர்ந்து போனால்  உட்ப்ரகாரத் திண்ணைகள் வருது.  அங்கே பாத்திரத்தில் என்னவோ வச்சு , எடுத்துக் கொடுக்கறார் ஒருத்தர். அதுக்குள்ளே நம்மிடம் வந்த அம்மையாரின் கையில் ஒரு தொன்னையில் சக்கரைப்பொங்கல். அதையும் நமக்குக் கொடுத்து, கையில் வச்சுருந்த முறுக்குத்துண்டுகளையும் கொடுத்துட்டு, அர்த்தஜாமப் பூஜை நல்லாப் பார்த்தீங்களான்னு  கேட்டாங்க.

ஹைய்யோ!!!!   இதற்காகத்தானே ஆசைப்பட்டாய்......  துள்ஸி!

'ரொம்ப நன்றிங்க. நீங்க கூட்டிப்போய் இப்படி ஒவ்வொன்னா காமிக்கலைன்னா, எங்கே எப்படி போகணும், என்னத்தைக்  கவனிக்கணுமுன்னே தெரிஞ்சுருக்காது. பெருமாள்தான் உங்களை அனுப்பி இருக்கார்னு'  தழுதழுத்த குரலில் சொல்லிட்டு,  உங்க பெயர் என்னங்கன்னு கேட்டேன். மாலா !

இங்கே உள்ளுர்தான். தினமும்  இந்த பூஜை பார்க்கக் கோவிலுக்கு  வருவேன்.  சென்னைக்குப் போனால், அந்த சமயம் வர முடியறதில்லைன்னதும், சென்னையில் எங்கேன்னேன். அடையார்னு சொன்னாங்க. பேசிக்கிட்டே நாங்க கோபுரவாசலாண்டை வந்துருந்தோம்.

வாசலைக் கடந்து  சட்னு அவுங்க  விடுவிடுன்னு நடந்து போறாங்க. ஐயோ அவுங்களை ஒரு படம் எடுத்துக்கலாமுன்னா கையில் கேமெரா இல்லையேன்னு  இருக்கு. 'என் செல்ஃபோன் வண்டியில் இருக்கு'ன்றார் கோபால்.  நம்மைப் பார்த்தவுடன் ஓடி வந்த சீனிவாசன்  வண்டி இங்கேன்னு கூட்டிப்போறார். இதே வழியில்தான் மாலா போனாங்கன்னு  சொல்லிட்டு  நான் அந்தப் பக்கம் போய்ப் பார்க்கிறேன்...... யாருமே இல்லை! நீண்டு கிடக்கும் தெருவில்  ஆள் நடமாட்டமே காணோம்!

 தொடரும்.............  :-)

PINகுறிப்பு : பதிவில் இருக்கும் சில படங்கள் பூஜை சம்பந்தமுள்ளவை சுட்டவை. கோபுரம் மற்றும் சில கோவில் காட்சிகள் போன பயணத்தில் எடுத்தவை.



கோவிலைப்பற்றி ஒன்னும் சொல்லலையேன்னு  நினைப்பவர்கள் இங்கே இந்த இரண்டு  பதிவுகளில் பார்க்கலாம்.

தில்லை நடராஜர் 1 

தில்லை நடராஜர்  2